top of page

என் உயிரே !!! என் உறவே !!! 18

Writer: Praveena VijayPraveena Vijay

அத்தியாயம் 18:

அன்று சனிக்கிழமை ராகவ் காலையிலயே கிளம்பிப் போய் இருந்தார். அவர் எப்போது வருவார் என்று மகளும் தாயும் ராகவின் வருகையினை எதிர்நோக்கி இருந்தனர். இப்போதைக்கு அவர்கள் குடும்பத்திற்கு பெரிய ஆறுதல் இப்போதைக்கு கிடைக்கப் போகும் பணம்தான். இருக்கும் இடம் , வாங்கிப் போட்டிருந்த நிலம் எல்லாம் விற்க ஏற்பாடாகி விட்டது. மேலும் மைதிலியின் யோசனைப்படி யாரிடம் வீட்டை விற்கப் போகிறார்கலோ அவர்களிடமே தாங்கள் இருக்கும் வீட்டை வாடகைக்கு கேட்டிருந்தனர்…. மற்றவர்களின் கேள்விக் கணைகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதே அதற்குக் காரணம்…. அதற்கு சம்மதித்து வாங்குபவர்களும் சரி சொன்னதால் கொஞ்சம் விலை குறைவாய் என்றாலும் முடித்து விட்டிருந்தனர். இதற்குரிய இறுதி ஏற்பாடெல்லாம் அடுத்த வாரத்திற்குள் முடிந்து விடும்.

ஆக இப்போது ராகவ் வாங்கி வரும் தொகை மட்டும் தான் பாக்கி. அதனால் அவர்கள் விழி வைத்து காத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதிலும் கீர்த்திக்கு, அன்று பாலாவிடம் பெற்ற அனுபவத்திலிருந்து, திங்கட்கிழமை பாலாவிடம் ராஜினாமாக் கடிதத்தை கொடுத்து விட்டு , மொத்தமாய் அவனுக்கு ஒரு good bye சொல்லி விட்டு வர வேண்டும் என்று நினைத்தபோது அன்று அவன் கேட்டது நினைவில வர உடல் அவளையுமறியாமல் சிலிர்த்தது. அவள் பேரிலும் தவறு உள்ளது. இவள் உணர்ச்சிவசப்பட்டு வாய் விட்டதால் தானே அவன் அப்படிக் கேட்டான் என்பதை அவள் உணராமல் இல்லை.

கிட்டத்தட்ட 7 மணி அளவில் ராகவ் வந்தார். வரும் போதே அவரது முகம் வெளிரி இருந்தது. போன இடத்தில் ஏதும் சுமூகமாய் நடக்க வில்லை என்பது அவரைப் பார்த்தவுடனே தெரிந்தது. மைதிலிக்கும் , கீர்த்திக்கும் மனதில் சுருக்கென்று வலி தோன்றி முகத்தில் நிலைத்தது.

வந்தவர் தண்ணீரைக் குடித்து விட்டு ஒன்றும் பேசாமல் சோபாவில் கண் மூடி அமர்ந்து விட்டார்.

மைதிலி கேட்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தோடு கணவனைத் தட்டி எழுப்பினாள்.

என்னங்க என்ன ஆச்சு, எதுவா இருந்தாலும் மனதோடு வைத்துக் கொள்ளாமல் கொட்டி விடுங்க, சொல்லுங்க “ என்று பரிதவிப்போடு கேட்க

மனைவியின் இளகிய குரலில் கண் விழித்தவர் மைதிலியிடம் ஒன்றும் கூறாமல் கீர்த்தியை அழைத்தார்

ராகவ் கண்களை விழித்து கீர்த்தியை அழைத்தார்

கீர்த்திமா போன இடத்தில் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுடாங்கம்மா , ஷ்யூரிட்டி இல்லாமல் பணம் தர மாட்டாங்களாம், இந்த வீட்டை வைத்துதான் தருவதாகச் சொன்னார்களாம். இதை விற்று விட்டால் எதை அடிப்படையாக வைத்து தருவது என்று கையை விரித்து விட்டார்கள். என்னால் முடியாதுடா இனிமேல் அவ்வளவுதான் செய்த தவறை ஒத்துக் கொண்டு சரணடைவதுதான் இனி எனக்கு இருக்கும் ஒரு வழி” என்றவர்

மேலும் எனக்கு ஏதாவது ஆகி விட்டால்என்றவுடன் கீர்த்தி பதறியபடி

அப்பா ஏம்பா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்” என்று கலங்கிய மகளிடம்

இல்லடா நான் என் உயிரைப் பற்றி சொல்ல வில்லை, ஒருவேளை என்னைக் கைது செய்தால்.... ஒருவேளை என்ன... கட்டாயம் என்னை கைது செய்வார்கள். அப்படி ஆகும் போது உன் அம்மாவுக்கு நீதான் தைரியம் சொல்ல வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறதடா நீ தைரியமாகச் சமாளிப்பாய் எனும் போதே மைதிலி அந்த இடத்தில் இல்லை.

அம்மா எங்கே போகிறீர்கள்என்று தாயைக் கேட்ட கீர்த்திக்கு மைதிலியிடம் இருந்து பதில் வரவில்லை. அறைக்குள் சென்று ஒன்றுமே சொல்லாமல் அமர்ந்தவள்தான் கீர்த்தி மற்றும் ராகவன் எவ்வளவு பேசியும் மௌனத்தின் பிடியில் எங்கோ வெறித்தபடி இருந்தாள்.

அவளுக்கு ஆறுதல் கூற என்ன சொல்ல முடியும் இருவராலும் ராகவன் சிறிது நேரம் கழித்து வெளியே ஹாலில் சென்று அமர்ந்தார். கீர்த்திக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஆனால் ராகவன் சொன்ன

எனக்கு நம்பிக்கை இருக்கிறதடா நீ தைரியமாகச் சமாளிப்பாய்என்ற வார்த்தைகள் அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

இனி என்ன செய்ய... என்ன வழி.. இந்த சூழ்னிலையினை அவள் நினைத்தால் மாற்றலாம். ஆனால்... அவளிடம் இருக்கும் ஒரே தீர்வு இப்போது பாலா மட்டும் தான். வேறு வழியே இல்லை. தன் பெற்றோர்களுக்காக தன் வாழ்க்கையை பணயம் வைக்கத்தான் வேண்டும். இத்தனை வருடம் என்னை எந்தக் குறையும் இல்லாமல் காத்து வளர்த்தவர்களுக்குத் தன் மூலம் தீர்வு இருக்கிறது என்ற போது அதை விட வேண்டுமா, என் வாழ்க்கை வீணாகிப் போகும் என்று என் தந்தை சிறைக்கு போவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா , இல்லை என் அம்மா அனுபவிக்கும் வேதனையைத்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா, இனிமேலும் காத்துக் கொண்டிருக்க முடியாது என்று தீர்மானித்தவள் மனதைக் கடினமாக்கிக் கொண்டு பாலாவிடம் பேச தயாரானாள்.

தன் அறையினுள் போய் செல்லை கையில எடுத்தவள் மானசீகமாய் தன் பெற்றோரிடமும் மன்னிப்பு வேண்டியபடி, இனி எது வந்தாலும் தான் சமாளிக்க வேண்டும் என்று நெஞ்சில் ஒரு திடத்துடன் என்ற பாலாவின் நம்பரை அழுத்தினாள்.

மறுமுனையில் ரிங் போகும் சத்தததை விட அவளின் படபடத்த நெஞ்சத்தின் சத்தம் மிகுதியாய் இருந்தது. முழுவதும் ரிங் போயும் பாலா எடுக்காததால் வைத்தவளுக்கு இப்போது ஒரு எண்ணம் தோன்றியது. அவன் பணம் தருவதாய் சொன்னால் ஏன் அதை கடனாகக் கேட்கக் கூடாது. ஒருவேளை நாம் சம்மதிக்க வில்லை என்பதால் கடனாக தருவானா என்று சின்னதாய் ஒரு நப்பாசை அவளுக்கு தோண்றியது. இப்படி யோசனையில் காண்டாக்ட் லிஸ்டை அழுத்தியபபடி இருந்தவள் எதார்த்தமாக வந்த வினோத்தின் எண்ணைப் பார்த்தவளுக்கு சட்டென்று தூக்கி வாரிப் போட்டது.

இத்தனை களேபரத்தில் அவளுக்கு ஏன் வினோத்தின் ஞாபகம் வர வில்லை. வினோத் மேல் எனக்கு ஈர்ப்பு இல்லையா? … பாலா கேட்ட போது கூட அவன் ஞாபகம் வரவில்லையே.. அவன் மேல் எனக்கு ஒன்றும் இல்லை….... அதுதான் உண்மை….. அவனுக்கு? தெரியவில்லை அவளுக்கு..ஆனால் தன்னைப் போல் அவனுக்கும் ஒன்றும் தோன்றி இருக்கக் கூடாது…. இல்லையென்றால் வினோத்துக்கு என்ன பதில் சொல்வது, அத்தை மாமா முகத்தில் அவள் மட்டுமல்ல ராகவும் மைதிலியும் கூட விழிக்க முடியுமா , இத்தனை நாள் இருவர் குடும்பத்திற்கும் இடையில் ஓடிய உறவு மற்றும் நட்பு இவளால் முறிந்து விடுமோ. இதை சத்தியமாய் ராகவ் மைதிலியால் தாங்கிக் கொள்ள முடியுமா , பேசாமல் வினோத்திடமே கேட்டு விடலாமா, அவன் ஏதாவது கண்டிப்பாகச் செய்வான். இல்லையில்லை வேண்டாம் அவனால் முடியவில்லை என்றால் அவன் மிகவும் சங்கடப்படுவான். வேண்டாம் என் விதியோடு அவனையும் கஷ்டப் படுத்தக் கூடாது. ஒன்று கிடைக்க வேண்டுமென்றால் இன்னொன்றை இழந்துதான் ஆக வேண்டும். இனி அவள் வாழ்வில் மகிழ்ச்சி என்று ஒன்று இனி ஒருபோதும் இல்லை. அவள் சந்தோசமாய் இருக்க வேண்டுமென்று இருந்திருந்தால் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும், கண் முன்னே அவளின் வாழ்க்கை சின்னா பின்னாமாகிக் கொண்டிருக்கிறது. இவள்தான் தங்கள் வீட்டின் மருமகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடப் போகிறாள் , ஏன் தன் மகளின் மேல் முழு நம்பிக்கை வைத்து வாக்கு கொடுத்திருந்த ராகவ், மைதிலிக்கும் கூட இது பேரிடிதான். எப்படி இதை எல்லாம் சமாளிக்கப் போகிறாள். முகத்தை அழுந்தத் துடைத்தவள், இனிமேல் நினைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. இவள் எடுத்திருக்கும் முடிவால் எல்லோருக்கும் கொஞ்சம் வலிதான் . நாளாக நாளாக சரி ஆகி விடும் .

இப்படியெல்லாம் அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் கண்டபடி அலைந்து அவள் நிம்மதியை சீர்குலைத்துக் கொண்டிருந்தது, ஒருவாறாக மனதினை நிலைப்படுத்தி பாலாவின் எண்ணை மீண்டும் அழுத்த நினைக்கையிலயே பாலாவே அவளுக்கு கால் செய்தான்.

என்ன கீர்த்தி கால் பண்ணியிருந்தாய், நான் கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனால்தான் எடுக்க வில்லை. என்ன விசயம்என்று ஒன்றுமே நடக்காதவன் போல் கேட்டான்

ஆனால் நேற்று அப்படி வீராப்பாக பேசி விட்டுப் போனவள் இன்று இவள் பேசினாள் அவன் என்ன நினைப்பான் என்று சற்று தயக்கத்தோடுதான் கீர்த்தியும் ஆரம்பித்தாள்,

தன் வீட்டில் நடந்ததைச் சொன்னவள் குரலினைத் தாழ்த்தி தான் மனதில் நினைத்தபடி முதலில் கடனாகக் கேட்டுப் பார்ப்போம் ஒருவேளை பாலா கொடுக்க நினைத்தாலும் நினைப்பான் என்று நினைத்துசார் எனக்கு நீங்கள் கட ... கடனாகத் தர முடியுமா, எனக்கு வேறு வழியில்லை அதனால்தான்என்று அமைதி காத்தாள்

பாலாவின் முன் அவள் எண்ணமெல்லாம் நடக்கவில்லை

பாலாவிற்கோ மனது கொஞ்சம் குதூகலித்தது, இவ்வளவு தூரம் இறங்கி வந்தவள் கண்டிப்பாக முடிவெடுத்திருப்பாள், நாம் இறங்கக் கூடாது, இதுதான் நல்ல சமயம், நாமே கெடுத்துக் கொள்ள கூடாது என்று எச்சரிக்கை செய்த படி , கடினமான குரலில்

கீர்த்தி நான் என் முடிவை எப்பவோ சொல்லி விட்டேன், அதற்கு ஓகே என்றால் சரி, மற்றபடி நானும் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லை, அதே நேரத்தில் எனது அலுவலக வேலைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ எப்போதும் போல் வேலைக்கும் வரலாம். கடன் கொடுப்பவன் கூட அடிப்படையாக ஏதாவது கேட்கும் போது நான் நிபந்தனை விதிப்பது தவறாகத் தோண்றவில்லை எனக்கு. நன்றாக யோசி உனக்கு நேரம் கூட இல்லை. உன் அப்பாவைக் காப்பாற்றுவதா இல்லையா என்பது உன் கையில் இருக்கிறது. ஆண்டவனாய் கொடுத்த வாய்ப்பை இழந்து விடாதேஎன்று அவன் மனசாட்சியை முற்றிலுமாய் தூக்கி தூர எறிந்து விட்டு கல் நெஞ்சக்காரனாய் வாழ்க்கை வியாபாரம் பேசினான்

மறுமுனையில் கீர்த்தி மனம் ஊமையாய் அழுதது, எப்படி பேசுகிறான் , அடுத்தவர் மனம் என்ன பாடுபடும் என்பதை அவன் சிறிது கூட நினைக்க வில்லை. யாரோ ஒருத்தியை மனதில் வைத்துக் கொண்டு இவள் கழுத்தில் தாலி கட்ட எப்படி பேரம் பேசிக் கொண்டிருக்கிறான், இவனோடு என் வாழ்க்கையை இணைப்பதா என்று நினைத்தவள், அவனும் இவளை விரும்பி ஒன்றும் கேட்க வில்லையே அவன் எப்படி சுயநலமாய் பேசுகிறானோ தானும் அவ்வழியிலேயே இறங்கி விடலாம் என்று முடிவு செய்தவள், ஒரு உறுதியோடு பேச ஆரம்பித்தாள்

ஓகே பாலா நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன் நீங்கள் சொன்ன நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஆனால் நீங்கள் சொன்ன தற்காலிகம் என்பது எதுவரை, அதாவது உங்கள் காதலி மது வரும் வரையா, இல்லை என் பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரையா, எனக்குப் புரியவில்லைஎன்று தன் சந்தேகத்தை கேட்டவள் தற்காலிகம் என்பதை அழுத்த தவற வில்லை

,கீர்த்தி ஒத்துக் கொண்டு விட்டாளா என்பதையே, பாலாவால் நம்ப முடிய வில்லை, அவனது இயல்பான நல்ல மனம் எங்கோ அவனைக் குத்தியது. இருந்தாலும் அதையெல்லாம் லட்சியம் செய்யாமல், கீர்த்தி நாளை நாம் சந்திக்கும் போது இதைப் பற்றி விளக்கமாகப் பேசலாம் என்று அவன் பேசும் போதே

இல்லை சார் உங்களுக்கு காலம் இருக்கலாம் ஆனால் அன் அப்பாவின் நிலைமை கழுத்தில் கத்தி இருக்கும் நிலைமை நாம் இன்றிலிருந்தே நாம் நடத்தப் போகும் நாடகத்தை ஆரம்பிக்கலாம், அதற்கு முன் என் தரப்பு முடிவைச் சொல்லி விடுகிறேன். நீங்க எனக்கு கொடுக்கும் தொகை என்னைப் பொருத்தவரை கடன்தான். என் வாழ்நாள் முடியும்முன் நான் கண்டிப்பாக அடைத்து விடுவேன். அதே நேரத்தில் என் அப்பா அம்மாவிற்கு நாம் இப்படி ஒரு நாடகம் போடுவதாய் தெரியக் கூடாது. உங்க மூலம் பணம் கிடைப்பது எதார்த்தமாய் இருக்க வேண்டும். எங்க அப்பா,அம்மா மட்டும் கண்டுபிடித்தால் மொத்தமாய் வீணாகி விடும். அதன் பிறகு என்னால் இன்னும் அவரது நிலைமை மோசமாகி விடக் கூடாது. எனக்கு இப்போது உள்ள நிலைமையில் என்னால் ஒன்றும் யோசிக்க கூட முடியாது. என்னைப் பொறுத்தவரை எனது அம்மா அப்பா பாதிக்கக் கூடாது. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். அவ்வளவுதான்.” என்று விடாமல் இயந்திரத்தனமாய் பேசியவள் …… தானா இப்படி பேசுகிறோம் , என்று கூட மலைத்தாள்.

அவள் சொல்வதை எல்லாம் நிதானமாய்க் கேட்டவன்

சரி கீர்த்தி , உன் அப்பா அம்மாவிற்கு கண்டிப்பாய் என் மூலம் தெரியாது, ஆனால் நீ நடப்பது என்று ஓன்றும் இருக்கிறது, உனக்கு எப்படி உன் அப்பா அம்மாவோ அதே போல்தான் எனக்கும்என் பெற்றோர்களுக்கும் இந்த விசயம் தெரியக் கூடாது. நீயும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். தென்….. நாம் இருவரின் தேவைகளும் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் நம் மண வாழ்க்கையின் காலம் ஒரு வருடம். ஏனெனில் அப்போதுதான் நாம் சட்டப் பூர்வமாக பிரிய ஏதுவாக இருக்கும். நான் சொல்வது புரிகிறது அல்லவா….

நம் மனம் ஒத்துப் போகவில்லையென்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி பிரியும் போது நாம் போட்ட நாடகம் யாருக்கும் தெரியப் போவதில்லை. அப்போது அந்த பிரிவு ஒருவருக்கும் வித்தியாசமாகத் தெரியாது என்று அவன் பேசும் போதே கீர்த்தி குறுக்கிட்டாள்

சாரி சார் இந்த ஒருவருட வாழ்க்கையெல்லாம் எனக்குப் பிடிக்க வில்லை. சுயநலமாய் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள் எல்லாம் உங்களீடம் இருந்துதான் கற்றுக் கொண்டதுஎன்று அதிரடியாய் கூறி பாலாவைத் திகைக்க வைத்தவள்

மது கிடைத்த பிறகோ இல்லை அதிர்ஷ்ட வசமாக என் பணப் பிரச்சனை தீர்ந்தாலோ அவரவர் விருப்பப்படி செல்வதுதான் என் விருப்பம் இது யாராவது ஒருவருக்கு பாதகமாய் இருக்கலாம் என்று எனக்குத் தெரியும். ஒரு வேளை மது விரைவில் கிடைத்து விட்டால் நான் கண்டிப்பாக விலகி விடுவேன், என் அப்பா அம்மாவை சமாளிப்பது என் பொறுப்பு. நான் சொல்லும் விரைவில் என்பது திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் கூட இருக்கலாம். அதேபோல் தான் உங்களுக்கும்…. என்னைத் தடுக்க கூடாது நீங்களும். அது மட்டும் இல்லாமல் இந்த முடிவு உங்களுக்குதான் சாதகமானது கூட. ஏனென்றால் இவ்வளவு பெரிய தொகை கண்டிப்பாக எனக்கு கிடைக்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் மது எப்போதும் வரலாம் அல்லவா, தயவு செய்து எனக்காக இந்த ஒரு முடிவுக்கு மட்டும் ஒத்துக் கொள்ளுங்கள் என்று அவன் பதிலை எதிர் நோக்கினாள்.

அவனிடம் நேரில் பேசினால் கூட இத்தனை தைரியமாக பேசி இருப்பாளா என்று தெரியாது.

அவள் பேசியதை தன் மனதில் போட்டு ஆராய்ந்தவன் அவள் சொல்வதிலும் சரியாய் பட

ஹ்ம்ம்ம்ம்ம்ம் நீ சொல்வது கூட சரிதான். எனது முடிவுக்கு சரி சொன்னதிற்கு மிகவும் நன்றி கீர்த்தி. நான் உனக்கு கடமைப் பட்டிருக்கிறேன். இது நீ எனக்கு செய்யும் மிகப் பெரிய உதவி கீர்த்தி. மேலும் நீ எனக்கு எந்த பணமும் தர வேண்டாம் கீர்த்தி. அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல

உங்களுக்கு வேண்டுமென்றால் அது பொருட்டல்ல ஆனால் அது எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும், அதனால் தான் நான் இந்த நிலைமையில் நிற்கிறேன்…..” என்று சொல்லும் போதே அவளுக்கு அழுகை வரும் போல் தோன்ற அதை அடக்கியபடி …..அதே நேரத்தில் நானும் சரி என் குடும்பமும் சரி யாருக்கும் கடன்பட்டவர்களாய் இருக்க எனக்கு விருப்பமில்லை என்று தன் தன்மானத்தை விடாமல் பேசியவளை நினைத்து பாலா புருவத்தை உயர்த்தாமல் இல்லை.

நான் இவ்வளவு சொல்லியும் நீ இப்படி சொல்கிறாய் என்றால் அது உன் இஷ்டம். நாளைக் காலையில இருந்து நான் பார்த்துக் கொள்கிறேன் , நீ கவலைப் படாதே , இன்னொரு விசயம் இந்த சார் மோரெல்லாம் இப்போதிருந்தே விட்டு விடு. என்ன ஒகேவாஎன்று கலகலப்பாக பாலா சொல்ல

சரி வைக்கிறேன் பாலா” என்று அவன் சொன்ன அடுத்த நொடியே தலையில அடித்த மாதிரி சொல்லி விட்டு போனை வைத்தாள் கீர்த்தி.

சற்று திகைத்தவன் அவன் மேல் எவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்று புரியாமல் இல்லை. வேறு வழி இல்லாமல்தான் இவனிடம் ஒத்துக் கொண்டிருக்கிறாள். என்ன ஒரு திடமாகப் பேசுகிறாள். எனக்கு பணம் வேண்டும் உனக்கு என் உதவி வேண்டும் அவ்வளவுதான் . அதுவும் கடனாக . அவள் பேசியதில் தெரிந்தது தன்மானமா அல்லது ஈகோவா என்பது புரியவில்லை. எப்படியோ இப்படி ஒரு பெண்ணைத்தான் அவன் தேடிக் கோண்டிருந்தான். பின்னால் பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் இப்படி ஒரு தன்மானமுள்ள பெண்தான் சரியாக இருக்கும் என்றெல்லாம் யோசித்தபடி இரு வீட்டினரையும் எப்படி சமாளிப்பது என்று வெகு நேரமாய் பலவாறாய் சிந்த்தித்து, அதற்கு மூளையை கசக்கி கண்டுபிடித்தவன் தூங்கும் போது மணி 4 ஆகி இருந்தது


Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comentarios


© 2020 by PraveenaNovels

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon
bottom of page