என் உயிரே !!! என் உறவே !!! 16
- Praveena Vijay
- Mar 28, 2020
- 5 min read
அத்தியாயம் 16
கடற்கரை மணலில் கைகளால் அளந்த படி கீர்த்தி பாலாவுக்காக காத்துக் கொண்டு இருந்தாள். பாலாவுடன் வரவில்லை….அவன் அழைத்த போதும் மறுத்து விட்டு தன் ஸ்கூட்டியிலேயெ வந்திருந்தாள்.. கடலை வெறித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்த போது ஜோசியம் பார்க்கும் பாட்டி அவள் அருகில் வந்தாள்
“என்னம்மா தனியா உட்கார்ந்திருக்க உன்னை பார்க்கும் போதே உனக்கு மாலை நோக்கம் முகத்தில் தெரியுது தாயி , உன்னைத் தேடி ராஜ குமாரன் வந்துட்டு இருக்கான் , என்னனு பார்க்கலாம் கைய நீட்டுமா” என்று டார்ச்ச்ர் கொடுக்க
ஆளை விடம்மா , இது ஓன்றுதான் இங்கு குறைச்சல் எனக்கு இப்போ என்று முணுமுணுத்தவளை ”என்னம்மா நீ இப்படி சொல்கிறாய் நான் சொல்லவில்லை சக்தி சொல்கிறாள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பாலாவும் வந்து சேர்ந்தான்
”சாரி கீர்த்தி நீ இங்க இருக்கிறாயா காரை பார்க் பண்ணி விட்டு வர நேரம் ஆகி விட்டது“ என்றபடி அவள் அருகில் கொஞ்சம் தள்ளி அமர்ந்தான்.
என்னம்மா நான் சொன்னபோது சலித்தாய் ராஜகுமாரன் வந்து விட்டார் பார்த்தாயா” என்ற போது ஒன்றும் புரியாம பாலா விழிக்க உண்மையிலேயே கீர்த்திகு இப்போது கோபம் தலைக்கேறியது,
“என்னம்மா உன்கிட்ட சொன்ன புரியாதா விருப்பமில்லையென்றால் போக வேண்டியதுதானே என்று“ முகத்தைக் காட்ட நிலைமையினை சரியாக்க
பாலா “அவங்களுக்குதான் பார்ப்பீங்களா ,எனக்கு பாருங்க” என்றபடி தன் கையை நீட்டினான்
“என்னாகிவிட்டது இவனுக்கு இன்று, தனக்கு சமமாய் பேசுகிறான், வா போ என்று அழைக்கிறான் , எதுவும் புரியவில்லை, இப்போது தன் அருகே அமர்ந்து இப்படி கையை நீட்டிக் கொண்டிருக்கிறான்” என்று நினைத்தவளாய் அந்த மூதாட்டி அவனுக்கு என்ன சொல்ல வருகிறாள் என்று பார்போம் என்று ஆர்வத்துடன் பார்க்கலானாள்
அவனது கையினை உற்று நோக்கியவள் நான் சொல்லவில்லை தம்பி ரேகை சொல்லுது
“உனக்கு நேரம் ஒன்றும் சரியாக இல்லை, பெற்ற தாய் தந்தையர் மனம் வருந்த வைப்பாய் என்ற போதே பாலா நீட்டாமல் இருந்திருக்கலாமோ, நீட்டியவுடனே புட்டு புட்டு வைக்கிறாள் என்று தயங்க
ஜோசியக்கார பாட்டி சொன்னதில் இருந்த உண்மையில் கீர்த்தி தன் நிலையை மறந்து … உற்சாகமாய் அப்புறம் என்றபடி, அவளை நோக்க
“சாருக்கு எப்போ கல்யாணம் அதைப் பற்றி சொல்லுங்க என்று சிறு குழந்தை போல் ஆவலுடன் அவளை நோக்க பாலாவோ
“கீர்த்தி என்ன என்னை வைத்து செக் பண்ணுகிறாயா அடுத்து நீ நீட்டலாமா இல்லையா என்று “ என்று சிரிக்க அசடு வழிந்தாள் கீர்த்தி
“மனதில் ஒரு பொண்ணு இருக்கா, ஆனால் தடைகள் பல , இப்போ உன் சஞ்சலமும் அதுதான் “ என்று அவனைப் பார்க்க”
ம்கூம் இது சரிப் படாது என்றூ நினைத்தவன்
“நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் நான் கேட்பதற்கு சொல்லுங்கள் என்று
”எனக்கு எத்தனை கல்யாணம் என்று பார்க்க முடியுமா என்று கீர்த்தியை ஓரக்கண்ணால் பார்க்க , இவனுக்கு ஏதோ ஆகி விட்டது என்பது நிச்சயம் தான் “ என்றபடி அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்
“ஓ சொல்ல முடியுமே தம்பி, உனக்கு என்று இழுத்தபடி அப்படி இப்படி என்று கைகளை பிரட்டியவள் அடித்துச் சொல்கிறேன் தம்பி உனக்கு ஒன்றுதான் “ என்றவளிடம்
“எனக்கு 2 முறை திருமணம் ஆகி விட்டது நீங்கள் பொய்யாக சொல்கிறீர்கள் “ என்றூ பாலா மறுக்க
“நான் சொல்லவில்லை , ரேகை சொல்கிறது , என் நாவில் இருக்கும் சக்தி சொல்கிறாள் அதற்கு மேல் உன் இஷ்டம் “ என்று கோபம் காட்டினாள் அந்த மூதாட்டி
“சரி சரி நான் சும்மாதான் சொன்னேன். எனக்கு பார்த்தது போதும்” என்றபடி அவளுக்கு பணத்தை நீட்டினான்.
தாயி உனக்கு என்றவளிடம்
“அதுதான் ஒரு ஆளுக்கு பார்த்து விட்டாயே அப்புறம் என்ன” என்று அவள் பணத்தை நினைத்து சொல்ல
அந்த மூதாட்டியும்
“ஆமா தாயி யாருக்கு பார்த்தால் என்ன இருந்தாலும் நீயும் நீட்டினால் சொல்லுவேன்”
என்று கீர்த்தி அருகில் அமரப் போக பாலா
“வேண்டாம், வேண்டாம் கிளம்புங்கள்” என்று அவளை அப்புறப் படுத்தினான்.
அவள் சென்ற பிறகு பாலாவிடம்
“ஏன் சார் இப்படியெல்லாமா செக் செய்வார்கள், இந்த கேள்விக்கு பெரும்பாலும் ஒன்று என்ற பதில்தான் வரும் யாராவது அதற்கு மேல் சொல்வார்களா “ என்றவளிடம்
“இல்லையே நான் கேட்டதற்கு, தப்பாக கூறினார்கள் அதுதான் அதற்கு மேல் பார்க்க வில்லை” என்றான் கடலை வெறித்தபடி
இவனிடம் இதற்கு மேல் பேசிப் பிரயோசனமில்லை இவன் உளறுவதற்கெல்லம் அர்த்தம் கேட்க நேரமும் இல்லை, அது தனக்கு தேவையும் இல்லை என்ற படி தன் விசயத்திற்கு வந்தாள்
“இப்போதாவாது சொல்லுங்கள் சார் , என்ன பணம் கிடைக்குமா இல்லையா எதுவாக இருந்தாலும் பரவாயில்லை” என்று முகத்தில் வெற்று புன்னகையினை தவழ விட்டாள்
”சொல்கிறேன் கீர்த்தி இங்கு கொஞ்சம் ஆள் நடமாட்டம் அதிகமாய் இருக்கிறது, அதோ அங்கே போய் விளக்கமாய் சொல்கிறேன்” என்றபடி அவள் சம்மதம் ஏதும் கேட்காமல் இடம் பெயர்ந்தான் பாலா
இவன் கூப்பிட்ட உடனே வர வேண்டும், இங்கே வேண்டாம் அங்கே என்றதும் பின்னாலே போக வேண்டும், என்று நினைத்தவள் பதில் ஒன்றும் சொல்லாமல் அவன் நின்ற இடத்தில் போய் தானும் நின்றாள்
“உட்கார் கீர்த்தி “ என்றபடி தானும் அமர்ந்தான்.
”கீர்த்தி நான் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்பாய் என்ற நம்பிக்கையில்…” என்று ஆரம்பித்தவனிடம் பொறுமை எல்லாம் இழந்து போய் விட்டது
“தயவு செய்து சார் சொல்லி விடுங்கள், ஏற்கனவே நான் அதைத் தாண்டிதான் நிற்கிறேன் , வீட்டில் வேறு தேடுவார்கள் என்று மணியைப் பார்த்தாள்
ஒகே என்றபடி மனதிற்குள் மீண்டும் ஒருமுறை ஒத்திகை பார்த்தவன் பேச ஆரம்பித்தான்
”உனக்கு ஒருவர் கடன் கொடுக்க ரெடி, இன்னும் சொல்லப் போனால் உன் தந்தைக்குத் தேவையான அத்தனை தொகையினையும் முழுவதுமாகக் கொடுக்கவும் சம்மதம்..மேலும் கடனாகக் கூட இல்லை. நீ செய்யப் போகும் உதவிக்கு கைமாறு என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் கொடுப்பவரின் ஒரு கோரிக்கையினை மட்டும் நிறைவேற்ற வேண்டும்”
என்று மொட்டையாய் பேசி கீர்த்தியை பார்த்தான்.
ஒரு கோரிக்கையை நிறைவேற்றினால் மொத்த பணமும்…அதுவும் கடனாகக் கூட இல்லையா…. மனதில் அபாயச் சங்கு பெரும் சத்தத்துடன் ஒலிக்க ஆரம்பிக்க
கீர்த்தி அவன் முழுவதும் பேசி முடிக்கட்டும் என்று கட்டுக்கடங்காமல் வந்த கோபத்தை தன் கைவிரல்களில் அடக்கியபடி அவனை பார்த்தபடி இருந்தாள்.கண்களில் மட்டும் அனல் தெரித்தது அவளுக்கு
”என்ன கோரிக்கை“ என்றாள்….. அவனையே பார்த்தபடி… அவளது கண்களில் கலக்கம் போய் ஒரு தீவிரம் வந்திருந்தது. ஏதோ ஒரு பூகம்பம் வரப் போகிறது என்று உள் மனம் அவளை எச்சரித்துக் கொண்டிருந்தது.
பாலா அவளது கண்களை பார்க்காமல் கடலை வெறித்தபடி தொடர்ந்தான்….. அவள் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல்
”என்னோட ஃப்ரெண்ட்தான் … அவன் நீ கேட்கும் தொகையினை கொடுக்க ரெடி” என்றவனை இடையில் நிறுத்தி…
”நான் கேட்டது அவனது நிபந்தனை என்ன? அதை மட்டும் சொல்லுங்கள்…
அவளது மரியாதையற்ற பேச்சே அவளது மன நிலைமையினை அவனுக்கு விளக்கியது.
ஆனாலும் பாலா தொடர்ந்தான்… தைரியமாக என்று கூட சொல்லலாம்
”அவனுக்கு மனைவியாய் தற்காலிகமாக நடிக்க வேண்டும்…” என்ற போதே
கீர்த்தியின் கோபம் அவள் கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து கொண்டிருந்தது…என்ன மனிதன் இவன்…. அவன் கேட்டால் … இவர் வந்து என்னிடம் கேட்பாரா? ..என்று …பாலாவின் மேலும் கோபம் எகிறியது
என்றாலும் அதைக் காட்டாமல் கீர்த்தி அவனை முறைத்த படி….
”உங்களிடம் இருந்து இதை எதிர் பார்க்க வில்லை…கோரிக்கை வைத்த அவனை விடுங்கள்… நான் இதற்கு Ok சொல்வேன் என்று நீங்கள் எப்படி நினைத்தீர்கள்… அது மட்டுமில்லாமல் என்னைப் பற்றி இன்னொருவரிடம் என் அனுமதி இல்லாமல் பேசி இருக்கீங்க நீங்க…” என்றவள்
“அந்த அயோக்கியனுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை…” அவன் தான் அந்த அயோக்கியன் என்பதை உணராமல்
அதற்கு மேல் அவனை பேச விடாமலே…
“யார் சார் அவன்… நான் பார்க்கனும்.. என்றவளிடம்
அவள் கோபத்தையும்..மறுப்பையும் புரிந்தவன்….
சற்று எரிச்சலுடன்…
”அதுதான் உனக்கு பிடிக்கவில்லையே பிறகு எதற்கு அவன்? அது மட்டும் இல்லாமல் நான் சொல்லாமல் விட்டு பிறகு வந்து இது மாதிரி ஒரு வாய்ப்பு இருந்தது என்றிருந்தால் என் அப்பாவுக்காக ஒத்துக் கொண்டிருப்பேன் என்று நீ கூறிவிட்டால் … அதற்காகத்தான் கேட்டேன்… சரி விடு …. உனக்கு பிடிக்கலை விட்டு விடுவோம்” என்றான் அவளின் கோபத்தை உணர்ந்தபடி…
அவன் சொன்னதில் ஓரளவு நியாயம் இருந்ததால் சற்று தணிந்தவள் … ”அப்பாவுக்காக நான் எதையும் செய்வேன் என்பது உண்மைதான்… ஆனால் நான் செய்யும் காரியம் என் அப்பாவின் தன்மானத்தைக் காப்பாற்றி…. எனது குடும்ப மானத்தை குழைத்தால்… அதன் பிறகு என் அப்பா அம்மா முன்னிலையில் நிற்க முடியுமா? சொல்லுங்கள்…” என்றவள் சற்று யோசித்தவள்… அவன் யார் என்று தெரிய வேண்டும் நினைத்தாள்… அவனிடம் நாலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டும் போல் இருந்தது….
பாலாவிடம் நான் அவரை பார்க்கலாமா என்று கேட்டாள்…
”இல்லை கீர்த்தி… உனக்கு சம்மதம் இல்லை என்ற பிறகு அது எதற்கு…கிளம்பலாம்” என்றவனிடம்…
”நான் இன்னும் என் பதிலை சொல்ல வில்லையே பாலா” என்றவளை ஒரு மாதிரியாய் பார்த்தான்… இத்தனை நேரமாய் சம்மதமில்லை என்ற நோக்கில்தானே பேசினாள்..
நாம்தான் அவள் பேசியதை ஒழுங்காக கேட்கவில்லையோ என்று நினைத்தபடி
“இவ்வளவு நேரம் அப்படித்தானே பேசிக் கொண்டிருந்தாய்….. சரி விடு… இப்போ சொல்லு உனக்கு இதில் சம்மதமா?” என்று அவளின் மனநிலை உணராமல் தனக்கு சாதமான பதில் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் கேட்க
கீர்த்தியோ அடப்பாவி நான் இன்னும் சம்மதம் சொல்வேன் என்று நினைப்பா உனக்கு… என்று மனதில் அவனைக் கடிந்தவள் அவனையே பார்ததபடி
”எனக்கு அவரைப் பார்க்க வேண்டும்…. அவரைப் பற்றி தெரிய வேண்டும்..அதன் பிறகு அவரிடம் என் முடிவைச் சொல்கிறேன்…” என்று பாலாவை பார்த்தாள்..
அவனைப் பற்றி தெரிய வேண்டுமா? அவனிடம் தான் முடிவை சொல்வாயா….ஏன் என்னிடம் சொன்னால் என்ன? என்று தடுமாறியவனிடம்
“ஆமாம், எனக்கு தெரிய வேண்டும், அதன் பிறகுதான் ஆமா இல்லை என்ற முடிவைச் சொல்ல முடியும் , நானும் பார்க்க வேண்டாமா , வெறும் பணம் மட்டும் என்றால் உங்களை வைத்தே சொல்லி விடலாம், இது வாழ்க்கை பிரச்சனையும் ஆயிற்றே , எப்படி பார்க்காமல் சொல்வது” என்றாள் உள்ளே இருந்த வன்மத்தை எல்லாம் மறைத்தபடி
அவளது பதிலில் சற்று யோசித்தவன்
”ஒகே ஒத்துக் கொள்கிறேன், நீயும் பார்த்தால்தான் முடிவு செய்வது சரியாக இருக்கும்” என்றவன் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தவன், எழுந்து நின்றான்
அவன் எழுந்தவுடன் பாலா அந்த கடன் கொடுப்பதாய்ச் சொன்ன அயோக்கியனைத்தான் கூட்டி வரப் போகிறான் என்று கீர்த்தியும் எழுந்தாள்.
ஆனால் அவன் எங்கும் நகராமல் கீர்த்தியை நோக்கியவன்
”சரி, இப்போது சொல் உனக்கு சம்மதமா, இல்லையா” என்றான் இறுகிய முகத்துடன் அவளைப் பார்த்து
கீர்த்திக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. இவன் என்ன பைத்தியமா இத்தனை தடவை அடித்துச் சொல்லி … யார் கேட்டானோ அவனிடம் தான் சொல்வேன்…. என்றால் மீண்டும் என்னிடம் சொல் என்றால் என்ன அர்த்தம் என்று புரியாமல் முறைத்தாள்
”நான் என்ன சொன்னேன் என்று புரியவில்லையா பாலா உங்களுக்கு இல்லை…. தெரியாதது போல் நடிக்கிறீர்களா? ” எனும்போது சார் என்பதெல்லாம் எங்கோ பறந்து போய் இருந்தது
”எல்லாம் புரிகிறது , அதனால்தான் என்னிடம் சொல்லு என்கிறேன், அது உனக்கு புரியவில்லையா” என்றபோது
’என்னிடம்’ என்பதை அழுத்திய அவன் குரலில்….அவளுக்கு அவன்தான் அந்த அயோக்கியன் என்பது விளங்க
எந்த நிமிடத்தில் அவன் வார்த்தையில் இருந்த அர்த்தமும் விளங்கியதோ அதே நிமிடத்தில் அவளின் கை அவனது கன்னத்தில் பதிந்தது…..
கீர்த்தி அந்த நிமிடமே அப்படியே பூமி பிளந்து உள்ளே போய் விட மாட்டோமா இல்லை அவனைத்தான் உள்ளே இழுக்காதோ என்ற நிலையில் இறுகி நின்றாள்….
Comments