அன்பே நீ இன்றி-53

அத்தியாயம் 53:

விஜய் கோபமாகச் சென்ற பிறகு…. தீக்‌ஷாவும் வர மறுத்து விட… ஜெயந்திக்கு தான் மகளை அங்கேயே விட்டுப் போக மனமே வர வில்லை…..

விஜய்யே போ என்று சொல்லி இருந்தால் கூட தீக்‌ஷா போயிருந்திருக்க மாட்டாள் தான்…. ஜெயந்தி வற்புறுத்தியும்…. தீக்‌ஷா தன் முடிவில் இருந்து மாறாமல் இருக்க…. தீபன் தான் ஒருவாறு சமாளித்து… தன் குடும்பத்தைக் கூட்டிச் சென்றான்…

கிளம்பும் போது… முக வாட்டத்தோடு இருந்த தன் தாயிடம்….

“அம்மா…. நீங்க இப்படி போனால் என்ன அர்த்தம்… இந்த வீட்டுக்கு ஏற்கனவே நல்ல நேரம் பார்த்து வந்த போது எல்லாம் நல்லவிதமா நடந்ததா… எது நடக்கனுமோ அது நடந்துதான் ஆகும்…. நான் பார்த்துக்கிறேன்…. என்றவள்… தன் பெற்றோரின் ஆசிர்வாதங்களையும் வாங்க மறக்கவில்லை…

ஜெயந்தியின் ஆதங்கம்…. கலைச்செல்வியையும் வருத்த

“நீயாவது அவன்கிட்ட பேசும்மா….” என்று மருமகளிடம் சொல்ல…

“உங்க பையன் பிடிவாதம் தான் உங்களுக்குத் தெரியும்ல…. இந்தக் கோபம், பிடிவாதம் எல்லாவற்றையும் வளர்த்து விட்டுட்டு இப்போ பேசு பேசுன்னா…… வீட்டுக்கு வந்தவங்களைக் கூட வழி அனுப்ப கீழ இறங்கி வந்தாரா அத்தை….. “ என்று மகளாய் தீக்‌ஷாவும் கோபமாய் பேச…

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே விஜய் கீழே இறங்கி வர…. தீக்‌ஷா வாயை மூடினாள்…

வந்தவன்

“சாரி” என்று பொதுவாகச் சொல்லியபடி…

தீக்‌ஷாவைப் பார்த்து

“வா…. போகலாம்…” என்றான்

தீக்‌ஷா புரியாமல் பார்க்க…

“உங்க அம்மா வீட்டுக்குதான்… உன் கோபத்தையெல்லாம் தாங்குற சக்தி எனக்கு கிடையாதும்மா…. நானே கொண்டு போய் விட்டு வருகிறேன்… உனக்கு எப்போது தோணுதோ…. இல்லை இவங்க எல்லோருக்கும் நமக்கு நல்ல நேரம் வந்திருச்சுனு எப்போ தோணுதோ…. அப்போது வா “ என்று அவளைப் பார்த்தபடி பேச…