அன்பே நீ இன்றி 52

அத்தியாயம் 52:

காரை விட்டு இறங்கிய தீக்‌ஷா…. தன்னை எதிர்பார்த்து காத்திருந்த 2 குடும்பத்தினரையும் சந்தோஷத்தோடு பார்த்தவள்…. தன் அன்னையைப் பார்க்க……. ஆனந்தம் முகமெங்கும் ஜொலிக்க நின்ற தன் அன்னையைக் கண்டவளுக்கு அவளின் மடியில் புதைய வேண்டும் போல் இருக்க…. விஜய்யை விட்டு தன் அன்னையை நோக்கி வேக நடை நடந்தவளை விஜய்யின் கைகளின் அழுத்தம் தடுத்து நிறுத்தியது….

கணவனைப் புரியாத பார்வை பார்க்க….. அவனது அழுத்தமான பார்வையோ….

“உன் குடும்பத்தை பார்த்த உடனே கழட்டி விட்டுட்டு ஓடப் பார்க்கிறியா… ஒழுங்கா என் கூட வா” என்று சொல்லாமல் சொல்ல… அதைப் புரிந்தவளாய் தீக்‌ஷா அவனோடு நடந்தாள்…

ஆனால் 2 அடி எடுத்து வைத்திருக்க மாட்டாள்….. கால் தடுக்கி மடங்கி உட்கார…. விஜய் வேகமாய்ப் பிடித்து விட்டான் தான்… ஆனாலும் அவள் வலியில் முகம் சுருக்க…. இரு குடும்பத்தினரும் அவர்கள் அருகே ஓடி வந்து விட்டனர்… பதறியபடி…

ஓடி வந்த ஜெயந்தி… தன் மகளின் அருகே உட்கார்ந்தபடி…

“என்னடா பார்த்து வரக் கூடாது என்ன அவசரம்…. “ என்று மகளின் காலைப் பிடித்து தேய்த்து விட்டவளுக்கு மனதிலோ…

“இப்படி விழுந்து விட்டாளே” என்ற சஞ்சலம் வந்து போக… அதே கவலையோடு தன் மகளைப் பார்க்க….

தன் தாயை தன் அருகில் வர வைத்து விட்ட துள்ளலில்….

“அம்மா…. ஒண்ணும் பிரச்ச்னையில்லை.. லைட்டா வலிக்குது அவ்வளவுதான்…” என்று தடுமாறியபடி எழுந்து… ஒரு காலைத் தூக்கியபடி…. ஒரு அடி எடுத்து வைக்க… விஜய் மற்றவர்களிடம்….

“நீங்க எல்லோரும் முன்னே போங்க… இவள நான் தூக்கிட்டு வருகிறேன்…” என்று சொல்ல… அதன் படி அனைவரும் முன்னே… போக… மற்றவர்கள் சில அடி தூரம் போனபின்… முறைத்தான் தீக்‌ஷாவை…

“உன்னை…” என்றபடி ஒரே அள்ளளில் தன் கைக்குள் கொண்டு வந்தவன்…

“எங்கருந்துடி கத்துகிட்ட இந்த நடிப்ப …. ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் உனக்கு…. தூக்குடான்னா தூக்கப் போறேன்… அதுக்கு இத்தனை சீன்… இத்தனை ஆர்ப்பாட்டமா….. ”