top of page
Writer's picturePraveena Vijay

அன்பே நீ இன்றி-50

அத்தியாயம் 50:

விஜய் பில்டர்ஸ் அலுவலகத்தில்.. மாலை 6 மணி

கிட்டத்தட்ட அலுவலகமே காலியாகி இருக்க….. கிளம்பலாம் என்று முடிவெடுத்த பார்வதி….. சுரேந்தரின் அறையை திரும்பிப் பார்த்தாள்….

பார்வதி இந்த அலுவலகத்தில் சேர்ந்த பிறகு… இன்னும் சாரகேஷ் எச்சரிக்கையாக இருந்தான்…. பார்வதி சுரேந்தரோடு வேலை பார்ப்பதில் கொஞ்சம் அண்ணனாகத் சாரகேசுக்குக் கொஞ்சம் தயக்கம்…. தானே கொண்டு போய் விட்டு தானே கூட்டியும் வந்தான்… சுரேந்தருக்கு கூட இதில் கோபம் தான்…

பார்வதியிடமும், விஜய்யிடமும் தன் முமுறலைச் சொல்ல….

பார்வதியால்…. சுரேந்தரையும் சமாதானப்படுத்த முடியவில்லை… சாரகேசிடமும் பேச முடியவில்லை….

விஜய்தான் சுரேந்தரை சமாதனப்படுத்தும் விதமாக…

“டேய் நீயும் அண்ணன் ஸ்தானத்தில இருந்து பாருடா…. நம்ம ராதாவை இப்படி கல்யாணத்துக்கு முன்னால தீபனோட தனியா அனுப்பி இருப்போமாடா…. சாரகேஷ் நிலைமையையும் புரிஞ்சுக்கோடா” என்ற போது….

சுரேந்தருக்கு ஒன்று மட்டும் தான் தோன்றியது…

தீக்‌ஷா எதைப் பற்றியும் கவலைப்படாமல் விஜய்யைப் பார்க்க வந்ததை எல்லாம் நினைத்தவன்…. இவளும் தீக்‌ஷா ஃப்ரெண்ட்தானே…. அவளுக்கிருக்கிற துணிச்சல்ல ஒரு பங்காவது இருக்குதா… அண்ணா… ஆட்டுக்குட்டினு…. என்ற பெருமூச்சுதான் அவனுக்குள் தோன்றியது….

இன்றும் சாரகேஷ் வரவிற்காக காத்திருந்தவள்…. அவன் வருவதற்கு முன் சுரேந்தரிடம் வழக்கம் போல் செலவிடும் 10 நிமிடங்களை எதிர்நோக்கி காத்திருந்தாள்….

சுரேந்தர் அன்று சீக்கிரமாகவே அழைக்க… வேகமாய் அழைபேசியை எடுக்க

“பாரு இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு…. 1 மணி நேரம் எக்ஸ்ட்ரா ஆகும்” என்று சொல்லிவிட்டு…. அவள் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் போனை வைக்க….

பார்வதி நின்றது…. சுரேந்தர் முன் தான்…

”சுரேன்….. மணி 6 ஆகப் போகுது…. அண்ணா வேற வந்துட்டு இருப்பார்….. 6 மணிக்கு மேல அப்படி என்ன வேலை…. எங்க அண்ணா வந்தா நான் போய்ட்டே இருப்பேன்… கம்பெனி டைமே 6 தானே….. அதுக்கும் மேல ஒரு நிமிசம் கூட இருக்க மாட்டேன்… இதெல்லாம் சொல்லித்தான் இங்க வேலையில சேர்ந்தேன்…” என்று பொரிந்து தள்ள….

புருவம் தூக்கிப் பார்த்தான் சுரேந்தர்….

“என்ன” என்பது போல் இவளும் பார்க்க…

”நான்கிறதுனால இப்படி பேசறியா… இல்ல எல்லார்கிட்டயுமே இப்படித்தான் பேசுவியா…… ”

முறைத்தாள் பார்வதி…

“நீங்கன்றதுனால இவ்வளவு விளக்கம்… இல்லைனா…. ஜஸ்ட் மெயில் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்….. போதுமா”

“துணிச்சல் தான்…. ஆனா இதெல்லாம் என்கிட்ட காட்டு… உங்க அண்ணன்கிட்ட காட்ட வேண்டியது தானே……. எங்கயாவது வெளியில் போகாலாம்னு கூப்பிட்டால்…. வந்துராதா…. சரி… ஆஃபிஸ் போகும் போதும் வரும் போது ஒண்ணா போய் வரலாம்னு பார்த்தா.. உங்க அண்ணா அதுக்கும் தடா சொல்லிட்டாரு… ஆமா அப்படி என்ன பண்ணிடுவேன்னு உங்க அண்ணன் நெனச்சுட்டு இருக்காரு….. கல்யாண நாள் குறிக்கிறதுலயும் இன்னும் பிரச்சனை அவரால…. என்ன நெனச்சுட்டு இருக்காரு….. “ என்று சொன்னவன்….

“இன்னைக்கு 7’0 க்ளாக் வரைக்கும் நீ என் கூடத்தான் இருக்கனும்…” என்று கட்டளை போல் கூறியவனை நோக்கி அதிர்ந்து பார்த்தவளை….

“என்ன………..லுக்……… வில்லனைப் பார்க்கிற மாதிரி பார்க்கிற” என்று சிரித்தான் சுரேந்தர்….

அவன் வேண்டுமென்றே வம்பிழுக்கப் பார்க்கிறான் என்று உணர்ந்த பார்வதியும்…. இப்போது…

“நீங்க என் ஹீரோ சுரேன்…. “ என்று கண்ணடிக்க…

அலுத்தவனாய்…

“எனக்கு இந்த ஹீரோ போஸ்ட்டெல்லாம் வேண்டாம்… நீ பேச்சை மாத்தாத… எனக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணுவியா இல்லையா அதை மட்டும் சொல்லு” என்று கராறாய் இருக்க….

“சுரேன்… இது என்ன பிடிவாதம்….. அண்ணா இப்ப வந்துருவாங்க…. அப்புறம் எப்படி…..” என்று சாரகேசை முன்னிறுத்த…

“உங்க அண்ணா இப்ப வரமாட்டார்……… இன்னைக்கு உன்னைக் கூப்பிடக்கூட கூட வரமாட்டார்.. நான் தான் உன்னைக் கூட்டிட்டு போகணும்…” என்றபோதே சாரகேஷும் பார்வதிக்கு போனை அடித்தான்…

“பாரு நான் வர லேட் ஆகும்…. நீ சுரேன் கூட போய்டும்மா” என்றவன் அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போனையும் வைத்து விட்டான்…

பார்வதி தன் கண்களை விரித்து சுரேந்தரை ஆச்சரியமாகப் பார்க்க…

“போன்ல உங்க அண்ணாதானே… ரீசன் என்னனு தெரிய வேண்டுமா… எங்க அண்ணா உங்க அண்ணா முன்னால இருக்கிறார் இப்போ…. அதுனாலதான்….”

“என்னது..” என்று வாய் பிள்ந்தவளை…

“சாரகேஷ்-அகல்யா மேரேஜ் டேட் குறிக்காமல் எங்க அண்ணா திரும்ப மாட்டார்…. எங்க அண்ணா ஒரு விசயத்தை கையில எடுத்தார்னா… அதை முடிக்காமல் வைக்க மாட்டார்..”

அதைக் கேட்ட பார்வதி நக்கலாகச் சிரித்தாள்….

“எதுக்குடி இந்த சிரிப்பு…. அதுவும் நக்கலா…. தீக்‌ஷா விசயத்துல எங்க அண்ணா சறுக்கியிருக்கலாம்….. அதுனால எங்க அண்ணா எல்லா விசயத்திலயும் கோட்டை விட மாட்டார்….” என்று கோபமாய்ச் சொல்ல…

“நான் அதை நினைக்கல….. விஜய் அத்தான் எங்க அண்ணாகிட்ட போய் பேசப் போறாருன்னா…. நீங்க அந்த அளவு வீட்ல சீன் போட்டுட்டு இருக்கீங்களா என்ன…..” என்று சுரேந்தரின் காலை வார….

அதற்கும் சலித்தான் சுரேந்தர்….

“எனக்காகலாம் இல்லை… தீக்‌ஷாவுக்காக….. தீக்‌ஷா அகல்யா பற்றி சொல்லி இருப்பாள் போல.. “

“ஓ….. “ என்றவள்… உடனே

”தீக்‌ஷா எப்படி இருக்கா…… என்கிட்ட ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாள்….. நல்லாத்தான் இருக்கேன்றா…. உங்களுக்கு எப்படி தெரியுது…. விஜய் அத்தான் அவகிட்ட பழைய மாதிரி நடந்துக்கிறாரா…” என்று தன் தோழியின் கவலையில் பேச ஆரம்பிக்க…

சுரெந்தர் இருந்த பொறுமை எல்லாம் போய்… அவளின் அருகில் வந்து விட்டான்….

“என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது உனக்கு…. ஒருத்தன் உனக்காக ஏங்கி… அம்மா தாயேனு உன்னை கெஞ்சி பிடிச்சு வச்சிருந்தா… அண்ணா… அத்தான்…. தீக்‌ஷானு… உலகத்தை பத்தியெல்லாம் பேசு… உன் முன்னால இருக்கிறவனப் பற்றி பேசுறியா…. போன்ல மட்டும் கொஞ்சு…. “ என்றவன் ஆரம்பித்த போது இருந்த குரலில் இருந்த சுருதியின் வேகம்… முடிக்கும் போது காதலனாய்க் கனிந்திருக்க….

பார்வதியும் அவர்களுக்கான காதல் உலகில் சஞ்சரித்தவள்

“இப்போ என்ன… என் சுரேனைக் கவனிக்கனும் அவ்வளவுதானே….” என்றபடி அவன் தலைக் கேசத்தை தன் கைகளால் சரி செய்து விட்டவளை….. ஆசையாக பார்த்த சுரேந்தர்….இப்போது கள்வனாக மாறியபடி….

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்……. நல்லா கவனி….. ” என்று பார்வதியைக் இடையில் கையை வைத்து அவளை மேஜையின் மேல் அமர வைத்தவன்…..தைரியமாய் அவள் கன்னத்தில் தன் இதழ் பதித்தும் விட…. அதிர்ந்த பார்வதி….. அவனைப் பிடித்து தள்ளி விட்டு இறங்கிப் முயற்சிக்க…. அவளால் முடிய வில்லை… காரணம் சுரேந்தர் அவளை நகர விடாதவாறு சிறை பிடித்திருக்க…. முறைத்தாள்…

அதற்கெல்லாம் அசராமல் சுரேந்தர் இருக்க….

”சுரேன்…” என்று சொன்னவள் குரலும் நெகிழ்ந்து இப்போது வலுவிழந்து போய் இருக்க….

தன் பெயர் சொன்ன அவளின் இதழுக்கு………. தன் இதழால் மென்மையாக பரிசளித்த சுரேந்தரை தடுக்கும் நிலை போய் அதில் ஆழ்ந்து விட்டாள் பார்வதி…………

அவனாக விலகும் வரை…. பார்வதியும் அதே நிலையில் இருக்க…. சுரேந்தர் அவனாகவே தன்னை மீட்டெடுத்து…. தன்னவளை அணைத்தான்………..

அவனின் அணைப்பில் இன்னும் மோன நிலைக்குப் போனவளை….உணர்ந்த சுரேந்தர்…

“ஹேய் ’பாரு’…. டெய்லி…. எனக்கு இந்த பரிசு கிடைக்குமா…. நம்ம கல்யாணம் ஆகிற வரை..” என்று கிறக்கமாய் கேட்டான் சுரேந்தர்…

பார்வதியோ அவனை விட ஒரு படி மேலே போய்..

“மேரேஜுக்கு அப்புறம் இது கூட வேண்டாமா…” என்று தான் இருந்த நிலையிலும் அவனை வம்புக்கு இழுக்க…

வாய் விட்டு சிரித்தவன்…..

“மேரேஜுக்கு அப்புறம் மொத்தமாய் உன்னை எடுத்துக்கிருவேன்…. இந்த பரிசெல்லாம் யாருக்கு வேண்டும்…..” என்றவனின் வார்த்தைகள் தந்த தாக்கத்தை அவன் கைகள் அவள் இடையிலும் பதிய வைக்க முயல… பார்வதி…..அப்போதுதான் தன் நிலை உணர்ந்தவளாய்….. அவனை விட்டு விலகினாள்….

சுரேந்தரும் அவள் நிலை உணர்ந்தவனாய் அவளை விட்டு தள்ளி நின்றவன்….

“சரி நாம ஒரு ரெஸ்டாரெண்டுக்கு போகலாம்.. அதுக்கப்புறம் உன்னை வீட்ல ட்ராப் பண்ணுகிறேன்…” என்றபோது அவன் காதலியிடமிருந்து….

“சரி” என்ற குரல் கூட கம்மலாய் வெளி வந்தது,,,… ஏதோ தப்பு செய்து விட்டவள் போல… அவளின் முகத்தை நிமிர்த்தியவன்

“பாரு…. என்னைப் பாரு….. உனக்கு பிடிக்கலையா…. பிடிக்கலைனா இனி பக்கத்தில நெருங்க மாட்டேன்…. ” என்றவன்…

“மேரேஜுக்கும் முன்னால…. என்று முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக சொல்லி அப்பாவியாய் தன் முன் நின்றவனைப் பார்த்து பார்வதியும்….

”அதுக்கபுறம்…. என் பெர்மிஷன் வேண்டாமா சாருக்கு….” என்று இடுப்பில் கைவைத்து சிலிர்த்தவளை…..

“சரி விடு… உனக்குப் பிடிச்சிருந்தாலும் பக்கத்தில நெருங்க மாட்டேன்,, போதுமா” என்று குறும்பாய் அவளை மீண்டும் இழுத்தவனை…..

“பார்க்கலாம்…” என்று அவளும் சிரிக்க…. சுரேந்தரும் அதில் கலந்தான்…… அதன் பின் இருவருமாய்…. அந்த அலுவலகத்தை விட்டு கிளம்பினர்….

----

அதே நேரம் விஜய், சாரகேஷ் மற்றும் அகல்யாவோடு பேசி முடித்திருந்தான்….

சாரகேஷ் இப்போதும் அவன் முடிவில் இருந்து மாற வில்லை….

விஜய் விடாக்கண்டனாக இருந்தால் அவன் கொடாக்கண்டனாக இருந்தான்….

“இல்ல விஜய்… என் முடிவு இதுதான்… பார்வதிக்கு மேரேஜ் முடியட்டும்.. அம்மாவ சமாளிக்கிறது என்னோட பொறுப்பு….. ப்ளீஸ் என்னைக் கம்பெல் பண்ணாதீங்க…..” என்றபோது

அகல்யா விஜய்யை வேதனையோடு பார்த்தாள்….

“என்ன சாரகேஷ் இந்த அளவு பிடிவாதம் பிடிக்கறீங்க….. உங்க அம்மாவை விடுங்க…. அகல்யா அப்பாவுக்கு என்ன பதில் சொல்றீங்க…. அவர் பொண்ணுக்கு வேற இடம் பார்க்கணும்னு சொல்றாரு…. அவரோட உடல்நிலை சரி இல்லையாம்… அவர் பொண்ணுக்கு உடனே மேரேஜ் பண்ணனும்னு சொல்கிறார்…. அகல்யா உங்க முன்னாடிதான் நிற்கிறாங்க….அவங்க கிட்டயே சொல்லிருங்க…. நீ உன் வழில போய்க் கொள்” என்று முடிக்க…

அகல்யாவை முறைத்தான் சாரகேஷ்….

“ஏன் அகல்யா… எனக்காக நீ வெயிட் பண்ண மாட்டியா…. நீயாவது என்னைப் புரிஞ்சுக்கோ….. ஒரு தடவை அவசரப்பட்டு முடிவெடுத்துட்டேன்… அதுவே இன்னும் என்னைக் குத்துது… என்னை நான் புரிஞ்சுக்க டைம் கேட்கிறேன் அவ்வளவுதான்….. “ என்று தீக்‌ஷாவை பெண் கேட்டுப் போய் பிரச்சனையான விசயத்தை நினைவில் வைத்து பேச…

அகல்யா அதற்கு மேல் தாங்காமல் பொங்கி விட்டாள்… விஜய் இருக்கிறான் என்று கூட பார்க்கவில்லை…

“ஏன் சாரகேஷ்…. தீக்‌ஷாவை மறக்க முடியலையா ….. அவ கஷ்டப்படுறா… அவ வாழ்நாளை எண்ணிட்டு இருக்கா… அவ கண்ணீரைப் பார்க்க முடியலைனு…. அவ வீட்டுக்கே போய் நின்னீங்க…. அப்போ என் ஞாபகம் உங்களுக்கு ஒரு நொடி கூட வரலைதானே….. உங்க மனசில எனக்கு சின்ன இடம் கூட கொடுக்கலைனு தானே அர்த்தம்….. 2 வருசம் உங்க பதிலுக்காக காத்துட்டு இருந்த என்னோட இடம் என்னன்னு அப்போதே தெரிஞ்சுருந்துக்கணும்….“ சொல்லும் போதே அவள் குரல் உடைந்திருக்க… அவளையும் மீறி கண்ணிர் வழிய ஆரம்பிக்க….

வேகமாய் துடைத்தவள்…. அதற்கு மேல் பேச முடியாமல் திணற…. சாரகேஷுக்கு அவளின் அழுகை துக்கத்தை கொடுத்ததுதான்… இருந்தும் அமைதியாகவே நின்றான்

சாரகேஷ் அவன் நிலையிலேயே இருக்க…..

விஜய் அகல்யாவிடம் பேச ஆரம்பித்தான்..

“அகல்யா… எமோசனல் ஆகாதீங்க…. இந்த பீல்ட்ல இருந்துட்டு இவ்வளவு எமோசனல் ஆகலாமா” என்று சாந்தப்படுத்த முயற்சிக்க…

“ப்ச்ச்.. எனக்கும் மனசில்லையா சார்…. நான் என்ன மரக்கட்டையா…. …. ஒவ்வொரு முறையும் இவர் முன்னால வெட்கத்தை விட்டு என்னோட காதலை சொல்லி கெஞ்சிட்டு இருக்கேன் சார்…. ஒரு தடவை கூட என் மனசை இவர் புரிஞ்சுக்காம இன்சல்ட் பண்றதுதான் இவர் வேலை… இருந்தும் இவர்கிட்ட இன்னும் கெஞ்சிட்டு இருக்கேன் சார்….” என்று ஆவேசமாய் பேசிக் கொண்டிருந்தாள் அகல்யா…

“இல்லை அகல்யா.. சாரகேஷ் உங்க மனசை புரிஞ்சுக்கிட்டதுனாலதான்…. உங்கள லவ் பணறதுனாலதான் இவ்வளவு தயங்குகிறார்” என்று விஜய் இடை மறித்துப் பேச..

அகல்யா ஆச்சரியமாகப் பார்த்தாள்…. விஜய்யை… பின் சாரகேசையும் பார்த்தாள்

சாரகேஷோ… விஜய் சொல்வது உண்மைதான் என்பது போல மௌனமாக இருக்க… விஜய் தொடர்ந்தான்…

”தீக்‌ஷா கஷ்டப்படுறா…. கண்ணீர் சிந்தினா…. அப்படினுதான் சாரகேஷ் பார்த்தாரே தவிர… அவ மனசுல என்ன இருக்குனு சாரகேஷ் யோசிக்கவே இல்லை….. ஆனால் உங்களுக்காக…உங்க மனசுக்காக… உங்க காதலுக்காக ரொம்ப யோசிக்கிறார் அகல்யா…. உங்க காதலுக்கு முழுவதுமா உண்மையா இருக்கணும்னு நினைக்கிறார்… உங்க அளவுக்கு அவரும் காதலிக்க நினைக்கிறார் அகல்யா… அதற்காகத்தான் இந்த தாமதம்… அவர் மனசுக்குள்ள எப்போதோ வந்துட்டீங்க…… அதை சொல்ல நினைக்கும் முன்னால தீக்‌ஷாவால பிரச்சனை வந்துருச்சு,….. இப்போ ரொம்ப தயங்குறாரு….”

என்ற போதே சாரகேஷ் தன் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிக் கொண்டிருக்கும் விஜய்யைப் பார்த்து அப்படியே அமர்ந்து விட…… சாரகேசின் தோள்களில் ஆறுதலாய் கை வைத்தவன்…

“தப்பு செஞ்சுட்டு… உறுத்தலா இருக்கிற மனசோட எப்படி அகல்யா அவர் தன் காதலைச் சொல்வாரு… நீங்க ஒருவேளை அவரோட காதலை சந்தேகமா பார்த்துட்டீங்கன்னா…”

அதெல்லாம் உங்களுக்கு புரியாது அகல்யா…. இதே நிலைமையிலதான் நானும் இருந்தேன்…. தீக்‌ஷாவுக்கும் எனக்கும் எவ்வளவோ பிரச்சனை…. ஆனா அவ என் மனசில வந்தப்போது… என்னால அவகிட்ட பேச முடியல…. அவளே எல்லாவற்றையும் மறந்து என் முன்னால வந்து நின்ற போது கூட என் காதலை சொல்ல முடியல…. “ என்று தன் நினைவுகளில் கலந்து சொல்ல ஆரம்பித்தவன்… அதை நிறுத்தி….

“சொல்லுங்க சாரகேஷ்… நான் சொல்றது உண்மைதானே…. உங்க மனசில இருக்கிறதை வெளிப்படையா பேசுங்க…. இன்னும் என்ன பிடிவாதம்…. காதலுக்கு பெரிய எதிரி ஈகோதான்…. எல்லாவற்றையும் தூக்கி போடுங்க….. யோசிங்க சாரகேஷ்…’ என்றவன்

”இனி அகல்யாவை பிடிச்சுருக்கா இல்லையானு நான் கேட்க மாட்டேன்…. எப்போ மேரேஜ் வச்சுக்கலாம்னு தான் கேட்பேன்…” என்று சாரகேஷ் முன்னால் சிரித்தபடி அமர….

அகல்யா இன்னும் நம்ப முடியாமல் சாரகேசைப் பார்க்க…. தன் தலை அசைப்பில் சாரகேஷ் அவளை அருகில் அழைத்தான்….

அவன் அழைத்ததுதான் தாமதம்…… கண்களில் வழிந்த கண்ணீரைக்கூட துடைக்க மறந்தவளாய்…. அருகில் விஜய் இருக்கிறான் என்பதையெல்லாம் தூக்கிப் போட்டவளாய்….அவனோடு சரணைடைய……..

விஜய் வேகமாய் எழுந்து.....

“என்ஜாய் மிஸ்டர் அண்ட் மிசஸ் சாரகேஷ்…. நான் கிளம்பறேன்…. சீக்கிரம் பேசி ஒரு முடிவுக்கு வாங்க….. இப்போ நான் கரடியா இருக்க விரும்பலை…. பாய்…” என்று அவர்களுக்குத் தனிமை அளித்து அங்கிருந்து நகன்றான்…

விஜய் அகன்ற பிறகு…. அகல்யா நம்ப முடியாமல் சாரகேசையே பார்த்தபடி இருந்தவள்

”உண்மையிலேயே நான் உங்க மேல சாய்ந்து இருக்கேனா….. கனவா நனவா நம்பவே முடியலையே…. அப்பா ரொம்ப சந்தோசப்படுவார்” என்றவளிடம்

”நம்ப முடியலைனா… என்னைக் கிள்ளிப் பார்த்துக்கோ…. என்று காதலின் அரிச்சுவடி படிக்கும் மாணவனாய் சாரகேஷ அவன் கைகளை நீட்ட

‘ஏன் கிள்ளிப் பார்க்க வேண்டும்….’’ என்று கன்னம் சிவக்கக் கூறியவள்….. அவன் கைகளில் இதழ் பதித்து… நனவுதான் என்று நிரூபிக்கப் போக…

அதற்கு இடம் கொடாமல்… அவளை நிமிர்த்தியவன்…. அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்து…. காதல் கள்வனாய் மாறி…. தன்னவளை மீண்டும் கனவுலகத்தில் சஞ்சரிக்க விட….…. காதல் பள்ளிக் கூடத்தின் தலை சிறந்த மாணவனில் ஒருவனாய் சாரகேஷும் கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தான்…

---------

கண்டிப்பாக சாரகேஷ் நல்ல முடிவைச் சொல்லுவான் என்ற நம்பிக்கையில் காரை எடுத்த விஜய்… வீட்டிற்கு செல்லாமல் கடற்கரைக்குச் சென்றான்…. தன் உள்ளத்தின் ஓயாத ஓசைகளை ஒதுக்கிவிட்டு…. அலைகளின் ஓசைகளில் தன்னைத் தொலைத்தவனுக்கு… தன் வாழ்க்கையில் கலங்கரை விளக்கம் என்று தென்படும் என்றுதான் தெரியவில்லை… தன் போராட்டத்தின் பயணத்தை நிறுத்தி…. நிம்மதி கிடைக்கும் கரையைத் தேடும் தோணியென அவன் மனம் அலைவுற்றுக் கொண்டிருந்த்து..

மணி 9 ஐக் கடந்தும் அவனுக்கு வீட்டிற்கு போக மனம் வரவில்லை….. எங்கே அவனறியாமல் அவனின் காதல் அவன் மனைவியை தீண்டிவிடுமோ என்று பயந்தான் அவன்… அதிலும் தீக்‌ஷா அவனை நெருங்க ஆரம்பித்த பிறகு அவனால் அவன் மனதையும் உடலையும் கட்டுப்படுத்த முடியவில்லை…

எல்லா சுகங்களையும் அவள் மூலம் அனுபவித்தவனால்… அவள் நெருங்கி வந்தும் அவளை அணைக்க முடியாமல் தவிக்கும் நரக வேதனையில் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தான் விஜய்…

எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ என்று அவனால் தன்னைத்தானே தேற்றக்கூட முடியாத நிலையில் இருந்தான்… இப்போதெல்லாம் அந்தந்த ஜெனமத்திலேயே பாவ புண்ணிய பலன் கிடைத்து விடுகிறதோ… இல்லையில்லை தனக்கு அடுத்த ஜென்ம்ம் என்று கிடையாது போல… அதனால் தான் இந்த ஜென்மத்திலேயே தனக்கு தீக்‌ஷாவை காட்டி… அவள் மூலமே இன்பத்தையும் அனுபவிக்க வைத்து… அவள் மூலமே துன்பத்தையும் காட்டி தன்னிடம் விதி விளையாடுகிறது என்றெல்லாம் தன் நினைவுக் கடலில் தத்தளித்தவனுக்கு மனைவி மாத்திரை போடும் நேரம் ஞாபகத்துக்கு வர…. போனைக் கையில் எடுத்து தீக்‌ஷாவுக்கு போன் செய்தான்… அவளிடம் மாத்திரை போடச் சொல்லி நினைவுபடுத்தியவன்… தான் வர தாமதமாகும் என்று கூறி வைத்து விட்டு,,

கலைச்செல்வியை அழைத்தவன், தீக்‌ஷா உறங்கும் வரை அருகில் இருக்கச் சொல்லி போன் செய்து விட்டு கடற்கறையிலே அமர்ந்து விட்டான்…

தீக்‌ஷா முதலில் போலெல்லாம் பிடிவாதம் பிடிக்காவில்லை… தன் நிலை ஓரளவு உணர்ந்தவள்… தனக்காகக் கூட இல்லாமல் தன் கணவனுக்காகவே மாத்திரைகளை அவளாகவே சாப்பிட ஆரம்பித்திருந்தாள். அதனால் விஜய் அவள் மாத்திரை போடும் விசயத்தில் கொஞ்சம் கவனமில்லாமல் அன்று விட்டு விட்டான்….

ஆனால் அன்றோ தீக்‌ஷா விஜய் போன் வந்த பிறகு…. கணவன் தாமதமாக வருவான் என்பதை அவன் மூலமாகவே தெரிந்து கொண்டதால்… மாத்திரை போட்டால் தூங்கி விடுவோம் என்று தெரிந்ததால்.. விஜய்யைப் பார்க்காமல் உறங்கக் கூடாது….. மாத்திரைகளை விழுங்காமல் அவன் வந்த பிறகு போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து காத்திருக்க…. கலைச்செல்வி உள்ளே வந்தார்…

தீக்‌ஷா உறங்கும் வரை அவள் அறையில் இருப்பதாக கூறி…. அங்கிருந்த சோபாவில் அமர…. கலைச்செல்வியிடம் மாத்திரை போட்டு விட்டதாக கூறி இருந்ததால் தன் அத்தையின் முன் உறங்குவதைப் போல பாவனை காட்டி படுத்தவள் ஒரு கட்டத்தில் அவளையும் மீறி தூக்கம் ஆட்க்கொள்ள..உறங்கியும் போனாள்…..

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தீக்‌ஷாவுக்கு திடீரென்று விழிப்புத்தட்ட… கணவனின் கையணைப்பில் படுத்தே பழகியிருந்த அவளின் உள்ளுணர்வு…. கண்விழிக்காமலே தான் இருக்குமிடம் உணர்ந்து கணவனைத் தேட… கைகளாலே துளவ… அவன் அதே கட்டிலின் ஓரத்தில் படுத்திருக்க… நிம்மதியாக அவனைச் சரணடைந்தவள்….. அவனின் அணைப்புக்குள் தன்னை கொண்டு வந்து மீண்டும் சில நிமிடங்களில் உறங்கியும் போனாள்….

கடந்த சில நாட்களாக விஜய் அவளோடு அந்த கட்டிலிலேயே படுக்க ஆரம்பித்து இருந்தான்… அது கூட தீக்‌ஷாவின் கட்டாயத்தினாலே நிகழ்ந்தது….

தன் மனைவி அருகில் இருக்கிறாள் என்ற உணர்வே அவனுக்கு இப்போதெல்லாம் ஓரளவு நல்ல உறக்கத்தை அளித்தது எனலாம்….

அன்று கூட தன் மனைவி தானாகவே தன் அருகில் வந்திருக்கிறாள் என்பதை உணராமல்… உறக்கத்திலேயே அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தும்… விழிக்கக் கூட முடியாமல் உறங்கிக் கொண்டிருந்தான் விஜய்…

இவனின் நிலைக்கு நேர் மாறாக தீக்‌ஷாவின் நிலை இருந்தது,… ஒரு அரைமணி நேரம்தான் தூங்கி இருப்பாள்…. அதற்கு மேல் அவளால் தூங்கவே முடியவில்லை…..

கண்வனை விட்டு எழுந்தவள்… வேகமாய் மணியைப் பார்க்க… அது அதிகாலை மணி 4 எனக் காட்டியது…

அவளுக்கு ஒரு மாதிரியான மன நிலை… அதை என்னவென்றே சொல்ல முடியவில்லை… அவளின் கடந்த கால நினைவுகள்… அவளை மீறி… அவள் ஆழ்மனதைக் கடக்க முயற்சி செய்ய…. அதை அடக்க நினைத்தவளால்… முடியவில்லை………… கடலுக்குள் மூழ்குவதைப் போல மூச்சு திணறினாள் தீக்‌ஷா… வழக்கமாய் தன்னை அடக்கிக் கொள்ளும் முயற்சி அவளால் முடியவில்லை…….. நினைவுகள் அவளை மீறி வெளியே வர முயற்சிக்க…. அது வெளி வருவதை அவள் மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை….

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்ன செய்வது என்று கூட தெரியாமல்.. அருகில் இருந்த விஜய்யைக் கூட எழுப்பாமல் பித்துப் பிடித்தவள் பொல அமர்ந்திருந்தவளை……….. அறையின் அலாரச் சத்தம் சுயநினைவுக்கு கொண்டு வர…. விஜய்யும் எழுந்து விட்டான்…..

எழுந்தவன்….. மனைவி கட்டில் ஒரு ஓரமாய் தலைய் அமர்ந்திருப்பதைப் பார்த்து…

“என்னவென்று” பதறிக் கேட்டபடி பதறி அருகில் போக….

அவனின் பதற்றத்தில் தன்னை நிலைப்படுத்திய தீக்‌ஷா

”அத்தான்…. நான் மாத்திரை போடல அதுதான் தூக்கம் வரலை.. சீக்கிரம் எழுந்துட்டேன் போல….சரி நான் குளிக்கப் போகிறேன்” என்று சொல்லியவள்…

மாத்திரை போட வில்லை என்று சொன்னதால் திட்டி விடுவானோ என்று வேகமாய் அங்கிருந்து எழுந்து குளியலறைக்குள் நுழைய…

விஜய் யோசனையுடன் சில நிமிடங்கள் இருந்தவன்….. மீண்டும் உறங்க ஆரம்பித்தான்….

தீக்‌ஷா குளித்துவிட்டு….. கீழே தோட்டத்தில் சிறிது நேரம் அமர்ந்து தன்னை கொஞ்சமாய் நிதானபடுத்தியவளுக்கு… ஓரளவு மனதின் போராட்டம் அமிழ்ந்தது போல் இருக்க…. தன் அறைக்கு போக நினைக்க………. பார்வதி அவளை அழைத்தாள்…

“தீக்‌ஷா…குட் மார்னிங்.. சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா… சரி இன்னைக்கு ஒருநாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க…..” என்று வேகமாய் ஆரம்பிக்க…

“ஏய் பாரு…. என்ன இவ்வளவு வேகம்… பாவம் எங்க சுரேந்தர் அத்தான்….. “ என்று கலகலப்பாக ஆரம்பித்தாள் இவளும்…

“உண்மையச் சொல்லுடி…. சுரேன் அத்தானுக்கு போன் பண்றதுக்கு பதிலா எனக்கு போன் பண்ணிட்டியா….”

“பார்த்தியா… என்கிட்டயே உன் வேலைய காட்டுற… உனக்குதான் போன் பன்ணினேன்….. உனக்கு ஒரு குட் நியூஸ் டி” என்றவளிடம்

“அடிப்பாவி….. கல்யாணத்துக்கு முன்னாலேயே குட் நியூஸா… உன்னை நம்பி எங்க சுரேன் அத்தானை தனியா விட்டதுக்கு” என்று பார்வதியை… ஓட்ட ஆரம்பிக்க…

“தீக்‌ஷா” என்று பல்லைக் கடித்தவள்….

“என்னைப் பேச விடுகிறாயா?…. காலையியேயே என்னை ஏண்டி இப்படி கடிக்கிற…. காலங்காத்தால உனக்கு போன போட்டது அவ்வளவு பெரிய தப்பா…. போடி” என்று பொய்க் கோபம் காட்டியவளிடம்…

“ஒகே ஒகே… சொல்லு என்ன விசயம்… அப்படி என்ன விசயம்… “ என்றபடியே மாடி ஏறினாள்….

”எங்க அண்ணா.. மேரேஜுக்கு ஓகே சொல்லிட்டார்… ஒரே நாளில் முதல் மூகூர்த்தம் அண்ணா திருமணம்... அடுத்த முகூர்த்தம் எனக்கும்- சுரேந்தருக்கும்…. என்று சொல்லி முடிக்கும் போது அவள் குரலில் சந்தோசமும் வெட்கமும் ஒரு சேர எட்டிப் பார்க்க…

“ஹேய்……… சூப்பர் பாரு…. வசூல் ராஜா எம்பிபிஎஸ் எப்படி பாப்பு வலைக்குள்ள விழுந்தாராம்…. சோ உங்க அம்மா ஆசைப்பட்ட படி…. உங்க அண்ணா மேரேஜ் பண்ணி… அகல்யா குடும்ப குத்து விளக்க ஏத்தின பின்னாலதான்…. நீ எங்க வீட்டுக்க்கு அகல் விளக்காவது ஏத்த முடியும்….. அந்த சந்தோசத்தில் அதிகாலையிலேயே போனாக்கும்… உன் ஆளுகிட்ட சொல்லிட்டியா…. என்ன சொன்னாரு அந்த லட்சுமணன்…” என்ற பட பட பட்டாசாய் தோழியிடம் பேசியபடி தன் அறையில் நுழைந்தவள்…. ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்தபடியே தன் தோழியை வம்பிழுத்தபடி… பேசிக் கொண்டிருந்தாள்….

அப்போது பாரு,….

“விஜய் அத்தான் எழுந்துட்டாரா… அவர்க்குதான் நான் போன் பன்ணி இருக்கணும்… அவர் நேற்று அண்ணாகிட்ட பேசி…. அகல்யாவிடமும் பேசி எப்படியோ சம்மதம் சொல்ல வச்சுட்டாரு…” என்றபோது உறங்கிக் கொண்டிருந்த தன் கணவனை பெருமையாகப் அந்தக் கண்ணாடியின் வழியே பெருமையாகப் பார்த்தபடியே பாரு சொல்வதைக் கேட்க ஆரம்பித்தாள் தீக்‌ஷா….

ஒரு வழியாக பாரு பேசி முடித்துவிட்டு போனை வைக்க…. தலை சீவியபடியே தன்னவனை விழிகளால் பருகியவள்…..

”நீங்க மட்டும் தான் கண்லயே காதல் சொல்வீங்களா…” என்று தன்னை மீறி நினைத்தபடி… தன் விழிகளில் வழிந்த காதலுடன் கணவனைப் பார்த்தபடி…. கண்ணாடியின் முன் தன்னை அலங்கரிக்க ஆரம்பிக்க… நினைவுகள் மீண்டும் அவளைப் பின்னோக்கி இழுக்க ஆரம்பிக்க….

அப்போது யாரோ வந்திருப்பதாகச் சொல்லி ….. கலைச்செல்வி அவளைக் கீழே அழைப்பதாக வேலையாள் வந்து கூற…..

நினைவுகள் தந்த கனத்தை சுமந்து கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறி வந்தவள்… கீழே இருந்தவர்களைப் பார்க்க…. ராகேஷ் அவனது மனைவி மற்றும் குழந்தையோடு வந்திருந்தான்…

முதலில் யார் என்று தெரியாமல் முகம் சுருங்க அவனை மீண்டும் ஒருமுறை ஞாபகத்திற்கு கொண்டுவந்தவளுக்கு… அவன் ராகேஷ் என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க…

இவன் எதற்கு இங்கு வந்திருக்கிறான்…. அதுதான் அவன் மனைவியோட போறேனு சொல்லிட்டானே…. என் அத்தான்.. என் இந்தர் கிட்ட இருந்து என்னைப் பிரிக்க வந்திருக்கானோ…. இல்லையே அவர்தான் என்னை விட்டு போய்ட்டாரே என்று குழம்பியவள். அன்றைய தினத்தில் அதற்கு மேல் அவளின் மனதின் அழுத்தம் தாங்க முடியாமல் தள்ளாடியவள் மயங்கிச் சரிய ஆரம்பித்தாள்…………

2,407 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 Comment


ஹய்யா.... பழைய நினைவுகள் வருகிறதோ.... இல்லை இல்லை..... வந்தே விட்டது

Like
© 2020 by PraveenaNovels
bottom of page