அன்பே நீ இன்றி -47

அத்தியாயம் 47

காரை விட்டு இறங்கிய தீக்‌ஷாவுக்கு அதுவரை இருந்த உற்சாகமெல்லாம் போனது போல் இருந்தது….

விஜய் வீட்டிற்குள் வராமல் போன போது…….. தன் தந்தையும் , அண்ணனும் அவனிடம் வீட்டிற்குள் வரச் சொல்லி கெஞ்சிய காட்சியும்…..அவன் அதைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல்…. திமிராய் அவன் சென்றதும் அவளுக்கு இன்னும் கோபத்தை தர….

அவளின் நினைவுகளில் சட்டென்று வந்தது…………. விஜய் அவளை அவன் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நினைவுகள் தான்….

இத்தனை மாதங்கள் கடந்தும் வீட்டை இவர்கள் மாற்ற வில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் யோசித்தவள்… தன் ஸ்கூட்டியாகிய பிங்கி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை வேதனையோடு பார்த்தாள்…. அதைத்தான் விற்று விட்டார்களே என்று பெருமூச்சு விட்டவளை… அடுத்து யோசிக்க விடாமல் ராதா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போக…

வழக்கமான அவளின் குறும்புத்தனத்தோடு… யுகியிடம் மட்டும் மெதுவாய்ச் சொன்னாள்

“ஆரத்தி எனக்கு எடுத்ததுக்கு உங்க விருமாண்டிக்கு எடுத்திருக்கலாம்…. வெத்தலை பாக்கு,ஆரத்தி எடுத்து கூப்பிட்டால் தான் வருவாராம்மா…. ரொம்பத்தான் பிகு பண்ணிட்டு போறாரு…” என்று நக்கல் பாதி கோபம் பாதியாய்க் கேட்க….

யுகி.. பதில் பேசவில்லை……………. மௌனமாகவே இருக்க

”என்னடா…. உம்முனு இருக்க…. “ என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் உள்ளே போனவளை ஓவ்வொருவரும் பாச மழையில் மூழ்கடிக்க…. அதில் நனைந்தவளுக்கு………….. ஏனோ அதில் முற்றிலும் திளைக்க முடியவில்லை…. அவள் மனதின் இருந்த வெறுமையை அங்கிருந்த யாராலும் நீக்க முடியவில்லை

அரைமணி நேரத்திலேயே கலைச்செல்வி தங்கள் வீட்டுக்கு கிளம்ப….. ஜெயந்தி உடனே

“வந்த உடனே கெளம்புறீங்க” என்று கேட்க

“இல்ல…. விஜய் வீட்டுக்கு போயிருக்கான்…. அதுனாலதான்” என்று சொல்லிக் கிளம்பிய கலைச்செல்வி…

தீக்‌ஷாவிடம்…

“சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வாம்மா” என்று கலங்கிய கண்களாய் மறைமுகமாகச் சொல்ல….

தீக்‌ஷா முகத்தில் அடித்தாற் போல் பதில் சொல்லவில்லை என்றாலும்… அந்த கேள்வியையே புறக்கணித்தவள் போல்… வேறு திசையில் பார்வையை மாற்றிக் கொண்டாள்….

கலைச்செல்விக்கோ தன் மூத்த மகன் இன்றுதான் வீட்டிற்கு வந்திருக்கிறான்… அவனைக் கவனிக்க வேண்டும் என்ற ஆவலில் அங்கிருந்து வேகமாய்க் கிளம்பி… வீட்டிற்குள் வந்து…. தன் மகனைத் தேடி அவன் அறைக்குப் போக…. வேரிழந்த மரமாக தன் படுக்கையில் படுத்திருந்தான்….

கண் மூடிப் படுத்திருந்தான் விஜய்…. அவன் படுத்திருந்த கோலமே…. அவன் உறங்க வில்லை என்பதைச்சொல்ல….

”விஜய்” என்று ஆறுதலாய் அணைத்தபடி அவனருகில் அமர………

“அம்மா………. நான் உங்க மடில படுத்துக்கிறேன்மா……………. என்கிட்ட எதையும் கேட்காதீங்க…. எனக்கு அவ ஞாபகம் இல்லாமல் தூங்கணும் போல இருக்கு………… ஆனா முடியலம்மா………….. ஹாஸ்பிட்டல்ல இருந்த வரை கூட இப்படி வெறுமையா இல்லம்மா…. ஆனா இன்னைக்கு இந்த ரூமுக்கு தனியா வரும் போது என்னால முடியலம்மா……………. அவ அந்த அளவுக்கு என்னை ஆக்கிரமிச்சுருக்கானு இப்போதான் தெரியுது… “ என்றவன் மடியில் படுத்தபடியே புகைப்படத்தில் இருந்த தீக்‌ஷாவைப் பார்த்தபடி பேச ஆரம்பித்தவன்…

”27 வயசு வரை அவ யாருனு கூட தெரியாது…. ராதாவால அவ நம்ம குடும்பத்துக்குள்ள வந்தப்போ கூட…. பெருசா அவ என்னை பாதிக்கலை…. ஆனால் இப்போ அவ இல்லாம இருக்க முடியலம்மா……….. என்னை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னே தெரியலம்மா…. என்னை விரோதி மாதிரியே பார்க்கிறாம்மா………….. அவ பேர் நான் சொல்லக் கூடாதாம்…. ரொம்ப பேசுறாம்மா…” என்றவனை

”தூங்குப்பா” என்று சாந்தப்படுத்த… அவனோ புலம்பலை நிறுத்தவில்லை…..

“ஆனாலும் எனக்கு கோபமே வரலம்மா…. அவ பேச்சைக் கேட்போமானு ஏங்கிட்டு இருந்த எனக்கு கோபமே வரலம்மா…. அவ பேசுறதை கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு… என்ன பேசினாலும் ரசிக்கனும் போல இருக்கு…. ஆனால் இப்போ என்னால அவ பக்கம் கூட நெருங்க முடியல… வாய மூடு… வாய மூடுனு சொல்வேன்… இன்னைக்கு என் நிலைமய பார்த்தீங்களாம்மா…. எதற்குமே என்னை ஏங்க விட்டதில்லை அவ….. இப்போ அவள் அறியாமலே என்னைப் படுத்துறா…. அவ தெரிஞ்சு செய்யலதான் …. ஆனா என்னாலதான் தாங்க முடியல…………….” என்று புலம்பியபடியே உறங்கியும் போனான் விஜய்……………

கலைச்செல்விக்கோ……….. தன் மகன் கடந்த சில மாதங்களாய் பட்ட துக்கமெல்லாம் கண்முண் வர…. தன் கம்பீரமெல்லாம் கலைந்த கோலமாய் தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்தவனை… தன் மடியை விட்டு இறக்காமல்………. பார்த்தபடியே இருந்தாள்

சிறுவயதில் இருந்து….. பெரிய மனிதத் தனமாய் இருப்பவன்…. அது அவன் இயல்பிலேயே இருக்கும்…. யாராலும் சுலபமாக அவனை நெருங்க முடியாது… பார்வையிலேயே தள்ளி நிறுத்துவன்… இப்படி ஆகி விட்டானே என்று நினைக்கும் போதே தன் மருமகளின் மீது ஏனோ……. கோபம் தான் வந்தது….. அவள் சந்தோசமாய் சிரித்தபடி அங்கு இருக்கும் போது…. இவன் இங்கு அவள் நினைவால் அல்லாடுகிறானே…. என்றெல்லாம் கலங்கினாள் அவன் அன்னை…

---------

அடுத்த ஒருநாள் முழுவதும் விஜய் தீக்‌ஷாவைப் பார்க்காமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான்தான் ….. அதுவே அவனால் முடியவில்லை….. என்ன செய்கிறாளோ…. அவளை எப்படி பார்த்துக் கொள்கிறார்களோ.. தனியே விட்டால் என்னவெல்லா யோசிப்பாளோ என்றுதான் அவன் மனம் அவன் மனைவியைச் சுற்றி சுற்றி வந்ததே தவிர…… அவனின் வேலை… அவனின் உடல் நலம் இதெல்லாம்… அவன் கவனத்தில் இம்மியளவும் இல்லை….தீக்‌ஷாவைத் தவிர… அத்தனை பேரிடமும் விசாரித்து கொண்டே இருந்தான்… மற்றவர்களை தொந்திரவு செய்கிறோம் என்று உணர்ந்த போதும் அவனால் முடியவில்லை… அவனின் உடல் மட்டும் அவன் வீட்டில் இருக்க… அவன் ஆவியெல்லாம் அவனின் தீக்‌ஷாவிடம் இருந்தது… ஒரு கட்டத்தில் அவனால் முடியாமல் நேராய் அவள் வீட்டிற்கே செல்ல…. அவளோ இவன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததால்…. அவள் அறையை விட்டே வரவிலை….

ஒரு வாரம் இப்படியே போக…. சுரேந்தர் வேறு விஜய்யிடம் நச்சரிக்க ஆரம்பித்தான்….

“அண்ணா… நீங்க கம்பெனிக்கு கூட வர வேண்டாம்… ஜஸ்ட் என்னை கைட் பண்ணுங்க அது போதும்… மெண்டல் டார்ச்சரா இருக்கு… நான் சக்தி விசயத்தில முடிவெடுத்த்து தப்புதான்…. அதை அவளே எனக்கு உணர்த்திட்டா… உண்மையச் சொன்னால்… என்னால முடியலண்ணா…. ப்ளீஸ்ணா…” என்று பல முறைக் கெஞ்ச… விஜய்க்கும் ஒரு மாறுதல் தேவைப்பட… சுரேந்தருக்கு தலை அசைத்தான்… ஆனால் உடனே முடியாதென்றும்… சில நாட்கள் தனக்கு அவகாசம் வேண்டுமென்றும் அவனிடம் கேட்டுக் கொள்ள அதன் பின் சுரேந்தரும் தன் அண்ணனைத் தொல்லை செய்ய வில்லை….

----

அந்த ஒரு வாரத்திலேயே தீக்‌ஷாவின் உடல்நலம் குறித்து…. அவள் வீட்டு உறவினர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர்…. தீக்‌ஷா மருத்துவமனையில் இருந்த வரை…. அவர்களின் விசாரிப்புகள் ஆறுதலாக இருந்த்து தீக்‌ஷா குடும்பத்தாருக்கு….

ஆனால்… தீக்‌ஷா பிறந்த வீட்டிற்கே வர… அவர்களின் விசாரிப்புகள் எல்லாம் வேறு மாதிரி இருந்தன…

“ஏன் அவங்க இங்க விட்டுப் போனாங்க…”

“நம்ம தீக்‌ஷாக்கு எல்லாம் மறந்து போச்சா…. இப்படி இருப்பாளா இந்த பொண்ணு… பணக்கார சம்பந்தம் கெடச்சும் இப்படி ஆகிவிட்டதே” என்றெல்லாம் வித விதமான விசாரிப்புகள் வர….

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக….

ஜெயந்தியின் அண்ணன் மனைவி... அவளுக்கு தீக்‌ஷாவை தன் மகனுக்கு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க… அந்தப் பேச்சை அதன் ஆரம்பக் கட்டத்திலே மறுத்து விட்டிருந்தாள்….

“ஜெயந்தி…. இதெல்லாம் விதின்னு சொல்றதை தவிர வேறென்ன சொல்ல…. நம்ம லக்ஸ்மி பொண்ணக் கூட நம்ம தீக்‌ஷா மாதிரி பெரிய இடத்தில தான் கொடுத்தாங்க…. இந்தப் பொண்ணுதான் வேணும்னு ஒத்தைக் கால்ல நின்னு கல்யாணம் பண்ணிட்டு போனானாம்….. 2 வருசம் என்னமா ஆட்டம் போட்டாங்க…. இப்போ ஆடி அடங்கி கிடக்கிறாங்க…. வாரிசு இல்லைனு கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க…. போன வாரம் அந்த பையனுக்கு வேறொரு கல்யாணம் நடந்துருச்சு…. நீயும் அது மாதிரி ஏமாந்துராத….. என்னத்த சொல்லு…. நம்ம பொண்ணு இந்த மாதிரி ஆகிருச்சே…. என்றவள்…

“பைத்தியம்னு சொன்னா…. ஈஸியா டைவர்ஸ் கிடைச்சிடுமாமே….. இவர் சொன்னாரு…. யார் கண்ணு பட்டுச்சோ” அவள் பேசி முடிக்க வில்லை… ஜெயந்தி போனை வைத்து விட்டாள்..

விஜய் அன்று பேசிய போது நிம்மதி அடைந்த ஜெயந்தியின் மனம்… மீண்டும் கல்லெறிந்த குளமாக கலங்க ஆரம்பித்தது….

எத்தனை நாட்கள் விஜய்யும் பொறுத்திருப்பான்…. அதுவும் இந்த வயதில்…. விஜய்யை விட… கலைச்செல்வியை நினைத்து தான் இப்போது ஜெயந்திக்கு பயம் வர ஆரம்பித்தது….. தன் மகனுக்கு இப்படி ஆகியிருந்தது என்றால்…. இவள் தாயாக என்ன முடிவெடுப்பாள்….

எல்லாம் சேர்ந்து ஜெயந்தியைத் தாக்க…. கோவில் கோவிலாக போக ஆரம்பித்தாள்…..

அன்றும் அவள் அப்படி அருகில் இருந்த கோவிலுக்கு போக…. ராதா வீட்டில் இருந்தாள்….

ஆனால் சுனந்தாவுக்கு திடிரென்று உடல்நலம் சரியில்லாமல் போக…. ராதாவும் மருத்துவமனை சென்று விட்டாள்… தீக்‌ஷா தனியாக இருக்கிறாள் என்று ஜெயந்தியிடம் சொல்லி விட்டுத்தான் சென்றாள்….

ஆனால் ஜெயந்தியால் உடனடியாக… பூஜையின் இடையிலேயே விட்டு வர முடியவில்லை….

தீக்‌ஷா தனியாக இருக்கிறாள்… என்ற விசயம் உடனடியாக விஜய்க்கு முருகேசன் மூலம் சொல்லப்பட…. விஜய் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு வந்தான்…. கோபத்தோடு….

இவர்களை நம்பிவிட்டுப் போனால்… ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற கோபம் தான் அது…’

அவனின் கோபத்தையும் சாதாரணமாக விட முடியாது…. தீக்‌ஷா தனிமையில் இருந்தாலே விஜய்யைத் தேட ஆரம்பித்து விடுவாள்… அவளின் தேடலின் முடிவு…. நன்மையைக் கொடுத்தால் கூட பரவாயில்லை…. வேதனைதான் எனும்போது விஜய் அதை அறவே வெறுத்தான்….

தன்னை நினைத்து அவள் போராடி… தன்னையே மாய்த்துக் கொள்வதை விட…. தன்னை மறந்து வாழும் அவளின் இந்த நிலையே அவனுக்கு ஆறுதலாக இருந்தது என்றே சொல்லலாம்,…

கார் சத்தம் கேட்ட தீக்‌ஷா…. சுனந்தா வந்து விட்டாள் என்று வேகமாய் எட்டிப் பார்க்க… அது விஜய்யின் கார்…..

முகம் சுருங்கியவள்…. அறையிலே இருந்து விட்டாள்…. எப்படியும் யாரும் இல்லை என்றால் போய் விடுவான் என்று நினைத்தவள்… ஒரு பத்து நிமிடம் அறையிலே இருந்தாள்… கார் திரும்பிப் போகும் ஓசை கேட்காமல் இருக்க…. வீட்டில் வேலை செய்யும் பெண்மனியை அழைத்தாள்…

”அக்கா…. வீட்ல யாருமில்லைனு விஜய் அத்தான் கிட்ட சொல்லிருங்க…. அவர் கெளம்பிடுவாரு” என்று சொல்ல

அந்தப் பெண்ணும் தலை ஆட்டியபடி சென்றாள்….

பால்கனியில் தான் அமர்ந்திருந்தாள் தீக்‌ஷா….. விஜய்யோ வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க…. அறையில் இருந்தே கத்தினாள்

“அக்கா” என்று….

ஹாலில் அமர்ந்திருந்த விஜய் பதட்டமாக…

“உங்கள கூப்பிடறா… என்னன்னு பாருங்க” என்று அப்பாவி கணவனாக அந்த வேலைக்கார பெண்மணியை மேலே அனுப்ப

“உங்ககிட்ட என்ன சொல்லச் சொன்னேன்… சொன்னீங்களா இல்லையா…. அம்மா… அண்ணிலாம் இல்லைனு…. வர லேட்டாகும்… சொல்லுங்க….