அன்பே நீ இன்றி-43

அத்தியாயம்:43:

தீக்ஷா வெளியில் அச்சம் சிறிதும் இல்லாமல் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும்…. மனதுக்குள்…. எண்ண ஓட்டங்கள் சுழல ஆரம்பித்தன….. விஜய்க்கு இம்மென்றாலே கோபம் வரும்…….. தீனா தன்னைக் கடத்தியிருக்கிறான் என்று தெரிந்தால்…. என்ன ஆகுமோ… அவனின் காதல் மட்டும் உணர்ந்தவள் அல்ல…. அவனின் கோபமும் இவள் அறிவாள் அல்லவா…

தீனாவின் மேல் இன்னும் கோபம்தான் வளரும் என்று கூட வருத்தம் வந்து விட்டது….தான் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்திருக்காவிட்டால்…. இந்த சூழ்நிலையே வந்திருக்காது…. இப்போது இந்த ப்ராஜெக்ட் மட்டும் கைவிட்டுப் போனால்…. விஜய்யை நினைக்கவே பயம் வந்து விட்டது…. நம்மை வேறு திட்டித் தொலைப்பானே என்று கூட நினைத்தாள்….

“எல்லாவற்றிலும் விளையாட்டுத்தனம்…. உன்னைக் கல்யாணம் பண்ணி…. என் தொழில் போனதுதான் மிச்சம்னு வேற கத்துவானே…. “ என்று வேறு கலங்கியவள்… அடுத்த நிமிடமே…

“தீக்ஷா உன் வாய் சாமர்த்தியத்தை எல்லாம் காமிச்சு… விருமாண்டிய மலை இறக்கணும்….” என்று தனக்குள் சொல்லி பெருமூச்சு விட்டவள்…

“இனிமேல் கொஞ்சமாவது அவனுக்கு தகுந்த மனைவியாக இருக்க வேண்டும்…. தன் விளையாட்டுத் தனத்தினை எல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டும்” என்று உறுதி கொண்டவள்….. அமைதியாகவே வந்து கொண்டிருக்க… அப்போது கேக் வேர்ல்ட் அவளைத் தாண்ட……..

சற்று முன் தான் எடுத்த உறுதியை எல்லாம் காற்றில் பறக்க விட்டவளாய்

“அண்ணா அண்ணா.. காரை நிறுத்துங்க” என்று கத்த…….. காரின் வேகம் குறையவில்லை….