top of page

அன்பே நீ இன்றி-35

அத்தியாயம் 35:

கதவை அடைத்துவிட்டுத் திரும்பிய விஜய்யை தீக்ஷா நேருக்கு நேராகப் பார்த்தாள் தயக்கம் என்பது சிறிதும் இன்றி….

தீக்ஷா வந்ததால் தோன்றிய பதட்டம் முகத்தில் இருந்தாலும்…. விஜய்யின் முகம் சஞ்சலம் இன்றி தெளிவாக இருக்க…. அதையும் தீக்ஷா கவனிக்கத் தவறவில்லை

“பார்ட்டில தெளிஞ்சுட்டாரோ” மனதுக்குளே சொல்லிக் கொண்டவள்…

”கதவைப் பூட்டினால் மட்டும்….யாருக்கும் தெரியாதா அத்தான்” என்று வம்பளத்தபடி விஜய்யின் அருகே நெருங்க…. விஜய் வழக்கம் போல முறைக்கவில்லை என்றாலும்…

“இந்த நேரத்தில்…. தன்னுடன்…. கடவுளே…. இவ எப்போ என்ன பண்ணுவாள்னே தெரியலையே” என்று தனக்குள் மறுகியவன்…. வேகமாய் அவளை விட்டு விலகி…

“என்னடி பிரச்சனை உனக்கு…. இப்போ என் ரூமுக்கு ஏன் வந்த” என்று கோபமாய்க் கேட்டான்…..கோபம் வார்த்தைகளில் மட்டுமே இருக்க…. முகம் நேர்மாறாய் இருந்தது….

“எனக்கு என்ன பிரச்சனைனு உங்களுக்குத் தெரியாதா…. உங்க மொபைலை எடுத்துப் பாருங்க…. அது சொல்லும் என் பிரச்சனையை…. நான் ஒரு லூசுனு தான் உங்களுக்கு நல்லா தெரியும்ல…. நான் ஏதோ லூசு மாதிரி உளறுனேனா… அதையெல்லாம் பிடிச்சுக்கிட்டு உம்முனு ஆகிடுவீங்களா…. இப்போ என்ன தெரியனும் உங்களுக்கு….” என்று விஜய்யின் கோபமான வார்த்தைகளுக்கு ஈடு கட்டும் விதத்தில் தீக்ஷா சத்தமாக பேச

விஜய் தணிந்த குரலில்

“ஏய் ….. இப்போ எதுக்கு இப்டி பேசுற….. அதிலும் இவ்ளோ சத்தமா….“ என்று அவளின் கோபத்தை உணர்ந்து மீண்டும் அருகில் வர,..

தீக்ஷாவோ வேகமாய் விலகி …… கதவை நோக்கிச் சென்றாள்….

விஜய் ஒன்றும் புரியாமலும்… அவளைப் புரிந்து கொள்ள முடியாமலும் குழம்பியபடி… அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருக்க…

கதவின் அருகே சென்ற தீக்ஷா… அவனை நோக்கித் திரும்பி….

“இங்க பாருங்க அத்தான்…. நான் உங்க கிட்ட மறுபடியும் மறுபடியும் தோத்துகிட்டே இருக்கேன்… நீங்க என்னை ஜெயிச்சுட்டே இருக்கீங்க… நீங்க என்னை லவ் பண்றீங்களா… இல்லை அந்த இளமதி சொன்ன மாதிரி பரிதாபப்படறீங்களானெல்லாம் தெரியாது…. ஆனால் என்னை விரும்பறேனு மேரேஜுக்கு முன்னாடியே உங்க வாயில இருந்து சொல்ல வைக்கிறேன்னு என் மனசுக்குள்ள சபதம் போட்டேன்.. ஆனால் அதில் நான் தோத்துட்டேன்…. இப்போ என்ன… யார் சொன்னா என்ன…. எனக்கு உங்களை பிடிச்சுருக்கு…. அது ஏன்லாம் தெரியாது….. சுயமரியாதை உள்ள பொண்ணா இருந்தால்… உங்களை லவ் பண்ணியிருக்க கூடாதுனு என் அறிவு சொல்லுது…. ஆனா என் மனசு… என் மூளை சொல்றதை கேட்க மாட்டேங்குது அத்தான்….. எனக்குப் பிரச்சனையே இதுதான் அத்தான்…..” என்றபடி மூச்சிறைக்கப் பேசிக் கொண்டிருந்தவள் பேச்சு பாதியிலேயே நின்றிருந்தது

வார்த்தைகளின்றி அவளது விழிகள் மட்டுமே அலைபாய்ந்தன… அதுவும் விஜய்யின் கண்களோடு கலந்து…

காரணம்… விஜய் அவளின் அருகில் நெருங்கி…. அவளைச் சிறைபிடித்தாற் போல அவளின் இருபுறமும் தன் கைகளால் அணைத்திருக்க… தீக்ஷா வார்த்தைகள் இப்போது தொண்டையிலேயே சிக்கிக் கொண்டன…

“பேசி பேசியே மனுசன கொல்றடி…..“ என்றவனின்… கண்கள் அவளை மொத்தமாய் அவள் விழிகளோடு கலக்க…. இதை எதிர்பார்க்காத தீக்ஷாவோ திணறினாள் பேச முடியாமல்…. ஆனாலும் அவன் கண்களில் வழிந்த காதலை தயங்காமல் எதிர்கொண்டாள்…..

இருந்தும்….

“நான் போகனும் அத்தான்… அம்மா வந்துருவாங்க” தயங்கி தயங்கி வார்த்தைகள்… சிக்கியபடி வெளியே வர…..

அவள் கருவிழிகள் அலைபாய்ந்ததிலும்….. தன் அச்சத்தை தொண்டைக் குழியில் விழுங்கியதிலும்…. அவள் நிலையை உணர்ந்த விஜய்…. அவளை ரசித்தபடியே…

“புயலுக்கு இவ்ளோ நேரம் தெரியலையா…. அம்மா வருவாங்க ஆயா வருவாங்கன்னல்லாம்” என்று அவள் கண்களைப் பார்த்தபடியே புருவம் உயர்த்தியபடி நக்கலாகச் சொன்னவன்

“ஏதோ தோத்துதுட்டேன்….. அப்டி இப்டினு பிணாத்துன.. உனக்கு முன்னாடியே நான் உன்கிட்ட என் மனசை சொல்லிட்டேன்… போய் உன் போனை எடுத்துப் பாரு…” என்றவனின் நெருக்கத்தின் இடைவெளி இன்னும் சற்றுக் குறைய….

”நான் போகனும்” என்று மட்டுமே தீக்ஷா மீண்டும் சொல்ல…

“என்ன அவசரம்… இன்னும் நீ பேசி முடிக்கலேனு நினைக்கிறேன்” என்று சீண்டலாகக் கேட்க….

அவனின் சீண்டலில் இப்போது தீக்ஷாவும் தன் நிலை தெளிந்து…

“அவசரம் தான்….. என் அத்தான் எனக்கு…. அதுவும் முதன் முதலா அனுப்பி இருக்கிற மெசேஜை பார்க்கணும்தான்… தள்ளுங்க” என்று விலக எத்தனிக்க… விஜய்யோ விடவேவில்லை…..

”அவ்ளோ அவசரம்னா… இதைப் பாரு….” என்றபடி தன் மொபைலின் செண்ட் ஐட்டம் பகுதியை காண்பிக்கப் போக…

வேகமாய்…

“இல்ல இல்ல என் போன்ல பார்த்தால்தான் எனக்குத் திருப்தி என்று திரும்பி….. கதவைத் திறக்க தாழ்ப்பாளின் மேல் கைவைத்த அவளை அவனின் குரல் நிறுத்தியது…

“தாழ்ப்பாள் மேல கை வச்சேன்னா…. நான் உன் மேல கை வைக்க வேண்டியாதாகிரும்…எது வசதி…. ஜாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்றவன் கைகளை விலக்காமல் சற்றி இடைவெளி விட…

தீக்ஷா விழித்தாள்…

“நம்ம ஆளா இது….” என்றுதான்…..

”தாழ்ப்பாள் மேல கைவைச்சாத்தான் என் மேல கைவைப்பாராமா… லூசுதாண்டா நீ….. உனக்காக நான் ஏங்கிட்டு இருக்கேன்…. நீ லூசு மாதிரி டையலாக் பேசிட்டு இருக்க… ஆனாலும் நல்லாத்தான் இருக்கு” என்று தன் நினைவில் உழன்றவளை விஜய்யின் குரல் கலைத்தது….

அதுவும் இனிமையான குரல்…. இப்போது கண் சிமிட்டக் கூட மறந்தவளாய் தீக்ஷா மீண்டும் விஜய்யின் கைச்சிறைக்குள் தானாகவே வந்தாள்… விஜய் பாடினான்… கண் சிமிட்டியபடி… புன்னகைத்தபடி….

ஊரெங்கும் தோரணம்.. நடக்கும் ஊர்வலம்..

உன்னோட கன்னத்திலே வைக்கலாமா –

”என்ன பார்க்கிற… நீ போட்ட பாட்டுதான்….. அன்னைக்கு முழுசா முடிக்கலைதானே… இன்னைக்கு கம்ப்ளீட் பண்ணிடலாமா” என்றவனின் வார்த்தைகளில் எல்லாம் பயப்படாமல்.. தீக்ஷாவோ அவனை பார்த்துக் கொண்டிருக்க… விஜய்யும் சளைக்காமல் அவளை எதிர் கொண்டான்….

தீக்ஷாவை இப்போது அவன் விழிகள் உரிமையாய்…. எதிர் கொண்டது….. தன் முன் நிற்கும் அவளை அவனது கண்கள் அளவெடுக்க ஆரம்பிக்க… தீக்ஷாவோ இன்னும் அவன் பாடிய நினைவிலேயே இருந்தாள்….

விஜய்யோ அவன் விழிகள் சென்ற பாதையில் தனது எண்ண ஓட்டங்களை மேற்கொண்டான்

கிட்டத்தட்ட ஒரு அலங்காரமும் இல்லாமல்…. தீக்ஷா அவன் முன் நின்றிருந்தாள்…. சற்று முன் கலைத்த கூந்தல் அலங்காரத்தால்… ஏனோதானோ வென்று தலை முடி கலைந்திருந்தது…. கண்களில் போட்டிருந்த கண் மை… முகம் கழுவி இருந்ததால் அது கூட கலைந்து கண்களை விட்டு கீழே வந்திருக்க……. நெற்றியில் பொட்டு மட்டுமே இருந்தது…. உதடுகளில்… அவனைக் காதல் வலையில் விழ வைத்த உதட்டுச் சாயம் இன்று இல்லை….. கழுத்தில் சின்னதாய் ஒரு ஜெயின் அணிந்திருந்தாள்…… காதில் அது கூட இல்லை…. ஏதோ ஒரு புடவை அணிந்திருந்தாள்… இரவுக்கென்று அணிந்திருந்ததால்….. அது கூட சரியாக கட்டாமல்…. எதோ பேருக்கு கட்டி இருந்தாள்… விஜய்யின் ஆராய்ச்சிப் பார்வை…………. கொஞ்சம் கொஞ்சமாய்……… மோகப் பார்வையாய் மாறிக் கொண்டிருக்க…. தீக்ஷா அவனின் பார்வைகளின் அர்த்தம் தெரியாதவளா….

அவனின் பார்வை மாற்றங்களை உணர்ந்தவள்….

“ஹலோ அத்தான்…..” என்று கைவிரல் சுண்டி அவனின் பார்வையை கலைக்க…

”ஹ்ம்ம்….” என்றவனின் குரல்தான் தாபமாய் கிறக்கத்துடன் பதில் தந்தது

தீக்ஷா…. அப்போதுதான் உணர்ந்தாள்… அவனின் கண்கள் மட்டுமே அவளை உரிமையாய் தழுவிக் கொண்டிருக்க… அவனின் கை விரல்கூட அவள் மேல் படாமல் இருந்தது….

உரிமையாயாய் இருக்கும் போது கூட இன்று கண்ணியம் காக்கிறவன் தான் அன்று……….. அன்றைய நிகழ்வுகளை நினைக்காமல் தான் இருக்கப் பார்க்கிறாள்…. ஆனாலும் அவளை மீறி வந்து விடத்தான் செய்கிறது….

தீக்ஷா சுயம் உணர்ந்து…. இங்கிருப்பது இனி சரியில்லை என்று அவளின் அறிவு சொல்ல… விஜய்யிடம்

“அத்தான் ….. நைட் உங்க முகமே சரி இல்லை… அதுதான் உங்க கிட்ட பேச வந்தேன்…. இப்போ என் மேல கோபம் இல்லைல….. உம்மணா மூஞ்சியா இருக்கக் கூடாது சரிதானே… நான் வருகிறேன்” என்றவள் கதவைத் திறக்க…. விஜய் சட்டென்று அவளை இழுத்து தன்னோடு அணைத்தபடி கதவை மூடியவன்…

“லூசு…. எதையுமே பார்க்க மாட்டியாடி…. யாராவது நிற்கிறங்களானு பார்த்துட்டு போ….. எல்லாத்திலும் அவசரம்…. என்று கடிந்தவன்… அவளைத் தனி பிடியில் வைத்தவாறே…. வெளியில் பார்த்தவன்…. யாரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு…. அவளிடம் திரும்பி…

“இப்போ போ” என்று சொல்லியபடியே அவளை தன் பிடியிலிருந்து விலக்கினான்…. அவனே உணரவில்லை.. அவள் வேகமாய் கதவைத் திறந்ததும்… பிடித்து நிறுத்தப் போய் … தான் அறியாமலே…. தனக்குள் கொண்டு வந்திருந்தான்

ஆனால் தீக்ஷாவோ…. அவனிடமிருந்து விலகாமல்… அவனோடு இன்னும் ஐக்கியமாக…. விஜய் அவளின் ஒன்றலை உணர்ந்தான் தான்… இருந்தும் இருக்குமிடம்… நேரம் இதை உணர்ந்தவன்

“தீக்ஷா…. வெளியில யாருமில்ல…. இப்போ போம்மா” என்றபடி அவளை கிளம்பச் சொல்ல

அவன் வார்த்தைகளுக்கு… தீக்ஷாவிடமிருந்து பதில் வராமல் போக…

அவளைத் தன்னோடு இன்னும் சேர்த்து அணைத்த விஜய்க்கு அவளின் நெற்றியின் இதழ் பதிக்க ஆசை இருந்த போதும் … தன்னை அடக்கி இருந்தான்……

”தீக்ஷா” அவனின் குரல் அமைதியாகவும் அழுத்தமாகவும் அவளை அழைக்க…. அவளோ

“அத்தான் ஒரு 10 மினிட்ஸ்.. ப்ளீஸ்” என்று சலுகையாய் சினுங்கினாள் அவள் அத்தானிடம்…

”என்னது 10 மினிட்ஸா…. ஆள விடு… இடத்தைக் காலி பண்ணு… ” என்றவனை தீக்ஷா முறைக்க

“செல்லம்ல…. இன்னைக்கு ஒருநாள் மட்டும் தானே… அதுக்கப்புறம் நீயே போறேனு சொன்னால் கூட உன்னை நான் விட மாட்டேன்… ப்ளிஸ்…..” என்று கெஞ்ச… தீக்ஷா அதற்கெல்லாம் மசிபவளா…..

அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த அவள்……… அன்று தெரியாமல் இதழ் பதித்திருந்தாள்…. இன்று தெரிந்தே இதழ் பதிக்க…. விஜய் அவளின் காதில் சொன்னான்

“முத்தம் வச்சே ஆளக் கவுத்திருவியாடி….” என்றவனிடம் நிமிர்ந்த தீக்ஷா….

“நீங்களும் வச்சு ஆளக் கவுங்க…” பட்டென்று சொன்னவள்..அதே வேகத்தில்

”ஆனா என் அத்தானுக்கு அதெல்லாம் அதிகப்படி…. இந்த ரெண்டு கண்ணே போதுமே” என்று சரளமாக பேச ஆரம்பிக்க… இருவரின் தயக்கங்களும் அவர்களை விட்டு போயிருந்தது….

விஜய்யும் அவளிடம் பதிலுக்கு பதில் பேச ஆரம்பித்தான்…

”ஆனாலும் உனக்கு இருக்கிற நக்கலுக்கு….. ஒருத்தன் இங்க உனக்காக, உன் காதலுக்காக… ஏங்கிட்டு இருக்கான்…. நீ என்னடான்னா நாளைக்கு போட்டோக்கு ஒழுங்கா போஸ் கொடுக்கனும்னு … அர்த்த ராத்திரில பேச வந்திருக்க…. கொழுப்பு ஜாஸ்திதான்…… என்ன சொன்ன…..நானும் முத்தம் வச்சு ஆளக் கவுக்கவா…..”

“எனக்கும் ஆசைதான்…. ஆனால் என்ன பண்றது… நாங்கள்ளாம், எங்களுக்குனு ஒரு பொருள் உரிமை ஆன பின்னால் தான் சொந்தம் கொண்டாடுவோம்… மத்தவங்க மாதிரிலாம் இல்லைப்பா… சும்மா நொச்சு நொச்சு முத்தம் வைக்க” என்று சீண்டலாய் பேசினான்… அவன் அன்று அவள் தெரியாமல் கொடுத்த முத்தம் பற்றி பேசி வைக்க….

இவளோ….

சற்று முன் தான் அவன் நெஞ்சில் தன் இதழ் பதித்ததை சொல்கிறான்.. என்று நினைத்து..

அவனைத் தள்ளியவள்….

“நாங்கள்ளாம் மனசுக்குள்ள வந்தவுடனே சொந்தமாக்கிடுவோம்.. உங்கள மாதிரி இல்லை…. இந்த மூணு முடிச்செல்லாம்… அடுத்துதான்….. நாங்களும் உங்களுக்காக…. உங்க பார்வைக்காகத்தான் ஏங்கிட்டு இருக்கோம்…. காதலை எப்போ வேணும்னாலும் சொல்லலாம்…. நம்ம கல்யாண போட்டோ மறுபடியும் எடுக்க முடியுமா… இப்போ சொல்லுங்க எது முக்கியம்” என்று கோபமாய்ச் சொல்ல…. அவளின் மூக்கைப் பிடித்து திருகிய விஜய்….

‘அது சரி…… நீ சொல்லிட்டேல்ல ….. போட்டோதான் முக்கியம்….” என்று சொல்ல… அவன் வார்த்தைகளிலே நக்கல் வழிய….. அவள் முகம் கோபத்தின் அளவை இன்னும் கூட்ட

”ஹேய் என் பொண்டாட்டிக்கு கோபமெல்லாம் வருதுடா…. இவங்க கூல் பேபினு ஊருக்குள்ள சொல்லிட்டு தெரியுறாங்கடா” என்று சொன்னவன் தன் மனதில், அவளின் இடத்தையும் சொல்ல… அவனின் வார்த்தைகளில் தீக்ஷா நெகிழ்ந்தாலும்….. இன்னும் கோபமாகவே இருப்பது போல் பாவனை செய்ய…..

”சரி சரி….…. இப்போ என்ன பிரச்சனை உனக்கு…. நீ கேட்டபடி 10 நிமிசம் பேசலாம்… சரியா பத்து நிமிடம் தான் ஓகேவா….. ஏன்னா உன் அத்தான் பாவம் மா…. எனக்கு சோதனைலாம் வச்சுராதா… ஒரே ஒருநாள் நைட் மட்டும் தான் பாக்கி” என்று அவன் சொல்லும் போதே அவள் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தாள்…

விஜய்க்கு அவள் செயல்களில் உள்ளுக்குள் ஒரே கிலி தான்…. அவள் மீண்டும் அவள் அறைக்கு போகும் வரை… யாரும் பார்த்து விடக்கூடாது என்று உலகத்தில் இருக்கும் அத்தனை கடவுளுக்கும் மனு போட்டவன்………… தன்னவளை தன்னிடம் தந்தற்காக… அத்தனைக் கடவுள்களுக்கும் நன்றி சொல்லவும் மறக்கவில்லை….

தீக்ஷா எந்த தடங்கலும் இன்றி அவனை ஏற்றுக் கொண்டாள் என்ற எண்ணமே அவன் உள்ளம் முழுவதும் உவப்பைத் தர…. அதே சந்தோசத்தோடு அவளருகில் அமர்ந்தவன்…. தன்னவளை தன்தோளில் சாய்க்க உரிமையோடு அவன் தோள் சாய்ந்தாள் தீக்ஷா….

“சாரி விஜய் அத்தான்… உங்களை நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்….. சாரி அத்தான்” என்றவளின் குரல் தளுதளுப்பாய் இருக்க….

“ஏய் லூசு…. நீ சாரி கேட்கிற அளவு என்ன தப்பு பண்ணின… கேவலமான காரியம்லாம் பண்ணினவன் நான்… நீதான் என்னை இன்னும் மன்னிக்கலை…. “ என்று முடிக்கும் போதே அவன் கன்னத்தில் எம்பி முத்தம் பதித்தாள் தீக்ஷா…

அதிர்ச்சியாய் நிமிர்ந்த விஜய்யிடம்

“அத்தான் அதுக்கெல்லாம் நோ மன்னிப்பு…. ஒன்லி தண்டனைதான் … உங்க ஆயுள் முடியற வரைக்கும்…. என் ஆயுள் முடியற வரைக்கும்…. பண்ணியதெல்லாம் மன்னிக்கக் கூடிய தப்பா” என்றவளை இன்னுமா சும்மா விடுவான் விஜய்…..

அவளை முகம் நோக்கி குனிந்தவனை…. தீக்ஷா தள்ளி விட

“ஏய்… என்னடி… நீ மட்டும் இஷ்டத்துக்கு வைக்கிற… நான் வந்தா தள்ளி விடற… உன்னை” என்று அவளின் அருகில் வந்தவனிடம்

”யாரோ சொன்னாங்க…..சொந்தம் உரிமைனு…அதுக்கப்புறம் தான்னு…. நாங்கள்ளாம் சொன்ன வாக்கை காப்பாற்ற மாட்டோதான்…. ஆனா நீங்க… அப்டி இல்லேல….” என்று குறும்பாகப் பேசியவளின் வார்த்தைகளில்… உணர்ச்சியும் வழிந்தோட… இப்போது அவனைப் பார்த்து…

“உங்க உயரம் என்னால எப்போதுமே இறங்கக் கூடாது அத்தான்….. அதுதான்” என்று உணர்ச்சி வயப்பட்டு பேசியவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான் விஜய்….

ஒன்றுமே பேசாமல்.. அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன்… தன் கழுத்தில் இருந்த தன் ஜெயினைக் கழட்டி அவளே எதிர்பாராமல் அவள் கழுத்தில் போட்டவன்…. அவளின் முகம் எங்கும் அச்சாரத்தைப் பதித்து,,,, அவள் இதழ் நோக்கி குனிந்தவன்….

“இதுக்கு மேல போனேன்……… ” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன்…. அவளை விட்டு விலகி அமர்ந்து……

“தீக்ஷா…. இனி நீ இங்க இருக்கிறது சரி இல்ல… ரெண்டு பேருமே எமோசனலா இருக்கோம்… ரொம்ப ஆபத்து… உன் ரூமுக்குப் போகலாமா… ப்ளீஸ்டா… நாளைக்கு நாம விடிய விடிய பேசலாம்….” என்று கெஞ்சியவனைப் பார்த்த தீக்ஷா மென்மையாய்ப் புன்னகைத்து…. மெதுவாய் தலையாட்டினாள்..

அவள் சாதாரணமாக இருந்திருந்தால்…. விஜய் சொன்ன விடிய விடிய பேசலாம் என்ற வார்த்தைகளுக்கு பதில் கவுண்டர் கொடுத்திருப்பாள்…. தீக்ஷா அவனின் முத்த மழையில் நனைத்து…. மூழ்கி தன்னை மறந்திருந்தவள்… அவனின் வார்த்தைகளுக்கு தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்….

விஜய் சொன்ன 10 நிமிடம் முடிந்து….. தீக்ஷா மறுத்த போதிலும் அவனும் கூடவே வந்தான்…. அவளைத் தானே அழைத்துக் கொண்டு வர… அப்போது தீக்ஷா…

“சரி…. அப்போ நாளைக்கு ஒழுங்கா போட்டோக்கெல்லாம் போஸ் கொடுக்கணும்… அந்த போட்டோஸ்ல எல்லாம் இந்த தீக்ஷா மேல இருக்கிற காதல் தான் தெரியணும்… அதைப் பார்க்கும் போதெல்லாம்… என் விஜய் அத்தானுக்கு என் மேல எவ்ளோ காதல்னு… அதை விட நான் உங்களை காதலிக்கனும் அத்தான்” என்றவளை அணைத்தபடி விஜய்…. நிம்மதியில் முகம் விகசித்து இருந்தான்….

தீக்ஷா பேசிக் கொண்டேவர… விஜய் கேட்டபடியே வந்து கொண்டிருந்தான்

”அத்தான்… உங்களுக்கு பாட்டு பிடிக்காதுன்னு…. யுகி சொன்னான்… ராங் இன்ஃபர்மேஷன் கொடுத்து ஏமாத்திட்டான்..இருக்கு அவனுக்கு” என்றவளிடம்…

“அதெல்லாம் கரெக்ட் இன்ஃபார்மேஷன்தான்…. நானும் சுரேனும் பாட்டுக் கிளாஸ் போனோம்… நான் என்ன பண்றேனோ அதையே ஃபாளோ பண்ணுவான் சுரேந்தரும்….ஒரு கட்டத்தில் நான் பாட்டெல்லாம் விட்டுட்டு வேற ட்ராக்ல போனேன்… அவனும் என் பின்னாலேயே வந்துட்டான்” என்று சொல்ல

“ராமர்-லட்சுமணன் தான்… எப்டியோ போங்க…. ஆனா உங்களுக்கு பாட்டெல்லாம் பிடிக்காதோனு கொஞ்சம் பயந்தேன்” என்று பேசியபடி வந்தவளுக்கு… இன்னும் என்னவெல்லாமோ பேச அவளின் மனம் அலை பாய… ஆனால் மணமகள் அறையோ… அருகில் வந்து விட… விஜய் அவளிடம்… சொல்லிக் கொண்டு கிளம்ப.. அவனின் கையை விடாமல் இருந்தாள் தீக்ஷா

அவனுக்கும் அவளை விட்டு போக மனம் இல்லைதான்… அதற்காக இங்கேயே நின்றுகொண்டிருக்க முடியுமா….

“என்னம்மா..” என்று சங்கடமாய்ப் பார்த்தவனிடம்….

“அத்தான்.. எதையுமே பார்க்க மாட்டியா… யோசிக்க மாட்டியானு கேட்டிங்கள்ள… எனக்காக நீங்க இருக்கும் போது எந்த ஆபத்தும் என் பக்கத்தில் நெருங்காது அத்தான்…. உங்க மூச்சுக் காத்து என்னை சுற்றி இருக்கிற வரை… வேறு எதுவுமே நெருங்காது அத்தான்…. நீங்க எப்போதுமே என் கூடவே இருப்பீங்கள்ள அத்தான்… எனக்கு இப்போ கூட உங்களை விட்டு போக மனசு வரலை… உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு.. நான் ஏன் இப்டி ஆனேனு எனக்கே தெரியலை… நான் பண்றதுலாம் சரியா தப்பானு கூட தெரியலை… உங்களுக்கும் எனக்கும் ஒத்து வருமானு கூட தெரியலை….” என்று தன் இயல்பு மாறி…. பேசியவள்

“என்னை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுட மாட்டீங்களே அத்தான் “ என்று கண் கலங்க….

“ஏய்… “ என்று செல்லமாய் கோபப்பட்டவன்.. எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் அரவணைப்பில் கொண்டு வந்தான்…

”ப்ராமிஸா…. நான் என்ன தப்பு பண்ணினாலும்…. என்னை மன்னிசசுடுவீங்கதானே…. ஏன்னா… நான் உங்கள மாதிரி யோசிச்சு எதுவும் பண்ண மாட்டேன்… என் மேல ப்ராமிஸ் பண்ணுங்க..ப்ளீஸ்” என்றவளை முறைத்த விஜய்….

“என் மேல நம்பிக்கை இல்லையா… சரி போ… தூங்கி ரெஸ்ட் எடு…. டைம் ஆச்சு” என்றவனை அவள் அப்போது விடவே இல்லை…. இன்னும் அவனை இறுக்கமாய் பற்றினாள் …..

விஜய்க்குதான் இப்போது கலவரம் ஆனது… சுற்றிலும் நோட்டமிட்டுக் கொண்டே தான் பேசிக் கொண்டிருந்தான்

என்ன சொன்னாலும் அவள் போகாமல்….அங்கேயே நிற்க…

“தீக்ஷா உங்க அம்மா… ” என்று விஜய் சொல்ல… தீக்ஷா அப்போது தான் சுய நினைவுக்கு வந்தவளாய்…

“அய்யோ அத்தான் ..செத்தேன்… கேள்வி கேட்டே கொன்னுடுவாங்க..” என்று வேகமாய் அவனிடமிருந்து தன்னைப் பறித்துக் கொண்டு ஓடிப் போனவளைப் பார்த்து சத்தம் வராமல் சிரித்துக் கொண்டிருந்தான் விஜய்…. மனமெங்கும் சந்தோசத்தோடு…

வழக்கம் போல் திரும்பிப் பார்த்த தீக்ஷா… மீண்டும் வேகமாய் அவனிடம் திரும்பி வந்து

“இதைப் பிடிங்க” என்று கழுத்தில் போட்டிருந்த அவன் ஜெயினை அவனிடமே கழட்டிக் கொடுக்க…” விஜய் கேள்விக்குறியோடு பார்க்க

“எங்க அம்மா.. இது ஏது… யாரோடதுனு… கேள்வி கேட்டே கொன்னுடுவாங்க…. நாளைக்கு வாங்கிறேன்…. நாளையில இருந்து… யாராவது என்னை திட்டுனா… நீங்க பார்த்துக்குவீங்க தானே…” என்றவள்…

”என்னை ரொம்ப திட்டிட்டே இருப்பாங்கத்தான்… எங்க அம்மா” என்று அப்பாவியாய்க் கம்ப்ளெயிண்ட் பண்ண

“இல்லனா உன்னலாம் அடக்க முடியுமா” என்று மனதுக்குள் நினைத்தான் விஜய்…. வெளியில் ஒன்றும் சொல்லாமல் இருக்க…..

“என்ன சார்… மைண்ட் வாயிஸ்ல உன்னலாம் அடக்க உங்க அம்மாதான் ஏத்த ஆள்னு…. திங்கிங்க் ஓடுதா” என்று மிரட்ட…

”இப்போ அத்தை தோசைக் கரண்டிதான் வச்சுட்டு நிக்கப் போறாங்க” என்று போலி கலவரம் ஊட்ட…

”சரி சரி.. என் வீக் பாயின்ட்ஸ்லாம் தெரியும் போல…. என் ஜெயின் பத்திரம்” என்றபடி… சுற்றும் முற்றும் பார்த்தவள் அவனுக்கு தன் முத்தம் என்னும் தண்டனையை கொடுத்து விட்டு… பறந்தோடிப் போனாள்… அவனின் புயல்

விஜய்க்கு புயல் அடித்து ஓய்ந்தார்ப் போல் இருக்க… சந்தோசமாய் தன் அறைக்குள் நுழைந்தான்…. நாளைய தினத்தை எதிர்பார்த்து…. மனம் இப்போதே ஏங்கத் தொடங்கி இருந்தது…

தீக்ஷா உள்ளே நுழைந்த போது…. அவள் அன்னை இன்னும் வரவில்லை….

”அப்பா தப்பித்தோம்” என்று படுத்தவள் மறக்காமல் விஜய்யின் மெசேஜை எடுத்துப் பார்த்தவள்….. அவன் காதலில் நெகிழ்ந்துதான் போனாள்…..

உங்கள மாதிரி கவிதைலாம் எனக்குத் தெரியாது….. ஆனால் எனக்கு உங்க காதல் கூட வேண்டாம்…. உங்க அருகில்…. உங்க அணைப்பில் எப்போதுமே இருக்கனும் அத்தான்…………… அவன் அனுப்பிய கவிதைக்கு…. பதில் தன் மனதோடு மட்டும் சொல்லிக் கொண்டவள்…. ஜென்ம பந்தமாய் அவர்கள் உறவு தொடர வேண்டுமென்று….. தன்னவனின் காதலையும்………. அவன் காதல் சொன்ன பார்வையையும்…. அவன் மேல் தான் கொண்ட காதலையும் மனதின் அடி ஆழத்தில் நிறைத்தாள்...

எதையும் புயல் போல் செய்பவள்… தன் காதலை…. அதன் சுகந்தமான நினைவுகளை… மட்டும் தனக்குள் அடக்க ஆரம்பித்திருந்தாள்….. தீக்ஷா

--------

அதிகாலையிலேயே தீக்ஷா ஜெயந்தியால் எழுப்பப் பட… அன்றும் தீக்ஷா….

“அம்மா…. இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்” என்று சொல்ல…. ஜெயந்திக்கு எரிச்சல் வந்தாலும்…. வழக்கம் போல் திட்டாமல்…. அவளை தயார்படுத்தும் பொறுப்பை ராதாவிடம் விட்டபடி…

“இவளுக்கு என்னைக்குதான் பொறுப்பு வருமோ… கடவுளே அந்தத் தம்பிய நீதான் காப்பாத்தனும்” என்று தன் குமுறலை கடவுளிடம் கொட்டியபடி போனாள்….

அதன் பின்… தீக்ஷாவும் தன் அண்ணியிடம் வம்பு செய்யாமல் தன் திருமணத்திற்கு தயாரானாள்….

கிட்டத்தட்ட முகூர்த்த நேரம் நெருங்கும் போது…. தீபன் உள்ளே வந்து தன் மனைவியிடம்

“ராதா ரெடியா இருங்க” என்ற போது…. அவனுக்கு மௌனமாய் தலை அசைத்தாள்…. ராதா

கணவன் – மனைவி இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் உரசி சென்றாலும்…. அவள் விழிகளில் விரக்தியும்… இவன் பார்வையிலோ பரிதவிப்பும் இருக்க… இருவருமே அவரவர் நிலையில் இருந்து மீளாமல் இருந்தனர்…

தீக்ஷா இருவரையும் கவனிக்காமல் இல்லை…. இந்த 4 வாரங்களாக… இருவரும் பேருக்கு அனைவரின் முன்னிலையில் பேசிக் கொண்டிருக்கின்றனர்… தீக்ஷாவும் இது அவர்களின் பிரச்சனை…. தானாக சரி ஆகி விடும் என்றுதான் நினைத்தாள்… ஆனால் இன்று வரை…. அதே நிலையில் தான் இருக்கிறார்கள்… என்றபோது அவளுக்கு கவலையாக வர…. தன் அண்ணியிடம் தனியாக பேச வேண்டுமென்று தன்னைச் சுற்றி இருந்த அனைவரையும் வெளியில் அனுப்ப

ராதா அவளைக் கேள்விக் குறியோடு பார்த்தாள்…

“அண்ணி… முதல்ல என்னை மன்னிச்சுக்கோங்க…. நான் உங்க பெர்சனல் விசயத்தில் தலையிடக் கூடாதுதான்… ஆனால்… அதுக்கு மூல காரணமே நான் எனும் போது என்னால பேசாம இருக்க முடியலை…. என் அண்ணா பண்ணினது தப்புதான்… ஆனா அதுக்காக இப்டி அவன் கூட பேசாம அவனைக் கொல்லாதீங்க அண்ணி… என் அண்ணா பாவம் அண்ணி” என்ற போது….

“ப்ளீஸ் தீக்ஷா….இப்போ இது தேவையா..” என்று ராதா அவளைத் திசைதிருப்ப..

”எனக்கு இது தேவைதான் அண்ணி… என்றவள்…தன் அண்ணியின் கைகளைப் பிடித்து யாசகம் கேட்பவள் போல்

“அண்ணி…. நான் வேறொரு வீட்டுக்கு வாழப் போறேன்…பிறந்த வீட்டு சீதனமா… எனக்கு என் அண்ணா… அண்ணியோட… வாழ்த்துக்கள்… அவங்க நெறஞ்ச மனசோட எனக்கு வேணும் எனக்குத் தருவீங்கள அண்ணி…. “ என்றவளின் கண்கள் அவளை மீறி கலங்கி இருக்க…

ராதா வேகமாய்…

“ஹேய்… இது என்ன சின்னப் பிள்ளையாட்டம்… என்று அவள் கண்களைத் துடைக்க

“அண்ணி பிளீஸ்” என்றவளிடம் ராதாவும் மனம் திறந்தாள்..

“தீக்ஷா… தீபன்… அன்னைக்கு இருந்த சூழ்நிலையில்…. என்ன வேணும்னாலும்… என்ன வேணும்னாலும்னா… ஏன் அண்ணனை அடிச்சிருந்தால் கூட…. நான் தப்பா எடுத்திருக்க மாட்டேன்…. ஏன் என்னை இனிமேல் என் பிறந்த வீட்டோட…. உறவே இருக்கக் கூடாதுனு என்னைக் கூட்டி வந்திருந்தால் கூட எனக்கு இந்த அளவு வலி இருந்திருக்காது தீக்ஷா…. ஆனா என்னை… சுனந்தாவை.. அப்டியே விட்டுட்டு வந்தார் தீக்ஷா….அதை என்னால தாங்கல முடியலை தீக்ஷா…இந்த நிமிசம் வரை என்னால மறக்க முடியலை…..எப்படி என்னை அவர் வாழ்நாள் முழுசும் என்னை கூட்டிட்டு போவார்… என்னை எங்காவது விட்டுட்டு போய்டுவாரோனு ஒரு பயம் தான் தீக்ஷா….” என்றவளிடம் தீக்ஷாவும் தன் அண்ணனுக்காகப் போராடினாள்

“அண்ணி உங்களுக்கு தீபன் மேல காதல் இல்லையா…. அவன் என்னதான் பண்ணினாலும் உங்க காதல் மனசு அவனை மன்னிச்சு விட்றாதா ..”

சிரித்தாள் ராதா….

“நீ என் அண்ணனை மன்னிச்சுட்டதை மறைமுகமா சொல்றியா தீக்ஷா… ஆனா… என் அண்ணா உனக்கு பண்ணியதெல்லாம் அவர் மேல உனக்கு விருப்பம் வருவதற்கு முன்னால்….. நீ அவர் பண்ணியதெல்லாம் மறந்து அவரை ஏத்துக்கிட்டது…. உனக்கு அவர் மேல காதல் வந்த பின்னால…. ஆனால் எனக்கு அப்படியா தீக்ஷா… நீ சொல்லு தீக்ஷா… காதல் வந்த பின்னால என் அண்ணனை… அவர் பண்ணிய காரியங்கள் எல்லாம் உனக்கு…. பின்னால போயிருக்கலாம்…. என் அண்ணனை நீ விரும்பாமல் இருந்திருந்தால்….. நீ அவர மன்னிச்சிருப்பியா சொல்லு…..”

தன் அண்ணியின் காதல் மனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்த தீக்ஷாவுக்கு…. தான் அன்று சுனந்தா பிறந்த நாள் விழாவிற்கு போகமலே இருந்திருக்கலாமோ என்று தான் நினைத்தாள்…

“அண்ணி…. எல்லாமே என்னாலதான் அண்ணி….” என்று மீண்டும் தளுதளுத்தவளாய்

‘எல்லாமே..என் அவசரப் புத்திதான் காரணம்… இப்போ நினைத்தாலும் என்றவள்..

“ஆனாலும் அத்தான் பண்ணியது தப்புதான்” என்றவள்

“என்னை அடைச்சு வச்சத சொல்லலை… ஆர்த்திய…. கடத்தினது” என்று திருத்த

ராதா தீக்ஷாவுடனான உரையாடலை நீட்டிக்காமல்

”லேட் ஆகுது தீக்ஷா” என்று அவளை அவசரப்படுத்த

“அண்ணி…நான் கேட்ட சீதனம்” என்று தீக்ஷாவும் விடாமல் பிடித்தபடியிலேயே இருக்க…

தீபனுக்கு போன் செய்தாள் ராதா….

“உங்க தங்கை இங்க பிடிவாதம் பிடிக்கிறா…வந்து என்னனு கேளுங்க” என்று வேறு எதுவும் பேசாமல் போனை வைக்க..

தீபன் விழுந்தடித்துக் கொண்டு மேலே வந்தான்… தீக்ஷா கீழே இறங்கி வராமல் தான் பிடிவாதம் பிடிக்கிறாள் என்று அவனே கற்பனை செய்து கொண்டான்…

அவன் தீக்ஷா இப்படி ஏதாவது பண்ணுவாள் என்றுதான் பயத்தில் இருந்தான்…. விஜய்யைப் பழிவாங்க இப்படித்தான் முடிவெடுப்பாளா என்று பயந்து மேலே வர… அங்கு ராதாவும் தீக்ஷாவும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்…….

பெருமூச்சை விட்டவன்… ராதாவை முறைத்தபடி தீக்ஷாவை நோக்கி..

“என்ன தீக்ஷா… என்ன பிடிவாதம் பிடிக்கிற” என்று கோபமாய்ப் பேச…

“டேய் அண்ணா..உனக்காக… மேக்கப் கூட கலஞ்சு கண் கலங்கி… பேசுனா என்னை மொறைக்கிற” என்று பேச… ராதாவைப் பார்த்தான் தீபன்…

“நீ தானே பிடிவாதம் பிடிக்கிறானு போன் பண்ணின…” என்று கேட்டவனிடம்…

குனிந்து கிசுகிசுத்தாள் ராதா…

”சுனந்தாவுக்கு அடுத்து அவளுக்கு இன்னொரு மருமகன் வேண்டுமாம்… அதுதான் உங்க அண்ணா சம்மதம் இல்லாம ஓகேனு சொல்ல மாட்டேனு சொன்னேன்” என்று சொல்ல… தீபன் இப்போது இன்னும் சீறினான்

“என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா…. சீக்கிரம் கிளம்பி வாங்க… ஒரு நிமிசம் ரெண்டு பேரும் என் வயித்துல புளியக் கரச்சுட்டீங்க….”. என்றவனிடம்

“டேய் அண்ணா… டீலா நோடீலா” என்று தீக்ஷா விடாமல் கலாய்க்க…

ராதா தீக்ஷா இருக்கிறாள் என்று தான் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தவனாய்…

“தீக்ஷா… நீ விஜய் கூட சந்தோசமா வாழனும்னு நான் வேண்டாதா தெய்வம் இல்லை…. நீ என்னடானா இந்த நேரத்தில் கூட விளையாடுற” என்று அலுக்கும் போதே கீழே மணமகளுக்கான அழைப்பு வர…

“விஜய் அத்தான் கூட சந்தோசமா இருக்கத்தானே மேரேஜ் பண்றேன்… உன்ன மாதிரி பொண்டாட்டி கூட மொறச்சுகிட்டு இருக்கிறதுக்கா மேரேஜ் பண்றேன்” என்ற தீக்ஷா தன் அண்ணியிடம் திரும்பி

“அண்ணி… இவன் சரிப்பட மாட்டான்… அவன வழிக்கு கொண்டு வர்றது உங்க பாடு… எனக்காக எங்க அத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு… வாங்க போகலாம்.. காலையில இருந்து என் ஆளு என்னைப் பார்க்காத ஃபீல்ல இருப்பாரு… என் வேலை முடிஞ்சது… உங்க ஆளைப் பார்த்துக்கங்க…” என்றவள்… தன் அண்ணனிடம் …

“டேய் மரமண்டை… உனக்காக பேசி அண்ணிய டைவர்ட் பண்ணி வச்சா… பெருசா சீன் போட்டுட்டு இருக்க… வேஸ்டுடா நீ…..” என்றபடி கிளம்ப ஆயத்தமாக….

தீபன்…. அவளைப் பார்த்து நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் விழி உயர்த்த…

“என்னைப் பார்க்காதா…. அங்க ஓட்டு உன் ஃபில்ம” என்ற போதே ஜெயந்தி வர…. தீக்ஷாவை அழைத்துக் கொண்டு… ராதா மணமேடைக்கு கிளம்பினாள்….

தன் தங்கையின் கைபிடித்து.. தோழியர் சூழ…. மணமகளாய்…. மணமகளின் நாணத்தோடு தலை குனிந்து வந்தவளை கண்களில் நிரப்பிய விஜய்…… தான் சபையில்… மணமகனாய் அமர்ந்திருக்கிறோம் என்ற நினைவு வந்து….. தன்னவளின் மேல் இருந்த பார்வையினை மீட்டெடுத்தவன்… அவள் தன் அருகில் வந்து அமரும் வரை மீண்டும் அவளை நோக்க வில்லை…

இதை அறியாமல் தீக்ஷா வரும் வழியிலே அவ்வப்போது விஜய்யைப் பார்க்க…. அவனோ அவனைப் பார்க்கவே வில்லை….

மனதுக்குள்ளே திட்டிக் கொண்டு வந்து அவனருகில் அமர்ந்தாள் தீக்ஷா…. “இவன் இந்த கெத்தை எல்லாம் எப்போதான் விடப் போறானோ” என்று உள்ளுக்குள் குமுறிய போதே..

“என்னதான் நீ அலங்காரம் பண்ணியிருந்தாலும்… நேத்து என் முன்னாடி வந்து நின்னேல அதுக்கு மட்டம் தான் தீக்ஷா….” என்று விஜய் கிசுகிசுக்க

தீக்ஷா முறைக்க…. விஜய் அதைப் பார்த்து சிரிக்க…. அந்த நிமிடத்தை… நிழலாய் தனக்குள் உள்வாங்கியது….…… கேமெரா….

தீக்ஷாவின் முறைப்பில்….

”இருந்தாலும்…. சூப்பரா இருக்கடி… தென் லேசா கண் கலங்கி இருக்கு… என்ன செண்டிமெண்டா” என்று பார்வையை மேடையில் வைத்தபடி உதடுகளைக் கூட அசைக்காமல் சொல்ல….

தன்னை இந்த அளவுக்கு கவனித்திருக்கிறானா….. என்று… தீக்ஷா…. விழி விரிய தன்னவனைப் பார்க்க…. அவனோ…. ”என்னைப் பார்க்காதே….. மணமேடை இது” என்று….. கண்களாலே அவளுக்கு சைகை செய்தான்….

அவனின் வார்த்தைகளற்ற மொழியை புரிந்து கொண்டவளாய்… தலையை மட்டும் அசைத்தவள்…. மணமகளாய்க் குனிந்தாள்.. திருமதி. தீக்ஷா விஜயேந்தர் ஆகும் நிமிடத்தை எதிர்பார்த்து….

அந்த மங்கல நிமிடமும் வர…. ஒரு முடிச்சைக் கூட தன் தங்கைக்கு கொடுக்காமல்….. விஜய் தீக்ஷாவின் கழுத்தில் மங்கல நாணை பூட்டினான்……..

இரு குடும்பங்கத்தினருக்கும்… இந்த நிகழ்வு எப்படி சாத்தியமானது என்று நம்ம முடியாமல் இருந்தனர்… இருவரின் பெற்றோர்களும் ஆனந்த கண்ணீரோடு வாழ்த்த… மணமக்களின் உடன் பிறந்தனரோ சந்தோசத்தில் வாழ்த்தினர்….

அங்கு கூடியிருந்த ஓவ்வொருவரும் மணமக்களை வாழ்த்த… மணக்கோலத்தில் இருந்த இரு இளம் உள்ளங்களும்… அத்தனை ஆசீர்வாதங்களையும் தங்கள் இல்லற வாழ்க்கையின் ஆதாரமாக… பூரிப்போடு ஏற்றுக் கொண்டது….

விஜய் தன்னவளை … கண்ணின் இமையாக… அவளை விட்டு நீங்காத நிழலாக காலம் முழுவதும் காத்து வாழ தனக்குள் உறுதி கொள்ள….

தீக்ஷாவோ….. எதைப் பற்றியும் சிந்திக்காமல், தன்னவனின் அருகில் இருக்கிறோம்… இனி எப்போதும் இருப்போம் என்ற சந்தோசத்தில் மூழ்கியிருக்க…

இளமாறன் என்னும் குள்ளநரி அவர்கள் இருவரின் சந்தோசத்திற்கும்…. குழி பறிக்கும் நாளினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்….

2,613 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

1 comentário


சுந்தர் ஜீ
சுந்தர் ஜீ
31 de jan. de 2022

அப்பாடா..... ஒரு வழியாக கல்யாணம் முடிந்து விட்டது

Curtir
© 2020 by PraveenaNovels
bottom of page