top of page

அன்பே நீ இன்றி-34

அத்தியாயம் 34:

விஜய்-தீக்ஷா திருமண வரவேற்பு பிரமாண்டமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது…. விஜய் எதையும் விட்டு வைக்க வில்லை… தன் திருமணம் எப்படி நடக்க வேண்டுமென்றெல்லாம் எதிர்பார்த்திருந்தானோ…. அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் அனைத்து ஏற்பாடையும் செய்திருந்தான்….. விஜய்யின் சகோதரர்களும் அவனுக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்க….. விஜய்-தீக்ஷா திருமணம்.. அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக இல்லாமல்…… அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் படி நடைபெற்றுக் கொண்டிருந்தது….

ராதா….தீபனுக்கு தான் இன்னும் நம்பவே முடியவில்லை…. ஏதோ இப்போதுதான் தங்கள் திருமணம் முடிந்தது போல் இருந்தது… இடையில் ஆயிரம் பிரச்சனை ஏற்பட்டு… இப்போது அடுத்து ஒரு சம்பந்தம் இருகுடும்பத்துக்கும்… நினைக்கவே இனிமையாக இருந்தது இருவருக்கும்

ராதா-தீபன் இருவருக்கும் இடையில் இன்னும் பிரச்சனை இருந்தாலும்… அதை எல்லாம் தற்காலிகமாக ஒதுக்கி விட்டுப் பார்த்தால்….. இந்த திருமணம் இருவருக்கும் ஒரு பூரண திருப்தியைத் தந்தது என்பதே உண்மை….

தீபனுக்கு மட்டும் உள்ளுக்குள்… கொஞ்சம் உதறல் இருக்கத்தான் செய்தது…. தீக்ஷா… என்ன செய்கிறாள்… என்ன செய்யப் போகிறாள் என்று யாராலும் கணிக்க முடியாது…. முடிவெடுத்து விட்டால் எதையும் பார்க்க மாட்டாள்…. யோசிக்கவும் மாட்டாள்…. அவளை சிறு வயதில் இருந்தே அறிபவன் அவன்… கொஞ்சம் சஞ்சலத்தில் உழள… அவன் தங்கையோ… அவனின் சஞ்சலம் தேவையே இல்லை என்பது போல… அவள் முகம் முற்றிலும் சந்தோசத்தை மட்டுமே பூசியிருக்க… அதை உணர்ந்தவன்…. கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு… வலம் வந்து கொண்டிருந்தான்…

இவர்களின் பெற்றவர்களோ அதை விட …. பரிபூரண திருப்தியில் மனம் முழுக்க சந்தோசத்துடன் திருமண விழாவைக் கண்குளிர கண்டு கொண்டிருந்தனர்… அதிலும் ஜெயந்தியைப் கைகளில் பிடிக்கவே முடியவில்லை…. தன் மக்கள் இருவருக்கும் அமைந்த மண வாழ்க்கையை நினைத்து பேரானந்தம் அடைய… தீக்ஷா வீட்டு உறவினர்கள்…. ஜெயந்தி குடும்பத்தையே கொஞ்சம் பொறாமையுடன் பார்க்கத்தான் செய்தனர்….

ஆக மொத்தம்…. சந்தோஷம் மட்டுமே குடி கொண்டிருந்த அந்த மண்டபத்தில் மணமகன் விஜய்- மணமகளின் சகோதரன் தீபன் இருவருக்கும் மட்டுமே மனதுக்குள் புயல் லேசாய் மையம் கொண்டு கொஞ்சம் சஞ்சலம் கொடுத்துக் கொண்டிருக்க…. மற்ற அனைவரும் அந்த விழாவின் உற்சாகத்தில் மனம் மயங்கிக் கொண்டிருந்தனர்….

சுரேந்தருக்கு…. வந்தவர்களை கவனிப்பதற்கே நேரம் போத வில்லை…. இந்தத் திருமணத்தின் எல்லா பொறுப்பும் அவனிடம் இருக்க… பொறுப்பான தம்பியாய் அவன் செயல்பட்டுக் கொண்டிருந்தான்

யுகியோ…. அவனின் இயல்பின் படி… தீக்ஷாவை ஓட்டிக் கொண்டே இருந்தான் ….. தீக்ஷா கூட அவனின் கிண்டலில் கொஞ்சம் திணறித்தான் போனாள்…

பதில் கொடுக்க முடியாமல் எல்லாம் இல்லை… மணமேடையில் இருந்ததால் அதுவும் மணமகளாய் இருந்ததால் பதிலுக்கு பதில் பேச முடியாமல்…. அடக்கி வாசித்தாள்….. ஆனால்…. ஒருகட்டத்தில் யுகியின் ஆட்டம் அதிகம் ஆக…. அவனை அடக்க…. ஆர்த்தியின் பெயரை இழுக்க… அதன் பின் யுகி தீக்ஷா பக்கம் வருவானா…. வரவே இல்லை…. இவ்வாறாக வரவேற்பு போய்க் கொண்டிருக்க…

கிட்டத்தட்ட வரவேற்பு நிகழ்ச்சி முடியும் தருவாயில்…. இளமாறன் மேடை ஏற….. தீக்ஷா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்….

அவளின் புன்னகைக்கு பதிலாக… இளமாறனோ சிறு புன்னகை கூட செய்ய வில்லை…. அவன் முகம் கல்லாய் இறுகி இருந்தது,…. ஆனால் அதே நேரத்தில் அவன் விஜய்யை மட்டும் பார்த்து புன்னகைத்தபடி வாழ்த்த…

அதைப் பார்த்த தீக்ஷா முகம் சுருக்கி யோசித்தபடி இருந்தாள்….

அதுவரை விஜய்யிடம் அவள் எதுவும் தனியாகப் பேசவில்லை… அவன் அறிமுகப் படுத்தியவர்களிடம் மட்டும் பதில் மரியாதை செய்து கொண்டிருந்தாள் மேடையில் மணப்பெண்ணாக …. அடக்கமாக இருக்க வேண்டுமென்று… அவள் தாய் ஜெயந்தி ஆயிரம் அறிவுரை கூறி அனுப்பி இருந்தாள்…. அதுமட்டும் காரணம் இல்லை… விஜய்யிடம் இவள் ஏதாவது பேசப் போய்… கண்டிப்பாக அவன் பதிலுக்கு முறைக்கத்தான் செய்வான்…. விளைவு புகைப்படம் தான் கேவலம் ஆகும்…. தன் கணவனின் முகம் புகைப்படத்தில் அழகாய் வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக…. அமைதியாக…. அடக்கமாக… தன்னை அடக்கி… தன் வாயையும் அடக்கி…. விஜய்க்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டுமென்று அவள் இருக்க…. இளமாறன் தீக்ஷாவின் பொறுமையைச் சோதித்து விட்டான்….

இளமாறன் தன்னைக் கண்டு கொள்ள வில்லை என்று தெரிந்ததால்… தீக்ஷாவும் இளமாறனைக் கண்டு கொள்ளாமல் இருக்க… விஜய் அப்போது அவளை அழைக்க…. அவன் அழைத்தும் …. அதைக் கேளாதது போல் தீக்ஷா ராதாவிடம் பேசியபடி இருக்க….

விஜய் தீக்ஷாவின் கைகளை பிடித்து அழுத்தினான்…

அப்போதும் அவள் திரும்பாமல் இருக்க… இளமாறனுக்கு தீக்ஷா தன்னைத் தவிர்க்கிறாள் என்பது தெளிவாகப் புரிய… விஜய்யிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்….

அவன் மேடையை விட்டு இறங்கியதும்…. விஜய் தீக்ஷாவிடம்…. திரும்பி…..

“என்ன பண்ணிட்டு இருக்க…. நான் கூப்பிட்டது காதில் விழலையா …. அப்படி என்ன பேச்சு….” என்றவன்… அத்தோடு விட்டிருக்கலாம்

தீக்ஷா விழிகளில் இருந்த தீவிர பாவத்தை உணர்ந்த விஜய்.….. அவளை சகஜமாக்க… அவளை போல் கேலியாக பேச முயற்சிக்க… அது அவனுக்கே வினையானது….

தீக்ஷா யோசனையில் இருப்பதை உணர்ந்தவனாய்….. அவள் புறம் குனிந்தவன்….

“என்ன தீக்ஷா…. இவ்ளோ யோசனை…. நீ சும்மா யோசிச்சாலே அது உருப்படியா இருக்காது….. இதில் இவ்வளவு தீவிரமா என்ன யோசனை” என்று அவளைப் பார்த்து கிண்டலாய்க் கேட்க

தீக்ஷா விளையாட்டாகத்தான் சொன்னாள்…. ஆனால் அவளின் துணையாக வரப் போகிறவன்…. இப்போதெல்லாம் அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனக்குள் அர்த்தம் கண்டுபிடிக்கிறான் என்று அறியாமல் போக

“ஆமாத்தான்…… பெரிய்ய யோசனை தான்” என்று விழி விரித்துச் சொல்ல

விஜய்யும் ஆர்வமாய் கேட்டான்

‘அப்படி என்ன பெரிய யோசனை… இந்த சின்ன மூளைக்குள்ள” மெதுவாய்க் குனிந்தபடிக் கேட்க…

தீக்ஷா நிதானமாய் சொன்னாள்….

“இல்லை… இவ்ளோ பிரமாண்டமா நம்ம ரிஷப்ஷன் நடந்துட்டு இருக்கு…… இப்போ எனக்கு இந்த மேரேஜ் வேண்டாம்னு சொன்னா என்ன ஆகும்னு நெனச்சுட்டு இருக்கேன்….. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை… ஏற்கனவே எனக்கு ஒரு தடவை திருமணம் நின்ற அனுவம் இருக்கு…. உங்களை நினைத்துப் பார்த்தேன்…..” என்று சாவகாசமாய்ச் சொன்னாள்….. தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் உணராமல்

அவளின் வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடியே….. விஜய் தனக்குள் மொத்தமாய்ச் செத்துப் போனான்…………. முகமே களை இழந்து விட்டது. அவனுக்கு….

தீக்ஷா அவனிடம் சொல்லிவிட்டு திரும்பவும்….. ராதா அவளை உடைமாற்ற அழைத்துப் போகவும் சரியாய் இருக்க…. விஜய்யின் முக மாறுதலை தீக்ஷா கவனிக்கவே இல்லை அவள்… தான் பேசிய வார்த்தைகள் அவனின் மனதில் எவ்வளவு பெரிய வலியை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரியாமலே அவள் அவனை விட்டு அகன்றாள்….

இந்த இரண்டு வாரத்தில் அவளாகப் போய்த்தான் அவனைப் பார்த்து பேசி வந்தாள்…. விஜய் இவளிடம் ஒரு வார்த்தை கூட பேச முயற்சிக்க வில்லை…. விஜய் காதலை….. தீக்ஷா அவனிடம் உணர்ந்தாலும்…. திருமணத்திற்கு முன் தன் மீது கொண்ட காதலை தன்னிடம் சொல்லுவான் என்று தீக்ஷா எதிர்பார்க்க…. அது கடைசி வரை நடக்கவே இல்லை…. தீக்ஷாவுக்குள் எங்கோ தோற்றது போல் உணர்வுதான்…. இருந்தும் அதை பெரிதாக எடுக்காமல் விட்டு விட்டாள்… இப்படி இருக்க…. இளமாறன் அவளைப் பார்த்து புன்னகைக்காமல் போக…. விஜய் கூட ஒரு காலத்தில் இந்த மாதிரி பார்த்தவன் தானே….. என்று ஞாபகம் வர….. அதே நேரம் விஜய்யும் கொஞ்சம் கோபமாகப் பேசி….. அதன் பின் கேலியாகவும் பேச

தன்னை அறியாமல் வாயை விட்டு விட்டாள்….. தீக்ஷா…..

----

அதன் பின் ….

வரவேற்பு நிகழ்ச்சியும் முடிய…. மணமக்களின் பிரத்யோக புகைப்படம் எடுக்க தீக்ஷாவை அழைத்துக் கொண்டு ராதா கிளம்ப… விஜய்யோ அந்த நிகழ்வையே ரத்து செய்து விட்டான்….

அதைக் கேள்விப்பட்ட தீக்ஷாவுக்கு கோபம் வந்து விட்டது… ஏனென்றால் இப்போது கிடைக்கும் தனிமையில்தான் விஜய்யிடம் பேசலாம் என்று நினைத்து வைத்திருந்தாள்…

அதற்கும் வழி இல்லாமல் போக பொங்கி விட்டாள் தீக்ஷா

வேகமாய் போனை எடுத்து விஜய்க்கு அழைப்பு விடுக்க……. அவனும் எடுத்தான்

அவனின் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல்…

“அத்தான் இப்போ வர்றீங்களா இல்லையா” குரலில் அதிகாரமும் அனலும் ஒரு சேர பறந்தது….

எதுவும் பேசாமல் போனை அணைத்தவன்…. அடுத்த நிமிடம் அங்கு வந்தான்,,,, அவனவளின் விருப்பத்தை நிறைவேற்ற…. ஆனால் அவன் கண்களிலோ ஜீவனைத் தொலைத்திருந்தான்….

தன் வார்த்தைகளை கேட்டு…. தன் முன் வந்து நின்றவனை தீக்ஷா சந்தோசமாய் பார்க்க…. அவனோ முகம் வாடி இருக்க…. அவன் கண்களிலோ ஜீவன் இன்றி இருந்தது…….. தீக்ஷா அதிர்ந்து விஜய்யைப் பார்த்தாள் ……………

விஜய்யின் கண்களைப் பார்த்தே அவனின் உணர்வுகளை உணர்பவள் அவள்…. அது காதல் முதல் கோபம் வரை….

எப்போதிருந்து அவன் கண்களில் காதல் உணர்ந்தாளோ அந்த நிமிடத்தில் இருந்து அவனின் பார்வை தன்னிடம் சொல்கின்ற கதைகளை எல்லாம் தன் மனதில் சேகரித்து வைத்திருந்தாள் அவன் காதலி….

சொல்லப் போனால்… அவனை முதன் முதலில் பார்த்ததில் இருந்து இந்த நிமிடம் வரை…. அவன் பார்வை… எப்போதும் அவளை ஈர்க்கும் சக்தியாகவே அவள் உணர்ந்திருக்க..…. அவனின் ஒவ்வொரு பார்வையையும்….. இனம் பிரித்துக் காணும் வித்தையை தனக்குள் கொண்டு வந்திருந்தாள்…..தீக்ஷா…..

இப்போது அவளால் …. தன்னவனின் பார்வையில் இருந்த விரக்தியை தாங்கவே முடியவில்லை…………….

“விஜய் அத்தான்” என்று அதிர்ச்சியில் வார்த்தைகளை முழுங்க……

“வரச் சொன்னேல்ல…. வந்துட்டேன்…. போட்டோ எடுக்கலாமா” என்ற போது தீக்ஷா அவனிடம் ஏதோ பேச முயற்சிக்க…..

”டைம் இல்ல தீக்ஷா….” என்று இயந்திர கதியில் விஜய் பேச… தீக்ஷாவுக்கும் புகைப்படம் எடுக்கும் மூடே போய் விட்டது….

”ஏன் விஜய் அத்தான் இப்படி இருக்கிறார்” என்ற எண்ணமே அவளுக்குள் ஓடிக் கொண்டிருக்க…. இருவருமே ஏதோ பேருக்கு அந்த புகைப்படங்களுக்கு காட்சி அளிக்க…. 3 கோணங்களில் தான்… அதும் தனித் தனியாய் எடுத்தார் போட்டோகிராபர்… இப்போது புகைப்படம் எடுப்பவருக்கே இருவரின் முகமும் வித்தியாசமாய்ப் பட

“சார்…. டையர்டா இருந்தா நாளைக்கு எடுத்துக்கலாமே” என்றே கேட்டு விட்டார்….

விஜய்… தீக்ஷாவைப் பார்த்தான் அவளின் ஒப்புதலுக்காக…. தீக்ஷாவும் தலையாட்ட….. விஜய் கிளம்பி விட…. தீக்ஷா அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்….

---------

இளமாறன் வீட்டை அடைந்த போது இளமதி அவனை கடுங்கோபத்துடன் எதிர்கொண்டாள்…… தங்கை வாழ்க்கையை நட்டாற்றில் விட்டவனின் திருமணத்திற்கு அண்ணன் போய் வந்தது எந்த தங்கைக்குத்தான் பிடிக்கும்…. தன் அண்ணனை வாசலிலேயே நிறுத்தினாள் இளமதி ஆவேசத்தோடு….

அவளின் கோபம் தெரியாதவனா… இல்லை இளமாறனுக்கு விஜய் மேல் கோபமில்லையா…….. என்னவெல்லாமோ திட்டம் தீட்டி வைத்திருந்தான்….. முதலில் அவன் தங்கை….. இப்போது அவன்…. விஜய்யின் மேல் அவனுக்கும் கடுங்கோபம் தான்…..

தன்னை நிறுத்திக் கேள்வி கேட்ட தன் தங்கையை முறைத்த இளமாறன் வேகமாய்த் தன்னறைக்குப் போக…. அவன் பின்னாலே போனாள் இளமதி….

“அண்ணா….. நான் ஒருத்தி கேள்வி கேட்டுட்டு இருக்கேன் நீ பதில் சொல்லாம போனால் என்ன அர்த்தம்” என்றவளிடம் மீண்டும் மௌனத்தையே பதிலாகத் தந்தான் இளமாறன்

‘அந்த விஜய்…. திமிர் பிடிச்ச தீக்ஷா இவங்க ரெண்டு பேரும் என்னை விட முக்கியமா போய்ட்டாங்களா உனக்கு ….” வார்த்தைகளைக் குதர்க்கமாய் வெளிப்படுத்தினாள் இளமதி…

இளமாறன் கேட்டான்….

“உனக்கு அந்த விஜய்யை பிடிச்சுருக்கா….. அவன இன்னும் நெனச்சுட்டு இருக்கியா”

இளமதி அவனை இளக்காரமாகப் பார்த்தாள்…..

“அவனையா… போயும் போயும் இன்னொரு பொண்ணை மனசில நினச்சவனப் போய் நான் விரும்புவேனா….. உன்னை மாதிரி நான் கிடையாது….. வேறொருத்தன லவ் பண்றானு சொல்லியும் நீ அந்த ராதாவை மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்ட மாதிரி என்னை நினைத்தாயா….”

இளமாறன் இப்போதும் அமைதியாக இருந்தான் …. பின் தன் தங்கையைப் பார்த்து…. பின் லேசாய் இகழ்ச்சியுடன் சிரித்தான்…

“மதி…. என்னை விடு…. உனக்கு இவனை விட…. உனக்கு ஏத்தவனா கண்டுபிடிச்சு மேரேஜ் பண்ணி வைக்கிறது என்னோட பொறுப்பு… போதுமா…. ஆனால் இந்த விஜய்யை விட்ருவேனு நெனச்சுடாதா….. என்னை அவன் அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டான்…. நானும் கொஞ்சம் கோபமாத்தான் இருந்தேன்…. திருமணப் பத்திரிக்கை கொண்டு வந்தான்…..

நானும் அந்த தீக்ஷாவுக்கு பார்த்த மாப்பிள்ளை பையன் வரல…. அதுனால நீ மாட்டிக்கிட்டியானு நக்கலா கேட்டா…. அவன் சிரிச்சுட்டே சொல்றான்…..

“இல்லடா நான் தீக்ஷாவை மனசார விரும்பறேன்னு……” கதை கதையா காரணம் என்கிட்டயே சொல்றான்…… “ என்றவன் இளமதியைப் பார்க்க

“நான் அவன மீட் பண்ணும்போதே ஐ ஸ்மெல் தேட்” என்றவளின் வார்த்தைகளும் அவள் அண்ணனின் இகழ்ச்சியான சிரிப்புக்கு சளைக்காமல் இருக்க

“ஆனா அந்தப் பொண்ணுக்கும் இவனுக்கு ஒத்தே வராது மதி…. எப்படியோ அந்த தீபன் குடும்பம் விஜய் குடும்பத்தை கவுத்துட்டாங்க” என்றான்

“இல்லண்ணா… அந்த தீக்ஷாவை சாதரணமா எடை போட்ராத…. பார்க்க அப்பாவி மாதிரி… இன்னோசண்ட் மாதிரி தெரிஞ்சாலும்….. அவ சாமான்யமானவ கிடையாது…..” என்று தன் அனுபவத்தில் கூறினாள் இளமதி……..

”ஹ்ம்ம்…. பார்க்கலாம்…. ஆனால் நான் அவனை விட மாட்டேன் இளமதி….. அவனோட நேருக்கு நேர் மோதினால்…. அவன் சுதாரிச்சுருவான்…. அவனோட உறவாடிக் கெடுக்கனும்… பையன் இப்போத்தானே கல்யாணம் பண்றான்…. வாழ்க்கையை அனுபவிக்கட்டும்….. புதுப் பொண்டாட்டி… லவ் மேரேஜ் வேற… வாழட்டும்…. தீக்ஷாதான் அவனோட பலவீனம்னு தெரிஞ்சு போச்சு….. அவள் மூலமா இப்போ சந்தோசம் அனுபவிக்கட்டும்… எனக்கும் அவன்கிட்ட முக்கியமா ஒரு விசயம் நடக்க வேண்டும்…. அதுக்கப்புறம் அவன் பொண்டாட்டி மூலமாகவே….. அவனுக்கு துக்கத்தைக் கொடுப்போம்…..“ என்றபோது அவன் முகம் முழுவதும் குரோத வழிய….. இளமதி…. தன் அண்ணனிடம்

“முக்கியமான விசயம்னா…. விஜய்யோட பிஸ்னஸ்ஸா அண்ணா….. “ என்று கேட்க….

இப்போது இளமாறன் முகமும் கவலையைத் தோய்த்தது…. அவன் விஜய்யோடு நட்பு வைத்துக் கொண்டதே….. விஜய் தன் கனவாக நினைத்துக் கொண்டிருக்கும்… அந்த ப்ராஜெக்டைக் கைப்பற்றுவதுதான்…. ஆனால் இளமாறனால் அதை நெருங்கவே முடியவில்லை…. தன் தம்பியைக் கூட கூட்டாக சேர்த்துக் கொள்ளாதவன் இவனைச் சேர்ப்பானா…. ஆனாலும் இளமாறன் ஓய்ந்து விடவில்லை…. ஏதாவது வழி கிடைக்கும்… எப்படியாவது அந்த ப்ராஜெக்டை கைப்பற்றி ஆக வேண்டும்…. என்ற முடிவுடன்… ஒரு வெறியுடன் தான்…. விஜய்யோடு நட்பு வைத்துக் கொண்டதே…

கண்டிப்பாக விஜய்க்குத்தான் அந்த ப்ராஜெக்ட் சைன் ஆகும் என்று அவனுக்கு தெரியும்… இல்லா விட்டால் தீனாவுடன் கூட்டு சேர்ந்திருப்பான்…. விஜய்க்கு இந்த ப்ராஜெக்ட் எப்படி கனவோ… அதுபோலத்தான் இளமாறனுக்கும்…. எல்லா வழியிலும் முயற்சித்துப் பார்த்தான்… ஒவ்வொரு முயற்சியும் தோல்வியே….. ஆனாலும் முயற்சித்துக் கொண்டேதான் இருந்தான்….ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்று அவன் மனம் சொல்லிக்கொண்டே இருக்க…. அதன் காரணமாகவே இதுவரை விஜய்யுடன் அவன் பிரச்சனை பண்ணிக் கொள்ளவில்லை…..

தன் நினைவில் இளமாறன் இருக்க….

“ஆனால் அந்த தீக்ஷா அவமானப்படனும்…. என்ன மாதிரி என்கிட்ட பேசுனா” என்று சொல்ல

“இளமதி… இனி விஜய்-தீக்ஷா விசயத்தில் நீ தலையிட வேண்டாம்…. ஏற்கனவே உன்கிட்ட எச்சரிச்சுட்டேன்…. விஜய் என்கிட்ட ஏற்கனவே வார்ன் பண்ணியிருக்கான்…. நீ மட்டும் இன்னொரு தரம் அவன் மனைவி கிட்ட ஏதாவது வம்பு பண்ணினாய் என்றால் என் தங்கை என்று கூட பார்க்க மாட்டானாம்…. அவன் சொன்னால் செய்வான்.. நீ ஒதுங்கிக்கோ… நான் பார்த்துக்கிறேன்… அவனை எப்போ.. எங்கே அடிக்கனுமோ…. அப்போ கரெக்டா…. அடிப்பேன்…” என்றவனிடம்… இளமதி

திடீரென்று…

“அண்ணி அவங்க வீட்ல இருந்து போன் பண்ணினாங்க… நீ போனே எடுக்க மாட்டேங்கிறியாம்….. உன்கிட்ட முக்கியமான விசயம் பேசனும்னு சொன்னாங்க” என்ற போதே…

”ஹ்ம்ம்… நான் பேசிக்கிறேன்…. ” என்றவன் அவளோடான உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது போல்…..

“உனக்கு நான் சொன்னது புரிஞ்சதுல்ல…. நீ விஜய் விசயத்தில் தலையிடக்கூடாது…. என் தொழிலுக்கு உன்னால எந்த இடைஞ்சலும் வரக்கூடாது புரிஞ்சதா ” என்று சொல்ல…

அவனின் கண்டிப்பான வார்த்தைகளுக்கு…. இளமதியும் தலை ஆட்டினாள்….

இளமதிக்கு தன் வாழ்க்கையில் புதிய வழியில் செல்ல எந்த தயக்கமும் இல்லை…. விஜய் விஜய் என்று அவன் மேல் உருகவும் இல்லை…. ஆனால் விஜய்க்கு தன்னை விட அந்த தீக்ஷா முக்கியமாய் போனதும்…. தீக்ஷா அன்று மிகவும் கேவலமாக….கொஞ்சம் கூட மதிக்காமல் போனதும் தான் அவளின் கோபம்….. அவள் அண்ணனும் அவளுக்கு ஏதுவாகப் பேச.. தன் அண்ணன் பார்த்துக் கொள்வான் என்று நிம்மதியாகப் போனாள்…. இளமதி….

இதெல்லாம் எதுவும் அறியாமல்……. தங்களுக்குள்ளே விழுந்த கடந்த கால முடிச்சை அவிழ்க்கும் வழி தெரியாமல் உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தனர்…. நம் நாயகனும்.. நாயகியும்…

விஜய்க்கு தீக்ஷாவின் பேச்சு உசுப்பேற்றி விடத்தான் செய்தது…. கோபம் தான் வழக்கம் போல… இருந்தும் வெளிக்காட்ட முடியாமல் தனக்குள் அடக்கிக் கொண்டான்… அதைத்தவிர வேறு வழியும் கிடையாது…..

“பெரிய இவ… இவ மேரேஜ நிறுத்துறேனு சொன்னவுடனே … நாங்களும் போம்மானு வழி அனுப்பி வைப்போம்னு நினைத்தாளா…. சரி ஏதோ மனசுக்கு பிடிச்ச பொண்ணு…. மேரேஜ் பண்ணி சந்தோசமா போய் வாழட்டும்னு முதலில் அமைதியா இருந்தேன்….நாளை நீ மட்டும் மேரேஜ் வேண்டாம்னு எதுனாலும் சொல்லுடி… நீயா நானானு பார்த்து விடலாம்… கதற கதற கழுத்துல தாலியக் கட்டிற மாட்டேன்…” என்று தனக்குள் சமாதானமாய் வார்த்தைகளைக் கூறிக் கொண்டபின் தான் விஜய் மனம் ஆறுதலடைந்தது…

“சும்மாவே உன் மேல் நல்ல எண்ணம் அவளுக்கு…. இதில் வலுக்கட்டாயமா தாலி வேறயா… …. என்ன நடக்க போகுதோ…. எங்க முடியப் போகுதோ…” என்று கவலை பாதி…. எடுத்த முடிவு கொடுத்த தைரியம் பாதி… என விஜய் இருக்க….

தீக்ஷாவோ… தன் அறையில் இருப்புக் கொள்ளாமல் இருந்தாள்…. எப்படியும் இனி விஜய்யை நேராகச் சந்திக்க முடியாது…. அட்லீஸ்ட் போனிலாவது தொடர்பு கொள்ளலாம் என்று 50 காலாவது பண்ணியிருந்திருப்பாள்…. அவனோ போனை எடுக்காமல் இருக்க…. தீக்ஷாவுக்கு மனம் கலங்கி விட்டது….

“விஜய் அத்தான் சொல்வது போல் நான் லூசு தான்…. என்ன பேசுகிறோம்… எப்படி பேசுகிறோம்… யாரிடம் எப்படி பேச வேண்டும்.. இது எதுவுமே எனக்குத் தெரியவில்லைதான்…. இல்லை என்றால் என் மனம் முழுவதும் நிறைந்தவனிடமே….. திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று லூசுத்தனமாக பேசியிருப்பேனா….”

மனம் முழுவதும் கவலையோடு தீக்ஷா யோசித்துக் கொண்டிருந்தாள்….

இனிமேல் அறையை விட்டு வெளியே செல்வது என்பது முடியாத காரியம்…. அவளது அண்ணியும்…. அன்னையும் தன் அருகே இருப்பதால்…. என்ன சொல்லி வெளியே போவது…. போனாலும்…. விஜய் தனியே இருப்பானா…. தனக்குள் மன்றாடிக் கொண்டிருந்தாள் தீக்ஷா

போனையும் எடுக்காமல் வேறு… விஜய் அவளுக்கு சோதனையைக் கொடுக்க….. வேதனையுடன் தவித்துக் கொண்டிருந்தாள் தீக்ஷா….

கிட்டத்தட்ட 12.30 மணி அளவில்…. ஜெயந்தியின் உறவுக்கார பெண்மணி…. கர்ப்பிணியான அவள் மகளுக்கு… மண்டபம் வசதியில்லை என்று கூறி… வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்ல…. ஜெயந்தி அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டு விட்டு வருவதாக அங்கிருந்து போக…. தீக்ஷாவுக்கும் அது வாய்ப்பாகப் போனது….

ராதா மட்டுமே அருகிலிருந்தாள்…. ராதா சுனந்தாவை உறங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்க….. தீக்ஷா இப்போது யுகிக்கு போன் செய்தாள்…

இந்த நேரத்தில் தீக்ஷா தனக்கு ஏன் போன் செய்கிறாள்…. என்று நினைத்தபடியே

“என்ன புதுப்பொண்ணு….. நாங்கள்ளாம் உன் ஞாபகத்தில் இன்னும் இருக்கிறோமா எனறு கிண்டல் செய்ய… அவனின் கிண்டலை எல்லாம் கவனிக்காதவளாய்…

”யுகி… உங்க அண்ணா எங்க…..” என்று விசாரித்தாள் தீக்ஷா…

“எந்த அண்ணா… சுரேன் அண்ணனா….. விஜய் அண்ணனா” நேரம் காலம் தெரியாமல் யுகி கேட்டு தீக்ஷாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம்

“லூசு…. உன் அண்ணானு நான் கேட்டேனா… யாரைக் கேட்பேன்… லூசுத்தனமா கேள்வி கேட்கிற” என்று பல்லைக் கடிக்க…

இவள் லூசு மாதிரி பேசிவிட்டு…. யுகியை திட்டிக் கொண்டிருந்தாள்….

“சாரி… சாரி… விஜய் அண்ணனா…. இங்க தான் இருந்தார்….. இப்போதான் மஹாலுக்கு கிளம்பி வந்தார்…. இவ்ளோ நேரம் அவங்க ஃப்ரெண்ட்ஸலாம் பார்த்து பேசிட்டு… இப்போதான் கிளம்பினார்….. ஏன் ஏதாவது முக்கியமான விசயமா” என்று கேட்டவனிடம்…

“என்னடா.. சார்…. பேச்சுலர்ஸ் பார்ட்டி கொடுத்துட்டு இருக்காரா” என்று சந்தேகமாய் இழுத்தாள் தீக்ஷா….

யுகி தன்னைத்தானே குட்டிக் கொண்டான்….

”இல்ல தீக்ஷா அது வந்து…” என்று உளற ஆரம்பிக்க….. அவனிடம் பேசி நேரத்தை வீணடிக்காமல்

“சரி வை…. நான் அடிச்ச போனைக் கூட எடுக்காம தலைவர் பார்ட்டில பிஸியா” என்று அவனிடம் சொல்லியபடி போனை வைத்தவள்… திரும்பி அண்ணியைப் பார்க்க…

ராதாவும் சுனந்தாவோடு கண்ணயர்ந்திருந்தாள்…

இதுதான் சமயம் என்று விஜய் அறைக்குப் போக தீர்மானித்த தீக்ஷா மெதுவாய் அடி எடுத்து வைக்க…. அவளின் கொலுசு ஒலி கேட்டு ராதா எழுந்து விட்டாள்

“என்ன தீக்ஷா…எங்க போற” என்று கேட்டபடியே எழ

தீக்ஷா அப்படியே அமர்ந்து விட்டாள்..

“ஒண்ணும் இல்ல அண்ணி…. தூக்கம் வரலை” என்று முணங்கியபடி அவளின் அருகில் படுத்தவள்…. தன் அண்ணியிடம் சொல்லி விட்டுச் செல்லலாம் என்று கூட முதலில் நினைத்தாள்…. ஆனால் ஜெயந்திக்கு தெரிந்தால் தன்னோடு தன் அண்ணியும் சேர்த்து திட்டு வாங்க வேண்டும் என்பதால் ராதாவிடம் சொல்லி விட்டுப் போகும் எண்ணத்தை கைவிட்டு கண்ணை மூடியபடி படுத்தாள்….

மீண்டும் 10 நிமிடம் கழித்து எழுந்த போது ராதா நித்திரையில் ஆழ்ந்திருக்க… தான் அணிந்திருந்த…. அனைத்து அணிகலன்களையும் சப்தமில்லாமல் மெதுவாய் கழட்டியவள்… அறையினை விட்டும் வெளியேறி இருந்தாள்….

விஜய் அறையில் யார் இருந்தாலும் பரவாயில்லை… அவனைச் சந்தித்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்ததால்…. எதைப் பற்றியும் கவலைப்படவில்லை…. யாரைப் பற்றியும் சிந்திக்க வில்லை

----

தீக்ஷா நினைத்தது போல்… விஜய் அறையில் அவனோடு யாருமே இல்லை… அவன் மட்டுமெ தனியாய் இருந்தான்… அவனுக்கும் அந்தத் தனிமை வேண்டி இருந்தது… யாரிடமும் அவனுக்கு பேசவே பிடிக்கவில்லை…. திருமணத்திற்கு வந்திருந்த தன் நண்பர்களிடம் கூட சரியாகப் பேச முடியவில்லை… அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை சுரேந்தர் ஏற்றுக் கொண்டிருந்ததால்… ஏதோ பேருக்கு அவர்களிடம் பேசி விட்டு…. தன் அறைக்கு வந்தவன் தனது மொபலை அப்போதுதான் எடுத்தான்….. சைலெண்ட் மோடில் வேறு போட்டிருந்தான்…. ஏகப்பட்ட கால்களும் …. குறுஞ்செய்திகளும் வந்திருக்க….. அதில் பெரும்பான்மையானது தீக்ஷா என்றிருக்க….

விஜய் வேகமாய் எடுத்துப் பார்த்து அவற்றை எல்லாம் படிக்கப்….படிக்க…. அவனின் முகத்தில் அதுவரை இருந்த சஞ்சலம் எல்லாம் கரைந்து போய்…. புன்னகை மீண்டும் ஒட்டிக் கொண்டது…

அத்தனை குறுஞ்செய்தியும் அவனின் மன்னிப்பு வேண்டி இருக்க…. விஜய்யும் அவளை அழைக்கலாம் என்று முடிவு செய்து…. தன் போனில் இருந்து கால் செய்ய நினத்தவன் மணியைப் பார்க்க… அது 1 என்று காட்ட…. கால் செய்ததையும் கட் செய்து விட்டான்…. அவளைச் சுற்றி யாரார் இருப்பார்களோ…. அவளால் பேச முடியுமோ… பேச முடியாதோ….. தன்னால் அவளுக்கு தொல்லை வேண்டாம் என்று அவளின் நலன் கருதி அவளுக்கு போன செய்யாமல்…. அவளுக்கு மெசேஜ் மட்டும் செய்தான்

“தீக்ஷா… நீ மன்னிப்பு கேட்கும் தகுதி இல்லாதவன் நான்……….

உன்னவனுக்கு வேண்டியது உன் காதல் தான்….” என்று முதலில் அனுப்பியவன்… அடுத்த குறுஞ்செய்தியாக…

“யாசிக்கிறேன் உன் காதலை…….

தந்தால் யாசகனாவேன்…

இல்லையென்றால்?????

அதைக் களவாடும் கள்வனாவேன்….

நீயாகத் தந்தால் யாசகன் ….

நானாக எடுத்தால் கள்வன் …

நான் யாராக இருக்க வேண்டும் என்பது உன் கையில்….”

என்று தனக்குத் தெரிந்த வார்த்தைகளில்… அவளுக்கு மெஸேஜ் அனுப்பியவனுக்கு… சந்தோசத்தில் உறக்கம் கூட வரவில்லை….

தீக்ஷாவை நினைத்தபடியே … அவளின் ஞாபகங்களில் சுழன்றவனுக்கு….. தன்னவளாய் தீக்ஷா மாறும் கணம் எப்போது வரும்… அவளிடம் தன் மனதில் இருப்பதை எப்போது கொட்டலாம் என்று கண் மூடி படுத்திருக்க,…. அப்போது அவனின் அறைக்கதவும் தட்டப்பட்டது….

”நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே” என்று அலுத்தவனாய் எழுந்த விஜய்….. கதவைத் திறக்க…. தீக்ஷா நின்று கொண்டிருந்தாள்…. திறந்த கதவின் மறுபுறம்…

விஜய்…..அதிர்ச்சியோடு பார்க்க… தீக்ஷா அவனின் பார்வை உணர்ந்தவளாய்… அவனைத் தள்ளியபடி…. உள்ளே நுழைய…. வேகமாய் விஜய் அவள் பின்னே வந்தவன்…. அவளுக்கும் முன்னே வந்து அவளின் முன் நின்றவன்

“ஏய்… இந்த நேரத்தில் என் ரூமுக்கு…. யாராவது பார்த்தால் என்ன ஆகும்” என்று பதட்டமாய்க் கேட்க….

உதட்டைச் சுழித்தாள் தீக்ஷா…. “என்ன ஆகும் அத்தான்…… “ என்று அப்பாவியாக் கேட்டவளை… விழி தெறிக்கப் பார்த்தான் விஜய்….. அவளை விட அப்பாவியாய்…

”என் ரூமுக்கு நீங்க கூடதான் தனியா வந்தீங்க….. அதுவும் யாரோ ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ணின என்னைப் பார்க்க வந்தீங்க… நான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற பையனத்தான் பார்க்க வந்திருக்கேன்…. நீங்க பண்ணினதை விட இது தப்பு இல்லைதானே….. ஆனால் நான் அன்னைக்கு பயந்ததை விட நீங்க ஏன் அத்தான் இந்த பயம் பயப்படபறீங்க” என்று கொஞ்சம் கூட பயமில்லாமல் அவனின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்க…

விஜய்………… அவசரமாய் மீண்டும் திரும்பிப்போய் ….. கதவை அடைக்கப் போனான்….

தீக்ஷாவோ அவனிடம் தான் மனதில் இருப்பதை எல்லாம் அன்றே கொட்டி விடத் தீர்மானித்தவளாய்………. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்….

1,767 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page