top of page

அன்பே! நீ இன்றி!! 15

அத்தியாயம் 15:

தீக்‌ஷா, பார்வதி வந்து அரை மணி நேரம் ஆகி இருக்க………….. சாரகேசும் வந்து சேர்ந்தான்………………….

அவனைப் பார்த்து புன்னகைத்த தீக்‌ஷாவைப் பார்த்தவன்……….. அவள் முகம் சோர்ந்திருப்பதை உணர்ந்து…… தன் தங்கையைப் பார்த்து தனியாக விசாரித்தான்

“ஏன் ஒரு மாதிரி இருக்கா………….”

“நல்லாத்தான் இருந்தா………….. நாங்க வரும் போது விஜய் கொஞ்சம் மிரட்டுனாரா………… அதில் மேடம் அப்செட்” என்று சிரித்தபடி சொல்ல

“என்ன மிரட்டுனான்னு சிரிச்சுட்டே சொல்ற…………. “ என்று தீக்‌ஷாவுக்கு பரிந்து பேச………….

”அய்யோ அண்ணா………… மிரட்டுனார்னா நீ நினைக்கிற மாதிரி இல்லை……….என்று மாலையில் நடந்ததைச் சொல்ல…………

“ஓ….”. என்று சொல்லியவனிடம்

“விஜய் சந்தோஷமா அவகிட்ட வம்பிழுத்தார்னா……… ஆனா இந்த லூசிதான் புரிஞ்சுக்கல……. உம்முனு இருக்கு” என்று சொல்லியவள்

”அவர் தீக்‌ஷாவை லவ் பண்றாரோ………………” என்று பார்வதி தன் அண்ணனிடம் சந்தேகமாய் வினவினாள்

பைக்கில் வரும்போது பார்வதி தீக்‌ஷாவிடம் இதைத்தான் தன் சந்தேகமாய்க் கேட்க நினைத்தாள்.

“லவ் பண்றவன் கல்யாணம் பண்ணி அவள சீண்டி விளையாட வேண்டியதுதானே……… அவன் கல்யாணம் பண்ணனும்னு நெனச்சா எப்பவோ கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம் பார்வதி…….. வேற என்னமோ அவன் ப்ளான் பண்றான்…..” என்று சாரகேஷ் பார்வதியின் சந்தேகத்துக்கு பதிலளித்தபோதே தீக்‌ஷா அருகில் வர பேச்சை மாற்றினார்கள்…………..

”அண்ணா விஜய்யைப் பற்றி அவகிட்ட பேசிராத….. இல்லைக் கேட்ராத….. ஏதாவது திட்டிறப் போறா……… “ என்று எச்சரிக்கை செய்யவும் மறக்கவில்லை…..

தீக்‌ஷாவும் பார்வதியும் தனியே சென்று விட………… சாரகேஷ் ஆண்களுக்கான ஆடைப் பிரிவில் நின்றபடியே அடுத்த வாரம் கேம்புக்கு போக இருப்பதால் அந்த யோசனையும் ஓட………. மருத்துவமனை ஞாபகம் வர அகல்யாவின் ஞாபகமும் வந்தது………… ஒரு டாக்டர் மாதிரியா பேசுறா…. ரவுடி மாதிரி பேசுறா……… என்று நினைத்தபோதே மெலிதான புன்முறுவலை அவன் முகம் படர விட………… அவள் அடுத்த வாரம் பிரச்சனை பண்ணுவாளோ என்று நினைக்கும் போதே கலக்கமும் வந்தது………..

ஆடைகளை பார்த்துக் கொண்டிருந்த தீக்‌ஷாவிடம்…….. பார்வதி கேட்டாள்…………

“உங்க அண்ணா தீபன்…. விஜய்கிட்ட இப்போ பேசுறாரே………….. உன்னை வெளிய தள்ளி விட்டு பிரச்சனை ஆச்சே……….எப்டி பேசுனாரு” என்று கேட்க…… தீபனைப் பற்றித்தானே கேட்கிறோம் என்று கேட்டாள் அவள்

”எதுக்குடி விருமாண்டிய பற்றியே பேசிட்டு இருக்க….. எனக்குத் தலை வலிக்குது………… ” என்று மூஞ்சியில் அடித்தாற்ப்போல் சொன்னவள்….. பார்வதியின் முகம் சுருங்க….. அதைத் தாங்க முடியாமல்

”இப்போ என்ன பதில் தானே வேண்டும்………”

“நானே பேசிட்டு இருக்கேனே…………. எங்க அண்ணன் பேசுறதுல என்ன ஆச்சரியம் உனக்கு……”என்று புருவம் உயர்த்திக் கேட்டவள்

“எனக்கு மட்டும் வைரக்கியம்னு ஒண்ணு இல்ல பார்வதி………. வேற ஒருத்தினா பேசக் கூட மாட்டாள்ள என்றவள்……….. அவன் என் அண்ணியோட அண்ணனா போய்ட்டான் இல்லை பேசியிருந்திருக்க மாட்டேனோ என்னவோ………… இந்த உறவு முறைல இது ஒரு சிக்கல் டி……….. புடிச்சுருக்கோ இல்லையோ பேசி ஆக வேண்டிய நிலை…………. அடிக்கடி முட்டி மோதி மறுபடியும் விஜய் அத்தானு நான் போய் நிற்க வேண்டிய நிலை…………. ஆனா அவன் தெளிவாத்த்தான் இருக்கான்………….. எப்போதுமே என்கிட்ட வந்து பேசினதில்லை………….. நான் தான் ஒரு லூசு…………ஒரு வார்த்தையையும் காப்பாத்துறது இல்லை……….. போதுமா… இப்போ உன் ஃபேஸ் ரியாக்சனை மாத்துறியா….. என்று முறைக்க……….. பார்வதி சிரிக்க………… தீக்‌ஷாவும் அந்தச் சிரிப்பில் கலந்து கொள்ள………. அதன் பின் இருவருமாய் உடை எடுப்பதில் பெண்களாய் தீவிரம் ஆகினர்….

--------------------

அதே நேரம்…… அவர்கள் அருகில் இருந்த ஏரியாவின் உயர்தர ஹோட்டலில்………… சுரேந்தர் தீனாவோடு அமர்ந்திருந்தான்………………. தீனா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க…. சுரேந்தரோ அமைதியாக அமர்ந்திருந்தான்

“என்னடா ஆச்சு உங்களுக்கு………. விஜய் என்ன சொல்றான்….. என்னால் தனியாக பண்ண முடியவில்லைனுதானே அவன் ஹெல்ப் கேட்கிறேன்…. அவன்கிட்ட சொல்லி என்னோட ஜாயின் பண்ணச் சொல்லுடா….. இந்த ப்ராஜெக்ட்டுக்காகத்தானே அவ்ளோ பாடுபட்டான்” என்று கேட்க

சுரேந்தர் பதில் சொல்லாமல் அப்போதும் அமைதியாக இருக்க

தீனா பொறுமை இழந்தான்….

”விஜய் சோகமா இருக்கிறதுக்கு கூட ரீசன் இருக்கு….. உங்க ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சு” என்றவன்

”உன்னைச் சொல்லச் சொன்னேன்ல….. …. விஜய்கிட்ட பேசுனியா” என்று தீனா அழுத்திக் கேட்க..

“இல்ல தீனா…. அண்ணா இப்போலாம் நான் சொல்வது எதையுமே கேட்பதில்லை….. அதிலும் ’சக்தி’ விசயத்தில் நாம ரெண்டு பேரும் பண்ணிய அதிகபிரசிங்கித் தனமான வேலையில் கோபமாய் ஆனவர்…. …. இப்போதுதான் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருக்கிறார்…… மீண்டும் நான் ஏதாவது அவருக்கு பிடிக்காத விசயத்தைப் பற்றிப் பேசி….. அண்ணா கோபப்பட்டு பேசாமல் இருந்து விடுவாரோனு பயமா இருக்கு…… அதனால் இதைப் பற்றி பேசவில்லை….” என்று முடிக்க

“அவன் நல்லா இருக்க வேண்டுமென்று தானே பண்ணினோம்………..” என்று சொல்லும் போதே தீனாவின் குரலும் உள்ளே போயிருக்க…

”ப்ளீஸ் தீனா………. அந்தப் பேச்சை விடு………… இப்போ நினைத்தாலும் தீக்‌ஷாவை நினைத்தும்… அவளால என் அண்ணா பட்ட வேதனையும்……… மறக்கவே முடியவில்லை….. இன்னும் எங்க குடும்பம் அதிலிருந்து மீளவில்லை தெரியுமா….” என்று கலங்க

“சாரி சுரேந்தர்….. எதையும் ஞாபகப்படுத்துவதற்காக நான் பேச வில்லை…..” என்றவனிடம்…..

”இப்போதான் அண்ணா கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு வருகிறார்…. VD ப்ரொமோட்டர்ஸ் ஆரம்பித்ததில் இருந்து அவர்கிட்டேயும் மாற்றம் தெரியுது….. சீக்கிரம் அவர் பழைய விஜய்யா மாறுவார்…. கண்டிப்பா நடக்கும்…. அதுவரை நான் தொந்திரவு பண்ண முடியாது……” என்றவன் … நினைவு வந்தவனாக

“யுகி இந்த வீக் வருகிறான்….. “ என்ற போதே

“ஆர்த்தியும் தான், வருகிறாள்….” என்ற தீனா….

“நான் விஜய்கிட்ட பேசவா…. அந்த ப்ராஜெக்ட் விசயமா”….. தீனா இன்னும் தன் பிடிவாதத்திலேயே இருக்க…..

“கண்டிப்பா ஒத்துக்க மாட்டார் தீனா…… அவர் பிடிவாதம் உனக்குத் தெரியாதா என்று சொல்லியடி…… ”பார்க்கலாம்……….. இன்னும் ஸ்டார்ட் ஆகலைல….. நீயும் அவரும் சேர்ந்து பண்ண வேண்டும் என்று இருந்தால் அது கண்டிப்பாக நடக்கும் ….சரி தீனா…. எனக்கு கொஞ்சம் பர்சேஸ் பண்ண வேண்டும்… நான் கிளம்புகிறேன் என்று அவனிடமிருந்து விடைபெற…..

தீனா அவனை வழி அனுப்பியவன்…..

“விஜய்க்கு எப்படி புரிய வைப்பது….. அவன் இல்லையென்றால் இந்த வேலையை முடிப்பது மிகப்பெரிய கஷ்டம்…… விஜய் தனியாக எடுத்திருந்தால் கூட அவனுக்கும் கொஞ்சம் கஷ்டம் தான்……. ஆனால் அந்த ப்ராஜெக்டிற்காக விஜய் திட்டங்கள் பல தீட்டியிருந்தான்… தான் பார்த்துக் கொண்டிருந்த மற்ற வேலைகளை எல்லாம் சுரேந்தர் பெயருக்கு மாற்றி இருந்தான்… அதேபோல் தீனா செய்யாததால்; இன்று எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது…..என்று திணறிக் கொண்டிருக்கிறான்…. நல்ல வேளை அந்த ப்ராஜெக்ட் சில காரணங்களினால் இன்னும் ஆரம்பிக்கப் படாமல் இருக்க தீனாவுக்கு இன்னும் நெருக்கடி வரவில்லை….. விஜய் மட்டும் அவனோடு சேர்ந்தால் கண்டிப்பாக இருவருக்குமே பெரிய அளவில் பெயர் கிடைக்கும்…. ஆனால் அவனோ இன்றிருக்கும் சூழ்நிலையில் இவன் பேசுவதை எல்லாம் காது கொடுத்துக் கேட்கும் நிலையிலா இருக்கிறான்………….என்று பெருமூச்சை விட்டபடி …. தீனாவும் அந்த இடத்தை விட்டு கிளம்பினான்

--------

சுரேந்தர்….. பார்வதி மற்றும் தீக்‌ஷா இருந்த கடைக்கே செல்ல……….. அப்போது….. பார்வதியும் தவறாமல் அவனுக்குத் தரிசனம் தந்தாள்..

தீக்‌ஷா பார்வதியின் புறம் திரும்பி இருக்க………………… ஏதோ ஒரு மன உந்தலில் அவனை அறியாமல் கால்கள் பார்வதியின் புறம் அவனைக் கொண்டு சென்றன

“ஹாய் சாருமதி……… என்றபடி அவள் முன்னால் போக……. பார்வதியும்…. அதே நேரத்தில்…. தீக்‌ஷாவும் திரும்பிப் பார்க்க…. தீக்‌ஷாவைப் பார்த்த சுரேந்தர் விழித்தான்…….இருந்தும் தன்னைச் சுதாரித்து…….

“ஹேய் தீக்‌ஷா நீ எங்க இங்க….. அண்ணா இருக்காரா என்ன …. இல்லை ராதா கூட வந்தியா” என்று விழிகளால் தேடியவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி…….. தீக்‌ஷா கேட்டாள்………..

“விஜய் அத்தான் இருந்தால் அப்டியே ஹாயோட ஜகா வாங்கிடலாமானு திட்டமா சுரேந்தர் அத்தான்” என்று கிண்டல் செய்து சிரிக்க…. சுரேந்தர் அசடு வழிந்தான்

பார்வதிக்கும் சுரேந்தரைப் பார்த்ததும் அவள் முகமும் பிரகாசமாக………. தீக்‌ஷா அறியாமல் மறைத்தவள்….. சுரேந்தரிடம் கொஞ்சம் உரிமையாக….

“நாங்க மட்டும் தான் தனியா வந்தோம்” என்றபடி……… உங்க அண்ணனுக்கு பதிலா எங்க அண்ணா வந்திருக்கார் என்றபடி ஆடைத் தேடலை தொடர……….

“உன் அண்ணனா………… எங்க இருக்காரு……….” என்று கேட்டபடி பார்வதியுடன் பேசியபடி சுரேந்தர் செல்ல தீக்‌ஷா தனியானாள்…

இருவரும் போவதைப் பார்த்தபடி நின்ற தீக்‌ஷா……….. சுரேந்தரைப் பார்த்தபடியே….. அவன் காதுகளில் விழும்படி……. சத்தமாக

“விஜய் அத்தான் நீங்க எப்போ வந்தீங்க” என்று வராத விஜய்யை வைத்து சுரேந்தரை பயமுறுத்தும் நோக்கில் சொல்ல

படக்கென்று திரும்பினான் சுரேந்தர்…………

அவன் திரும்பிய விதத்தினைப் பார்த்த தீக்‌ஷாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…………….

”சுரேந்தர் அத்தான்………… இவ்ளோ பயமா உங்க அண்ணா மேல………….” என்றபடி……….. இன்னும் சிரிக்க……. பார்வதி அவளை முறைக்க……… தீக்‌ஷா அவளின் முறைப்பில்….. அங்கிருந்து நழுவ ஆரம்பித்தாள்

போகும் போது ”என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” என்று தோழியின் காதுகளில் மட்டும் விழும்படி பாடியபடி அவளைக் கடந்தும் சென்றாள்….

பார்வதியோ………… ”ஆமாடி உனக்கு என்ன நடந்ததுனு நான் தலையை பிச்சுகிட்டு இருக்கேன்……… நீ என்னைப் பார்த்து பாடுற” என்று யோசித்தபடி ………. சுரேந்தரிடம் பேச ஆரம்பிக்கப் போக……….. சாரகேஷ் அங்கு மீண்டும் வர ……….. சுரேந்தர் பார்வதியை விட்டு சற்று தள்ளி நின்றான்

சாரகேஷும்….சுரேந்தரைப் பார்த்து விட்டு……….. எதுவும் பேசாமல் இருக்கக் கூடாது என்று….. நட்பாய் புன்னகைக்க…………… பதிலுக்கு சுரேந்தரும் சிரித்தான்……… அதற்கு மேல் சாரகெஷ் எதுவும் பேசவில்லை…. சுரேந்தருக்கு அவன் கோபம் புரிந்தது…. அன்று தான் அவனிடம் கோபமாய்ப் பேசியதுதான் காரணம் என்று உணர்ந்தவன்….. அவனிடம் பேச அவனை நோக்கிப் போக…. சாரகேஷோ…. தான் வாங்கிய பொருட்களை எல்லாம் பில் போடச் செல்ல………. சரி பிறகு பேசிக் கொள்ளலாம் என்று மீண்டும் பார்வதியுடன் பேச ஆரம்பித்தான்….

தீக்‌ஷாவும் புடவை எடுத்து விட்டதால் அவளும் சாரகேஷ் பின்னாலே செல்ல………….. சுரேந்தர் அப்போதெல்லாம் ஒன்றும் கவனிக்கவில்லை………………

பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்தவன்………… அவளிடம்

“நீ எதுவும் வாங்கலையா…………….” என்று கேட்க………….

“இல்லை………இன்னும் எடுக்கணும் அதுக்கபுறம் தான் அண்ணா கார்ட்ட்ல கையை வைக்கணும் ” என்று சொல்லும்போதுதான் தீக்‌ஷா பில் கட்டச் சென்றிருப்பதை உணர்ந்தவன்……..

”இரு வருகிறேன்” என்று தீக்‌ஷாவின் அருகில் சென்று தன் கார்டை எடுத்து நீட்ட ஆனால் அவனுக்கு முன்னாலேயே சாரகேஷ் தீக்‌ஷாவுக்கும் சேர்த்து பணம் செலுத்தி இருக்க ……………. முகம் சுருக்கினான் சுரேந்தர்……….. இருந்தும்

”சரி அப்போ பார்வதிக்கு பில் பே பண்ணும் போது நான் பண்ணிடறேன்” என்று போக

“பரவாயில்ல…………. . நான் எடுத்துக் கொடுத்ததா இருக்கட்டும்” என்று சாரகேஷ் சொல்ல…………. சுரேந்தர் முகத்தில் அனல் பரவியது….

“எவ்ளோ தீக்‌ஷா அமௌண்ட்” என்றான் முகம் கடுக்க

“5000………. அம்மா சாட்டர்டே கோவிலுக்கு போகனும்னு சொல்லி புடவை எடுக்கனும்னு சொன்னாங்க…………. அதுனாலதான் ஷாப்பிங் வந்தேன்……….. கிராண்டாத்தான் எடுக்கச் சொன்னாங்க………. எனக்கு இது போதும்னு தோணுச்சு………” என்று சொல்லியவளிடம்

“சரி நீ போய்………….. கொஞ்சம் கிராண்டா எடு………. இந்தப் புடவையை அவர்கிட்ட கொடுத்துரு………” என்றபடி தீக்‌ஷாவின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அந்த பையை அவளிடமிருந்து வாங்கி சாரகேஷிடம் நீட்ட…………சாரகேசுக்கு கோபம் வந்து விட்டது

“என்ன சுரேந்தர்….. பிரச்சனை பண்றீங்களா………… இந்தப் புடவை அவ ஆசைப்பட்டு எடுத்தது என்று சொல்லி…….. அதை அவகிட்டயே கொடுங்க……….. ” என்றபோது பார்வதியும் அருகில் வந்தாள்

அங்கு நிலைமை சரி இல்லாமல் இருப்பது போல் தோன்ற

“என்னாச்சு தீக்‌ஷா” என்றபடி சாரகேசையும் சுரேந்தரையும் மாறி மாறி பார்க்க………

சுரேந்தர் பார்வதியிடம் திரும்பியவன்…………..

“உன்னோட பில் எவ்வளவு………….. வா நான் பே பண்றேன்” என்று அவளை அழைத்தபடி முன்னே போக

“சாரகேஷ் பார்வதியிடம்…………

“ ‘பாரு’ இந்தா என கார்டை நீட்ட….

அதை வாங்கச் சென்றவளை சுரேந்தர் குரல் தடுத்தது……….

”உனக்கு நான் பில் பண்றேனு சொல்றேன்ல” என்று அவளை தடுக்க……. தன் அண்ணனுக்கும் சுரேந்தருக்கும் இடையில் நின்றவள் சாரகேசுக்கு அடுத்து நின்ற தீக்‌ஷாவிடம் திரும்பி…………..

”என்ன நடந்துச்சு” என்று பார்வையாலே வினவ

தன் இரு கைகளின் விரல்கள்களாலும் இண்ட் மார்க் போட்டுக் காட்டி….. ரெண்டு பேருக்கும் இடையில் சண்டை என்று சைகை செய்து காட்டியவள்…. இதனால் என்று தன் ஆடை இருந்த பையைத் தூக்கிக் காட்ட………. பார்வதிக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை…………. விழித்தபடி நிற்க……….. சுரேந்தர் வேகமாய் தீக்‌ஷாவின் அருகில் வந்து அவள் பையை வாங்கி பார்வதியிடம் கொடுத்தவன்

‘வா தீக்‌ஷா போகலாம்” என்று அவளை அழைக்க

தீக்‌ஷா உட்பட மற்ற இருவரும் அவன் செய்கையில் அதிர…… தீக்சஷா முகம் சுழித்தவளாய்

சட்டென்று அவன் கையை உதறியவள்…. முகம் மாறியவளாய்

“சுரேந்தர் அத்தான்…………. உங்க லிமிட்டைத் தாண்டி வர்றீங்க………..” என்று கூற……….. சாரகேஷ் முகம் பிரகாசமாக….. சுரேந்தர் முகம் கருத்தது……….

“நான் என் லிமிட்ட தாண்ட்றேனா……….. அவன் யாரு….. உனக்கு புடவை எடுத்துக் கொடுக்க……….போயும் போயும் இந்தப் புடவையை போய் சனிக்கிழமை கட்டப் போகிறாயா……….” என்று கோபமாய் கத்த ஆரம்பிக்க…. பொது இடத்தில் அவன் இப்படிக் கத்தியது அநாகரிகமாய்ப் பட்டது மற்ற மூவருக்கும்… சாரகேஷ் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக

“இங்க பாருங்க சுரேந்தர்…. நான் எந்த தப்பான எண்ணத்திலேயும் இதைப் பண்ணலை………… நீங்க பிரச்சனை பண்ணும் போதுதான் பெருசா ஆகுது……………… என்று சொல்ல…. அவன் முடிக்கும் முன்னே

“அப்போ உன் தங்கச்சிக்கு நான் புடவை எடுத்துக் கொடுக்கவா…………… எடுத்துக் கொடுத்துட்டு நானும் நீ சொன்ன வார்த்தையையே சொல்லவா.” என்று பார்வதியைப் பார்க்க………… பார்வதி அவனின் அடாவடியான பேச்சில் அதிர……. சாரகேஷுக்கு கோபத்தில் கண்கள் சிவக்க……. தீக்‌ஷாவுக்கு மனதில் நடுக்கம் வந்துவிட்டது

”மிஸ்டர் சுரேந்தர்………. அதிகம் பேசுறீங்க………….. நான் சாதாரணமா செய்ததை……..ப்ச்ச்” என்று நிறுத்தியவன்

“எனக்கு இதுக்கு மேல் பேச பிடிக்கவில்லை” என்றபடி………… பார்வதியிடம் இருந்த புடவையைப் பறித்து தீக்‌ஷாவிடம் நீட்ட முதலில் சுரேந்தரைப் பார்த்து தயங்கியவள் பின் அதை வாங்க

“தீக்‌ஷா” என்று பல்லைக் கடித்தான் சுரேந்தர்………….

“சுரேந்தர் அத்தான் உங்களுக்கு என்ன பிரச்சனை…………… வாங்க போகலாம்” என்று நிலைமையைச் சரி செய்ய…. அவனோடு கிளம்ப எத்தனிக்க

”யாரோ முன்னால் என்னை அசிங்கப்படுத்துறியா தீக்‌ஷா………. ப்ளீஸ் அந்தப் புடவையை கொடு………… நாம போய் வேற புடவை எடுப்போம்” என்று கெஞ்ச ஆரம்பிக்க….தீக்‌ஷா எரிச்சலோடு

“அவர் எனக்கு புடவை எடுத்துக் கொடுக்க யாரோ ஒருத்தர்னா……… நீங்க மட்டும் எனக்கு யாரு…………… ப்ளீஸ் இத விட்ருங்க…………” என்று சாரகேஷிடம் திரும்பி

“என் அத்தானுக்காக நான் சாரி கேட்டுக்கிறேன் பாரு அண்ணா… பார்வதி பாய்டி” என்றபடி சுரேந்தரோடு சென்றவளுக்கு…….. அழுகையே வரும் போல இருக்க…. வேகமாய் முன்னே நடந்தாள்

இப்போது சாரகேஷ் விடவில்லை………. சுரேந்தரோடு போட்டி போட ஆரம்பித்தான்….

“எங்க போற……….. இரு தீக்‌ஷா நான் கொண்டு போய் விடறேன்” என்று சாரகேஷ் தீக்‌ஷாவிடம் சொல்லி அவளை நிறுத்த

சுரேந்தர் எரிமலை ஆனான்

“என்ன டாக்டர் சார் வம்பு பண்றீங்களா…………. தாங்க மாட்டீங்க………….. எங்க பவர் என்னன்னு தெரியாம………. எங்க லைன்ல அடிக்கடி கிராஸ் ஆகிறது நல்லா இல்லை……… காலி பண்ணிருவோம்…………. ஞாபகம் வச்சுக்கோங்க………. என்கிட்ட இப்டி பேசற மாதிரி என் அண்ணாகிட்ட பேசிறாதீங்க…….. அப்புறம் உங்களுக்கு நல்ல காலம் இல்லை ” என்றவனிடம்

“ஏன் என்ன பண்ணுவான்………… அவன் இலட்சணம் எல்லாம் எனக்கும் தெரியும்….. கேவலம் இவளை அடச்சு வச்சு வீரத்தை காமிச்சவன் தானே உன் அண்ணன்…………… வரச் சொல்லு….. அவன் கிட்டயும் நான் பேசுறேன்………………..” என்று சாரகேசும் சூடாக

சுரேந்தருக்கு இன்னும் ஆத்திரம் வர…… தீக்‌ஷாவைப் பார்த்து முறைத்தவன்

“எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் சொல்லிருவியா…………. உன் மனசுல எதுவுமே இருக்காதா………… ஆனா இருக்கவேண்டியதெல்லாம் தொலச்சுட்டு நில்லு…………” என்று மீண்டும் அவள் கையை பிடித்து அவளை இழுத்தபடிச் செல்ல

சாரகேஷ் அவன் முன்னால் வந்து நின்றான்

“அவ கைய விடு………… அதுதான் உனக்கு மரியாதை………..” என்றபோது தீக்‌ஷா

“நான் போறேன் சாரகேஷ்………… சுரேந்தர் அத்தான் வாங்க…. ப்ளீஸ்….. எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள்” என்று கண்ணில் நீர் கோர்த்தபடி பேச ஆரம்பிக்க

சாரகெஷுக்கோ தீக்‌ஷாவின் அழுகையைத் தாங்க முடியவில்லை

“தீக்‌ஷா நீ எதுக்கு அழற………… இவனுங்கலுக்கெள்ளாம் ஒரு முடிவு கட்டுறேன்……….”. என்று சொல்லி சுரேந்தரைப் முறைக்க…

அவனைப் பார்த்து இகழ்ச்சியாகச் சிரித்த சுரேந்தர்……….

“என்னடா பண்ணுவ நான் இப்போ நினைத்தாலும் உனக்கு முடிவு கட்டிருவேன்………… போனா போகுதுனு பார்கிறேன்” என்று பார்வதி முகத்தைப் பார்க்க……

அவளோ அப்படியே உறைந்து நின்றிருந்தாள்….

பார்வதிக்கு சுரேந்தர் பேசிய விதம்…. அதுவும் தன் அண்ணனை அவன் பேசிய விதம்………. அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…………. பணத்திமிர் அவனுக்குள்ளும் இருக்கிறது என்று அப்போதுதான் உணர்ந்தாள்…………… அந்த அதிர்ச்சியில் அவள் சிலையாய் நிற்க,,,

சுரேந்தர் இன்னும் தீக்‌ஷாவின் கையைப் பிடித்திருப்பதை உணர்ந்த சாரகேஷ்

“அவ கையை விடுடா” என்று மரியாதை இல்லாமல் பேச ஆரம்பிக்க

”நான் என்ன உன் தங்கை கையையா பிடிச்சிருக்கேன்………. உனக்கு இந்தக் கோபம் வருது……….. இவ எங்க வீட்டுப் பொண்ணு…………….. உன் வேலை எதுவோ அதை மட்டும் பாருடா………… வந்துட்டானுங்க” என்று சொல்லி… அங்கு நிற்காமல் வேகமாய்த் தீக்‌ஷாவோடு நகன்றான் சுரேந்தர்…………..

சாரகேஷும் அதற்கு மேல் தடுக்க வில்லை…………. பார்வதி….. சுரேந்தரையும்,தீக்‌ஷாவையும் பார்த்தபடி நிற்க………. தீக்‌ஷா பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றவள்………. கையை விடுங்க சுரேந்தர் அத்தான்………….. என்று கைகளை விடுவித்தவளாக அவனோடு செல்ல ஆரம்பித்தாள்……..வளைவில் சென்று திரும்பும் போது சுரேந்தர் அனிச்சையாய்ப் பார்வதியைத் திரும்பிப் பார்க்க…….

அவளோ ”நீ இவ்வளவுதானா” என்ற விதத்தில் பார்த்துக் கொண்டிருந்தவள்….. அவனின் பார்வையில் இன்னும் சுரேந்தரை அலட்சியமாகப் பார்த்து வேறு புறம் திரும்பினாள்…..

அவளின் அலட்ச்சியம் சுரேந்தருக்கும் புரிய…. சுரேந்தருக்கு மனமெங்கும் வலி…..இருந்தும் தன் பார்வையை கஷ்டப்பட்டு திருப்பி தன் வழியில் தொடர்ந்தான்………………

தீக்‌ஷா போவதையே பார்த்துக் கொண்டிருந்த சாரகேஷ் மனம் உலைகளாமாய் கொதிக்க ஆரம்பித்திருந்தது………..

விஜய்…….. சுரேந்தர் என்று தீக்‌ஷாவினை சுற்றிய வலைகளை மீட்டு அவளை எப்படி வெளியே கொண்டு வருவது என்ற சிந்தனையில் இருந்தவன்………..தான் எடுத்துக் கொடுத்த புடவையை அவள் விட்டுப் போகாமல் எடுத்துச் சென்றது அவனுக்கு மனதில் பட……….. அவளையும் விடாமல் தான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க………… அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் அவன் மனம் இறங்க ஆரம்பித்தது…………

--------------------

சுரேந்தர் மனம் துடித்துக் கொண்டிருந்தது…….. தன் அண்ணனுக்கு மட்டும் தெரிந்தால் மனம் தாங்க மாட்டார் என்று… அது ஒருபுறம் இருக்க………… பார்வதி முகம் வேறு வந்து தொலைக்க……….. வேண்டாம்டா சாமி…… இந்தப் பொண்ணுங்க சகவாசமே…….. என்று மனம் எங்கும் குழப்பமாய் தீக்‌ஷாவை அவள் வீட்டில் இறக்கி விட…………

தீக்‌ஷா வேகமாய் காரில் இருந்து கோபமாய் இறங்கி போனாள்………..

அவள் வாங்கி வந்த புடவைக் கவர் காரிலேயே இருக்க……. அதை எடுத்துச் சென்று அவளிடம் நீட்டினான்…… கோபமாய்தான் அவனும் நீட்டினான்

தீக்‌ஷா இப்போது பொறும ஆரம்பித்தாள்

“அதை கொண்டு போய் எந்த குப்பைத் தொட்டியிலாவது போடுங்க………..” என்றபடி போக

”இதை அவன் முன்னால் சொல்லி இருந்தா நான் எவ்ளோ சந்தோசப்பட்டிருப்பேன்” என்றவனை எள்ளலாகப் பார்த்தவள்….

“நீங்க என்னைப் புரிஞ்சுக்குவீங்கனு நினைத்தேன்….. ப்ச்ச்…” என்று எங்கோ வெறித்தவள்

“சாரகேஷும் தப்பான எண்ணத்தில் இதைச் செய்யவில்லை… . எதேச்சையாய் நடந்துவிட்டது…. அவர் பின்னாலே நான் பில் போடப் போனதுதான் தப்பு….. அது மட்டும் இல்லாமல் அவர் எடுத்துக் கொடுத்ததை லூசு மாதிரி வாங்கிட்டேனுதானே நினைக்கிறீங்க…. அவர் பார்வதியோட அண்ணன்…. அவர் மனசை கஷ்ட்டப்படுத்த விரும்பவில்லை நான்….. அதுனால அவர் முன்னால் எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டேன்….. ஆனால் இதைக்கட்டி இருக்க மாட்டேன் அத்தான்….. என்றவள்……….. கலங்கிய விழிகளாய்க் கூறி

“உங்களை அவர் முன்னாடி அவமானப்படுத்திட்டேனு நினைக்கிறீங்களா அத்தான்…………. சாரகேஷை என்னால திட்ட முடியாது…. ஆனால் உங்களைத் திட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு …. அதுனாலதான் உங்க கிட்ட கடுமையா நடந்தேன்” என்றபடி

“இதேபோல்தான் விஜய் அத்தானிடமும் உரிமையாய் வாய்விட்டு………….” என்று சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணிர் கரை புரள……….

”அன்னைக்கு அவரும் புரிஞ்சுக்கலை…….. நீங்களும் இன்னைக்கு……” என்றவள் அதற்குமேல் அங்கு நிற்க வில்லை……….. சுரேந்தர் அவள் அழுகையை உணர்ந்த போதும்….. இன்னும் கோபமாகவே இருந்தான்…. குழம்பிய மனதினனாய் இருந்த அவனுக்கு அவள் வார்த்தைகள் எல்லாம் உறைக்கவே இல்லை………குழப்பத்தோடே தன் வீட்டிற்கும் வந்து சேர்ந்தான்………….. அவன் குழம்பி……….சாரகேஷையும் தூண்டி விட்டு…………… நாளை வரப் போகும் பெரிய குழப்பத்திற்கு தானே காரணமானான்

விஜய்… தீக்‌ஷா வீட்டிற்கு சென்றபோது மணி 9 ஆகி இருக்க……… சுரேந்தர் அவனுக்கு எதுவும் சொல்லாததால் அவன் நடந்த விசயங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை

வீட்டை அடைந்தவன்….. அவன் கையில் இருந்த புடவை அடங்கிய கவரை ஜெயந்தியிடம் கொடுத்து………….

”இதை அவகிட்ட கொடுத்துருங்க” என்றபடி………….. ”கட்டமாட்டேனு சொன்னா கம்பெல் பண்ணாதீங்க” என்று சொல்லியபடி ஹாலில் அவன் வழக்கமாக உட்காரும் இடத்தில் வந்து அமர்ந்தான்

ஹாலில் அமர்ந்திருந்த விஜய்………… தீபன் மற்றும் வைத்தீஸ்வரனோடு பேசியபடி……… மாடியையே பார்த்தபடி இருக்க………… அதைக் கவனித்த தீபன்…………. ராதாவை அழைத்து………..

“தீக்‌ஷாவை வரச் சொல்லு ” என்று கூற…………

அவ கோபத்தில இருக்கா…………. என்று ராதா கூற

கேள்வியாய் நிமிர்ந்த விஜய்……….

“நல்லாத்தானே இருந்தா……………. பார்வதியோட ஷாப்பிங்னு சந்தோசமாத்தானே கிளம்பினாள்…………. ஏன் என்னாச்சு” என்று ராதாவிடம் கேட்க

தயங்கிய ராதா……… பின், சுரேந்தர் அண்ணா என்று ஆரம்பித்து தீக்‌ஷா தன்னிடம் சொல்லியவற்றை எல்லாம் சொல்ல…………

“ஓ…….. ” என்றவன்

“அவனுக்கு இப்போலாம் ரொம்ப கோபம் வருது…………… நான் ஆடின ஆட்டமெல்லாம் ஆடி அடங்கிப் போய் இருக்கேன்…………. இவனுங்க ரெண்டு பேரும் ஆடுரானுங்க” என்று எழுந்தவன்

“சரி நான் வருகிறேன்……………. இனி அவ இறங்கி வர மாட்டா” என்று கிளம்பினான் ஏமாற்றமாய்……

அதே நேரம் அறையில் தன் படுக்கையில் படுத்திருந்த தீக்‌ஷாவுக்கு கோபம் ……. சாரகேஷ் மேலும் ……..சுரேந்தர் மேலும் சேர்ந்தே வர ஆரம்பித்து இருந்தது……… தான் எடுத்த புடவைக்கு பே பண்ண வேண்டாம் என்று சொல்லி பிடிவாதம் பிடித்ததால் இந்த நிலை……….. எரிச்சலாக இருந்தது…………. இந்த சுரேந்தர் அத்தான் அதுக்கும் மேல…………. மொத்தத்தில் ஷாப்பிங் போனதால் தலைவலிதான் மிச்சம்…………. என்றபடி அந்தப் புடவையைப் பற்றி நினைத்தவளுக்கு…… அம்மா சொல்லும் அந்த பிங் புடவையைப் போல இதுவும் ராசி இல்லை போல….……எடுத்தும் வீட்டிற்கு கொண்டு வர முடியவில்லை என்று தோன்றியது…..

அந்தப் புடவை கூட இவள் ஆசையாக எடுத்தது தான்………… அதை பார்த்தே வெகு நாளாகி விட்டதே என்று நினைத்தவள்…. பீரோவைத் திறந்து………… அந்த பிங்க் புடவையைத் தேடிப் பார்க்க………….. அவள் பார்வையில் படவே இல்லை………… அம்மா எங்கேயாச்சும் எடுத்து வச்சுட்டாங்களா……..என்று யோசனையில் மீண்டும் தேடியவளுக்கு சிக்காமல் ஆட்டம் காட்ட……. அதைத் தேடும் முயற்சியைக் கைவிட்டவள்…………. வெகு நேரம் அறையிலே இருந்தது போல் இருக்க…………கீழே போகவும் பிடிக்கவில்லை……….. ஸ்னோ பாப்பாவும் தூங்கி இருப்பாள்…………..என்று சலித்தபடி பால்கனிக்கு சென்று அமர்ந்தவளுக்கு … மனதில் சாரகேஷோடு சுரேந்தர் கோப முகத்துடன் சண்டை போட்டதே கண் முன் தோன்றி அவள் நிம்மதியைக் குலைத்தது……..

சுரேந்தர் சாரகேஷோடு சண்டை போட்ட விசயத்தை அவன் அண்ணனிடம் சொல்வானோ…. சுரேந்தருக்கே இவ்வளவு கோபம் வந்தால் விஜய்க்கு எவ்வளவு தூரம் வரும்…….. என்று யோசித்தபடி …… தன்னால் சாரகேசுக்கு ஏதாவது பிரச்சனை ஆகி விடக் கூடாது……….. எனக் கழுத்தில் கிடந்த சங்கிலியின் டாலரை பற்களில் கடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தவள்………… இப்போது அந்தச் செயினைப் பார்க்க……… அது கூட அவளுக்குப் பிடிக்காத ஜெயின் தான்……… ஆண்கள் போடும் மாடலில் இருக்கும் அந்த ஜெயின்…….. கோவிலில் ஏதோ ஒரு அம்மனிடம் வைத்து வாங்கி வந்ததாகக் கூறி….. அதைக் கழட்டக் கூடாது என்று சொல்லி இருந்தாள் ஜெயந்தி…….. கோமா ஸ்டேஜில் இருக்கும் போதே அவள் கழுத்தில் அணிவித்தனராம்……… தன்னையே நொந்து போய் அமர்ந்திருந்தாள் தீக்‌ஷா

தனக்கென்று……….. எதுவுமே இல்லை என்றிருப்பது போலத் தோன்றியது அவளுக்கு……….. பிடிக்காத வீடு……….. பிடிக்காத வேலை……… கழுத்தில் இருந்த ஜெயின் கூட அவள் விருப்பம் இல்லாமல்………. நினைக்கவே……. தான் தனக்காகவே வாழ வில்லையோ…… தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும்….. அவர்கள் விருப்பத்தை எல்லாம் தனக்குள் திணிப்பதாகவே பட….. இன்று கூட சாரகேஷ் அவள் மறுக்க மறுக்க பில் பே பண்ணியது…… சுரேந்தரும் அவன் மறுப்பை இவளுக்குள் திணித்தது… என எல்லாம் சேர்ந்து அவளைச் சுழற்ற……. வான்வெளியை வெறித்தபடி இருந்தவள்…….. விஜய் கார் வந்திருப்பதை பார்த்து………. சுரேந்தர் - சாரகேஷ் விசயத்தை விஜய்யிடம் சொல்லி வைத்து……… சாரகேஷுக்கு பிரச்சனை இல்லாமல் பண்ண வேண்டும்…… விஜய்யிடம் பேசி விசயத்தை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கீழே இறங்கப் போக…. அப்போது விஜய்யும் வெளியே வந்தான்…

”அய்யோ இவன் கிளம்பப் போகிறானே” என்று வேக வேகமாய் கீழே இறங்கினாள் தீக்‌ஷா…………

காரின் அருகில் சென்ற விஜய்யோ … உடனே காரில் ஏறாமல் …. காரில் சாய்ந்தபடி தீக்‌ஷாவின் பால்கனியை பார்க்க……… அது வெறுமையாய் இருக்க………….. கண் மூடி அதை நோக்கியபடி காரில் சாய்ந்தபடி சற்று நேரம் நின்று….. பின் காரின் கதவைத் திறக்கப் போக………. அப்போது தீக்‌ஷா வேகமாய் வாசற்படிகளில் இறங்கி வந்து கொண்டிருக்க…………. விஜய் புருவங்களின் மத்தியில் விழுந்த சுருக்கத்தோடு ”இவ ஏன் இவ்ளோ வேகமாக வருகிறாள்” என்று அவளை நோக்க……

”வெயிட் பண்ணுங்க” என்று சொல்வது போல் கையை மட்டும் அவனிடம் காட்டியபடி படிகளில் வேகமாய் இறங்க…………….. அவளது அவசரத்தில் படிகளில் சற்றுத் தடுமாறி கீழே விழப் போக…………. விஜய் வேகமாய் அவளை நோக்கித் தன் அடிகளை வைத்தான்….

ஆனால் அவன் வருவதற்கு முன் தன்னை சுதாரித்து…. விழாமல் அருகில் இருந்த முல்லைப் பந்தலைப் பிடித்தவள்………….. விஜய் தன்னை நோக்கி வந்ததால் அங்கேயே நின்று விட விஜய்யும் அவள் அருகில் வந்தான்

“பார்த்து வர மாட்டியா……. அப்டி என்ன அவசரம்” என்று அவன் பல்லைக் கடிக்க

அதை எல்லாம் கவனிக்காமல்

“நான் உங்க கிட்ட முக்கியமான விசயம் பேசனும்” என்றபடி அவனை பார்த்தாள்….. மூச்சிறைக்க

விஜய்யும் அவளைப் பார்க்க………… அவள் மூச்சு வாங்குவதைப் பார்த்தவன்…… ஜாக்கிரதையாக அவளை விட்டு பத்தடி தள்ளி நின்று….. மீண்டும் அவளைப் பார்க்க…… அவள் கீழே தடுமாறும் போது அவளின் ஜெயின் வெளியே வந்து விட்டிருக்க……. அதைப் பார்த்த விஜய் அதில் இருந்த டாலரை ஒரு கணம் பார்த்து… தன்னைச் சமாளித்தவனாய் அவள் சொல்லிக் கொண்டிருந்த விசயத்தை கவனிக்க ஆரம்பித்தான்….. இருந்தும் அவன் பார்வை அந்த டாலரை விட்டு நகலாமல் சண்டித்தனம் செய்ய………… பிரயத்தனப் பட்டு தன் பார்வையை அடக்கி அவளை நோக்கினான்

“இன்னைக்கு நான் பார்வதியோடு ஷாப்பிங் ” என்று தீக்‌ஷா ஆரம்பிக்கும் போதே

“ராதா சொல்லிட்டாள்….” என்று அவளை நிறுத்த

“பார்வதி அண்ணன் மேல தப்பு இல்லை” என்று சொல்லி தயங்கி அவனைப் பார்க்க

“அப்போ என் தம்பி மேலதான் தவறுன்னு சொல்றியா” என்று விஜய்யும் கேட்க….

”இல்ல இல்ல…… அப்படி சொல்ல வரலை….”. என்று வேகவேகமாய் மறுத்தவள்

”ரெண்டு பேருமே நடந்து கொண்டது சரி இல்லை….. சுரேந்தர் அத்தான் சாரகேஷ் மேல கோபமா வந்தார்…. உங்க கிட்ட ஏதாவது சொல்லி……….. நீங்க அதைத் தவறா எடுத்து….. பாரு அண்ணாவை ஏதாவது சொல்லிடாதீங்க…… ” என்று சொல்லி

சற்று நிறுத்தி

”அதற்காகத்தான் உங்க கிட்ட சொல்ல வந்தேன்………..” என்றவளின் கண்களில் அவன் சாரகேஷை ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் இருக்க……………

“சரி சரி நான் பார்த்துக்கிறேன்…. இதுக்கெல்லாம் போய்க் குழம்பாதே” என்று அவளிடம் சொன்னவன்

பின் அவளைப் பார்த்து…..

“அவங்க ரெண்டு பேரும் பண்ணியதெல்லாம் தப்பு இல்லை……………. சாரகேஷ் பில் பே பண்ணப் போகும் போது அவன் பக்கத்தில் போய் நின்னேல………… அதுதான் தப்பு………..” என்று சொல்ல

தீக்‌ஷா சட்டென்று அவனைக் கூர்மையுடன் பார்க்க…… அவளுக்கும் தன் தவறு புரியாமல் இல்லையே………. கொஞ்ச நேரம் கழித்து பில் கட்டப் போய் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காதோ என்று நொந்தவள்……… ஆனாலும் விருமாண்டியும் நம்ம அம்மா மாதிரியே………… யார் என்ன செய்தாலும்……. அவங்களை எல்லாம் விட்டு விடுவான்….. நம்மகிட்ட மட்டும் தான் குறை கண்டுபிடிப்பான் என்று நினைத்தபோதே அவளுக்குள் சிரிப்பு வர…………….. அதே முகத்தோடு விஜய்யைப் பார்க்க……….. அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்த விஜய்யோ இதற்கு மேல் இங்கிருந்தால் தன்னைச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து……. அவளிடம்

“பாய்” என்று சொல்லியபடி……….. இல்லையில்லை….. வாய்க்குள்ளேயே முணங்கியவனாய் கார் இருக்கும் திசையை நோக்கி சென்று காரை எடுக்கப் போக…………. தீக்‌ஷா வேகமாய்

”விஜய் அத்தான்” என்று கத்த

“கடவுளே இவ இன்னைக்கு விட மாட்டா போல நம்மள” என்று மனதுக்குள் சொல்லியபடி திரும்பிப் பார்க்க…

”தேங்க்ஸ்”

”எதுக்கு” புரியாமல் அவன் வாய்க் கேட்டாலும்……… இந்த நன்றிக்கான காரணம்…. சாரகேஷ் விசயத்தில் கோபம் எல்லாம் படமாட்டேன் என்று அவன் சொல்லியதால் என்பதை ….. அவன் மனம் உணர்ந்தது…….

தீக்‌ஷாவோ அவன் மனதை அறிந்தவள் போல்

“இந்த தேங்க்ஸ்…… பார்வதி அண்ணனுக்காக இல்லை….. இவ்ளோ நேரம் நான் சொன்னதெல்லாம் …… பொறுமையா கேட்டதுக்கு…. பொறுமையா பேசுனதுக்கு” என்று சிரித்த முகத்தோடு சொல்ல

“விஜய் எஸ்கேப்டா….” என்று தீக்‌ஷா சொல்வது போல விஜய்யும் மனதுக்குள் சொன்னவன்

“சரி நீ உள்ள போ” என்று வேகமாய்க் காரினுள் ஏறி அமர…………. தீக்‌ஷா .மீண்டும் ………….. ” விஜய் அத்தான் பாய் “ என்று கத்திச் சொல்ல……….

காரின் கண்ணாடியின் வழியே அவளைப் பார்த்தபடி கைகளை மட்டும் ஆட்டிய விஜய்……………. மனதில் சந்தோசமாகச் சென்றான்…………… அதே நேரத்தில் அவன் சந்தோசமாய் இருந்தால் அதை அவனிடமிருந்து பறிப்பது போல் ஏதாவது நடக்குமே மனம் சஞ்சலப்பட……… மனதில் சாரகேஷ் வேறு வந்து அலைகழித்தான்……….. சாரகேஷும் ரிப்போர்ட்டை பார்க்கவில்லை………… பார்த்திருந்தால் அவன் கண்டிப்பாக தன்னிடம் வந்து பேசியிருப்பான்…………… என்று யோசனையில் போனவன் மனதில் பெரிதாய் துக்கம் எல்லாம் இல்லை………..

கொடுமையான அந்த 3 மாதங்களுக்குப் பிறகு …… துக்கம் இல்லா விட்டாலும் சந்தோஷம் என்பது இல்லைதான்….. ஆனால் இன்று மிகவும் சந்தோசமாய் இருந்தான்… துக்கம் என்பதை எல்லாம் அவன் கடந்து ……………… இப்போது நடப்பதை எல்லாம் அவன் ஒரு பார்வையாளானாய் பார்க்க ஆரம்பித்து வெகு நாளாகிறது…………… இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று தான் அவன் மனம் எதிர் நோக்கியபடி காத்திருக்க ஆரம்பித்தது…………

அதே நேரம் விஜய்யையும் தீக்‌ஷாவையும் ஒரு சேரப் பார்த்த முருகேசன்………. காத்தமுத்துவிடம்….. டேய் காத்தா விஜய் தம்பிக்கிட்ட தீக்‌ஷா தங்கச்சி…….. இன்னைக்கு சிரிச்சு பேசிச்சுடா…….. முதன் முதலில் இன்னைக்குதான் பார்க்கிறேன்………… மனசெல்லாம் சந்தோசமா இருக்குடா……. என்று போனிலேயே சொல்ல…….. காத்தமுத்துவோ

“அப்டியாடா என்று சந்தோசப்பட்டவன் அடுத்த நொடி……… கண்ணு வச்சுராதடா………….. என்று சொல்ல…

”ஆமாடா அம்மாகிட்ட சொல்லி சுத்திப்போடச் சொல்ல போறேன்……. நம்ம கண்ணு கொல்லிக் கண்ணுடா…………” என்று சந்தோசமாய் பேசியபடி வீட்டிற்குள் போக……..

விஜய்யை வழி அனுப்பிவிட்டு அங்கேயே நின்ற தீக்‌ஷாவுக்கு………. சற்று முன் இருந்த வெறுமை மறைய……. சந்தோசமாய் வீட்டின் உள்ளே போக…………….. தன் பின் வந்த முருகேசனைப் பார்த்த தீக்‌ஷா……..

“இன்னைக்கு என்னைப் பற்றி உளவு சொல்ல உங்களுக்கு வேலையே வைக்கவில்லை நான்……… நானே சொல்லிட்டேன்……… உங்க ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஸ்கிட்ட” என்று இழுத்தவள்….. அவன் முழிப்பதைப் பார்த்து….. அவனைப் பார்த்து சிரித்தபடியே சென்றாள்….

இங்கு தீக்‌ஷா சாரகேசுக்காக விஜய்யிடம் பேசி வைத்திருக்க….. சாரகேஷோ கோபத்தில் வேறொரு முடிவை எடுத்திருந்தான் தன் வீட்டில்……………..

------------------------------------

சாரகேஷ் தேவகியின் முகத்தைப் பார்த்தபடி இருக்க………….. பார்வதி தாய் மற்றும் சகோதரனையே பார்த்தபடி இருந்தாள்……….

தேவகி சற்று நேரம் அமைதியாக இருந்தவர்……….

“இது சரிவருமாப்பா………….. அந்த பொண்ணு முதலில் மாதிரி நம்ம அளவுக்கு இருந்தால் கூட பரவாயில்லை…………… பணக்காரவங்க சகவாசம் வேண்டாம்பா……….. .அதுமட்டும் இல்லாமல் உடம்பும் சரி இல்லைனு சொல்ற……….. நீ தான்பா இந்த வீட்டொட வம்ச விருத்தி…………” .என்று தயங்க…………….

“அம்மா அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லம்மா……..என்னை நம்புங்க……………. ப்ளீஸ்” என்று தாயைத் தேற்றியவன்…………. பார்வதி நீ என்ன சொல்ற…………….. உன் ஃப்ரெண்ட் உனக்கு அண்ணியா வர விருப்பம்தானே….. என்று கேட்க

“அண்ணா கொஞ்சம் யோசிண்ணா………… எனக்கு எங்கேயோ தப்பா நடக்கிற மாதிரி இருக்கு…………….. விஜய் பற்றி தீக்‌ஷா சொன்னாதான்………… ஆனா அவர் நல்லவர் மாதிரிதான் இருக்கு……….. தீக்‌ஷாக்கு கூட அவன் மேல பெருசா வன்மம்லாம் இல்லை……….. அவ விசயத்தில்…….. அவங்க வீட்டு விசயத்தில் அவர் தலையிடும் போது மட்டும் தான் அவ டென்சன் ஆகுறா………” என்று பேச

“அப்போ ஏன் பாரு அவளுக்கு இல்லாத ஒரு நோயை அவளுக்கு இருக்குனு சொல்லி வச்சுருக்கான்…………. அது மட்டும் இல்லை…………… அவளுக்கு சில விசயங்கள் ஞாபகங்களில் இல்லைனு தெரியுது……………. அதுனாலதான் நான் தயங்கினேன்…………. இப்போ என்ன ஆனாலும் சரி…………. என்ன நடந்திருந்தாலும் சரி…………. அவள என்னோடவளா மாத்திட்டு அவனுங்க கிட்ட போராடறேன்……….. அவங்க வீட்டு பொண்ணாமே என்ன திமிரா பேசுறான் அந்த சுரேந்தர்………………. இவனே இப்டி பேசுனா………. அவன் அண்ணன்………….. நாளைக்கு இருக்குடா உங்களுக்கு கச்சேரி………… ஒரு அப்பாவிப் பொண்ணை ஆளாளுக்கு பந்தாடிட்டு இருக்கீங்களா…………. இல்லாத ஒரு நோயை அவளுக்கு இருக்குனு சொல்லி வச்சுருக்கானே அவன் எவ்ளே கேடு கெட்டவனா இருக்க முடியும்…………… சப்போஸ் அந்த மன உளைச்சலில் அந்த பொண்ணு ஏதாவது பண்ணி இருந்திருந்தா இவனுங்க என்ன பண்ணி இருப்பானுங்க…………. நாளைக்கு நான் பொண்ணு கேட்டு போகும் போது அங்க எவனாவது அவளுக்கு பிராப்ளம் அது இதுனு கதை ஓட்டட்டும்…… அதுக்குப் பிறகு நான் யாருனு காட்டுறேன்” என்று ஆவேசமாய் பேசிக் கொண்டிருந்தவனைக் கண்டு பார்வதி………….. சமாதானப்படுத்துவது போல் பேச ஆரம்பித்தாள்.

”அண்ணா நாளைக்கு நல்ல நாள்தானே……….போகலாமா” என்று சம்மதத்தைக் கூற………..அதற்கு மேல் தேவகியும் எதுவும் சொல்ல வில்லை…………….

சாரகேஷுக்கு தான் செய்வது சரியா,தவறா என்றெல்லாம் தெரியவில்லை………. அவள் ஒத்துக் கொள்வாளா என்றெல்லாம் யோசித்து ஒருபுறம் பயம் வந்தாலும்….. இன்று …தான் வாங்கிக் கொடுத்த புடவையை வாங்கிக் கொண்டாள் என்ற விசயம் ஓரளவு நம்பிக்கையைக் கொடுக்க………….. அதே நேரம் அகல்யா ஞாபகமும் வர……….. கொஞ்சம் குழப்பத்துடன் தான் தூங்கப் போனான்………….. தூக்கமா வந்திருக்கும் அவனுக்கு………….. படுக்கையில் படுத்தான் அவன்……….அவ்வளவுதான்………. கண்கள் மூடிய நிலையிலே சிந்தனையில் உழன்றான்

அவன் அப்படி இருக்க…………… அவன் தங்கையோ தூக்கம் வராமல் புரண்டாள்……… சுரேந்தர் தன்னைத் திரும்பிப் பார்த்துச் சென்றது வேறு அவள் தூக்கத்தைக் கலைக்க……… கொஞ்சம் யோசித்தவள்……………… அதெல்லாம் பெரிய இடத்துச் சம்பந்தம்……….. தீக்‌ஷா அவர்கள் சொந்தம்………… அவளையே எடுக்கத் தயக்கம் காட்டியவர்கள்…………. நம்மையெல்லாம்………. நினைக்கவே கலக்கம் வர………… அதுமட்டுமில்லாமல்……… தீக்‌ஷா அவள் அண்ணனை ஒருவேளைத் திருமணம் செய்தால்………… அவனோடான அவள் உறவுமுறையே தலைகீழாக ஆகிவிடும்……….. அப்போதுதான் முளைவிட ஆரம்பித்த தன் எண்ணங்களை அது தோன்றிய கணமே அழிக்க……………. அவ்வளவாய் வலிக்கவில்லைதான் அவளுக்கு……………. நாளைக்கு என்ன நடக்குமோ…………… தீக்‌ஷா என்ன சொல்வாளோ என்று வேறு இருக்க………. ஆக மொத்தம் அவளும் தூங்க வில்லை

------------------------

விஜய் வீடு வந்து சேர்ந்தபோது வீட்டில் அனைவரும் உறங்கியிருக்க………….. தன் அறைக்குள் கூட நுழையாமல்…. சுரேந்தரிடம் பேச வேண்டும்……………… சாரகேஷ் விசயத்தில் அவனைத் தலையிட வேண்டாம் என்று சொல்லி வைக்க வேண்டும் என்று அவனது அறைக்குச் செல்ல………………..அங்கு அவன் இல்லை…………………

அவனது போனை அடிக்க……… அது அவனது அறையிலேயே இருக்க……………. மாடிக்குச் சென்றவன்………… அங்கு சுரேந்தர் சிகரெட்டின் துணையுடன் நின்றான்……….

“இவனுக்கு என்ன ஆச்சு…….. டென்சன் ஆக வேண்டியது நான்………….. நானே கூலா இருக்கேன்…………… இவனுக்கு என்ன பிரச்சனை…..” என்று அவன் அருகே போனவன்………. சுரேந்தர் என்று அழைக்க……..

விஜய்யைப் பார்த்தவன்………… ஒன்றும் சொல்லாமல் திரும்பினான்

“என்னடா உனக்கு பிரச்சனை………… சாரகேஷ் கிட்ட ஏன் வம்பு பண்ணுன………….. “ என்று அவன் தோளைத் திருப்பிக் கேட்க

“ஒண்ணுமில்லைனா” விடுங்க என்றவனிடம்

“அவன் புடவை எடுத்துக் கொடுத்ததுனால துரைக்கு தாங்க முடியலையாக்கும்……….. என்று சிரித்தவன்……………… அவன் அவ 12த் படிக்கும் போதே லவ் லெட்டர் கொடுத்திருக்காண்டா…….. இப்போ அவன் வந்து நிக்கிறானே அது எப்படி இருக்கும் எனக்கு……….. ஆனாலும் நான் சிரிச்சுட்டு இருக்கேன் சுரேந்தர்…………. ஏன்னா ஒண்ணும் ஆகாதுனு என் மனசு சொல்லுது………….. என்றவன்……… இதுமட்டும் தான் உன் பிரச்ச்னை என்றால்…………… அதைப் பற்றி கவலைப்படாதே…………இதுக்கும் மேல நான் அனுபவிச்சுட்டே வந்துட்டேன்……… இதை சமாளிக்கிறது பெரிய பிரச்சனை இல்லை,……………. சாரகேஷ் புரிஞ்சுப்பான்…………. சாருமதி வந்த அன்று நானும் குழம்பித்தான் போய் இருந்தேன்….. சாரகேஷ் மறுபடியும் இவ முன்னால் காதல்னு ஏதாவது சொல்லித் தொலைக்கப்போறானோனு… ஆனா அவன் ரொம்ப டீசண்ட்டான பையண்டா….. அசோக்கை வச்சு அவன விசாரிக்கக் கூட சொன்னேன்….. அதுக்கப்புறம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்..... எல்லா விதத்திலும் யோசிப்பான் சாரகேஷும்….” என்று சொன்னவன்… நிறுத்தி….. பார்வதியும் நல்ல பொண்ணுடா…..

என்று சொன்னவன் ……………. அவனை கண்களோடு நோக்கி….

“காதல்ன்றது உன்னைக் கேக்காம உள்ள புகுந்திரும்………. அதை யார் தடுத்தாலும் உனக்கு வரனும்னா வந்துரும்…………… காதலால வாழ்ந்தவனும் நான்…………… செத்துட்டு இருக்கவனும் நான்…………… நல்லா யோசிச்சு…………முடிவுக்கு வா” என்று சென்ற அண்ணனிடம்

“அண்ணா” என்று அழைக்க……….. திரும்பிய விஜய் அவன் கையில் இருந்த சிகெரெட்டைப் பார்த்தபடி …

“இந்த தம் அடிக்கிறதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ள நிறுத்திக்கோ………… பார்வதிக்கு பிடிக்காதுனு நினைக்கிறேன்……………….. என்று கேலியாய்ச் சொல்லி சகோதரனைப் பார்க்க……. சுரேந்தர் சட்டென்று கீழே போட்டான்…. கையில் வைத்திருந்த சிகரெட்டை………

“ஹ்ம்ம்ம்ம்ம். கன்ஃபார்ம்தாண்டா…………. என்ஜாய்……….”. என்று அவனருகே மீண்டும் சென்றவன்…………… அவனிடமிருந்த சிகரெட் பாக்கெட்டை வாங்கியவன்………..

“இதைக் கூட நம்ம சொந்தமில்லாம பண்ணிருவாளுங்கடா………” என்று அதைத் தூக்கி எறிந்தவன்…. நானும் என் வேதனையைக் குறைக்க…………. தம்ம எடுப்பேண்டா………….. முடியலடா…………… தம் அடிச்சதுனால அவ பைக்கைக் கூட தொட விடலைடா…………….. அப்ப விட்டது நான்…. பார்வதி ஜாயின் பண்ணின அன்று டென்சனில் 3 பாக்கெட் எடுத்து எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணினதுதான் மிச்சம்” என்று கலங்கிய கண்களாய் எங்கோ பார்த்து சொன்னவனை

அண்ணா சாரி அண்ணா………. என்று அவனைப் பிடித்து தளுதளுத்தவனிடம்……………

“அவ ஃப்ரெண்ட் அவ மாதிரிதானே இருப்பா…………… சோ குறைச்சுக்கோ………..அதை விட விட்ரு” என்ற போதே அவன் மொபைல் ஒலிக்க…………. யுகிதான் என்று போனை அட்டெண்ட் செய்ய……..

”சொல்லுடா………..”

சரி……….. என்று சொல்லியபடி………. சுரேந்தர் இங்கதான் இருக்கான்………… போனை ரூம்ல விட்டுட்டு வந்துட்டான்……………. என்று சுரேந்தரிடம் நீட்டினான்……….

சுரேந்தர் பேச ஆரம்பித்தவன்…………. மாடி அறையினுள் விஜய் நுழையும் வரை சாதாரணமாகப் பேசியவன்…….. அவன் உள்ளே நுழைந்ததும்…. கடந்த ஒரு வார கதையை யுகியிடம் ஒன்று விடாமல் சொல்லி முடிக்க……….

யுகேந்தர் அங்கு யோசிக்க ஆரம்பித்து இருந்தான்……… தீக்‌ஷா சாரகேஷைப் பற்றி அவனிடம் சொல்லி இருக்கிறாள்………. என்ன செய்வது என்று யோசித்தவன்…….. தன் பயணத்தை சில மணி நேரம் முன்னதாகவே மாற்றியிருந்தான்

---------

சுரேந்தர் தன் அண்ணன் இனி கீழே வர மாட்டான் என்பதை உணர்ந்து… கீழே இறங்கிப் போக…. அவன் உள்ளத்திலோ….. பார்வதியின் நினைவுகள் வர…. எத்தனை தடவை அவளப் பார்த்திருப்போம்…….. அதுக்குள்ள இப்டி ஆயிட்டேன் நான்………… பார்வதி என்னை தேவதாஸா மாத்தாம இருந்தா சரி…….. ஒரு வீட்டுக்கு ஒரு தேவதாஸே தாங்க முடியல…….. கொஞ்சம் யோசிடா சுரேந்தர் என்று யோசனையில் உழள………..

மாடியில் இருந்த அறையில் உள்ள கட்டிலில் படுத்திருந்த விஜய்யோ……. தனக்குள்ளே ………… ”இங்கதான வச்சு என்னைக் கவுத்தடி………… வாயாடி…..”. என்றபடி அன்றைய ஞாபகத்தில் மூழ்க………….. அங்கேயே படுத்தும் விட்டான்…

தீக்‌ஷாவோ அவள் அன்னையின் அருகில்……….எப்போதோ உறங்கியிருந்தாள்…………….. அவள் போட்ட மாத்திரைகளின் விளைவால்………….

நாயகி மட்டும் கண்ணுறங்க…. அவளைச் சுற்றி இருந்த அனைவருக்கும் உறங்கா இரவாக அமைந்தது…. அந்த இரவு….

1,602 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

1 Comment


போற போக்கைப் பார்த்தால் லவ் க்கு மேல் வேறு ஏதோ நடந்திருக்கும் போல... அது கல்யாணம் ஆகக் கூட இருக்கலாம்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page