கண்மணி... என் கண்ணின் மணி-12

Updated: Sep 1

அத்தியாயம் 12


சில நொடிகள் தான்… மகிளாவின் அருகாமையில் ரிஷி தடுமாறிய நிலை… ஆனால்… சட்டென்று சுதாரித்து மீண்டவனாக…

வேகமாக பாக்கெட்டில் இருந்த சிக்லெட்ஸை கையில் எடுத்து மகிளாவின் வாயில் போட…. ரிஷியின் அருகாமை தந்த மயக்கத்தில் கண்மூடி இருந்த மகி பட்டென விழி திறக்க…

திரு திரு வென்று விழித்த அத்தை மகளைப் பார்த்து…. குறும்போடு கண் சிமிட்டியவன்… அவளைப் பார்த்து அடுத்து கிண்டலாக ஏதோ பேசப் போக.. வந்த வார்த்தைகளை சட்டென்று நிறுத்தியும் இருந்தான்….

காரணம்... ரிஷியின் அன்னை லட்சுமி.. திறந்திருந்த கதவின் அருகே…

ரிஷியின் முகம் பேயறைந்தார் போல் மாறியிருக்க...

மகியோ பயந்த பார்வை பார்த்தபடி எழுந்து நின்றிருந்தாள் ... தன் அத்தையைப் பார்த்து…

“அ…த்…தை” என்று மகிளா வாய்க்குள்ளாகச் சொல்லியபடியே தலை குனிய….

கோப முகத்தோடு இருந்த லட்சுமி..... இருவரையும் முறைத்தபடியே... வேகமாக ரிஷியின் அருகே போனவர்...

“இது உன்னோட தப்பு இல்லை.... என் தப்பு.... இவள நான் இங்க நான் கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது.... என் பையன்... இப்படிலாம் பண்ண மாட்டானு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு...” என்ற போதே.... ரிஷி...

“அம்மா... ரிலாக்ஸ்மா... “ என்று மட்டும் சொல்லி நிறுத்தியவனுக்கு… ஏனோ தாயின் கோபம் புரியவில்லை…

”ஏனென்றால் தாங்கள் ஒன்றும் தவறாக நடக்க வில்லையே… கதவு கூட திறந்துதானே இருக்கின்றது… பிறகு எதற்கு அன்னைக்கு கோபம்…”

ஆனால் லட்சுமிக்கோ நினைக்க நினைக்க கோபம் கோபம் கோபம் மட்டுமே வந்தது...

அந்த கோபம் என்பது தன் மகனை நினைத்து மட்டுமல்ல… தன்னை நினைத்தும் தான்…

அதே நேரம் செய்தது தவறு என்று கூட தன் மகனுக்கு தெரியவில்லையோ என்று.... மனம் நொந்தவராக நின்றிருந்தார்… அந்த தாய்…

தாயின் பரிதவிப்பான அந்த முகத்தைப் பார்த்த ரிஷிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை… அடுத்த நொடியே... ரிஷி அவரிடம் மன்னிப்பைக் கேட்க... ஏதோ ஒரு வகையில் நிம்மதி ஆன லட்சுமி... தன் மகனிடன் சொல்லும் விதத்தில் சொன்னால் புரிந்து கொள்வான் என்று நம்பிக்கை வந்திருக்க

மகன் மற்றும் வருங்கால மருமகள்?? இருவரையும் அருகருகே அமர வைத்து... அறிவுரைகளை கூற ஆரம்பிக்க.. ரிஷிக்கு அந்த அறிவுரைகள் காதில் ஏறுவதற்கு பதில்.. அவன் மனதில் இதுதான் தோன்றியது...

“இதற்கு மகியைத் தனியே கூப்பிடாமாலே இருந்திருக்கலாம்...” மனதுக்குள் சொன்னபடியே… மகியை ஓரக்கண்ணில் பார்க்க…

இலேசாக மகியின் கண்கள் சிவந்திருக்க…. இப்போதோ அப்போதோ என அவள் கண்கள் கண்ணீரை உகுக்க காத்திருக்க… அவ்வளவுதான் அதைப் பார்த்த ரிஷிக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை…

“அம்மா…. போதும்மா…. மகியைப் பாருங்க… அழற நிலைமைல இருக்கா… இப்போ என்ன தப்பு செய்தோம்னு… இவ்வளவு அட்வைஸ்…. நான் தான் அவளக் கூப்பிட்டேன்…. என் மேலதான் தப்பு போதுமா….. இனிமேல் இது மாதிரி எதுவும் நடக்காமல் பார்த்துக்கிறேன்…. “ என்றவன் மகியிடம் திரும்பி…. அவளுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பிக்க….


மகனின் நடவடிக்கைகளில்… லட்சுமிக்கு முதன் முறை தன் மகனை தான் வளர்த்த முறை சரியில்லையோ என அச்சம் வந்திருந்தது…… தான் இவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்ளவில்லையே... இரண்டு தங்கைகளோடு பிறந்தவன் போலவா இருக்கிறான்.. ஏதோ விளையாட்டுத்தனமாய் இருக்கிறான் போகப் போக புரிந்து கொள்வான் என்றுதான் இத்தனை காலமாக நினைத்திருந்தார்….

இப்போது…. மனம் கவலையில் வாட ஆரம்பிக்க… வேகமாய் எழுந்தார் லட்சுமி…

“மகி வா போகலாம்” என்று மருமகளை கைப் பிடித்து அழைக்க…

ரிஷியோ…

“ப்ச்ச்… அம்மா இவ்வளவு திட்டிட்டு…. இப்போ வான்னா என்ன அர்த்தம்.. நீங்க போங்க…. 5 மினிட்ஸ்ல வருவா” என்றவனை கோபத்தில் லட்சுமி முறைக்க…

“உங்க மருமகளை நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்,…. தைரியமா போங்க…” என்று சாதரணமாகச் சொல்ல…. லட்சுமி அதிர்ந்தார்…..

“மகி” என்று லட்சுமி அழுத்தமாய் அழைக்க… மகியோ அதை விட…. ரிஷியின் கைப்பிடியை அவள் விடவே இல்லை…..

கதவை நன்றாகத் திறந்து வைத்தபடி… அவர்களை தன் கண் பார்வையில் வைத்தபடி…. ஹாலில் அமர்ந்தவருக்கு….. மனம் கனமாகிப் போய் தான் இருந்த்து….

தன் அன்னை அங்கிருந்து சென்றவுடன்…. சற்று நேரம் அமைதியாக இருந்தான் ரிஷி…

“இப்போ என்ன தப்பு செஞ்சோம்னு.. அம்மா இந்த சீன் போடறாங்க...” என்று தோள்களை குலுக்கியவன்.... மகியை தான் தன் அறைக்கு அழைத்த காரணம் ஞாபகம் வர.... மகியைப் பார்த்தான்..

சற்று முன் கலங்ககிய கண்களுடன் இருந்தவளா எனும் அளவுக்கு.. இப்போது இயல்பாக இருந்தாள் மகி... எதுவாக இருந்தாலும்… தன் ரிஷி மாமா பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் வந்த இயல்பு அது…

“நீ கவலைப் படாத மாமா.... அவங்களாம் வயசானவங்க தானே... நம்மள புரிஞ்சுக்க மாட்டாங்க...” என்று அவன் தோள் மீது சாயப் போனவளை.... தடுத்தி நிறுத்திய ரிஷி...

“அம்மா” என்று வெளியே கை நீட்டி சைகை காட்டியபடியே...

“மகி… முதல்ல கண்ணைத் துடை” என்று சொன்னவன்… அவள் துடைக்கும் முன்பே… அவள் கண்ணீரைத் தன் கரங்களால் துடைத்தபடியே…

”அம்மா சொன்னதெல்லாம் நம்ம நன்மைக்குத்தான்… நான் என்னலாம் சொல்ல உன்னைக் கூப்பிட்டேனோ அதைத்தான் அவங்களும் சொன்னாங்கடா… எனக்கு இப்போ புரிய ஆரம்பிச்சுருக்கு அதுனால கோபம் வரலை… நீயும் போகப் போக புரிஞ்சுக்குவ… இப்போதைக்கு உன் கவனமெல்லாம் அடுத்து என்ன படிக்கலாம்… அதுலதான் இருக்கனும்… ரிதன்யா கிட்ட அட்வைஸ் கேளு… அவ IITக்கு ப்ரிபேர் பண்றவ… அவ அளவுக்கு உன்னால முடியலைனாலும்… இப்போ அவ எந்த காலேஜ் செலெக்ட் பண்ணப் போறா… உனக்கு எது இண்ட்ரெஸ்ட்… ” என்று பேச ஆரம்பிக்க…

மகிளா… சட்டென்று அவன் வாயைத் தன் கரங்களால் பொத்தியவளாக….

“இதுக்கு அத்தையே மேல் மாமா” என்று வெளியேற… யோசனையுடம் அவள் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தவன்… சிறிது நேரம் கழித்து வெளியே வர… லட்சுமி…. அவன் அறையையே வெறித்தபடி அமர்ந்து கொண்டிருந்தார்

அவனது அம்மா இன்னும் கோபத்தில் இருப்பதை கண்ட ரிஷிக்கு… ஏனோ சிறு குழந்தை பிடிவாதத்துடன் அமர்ந்திருப்பது போலத் தோன்ற சிரிப்புதான் வந்தது அவனுக்கு....

தன் அன்னையைப் பார்த்தபடியே வந்தவனாக…. அவரது காலடியில் அமர்ந்தான்...

லட்சுமியோ அவனை வெற்றுப் பார்வை பார்க்க…

“அம்மா.... எனக்கு மகி பிடிக்கும்மா..... ரொம்ப பிடிக்கும்... அவளை இப்படி திட்டாதீங்க... அப்புறம்.. நான் எப்போதுமே உங்க பையன்.. உங்களுக்கு ஒரு அவமானம் வருகிற மாதிரி ஒரு போதும் நடக்கவே மாட்டேன்.... உங்க பையன் மேல நம்பிக்கை இல்லையா” என்றபடி அப்பாவியாக முகத்தை வைத்து பாவம் போல் பார்க்க

சிரித்தார் தான் மகனின் பாவனையில்... அனால் அந்த சிரிப்பு அவர் கண்களுக்கு எட்டவே இல்லை என்பதைத்தான் ரிஷி அறியமுடியாதவனாக இருந்தான்....

தன் மகன் ஜாலியாக பேசுவான்.. தானும் சிரிப்பான்... அனைவரையும் சிரிக்க வைப்பான்.... கள்ளம் கபடு இல்லாதவன்.... உதவி என்றால் ஒடோடி செய்பவன்.... அடுத்தவர் மனம் நோக வைக்காதவன் என ரிஷியைப் பற்றி அன்னையாக் இத்தனை நாள் பெருமிதம் கொண்டிருந்தவரின் மனதில் இன்று சலனம்.... அவன் மகியைக் காதலிக்கிறேன் என்று சொன்னபோது கூட இல்லாத கவலை இப்போது வந்திருக்க.... அவரால் மனம் நிறைவோடு சிரிக்க முடியவில்லை....

இதில் கணவர் சொன்ன விசயம் வேறு இப்போது ஞாபத்திற்கு வந்து மனதை உறுத்தியது.. அது என்னவென்றால்... ரிஷி... 2 மாதத்திற்கு முன் ஒரே நாளில் இலட்ச ரூபாய்க்கு மேல் எடுத்திருக்கிறான் என்று…

ஆனால் தனசேகரன் லட்சுமியிடம்

“நீயாகக் கேட்காதே.. அவனாகச் சொல்லும் வரை அதைப் பற்றி பேசாதே...” என்று வேறு கட்டளை பிறப்பித்து இருக்க... லட்சுமிக்கு இப்போது அதை நினைத்து வேறு கவலை வந்து விட்டது.. காதல் என்பதோடு மட்டும் நில்லாமல் குடி சிகரெட் என்று பழகி இருப்பானோ என்று....

ஆனால் தாயாக அவர் மனம் தன் மகன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான் என்று புதல்வனுக்கு சார்பாக வாதிட... மகன் மேல் இருந்த நம்பிக்கையில் தன் கவலைகளை பின் தள்ளினார் லட்சுமி...

----------

நடராஜ் அம்மன் கோவில் இருக்கும் தெருவில் தனக்குத் தெரிந்த கடை ஒன்றில் அமர்ந்திருந்தபடி... தன் மகளுக்காகக் காத்திருந்தார்... கண்டிப்பாக கண்மணிக்கு பிடிக்காது என்று தெரிந்திருந்தும் இன்று அவரால் தன் மகளைத் தனியாக விட முடியவில்லை.... கண்மணி என்ன கோபப்பட்டாலும் பரவாயில்லை என வந்து விட்டார்...

கோவிலுக்குச் சென்று கண்மணி பொங்கல் வைக்கும் இடத்தின் அருகே சிறிது நேரம் நின்றிருந்தவர்... அந்த இடத்தில் பெண்கள் அதிகம் இருந்ததால்... அவருக்கு அசௌகரியமாக இருக்க... கடைத் தெருவுக்கு மீண்டும் வந்து உட்கார்ந்திருந்தபடி தன் நேரத்தைக் கடத்திக் கொண்டு இருந்தார்...

கண்மணியோ நடராஜன் வந்த போதும் லட்சியம் செய்யவில்லை..... அவர் சிறிது நேரம் தன் அருகே நின்றிருந்ததையும் கண்டு கொள்ள வில்லை... அவர் போன போதும் தடுத்து நிறுத்தவில்லை....

மகளின் நினைவுகளோடு நடராஜ் அமர்ந்திருக்க… அப்போது தான் உட்கார்ந்திருந்த கடையின் அருகே.... கார் வந்து நிற்க... முதலில் பெரிதாக கவனத்தை அதில் செலுத்தாதவர்.... அதில் இருந்து ரிஷி இறங்கியதும்... அவரையுமறியமால் அவரது கவனம் முற்றிலும் அவனிடம் போக... தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே நோட்டம் விட ஆரம்பித்தார்...

நடுத்தர வயது பெண் மற்றும் தன் மகளின் வயதை ஒட்டிய இரு பெண்கள்... மற்றுமொரு சிறு பெண்... என ரிஷியோடு வந்திறங்கிய மற்றவர்களையும் அவரால் பார்க்க முடிந்தது...

சிறிது நேரத்திலேயே... ரிஷி மற்றும் மற்றும் அவனோடு ஒரு வந்த இளம் பெண் காரின் அருகிலேயே நிற்க... மற்றவர்கள் கோவிலுக்குள் செல்ல... ரிஷியோடு நிற்கும் அந்தப் பெண் யாராக இருக்கும் என்று நடராஜுக்குள் ஏனோ ஒரு கேள்வி தோன்றியது.... ஆனால் அடுத்த நொடியிலேயே தெரிந்த பையன்... நமக்கு உதவியவன்... என்று அதிகமாய் அவனைப் பற்றி தெரிந்து கொள்ள நினைக்கிறோமோ... என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர்... இது தனக்குத் தேவையா என்பது போல... தன் கவனத்தை வேறு திசையில் மாற்றினார் நடராஜன்..

---

”ஹப்பா... அத்தை கிட்ட இருந்தும் ரிது, ரித்திக்கிட்ட இருந்து, எஸ்கேப் ஆகுறதுக்குள்ள.... போதும் போதும்னு ஆகுதுப்பா... ஊப்” என்று ரிஷியை பார்த்து சொல்ல.... காரின் மீது சாய்ந்து நின்றிருந்தவன்.... மகிளாவை முறைத்துப் பார்த்தான்

அவனின் முறைப்பை எல்லாம் மகி அலட்சியம் செய்தவளாக

“எங்க போனாலும்... தனியாவே விட மாட்டேங்கிறாங்க... கோயில் உள்ளே நீ வர மாட்டேன்னு சொன்னவுடனே நானும் அதை நமக்கு சாதகமாக மாற்றிட்டேன்... சோ கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நமக்கு கிடச்சிருக்கு.... நம்மை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க மாமா” என்று பெரிய சாதனையை நிகழ்த்தியவள் போல் சொன்னாள் மகி...

“நீதான் மகி உன்னை மெச்சிக்கனும்... நம்மைச் சுற்றிப் பாரு... கிட்டத்தட்ட 500 க்கும் மேல மக்கள் இருக்காங்க.... இது தனியான இடமா... அதிலும் கோவில் இருக்கும் இடம்...” நக்கலாகச் சொன்ன ரிஷியைப் பார்த்து முறைத்தாள் மகி...

அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டது சிரிப்பை வரவழைக்க…

”சரி… சரி… எனக்காக உண்ணாவிரதம்லாம் இருந்து வந்திருக்கிற என் அத்தை மகளே… இப்போ என்ன… உங்க கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணனும் அவ்வளவுதானே…. இந்த மாமா கைபிடிச்சுக்கிட்டே வா… இந்த திருவிழா கூட்டத்தில உனக்கு என்னென்ன வேணும்… சொல்லு… ” என்று பேசியபடியே தன் கைகளை அவளை நோக்கி நீட்டப் போக

அப்போது… அங்கிருந்த காவல் துறை அதிகாரி….

“தம்பி… காரை எடுப்பா… இது விஐபி பார்க்கிங்க் ஏரியா… கார் வெயிட்டிங்” என்றவர்

“நாங்க பார்கிங்க் அலார்ட் பண்ணிய இடம் கொஞ்சம் தள்ளி இருக்கு… அங்க நிறுத்திட்டு டோக்கன் வாங்கிகங்க.” என்றபடியே.... காரை எடுக்கச் சொல்ல... ரிஷி வேறு வழி இன்றி.... காரை எடுக்கும் நிலைமைக்கு ஆளானான்…

ரிஷி காரை எடுக்க…

“சார்… இங்க நிறுத்துங்க” என்று ரிஷியிடம் அதிகாரமாகப் பேசிய காவலர், அருகில் இருந்த கார் ஓட்டுநரிடம் பவ்யமாகச் சொல்ல

வெயிட்டிங்கில் நின்ற கார் இப்போது ரிஷி கார் நிறுத்தியிருந்த இடத்தில் நிறுத்தப்பட… அந்தக் காரின் பின் சீட்டில் இருந்து இறங்கிய அர்ஜூன்… டிரைவரிடம்…

“கீயைக் கொடுங்க… நீங்க தாத்தா வந்த காரை எடுத்துட்டு வீட்டுக்குப் போங்க…. நான் தாத்தா கூட இந்த கார்ல வருகிறேன்” என்று கார்ச் சாவியை வாங்கிக் கொண்டவனாக… கோவிலை நோக்கிச் சென்றவனுக்கு….

தன்னவள் இங்கு வந்திருக்கின்றாள் என்று தெரியும்…. தன் கண்பார்வையில் சிக்குவாளா… என்று அந்த சுற்றுப்புறத்தை ஓர் ஆர்வத்துடன் பார்வையிட்டுக் கொண்டேதான் கோவில் பிராகாரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அர்ஜூன்…

----

மகிளாதான் எரிச்சலின் உச்சத்திலிருந்தாள்…. அவளுக்கு யாரின் மேல் கோபம் கொள்வது என்றே தெரியவில்லை… தங்கள் தனிமையைக் கெடுக்க வந்த அந்த போலிஸ் அதிகாரியின் மேலா…. இல்லை… இந்த நடராஜன் மேலா… இல்லை இவரைப் பார்த்தவுடன் பல்லை இளித்துக் கொண்டு இவரின் அருகில் இறக்கி விட்டுவிட்டுப் போன தன் ரிஷி மாமா மேலா… இல்லை ரிஷியோடு தனியாக இருக்க வேண்டுமென்று… தனக்கு மாதவிலக்கு என்று கோவிலுக்கு கிளம்பி நின்ற தருவாயில் பொய் சொன்ன தன் மேலா… ஆக மொத்தம் அவள் முகம் இப்போது கோபத்தில் சிவந்திருந்தது…

மகிளாவின் நிலை இப்படி இருக்க… நடராஜனோ வேறு ஒரு மாதிரியான எரிச்சலில் இருந்தார்… அது பெண்ணைப் பெற்றவர்களுக்கே உள்ள மனநிலை… காரணம் ரிஷி அவளை அறிமுகப் படுத்திய விதம்…

மகிளாவை அணைத்தபடி…. தன் அத்தை மகள் என்றும் கூடுதல் தகவலாக தன் வருங்கால மனைவி என்றும் அவன் கூறிய விதமே அவருக்கு ஒரு மாதிரி பிடிக்கவில்லை… அவரும் காதல் திருமணம் செய்தவர்தான்… பெண்ணைப் பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்தவர்தான்…

ஒருவேளை அவருக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற தந்தையின் மனநிலையா இல்லை…. இந்த வயதில் இவர்களுக்கு காதல் என்றால் என்ன என்று தெரியுமா… இல்லை… இப்படி ஒரு இந்தக் காதல் அவசியமா…. எதுவோ ரிஷியைப் பற்றி இதுநாள் வரை அவர் எண்ணியிருந்ததை விட ஒரு படி கீழிறக்கத்தான் செய்த்து…

இருந்தும் தன் முன் நின்ற மகிளாவிடம் பேச்சுக் கொடுத்தபடிதான் இருந்தார்…

மகிளாவோ இந்த நடராஜிடம் பேசிக் கொண்டிருப்பதற்கு பதில் கோவிலுக்குள் சென்றிருந்தால் கூட சாமி தரிசனமே கிடைத்திருக்கும் என்று மனதுக்குள் நொந்து கொண்டிருந்தாள் என்பது வேறு கதை….

“வரட்டும் இந்த ரிஷி மாமா”… என்று மனதுக்குள் வசைபாடியபடி ரிஷியின் வரவுக்காக காத்திருந்தாள்…

----

வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தன் காரை உடனடியாக நிறுத்திவிட்டு வெளியே வர முடியவில்லை ரிஷிக்கு… நல்ல வேளை மகிளாவை தன்னோடு அழைத்து வராமல் நடராஜிடம் விட்டு வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று என நிம்மதியாக மட்டுமே நினைத்தான்

காவலர் சொன்னவுடம் காரை எடுத்தான் தான் ரிஷி…. ஆனால் கார் நிறுத்தும் இந்த இடம் சற்று தூரத்தில் இருக்க… காரை நிறுத்தி விட்டு நடந்து மீண்டும் அங்குதான் வர வேண்டும்… அது மட்டுமல்லாமல் கூட்டமாக வேறு இருக்க… மகியை அவ்வளவு தூரம் நடக்க வைக்க வேண்டாமென்று… மகிளாவை பாதுகாப்பான இடத்தில் நிற்க வைக்கவேண்டுமென்று… முடிவு செய்தவன்.. சுற்றிலும் பார்வையைச் சுழள விட... அருகில் இருந்த கடையில் அமர்ந்திருந்த நடராஜனைப் பார்த்த ரிஷி... எதைப் பற்றியும் யோசிக்கவில்லை…

உடனடியாக… நடராஜனிடம் மகிளாவை அறிமுகம் செய்து விட்டு... அவரிடம் மகிளாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு... காரை நிறுத்த வந்து விட்டான்..

திருவிழாவுக்கான தற்காலிக ஏற்பாடு என்பதால் சிறிது சிக்கல் இருக்க.. ஒருவழியாக காரை நிறுத்திவிட்டு வெளியே நடைபாதைக்கும் வந்திருந்தான் ரிஷி அப்போது…

“என்ன இந்தப் பக்கம்…. “ என்று தன் முன் வந்து நின்ற கண்மணியை ஆச்சரியமாகப் பார்த்தான் ரிஷி…

அவனின் ஆச்சரியப் பார்வையைக் கண்டுகொண்ட கண்மணி…. ’என்ன’ என்று கேட்க

“இல்ல மணி அக்காவா இல்லை வேறு யாருமானு பார்த்தேன்….“ என்று அவள் அணிந்திருந்த தாவணி உடையைப் பார்த்தபடியே சொன்னவன்…

”தூரமா வரும் போதே உன்னைப் பார்த்தேன் கண்மணி…” என்றபடியே

“முதல்ல கர்ப்பகிரகத்தில இருக்கிற சிலை…. வெளிய வந்துருச்சோன்னு…” என்ற போதே கண்மணி முறைக்க ஆரம்பிக்க… அதை எல்லாம் கவனிக்காமல்

“அடுத்து… என்கிட்ட பக்கத்தில வந்து பேசினவுடனே… இந்த ட்ரெஸ்ல யாருடா ஒரு ஃபிகர் நம்மள கூப்பிடுதுனு பார்த்தேன்…. ” என்று தயக்கம் என்பது சிறிதும் இன்றி கூறியவன்…. சட்டென்று கண்மணியின் முக மாறுதலைக் கவனித்துவிட...

“ஆனால் பக்கத்தில் பார்த்தால் நம்ம மணி... கண்மணி... அதுக்கப்புறம்.... ஃபிகர்னு பார்த்தால் நான் உயிரோட இந்த ஏரியாவ விட்டு போக முடியுமா என்ன” பயந்தவன் போல் ரிஷி சொல்ல

அவன் பாவனையில் கண்மணிக்கு சிரிப்புதான் வந்தது… இருந்து சிரித்தால் அவள் கண்மணி ஆவாளா… சிரிப்பை மறைத்து பொய்க் கோபம் காட்டியவளாக

“இந்த பயப்படுகிற மாதிரி நடிக்கிறதுக்கு முன்னால உண்மைய சொன்னீங்கள்ள அது பெட்டரா இருக்கு” என்றபடி தன் கையில் இருந்த விபூதி பிரசாதத்தை நீட்ட…

அதை வாங்க முதலில் தயங்கிய ரிஷி… பின்... வாங்கி தன் நெற்றியில் இட்டுக் கொள்ளாமல் தன் கைகளில் தேய்த்து கீழே விட… கண்மணியின் கண்கள் அவனைக் குற்றம் சாட்டும் பாணியில் பார்க்க…

“சாரி…. எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை…” என்று கோவில் இருந்த திசையைப் பார்த்து கூறியவன்…

“அப்போ ஏன் கையில் வாங்கினேனு பார்க்கிறியா… பிடிக்காத பொருளை பிடிச்சவங்க கையால கொடுக்கும் போது மறுக்க முடியுமா…” என்று சிரித்தவன்…

”அது என்ன பொங்கலா… அதை வேண்டும்னா கொடு” என்று அவள் வைத்திருந்த தாம்பாளத்தை நோக்கி கை நீட்ட…

“சாமிக்கு படைத்தது…. அப்பாக்கு ஃபர்ஸ்ட் கொடுக்கனும்னு நெனச்சேன்… பரவாயில்லை… “ என்றபடியே அவனுக்கு கொடுக்க… இதை மறுக்காமல் வாயில் போட்டுக் கொண்டான் ரிஷி…

“சரி நான் இந்த வழியில் போகிறேன்… நீங்க கோவிலுக்கு போறதுன்னா இந்த வழில போங்க…” என்று எதிர் புறம் கை காட்டியபடி அவனிடமிருந்து விடைபெறும் நோக்கத்தில் கேட்க…

ரிஷியோ கண்மணியிடம் அவளது தந்தை அங்கு காத்திருப்பதாகவும்… மகிளாவும் அவருடன் இருப்பதாகக் கூறி அவளோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்….


கண்மணி இரண்டு கைகளிலும் அத்தனைப் பொருட்களை வைத்திருந்த போதிலும்… ரிஷிக்கு பெரிதாகப் பட வில்லை… உதவும் பொருட்டு கூட ஏனோ அவளிடமிருந்து அவற்றை வாங்கி அவள் சுமையைக் குறைக்க அவன் நினைக்கவில்லை… ஏனோ அவனுக்கு அது தோணவில்லை என்பதே உண்மை…

கண்மணிக்கோ நடந்து வரும்போதே அணிந்திருந்த பாவாடை-தாவணியினாலா…. இல்லை அளவுக்கு மீறி கைகள் சுமந்திருந்த நிறைய பொருட்களினாலோ…. இல்லை காலையில் இருந்து இன்னும் சாப்பிடாமல் இருந்ததாலோ என்னவோ…. தடுமாறி கீழே விழப் போக…

இருந்தும் ரிஷி பார்ப்பதற்குள் தன்னைச் சரி செய்தவளாக மீண்டும் நடக்க ஆரம்பித்து இருக்க…

அவள் தடுமாறிய நிமிடங்கள் ரிஷியின் காட்சிக்கு வரவே இல்லை… அப்படி பார்த்திருந்தால் கண்டிப்பாக உதவியிருப்பானோ என்னவோ???

----

கண்மணி-ரிஷி இருவருமாக …. மகிளா, நடராஜ் காத்திருந்த இடத்தின் அருகே வரும் போதுதான் ரிஷி கண்மணியிடம் மீண்டும் பேச ஆரம்பித்தான்

“அதோ அங்க... உங்க அப்பா பக்கத்தில் நிற்கிறாளே... அதுதான் மகி....” என்று மகியைச் சுட்டிக் காட்ட…

அதே நேரம், மகி மற்றும் நடராஜ் அவர்களும் இவர்களைப் பார்த்து விட்டனர்...

“ரிஷியோடு வருவது யாராக இருக்கும்.... அடுத்த கரடியா” என்ற ரீதியில் மகி கண்மணியைப் பார்த்தாளே ஒழிய... பொறாமையுடன் எல்லாம் அவள் பார்க்கவில்லை....

நடராஜனுக்கோ அங்கிருந்து தானும் தன் மகளும் உடனே கிளம்ப வேண்டும் என்ற எண்ணமே இருந்தது... ரிஷி மகிளா இருவரும் ஜோடியாக நிற்கும் இடத்தில் மகள் இருக்க வேண்டாம் என்று மட்டுமே நினைக்க… அதே எண்ணத்தில் கண்மணி அருகில் வந்தவுடன்.... ரிஷியிடம் சொல்லியபடி விடைபெற நினைக்க...

ஆனால் கண்மணியோ... அவரின் எண்ண ஓட்டம் எல்லாம் அறியாமல்… ரிஷியின் குடும்பமும் வந்திருப்பதாக கூறி... அவர்களை பார்த்துவிட்டு போகலாம் என்று கூற.... நடராஜ் என்று தன் மகள் வார்த்தைக்கு மறுவார்த்தை கூறியிருக்கிறார்... கண்மணியிடம் சரி என்று தலை ஆட்டி விட்டார்....

ஆனாலும் தன் மகள் முன் இவர்கள் இருவரும் ஜோடியாய் நிற்பதைப் பார்த்து எங்கு தன் மகளின் மனதிலும் அந்த வயதிற்குரிய சலனம் தோன்றி விடுமோ என்று பயம் அவருக்குள் தோன்ற ஆரம்பித்திருந்தது.... என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார் நட்ராஜ்...

தன் மகள் எவ்வளவுதான் புத்திசாலி இருந்தாலும்.... நிதர்சனங்களை புரிந்து கொள்பவளாக இருந்தாலும்.... இந்த பருவ வயது.... அவளை அவளறியாமல் மாற்றி விட்டால்.... நினைத்தவர்.... சமயோசிதமாக சிந்தித்து... ரிஷியிடம் விக்கியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து..... அவனை தன் பக்கமாய் அழைத்து.... தனியே பேச ஆரம்பிக்க... கண்மணியும் மகிளாவும் தனியே நின்றிருந்தனர்....

மகிக்கும் வேறு வழியில்லை... நடராஜுக்கு கண்மணி பரவாயில்லை என நினைத்தபடி... கண்மணியிடம் பேச ஆரம்பித்தாள்...

கண்மணியைப் பற்றி ரிஷி ஏற்கனவே சொல்லி இருந்ததால் கண்மணியோடு பேச்சை வளர்ப்பதில் மகிக்கு பெரிதாக சிரமம் இல்லை...

ஆனால் கண்மணிக்குத்தான் அவளோடு என்ன பேசுவதென்று தெரியவில்லை... மகியின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்…

ஆனால் கண்மணிக்கு ஒன்று மட்டும் புரிந்தது…. ரிஷி மகியிடம் எதையும் மறைப்பதில்லை.... அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து கொள்கிறான் என்பதுதான் அது..

கண்மணி தன்னை விட ஒரு வயது சிறியவள் என்பதை… ரிஷி கண்மணியைப் பற்றி தன்னிடம் பகிர்ந்து கொண்ட விசயங்கள் மூலம் மகிளா அனுமானித்திருந்தாள்....

“கண்மணி.... நீ இந்த வருசம் 12 த் தானே.... ஹப்பா... லாஸ்ட் இயர் ஃபுல்லா.... படி படின்னு உயிரை வாங்கிட்டாங்க... இப்போதான் தப்பிச்சேன்... ரிசல்ட் வேற இன்னும் வரலை....” கவலையாகச் சொன்னவள்...

“ஆனா எனக்கு மார்க் வரலைனாலும் கவலை இல்லை...” என்று தன்னைச் சமாளித்தும் கொண்டாள்...


கண்மணி அவள் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருக்க... இவர்கள் இருவரையும் கவனித்தபடி நடராஜோடு பேசிக் கொண்டிருந்த ரிஷி அவ்வப்போது தன் அன்னை மற்றும் தன் தங்கைகள் வருகிறார்களா எனவும் கோவில் இருக்கும் திசையிலும் தன் கவனத்தை வைத்திருந்தான்...

அப்போது.... அங்கு வந்த 4 சக்கர வாகனம்... கண்மணி மற்றும் மகிளா நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தின் அருகே வரும் போது.....தனது வேகத்தை குறைத்து.... சற்று மெதுவாக அவர்களை உரசுவது போல் போக.... அதை ரிஷி கவனித்து விட்டான்....

“ஏய் மகி பார்த்து” என வேகமாக தன்னை மீறி ரிஷி சத்தம் போட்டு குரல் எழுப்ப.. நடராஜ், கண்மணி, மகிளா என மற்ற மூவரும் அப்போதுதான் அந்தக் காரையே கவனித்தனர்.... இவர்கள் அனைவரின் பார்வை முழுவதும் அந்தக் காரின் மீது விழ...

கண்மணியோ அந்தக் காரின் அருகே சென்றாள்… அவள் வருகையைப் பார்த்து… அந்தக் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நாராயண குருக்கள் கண்மணியிடம் புன்னகை முகமாக

“வீட்டுக்கு வா” என்று சைகை காட்ட…

கண்மணியும் அவரிடம் ஒப்புதலாக தலையை ஆட்டியபடி மீண்டும் தான் இருந்த இடம் நோக்கிச் செல்ல திரும்பப் போக… அப்போது அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு… அந்த உணர்வு அவளையும் மீறி அவள் கண்களை ஓட்டுநர் இருக்கையை நோக்கித் திருப்ப…

இப்போது… ஓட்டுனர் புறம் இருந்த கண்ணாடி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கப்பட… அங்கிருந்த கண்ணாடியின் வழியே கண்மணியை உரிமையாகப் பார்த்து புன்னகை பூத்தவன் இப்போது பின்னால் திரும்பி…. கண்மணியைப் பார்த்து புருவம் உயர்த்த….

கண்மணிக்குள் மின்சாரம் பாய்ந்தார்ப் போல உணர்வு…

அவளின் பார்வை மாற்றத்தை உள்வாங்கிய … அர்ஜூனுக்குள்ளும் உற்சாகமே… அவனின் அதே துள்ளளில் அந்தக் காரும் வேகம் எடுத்திருக்க… அடுத்த நொடியே அங்கிருந்தும் மறைந்திருந்தான் அர்ஜூன்…

மின்னல் மின்னி மறைந்தது போல கண்மணியின் மனதுக்குள் ஓர் வெறுமை…. தன் சக்தியெல்லாம் வடிந்துபோனாற்போல நிலை தடுமாறினாள் அவள்…

அவள் தடுமாற்றம் அங்கிருந்த நடராஜுக்கோ, ரிஷிக்கோ, மகிளாவுக்கோ கண்ணில் படவேவில்லை

நடராஜ் , நாரயாண குருக்களை முறைத்துப் பார்த்தபடி இருந்தாரே தவிர அர்ஜூனைப் பார்க்க வில்லை….

கார் உரசியது போல சென்றதால் அடி கிடி விழுந்திருக்கின்றதா என்று… ரிஷி மகிளாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்… அதனால் அவனும் அர்ஜூனைப் பார்க்கவில்லை….

“மாமா.... அந்தக் கார் அது வழியிலதான் போகுது... நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற” என்று மகி சொல்லிக் கொண்டிருக்க

“இல்ல மகி... ஸ்பீடா வந்த கார்... திடிர்னு... ஸ்லோவா உங்க பக்கத்தில் வந்த மாதிரி ஃபீல் எனக்கு” என்று யோசனையுடன் சொன்னவன்..... நடராஜனைப் பார்க்க... அவரோ அந்தக் கார் சென்ற திசையை நோக்கி வெறித்துக் கொண்டிருந்தார்

நடாராஜனின் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தை உணர்ந்த ரிஷி... இப்போது கண்மணியைப் பார்க்க... அவளின் பார்வையிலும் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது...

ரிஷிக்கு அர்ஜூன் எல்லாம் கவனத்தைக் கவரவில்லை... அந்தக் காரில் வந்த பெரியவர் மட்டுமே கண்களில் பட்டார்…. கண்மணிக்கு அவரைத் தெரிந்திருக்கிறது என்பது மட்டும் புரிய.....

“யார் அவர் என்று கேட்கலாமா... இல்லை வேண்டாமா” என்று தனக்குள் ஒற்றையா இரட்டையா போட்டவனுக்கு....

“இது நமக்கு தேவையில்லாத விஷயம்” என்று தனக்குத்தானே முடிவு செய்தவன்.... அதோடு விட்டுவிட்டான்... அதுமட்டுமின்றி தன் அன்னை வேறு இன்னும் கோவிலை விட்டு வராமல் இருக்க...

“என்னதான் பண்றாங்க இவங்க 3 பேரும்.... அடுத்து சில மணி நேரத்தில் ஊருக்கு வேறு கிளம்ப வேண்டும்...” என்று யோசித்தபடி... எரிச்சலோடு ரிஷி நேரத்தை பார்த்தபடி இருக்க... மகி அவன் முகத்தை பார்த்தபடி இருக்க..

கண்மணியோ ரிஷிக்கும் நடராஜுக்கும் இடையில் நின்று கொண்டிருந்தாள்…. உருவமாக மட்டுமே… அவள் எண்ணங்கள் எங்கோ….

“சரி நாங்க கிளம்புறோம்...” என்று ரிஷி நடராஜிடம் சொல்லியபடி... கண்மணியைப் பார்க்க…

அவள் ஏதோ ஒரு நினைவில் சிலை போல் நிற்பது போன்று தோன்றியது ரிஷிக்கு…


ஏதோ ஒரு நினைவில் என்பதை விட… அர்ஜூன் என்று சொன்னால் அவனுக்கு புரியுமா…அர்ஜூன் என்பவனிடம் கண்மணியின் மனம் சிறை பட்டிருக்கின்றது என்று ரிஷிக்குத் தெரிந்திருந்தால் கண்மணியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவளிடம் கேட்காமல் இருந்திருப்பானோ???


காலச்சக்கரம் சுழன்ற போதும் கூட அர்ஜூன் கண்மணி மேல் கொண்ட காதல் பற்றி போனதும்.... அந்த அர்ஜூனின் கோபத்திற்கு ஆளாகி போனதும்... ரிஷிக்கு விதி செய்த மற்றொரு சதியா... இல்லை அவன் சதி(மனைவி)யை அவனோடு இணைக்க அந்த விதி செய்த நாடகமா????கண்மணிக்கு அர்ஜூனின் நினைவுகள் மட்டுமே...”அவள் தாத்தா பாட்டியினால் நிழலில் மட்டுமே காட்டப்பட்டு பார்த்திருந்த உருவம்… இன்று நிஜமாக தன் முன்னே… நிஜத்தைக் கண்டாள்தான்… நிழல் புகைப்படத்தில் இருந்த கண்களில் இல்லாத உணர்வை… நிஜமாக வந்தவன் உரிமையோடு கலந்து காட்டியபடி போயிருக்க… “ அது அவளுக்குள் வெகு ஆழமாக பதிய ஆரம்பிக்கப் போக


”கண்மணி” என்று ரிஷி சத்தமாக அழைத்த போதுதான் நினைவுக்கு மீண்டும் திரும்பியது போல ரிஷியைப் பார்த்தாள்…


”என்ன” என்பது போல சற்று தடுமாறி… ரிஷி விடைபெறுவதற்காக அவளைக் கூப்பிடுகின்றான் என்பதை அவளே உணர்ந்து கொண்டு...


சரியென்று விடைபெறும் முறையில் கண்மணி தலையை ஆட்ட… ரிஷியும் கிளம்ப எத்தனிக்க…. அவனின் கரங்கள் கண்மணியால் வன்மையாக இழுக்கப்பட்டிருந்தது…

கண்மணிதான் தன்னைப் பிடித்து இழுக்கின்றாள்…. என்பதை ரிஷி உணர்ந்து

என்ன ஏதென்று திகைத்து திரும்ப நினைக்கையிலேயே… அழுத்தமாக அவன் கைகளைப் பற்றி இருந்த கண்மணியின் கரங்களின் பிடிமானம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வது போல் இருக்க…வேகமாக ரிஷி திரும்பிப் பார்க்க… கண்மணி… மயக்கத்தில் மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருந்தாள் …

கண்மணியின் மயங்கிய நிலையை உணர்ந்த ரிஷியின் கரங்கள் அவனையுமறியாமல்… தன்னை விட்டு விலகப் போன அவள் கரங்களைச் சட்டென்று இறுக்கமாகப் பிடிக்க… அதே நேரம் நடராஜும் தன் மகளைக் கவனித்து விட்டவராக… துரிதமாகச் செயல்பட்டு…. மயங்கி கீழே சரியப் போன தன் மகளைத் தன் மீது தாங்கிக் கொண்டபடி தரையில் அமர்ந்தும் இருந்தார்…

அதைப் பார்த்தபின்… ரிஷிக்கு இப்போது பதட்டம் குறைந்து… தன் கைகளை விலக்கிக் கொள்ளப் போக…. அப்போது… கண்மணியின் கையில் இருந்த வளையல்கள் உடைந்து கீழே விழ…

ரிஷிக்கு ஒன்றும் புரியாமல் புருவம் சுருக்கி தன் கையைப் பார்க்க….

அவன் கையில் அணிந்திருந்த பிளாட்டின காப்பின் திறந்த விளிம்புகளின் இடையில்… கண்மணி அணிந்திருந்த வளையல்களில் சிக்கிக் கொண்டிருந்தது…

இவன் வேகமாக கைகளை எடுக்கப் போய்… வளையல்கள் நொறுங்க ஆரம்பித்திருக்கின்றன என்பது புரிந்தது ரிஷிக்கு

எங்கு... தான் கையை வேகமாக எடுத்தால்…. மேலும் வளையல்கள் உடைந்து அவள் கைகளை கீறி விடுமோ என்று பயந்தவனாக… உடனடியாக கையை விலக்க முடியாமல்… வேறு வழி இன்றி… கண்மணியோடு சேர்ந்து அவள் உயரத்துக்கு குனிந்து பின் அவள் அருகில் அமர்ந்தவனாக…

மகிளாவிடம் திரும்பியவன்…

“மகி…. அந்தக் கடையில தண்ணி கேட்டு…. வாங்கிட்டு வா” என்று மகிக்கு அவசர தொணியில் கட்டளை இட… மகியும் வேகமாக கடைக்கு ஓடினாள்

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி-22-2

அத்தியாயம் 22-2: ஆயிரம் முறை ரிஷி கேட்டு விட்டான்… இதோ இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்… ”ரெண்டு நாள் இங்க தங்குறதுல பிரச்சனை இல்லையா உங்களுக்கு….எந்த வசதியுமே இங்க இல்லயேம்மா…. ஊர்ல ரிது ரிதன்யா….

கண்மணி... என் கண்ணின் மணி-22-1

அத்தியாயம் 22-1: அதிகப்பட்சம் இருவர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இருந்தது அவனது அறை... அந்த அளவுக்கு மிகச் சிறியதாக இருந்தது அந்த அறை... குளியலறை கூட அறைக்கு வெளியே தான்.... லட்சுமியின் கண்கள்

கண்மணி... என் கண்ணின் மணி-21

அத்தியாயம் 21: ரிஷி அதிகாலை 5 மணிக்கே எழுந்து விட்டான்....... தூங்கினால் தானே எழுந்திருப்பதற்கு…. படுக்கையில் புரண்டு கொண்டிருந்ததில் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டவன்… தன் அறையிலிருந்து வெளியேறி

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon