top of page

கண்மணி... என் கண்ணின் மணி-4

அத்தியாயம் 4:


விக்கி தனக்குத் தேவையான விபரங்களைச் சொல்லி... நடராஜுக்கும் அதை புரியவைத்துக் கொண்டிருக்க…. ரிஷியோ, விக்கி நடராஜ் பேச்சில் எல்லாம் கவனம் வைக்காமல்…. அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல்…… அந்த வீட்டினைச் சுற்றி தன் பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தான்…


அவனைப் பொறுத்தவரை விக்கிக்காவே அவன் இங்கு வந்திருந்தான்… மற்றபடி வேறெந்த அக்கறையும் இல்லை….. விக்கிக்கும் அவனைப் பற்றி தெரியும்….. இருந்தும் விக்கி ரிஷியோடு சேர்ந்தேதான் எதையும் செய்வான்… ரிஷி சில பேப்பர்களில் பாஸ் மார்க் எடுத்திருப்பது கூட விக்கியின் நச்சரிப்பில் தான்…


ரிஷியைப் பொறுத்தவரை படிப்பு என்பது தன் பின்னால் போட உபயோகப்படும் பட்டம் அவ்வளவே…. விக்கியும் பணம் படைத்தவனே… ஆனால் அவனது தாத்தா ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி… அதனால்… ஒழுங்கு முறைகளுடனே வளர்த்திருந்தார்…. விக்கியின் வீட்டில் அவர் தாத்தா வைத்ததுதான் சட்டம்…


விக்கி வாழ்க்கையின் வரைமுறை கோட்பாடுகளை தாண்ட நினைத்ததில்லை…. அவன் தாண்ட நினைத்தால் கூட அவனது தாத்தாவின் முகமே அவன் மனதில் வந்து மிரட்டிவிடும்… இவன் வெளிநாட்டில் படிக்க அவரது தாத்தாவிடம் அனுமதி வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டிருந்ததை அவன் மட்டுமே அறிந்தது.. படிப்பதற்கென்றே இப்படி என்றால் மற்ற விசயங்களுக்கு கேட்கவா வேண்டும்…


விக்கி… ரிஷி இருவரும் எதிர் எதிர் குணங்களில் இருந்தாலும்… இருவருக்குள்ளும் இருந்த நட்புக்கு எந்த பங்கமும் ஏற்பட்டதில்லை.... ஓருவர் மற்றவரின் பழக்கவழக்கங்களில் எல்லை மீறி தலையிட்டதும் இல்லை....


இன்றும் ரிஷிக்கு பிடிக்காத சுழல்.... இப்படிப்பட்ட தருணங்களில் மொபைலுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்து இருப்பான்... ஏனோ அவனுக்கு அன்று அதிலும் பிடித்தம் இல்லாமல் போக.... அங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களில் அவன் கவனம் போயிருந்தது...


நடராஜன் மற்றும் அவரது மனைவியின் திருமண புகைப்படம்.... அவரது மனைவியின் மாலை மாட்டப்பட்டிருந்த தனி புகைப்படம் .... கண்மணியின் புகைப்படம் எங்குமே இல்லை....


“மணி அக்கா போட்டோ இல்லையா ” என்று கேள்வி கேட்ட மனது இயல்பாக புகைப்படத்தில் இருந்த அவளது பெற்றோரின் சாயலை அவளின் சாயலோடு எடை போட ஆரம்பித்தது...


முதலில் கண்மணியை அவர்களோடு ஒப்பிட ஆரம்பித்தவன் அவனையுமறியாமல் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை ஆராய ஆரம்பித்தான்...


“ரெண்டு பேருக்கும் ஒட்டவே இல்லையே” ... தன் முன்னே அமர்ந்திருந்த நடராஜனைத் மீண்டும் ஒருமுறை ஏற இறங்கப் ஒரு பார்வை பார்த்தவன்...


”இவருக்கு இந்த ஏரியாவோட களை முகத்தில் தாண்டவமாடுது.... ஆனால் அவங்களுக்கு.... ஆளு செம பிகரா” என்று நினைக்க ஆரம்பித்தவன்...


“வயசுக்கு மரியாதை கொடுடா ரிஷி...” என்று மனசாட்சி சாட


“ஐஸ்வர்யாராயைல்லாம் மிஞ்சிடுவங்க... ஆனா இவரோட எப்படி” என்றபடி...


”இப்படி ஒரு அழகானவங்க இவர எப்படி”... என்ற மிகப்பெரிய கவலை ரிஷிக்கு வர... அது தந்த ஆதங்கத்தில்... அதே வேகத்தில் நடராஜனிடம்...


“உங்க மேரேஜ்... லவ் மேரேஜா இல்ல அரேஞ்ச்ட் மேரேஜா...” கேட்டு விட...


விக்கியியோ சுட்டெரிக்கு பார்வை பார்த்தான் தன் நண்பனை...


“முறைக்காதடா... சும்மா வந்ததில் இருந்து... இத்தனை கட்டிங்.. இந்த இடத்தில் பெண்டிங்க்னு.. ப்ரேக் விடுடா” என்றபடி தன் நண்பனின் கோபத்தை தூக்கித் தூரப் போட்டவனாக...


“நீங்க சொல்லுங்க சார்.... “என்று தன் கேள்விதான் இப்போதைக்கு முக்கியம் என்பது போல முக பாவனையை வைத்து கேட்க....


நடராஜ் சிரித்தபடி கேட்டார் .... “இது என்னப்பா கேள்வி”


“சும்மாதான் சார்.. ஆனால்.... உங்க மனைவி முகத்தில் இருக்கிற சந்தோசத்தைப் பார்த்தால் கண்டிப்பா லவ் மேரெஜ்னுதான் தோணுது.... கரெக்டா....“ என்று சந்தேகமாகப் பேச….. நடராஜன் முகத்தில்.... அவர் மனைவியின் நினைவில் கவலைக் கோடுகள் படர ஆரம்பித்தது....


ரிஷி அதை எல்லாம் கவனிக்காமல்... “ அரேஞ்ச்ட் மேரேஜ்னா கண்டிப்பா கட்டாயக் கல்யணமாத்தான் இருக்கும்.... “ என்ற போது


விக்கியால் அதற்கு மேல் நண்பனின் வார்த்தையாடல்களை நிறுத்தியவன்


“உன் மொக்கையை நிறுத்துறியா” என்பது போல் நடராஜனுக்கு தெரியாமல் கை காட்ட...


“ஓகே” என்றபடி தோள்களை குலுக்கியவன் அதன் பிறகு எதுவும் பேசவில்லை.... நடராஜனிடம் தான் கேட்ட கேள்விக்கு பதிலே கிடைக்கவில்லை.... என்பதைக் கூட உணராமல் இருந்தான் அவன்...


பின்னாளில் தன் மனைவியின் மனவேதனை போக்கும் மருந்தைத் தேடுகையில் அவனுக்கு இந்த பதிலுக்கு விடை தானாகத் தெரியப் போகிறது என்பதால் அதை விட்டு இப்போதைக்கு விட்டுவிட்டான் போல்...


ரிஷி இப்படி இருக்க.... விக்கியோ கருமமே கண்ணாக உருமாறி.... நடராஜனிடம் பேசிக் கொண்டிருந்தான்...


பேசிக் கொண்டிருந்த விக்கிக்கு திடிரென்று புரை ஏற... அதே நேரம் கண்மணியும் எதேச்சையாக உள்ளே வர..... வீட்டுக்குள் வந்த கண்மணியிடம் நடராஜன் தண்ணீர் எடுத்துவரச் சொன்னார்... விக்கிக்காக...


இங்கு விக்கிக்கோ அவள் கையால் வாங்கி தண்ணிர் குடிக்க பிடிக்க வில்லை....


“வீட்டுக்கு வந்தவங்களை எப்படி வரவேற்கிறதுனே தெரியலை இவளுக்கு.... இவ கையால தண்ணி வாங்கிக் குடிச்சுட்டாலும்... “ பொருமியவனாக


நடராஜனிடம்


“இல்ல பரவாயில்ல சார்.... இப்போ சரி ஆகி விட்டது’ என்று மழுப்ப.... நடராஜனும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை...

ஆனால் தன் மகளிடம்...

“அம்மாடா.... ரெண்டு பேருக்கும்... டீ இல்ல காஃபித் தண்ணி போட்டுக் குடுக்கிறியாம்மா....” என்ற போதே... விக்கிக்கு ஒன்று தோன்றியது... ரிஷியோ இதையெல்லாம் கவனிக்க வில்லை....


அவர் மகளிடம் ஆணையிடாமல்... வேண்டுகோள் போலத்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றார் என்பதை...


“ஹ்ம்ம்” என்று மட்டும் தலையாட்டியபடி.. கண்மணி குளிர்சாதனப் பெட்டியில் இருந்து... பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டிருந்தாள்....


அவள் வந்ததே அதற்குத்தான்.... அது தெரியாமல் விக்கி அவளைத் தவறாக நினைத்து விட்டதுதான் அவன் செய்த தவறு....


குளிர் சாதனப் பெட்டியின் அருகில்தான் கண்மணியின் அன்னையின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்க.... ரிஷி... கண்மணியைப் பார்த்தபடி மனதிற்குள்ளே....


“நல்லவேளை தப்பிச்சா.... அவ அப்பா மாதிரி இல்லாமல் அந்த அழகு தெய்வத்திற்கு பிறந்த மகளாத்தான் இருக்கா...“ என்று நினைத்தபடி...


“என்ன ஒரே ஒரு வித்தியாசம்.... அவங்க மூக்குத்தி ரைட்ல போட்ருக்காங்க்க..... இந்த பொண்ணு லெஃப்ட்ல போட்ருக்கு...... “ இப்படி மனதுக்குள் அவன் பேசும் போதே.... அவன் மனதின் பேச்சை கண்மணியின் குரல் கலைக்க அவளை நோக்கினான் ரிஷி...


“உங்களுக்கு டீயா காபியா...” விருந்தோம்பும் தொணியில் தான் கேட்டாள்...


ஆனால் கண்மணியின் குரல் இயல்பிலேயே சாதரணமாகப் பேசினால் கூட அதிகாரமாய் ஒலிப்பது போல்தான் இருக்கும்...


அந்த தொணியில்... நனவுலகத்திற்கு வந்த ரிஷி வேகமாக...


“இவன் என்ன சொன்னானோ அதுவே எனக்கும்” என்றான் விக்கியைப் பார்த்து....


ரிஷியின் பதிலில் கண்மணியின் உதடுகள் பிரியாமலே சிரிப்பில் விரிந்தன அதுவும் கிண்டலாக...... எப்போதும் கண்மணியின் சிரிப்பு அவ்வளவுதான்.... அவள் இதற்கு மேல் சிரித்து யாருமே பார்த்ததில்லை.... ஏன் அவளே பார்த்த்தில்லை....


அவளின் தன்னைப் பார்த்து ஏன் நக்கலாக சிரிக்கிறாள் என்றே ரிஷிக்கு புரியவில்லை…. விக்கியைப் பார்க்க…. அவனோ வழக்கமான முறைப்பைக் கொடுத்தபடி


“நான் எனக்கு எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டேன்….” விக்கி நண்பனிடம் சொல்லும் போதே…


“நீங்க எதுவும் வேண்டாம்னு சொல்லலை…. எதுவுமே சாப்பிட மாட்டேனுதான் சொன்னீங்க…” கண்மணி விக்கியின் வார்த்தைகளைத் திருத்த….


விக்கி நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்... கண்களில் சற்று அலட்சியமாக…


“எப்டி சொன்னா என்ன… எல்லாம் ஒண்ணுதான்….” சொன்னவன் அதற்கு மேல் அவளிடம் பேசப் பிடிக்காமல் ரிஷியின் பக்கம் திரும்ப…


“அது எப்படி… ரெண்டு பதிலும் ஒண்ணா ஆகும்…” யோசித்த கண்மணிக்கு…..

விக்கியின் முகப்பாவத்திலேயே அவனுக்கு தன்னைப் பிடிக்கவில்லை… என்பது புரிய.... கண்மணி… அதற்கு மேல் விக்கியிடம் பேச்சை வளர்க்கவில்லை…. ரிஷியின் பதிலுக்காக அவனை பார்க்க…


ரிஷியின் நிலைமைதான் பரிதாபமாக இருந்தது…


விக்கி சொன்னது போல… ”வேண்டாம்” என்று சொல்லி விடலாம் என்றுதான் நினைத்தான்…


விக்கியும் “எதுவும் வேண்டாம் என்று சொல்” என்று கண்களிலேயெ சைகை காட்ட…


“இவன் ஒருத்தன்…. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை டீ இல்ல காஃபி குடிக்காமல் வீட்ல இருக்கமாட்டான்… இவன் எதுவுமே சாப்பிட மாட்டானாமா… இதில என்னை வேற குடிக்கக் கூடாதுனு சாடை... இவன் கிடக்கிறான்” என்று மனதுக்குள் நினைத்தபடி


கண்மணியிடம் திரும்பியவன்….


“நீங்க என்ன போட்டுக் கொடுத்தாலும் ஓகெங்க…”. என்றவன்… அவள் கையில் இருந்த பால் பாக்கெட்டைப் பார்த்தபடி….


“இந்தப் பால்ல பால் பாயாசமே போட்டுக் கொடுத்தாலும் சாப்பிடுவேன்…. “ என்று நீட்டி முழங்க…. இப்போது விக்கி முறைப்புக்குப் பதிலாக கண்மணியே ரிஷியை சிறு சலிப்புடன் பார்த்தாள்…. பின் விக்கியைப் கேலியாகப் பார்த்தபடி உள்ளே சென்றாள்…


இவர்கள் மூவருக்கும் இப்படியான நிகழ்வுகள் நடக்க... நடராஜனுக்கு அப்போது ஒரு போன் வந்திருக்க... சற்று தள்ளி சென்று சன்னலருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார்… இவர்கள் மேல் ஒரு கண் வைத்தபடியேதான்... ஆனால் என்ன பேசுகின்றனர் என்பதைக் கவனம் வைக்கவைல்லை... நடராஜ்...


விக்கியின் பார்வை மாற்றங்களை எல்லாம் கவனித்தார் தான்... ஆனால் அந்த பார்வையில் அலட்சியம் மட்டுமே இருக்க... பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை... ஆனால் ஏனோ ரிஷியின் பார்வையில் இருந்த ஆராய்ச்சிப் பார்வை... அவன் தன் மகளைப் பார்த்த அந்த ஆராய்ச்சிப் பார்வை ஏனோ பிடிக்கவில்லைதான்... ஆராய்ச்சிப் பார்வை என்பதால் அப்போது விட்டு விட்டார்... அது மட்டும் இன்றி... தன் மனைவியின் புகைப்படத்தையும் தன் மகளையும் மாறி மாறி அவன் பார்த்துக் கொண்டிருந்த விதம் பெரிதாக தவறாக நினைக்கவிட வில்லை என்பதே உண்மை...


அவர் அப்படி இருக்க...


விக்கியோ இங்கு...


“என் மானத்தை இப்படி வாங்குறானே…” மனதுள்ளே நொந்தவனாய்.. ரிஷியின் காதில் மெதுவாய்


“டேய் ரிஷி… இந்த ரவுடி ராக்கம்மா உனக்கு பால் பாயாசம் இல்லை பால் பாய்சன் தாண்டா குடுக்கப் போறா….”


“அழகான பொண்ணுங்க பாய்சன் கொடுத்தாக் கூட பாயாசமா நெனச்சு சாப்பிடுவான் இந்த ரிஷி.. வேண்டாம்னு ஒதுங்கிட்டேல்ல.. அந்த ஏரியாலேயே இரு.. பாயசம் பாய்சன் எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம்… அதுனால நீ அடங்கு.. ஆமாம் உனக்கு என்னடா பிரச்சனை.. இவ்ளோ சீன் போடற” என்று இருவருமாகப் பேசியபடி இருந்தபோதே கண்மணி…. டம்ளரை ரிஷியிடம் நீட்ட…. ரிஷியின் கண்கள் விரிந்தது… உண்மையிலேயே அதில் இருந்தது பால்பாயசம் தான்….


அதே பார்வையுடன்...


“எப்படிங்க.... உடனே” என்றான் ரிஷி... ஏனோ கண்மணியை ஒருமையில் கூப்பிட முடியவில்லை அவனால்.... அவள் தன்னைவிட வயதில் சிறியவள் என்று தெரிந்த போதும்....


கண்மணி அவளின் ட்ரேட் மார்க் புன்னகை மட்டுமே அவனுக்கு பதிலாக தந்தாள்... வேறு பதில் எதுவும் சொல்லவில்லை.... அதுமட்டுமின்றி தன் வேலை முடிந்து விட்டது என்பது போல... அங்க்கிருந்து சென்று விட்டாள்....

அன்று புது வருடம் என்பதால், மதிய உணவுக்கு செய்து வைத்த பால் பாயசம் தான் அது.... ரிஷி கேட்டவுடன் சற்று சூடு செய்து உடனே கொடுத்து விட்டாள்...


ரிஷியும்... அதைச் ரசித்து சுவைத்தவன்... விக்கியிடம்...


“மிஸ் பண்ணிட்டடா... செம்ம டேஸ்ட்...” என்று அவனை வம்புக்கு இழுக்க...


இகழ்ச்சியாக உதட்டை சுழித்தவன்... அதிலும் கண்மணியைக் குற்றம் கண்டுபிடித்தான்...


“புது வருஷம்னு காலையில செஞ்சிருப்பா... அந்த மிச்சமா இருந்திருக்கும்.... ராப்பிச்சைக்காரனுக்கு போடலாம்னு வச்சிருந்திருப்பா.... நீ மாட்டிக்கிட்ட... “ என்று கிட்டத்தட்ட பாதி உண்மையைக் கண்டு பிடித்தவனாக பதிலுக்கு வார... முறைத்தான் ரிஷி...


நடராஜன் சற்றுத்தொலைவில் அவருக்கான தொகையைக் கணக்குப் பண்ணியவாறே அதன் விபரங்களை எழுதிக் கொண்டிருந்ததால்.... விக்கி மற்றும் ரிஷியின் உரையாடாலில் எல்லாம் இப்போதும் கவனம் வைக்கவில்லை...


எழுதி முடித்து நிமிர்ந்தவர்... அந்த அட்டையை விக்கியிடம் கொடுக்க... ரிஷியிடம் விக்கி காண்பித்தான்..


அது பெரிய தொகை எல்லாம் இல்லை... இவர்கள் இருவரின் வசதிக்கு அது மிகவும் குறைவானதே....


“சார்... பணம்லாம் பெரிசு இல்ல.... இவன் கேட்ட மாதிரி ரெண்டே நாள்ல கொடுத்திருங்க.... இல்ல என்னை ஒரு வழி பண்ணிருவான்...” என்று ரிஷி சொன்னபோதே விக்கியும்


“ஆமாம் சார்.... நீங்க முடிச்சுக் கொடுத்த பின்னால நான் அதை ப்ரிபேர் பண்ண வேண்டும்... டைம் இல்ல சார்...” என்று முடிக்க... நடராஜும் சம்மதமாய் தலையாட்டியபடி உறுதி அளித்தார்...


பிறகு சிறிது நேரம்... பொதுவாகப் பேசியபடி இருந்த போது.. வெளியே சத்தமாக ஒரு ஆணின் குரல் ஒலிக்க.... அதற்கு கண்மணியும் பதிலுக்கு ஏதோ சொல்ல... நடராஜன் வேகமாக வெளியே வர... ஒன்றும் புரியாமல் நண்பர்கள் இருவரும் அவர் பின்னே அவசர அவசரமாக வெளியே வந்தனர்.....


அவர்கள் வீட்டில் குடியிருப்பவன் போல.. தாறுமாறாக பேசிக் கொண்டிருக்க... அவனுக்கு சற்றும் சளைக்காமல் பேசிக் கொண்டிருந்தாள் கண்மணி.... இவர்கள் இருவருக்கும் ஒரளவு விஷயம் புரிந்தது... சற்று முன் கண்மணி மிரட்டி விட்டு வந்த பெண்மணியின் கணவன் என்பது... ஆனால் நடராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை...


இவன் ஏன் தன் மகளிடம் சண்டைக்கு வந்திருக்கிறான் என்று... சொல்லப் போனால்... மூன்று மாதமாக வாடகை தரவில்லையே என்று தன் மகளிடம் சொன்னபோது கூட...


“இல்லப்பா... அவங்க வீட்டில் கொஞ்சம் கஷ்டம் போல... அந்த அக்காகிட்ட பேசும் போதே தெரிஞ்சது... கண்டிப்பா அடுத்த மாதம் கொடுத்திருவோம்னு சொன்னாங்க....“ என்று தன் மகள் அவர்களுக்கு ஆதரவாகத்தான் சொன்னாள்.... அப்படி இருக்க.. இவன் இப்படி குடித்துவிட்டு தன் மகளிடம் சண்டையிடுகிறானே என்று ஆத்திரம் வர.... வேகமாக தன் மகளின் அருகில் போக எத்தனிக்க...


வந்தவன்... கண்மணியை விட்டு விட்டு...


“வாய்யா வா.... பொண்ணா பெத்து வச்சுருக்க... ஒரு பஜாரிய பெத்து வச்சுருக்க..... என்றவன்...


“இந்த பஜாரிய பேச விட்டுட்டு நீ உள்ள உக்கார்ந்து என்ன பண்ற... “ என்று அதோடு நிற்காமல் இன்னும் அசிங்கமாக பேச ஆரம்பிக்க... விக்கியும் ரிஷியும் கூட தாங்களும் உள்ளே இறங்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்க... நடராஜனின் கை முஷ்டி இறுக ஆரம்பித்தது....


நடராஜனுக்கு வயது 50 ஐக் கூடத் தொட்டிருக்காது... தலை முடி கூட ஒன்றிரண்டுதான் நரைத்திருக்கும்... நல்ல உயரம்.. அதற்கேற்றவாறூ கம்பீரமான உடற்கட்டு அவருக்கு... நடராஜன் ஒரு அறை விட்டால் போதும் அவன் காத தூரம் போய் விழுவான்.. அதனால் பெரிதாக பயப்படத்தோணவில்லை இருவருக்கும்… சொல்லப் போனால் ஒரு வித ஆர்வத்துடனே பார்க்க ஆரம்பித்து இருந்தனர்...


இங்கு நடராஜுக்கும் கோபத்தில் கை முஷ்டி இறுக முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பிக்க....


அதே கோபத்தில்... தன் முன் வந்து நின்ற சண்டைக்காரணிடம் தன் கை மொழியில் பதில் சொல்ல எத்தனிக்கும் போதே... கண்மணி... தன்னுடன் சண்டைக்கு நின்ற அந்த குடிகாரனுக்கும் தன் தந்தைக்கும் இடையில் வந்திருந்தாள்...


“தோ பாரு..... உனக்கும் எனக்கும் தான் பேச்சு.... நீ எங்கிட்டதான் அட்வான்ஸ் கொடுத்த.... நான் தான் கை நீட்டி பணம் வாங்க்கினேன்.. எதுவா இருந்தாலும் எங்கிட்ட கேளு.... அவர் கிட்ட கேட்க உனக்கு எந்த ரைட்ஸும் இல்லை... அவரும் “ என்று அழுத்தம் கொடுத்த கண்மணி.... தன் தந்தையை அர்த்தப் பார்வை பார்த்தடியே


“அவரும் உனக்கு பதில் சொல்லமாட்டார்” என்று முடித்தாள்…


அவளின் அழுத்தம் நிறைந்த பதிலே… ”நடராஜ் பேசக் கூடாது” என்று உணர்த்த… சிங்கமாக சிலிர்த்தெழுந்த நடராஜ் தன் மகளின் ஒற்றைப் பார்வையில் அப்படியே நின்று விட்டார்…


நடராஜ் நிற்பதைப் பார்த்த விக்கி… திகைத்தே விட்டான்…


”இந்த வயதில் அவன் வீட்டில் இப்படியெல்லாம் பேசியிருக்க முடியுமா… இப்படி என்ன ஒரு வார்த்தை கூட வாய் திறக்க முடியாது…” அதிர்ச்சியில் விக்கி வாய் பிளக்க…


ரிஷியோ… “என்ன தந்தை இவர்…. அது சின்னப் பொண்ணு.. அது சொல்லிருச்சுனு… அப்படியே ஸ்டாப் சிக்னல்ல நிற்கிறாரு… எங்க அப்பா மட்டும் இருந்திருந்தால் என்னை இந்த இடத்தை விட்டே அப்புறப்படுத்தியிருப்பார்” என்று நினைத்தபோதே…


மகிளாவை அவன் விரும்பியதை அறிந்தவுடன்… தான் இல்லாமலே மகி அப்பாவிடம் அவரே பேசி…. மகியின் தந்தையை சமாளித்து... தன் காதலுக்கு சம்மதம் வாங்கிய தன் தந்தை எங்கே…. பிரச்சனையின் நடுவில் நிற்கும் பெண்ணைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்க்கும் இவர் எங்கே… என்று நடராஜை கொஞ்சம் கீழாக எண்ணியவன்…


“இது அவங்க குடும்ப விசயம் … இங்க நாம என்ன சொல்வது…” என்று விட்டு விட்டான்…


இதுதான் சாக்கென்று குடிபோதையில் அந்த சண்டைக்காரன் உளர ஆரம்பித்தவன்… இப்போது கண்மணியினை அடிக்க கை ஒங்க….


சரியாக அவனைப் பிடித்து நிறுத்தினர் அந்த இருவரும்….


அதைப் பார்த்த விக்கி ரிஷி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இன்னும் விழி விரித்துப் பார்க்க…. நடராஜ் சுதாரித்து…


“மணிம்மா இந்த அளவுக்கு ஏன்மா கொண்டு போற… “


“ப்ச்ச்…….. நீங்க உள்ள போங்க… இவனுக்கெல்லாம் நானே அதிகம் “ என்று கொஞ்சம் கூட முகம் மாறாமல்… கட்டளையிடும் தொணியும் மாறாமல் பேச... நடராஜ் அதற்கு மேல் பேசாமல் விக்கி ரிஷியைப் போல அவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்…


வந்திருந்த இருவரும் அக்மார்க் ரவுடிகள்…. அதிலும் பிரச்சனை வருமென்று தெரிந்து கண்மணி அவர்களை வரச் சொல்லி… வெளியில் நிறுத்தி வைத்திருந்திருக்கிறாள் என்பதினை இருவருக்கும் அனுமானிக்க நொடிப் பொழுது கூட ஆகவில்லை….


விக்கிக்கு அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்கவில்லை… நடராஜிடம் விடைபெற்றபடி…. வேக வேகமாக ரிஷியையும் இழுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்…...


தாங்கள் பைக் நிறுத்தி வைத்திருந்த இடம் வரும் வரை விக்கி ரிஷியிடம் பாதி தூரம் கண்மணியின் வயதுக்கு மீறிய வேலையினை சொல்லிக் காட்டி திட்டியபடி வந்தவன்….


“செம்ம மண்டக்கணம் பிடிச்சவடா… பேச வந்த அவ அப்பாவையே பேச விடாமல் பண்ணிட்டா….. அவ வயசென்ன அது பண்ற வேலை என்ன… “ என்று வாய் ஓயாமல் திட்டியபடி வந்தவன்…”


“அவர் அந்தப் பொண்ண ஓவரா செல்லம் கொடுத்து வளர்க்கிறார்டா” என்று விக்கி சொன்ன போதுதான் ரிஷி…


“ஆமாடா விக்கி…. ’என்னடாமாவாம்’…. ஒண்ணு என்னடானு சொல்லனும்… இல்ல என்னம்மானு சொல்லனும்…. ரெண்டும் சேர்த்து… ஓவர் தாண்டா…” என்றபோது


“ரொம்ப முக்கியம்டா” என்றான் முறைத்தவாறு…


“முக்கியம் இல்லைனு தெரியுதுதானே… பின்ன எதுக்கு நீ இந்த அளவுக்கு டென்ஷன் ஆகுற… விடுடா… நீ பைக்க எடு.. பொண்ணைப் பெத்தவர் அவர்… அவரே டென்சனில்லாமல் இருக்கார்… அவராச்சு… அவர் பொண்ணாச்சு… நீ ஏன் தைய தக்கா தைய தக்கானு குதிக்கிற…” என்றபடி மகிளாவின் எண்ணை அழுத்த ஆரம்பித்தான் ரிஷி.. அவனுக்கு அத்தை மகளோடு பேச போனில் சிக்னல் கிடைக்காததுதான் இப்போதைய பெரிய கவலை…


“ப்ச்ச்... நீ சொல்றதும் கரெக்ட்தாண்டா…” தன்னை அந்த சூழ்நிலையின் தாக்கத்திலிருந்து மீட்ட விக்கி……. வண்டிச் சாவியைக் தன் பாக்கெட்டில் தேடியவன்…. பிறகு ஞாபகம் வந்தவனாய்


‘ரிஷிதானே வரும்போது பைக்கை ஓட்டி வந்தான் பைக் கீ அவனிடம் தான் இருக்கும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு…. ரிஷியைப் பார்க்க… ரிஷி அதற்குள் மகிளாவிடம் தன் கடலையை ஆரம்பித்து இருந்தான்….


“ஆரம்பிச்சுட்டாண்டா….. “ என்று தலையைச் சிலுப்பியவன்… “பைக் கீ” என்று சைகையால் கேட்க… ரிஷியும் மகிளாவோடு பேசியபடியே தன் பேண்ட் பாக்கெட்டில் தேட… அவனிடமும் இல்லை….


பைக் சாவி ரிஷியிடம் தான் இருந்தது... ஆனால் அதுதான் அவன் ஊஞ்சல் ஆடும்போதே கீழே விழுந்து விட்டதே... இங்கு தேடி என்ன பிரயோசனம்...


மொபைலை காதில் இருந்து எடுத்தவன்...


“மிஸ் பண்ணிட்டோமாடா. . எங்கேயாவது.... “ விக்கியிடம் கேட்டபடியே யோசித்தவன்...


“டேய் அந்த பொண்ணு வீட்லதான் மிஸ் பண்ணிட்டோம்னு நினைக்கிறேன்... அங்கதான் இருக்கும்... போய் எடுத்துட்டு வா... நான் பேசிட்டு இருக்கேன்“ என்றபடி மீண்டும் போனை காதில் வைக்கப் போக...


விக்கி இருந்த கடுப்பில் இன்னும் உக்கிரமானான்...


“நீ மிஸ் பண்ணிட்டு என்னைத் தேடி எடுத்துட்டு வாடானு சொல்ற... என்னால மறுபடியும் போக முடியாது...”


“அப்போ ஒரு 10 நிமிசம் வெயிட் பண்ணுடா..... காலையில இருந்து மகி என்னோட பேச ட்ரை பண்றா... டைம் செட்டே ஆக மாட்டேங்குது... இந்த முறையும் சாக்கு சொன்னேன்... லவ் பண்றதுலருந்து என்னை டைவர்ஸ் பண்ணிறுவாடா... மகிட்டே பேசிட்டே கூட போகலாம்னு பார்த்தால்... அந்தப் பொண்ணு வீடு இருக்கிற ஏரியால சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குதுடா... அதுனாலதான் உன்னைப் போகச் சொன்னேன்.... 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு.. மகி கிட்ட பேசிட்டு வந்துறேன்... அப்ப்ப்ப்புறமா... சாவிய தேடி எடுத்துக்குலாம்...” என்ற ரிஷியைப் பார்த்து...


“நீ 10 நிமிசத்துல வந்துருவடா.... போனை காதுல வச்சுட்டேல... இனி உலகத்தையே மறந்துருருவ.... நானே போய்த் தொலையிறேன்....” தலையிலடித்தபடியே மீண்டும் நடராஜன் வீட்டிற்கு வர... அங்கு இன்னும் கலவரம் முடிந்தபாடில்லை...


கண்மணி ஆள் வைத்து வீட்டைக் காலி பண்ணச் சொல்லியதால்... கோபம் கொண்ட அந்த சண்டைக்காரன்.... காவல் நிலையத்துக்கு போன் செய்திருப்பான் போல... அங்கு போலிஸ் வேறு... விசாரிக்க வந்திருப்பார் போல.... ஆனால் அவர் மட்டும் அந்த குடிகாரனுக்கு ஆதரவாக பேசி இருப்பாரா என்ன...


அந்த போலிஸ் நடராஜிடம்....

“நீங்க எங்கிட்ட சொல்லி இருக்கலாமே ராஜ்... நானே ரெண்டு தட்டு தட்டியிருப்பேனே...” என்று அவரும் நடராஜுக்கு சார்பாக பேச...


வேறு வழியின்றி.... அந்த சண்டைக்காரன் வீட்டைக் காலி செய்து கொண்டிருக்க... அப்போதும் கண்மணி விடவில்லை...


“இங்க பாரு... கரெண்ட் பில்.. தண்ணி பில்... அப்புறம்... நீ குடிச்சுட்டு வந்து பண்ணின கூத்துல வீடு என்ன நிலைமைல இருக்கோ... எல்லாம் அட்வான்ஸ்ல கழிச்சுட்டேன்... அது போக... இன்னும் நீதான் 345.75 ரூபாய் தர வேண்டும்... இந்தா பில்” என்று கறாராக நீட்ட.... அவனோ முறைக்க...


“என்ன முறைக்கிற... இந்த அமௌண்ட்ல 5 பைசா கூட குறையக் கூடாது..... செட்டில் பண்ணலேன்னா.... உன் சாமான் செட்டெல்லாம் உன் வீட்டுக்கு போகாது... காயலான் கடைக்குத்தான் போகும்..”


கண்மணி பேசிக் கொண்டிருக்கும் போதுதான் விக்கி உள்ளே நுழைந்தான்...


மீண்டும் அங்கு வந்த விக்கியிடம்... என்னவென்று நடராஜ் விசாரிக்க... சாவியைத் தொலைத்த விபரம் சொல்ல... நடராஜன் அவனைத் தேடச் சொல்லிவிட்டு... அங்கு வந்திருந்த காவலரிடம் மீண்டும் பேச ஆரம்பித்தார்... ஒரு வழியாக... கண்மணியிடம் மீதித் தொகை தரப்பட.... அதற்கு மேல் அவளும் பிரச்சனை செய்யாமல் உள்ளே சென்று விட்டாள்.....


விக்கி வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே சாவியைத் தேட..... அது அவன் கண்களுக்கு சிக்கவேயில்லை....


கண்மணி இரண்டு முறை வெளியில் வந்த போது கூட... விக்கி அவளிடம் எதுவும் கேட்கவில்லை... கேட்கவில்லை என்பதை விட கண்மணியிடம் கேட்கப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை…


கண்மணியும் அவனைப் பார்த்தாள் தான்... ஆனாலும் கண்டுகொள்ளவில்லை...


கிட்டத்தட்ட 25 நிமிடம் ஆகியும் விக்கி வராமல் போக..... நன்றாக இருட்ட வேறு ஆரம்பித்து இருக்க...


“போக வர 5 மினிட்ஸ்..... சாவி தேடி எடுக்க 10 மினிட்ஸ்.... வந்துருக்கனுமே.... என்ன ஆச்சு....” என்று நினைத்த ரிஷி... விக்கியைத் தேடி வர....


உள்ளே நுழைந்த ரிஷியை பார்த்த அந்த காவலர் முகம் சுருக்கினார்.... நேற்று இரவில் குடித்துவிட்டு.... காரில் இருந்து இறங்கி தாறுமாறாகப் பேசியவன் தானே இவன்... அவர் கண்டு கொள்ள...


ரிஷிக்கோ அந்த போலிஸை அடையாளமே தெரியவில்லை... எனவே சாதரணமாக நடாராஜிடம் பேசியபடி விக்கியை நோக்கிப் போக...


தங்களைத் தாண்டிச்சென்ற ரிஷியைப் பற்றி அந்த காவலர் நடராஜனிடம் விசாரிக்க... அவரும் விக்கி-ரிஷி இருவரைப் பற்றியும், அவர்கள் வந்த விபரம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்..


விக்கியின் அருகில் வந்த ரிஷி...


“சாவி கிடைக்கலையாடா...” கேட்டபடி அவன் முகத்தைப் பார்க்க... அவன் முகத்தில் எள் போட்டால் வெடித்து விடும் போல.. அப்படி ஒரு கோபத்தில் இருந்தான்...


இருந்தும்... அதை அடக்கியபடி...


“இல்லடா... இங்க இல்லை... பால் பாயாசத்தை குடிச்சுட்டு... அந்த மயக்கத்துல வீட்டுக்குள்ளயே விட்டுட்டு வந்துட்டியா” கடுப்பில் வார்த்தைகள் தாறுமாறாக வர


“ம்க்கும்... நான் தண்ணியடிச்சே மயங்கினது இல்லை... இந்த பால் பாயசத்தை குடிச்சுட்டு மயங்கப் போறேனா... போடா... நல்லா வாயில வந்துரும்... “ ரிஷி தன் நண்பனிடம் நக்கல் பாதி... கடுப்பு பாதியாக சொல்ல


“பேச்சைக் கொறச்சுட்டு சாவியத் தேடி கண்டுபிடிக்கிற வழியப் பாருடா” என்று விக்கி மீண்டும் சாவியைத் தேட ஆரம்பிக்க சொல்ல... அதிர்ந்தான் ரிஷி


“என்னது சாவியத் தேடனுமா.... போடா... அதுவும் இந்த இருட்டுல... வீட்ல ஆல்டர்னேட் சாவி இருக்குதானே அதை எடுத்துட்டு வந்து பைக்க எடுத்துக்கலாம்... இப்போ வா போகலாம்“ என்றவன்...


“மணி” என்று வெளியில் இருந்த படியே வீட்டுக்குள் இருந்த கண்மணியை அழைக்க...


“இவன் ஒருத்தன்... அவகிட்ட அறை வாங்காமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டான் போல....” விக்கி மனதிற்குள் சலித்தபடி நின்றிருக்க..


கண்மணியும் ரிஷியின் அழைப்பில் வெளியே வந்தாள்...


“எக்ஸ்கியுஸ்மி.... மணி ஒரு ஹெல்ப்... எங்க பைக் சாவி... இங்க எங்கேயோ மிஸ் பண்ணிட்டோம்.... தேடிப் பார்த்தோம் கிடைக்கலை.... இங்க எங்கயாவது கிடைத்தால் எடுத்து வைக்க முடியுமா...” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே...


அவனை கைகாட்டி நிறுத்தியபடி... “ஒரு நிமிசம்” என்று உள்ளே போனவள்... திரும்பி வந்தவள் கையில் இவர்களின் பைக்சாவி...


“இந்தாங்க” என்று ரிஷியின் முன் நீட்டினாள்....


வெளியில் அந்த வாடகை வீட்டுக் காரனிடம் பிரச்சனை ஆரம்பித்த போதே... படிக்க வந்திருந்த குழந்தைகளை வீட்டிற்கு போகுமாறு கண்மணி கிளம்பச் சொல்ல... அப்போதுதான் அதில் ஒரு பையன்... அவளிடம் இந்த சாவியை எடுத்துக் கொடுத்திருந்தான்... பிரச்சனை பெரிதாக ஆகி இருக்க... கண்மணியும் இவர்களிடம் இந்த சாவியைக் கொடுக்க மறந்து விட்டிருந்தாள்...


“ஊஞ்சலுக்கு பக்கத்தில் கிடந்ததாம்... பசங்க கொடுத்தாங்க...” என்று தகவல் சொல்லியபடி கொடுக்க... விக்கி முகம் கடுத்தபடி....

“இவ்வளவு நேரம் நான் தேடிட்டுதானே இருந்தேன்... பார்க்கத்தானே செய்த... அப்போ நீட்டிய சாவிய அப்போதே கொடுத்திருக்கலாமே...” அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபத்துடன் கேட்க…


இவளுக்கும் அவன் கோபத்தில் முகம் மாறி இருந்தது…


“நீங்க பைக் சாவியத்தான் தேடிட்டு இருக்கீங்கனு எனக்குத் தெரியாதே.... அது மட்டும் இல்ல... நீங்க எங்கிட்ட கேட்ருந்தீங்கனா... நானும் அப்போதே கொடுத்திருப்பேன்..” நக்கலாகப் பட்டென்று சொன்னாள்..


வந்ததிலிருந்து ஏதோ எதிரியைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த விக்கியை வாய்ப்பு கிடைக்க... அதைத் தவறாது பயன்படுத்தி.... அவனைப் பந்தாடினாள் கண்மணி...


அவளின் வார்த்தைகள் ரிஷியின் முன் விக்கிக்கு பெருத்த அவமானமாகப் போய் விட.... அதில்


“ஏய்” என்று விரல் நீட்டப்போக...


”ஹேய்.... என்ன ஏய்...” என்று கண்மணியும் வரிந்து கட்டிக் கொண்டு போக... இடையில் பதறியவன் ரிஷிதான்….


கண்மணியிடமிருந்து சாவியை வாங்கிய ரிஷிக்குமம் விக்கியின் கோபம் புரிய....


ரிஷிக்குத்தான் இப்போது கலவரம் ஆகிப் போனது... இருக்கும் நிலைமை சரி இல்லை... போலிஸ் ரவுடி என... ஆனால் சுற்றம் மறந்து பேசிக் கொண்டிருந்த விக்கியோடு இடத்தைக் காலி செய்வதுதான் இப்போதைக்கு புத்திசாலித்தனம் எனத் தோன்ற..


கண்மணிக்கு நன்றியை சொல்லியபடி விக்கியை அழைத்துக் கொண்டு.... வேகமாக இடத்தைக் காலி செய்து நடராஜிடம் சொல்லியபடி அவர்களை கடந்து போக...... அப்போது நடராஜிடம் அந்தக் காவலர்


“இவனுங்கள்ளாம் ஏன் வீட்ல வந்து பார்க்கச் சொல்ற..... நேத்து நைட்.... தண்ணி அடிச்சுட்டு பொறுக்கி மாதிரி பிஹேவ் பண்ணினாங்க... பார்த்து... பாப்பா மட்டும் தனியா இருக்கு வீட்ல” என்ற வார்த்தைகள் இருவருக்குமே காதில் விழ... விக்கி காவலரைப் பார்த்து நேருக்கு நேராக முறைக்க... ரிஷிக்கு இப்போது புரிந்தது அவர் தன்னைத்தான் சொல்கிறார் என்று புரிந்தது.....


ஆனால் விக்கியோ

“டேய் அவர் நம்மள பொறுக்கினு சொல்றாருடா.... யாருடா இங்க பொறுக்கி.. நாமாளா... இல்லை அந்த பாப்பாவா.. பாப்பவாம் பாப்பா..... விடுடா என்னை.. இவனுங்கள... ” என்று திமிற..


”டேய் அடங்குடா” என்று விக்கியின் வாயை மூடியபடி... இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் ரிஷி...

......

அன்று இரவு... ரிஷி ஹாலில் கீழே மெத்தையைப் விரித்து அதில் படுத்தபடி கிரிக்கெட் மேட்ச்சை மிகத்தீவிரத்துடன பார்த்துக் கொண்டிருந்தான்.... அவன் அருகில் விக்கி வந்தது தெரிந்தது கூட அவன் தலையணையை டொம்மென்று அவனருகில் போட்ட போதுதான்...


விக்கியைப் திரும்பிப் பார்த்து பெரிதாக புன்னகைத்தவன்...


“நாளைக்கு கிளாஸ் டெஸ்ட்டுக்கு படிச்சுட்டேல்ல மாப்பு… இல்ல உன்னை நம்பி கிரிக்கெட் பார்த்துட்டு வருகிற என்னை மாதிரி அப்பாவி ஜீவன்களை ஏமாத்திராதடா... இன்னைக்கு நடந்த டென்சன்ல படிக்காமல் விட்றாதடா... படிப்பு முக்கியம் நமக்கு...” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே


கேட்ட விக்கியோ.... தன் கையில் இருந்த தலையணையினாலே ரிஷியை நன்றாக மொத்த ஆரம்பிக்க


”டேய் உனக்கு கோபம் வந்தா அவளைப் போய் அடிடா... என்னை வந்து அடிக்கிற... ”என்ற போதே...


“அவளுக்கு பதிலா நீ வாங்கிக்க..” என்று இன்னும் நாலு அடி போட்டவன்


ரிஷிக்கும் தனக்கும் நடுவில்... தலையணைகளை பாலம் போல் அடுக்க.... ரிஷி... புரியாமல் விழித்தான்...


“என்னடா டிவில இந்தியா-ஸ்ரீலங்க்கா மேட்ச் நடக்குது.... நீ என்னடான்னா.... இந்தியாக்கு இலங்க்கைக்கும் ராமர் பாலம் கட்டின மாதிரி எனக்கும் உனக்கும் நடுவில பில்லோள பாலம் கட்டுற.... இதுல யார் இந்தியா... யார் ஸ்ரீலங்கா..”


“ஆமாம் என்னோட சீதை இவர் வீட்ல இருக்கு.... இவர்கிட்ட இருந்து மீட்க பாலம் நாங்க கட்டுறோம்.... யார்டா இவன்... போன தடவை உன் பக்கத்தில் படுத்து மேட்ச் பார்த்த அனுபவம் தான்.... யப்பா சாமி.... காலை மேல போடனும்னு தோணுச்சுனா.. இது மேல போடு.... என்னை விட்ரு...” என்று படுத்தவனைப் பார்த்த ரிஷி....


“ஹி ஹி... நண்பண்டா... என்ன ஒரு பாசம்” என்று பல்லைக் காட்ட


“மூடிட்டு மேட்சப் பாரு” விக்கி நக்கலாய்ச் சொல்ல


“ஆனால் விக்கி... இந்த பில்லோலாம் எம்மாத்திரம் எனக்கு....... தூசு மாதிரி....”


“அடப்பாவி...” விக்கி வாய் பிளக்க.... அதோடு விடாமல்


“என்னைப் பார்த்து கிண்டல் பண்ணிட்டேதானே.... இருக்குடா உனக்கு... உன் கல்யாணத்துக்கு என் கிஃப்ட் பில்லோதாண்டா உனக்கு...”


“ஆமாம் எனக்கு நாளைக்கு தான் கல்யாணம் பாரு.... போடங்க்...” என்று ஆரம்பித்தவன்....


“முதல்ல படிச்சு முடிக்கிற வழியப்பாரு.... வந்துட்டாரு கல்யாணத்தப் பற்றிப் பேச...” என்று பேச்சை முடித்தான் விக்கி....


“ஹ்ம்ம்ம்.. படிக்கிற பிள்ளைனு அப்போப்ப நிருபிக்கிறடா மச்சான்..” பெருமூச்சு விட்டவனாக.... தன் நண்பன் புறம் திரும்பி ஒருக்களித்துப் படுத்தபடி....


“அதுசரி... அந்த நட்ராஜ் ஒத்து வரவில்லை.... வேற யாரை வைத்து கட் பண்ணி ஒட்ற வேலை எல்லாம் பார்க்கப் போறா... இல்ல இந்த ப்ராஜெக்டே வேண்டாம்னு விடப் போறியா..”


விக்கி அவனைத் திரும்பி கேள்விக் குறியாகப் பார்த்தான்...


“நட்ராஜ் ஒத்து வரலைனுநான் எப்போடா சொன்னேன்...”


“ஒண்ணும் ஒண்ணும் இரண்டு கணக்குதான்... அவர் பொண்ணுதான் பிடிக்கலைல்ல.... அதுதான் கேட்டேன்..”


“மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவாங்களாடா” எரிச்சலாகக் கேட்டான் விக்கி...


“ஹ்ம்ம்ம்ம்ம்... மணி உனக்கு மூட்டைப் பூச்சியா... என்ன ஒரு உதாரணம்... ஆனால் மூட்டைப் பூச்சிக்கு பயந்தது உண்மைதானே...” வம்பிளுக்க ஆரம்பித்தான் ரிஷி..


“என்னடா மணி... கண்ணுனு... கண்மணினு சொல்லுடா.... ரொம்பத் தெரிஞ்சவ மாதிரி.. மணினு கூப்பிடுற... ச்சேய்.... தூங்க்கப் போற நேரத்தில் அந்த ரவுடி ராக்கம்மாவப் பத்தி பேசுற” என்றவனுக்கு...


ரிஷி கேட்டதும் அவள் பைக் கீயைக் நீட்டியது இன்னும் பெரிய அவமானமாகவே இருந்தது....... அது அவனின் தன்மானத்தை வெகுவாக சுட்டிருந்தது...


’என்னவோ ரிஷியை முதலிடத்தில் நிறுத்தி தன்னை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது போல் இருந்தது...’


‘எந்த இடத்திலும் அவன் சொல்வது,செய்வதுதான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பான் விக்கி.... ரிஷியின் மேல் இங்கு குற்றம் இல்லை... ஆனால் அந்தப் பெண் என்னவோ ரிஷிக்கு முக்கியத்துவம் அளித்தது போல் தோற்றமளித்தது..


சில பேரைப் பார்த்தவுடனே பிடிக்கும்... சில பேர் ஏனென்று தெரியாமல் முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போகும்... அப்படித்தான் கண்மணியின் மேல் விக்கியையும் அறியாமல் வெறுப்பு வந்திருந்தது....


முதலில் அவள் தன்னை தவறாக நினைத்து விட்டாள் என்று ஆரம்பித்த கோபம்... அவளின் வயதுக்கு மீறிய பேச்சில்... அதன் பின் அடாவடியான நடவடிக்கையில்... அதன் பிறகு கடைசியாக... தன்னை நேரிடையாக தாக்கியது.... ரிஷியிடம் சாவியை நீட்டியது என.... கண்மணியின் மீதான விக்கியின் வெறுப்பின் அளவு இன்னும் அதிகரிக்க...


இது எதுவும் தெரியாமல் ரிஷி.... விட்டத்தைப் பார்த்தபடி


“கண்மணி...” நிதானமாக அந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்தான்


”எவ்வளவு சாஃப்டான பேர்...” என்று நண்பனைப் பார்க்க... அவன் முறைக்க


”நீ அந்த கண்ணுக்காக... சாரி சாரி... அந்த கண்மணிக்காக நெற்றிக் கண்ணைத் திறக்காத.. இல்லடா பேருக்கு ஆப்போசிட்டா இருக்காள்னு சொல்ல வந்தேன்” என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே


“டேய் ரிஷி, உன் பேர் கூட ரிஷிதான்,... அதுக்காக ரிஷி மாதிரியா வாழ முடியும்....உனக்கு ஏண்டா இந்த கம்பெரிஷன்லாம்” என்று அவன் நினைவுகளில் தோன்றிய போதே..


“அவளப் பற்றி பேசாதன்னா… அவளையே பற்றி பேசிட்டு இருக்க.. உனக்கு கிரிக்கெட் கட்டுடா இன்னைக்கு” என்றபடியே விக்கி அவன் மேல் பாய்ந்திருந்தான்... அவன் ரிமொட்டைப் பறிக்க...



விக்கியின் எண்ணம் புரிந்தவனாக...


“டேய் டேய் நான் மேட்ச் பாக்கனும்டா” இவனும் ரிமோட்டை கொடுக்காமல் போராட.... கடைசியில் ஜெயித்தது விக்கிதான்


ரிஷியிடமிருந்து ரிமோட்டைப் பறித்து... “உனக்கு இன்னைக்கு கிரிக்கெட் கிடையாதுடா... நான் பாட்டு பார்க்க போகிறேன்” என்று சேனல் அலைவரிசையை மாற்ற... அதிலோ


நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்

நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா

நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்”

அதுவரை உர்றென்று இருந்த ரிஷியோ… அந்தப் பாடலைப் பார்த்தவுடன் அடக்க முடியாமல் சிரிக்க… விக்கி பல்லைக் கடித்தபடி தொலைக்காட்சியை அணைக்க…



”டேய் டீவியைப் போடு… காண்டாகிருவெண்டா..” என்று ரிமோட்டைப் பறிக்க… விக்கியோ அவனிடம் கொடுக்காமல் விளையாட்டு காண்பிக்க…


“டேய் நீ இப்போ கொடுக்கலை… அந்த பாட்டை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பேன்”


“உனக்கு அந்த பாட்டெல்லாம் தெரியாதுனு தெரியுமே எனக்கு…. “ ரிமோட்டைக் கொடுக்காமல் விக்கியும் ஆட்டம் காட்ட


ஏதோ ஏதோ ஆனந்த ராகம்

உன்னால் தானே உண்டானது

கால் போன பாதைகள் நான் போன போது

கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது


கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி”


”எப்புடி… எங்களுக்கு மெலடி வரும் டா…” என்று புருவன் உயர்த்தியவன்… அதோடு விடாமல் விக்கியின் காதில்…


“கேளடி கண்மணி பாடகன் சங்கதி”



என்று மீண்டும் ஆரம்பிக்க.. விக்கி அதற்கு மேல் அவனோடு வம்பளப்பானா.. ரிமோட்டை அவன் முகத்திலேயே தூக்கி எறிந்து விட்டு போய் விட்டான் விக்கி அவன் அறைக்கு..


”ஹ்ம்ம்.. என்னமா… பாடிருக்காங்கடா….” ஏனோ மனம்… சற்று முன் விக்கியை வெறுப்பேற்றுவதற்காக பாடிய பாடலிடமே இருந்தது….



கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது”



"செம்ம லைன்டா" என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் மீண்டும் தொலைக்காட்சியை உயிர்பித்து கிரிக்கெட்டில் கவனம் வைக்க ஆரம்பித்தான்


ரிஷிக்கு அந்த வருடத்தின் முதல் நாள்.... அழகாய்த் தொடங்கி அழகாக முடிந்தது ஆனால்... அழகாகத் தொடங்கிய வருடமோ அது போல அழகாக முடியவில்லை.... அவன் வாழ்க்கையின் போராட்டங்களை அனுபவிக்க போகும் அனுபவங்களை கற்றுக் கொடுக்க காத்திருந்தது..


4,159 views1 comment

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

1 Comment


Tee Kay
Tee Kay
Jul 12, 2020

Nice story. Interesting characters.

Like
© 2020 by PraveenaNovels
bottom of page