அன்பே நீ இன்றி-49

அத்தியாயம்:49:

அறையில் தன் கணவனுக்காக காத்திருந்த தீக்‌ஷாவுக்கு, அவன் வருவான் என்று காத்து காத்து விழி பூத்து போனதுதான் மிச்சம்… போன் அடித்தாலும் விஜய் எடுக்க வில்லை….

இவள் அடங்குவாளா என்ன,….. விஜய் வந்து என்ன திட்டித் தீர்த்தாலும் விடுவதில்லை என்ற முடிவோடு அவனுக்கு ரிங் அடித்துக் கொண்டே இருந்தாள்… அவன் மொபைலை சைலெண்ட் மோடில் போட்டு தன் நினைவுகளில் ஆழ்ந்து போயிருந்ததை அவள் அறிவாளா…

மொபலை கையில் எடுத்து…. ரிங் போட்டபடியே தன் அறையை விட்டு வெளியே வரவும்… யுகி போனும் கையுமாக தன் அறைக்கு போகவும் சரியாய் இருக்க… யுகியைப் பார்த்தவள்… தன் கணவனை அழைக்கும் பணியை விடுத்து தன் நண்பனை தேடிச் சென்றாள்… அவனின் அறைக்கு………..

யுகி வழக்கம் போல் ஆர்த்தியோடு போனில் பேசிக் கொண்டிருக்க………. புயலென உள்ளே நுழைந்த தீக்‌ஷா…முதல் காரியமாய் செய்தது அவனிடமிருந்து போனை பறித்ததுதான்… இதை எதிர்பாராத யுகி……… முறைத்தான் தீக்‌ஷாவைப் பார்த்து….

போனை வாங்கியவள்….

“சாரி ஆர்த்தி…. யுகி கொஞ்ச நேரம் கழிச்சு உன் கிட்ட பேசுவான் “ என்றவள் அவளின் சம்மதம் கிடைத்த பிறகு..போனை வைக்க….

“கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லை….. ” என்று கோபமாய் முறைத்தான்…

இவளோ சிரித்தபடி

”அதெல்லாம் நமக்கெதுக்கு….. நீ நான்லாம் அதைப் பார்க்கிறவங்களா என்ன….. ” அவனின் கோபம் புரிந்தும் அதை எல்லாம் தூரப் போட்டவளாய் பேச…. யுகியும் நிதானத்திற்கு வந்து….

“என்ன விசயம் தீக்‌ஷா….. “ என்று சாதரணமாய் பேசுவதற்கு முயற்சி செய்ய…. அது போதாதா அவனின் தோழிக்கு……..

“முக்கியமான விசயம் …. வா மாடிக்கு போகலாம்….” என்று கண்களை தீவிரமாக வைத்து…. சொல்ல………

”சரி…. 10 மினிட்ஸ் கழித்து வரு…” என்று சொல்லக் கூட விடவில்லை….. அவனின் கைப்பற்றி இழுத்துக் கொண்டு மாடிக்கு போனாள்….

”விடு தீக்‌ஷா…..” என்று கைகளை உதறியவனிடம்….

“சார்…. என்ன விஜயேந்தர்… சுரேந்தர்…. இவங்க ரெண்டு பேரோட தம்பினு நிருபிக்கிறீங்களோ…. ரொம்பதான் பிகு பண்ற….. என்னமோ பழையபடி பேச ட்ரை பண்றேனு சொன்ன….. எனக்கும் விருமாண்டிக்கும் உள்ள பிரச்சனையில நீ தலையிடாத…. ” என்று மிரட்டும் தொணியில் பேசியவள்…. தான் ’விருமாண்டி’ என்று சொன்னதை நினைத்து தலையில் அடித்தபடி…

“விஜய் அத்தானே என்னைப் புரிஞ்சுக்கிட்டார்லடா…. அவர் என்னைப் பார்த்துபாரு…. என்னை மட்டும் அல்ல… எங்க வாழ்க்கையையும்….“ என்று அழுத்தமாய் முடித்தவள்….

”காயா பழமா” என்று விரல் நீட்டியபோது அவனின் தோழியாக குறும்பில் கண்கள் மின்ன சிரிக்க…

யுகி அப்போதும் இறுக்கமாகவே நின்றுகொண்டிருந்தான்….

“டேய் என்னைப் பார்த்தால் பாவமா இல்லையாடா….” என்று தன் விளையாட்டை எல்லாம் நிறுத்தி….உருக்கமாக அவனைப் பார்த்தவளின் கண்களில் நீர் கசிந்தது…

”என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டிங்களா…. உன்கிட்ட கூட என்னால உரிமையா சண்டை போட்டு என் கோபத்தை காட்ட முடியுது…. ஆனால் உன் அண்ணன் கிட்ட என்ன பேசுறது… எப்படி பேசுறதுனு கூட தெரியலடா எனக்கு…. என் நிலைமை எந்த பொண்ணுக்கும் வரக் கூடாது யுகி…… உன் அண்ணனை பழி வாங்கிட்டேன்னு சொல்லித்தானே பேச மாட்டேன்கிற… அதை சரி செய்ய இப்போ நானே தயாரா இருக்கேன்… ஆனால் அவர் தயாரா இல்லைடா…” என்று நெகிழ்வாய்ப் பேச…

அவளின் பேச்சில் எள்ளளாகச் சிரித்தான்…. இருந்தும் அதில் வேதனையின் சாயலே விஞ்சியிருக்க…

”இதை விட என் அண்ணன் கஷ்டப்பட்டார்னு சொன்னா உனக்கு தெரியுமா… இல்ல புரியுமா….. சொல்லு தீக்‌ஷா….. நீ பார்த்த என் அண்ணனாவா இருக்கார்…. சுத்தமா அவரோட இயல்பையே மாற்றி........ இப்போது கூட பரவாயில்லை….. இந்த வீட்டுக்கு கூட வராமல்… இந்த வீட்டுச் சாப்பாடு கூட சாப்பிடாமல்….உன் பக்கத்திலேயே தன் உயிரை மட்டும் கூட்டுக்குள் வச்சுக்கிட்டு அவர் அனுபவிச்சது உனக்கு தெரியுமா….. நான் பார்த்தேன்…. பக்கத்தில் இருந்து பார்த்தேன்…. உன்னை மட்டும் மேரேஜ் பண்ணாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது…..“

வார்த்தைகளால் பந்தாடிக் கொண்டிருந்தவனை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள் தீக்‌ஷா….. வார்த்தைகள் கூட மறந்து….

விஜய்யை அவளால் அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்பதுதான் நிஜம்….கற்பனை கூட செய்ய முடியவில்ல அவளால்…..

“என்ன பேசி என்ன பயன்…. உன்னால முடிந்த அளவு படுத்திட்ட…. இன்னும் வேற ஏதாவது மிச்சம் மீதி இருக்கா என்ன… அதையும் முடிச்சு…. அந்த மனுசனை உயிரோட கொன்னுடு… ஏனென்றால் அது மட்டும் தான் என் அண்ணன் கிட்ட இருக்கு” என்ற போதே…

யுகியை தன் பேச்சால் பந்தாட நினைத்தவள்… அவன் வார்த்தைகளின் வீச்சு தாங்காமல்…. தாங்கும் திராணியற்றுப் போனவளாய்…

சுவரோடு சரிந்து உட்கார்ந்த தீக்‌ஷா…. அழ ஆரம்பிக்க….. யுகி பதறி தன் கோபத்தையெல்லாம் விட்டு விட்டு…. அவளின் கைகளை ஆறுதலாகப் பற்ற… அதில் தீக்‌ஷா இன்னும் அழ ஆரம்பித்தாள்…

“முடியலடா… எனக்கு…. அவராவது இத்தனை மாதங்கள் தாங்கிகிட்டார்… என்னால 2 நாள் கூட தாங்க முடியலை….. புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்டா…. பழைய தீக்‌ஷா வா தான் இருக்கேன்… ஆனால் அவரோட மனைவியா…. அதுதாண்டா எனக்கு முடியலை….. எனக்கு ஏதாவது ஞாபகம் வரலைனா கூட ஞாபகப்படுத்த எல்லோரும் டிரை பண்ணுவீங்க தானே,…. அதை அவர் பண்ண மாட்டேன்கிறார்டா…. அவரோட வாழ்ந்த வாழ்க்கையை நான் வேற யார்கிட கேட்க முடியும் நீயே சொல்லு….. ஆனால் பிடிவாதம் பிடிக்கிறார்டா” ஆதங்கம் பாதி…. கோபம் பாதி… என தன் நண்பனிடம் கொட்ட

அவளின் அருகில் அமர்ந்த யுகி….

‘அண்ணா பிடிவாதம்லாம் பிடிக்கலை தீக்‌ஷா……உன் உடல்நிலை அந்த மாதிரி இருக்கு… அவரும் என்ன பண்ணுவார்…. சரி விடு…. அழாத…. இனி நல்லதே நடக்கும்னு நினைப்போம்…. “ என்று தேற்ற முயன்றான்….

”என் பைத்தியம் எனக்கு தெளிஞ்சுருமாடா….” என்று தேம்பியபடி கேட்டவளிடம்…

வாய் விட்டு சிரித்த யுகி….

“எது….. விருமாண்டி மேல இருக்கிற பைத்தியமா…..” என்று கண்ணடிக்க….

அழுகையை துடைத்த தீக்‌ஷா, சிரித்தபடி….

“அது என்றைக்குமே போகாது…… “ என்று வேகமாய்ச் சொல்ல…

”யப்பா……… இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா….. யுகி……. காதல் மழைல உன்னையே தாக்குறாங்கடா….. “ என்று நெஞ்சை பிடித்து போலியாய் நடிக்க….

“உன்னை……………. “ என்று அவனை அடிக்கப் எழுந்த தீக்‌ஷாவை விட்டு யுகி வேகமாய் நகன்று கீழிறங்கி ஓட….

விஜய் மாடிப்படிகளில் இவர்களை பார்த்தபடியே ஏறி வந்தான்…………….

விஜய்யை பார்த்த அடுத்த நொடியே தீக்‌ஷா அப்படியே நின்று விட…. யுகி தன் அண்ணனின் பின்னால் நின்றவன்…

“அண்ணா…. என் கூட பேச மாட்டியா நீன்னு அடிக்கிறாண்ணா….. எனக்கே இந்த நிலை… பார்த்து…” என்று பயந்தவனாய் நடித்து விஜய்க்கும் எச்சரிக்கை செய்தவன்

“ஹேய் தீக்‌ஷா…. சின்னைப் பையனை கூட்டி வந்து மிரட்டுனேல்ல…. உன் ஆளே வந்துட்டாரு…. பிடிச்சுக்கோ….. ” என்று தன் அண்ணனை அவள் புறம் தள்ளிவிட்டு ஓடிப் போய் விட…. விஜய் தீக்‌ஷாவிடம்…

“ஹ்ம்ம்.. ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்க போல…” என்றபடி…..

”கீழ அம்மா தேடிட்டு இருக்காங்க உன்னை…. வா போகலாம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வந்த வழியே போனவனை…….. எட்டி கைப்பிடித்து இழுத்தாள் தீக்‌ஷா….

அவன் இழுத்தால் இவள் மேலே போய் விழுவாள்… விஜய் விழுவானா…. அந்த இடத்திலேயே நின்றவன்……….

“என்ன….” என்று மட்டும் கேட்டான்… அவள் புறம் திரும்பாமலே…

தீக்‌ஷாவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும்…..அவனைப் பற்றியிருந்த தன் கரங்களின் நடுக்கத்தை உணர்ந்தாலும்….. மனதில் அவன் தனக்கு யார் என்ற உறவினை அழுத்தமாக பதிய வைத்தவள்…. அதே அழுத்தத்தோடு அவன் கைகளை பற்ற….. விஜய்க்கும் உள்ளம் துடித்தது…..

தவிக்கும் தன்னவளை…. அதே நிலையில் இருக்கும் அவனால் புரிந்துகொள்ள முடியாதா என்ன…. அவளை தன்னோடு இழுத்து அணைத்து…. இருவரின் வேதனையையும் களைய முடியாத தங்கள் இயலாமையை எண்ணி மருகியவன்…..

இத்தனை நாள் அவள் தள்ளி இருக்கும் போது.. தன்னை அடக்கி அவளை விட்டு விலகி இருக்க முடிந்த அவனால் இன்று அது முடியாமல் திணறினான்…… இருந்தும் ஆழப் பெருமூச்சை இழுத்துவிட்டவன்….

”தன் கரம் சேர்ந்த அவள் கரத்தை தன் மற்றொரு கையால் மனம் வலிக்கப் பிரித்தவன்……..” அப்படியே நின்றான்…..

தீக்‌ஷாவுக்கு யுகியிடம் பேசியது போல விஜய்யிடம் பேச முடியவில்லை………..

“என்ன பேசுவது.. எப்படி பேசுவது.. தான் பேசினாலே அவன் முகம் சுழிப்பானே… இல்லை அப்படி எல்லாம் இப்போது நினைக்க மாட்டான்” என்று யோசித்து மண்டை காய்ந்த்துதான் மிச்சம்………….

தன் காதலை எப்படி அவனிடம் புரிய வைப்பது…….. அவனோடு வாழ வந்தாகி விட்டது…… அதுவும் அவனின் மனைவியாகவே…. இன்னும் என்ன எதிர்பார்க்கிறான் இவன்………. மனதோடு போராடினாள் தீக்‌ஷா…

தன் கையை வேறு விஜய் விலக்கி விட… அதன் வெளிப்பாடாக

“இதற்கு பதில் நான் செத்திருக்கலாம் அத்தான்…………..” என்று கோபத்தோடு சொன்னவளை அதே கோபத்தோடு பார்த்தான்…

’”என்ன பார்க்கிறீங்க………… “ என்று தன் பயம் எல்லாம் தெளிந்து பேச…

“வேற என்ன என்னைப் பண்ணச் சொல்ற…………………….” என்று ஆரம்பித்தவன்…. பின் அமைதியான குரலில்

”சுரேன் – பாரு விசயமா அம்மா பேச வர சொன்னாங்க…”. என்று காரணம் சொல்லி மீண்டும் நகர்ந்தவனை….

தன் பயம், தன் தயக்கமெல்லாம் தூக்கி எறிந்த தீக்‌ஷா…

“என்ன வேணும்னாலும் பண்ணலாம்…. அது எல்லாத்துக்கும் நான் தயாரா இருக்கேன்….. கழுத்தில தாலி இல்லாமல் கூட….. போதுமா….. நான் சொல்ல வருவது புரியுதா… இல்லை இன்னும் விளக்கமா சொல்லனுமா….. “ என்று நிறுத்த………….

“ஓஓஓஓ……. அவ்வளவு பெரிய ஆளாகிட்டீங்களா நீங்க…. எனக்கு புரியலயே நீங்க விளக்கமா சொல்லுங்க மேடம்” என்று எகத்தாளமாய்க் கேட்டவனின் கண்கள் அவளை உரசாமல் வேறெங்கோ இருக்க….

விஜய்யின் எகத்தாளமான பேச்சு…. தீக்‌ஷாவை இன்னும் அதிகமாய் உசுப்பேற்ற….

சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு….. மாடியில் இருந்த அறை ஏதுவாய்ப் போக,… விஜய்யை இழுத்தபடி அங்கு செல்ல… விஜய் எதிர்ப்பு காட்டாமல், இலகுவாகவே அவள் பின் சென்றான்…..

உள்ளே சென்றவன்…. அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தபடி……… என்னதான் செய்யப் போகிறாள் என்று பார்க்க ஆரம்பித்தான்…..

கதவைத் தாழிட்டவள்…

அவனருகில் வந்து அமர்ந்தாள்…..

அவனைப் பார்க்க…. அவனோ மொபைலில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க…. ஆத்திரத்துடன் மொபைலை பறித்து போட்டு விட்டு…. அவனை முறைத்தபடி இருக்க….

“ஏய்… என்னை எதுக்கு இப்போ முறைக்கிற… இதுக்குத்தான் கூட்டிட்டு வந்தியா” என்று தனக்கு நடந்து கொண்டிருந்த ரணகளத்திலும்…. ஒரு ஓரத்தில் குதூகலாமாய் கேட்க…….

”என்ன ஏய்…….. என் பேரு தீக்‌ஷா…. தீக்‌ஷா விஜயேந்தர்…… ஒழுங்கா பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க……”

விஜய்க்கு அவளின் பேச்சு அவனை…… மீண்டும் அவர்களின் வசந்த காலத்துக்கு இழுத்துச் சென்றாலும்… அவனால் மூழ்க முடியவில்லை…………. தன்னைத்தானே சமாளித்தவன்…. எழுந்தபடி

“விளையாடாதா… கீழத் தேடப் போறாங்க…..“ என்று

“ஆமா எனக்கு ரொம்ப ஆசை.. உங்களோட இப்படி விளையாட” நக்கலாய்ச் சொல்ல… விஜய் ஆச்சரியமான பார்வையைப் பார்க்க….

”உங்களுக்கு பயம்…. எங்க என்கிட்ட தோத்துப் போயிருவோம்னு…. என்கிட்ட பேசக் கூட பயப்படறீங்க“ சவாலாய் கேட்டவளிடம்… திரும்பிய விஜய்….

”உன்கிட்ட மொத்தமா என்னைத் தோற்றதினலதான்…. என்னை நானே இன்னைக்கு ஜெயித்து வெளிய வர முடியாமல் இருக்கிறேன்…… ” என்று நகர…

அவன் கைகள் அவள் கைகளோடு சிறைபட்டிருந்தன…….

“ஐ லவ் யூ விஜய் அத்தான்” 5 வார்த்தைகள் தான்… ஆனால் தீக்‌ஷாவுக்கு அதை அவனிடம் சொல்லி முடிக்கும் முன் அவளின் இதயம் ஆயிரம் முறை துடித்திருக்க……… கண்களும் கலங்கியிருந்தது………..

தன்னவளின் கண்கள் காண சகியாத விஜய்….. மீண்டும் அமர்ந்து……….. கட்டிலோடு சாய்ந்து கண்களை மூடியபடி…………….சில நொடிகள் இருந்தவன்…..

“எப்படி இவளைச் சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்……..

விஜய்யின் அமைதியில் கலக்கம் கொண்டவளாய்….

“அத்தான்……” மெல்லமாய் குரல் கொடுக்க… ”ம்ம்ம்ம்” என்ற ஒலியில் தன் பதிலை அவளுக்கு கொடுத்தவன்……………. தொடர்ந்தான்

”நீ வேற நான் வேற இல்லைடி………. உன் உயிரோடும்……….உடலோடும் இரண்டற கலந்தவன் நான்………. நான் உன்னைத் தள்ளி வைக்க நினைக்கலை………….. புரிஞ்சுக்க………… உன் பேர் சொல்லி கூப்பிட என் உயிர் வரை துடிக்கிறேன்… நீ சொன்னதால நான் உன் பேரைக் கூப்பிடாமல் இருக்கிறேன் என்று நினைக்கிறாயா….. ஒரு வைராக்கியம் தான்…. இந்தர்னு ஆசையோடு கூப்பிட்ட உன் குரலுக்காக ஏங்கிட்டு இருக்கேன்……….. அதுவரை நானும் உன் பேரைக் கூப்பிட மாட்டேனு எனக்குள்ள ஒரு சபதம்….” என்ற போதே

”ஐ லவ் யூ இந்தர் அத்தான்…” என்று கணவன் ஏங்கிக் கேட்ட பெயரை சொல்லி விட்டு சிறு பிள்ளை போல் ஆவலாய்ப் பார்த்தவளை….. வலியாய்ப் பார்த்தான் அவள் கணவன்….

இதுவா அவன் எதிர்பார்த்தது………. தன்னிடம் காதல் உணர்ந்த நொடியே அவள் அவன் மீது எடுத்துக் கொண்ட உரிமை…. இந்த தீக்‌ஷாவிடம் இல்லையே….. இந்தர் அத்தானா….

நீ என்னை இந்தர் என்று மட்டும் தான் சொல்வாய் என்று திருத்த முடியுமா….. இப்போதும் தீக்‌ஷாவிடம் காதல் இருக்கிறதுதான்…. ஆனால் விஜய்யால் அதை அந்நியமாக நினைக்க முடிகிறதே தவிர… அனுபவிக்க முடியவில்லை…. இன்னொன்று இதை அனுபவிக்க ஆரம்பித்தால் என் தீக்‌ஷா எனக்கு கிடைக்காமல் போய் விடுவாளே…உள்ளம் பதபதைத்தது….

தீக்‌ஷாவை அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தவனாய்………..

“சரி… உன் வழியிலேயே வருகிறேன்…. நீ என் மனைவி… அது மறுக்க முடியாத உண்மை…. அதே போல நான் உன் கணவன் அதுவும் மாற்றவே முடியாத ஒன்று…… நீ என்னை விட்டு பிரியும் வரை………. நீயும் நானும்………. கணவன் மனைவி என்ற பந்தத்தில் சந்தோஷமாய் கூடி வாழ்ந்திருக்கிறோம்………… ஆனால் அதை எதையும் ஞாபகபடுத்தும் இழி செயலை நான் செய்ய மாட்டேன்…. அப்படி செய்தால் நம் தாம்பத்தியமே கேவலம் ஆகி விடும்….. நாம் வாழ்ந்த வாழ்க்கை ஒரு துளியேனும் உன் உடலிலும்…. மனதிலும் இருக்கிறது என்றால்……. நீ சொன்னாய் அல்லாவா எல்லா வகையிலும் உன்னை தர தயாராக இருக்கிறேன் என்று…. அதெல்லாம் வேண்டாம்……. அந்தப் பேராசையெல்லாம் எனக்கு இல்லை….

ஆனால்…… என்னைக் காதலோடு அணைத்து ஒரே ஒரு இதழ் தீண்டல்… இங்க கூட வேண்டாம்….. இங்க……. உதடுகளை தாண்டி……….. கன்னத்தில் விரல் வைத்து காண்பித்தவன்......” அதற்கு மேல் பேசமுடியாமல் நிறுத்த………… தீக்‌ஷா…..

தன் கணவன் சொன்னதை செய்து விடும் உத்வேகத்துடன் அவனருகில் நெருங்கி……..அவனை நோக்கி குனிந்தவளால்……… அதற்கு மேல் அவள் பெண்மை இடம் கொடுக்கவில்லை……… தன்னை ஆராதிக்கும் ஆணிடத்தில் கூட தயக்கம் காட்டுவதுதான் பெண்மையின் இயல்பு….. அது திரியில் தூண்டப்படும் ஒளியைப் போன்றது….. தூண்டல் இன்றி தீக்‌ஷாவின் பெண்மை தயக்கமாய் நின்று விட…. கண்களில் வழிந்த கண்ணீர் முத்துக்கள்தான் அவள் கணவனின் கன்னங்களை முத்தமிட்டன……

கண் திறந்த விஜய்

“நான் உன் கணவன்னு இந்த நொடி என்னால உன்கிட்ட நிருபிக்க முடியும்…….. உடல் ரீதியாகவும்… மன ரீதியாகவும்….. ஆனால் அது உன்னால முடியாதுடி…… ” அதற்கு மேல் விஜய்யால் சொல்ல முடியாமல்.. உணர்வுகளின் தாக்கத்திற்கு ஆளானவன்… தீக்‌ஷா அழுகையை உணர்ந்து…. அவனையுமறியாமல்

அவனின் கரங்கள்……… அவளை ஆறுதல் படுத்துவது போல தன்னோடு அணைத்துக் கொள்ள……….. மழையில் நனைந்த கோழிக்குஞ்சுக்கு தன் தாய்க் கோழியின் அரவணைப்பு கிடைத்தது போல ஒன்றியவளின் தேகம்……… விஜய்யின் தேகம் உரசிய போது தயக்கத்தில் நடுங்கத்தான் செய்தது………

இருந்தும் தன் தயக்கம் எல்லாம் தூரப்போட்டு அவனோடு நெருங்கியவள்…. அதில் மூழ்காமல்…. அவன் தீண்டலில்….. மனமும் உடலும் தன் இந்தரைத் தேட ஆரம்பிக்க……. அந்த ஏக்கத்தில்…. அவள் தன்னவனோடு ஆழப் புதைய ஆரம்பிக்க…………. தீக்‌ஷாவின் அணைப்பு இறுகியதை உணர்ந்த விஜய்………உடனே அவளை நிமிர்த்த…… அவளோ மயங்கிச் சரிந்திருந்தாள்….

தன் தவறை எண்ணி தலையில் அடித்துக் கொண்ட விஜய்………. உடனே அங்கிருந்து அவளை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று…. வேகமாய் அவளுக்குரிய மாத்திரைகளை கொடுத்து அவளை உறங்க வைத்தவன்………..அனைவரையும் கோபத்தில் திட்டித் தீர்த்து விட்டான்…. முக்கியமாக யுகேந்தர்தான் அவனிடம் பெரியதாய் வாங்கிக் கட்டிக் கொண்டான்….. அவனால் தான்…. அவன் உண்மையைச் சொன்னதால் தான் இந்த நிலைமை…. என்று விஜய் கருதியதால் யுகிக்கு திட்டு அதிகமாய் விழுந்தது….

இடையில் எழுந்தவள்… மீண்டும் கொடுக்கப்பட்ட மாத்திரைகளின் காரணமாக மறுபடியும் உறங்க ஆரம்பித்தாள்….

அதிகாலைதான் தீக்‌ஷா மீண்டும் கண்விழித்தாள்…. தன் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்திருந்தபடியே கண் மூடி இருந்த விஜய்யைப் பார்த்தவளுக்கு………. அழுகை கட்டுக்கடங்காமல் பெருகியது…..

இப்போது தன் நிலைமை தெளிவாக விளங்க… தன் கணவன் தன்னை விட்டு விலகியிருக்கும் காரணம் புரிந்து……..மௌனமாய் அழுதாள்…. எங்கு இவள் அசைந்தால் அவன் எழுந்து விடுவானோ என்று…

ஆனால் அவன் உட்கார்ந்த நிலையிலேயே கண் மூடி இருப்பதை பார்த்தவள்….. கட்டிலை விட்டு இறங்கி….. அவனின் தூக்கம் கலையாமல் தலையணையை வைக்கப் போக… விஜய் எழுந்து விட்டான்…………

அவனிடம் எதுவும் பேசாமல்… தலையணையை நீட்டியவள்….. தன் படுக்கையில் மீண்டும் வந்து படுத்தபடி…… கண்ணீரால் தன் தலையணையை நனைக்க ஆரம்பித்தாள் தீக்‌ஷா……….

விஜய்யும் தீக்‌ஷாவை தொந்திரவு செய்யாமல் உறங்க முயற்சி செய்ய…. விதியின் கைகளில் கைப்பாவையாய் ஆன அந்த இரு உள்ளங்களுக்கும் நடந்த உணர்ச்சிப் போராட்டத்தில் உறக்கம் கூட அவர்களைப் விட்டு தள்ளி நின்று சிரிக்க ஆரம்பித்தது…..

-----

அடுத்த 2 நாட்களிலேயே…. பார்வதியின் வீட்டிற்கு பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால்…. விஜயேந்தர் குடும்பம் பரபரப்பாக இருந்தது…..

கலைச்செல்வி – ராகவேந்தர் நீண்ட நாட்களுக்குப் பிறகு…………….. தன் குடும்பத்தின் உற்சாகத்தில், தங்கள் மூத்த மகனின் வாழ்க்கையில் நடந்த துக்கத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு….. சுரேந்தரின் திருமணத்தில் மூழ்கினர்….

தன் தோழியே இந்த வீட்டுக்கு வரும்… உற்சாகத்தில் தீக்‌ஷா…. அன்று காலையில் இருந்தே தலை கால் புரியாமல் ஆடிக் கொண்டிருந்தாள்…. விஜய்தான் அவளை அடக்க முடியாமல் பரிதாபமாய் இருந்தான்…

தீக்‌ஷா இந்த 2 நாட்களில் விஜய்யிடம் சரளமாக பேச ஆரம்பித்திருந்தாள்…. அவள் கணவன் என்று நினைத்து அதன் உறவில் தன் நிலையை குழப்பிக் கொள்வதை விட்டவள்…. தன் வழக்கமான இயல்பிலேயே அவனோடு பழக ஆரம்பித்து இருந்தாள்…. அதனால்

“அத்தான் எனக்கு இந்த புடவை நன்றாக இருக்கிறதா….. அந்தப் புடவை நன்றாக இருக்கிறதா…. என்று அவனை வேறு இம்சைப் படுத்த ஆரம்பிக்க……

விஜய்…. ஜெயந்திக்கு கால் செய்து….. ”அத்தை கொஞ்சம் மேல வந்து இவள என்னன்னு கேட்டுட்டு போங்க” என்ற பிறகுதான் தன் அலம்பலை நிறுத்தி…. ஒழுங்காய்த் தயாராக ஆரம்பித்தாள்….

பார்வதியின் வீட்டிற்கு அகல்யா வந்திருந்தாள்…… பார்வதியை அலங்கரித்துக் கொண்டிருந்தவள்….. வெளியில் கார் சத்தம் கேட்க… எட்டிப் பார்க்க…. இறங்கிய அத்தனை பேரிலும் அவள் கண்களில் முதலில் பட்டது….. தீக்‌ஷாதான்….

தீக்‌ஷாவின் கடந்த காலத்தை…. சாரகேஷ் மற்றும் பார்வதி…. சுரேந்தர் மூல கேட்டறிந்து இருந்தனர்… அது அகல்யாவுக்கும் சாரகேஷ் மூலம் சொல்லப்பட்டிருக்க…. தீக்‌ஷாவைப் பார்த்த அகல்யாவுக்கு… தீக்‌ஷா மேல் அதிக பரிதாபமும் …. அதே நேரத்தில் கொஞ்சம் பொறாமையும் வந்தது…. தன் மனம் கவர்ந்தவனின் மனதினை கொள்ளை அடித்தவள் ஆகியவளாயிற்றே….

பின் தன்னை சரிப்படுத்தியபடி… வந்திருந்த அனைவரையும்…..வரவேற்றாள் அகல்யா.. சாரகேஷோடு சேர்ந்து….

தீக்‌ஷாவும் அகல்யாவைக் கவனித்தபடிதான் இருந்தாள்….

பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க தன் தோழியின் அறைக்குச் சென்றாள் தீக்‌ஷா….

தீக்‌ஷாவைப் பார்த்த பார்வதிக்கு… தீக்‌ஷாவின் கடந்த காலத்தை நினைத்து அவளையும் மீறி கண் கலங்கி விட…….

“ஹேய் கல்யாணப் பொண்ணு….. இந்த நேரத்தில் கண் கலங்கலாமா….. “ என்று தன் நிலையை மறைத்து அவள் முன்னே சிரிக்க….

பார்வதி… தீக்‌ஷாவை அணைத்தபடி….

“என்ன உன் ஆளு உன்கிட்ட ஒழுங்கா இருக்கிறாரா இல்லை… உன் ஃப்ரெண்டோட ஹெல்ப் ஏதும் வேண்டுமா” என்று பார்வதியும் அவளை சீண்ட….

தீக்‌ஷாவுக்கும் தன் வாழ்க்கை குறித்த கலக்கம், அவள் முகத்தில் நொடியில் தோன்றி மறைந்தாலும்…. சமாளித்தபடி…

“என்னை விடு பாரு…. …. அவங்க யாரு.. அவங்கதான் பாப்புவா…………” என்றபடி சாவதனமாய் பார்வதியின் முன்னால் இருந்த டேபிளில் அமர்ந்தபடி கேட்க…. பாரு புரியாமல் திகைத்து நோக்கினாள்….

தோழி…. புரியாத பார்வையை உள்வாங்கியபடி…

“வசூல் ராஜா எம்பிபிஎஸ் சோட பாப்புவானு கேட்டேன்…. போதுமா” என்ற போதே அக்ல்யாவும் உள்ளே நுழைந்தாள்… பார்வதியை அழைத்து வரச் சொன்னதாக வந்து பார்வதியை வந்து அழைக்க…

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்…. டாக்டரம்மா…. இப்பவே சார்ஜ் எடுத்துட்டாங்க போல …. மருமகள்ன்ற ஸ்தானத்தை……’ பார்வதிக்கு மட்டும் கேட்குமாறு சொன்னவள்…. சற்று நேரத்தில் ஹாலிற்கு வந்து விஜய்யின் அருகில் அமர்ந்தும் விட்டாள்….

பார்வதி அனைவருக்கும் காஃபி எடுத்து வர….. சுரேந்தரின் அருகில் வந்தவள்…. அவனை ஒரு நொடி பார்க்க….. சுரேந்தரும் அதே நொடி பார்க்க…

பார்வதி வரும் போதே தீக்‌ஷா விஜய்யின் அருகில் குனிந்து…

”அத்தான் ….. என்னை திட்டக் கூடாது… யுகியையும் முறைக்கக் கூடாது… எதுவா இருந்தாலும்… நம்ம வீட்ல வச்சுக்கலாம்….ஓகேவா” என்று முன்னறிப்பு கொடுக்க

விஜய்க்கு தூக்கி வாரிப் போட்டது….

“தீக்‌ஷா என்ன செய்ய போகின்றாளோ… இல்லை என்ன செய்து வைத்திருக்கின்றாளோ” என்று…

அவனையுமறியாமல்…

“என்ன….. பண்ணி வச்சுருக்க… யுகியும் கூட்டா உனக்கு” என்று பல்லைக் கடிக்க

“கூல் அத்தான்… இனிமேல்தான் பண்ணப் போகிறேன்” என்று விஜய்யிடம் சொல்லி ஏற்கனவே மடக்கி வைத்திருந்தாள்….

சுரேந்தரின் அருகில் பார்வதி வந்ததும்…. யுகி தீக்‌ஷாவைப் பார்த்து கண் சிமிட்ட….

தீக்‌ஷா யுகி மொபைலுக்கு கால் செய்ய…. அது

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள வெக்கம் கரை மீறிச் செல்ல அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ என்னாகுமோ

நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள அச்சம் மட்டும் விட்டுத் தள்ள சொல்ல ஒரு வார்த்தை இல்ல அய்யய்யோ என்னாகுமோ

யுகியின் மொபைல் சுரேந்தரின் கைகளில் இருக்க….. ஒரு நிமிடம் சுரேந்தருக்கு ஒன்றும் புரியாமல் விழிக்க…. பார்வதியின் முகம் நாணத்தில் செவ்வானமாகி என்ன செய்வதென்று புரியாமல் சுரேந்தரைப் பார்க்காமல் வேறு திசை பார்க்க…

விஜய் தீக்‌ஷாவைப் பார்த்து………..முறைக்க….

கண் சிமிட்டினாள் தீக்‌ஷா….

“அத்தான் என்ன பார்க்காதீங்க….. அப்புறம் யுகி மொபைல் உங்க கிட்ட வந்துரும்…. சுரேந்தர் அத்தான் நிலைதான் உங்களுக்கு….. ஆனால் நான் பார்வதி மாதிரி வெட்கம்லாம் பட மாட்டேன் ….” என்று அவன் காதில் கிசுகிசுக்க….

விஜய் அவளை முறைக்க முயன்று…….. அது முடியாமல் முகம் இதமாய் மாற…. வேறு புறம் திரும்பினான்

அங்கு சூழ்நிலை அழகாய்……. இதமாய்……… அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப….. வண்ணமாய் தூரிகை போட….. பார்வதி- சுரேந்தர் பெண்பார்க்கும் படலம் இனிதாய் முடிந்தது……….

அதன் பிறகு.. நிச்சயம் …திருமணம் என அடுத்து வரப் போகும் மங்கள நிகழ்வுகளைப் பற்றிப் பேச ஆரம்பிக்க…. தீக்‌ஷா மட்டும்…. பார்வதி வீட்டின் மொட்டை மாடிக்கு யாரும் அறியாது சென்றாள்….. அங்கு அவள் ஏற்கனவே எழுதி இருந்த முற்றுப் பெறாமல் இருந்த “Deeksha v” யை “Deeksha vijay” என்று முடித்தவள் திரும்ப…. அங்கு சாரகேஷ் நின்று கொண்டிருந்தான்…

சாரகேஷைப் பார்த்தவுடன்…. திகைத்து… பின் தன்னைச் சமாளித்து… பேச்சை மாற்றியவள்

“பாரு அண்ணா…. டாக்டரம்மா ரொம்ப பொறுப்பா இருக்காங்க….. எனக்கு அப்படியே ஆப்போசிட்….. உங்களுக்கும் பொருத்தமா இருப்பாங்க……” என்று சொல்ல….

அமைதியாய் புன்னகைக்க மட்டும் செய்தான் சாரகேஷ்….

”என்ன சிரிக்கிறீங்க…. மேரேஜ் எப்போ…. அகல்யாவுக்கு சம்மதம் சொல்லிட்டீங்கதானே” தன் படபடப்பை எல்லாம் மறைத்து கேட்டாள் தீக்‌ஷா….

தீக்‌ஷாவுக்கு ஓரமாய் குன்றல் இருக்கத்தான் செய்த்து…. ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த சாரகேஷ் வாழ்க்கையில் திடிரென்று நுழைந்து… குழப்பம் உண்டாக்கி விட்டோமோ என்ற சஞ்சலத்தில் வந்த குன்றல் அது….

அவளின் தொடர் கேள்விகளில் சாரகேஷ் சிரித்தபடி….

“கொஞ்ச நாள் போகட்டும்… பாரு மேரேஜ் முடியட்டும்…. தீக்‌ஷா” என்றவன்… முக்கியமான போன் வந்தது….அதுதான் மேல வந்தேன் … என்று சொன்னவனின் பார்வை அவள் எழுதியிருந்த சுவரில் பட்டு மீள…

”சாரி….. சுவரில் கிறுக்குறது தப்புனு தெரியும்… இருந்தாலும்….. “ என்ற போதே…

”மேடத்துக்கு சுவரில் கிறுக்குறது தப்புனு இப்போதான் தெரியுதா…” என்று கிண்டல் செய்ய….

அசடு வழிந்தாள் தீக்‌ஷா….. அதன் பின் சாரகேஷ் கீழ் இறங்கிச் செல்ல…. தீக்‌ஷா அங்கேயே நின்றிருந்தாள்………. வெளியில் எல்லோரிடமும் சிரித்து… குறும்புடன் விளையாடி கலகலப்பூட்டினாலும்………… மனதின் வெறுமை மட்டும் அவளை விட்டு அகலவே மறுத்தது….. யாரை நினைத்து…. அவள் ஏங்கினாளோ அவன் அருகில் இருந்தும்…….. அவளின் அடி மனதின் தேடல் அவளின் இந்தரை நினைத்து இன்னும் ஏங்கிக் கொண்டிருக்க…. தன் அடி மனதிற்குள் இருக்கும் தன் நினைவுகளை ஒவ்வொரு நிமிடமும் தேடிக் கொண்டிருந்தாள் தீக்‌ஷா….. தன்னையே மறந்து தனக்குள் மூழ்கிக் கொண்டிருந்த தீக்‌ஷாவினை……….. நினைவுக்கு திருப்பியது அவளது கணவனிடமிருந்து வந்த அழைப்புதான்…

விஜய் 10 நிமிடம்தான் தீக்‌ஷாவை தனியே விட்டிருந்தான்…..அதுவே அவனால் முடியவில்லை…. மாடி ஏறும் போதே கவனித்தான் தான்…. உடனே அழைக்காமல்…. 10 நிமிடம் அவகாசம் வைத்து அழைத்தும் விட்டான்…..

விஜய்யின் போன் அழைப்பில் கீழே தீக்‌ஷா வர….. அப்போது சாரகேஷின் அன்னை தேவகி….. ஒரு புதுப் பிரச்சனையைக் கிளப்பி இருந்தார்…

அது என்னவென்றால்… சாரகேஷ் திருமணம் முடிந்த பின் தான் பார்வதியின் திருமணம் நடத்தப்பட வேண்டுமென்று….

ஆனால் சாரகேஷ் அதை மறுத்து பிடிவாதம் பிடிக்க… தேவகியும் அதே பிடிவாதத்தில் நின்றார்….

தேவகி இதுதான் சரியான சமயம் என்று சாரகேஷை கார்னர் செய்ய…. விஜய் குடும்பம் தான் இடையில் மாட்டி விழித்தது….

விஜய்தான் நிலைமையை சமாளித்து…. பாருவுக்கும்-சுரேனுக்கு நிச்சயதார்த்தம் இப்போ முடிச்சுடலாம் அம்மா…. அதன் பிற்கு சாரகேஷ் முடிவைப் பொறுத்து நாம் திருமண நாளைக் குறித்துக் கொள்ளலாம் என்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர விஜய் குடும்பம் கிளம்பியது….

அதன் பின் தங்கள் அறைக்குள் விஜய்யோடு வந்த தீக்‌ஷா…..

“விஜய் அத்தான்….. பாரு என்கிட்ட சொல்லிருக்கா…. இன்னைக்கு பார்த்தோம்ல பாரு வீட்ல இருந்தாங்கள்ள அகல்யா…. அவங்க சாரகேசை லவ் பண்றாங்கலாம்…. இந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் தான்” என்ற போது…

விஜய்யின் முறைப்பில்…

“சரி சொல்லலை…. பாரு அண்ணன் தான் ரொம்ப பிகு பண்றார்…. ” என்று முடிக்க வில்லை…

விஜய் உடனே..

“ஹ்ம்ம்ம்ம்ம்…. தெரியும் நாம பண்ணி வச்சுடலாம்….“ என்று அன்று சங்கரிடம் சொன்ன அதே வார்த்தைகளை தன் மனைவியிடமும் சொல்ல….

தீக்‌ஷா சட்டென்று எம்பி…. அவன் கன்னத்தில் பட்டும் படாமலும் இதழ் பதித்தவள்………. அதே வேகத்தில் அவனை விட்டு சற்று தள்ளி நின்று….

“அன்னைக்கு நீங்க சொன்னீங்கள்ள….. அட்லீஸ்ட் இங்கயாவது கொடுக்க முடியுமானு…..” என்றவள்…….

”நான் உங்க தீக்‌ஷாவாக மாறுவேனோ இல்லையோ…. தீக்‌ஷா விஜயேந்தரா கண்டிப்பா மாறுவேன்…” என்றபடி அவன் பதிலையும் எதிர்பாராமல் அங்கிருந்து மறைந்தாள்….

விஜய்யோ தன் உணர்வுகளோடு விளையாடுபவளை……… எதிர்க்கும் திராணியின்றி தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்து விட்டான்….

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon