உறவான நிலவொன்று சதிராட-1

அத்தியாயம்-1


‘கீச் கீச்என்ற பறவைகளின் ஒலியும்,,,,, பட படவென்று இறக்கைகளை அடித்தபடி எழுந்த சேவல்களின் கொக்கரக்கோ சத்தமும்….. பசுக்களை ‘ம்மா” வென்று ஆர்ப்பரிக்க வைக்க …. அந்த சிற்றூரின் அதிகாலை அழகாக ஆரம்பம் ஆகி இருந்தது…. நகரத்தின் அதிகாலைப் பொழுதுகள் இந்த அளவுக்கு பரபரப்பாக இருந்திருக்குமோ…கிராமத்தின் பரபரப்பான இந்த அதிகாலைப் பொழுது அழகே என்று அடித்துச் சொல்லலாம்….

அதிலும் மார்கழி மாத அதிகாலைப் பொழுது…. கேட்கவே வேண்டாம்….. தெருவுக்கு தெரு இருந்த கோவில்களில் பக்தி பரவச பாடல்கள் ஒலிப் பெருக்கியின் வழியே தெய்வீகத்தைப் பரப்பிக் கொண்டிருக்க,…. அறுவடைக் காலம் என்பதால் ட்ராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களின் ஓசைகளும் தெருவை ஆக்கிரமிக்க….. இயந்திரங்களுக்கும் பறவை விலங்களுக்கும் மட்டும் தானா இந்த பரபரப்பு…. எங்களுக்கும் உண்டு… என்று மனித குலம் சொல்வது போல…. ஆண்களும் பெண்களும் அங்கும் இங்குமாக தங்கள் அறுவடை வேலைகளை பார்க்க கிளம்ப ஆரம்பித்து இருந்தனர்…..

தமிழகத்தின் தெற்கே…. கிராமம் என்றும் சொல்லில் முடியாமலும் நகரம் என்று சொல்லில் ஆரம்பிக்காமலும் அந்த சிற்றூர் இரண்டும் கெட்டானாக இருந்தது… ஒருபுறம் வயல் விவசாயம்…. என்று இருக்க… மறுபுறம் வணிகம் , வங்கி, ஆரம்ப பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி என ஊரை விட்டு வெளியேறிச் சென்று அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கடினப்படாமல் மக்கள் நிம்மதியாக இருந்தனர்…

உயர்கல்விக்கு அதாவது கல்லூரிக்கு மட்டுமே அருகிலிருக்கும் நகரத்துக்கு செல்ல வேண்டிய நிலை… அதுவும் இப்போது இருக்கும் வாகன வசதிக்கு தொல்லை இல்லாமல் இருக்க…. அந்தச் சுற்று வட்டாரத்தில் அந்த சிற்றூர் பரம்பரை பரம்பரையாக இருப்பவர்களையும் ஏன் வந்தாரையும்… வாழ வைக்க ஏற்ற ஊராக அமைந்திருக்க…. அதன் மகிழ்ச்சியோ என்னவோ... எப்போதும் அங்கு வளமையே….. அப்படிப்பட்ட ஊரின் மையத்தில் இருந்த தெருவினில் இருந்த அந்த பெரிய சுத்துக்கட்டு வீடும் இந்த அதிகாலைப் பரபரப்புக்குத் தன் பங்கினை அளிக்க ஆரம்ப்பிக்க தொடங்கி இருக்க…. ஒவ்வொரு அறையாக விளக்குகள் உயிர்பிக்க ஆரம்பித்து இருந்தன.

“தனா…. ஏய் தனா” பொக்கை வாயின் தீனக் குரலில் எழுந்த ஒலி அலை ஆராதனாவின் செவிகளில் நலிவடைந்த அலைக்கற்றைகளாய் பயணத்தை ஆரம்பித்து….. ஒரு கட்டத்தில் வலிமை பெற…. மெதுவாக கண் விழித்தாள்….

இந்த உலகத்தில் மற்ற மனித ஆதாரங்களுக்கெல்லாம் விழிப்பதற்கு தனியாக இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்க…. நம் ஆராதனாவுக்கோ…. அவளது கொள்ளுப் பாட்டியின் தீனமான அழைப்புதான் அவளின் விடிகாலை அலார்ம்….

”அடியேய்… சீக்கிரம் எந்திரி….. நான் பின் வாசலுக்கு போகனும்” என்று கையில் இருந்த தடியில் தரையினை அடித்தபடி வயோதிகத்தின் மறுக்க முடியாத தள்ளாட்டத்துடன் எழுந்து அமர்ந்தார் கண்ணாத்தாள் பாட்டி…..

95க்கு மேல் இருக்கும் வயது… குத்து மதிப்பாகத்தான் அதுவும்…. 14 வயதில் திருமணம் செய்து இந்த ஊருக்கு வந்தவர்…. தன் வாழ்வின் இறுதி அத்தியாயத்தின் கடைசிப் பக்கங்களில் இருக்க…. செவி மட்டுமே அவருக்கு இன்றும் ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் உடல் உறுப்பு…. கண்கள் பத்து சதவீத பணியை ஆற்றிக் கொண்டிருக்க…. பேத்தி எழுந்து விட்டாளா?? என்று கண்கள் சுருக்கிப் பார்த்தும் மங்கலான காட்சி மட்டுமே அவரின் கண்கள் காண

கண்ணாத்தாள் பாட்டியால் பார்க்க முடியாமல் போன அவரது கொள்ளுப் பேத்தியை நம்மால் பார்க்க முடியாத என்ன….

பாட்டியின் வார்த்தைகள் எப்போது ஆராதனாவை வந்தடைந்தனவோ…. அந்தக் கணமே கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தவள்….. அவள் இஷ்ட தெய்வமான… அந்த ஊரின் பெண் தெய்வமாக இருந்த அம்மனை முழுமனதோடு பிரார்த்தனை செய்வதையும் மறக்க வில்லை….

”இருங்க பாட்டி” ஒரு நிமிடம்…. என்றபடி…. கொடியில் நேற்றிரவு மடித்து போட்ட தாவணி பாவாடையை கைகளிலெடுத்தவள்…. தனது இரவு உடையை களைய ஆரம்பிக்க…

நாம் ஆராதனாவைத் தொடராமல்….. அவள் யாரென தெரிந்து கொள்வோம்…

ஆராதனா- ராஜசேகர் மற்றும் மேகலாவின் இளைய பெண் வாரிசு…. பையோகெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு இரண்டாம் பருவத்தில் இருப்பவள்… அழகிய பெண்களின் வரிசையில் நிற்க பிரம்மன் எந்தவொரு இட ஒதுக்கீடும் இல்லாமல்…. நேரடியாக சேரும்படி தன் கடைமையை நிறைவேற்றி இருந்ததாலோ… இல்லை…. அவள் அழகினை ஆராய ஏற்கனவே நாயகனை அந்தப் பொறுப்பில் அமர்த்தியதாலோ…. நாம் அவள் அழகைப் பற்றி ஆராயும் பணியில் மேற்கொண்டு பேசாமல் அவளைப்பார்க்க…

மின்னல் வேகத்தில் உடை மாற்றி இருந்தாள் ஆராதனா…. அதே வேகத்தில் தான் போட்டிருந்த இரவு உடையையும் நேர்த்தியாக மடித்து கொடியில் போட்டவள்…. வாயில் ஊக்கை வைத்தபடியே தாவனியின் மடிப்பை சரிசெய்தபடி… தாவணியின் நுனியை இழுத்து இடுப்பில் சொருகியவளின் கைகள் இப்போது கட்டிலில் அமர்ந்திருந்த கண்ணாத்தாள் பாட்டியை பற்றி தூக்கியது….

“பார்த்து வாங்க… பாட்டி” அவளைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றவள்…. அவர் காலைக் கடன்களை முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்து மீண்டும் உள்ளே அழைத்துச் சென்று அடுப்பங்கரை அருகில் இருக்கும் முற்றத்தின் தூண்களின் அமர்த்தி விட்டுத் தன் வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கலானாள்…

இப்படித்தான் ஆராதனாவின் ஒவ்வொரு காலைப்பொழுதும் ஆரம்பிக்கும் இன்றும் அப்படித்தான்… அவள் இன்னொரு வீட்டுக்கு செல்லும்வரையிலும் இது அவளது கடமை…. எங்கு எந்த வயதில் ஆரம்பித்தது என்று சொல்ல முடியாது... கண்ணாத்தாள் பாட்டி எப்போது கால் தவறி கீழே விழுந்தாரோ அன்றிலிருந்து இது ஆராதனாவின் வழக்கமாகிப் போன பழக்கம்….

ஆராதனாவின் தோழி செல்வி சொல்வாள்…. “ உனக்கு சீர் அனுப்பும்போது அலாரம் கொடுக்கிறதுக்குப் பதிலா உங்க வீட்டுக் கிழவியை உன்னோட அனுப்பிடப் போறாங்கடி… பாத்துடி… ” என்று கிண்டலடிப்பாள்…

“ஏன் அனுப்பினால் என்ன…. என் வீட்டுக்காரருக்கும் பையோ அலார்ம் பழக்கி விட்றலாம்” என்று சிரிக்காமல் கண்ணடித்தபடி ஆராதனா சொல்வாள்

“அது சரி… பழக்கி விடு… இது பையோ அலார்ம்… அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ... ரூம் உள்ள வச்சுறாத… ” செல்வியும் ஆராதனாவை விட மாட்டாள்…

தன் தோழியின் பெயரை நினைத்த உடனேயே…. ”கும்பகர்ணி… தூங்கிட்டு இருப்பா….” என்று தனக்குள் சொல்லியவளுக்கு… அப்போதுதான் ஞாபகம் வந்தது…. இன்று செல்வி தன்னை அழைக்க வர மாட்டாள் என்பது…

சென்னையில் இருந்து செல்வியின் அண்ணன் நரேன் வந்திருக்கும் காரணத்தினால் அல்ல…. இன்று அவர்கள் கல்லூரியில் பொங்கல் விழா… அனைவரும் தாவணியில் வர வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது…. ஆராதனாவுக்கு தாவணி வழக்கமான உடை… செல்விக்கோ அது அசௌகரியாமான உடை… தாவணியைப் போட்டுக் கொண்டு சாதாரணமாக வளைய வரும் ஆராதனாயைப் பார்த்து எப்போதுமே ஆச்சரியப்படுவாள்…

எப்படி ‘தனா’ இதப் போட்டுட்டு இப்படி சாதரணமாக நடக்கிற… எனக்கு என்னமோ… இந்த தாவணி ட்ரெஸ்ஸே போடாத மாதிரி ஒரு மாதிரி அன் ஈசியா இருக்கு… இங்க இது தெரியுதோ அங்க அது தெரியுதோன்னு…“ என்று நெளிபவளை பார்த்து ஆச்சரியப்படுவது ஆராதனாவின் முறையாக இருக்கும்…

ஆக தாவணி கட்டிக் கொண்டு நடந்து வருவதே செல்விக்கு உலகச் சாதனையாக இருக்கும் போது… அவளது ஸ்கூட்டியை எடுத்து வந்து இவளை பின்னால் அமர்த்தி ஊரின் வெளியே அமைந்திருக்கும் பேருந்து நிலையம் வரை போவாளா என்ன…

இரவே குறுஞ்செய்தியும் அனுப்பி விட்டாள்…. “நரேன் … வந்துட்டான்…. அவனோட கார்ல வந்துவிடுகிறேன்… நீ என் கார்த்திக் மச்சானோட வந்துரு”

’திங்க் ஆஃப் டெவில்” என்பார்களே… அது போல… கார்த்திகேயனும் வீட்டினுள் நுழைந்திருந்தான்…

தோழியின் வார்த்தைகள் நினைத்தபடியே வந்த ஆராதனாவோ… தன் அண்