சந்திக்க வருவாயோ?-62 Part 2

அத்தியாயம் 62 Pre Final2 - 2:


சிவா கிட்டத்தட்ட எல்லாம் முடிந்த நிம்மதியில் இருந்தான்… ஒரு வகையில் அவன் தீட்டிய திட்டங்கள் எல்லாம் படு தோல்வி அடைந்தது போல் இருந்தாலும்… அதன் முடிவென்னவோ சுபமாகவே முடிந்திருந்தது…

எதற்காக இத்தனை தூரம் போராடினானோ… சந்தியாவை-ராகவ்வை இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்தினானோ…. அந்த உண்மைகளைச் சொல்ல அதீனா ஒப்புக் கொண்டு நீதிபதி முன்பு மொத்தமாகச் சொல்லி விட… அதீனா சொன்ன தகவல்களை ஆதாரமாகக் கொண்டு… காவல் துறை அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியிருந்தது…

சந்தியாவை பத்திரமாக அவளது கணவனிடம் சேர்த்து விட்டான்… இதோ சற்று முன் சிவாவுக்கு நிரஞ்சனா செய்தி அனுப்பி இருந்தாள்… ராகவ்வும் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டு வந்து விட்டான்

மனம் வெகுநாட்களுக்குப் பிறகு நிம்மதியில் திளைத்தது… இனிமேலாவது… தன் குழந்தைக்காக வாழ வேண்டும்… அவளை தன்னோடு வைத்துக் கொள்ளவேண்டும் என்று மனம் சிந்திக்கத் தொடங்கி இருந்தது… இருந்தும் கடமை இழுக்க… மீண்டும் நடப்புக்கு வந்தான்…

அதீனா… அவள் செய்த பயங்கரவாத செயலினால்… தன் மனைவியை இழந்து தனிமரமாக நின்ற போது… ஏனோ முதலில் இருந்த வெறுப்பெல்லாம் அவள் மேல் வரவில்லை…. அதே போல் அவளின் போராட்டமெல்லாம் அவன் முழுவதுமாக உணரவில்லை என்றாலும்… வாழ வேண்டிய பெண்… திசை மாறி சென்று விட்டாள் என்று தோன்ற…

அவளது அருகில் வந்தமர்ந்தவன்…

“நீ அப்ரூவரா மாறினதுனால… உனக்கு தண்டனைக் காலம் குறையலாம் அதீனா” என்றான் காவல் துறை அதிகாரியாக…

வேதனையுடன் சிரித்தாள் சிந்தியா…

“எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் சிவா சார்,… என் அப்பாவை மறுபடியும் மீட் பண்ணனும்… “ என்று தன் கோரிக்கையை வைக்க… சிவா மறுக்கவெல்லாம் இல்லை…

சற்று முன் கணேசன் வந்த போது…. அவரும் தன் மகளைப் பார்க்க சிவாவிடம் கோரிக்கை வைத்திருக்க… இப்போது முடியாது என்று… பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்க… இப்போது அதீனாவும் கேட்க… தந்தை-மகள் இருவரும் மீண்டும் பார்க்க உதவுவதாக வாக்களிக்கவும் செய்தவன்…

“ராகவ் கண் முழிச்சுட்டானாம்…” என்று சந்தோஷமாகச் சொல்ல…

”அவன் கண்முழிக்காம இருந்தால் தான் ஆச்சரியம்…” என்று புன்னகைத்தவளுக்கு ராகவ் சந்தியாவின் காதல் எந்த அளவுக்கு புரிந்ததோ… அதே அளவு சந்தியாவிடம் கணேசன் காட்டிய பாராமுகமும் நன்றாக புரிந்திருந்தது…

கணேசன் சந்தியா புறம் சற்றும் திரும்பாமல் இப்போது கண்களில் தோன்ற.. மனம் வலித்தது….

“உனக்குக் கொடுக்காத பாசத்தை நான் யாருக்கும் கொடுக்கலைடா… கொடுக்க விரும்பலைன்றதைக் காட்டிலும்… கொடுக்க முடியலை….” என்ற தந்தையின் வார்த்தைகள் அவளை குளிர்வித்த அதே வேளை சந்தியாவை நினைத்து வருந்தவும் தான் செய்தது… இனி மாற்ற ஏதும் இல்லையே… தந்தை பாசம் இல்லையென்றால் என்ன… அவளுக்காக துடிக்க ஒருவன் இருக்கின்றானே… ராகவ் நினைவு வந்த போதே… சற்று முன் சந்தியாவிக்காக வருந்திய அந்த வருத்தமும் அதீனாவுக்குள் இப்போது இல்லை…

சிவா அவளிடமிருந்து விடைபெற்று ராகவ்வை பார்க்க வெளியே வந்தான்… அவளுக்கு காவலாக ஒரு பெண் காவல் துறை அதிகாரியையும் வைத்து விட்டுத்தான் போனான்…

அவன் அந்தப் பக்கம் போன சில நிமிடங்களிலேயே… அதீனா கண்களை மூடிப் படுத்திருக்க… திடீரென அவளுக்குள் அசாதரண உணர்வு… சட்டென்று கண்களைத் திறக்க… எதிரே கரண் நின்றிருக்க… அதிலும் அவன் கையில் துப்பாக்கி இருக்க… சட்டென்று எழுந்து அமர்ந்திருந்தாள் அதீனா… கண்களில் கலக்கம் எல்லாம் இல்லை… நிமிர்வாகவே கரணைப் பார்க்க

“நீ உண்மையைச் சொல்லிட்டா தண்டனையில் இருந்து தப்பிச்சுருவியா” என்று அவள் முன் துப்பாக்கியை நீட்டியிருக்க.. சட்டென்று அதீனா வேகமாக கட்டிலில் இருந்து இறங்கி அவனிடம் பாய்ந்திருக்க… எழக் கூட முடியாமல் இருந்தவள்… எப்படி… தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்தவளுக்கு இத்தனை வேகமா… அதீனாவின் தீடிர் வேகத்தை அவள் பாய்ச்சலை எதிர்பார்க்காதவராக கரண் நிலை குலைய…

அதே நேரம் சிவா… ராகவ்வின் பொருட்கள் அடங்கிய பேகை எடுத்துக் கொண்டு… ராகவ்-சந்தியா இருந்த அறையை நோக்கிப் போக… அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது சந்தியாவின் கையில் இருந்து தவறி விழுந்திருந்த அவளது மாங்கல்யத்தை அதீனா இருந்த அறையிலேயே விட்டு வந்திருக்க…

“ஓ அதை மறந்துட்டேன்..” ட்ராகவ்- சந்தியாவைப் பார்க்க போக இருந்தவன்… மீண்டும் அதீனா இருந்த அறைக்கு போக…

சிவா உள்ளே நுழையும் போதே வெளியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி… கரண் உள்ளே இருப்பதாகவும்… யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியதாகவும் கூறி தன்னை வெளியில் அனுப்பி வைத்து விட்டதாகவும் கூற… விபரீதம் உணர்ந்தான் சிவா… அடுத்த நொடி… அறைக்குள்ளும் நுழைந்திருந்தான்..

அங்கே அவன் கண்டதோ… கரணின் பிடிக்குள் லாவகாமாக மாட்டி இருந்த அதீனாவைத்தான்…

அதீனா கரணின் பிடிக்குள் இருக்கிறாள்… கரணின் கைகளால் எந்நேரமும் சுடப்பட்டு விடுவாள் என்று தெரிந்த … வேகமாக தன் கைகளில் தன் துப்பாக்கியைக் கொண்டு வந்தவன்… கரணைக் குறி வைத்தபடி…

‘”கரண்… லீவ் ஹெர்…” என்ற போதே… கரண் சிரித்தபடி… சிவாவால் தன்னை மிரட்ட மட்டுமே முடியும் சுடவெல்லாம் முடியாது என்பதை நன்கு அறிந்திருக்க…

“ஃபர்ஸ்ட் உன்னைச் சுட்றலாமா சிவா… அடுத்து இவ உன்னைச் சுட்டுட்டான்னு என்கவுண்டர்ல கேசை முடிச்சுறலாம்…” என்ற போதே சிவா யோசிக்கவெல்லாம் இல்லை… தன் கரங்களில் இருந்த பிஸ்டலின் விசையை முடுக்கியவன்… சரியாக கரணின் நெற்றிப் பொட்டில் சுட சரிந்தார் கரண்… அடுத்து என்ன என்று உணர்வதற்குள் கரணின் உயிரும் அவரை விட்டு பறந்திருக்க… சிவாவுக்கு ஏன் இந்த வேகம் என்று அவனுக்கே தெரியவில்லை… சந்தியாவுக்கு நியாயம் செய்தானா இல்லை… அதீனாவுக்கு நியாயம் செய்தானா அவனுக்குத் தெரியவில்லை… சுட்டு விட்டான்…

இனி அடுத்து என்ன… தெரியவில்லை… விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக கடைசியாக அவனே நின்றிருந்தான்… கூட கூட்டி வந்த விட்டில் பூச்சிகளை எல்லாம் மீட்டெடுத்து காப்பாற்றி விட்டான்… இன்று தானே மாட்டி நிற்க… நிலை குலைந்து அமர்ந்திருந்தான்… அவன் குழந்தைக்கு தாய் மட்டும் இல்லை… தந்தையும் அருகில் இருக்கப் போவதில்லை என்பதால் வந்த அதிர்வில் அப்படியே உறைந்திருக்க

அதீனா அதிர்ந்து அவனைப் பார்க்க… அவனோ அப்படியே நின்றிருக்க… ஏனோ சிவாவை இதிலிருந்து தப்பிக்க வைக்க நினைத்தவள்… பரபரவென்று செயலாற்றினாள்…

கரணின் துப்பாக்கியை கையில் எடுத்தபடி… அதீனா வேகமாக சிவாவின் அருகில் வந்தவள்… சிவா சுதாரிக்கும் முன்னரே அவனது துப்பாக்கியையும் பறித்துக் கொண்டவளாக… சிவா ஒரு நிமிடம் சுதாரித்து அவள் அருகே வர… இங்கு நடந்த சத்தத்தில் வெளியே இருந்த காவல் துறை அதிகாரியும் உள்ளே வர… சட்டென்று தன் பிஸ்டலின் விசையை தன் நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்த… அடுத்த நொடி அதீனா சரிந்திருந்தாள்…

ஏனோ அவள் தனக்கான தண்டனையை அடுத்தவர்களிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை…

என்னதான் நியாயம் தேடினாலும்… அவள் தேர்ந்தெடுத்த தவறான வழிதான்… அப்பாவி உயிர்களை பலி வாங்கிய குற்ற உணர்வு… தன் கூட்டத்தைக் காட்டிக் கொடுத்த துரோகம் என பல எண்ணங்கள் அவளைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்க.. இறுதியாக தன் தந்தையைப் பார்த்த நொடிகள்… அவளுக்கான இந்த வாழ்க்கையின் திருப்தியை கொண்டு வந்திருக்க… இந்த உலகத்தோடு தனக்கான பந்தத்தை முடித்துக் கொண்டாள்… தன் கையாலேயே…

தன் தந்தையை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்… என்ற ஆசை மறுபடியும் மறுக்கப்பட்டது… அப்போது வசந்தியால்… இம்முறை கடவுளால்….

சிவா அதிர்ந்து அப்படியே நின்றிருக்க…

அந்த பெண் காவல்துறை அதிகாரி… வெளியே ஓடினாள்… அதீனா கரணைச் சுட்டு விட்டு… தானும் சுட்டுக் கொண்டதாகவும்… காலையில் இருந்து பரபரப்பாக இருந்த மீடியா அப்போதுதான் ஓய்ந்து இருக்க… மீண்டும் அதற்கு தீனி கிடைக்க… படபடவென்று மீடியாக்கள் பாய்ந்து வந்திருக்க..

அதற்கு முன்னமே சிவா… அங்கிருந்த சந்தியாவின் மாங்கல்யத்தை எடுத்து பத்திரப்படுத்தியவனாக… சந்தியாவை தொடர்பு படுத்தும் பொருட்கள் ஏதும் இருக்கின்றனவா என்று ஆராய… ஏதும் இல்லையென்று நூறு சதவிகிதம் உறுதி செய்தவன்… தன் கையில் இருந்த பேகை அங்கு வந்த வெங்கட்டிடம் கொடுத்து ராகவ்விடம் ஓப்படைத்துவிடும்படி கூறியவன்… கணேசனுக்கு எக்காரணம் கொண்டும் இப்போதைக்கு தெரியவராமல் பார்த்துக் கொள்ளும்படி கூறியவன்…