சந்திக்க வருவாயோ?-61-2

அத்தியாயம் 61 (Pre-Final) -2

யாரைத் தேடி வந்தார்களோ… அந்த சிந்தியா தங்கள் கண்ணெதிரில்… மிருணாளினிக்கும் சந்தோஷுக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி… ஆச்சரியம்…

அப்படியே சந்தியாவையே நேரில் பார்ப்பது போல இருந்தது… சந்தியாவிடம் மிருணாளினிக்கு பிடித்தது… அவளின் துறுதுறு கண்களே… அந்தக் கண்கள் இவளிடம் இல்லை… மற்றபடி நீள முடி இருந்தால் அப்படியே சந்தியாதான்… ஆவென்று மிருணாளினி அதீனாவையேப் பார்த்துக் கொண்டிருக்க..

சந்தோஷ்… ஆச்சரியம் எல்லாம் படவில்லை… மாறாக அதீனாவை ஆராயும் விழிகளோடு பார்த்திருந்தான்…

வசந்தியும் கணேசனும் தான் உணர்ச்சிப் பிராவகத்தில் இருந்தனர்

எந்தப் பெண்ணுக்கு துன்பம் இழைத்து விட்டோம் என்று அவளைப் பார்க்க மருகிக் கொண்டிருந்தாளோ… அந்த பெண்.. இதோ தன் முன் என வசந்தியின் மனம் நிம்மதியில் சந்தோஷம் அடைய…

கணேசனுக்கோ… தன் வாழ்க்கையின் அர்த்தமாக இருந்தவள் எவளோ… அந்தச் செல்ல மகளை தொலைத்துவிட்டு தன் பாசத்தை எல்லாம் அவளோடு மட்டுமே என தொலைத்தாரோ… அந்த, தன் மகளை… தன் உயிரைக் கண்டு விட்ட ஆனந்தத்தில்… கணேசன்… அவருக்கு வாய் வார்த்தைகள் எல்லாம் போய் விட… சந்தோஷத்தில் தொண்டை அடைத்திருக்க…

அதே நேரம் சந்தியாவும் அங்கு கொண்டு வரப்பட.. கணேசனுக்கு சந்தியாவெல்லாம்… அவள் நிலையெல்லாம் கண்ணிலேயே படவில்லை

அதே நேரம் அதீனா யார்.. தற்போதைய நிலை அதுவும் எல்லாம் அவருக்குப் பொருட்டாகவேத் தெரியவில்லை… இப்போதும் அவருக்கு தன்னைப் பார்த்தால் தன்னை நோக்கி ஓடோடி வரும் சிந்துவாகவேத் தோன்ற… கை நீட்டி தன் மகளை அழைக்க… அவரின் நம்பிக்கையை அவள் மகள் சிந்தியா ஏமாற்றவில்லை…

“அப்பா” என்று ஓடோடி வந்து அவருக்குள் அடங்கியவள்…. வாய் விட்டு கதற ஆரம்பித்தாள்… இத்தனை வருடங்களாகத் தான் அடக்கி வைத்திருந்த கண்ணீரை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்க்க ஆரம்பித்திருந்தாள் அதீனா…

சந்தியாவின் பெற்றோர் வரப்போவதாக , சற்று முன் நிரஞ்சனா சொன்ன போது… சந்தியாவின் தந்தையும் வருகிறாரா.. என்று கேட்டு வைத்துக் கொண்ட அதீனா… தன் தந்தையைப் பார்க்கும் போது தெரிந்து கொள்ளாமல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள் அதீனாவாக.

ஆனால் பார்த்த போதோ…. அதீனா என்பவள் மறைந்து போய்… சிந்தியா மட்டுமே அவளுக்குள் ஆக்கிரமித்திருந்தாள் போல…

அதீனாவாக தன்னை அடக்க நினைத்தவளை… சிந்தியா விடவில்லை…


தந்தை கரம் தன்னை நோக்கி நீண்ட அடுத்த நொடி…. தந்தையின் கரங்களுக்குள் அடங்கி இருக்க… இத்தனை வருட தன் துன்பத்தை எல்லாம் தந்தையின் அணைப்பில் கரைத்து விட நினைத்தாளோ இல்லை இனி தனக்கும் இந்த உலகத்தின் தொடர்புக்கும் இன்னும் சில மணித் துளிகளே என்பதை அவள் உள்மனம் உணர்த்தியதோ… அவரின் ‘சிந்தும்மா’ என்ற ஒவ்வொரு வார்த்தையிலும் இன்னும் இன்னும் கரைந்திருந்தாள் சிந்தியா…

அதே நேரம் வசந்தி, மிருணாளினி, சந்தோஷ் மூவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தனர்… அங்கு கொண்டு வரப்பட்ட சந்தியாவைப் பார்த்து… அதிலும் அவள் பேச முடியாமல்.. கிட்டத்தட்ட அரை மயக்கத்தில் இருக்கு நிலையைப் பார்த்து பதறி அவள் அருகே வர… சந்தியாவோ…. அதீனாவிடம் கதறிக்கொண்டிருக்கும் கணேசனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் விழி அகற்றாது…. சில நொடிகள்தான் அவள் அதைப் பார்த்தது…

“எனக்குப் பிடித்த என் அப்பாவின் மகள்” வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சந்தியாவுக்குள் எதிரொலிக்க… வேதனை தாளாது கண்கள் மூடினாள் சந்தியா…

“இப்போ கூட உங்க பொண்ணு சந்தியாவைப் பார்க்கத்தானே வந்தீங்க…“ என்று சிந்தியா கணேசனிடம் ஏமாற்றமாகக் கேட்க

“இல்லடா… உன்னை உன்னை மட்டும் தான் பார்க்க வந்தேண்டா” என்று தன் மகளை மட்டுமே பார்த்து சொல்ல…


முதன் முதலாக அதீனாவுக்கும் நெருடல் தோன்றியது... சந்தியா வந்த போதும் அவள் அருகில் செல்லாமல் தன்னை மட்டுமே பார்த்தபடி இருக்கும் தன் தந்தையின் நடவடிக்கையில் வித்தியாசம் உணர்ந்தாள் அவள்...

சந்தியாவைப் பார்த்தபோதே அவள் அருகில் அழுதபடி இருந்த சந்தோஷ் மிருணாளினி பார்வையில் பட… கூடவே வசந்தியும்… மகளைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்க…


தன்னருகில் தன் தந்தை… சந்தியாவின் அருகில் மற்ற அனைவரும்… தான் அருகில் இருந்து பார்த்து வளர்த்த அவரது பெண்… குற்றுயிரும் குலை உயிருமாக இருக்க அவளின் அருகே போகாமல்… அருகே என்ன… அவளிடம் பார்வையைக் கூடத் திருப்பாமல் இருக்கும் தந்தை வித்தியாசமாகப் பட.... அதேப் பார்வையோடு நோக்க

“நீ மட்டும் தாண்டா… என்னோட பொண்ணு… அந்த உரிமையை யாருக்கும் நான் கொடுக்கலைடா சிந்தும்மா…” என்று தான் தொலைத்த மகளைக் கட்டிக் கொண்டு அழ…


அவரோடு அருகில் இருந்தும் அவள் பாசத்தை அனுபவிக்காத அவர் மகளின் செவிகளிலும் அது விழத்தான் செய்தது… அந்த வார்த்தைகளில் மொத்தமாக உடைந்து போனாள் தான்…. ஆனால் ஏனோ வலிக்க வில்லை… அவளுக்கு அவரது உதாசீனங்கள் பழகி பழகி மரத்துப் போயிருந்ததே… பெரிதாகத் தெரியவில்லை…


அதே நேரம்… சந்தோஷ்… இவர்களை எல்லாம் விட்டு விட்டு… சிவா நிரஞ்சனாவைப் பார்த்தான் கண்களில் கொலை வெறியோடு… தன் தங்கைக்கு நடந்த அநியாயங்கள் என்னென்ன என்ற கேள்வியோடு அவர்களை நோக்கிப் போக…

சந்தியா… அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள்…

“என..க்கு ஒண்ணுமில்லை… இப்போ அது முக்கியமும் இல்லை… “ என்றவள்… அதீனாவைக் கைகாட்டி..

“அவங்களுக்கு டைம் இல்லை…” என்றபடி சந்தோஷிடம் இறைஞ்சலாகப் பார்வையை வைக்க… சந்தோஷ் தன்னை அடக்கிக் கொண்டு இருக்க…

சந்தோஷை அடக்கிய திருப்தி சந்தியாவுக்குள் வர… இப்போது தன் தலைமாட்டில் இருந்து அழுது கொண்டிருக்கும் தன் தாயை தன் முன் வரவழைத்தவளாக…

”ம்மா… பேசும்மா அவங்ககிட்ட… நான் எப்போதும் உங்கூடத்தான் இருக்கப் போகிறேன்… உனக்கு உறுத்தலா இருக்கிற உன் வேதனையை எல்லாம் இன்னையோட முடிக்கப் பாரும்மா” என்ற போதே அவளால் முடியவில்லை… பல மூச்சுக்கள் விட்டு திணறியிருக்க…


வசந்தி… அப்போதும் போகாமல் மகளிடமே நிற்க

“வசந்தி… என்னால பேச முடியலை வசந்தி…ப்ளீஸ்… அவங்ககிட்ட போ..” என்றவள்…

சிவாவை தன் அருகே அழைக்க…. சிவா அவள் அருகில் போனான்… கொஞ்சம் பயந்தபடிதான்…


காரணம் தெரிந்ததுதான்…. சந்தியா ராகவ்வை எப்போது கேட்பாளோ… என்று பயந்தபடியே தான் நின்று கொண்டிருக்க… அவள் அழைத்தவுடன்.. உதறல் வந்திருந்ததுதான் உள்ளுக்குள்…

ஆனால் அவள் ராகவ்வை எல்லாம் கேட்கவில்லை…. மாறாக..

“சார்… ஒரு அரை மணி நேரம்” என்று அதினாவைப் பார்த்தபடியே சிவாவிடம் அவளுக்காக அனுமதி கேட்க…

சிவா மறுத்து தலை ஆட்டினான்

“இல்லை சந்தியா… அவ்வளவு நேரம் லாம் அதீனா இங்க இருக்க முடியாது…” எனும்போதே சந்தியா கண்களில் கவலை குடியேற…

“ஒக்கே… ஜஸ்ட் 10 மினிட்ஸ்.. என்னால முடிந்தது இவ்வளவுதான்” என்ற போதே… சந்தியாவின் கண்களில் மலர்ச்சி வர…

தன் அன்னையிடம் கண்களாலேயே சைகை காட்டினாள்… “அதீனாவிடம் போய்ப் பேசுமாறு… இது தனக்கான நேரம் இல்லை அவளுக்கான நேரம்” என்ற விதத்தில்..