top of page

சந்திக்க வருவாயோ?-61 -1

அத்தியாயம் 61 (Pre-Final) - 1

மாலை 6 மணி அளவில்… மருத்துவமனையில்

உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும்… சந்தியா இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள்… வெளியே காவல் துறை அதிகாரி இருவர் காவலாக இருக்க… அறையிலோ ….

அவள் அருகில் அமர்ந்திருந்தது… அவளைக் கொல்லும் வெறி கொண்ட பார்வையோடு இருந்த கரண் மட்டுமே…

காரணம் ஜெயவேல் பிழைத்துக் கொண்டார் தான்… யாருக்கும் தெரியாமல் மறைத்தும் விட்டார்கள் தான்… ஆனால் அவரைச் சுட்ட இவளைக் கொன்றால் தான் ஜெயவேல் அவனை விடுவார்… இல்லை கரணை ஒரு வழி பண்ணி விடுவார் தன் அரசியல் பலத்தால்…

“தனக்கு பணம், பதவி முக்கியம்… அதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யத்தயார்… ஜெயவேலிடம் அப்படி அடிவருடி தொழில் செய்துதானே இத்தனை தூரம் வந்திருந்திருக்கின்றோம்…. இனிமேலும் அதைத்தான் செய்யப்போகின்றோம்… தன் முன் கண்மூடிப் படுத்திருக்கும் இவள் உயிரைப் பறிப்பதெல்லாம் பெரிய விசயமே இல்லை… இருக்கவே இருக்கின்றது என்கவுண்டர் என்ற பெயர்… ஆனால் இப்போது முடியாதே… இவள் சுயநினைவுக்கு வர வேண்டும்… அதன் பின்னரே…அது கூட சாத்தியம்…” என்று யோசித்தபடி அமர்ந்திருக்கும் போதே… அம்ரீத் உள்ளே வர… சற்று நேரத்தில்… சிவாவும் வர… கரண் தன் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தி இருந்தார்.

அதன் பின் மூவரும்… அதீனா விழித்தபின் நீதிபதி இங்கு நேரடியாக வாக்குமூலம் வாங்க வரும் விசயம் தொடர்பாக விவாதித்தபடி சில பல நிமிடங்கள் கடத்த… இதற்கிடையே செவிலிப் பெண்ணும் வந்து சந்தியாவை சோதனை செய்து பார்த்துவிட்டு… இன்னும் சில நிமிடங்களில் கண்விழித்து விடுவாள் என்றும் … அதன் பிறகு ஸ்கேன் அறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டும் போக…

இப்போது அம்ரீத்தும் , கரணும் வெளியேறி் இருந்தனர்…

சிவா மட்டுமே அந்த அறையில் இருந்தான்…. சந்தியா எப்போது கண் விழிப்பாள் என்று… அவள் அருகிலேயே அவளைப் பார்த்தபடியே… அமர்ந்திருந்தான்… அவன் கைகளில் சந்தியா தவற விட்ட மாங்கல்யம் இருக்க… அதைப் பார்த்தவனுக்கு ராகவ்வை நினைத்து சஞ்சலம் மட்டுமே…


சந்தியா தவறவிட்ட மாங்கல்யத்தை காப்பாற்றி எடுத்து வந்து விட்டான்… ஆனால் ராகவ்வை தவறவிடாமல் அவளோடு சேர்த்து விடுவானா… மனம் உலைகளத்தை விட கொதித்துக் கொண்டிருந்தது…


சந்தியாவின் அருகில் அமர்ந்து கொண்டு… ராகவ்வைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க… சந்தியாவின் இமைகளுக்குள் இருந்த கரு மணிகள் அங்குமிங்கும் அசைய… தன் கையில் வைத்திருந்த சந்தியாவின் மாங்கல்யத்தை… அருகில் இருந்த மேஜை ட்ராவில் வைத்து மூடியவன்…

சந்தியாவை கண்விழிக்கப் போகிறாள்… என்று மகிழ்ச்சியோடு அவளையே பார்த்தபடி இருக்க

அவன் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல்… சந்தியாவும் கண் விழித்திருக்க… அவளையே பார்த்துக் கொண்டிருந்த சிவாவுக்கு… முகம் மலர்ந்திருந்தது….

அதே நேரம் ராகவ்வை நினைக்க… சந்தியா கேட்டால் என்ன பதில் செல்வது என்று யோசித்த போதே…. சந்தியா மீண்டும் விழித்ததை பார்த்து அவனுக்கு வந்த அத்தனை மகிழ்ச்சியும் ஒட்டு மொத்தமாக வடிந்தும் போயிருந்தது என்றே சொல்ல வேண்டும்…

‘இதோ சந்தியா எழுந்து விட்டாள்… அவளின் முதல் கேள்வியே… ரகுவைப் பற்றித்தான் இருக்கும்.. தன் கணவன் எங்கே? என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது…’ தலையை வெடித்தது சிவாவுக்கு

“முட்டாள் முட்டாள்… நான் தான் அவனிடம் அவள் மனைவியைக் கொண்டு வந்து சேர்க்கிறேன் என்று சொன்னேனே… என் மேல் நம்பிக்கையில்லாமல்…” என்று ராகவ் செய்த செயலை யோசிக்கும் போதே…

“அவன் முட்டாளா நீ முட்டாளா… அந்த கட்டிடத்திற்கு மட்டும் ராகவ் வராவிட்டால்.. நீ எதிர்பாராத அந்த முதல் குண்டிலேயே சந்தியாவின் உயிர் பிரிந்திருக்குமே…. நீயா அவன் மனைவியைக் காப்பாற்றினாய்…. அவன்தான் தன் மனைவியைக் காப்பாற்றினான்…” என்று மனசாட்சி அவனைச் சுட்ட போதே…

“அவளைக் காப்பாற்றியவன்… தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறிவிட்டானே… சந்தியாவிடம் என்ன சொல்லி ராகவ்விடம் அழைத்துப் போகப் போகிறோம்” தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக உயிர் வருத்தும் குற்ற உணர்ச்சியோடு இருக்க… சந்தியா இப்போது சற்று வேகமாக தன் உடலை அசைக்க…

வேகமாக அவளருகே குனிந்து…. அவள் கன்னத்தை மெதுவாகத் தட்டி… அவள் பெயர் சொல்லி அழைக்க… கஷ்டப்பட்டு விழி திறந்தவளுக்கு… சிவாவின் முகம் கண்ணில் பட… விழி சுழற்றி… தான் இருந்த அறையைப் பார்க்க முயற்சிக்க... அது கூட முடியவில்லை… அவளால்…

முதலில் ஒன்றுமே புரியவில்லை… பின் மெல்ல நினைவுகளை தட்டி எழுப்பியவளுக்கு

“தான் உயிரோடு இருக்கின்றோமா…” அதையே நம்ப முடியவில்லை அவளால்…

கடைசியாக என்ன நடந்தது… என்று யோசிக்கும் போதே… அவளையுமறியாமல் இறுக மூடி வைத்திருந்த கைகளை விரித்துப் பார்த்தாள் சந்தியா.. நிராசையோடு… மாங்கல்யம்தான் தவறி தரையில் விழுந்து விட்டதே…

கண்கள் கலங்கினாலும்…அதைப்பற்றியெல்லாம் கேட்க மனம் இல்லை அவளுக்கு… தன் கணவன் சொல்வது போல… இவையெல்லாம் உயிரற்ற பொருட்கள்…. வெறும் அடையாளமே… பெரிதாக கவலை இல்லை… தன் உயிரும் உணர்வுமான ரகு இருக்கும் போது… அவைகளுக்கு எல்லாம் மதிப்பு கிடையாதுதான்…

அவனைப் பார்க்க வேண்டும்… அதுபோதும் அவளுக்கு… மற்றதெல்லாம் ஏன் தன் உடல் வேதனைகள் கூடகவலை இல்லை… ரகுவின் சிறு கையணைப்பில் மொத்தமும் நொடிகளில் மாறிவிடும்… ஆனால், தான் அதீனாவாக இருக்கும் போது அவன் இப்போது தன்னருகில் வரமுடியுமா… மனம் இப்போது சுணங்கியது…

இருந்தும் சந்தியா வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையோடு… ஒரு முறை தன் வலியை எல்லாம் கண் மூடி ஒரே பெருமூச்சில் கரைத்து விடுவது போல… மூச்சை ஆழ இழுத்து விட்டவள்…


“சிவா… சார்” மிகவும் கடினப்பட்டே அவனை அழைத்தாள் சந்தியா

வார்த்தைகள் இன்றி மௌனமாக அவளையே பார்த்தபடி இருந்தான் சிவா... சந்தியாவைப் பார்த்த அவனது கண்களில் துக்கத்தை விட குற்ற உணர்ச்சி அதிகமாகவே இருக்க…

“உன்னைக் காப்பாத்திட்டோம் சந்தியா… உனக்கு ஒரு ஆபத்தும் இனி இல்லை“ என்றவனின் கண்கள் இலேசாக கசிந்ததோ…

அவன் கண்கள் கலங்குவது இவளும் உணர்ந்தாள் தான்… குற்ற உணர்ச்சியில் வருந்துகிறான் என்று புரியாமல் இல்லை… அவன் கைகளை ஆதரவாகப் பிடித்தபடி...

“நான் இன்னும் அதீனாவாத்தான் இருக்கேனா சிவா சார்” என்றாள் சிவாவைப் பார்த்து…


மீண்டு வந்த போதிலும்… அந்த நிமிடத்தில் தான் யாராக நடக்க வேண்டும் சிவாவிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்… தான் ஏற்றுக் கொண்ட பணியை செவ்வனே செய்யும் பொருட்டு...

கேட்டவனுக்கோ.. அவளின் கேள்வியில் இன்னும் இன்னும் வேதனை அதிகரிக்க…

சிவா அவளையே பார்த்தபடி சில நிமிடங்கள் இருந்தவன்…

“இன்னும் கொஞ்சம் நேரம் தான் சந்தியா… எல்லாம் முடிவுக்கு வந்துரும்… அதீனா இங்கதான் இருக்கா… உனக்கு ஸ்கேன் எடுக்க இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டிட்டு போவாங்க… அதீனா அங்க வந்துருவா” என்று விளக்கம் கொடுத்தவன்…

“நீ மயக்கம் தெளியறதுக்காக வெயிட்டிங்க்… கீழ விழுந்ததுல ஹெட் இன்ஞ்சியூரி ஆகி இருக்குமோனு பயம் வந்திருச்சு…” என்ற போதுதான் சந்தியாவுக்கே ஞாபகம் வந்தது… தனக்கு தலையில் அடிப்பட்டிருக்கிறதென்று…. தலையில் கை வைத்துப் பார்த்து அதை உறுதிபடுத்திக் கொண்டவள்… கண்முடிக் கொண்டவளாக… தன் கணவனின் முகத்தை கண்ணுக்குள் கொண்டுவந்தவளுக்கு… தனக்கு அடிப்பட்டதெல்லாம் அவனுக்கு தெரியாமல் இருக்காதே… தனக்காக துடித்துக் கொண்டிருப்பானே… இவளுக்கு தன்னவனின் வேதனை தாங்கிய முகமே வர…

தான் இப்படி ஒரு நிலையை இழுத்து வைத்து… அவனையும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்… தான் மயக்கத்தில் இருக்கின்றோம் என்று அவனுக்கும் தெரிந்திருக்குமே…. தான் கண் திறந்து பார்க்காத வரை… நரக வேதனையில் தவித்துக் கொண்டிருப்பானே… இங்குதானே இருப்பான்… இந்த மருத்துவமனையில் தானே இருப்பான்… கண்டிப்பாக இங்கு எங்கோ ஒரு மூலையில் இவளுக்காக உயிர் வலியோடு காத்துக்கொண்டிருப்பான்… அவனுக்கும் தனக்குமான இடைவெளி சற்று தள்ளித்தானா… அவன் அருகில் வந்து விட்டாளா

ஆனால்… அவனது மூச்சுக்காற்று… தன்னை மோதும் தூர இடைவெளிக்குள் இல்லையே… அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க மனம் பேராவல் கொண்டது… அவனோடு மூழ்கி விட துடித்தது மனம்… கணவனைப் பற்றிய எண்ணங்கள் வந்தபோதே அவன் பெயரும் அவள் தொண்டைக்குழியில் இருந்து வேகமாக வெளிவந்தது..

“ரகு” சிறிது நிறுத்தியவளாக…

“பார்க்கனும்” என்று மட்டுமே சொல்ல

சிவா அவளுக்கு பதில் கூறாமல்.. அவள் கைகளைப் பிடித்தான் ஆறுதல் கூறுவது போல… அந்த ஆறுதல் எல்லாம் தனக்குத் தேவை இல்லை என்பது போல…

“பார்க்க முடிய… லைனாலும்… போன்ல… யாவது பேசனும் சிவா சார்” என்றாள்… இந்த தட்டுத்தடுமாறி வாக்கியத்தை சொல்லி முடிப்பதற்கே போராடி வேண்டியிருக்க……

“கொஞ்ச நேரம் தான் சந்தியா… ரெஸ்ட் எடு… ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத… நீயே ராகவ்வை நேரில் பார்க்கலாம்… ப்ளீஸ்” என்று கேட்க… தலையை அசைத்து புரிந்து கொண்டளாக மீண்டும் கண் மூடிக் கொண்டாள் சந்தியா…


---


இங்கு சந்தியா தன்னவனின் நினைவுகளில் இருக்க… அவள் கணவனோ… சந்தியா இருந்த அதே மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை அறையில் இருந்தான்…

கிட்டத்தட்ட… சந்தியாவை இந்த மருத்துவமனையில் சேர்த்த பின்னர்.. அவளுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்னர்… மீடியாவுக்கு பதில் சொல்லிவிட்டு… சிவா, நிரஞ்சனாவுக்கு தகவல் சொல்ல… அவளோ ராகவ்வைப் பற்றி தகவல் சொன்னாள் சிவாவுக்கு…

ராகவ் தோளில் குண்டடி பட்டு மயக்கத்தில் இருக்கின்றான் என்று நிரஞ்சனா சொன்ன தகவலில்…வார்த்தைகள் வரவில்லை சிவாவுக்கு… சந்தியாவைக் காப்பாற்றி அவனிடம் கொடுத்துவிட்டேன் என்று சந்தோஷமாக சொல்ல வந்தவனின் மகழ்ச்சியை மட்டுமல்ல… காவல்துறை அதிகாரியாக அவனுக்குள் இருந்த கர்வத்தையும் அழித்திருந்தான் ராகவ்…

“கடைசி வரை தன்னை நம்பவில்லை அவன்… ஆனால் அவனால் தான் சந்தியா காப்பாற்றப்பட்டிருக்கின்றாளா” உண்மை நெற்றிப் பொட்டில் உறைக்க… உறைந்தான்தான் சிவா

ஆனாலும் தேங்கி நிற்க வில்லை… ராகவ்வை காப்பாற்ற வேண்டும் என அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமானான்… அதற்கு அவன் அதிகாரத்தை பயன்படுத்தியும் இருக்க…. உடனடியாக சந்தியா இருந்த இதே மருத்துவமனைக்கு கொண்டு வரவும் பட்டிருந்தான்… அவனோடே அதீனாவும் வரவழைக்கப்பட்டு…. தனியறையில் நிரஞ்சனாவின் மேற்பார்வையில் அவள் அடைக்கப்பட்டும் இருந்தாள்…

ராகவ்வுக்கு தோள்ப்பட்டையில் அடி என்று தெரிந்ததில் சிவாவும் பெரிதாக கவலை கொள்ளவில்லை… சிகிச்சை அளிக்க வேண்டும் அந்த எண்ணமே தவிர… ராகவ் உயிர் குறித்தெல்லாம் அவன் கிஞ்சித்தும் அஞ்சவில்லை…

ஆனால் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்ட ராகவ்வை நேரில் பார்த்த போதுதான்… தான் நினைத்தது போல ராகவ்வின் விசயம் சாதரணம் இல்லை… அவன் அபாயக் கட்டத்தில் இருக்கிறான் என்பது… புரிய… சிவாவுக்கு முதன் முதலாக தலை சுற்றியது…

“எங்கோ ஆரம்பித்து… எதிலோ முடியப் போகிறதோ…” சந்தியாவுக்கு சிறையில் நடந்த கொடுமைகளை தவிர்க்க முடியாமல் போனதை நினைத்தே வருந்திக் கொண்டிருக்க… சிவாவுக்கு அடுத்தடுத்த அடிகள்…

சிவா பார்த்தபோது ராகவ்வுக்கு சுத்தமாக நினைவில்லை… இருந்தும் சிவா என்னென்னவோ சொல்லி அழைத்துப் பார்த்தான்… சந்தியாவுக்கு ஒன்றும் ஆக வில்லை என்று கூட சொல்லிப் பார்த்தான்… கைகளைத் தேய்த்து விட்டான்… உடலை அசைத்துப் பார்த்தான்… எதற்குமே பலன் அளிக்காமல்… சிவாவின் எந்த சொல்லுக்கும் செவி சாய்க்காமல்… தலை துவண்டு சாய்ந்த போது… அதைப் பார்த்து சிவாவே கதறி விட்டான்… தான் செய்த தவறு சம்பந்தமே இல்லாத ஒரு உயிரை பழிவாங்கி விடுமோ என்று…

அதிர்ச்சியில்… சிவா மனம் உடைந்து நிற்க… வெங்கட்தான் அவனை நிலைப்படுத்தி கொண்டு வந்தான்

“சிவா சார்… இங்க யாருக்கும் தெரியாமல் ட்ரீட்மெண்ட் பண்ண ஏற்பாடு பண்ணிட்டீங்களா… இப்போ அடுத்தடுத்த என்ன ஆகனுமோ அதைப் பார்க்க வேண்டும்… நீங்களே இப்படி ஆனால் மத்தவங்க எல்லோருமே தேங்கிருவாங்க… ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க... என் ஃப்ரெண்ட காப்பாத்தனும்” என்ற போதுதான் சிவாவும் தன் நிலைக்கு வந்து… தானும் இப்போது உணர்ச்சி வசப்படக் கூடாது என்று சரிப்படுத்திக் கொண்டவன்… ராகவ்வை தனியறைக்கு கொண்டு சென்று… தனக்குத் தெரிந்த மருத்துவர் குழுவை… உடனடியாக ஏற்பாடு செய்திருந்தான்…

அதே நேரம்… சிவாவால் ராகவ்வின் அருகேயும் இருக்க முடியவில்லை… ஒருபுறம் சந்தியா மயக்கத்தில் இருக்க… அங்கும் அவன் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது… அதுமட்டுமின்றி… இந்த வழக்கு விசயமாக… அவனை போனிலும் நேரிலும் மீடியாவிலும் விசாரித்துக் கொண்டிருக்க… ராகவ்வின் அருகே அதிக நேரமும் இருக்க முடியாது… என்பது அவனுக்கு புரிந்ததுதான்….

இருந்தும் ராகவ்வை கண்காணித்துக் கொண்டிருக்கும் மருத்துவக் குழு சொல்லும் தகவலுக்காக காத்துக் கொண்டிருந்தான்… அவர்கள் ஓரளவு நம்பிக்கையுடன் சொல்லி விட்டால்… நிம்மதியுடன் சந்தியாவைப் பார்க்கச் செல்லலாம்… என்று நம்பிக்கையுடன் காத்திருக்க… அந்த நம்பிக்கையை அடியோடு தகர்த்திருந்தார் ராகவ்வுக்கு சிகிச்சை அளிக்கப் போகும் குழுவின் தலைமை மருத்துவர்

“ப்ளட் ரொம்ப லாஸ் ஆகிருக்கு… பல்ஸ் லோவாகிட்டே இருக்கு… இப்போ ஆபரேஷன் பண்ணினால் ரிஸ்க்தான் சாஸ்தி… ஆனால் ஆபரேஷன் பண்ணினால் ஒருவேளை பிழைக்கவும் வாய்ப்பிருக்கு… உங்க முடிவென்ன…” வெங்கட், சிவா மட்டுமே.. அங்கிருக்க… தன் நண்பனின் நிலையை நினைத்து வெங்கட் தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்து விட்டான்…

அவனுக்கு சந்தியா ஞாபகம் வந்ததோ இல்லையோ… மகன் மேல் உயிரை வைத்திருக்கும் சுகுமார் தான் ஞாபகம் வந்தது… அவர் என்னை வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்…

“ஐயோ… நான் அருகில் இருந்தும்… இப்படி ஆகி விட்டதே… “ என்று வெங்கட் ஒரு புறம் நிலைகுலைந்து அப்படியே அமர்ந்திருக்க…

தனக்கு முன் நீட்டப்பட்ட… அந்த பேப்பரைப் பார்த்து… சிவாவின் கை நடுங்கியது…

எந்த உரிமையில் தான் இதில் கையெழுத்து போட… படபடத்தது மனது

முதன் முதலாக ராகவ்வை நேரில் பார்த்த காட்சிகள் வந்து போயின… தவறு செய்யவில்லை என்று தன்னை நேருக்கு நேராக பார்த்த அந்த கண்கள்… போதை மருந்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டான் என்ற போது.. அந்த கண்களில் வந்த சந்தோஷம் இப்போது இவன் நினைவில் இருந்தது…

ஏன்… கடைசியாக சந்தியாவை தன்னுடன் அனுப்பும் போது தன் மனைவி செல்வதை தடுக்க முடியாத கையாலாகாத தனமுடன் இருக்கின்றோமே… என்ற குற்ற உணர்வில் அலைபாய்ந்த கண்கள்…

“என் சந்தியாவை என் கிட்ட கொண்டு வந்து சேர்த்துருவீங்கதானே…“ அடிக்கடி ராகவ் தன்னிடம் கேட்கும் வார்த்தைகள்…

ராகவ்வின் ஞாபகம் ஒவ்வொன்றும் இவன் நினைவலையில் மோத…. அவற்றை எல்லாம் நினைத்தபடியே… தன் கையெழுத்தை போட்டு முடித்த போது… அந்தக் காகிதத்தில்… சிவாவின் கண்ணீர் தன் துளியை பதிவு செய்திருந்ததை அவனால் தவிர்க்க முடியவில்லை…

என்ன துக்கப்பட்டாலும்… வேதனைப்பட்டாலும்… அவன் அங்கு நிற்க முடியாது.. அது அனைவருக்குமே ஆபத்து… புலி வாலைப் பிடித்த கதைதான்… இப்போது சிவாவின் நிலை… அடுத்து என்ன அதை நோக்கி ஓட வேண்டும்… அதன் பொருட்டு… அவன் மனம் யோசிக்க ஆரம்பிக்க..

‘உடனடியாக சந்தியாவை மாற்ற வேண்டும்…’ அது மட்டுமே அவன் அடுத்த நோக்கமாக இருக்க… வெங்கட்டிடம் ராகவ்வைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு… அங்கிருந்து கிளம்பப் போக நிரஞ்சனா அங்கு வந்திருந்தாள்…


”சந்தியா வீட்டில் இருந்து அனைவரும் டெல்லி வந்திருக்கின்றனர்…” என்ற புதுத் தகவலைத் தாங்கி…

சிவாவுக்கு யோசனைக் கீற்று… இவர்கள் ஏன் திடீரென கிளம்பி வந்திருக்கின்றார்கள்… என்பதே அது… ஆனால் அதை ஆராய அவனுக்கு பொறுமையும் இல்லை… நேரமும் இல்லை..

“இங்க வரச் சொல்லி… அதீனா இருக்கிற ரூம்ல தங்க வை…” என்று சொன்னவன்…

அதே நேரம் அதீனாவைத் தனியாக ஏன் விட்டு வந்தாய் என்று கேட்க வில்லை… அது அநாவசியமான கேள்வி என்பதை உணர்ந்திருந்தான்… காரணம் எப்போது அவள் சந்தியாவை, அவள் உயிர் காக்கும் பொருட்டு…. தனது இடத்திற்கு மாற்றினாளோ அப்போதே தெரிந்து விட்டது… அவளால் ஆபத்தும் இல்லை… அதே நேரம் அவள் தப்பிக்கவும் முயற்சிக்க வில்லை என்பதால்… அதீனா பற்றி பெரிதாக விசாரிக்க வில்லை… உடனடியாக சந்தியாவை இங்கு கொண்டு வந்து.. அதீனாவை அங்கு மாற்ற வேண்டும்… இப்போதைக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய வேலை இதுதான் என்று சிவா சந்தியா இருந்த அறைக்கு வந்து விட்டான்…

இதோ சந்தியாவும் நினைவு திரும்பி விட்டாள்… அடுத்த சில நிமிடங்களில் இங்கு அதீனா வர வேண்டும்…

---

சிவா அந்தப் பக்கமாகச் செல்ல… நிரஞ்சனா வெங்கட்டிடம் வந்தாள்… மனமெங்கும் கலக்கத்துடன்

“ரகுக்கு ஒண்ணும் இல்லைதானே… ஆபரேஷன் முடிந்தால் சரி ஆகிடுவாங்கதானே” என்று கேட்ட போதே… வெங்கட் துக்கம் தாங்காமல் உதடுகளைக் கடித்து தன் துக்கத்தை மறைக்க… அதைக் கண்டு கொண்ட நிரஞ்சனா அவன் அருகில் பயந்து அமர… விழிகளில் கலவரம் கலந்த கலக்கம் வந்திருந்தது…

“சந்தியாக்கு ரகுன்னா உயிர்… அவருக்கு ஏதாவது ஆச்சுனா…” என்று நிரஞ்சனா அழ ஆரம்பித்திருக்க… வெங்கட் இப்போது தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு…

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… அவன் சந்தியாவுக்காக மீண்டு வருவான்” என்று தன் துக்கத்தை மறைத்து… இவளை சமாதானப்படுத்த ஆரம்பிக்க… நிரஞ்சனாவும் ஓரளவு சமாதானமாகி இருந்தாள்…

பின் வெங்கட்… அதீனா தனியாக அறையில் இருப்பதை நிரஞ்சனாவுக்கு நினைவு படுத்த… அங்கிருந்து அவளும் செல்ல.. அடுத்த அரை மணி நேரத்திலேயே… சந்தியாவின் குடும்பம் அதீனா இருந்த அறையில் இருந்தது…

----

சந்தோஷ் மிருணாளிக்கு ஒன்றுமே புரியவில்லை…

எதற்கு மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கின்றனர்… என்று… குழம்பியபடி வர… வசந்திக்கும் எதுவுமே புரியாமல்… எதுவும் கேட்காமல் அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்…

ஆனால் கணேசனோ அப்போதும் வாக்குவாதம் பண்ணிக் கொண்டுதான் இருந்தார் வசந்தியோடு…

“எனக்கு என் பொண்ணைப் பார்க்கனும்…. அதை விட்டுட்டு… எங்கெங்கேயோ என்னை ஏன் கூட்டிட்டு போயிட்டு இருக்கீங்க” என்று அவர் மனைவியிடம் கடுகடுத்தபடி வர.. சந்தோஷுக்கு வந்த ஆத்திரம் இன்னதென்று இல்லை…


“பார்க்கனும் பார்க்கனும்னா… இவர் பொண்ணு என்ன ஹாஸ்ட்டல்ல படிக்கிற காலேஜ் கேர்ளா… பாம்ப் ப்ளாஸ்ட் அக்யூஸ்ட்… டெர்ரரிஸ்ட்… அம்மாவாலதான்… இங்க வருகிற சூழ்நிலை… இவருக்காகவெல்லாம் வரணும்னு எனக்கு என்ன தேவையா… ” என்று கோபத்தோடு மிருணாளினியிடம் பொறுமியபடி வந்து கொண்டிருந்தான்…

தன் அண்ணனின் நண்பன் வெங்கட் இங்கு தான் இருக்கின்றான் என்றும் ராகவ்விடம் சொன்னால்… அவன் தன் நண்பன் மூலம் அதீனாவைப் பார்க்க ஏற்பாடு செய்வான் என்று மிருணாளினி சொன்ன பின் தான் டெல்லி பயணமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது…

ஆனால்… அவர்களால் ராகவ்வையும் சந்தியாவையும் தான் தொடர்பு கொள்ள முடியவில்லையே… நல்ல வேளை நிரஞ்னாவின் அலைபேசி எண்… சந்தோஷிடம் இருக்க நிரஞ்சனாவை அழைத்து சந்தோஷ் பேசிவிட்டான்…

கணவன்… அவன் அப்பாவின் மேல் கொண்ட கோபம் தாங்க முடியாமல் கத்த ஆரம்பிக்க… அவன் நிலை புரிந்து மிருணாளினிதான் அவனைச் சமாதானப்படுத்தி கூட்டிக் கொண்டு வந்திருந்தாள்…

சிவாவின் கட்டளைப்படி… சிவாவின் ஆள்… அவர்களை அதீனா இருந்த அறையில் அழைத்து வந்து விட… அதே நேரம்… அவர்கள் வந்த சற்று நேரத்திலேயே சந்தியாவும் அந்த அறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தாள்…

---

2,636 views2 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது போல அவளை நடத்த ஆரம்பித்திருக்க கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவே

2 Comments


Saru S
Saru S
Jul 21, 2020

sad epiiii

Like

Isai Selvam
Isai Selvam
Jul 20, 2020

கனமான பதிவுகள்.சிந்தியா கணேசன் பாசம் போராட்டம் சந்தோஷ் அன்னையிடம் கேட்ட கேள்விகள் சந்தியாவின் நம்பிக்கை நகர்ந்து போக ரகு போராடி மீண்டு வருவானா சகிக்காக

Like
© 2020 by PraveenaNovels
bottom of page