top of page

சந்திக்க வருவாயோ?-59

அத்தியாயம் 59:


தாஜ்மஹாலைச் சுற்றி பார்த்தபடி…. வந்து கொண்டிருந்தனர்…. நண்பர்கள் இருவரும்…

ராகவ் அமைதியாகவே வந்து கொண்டிருந்தான்… பெரிதாக ரசிக்கவெல்லாம் இல்லை… நண்பனைப் பார்க்க மட்டுமே அவனோடு பேச மட்டுமே என்ற விதத்தில்

“சாரிடா மச்சான்… அன்னைக்கு நீ கூப்பிட்ட போது வர முடியலை… இந்த சாரி அதுக்கு மட்டும் இல்லை… உன் மேரேஜுக்கு வர முடியாததுக்கும் சாரிடா..

வெற்றுச் சிரிப்பொன்றை மட்டுமே உதிர்த்தான் ராகவ்… வேறொன்றும் பேச வில்லை பேசத் தோன்றவும் இல்லை.. ராகவ்வின் மௌனம் ஏனோ வெங்கட்டுக்கு வித்தியாசமாகப் பட்டது… இது அவர்களின் நண்பன் ராகவ்வே இல்லை… இவனை கலாய்ப்பதில் அவர்கள் குழுவில் முதல் ஆளாக இருப்பவன் ராகவ்தான்…

இவனுக்கு பதவி உயர்வு கிடைத்ததை வைத்து கண்டிப்பாக கிண்டல் செய்வான் என்றிருக்க… அது மாதிரி எல்லாம் இவனை ஓட்டாமல்… வாழ்த்துக்களை மட்டுமே சொன்னவனை ஆச்சரியமாகப் பார்த்தவன் வெங்கட்டே…

இந்த மாதிரி இடத்துக்கு வரும்போது… அவன் கையில் எப்போதுமே கேமரா இருக்கும்… ஃபோட்டோ எடுக்கின்றேன் பேர்வழி என்றும்… இந்தக் கோணம் … அந்தக் கோணம் என்று இவன் பேசி அடுத்தவர்களின் காதில் இரத்தம் வழிய பேசுபவன் இன்று அமைதியின் மொத்த உருவமாக வந்து கொண்டிருக்க….

அதிலும் ராகவ் மீசை வைத்திருக்க… நண்பனைப் பார்த்த உடனேயே கலாய்க்க ஆரம்பித்தவனிடம்… எதுவுமே பேசாமல்… பேச்சை திசை மாற்றிய போதே ராகவ்வின் நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தோன்றத்தான் செய்தன… இப்போது வெங்கட்டும் ஆராயும் பார்வை பார்க்க ஆரம்பித்ததால்… மௌனமாகவே வந்தவன்….

”பரவாயில்லடா… நானே என் வேலையை முடிச்சுட்டேன்…” என்றான் எங்கோ பார்வையைப் பார்த்தபடி…. அவனின் எண்ணமெல்லாம்… நாளை கோர்ட்டுக்கு வரப்போகும் அதீனா வழக்கைப் பற்றிய சிந்தனைதான்…

“ஏண்டா… கோர்ட்ல கேஸ்லாம் எவ்வளவு மணி நேரம் நடக்கும்… இரண்டு மணி நேரம்… நடக்குமா… நீ போலிஸ் தானே உனக்குத் தெரியும் தானே” என்று கேட்டவனை இன்னும் இன்னும் விசித்திரமாக நோக்கியவன் வெங்கட்டே…

போன் செய்த போது… தாஜ்மஹாலை எடுத்த விதம் போல…. நீதிமன்ற வளாகத்தை எடுக்க வேண்டும்… அதற்கு உதவி வேண்டும் என்று சொன்னானே… அன்று இருந்த பணி அவசரத்தில்… அதீனாவை விசாரிக்கச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் அவனிடம் பெரிதாக விசாரிக்க முடியவில்லை… என்று மனம் அன்றைய தினத்திற்கு சென்று மீண்டும் இன்றைய நொடிக்குத் திரும்பியது…

“என்னடா… கோர்ட் கோர்ட்னே பேசிட்டு இருக்க… ஒத்துக்கிறேண்டா… நீ பெஸ்ட் ஃபோட்டோகிராஃபெர்தான்… அதுக்காக… புதுமாப்பிள்ளையா… பொண்டாட்டி கையைப் பிடிச்சுட்டு ஊர் சுத்தாமல்… கேமேராவை கையில எடுத்துட்டு… குரங்கு மாதிரி கட்டிடத்தில தொங்கி எங்கோ இருக்கிற அதுவும் கோர்ட்டை படம் எடுக்கனும்னு சொல்றதுலாம் ஓவர்டா..”

“ஷாஜகான் ஆங்கில்ள தாஜ்மாஹாலை எடுக்க என்னை டார்ச்சர் பண்ணினதைக் கூட நான் பொறுத்துக்குவேன்… இப்போ என்ன தீவிரவாதி ஆங்கிள்ள கோர்ட்டை எடுக்கிறது மாதிரி ஏதாவது ப்ளான் வச்சுருக்கியாடா… அந்த மாதிரிலாம் சொல்லி என் சின்ன மனதை வெடிக்க வச்சுராதாடா… நீயாவது கல்யாணம் பண்ணி சம்சாரி ஆகிட்ட… ” நக்கல் அடித்தவனை எரிச்சலான பார்வை பார்த்தான்…

“ப்ச்ச்… நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா” என்ற நண்பனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று… அவனையுமறியாமல் அவனைத் தாக்க…

“அந்தந்த கேசைப் பொறுத்ததுடா… ஏண்டா என்னடா ஆச்சு…” என்றவனின் கூர்ப்பார்வையைத் தாங்க முடியாமல் தலை குனிந்தவன்…

”நீ போலிஸ் டிபார்மெண்ட்ல இருக்கிறவன் தானே…. அதீனா கேஸ் தெரியும் தானே” என்று கேள்வி கேட்ட தன் நண்பனைப் பார்த்து ஆயிரம் மின்னல்கள் வெட்ட வெங்கட் பார்க்க…

“அந்த கேஸ் விசாரணை முடிய எவ்வளவு நேரம் ஆகும்… சொல்லு… ஒரு தோராயமா 12 மணிக்குள்ள கேஸ் முடிஞ்சுடுமா” என்றவனைப் பார்த்து உறைந்து நின்ற வெங்கட்டைப் பார்த்தவன் அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர…

வெங்கட் சிலையாக நின்றது ஒரு நிமிடம் தான்… “ஏனென்றால் அதீனா கேஸ் வழக்கு விசாரணை நாட்கள் எல்லாம் பொது மக்களுக்குத் தெரியாத ஒன்று… வழக்கின் தீர்ப்பு நாளே பொதுமக்களுக்கும் மீடியாவுக்கும் தெரிவிக்கப்படும்… ஏன் இவனுக்கே அந்த கேஸில் சம்பந்தபட்டதால் தான் நாளை விசாரணை என்பது தெரியும்… அப்படி இருக்க நண்பனுக்கு எப்படி தெரியும்… ராகவ்வுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்” அதன் காரணமாகவே வெங்கட் உறைந்தது…

சிலை மீண்டும் உயிர் பெற்றது போல…. வேகமாக தன் நண்பனிடம் ஓடியவன்…

“ராகவ்… உனக்கெதுக்குடா அதெல்லாம்… அந்த கேஸுக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்” என்று அவன் அருகில் அமர்ந்தவனுக்கு கலங்கிய கண்களோடு இருந்த நண்பன் தான் காட்சி தந்தான்…

“ஏன் இப்படி ராகவ் நிலை குலைந்து அமர்ந்திருக்கின்றான்…” வெங்கட்டுக்கே தன் நண்பனின் நிலை பார்த்து உள்ளுக்குள் கிலி பரவ… வார்த்தைகள் வரவில்லை… அதினாவோடெல்லாம் அவனால் சம்பந்தபடுத்திக் கூட பார்க்க முடியவில்லை… அவன் கைகளை ஆறுதலாகப் பற்ற… அதற்கு மேல் ராகவ் தாங்கவில்லை… தன் நண்பனிடம் எதையும் மறைக்கத் தோன்றவில்லை… இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த தன் கவலைகளை எல்லாம் கொட்ட ஆரம்பிக்க முடிவு செய்தவனாக

“மச்சான்… சந்தியாஎன்று கண் கலங்கிய ராகவ்வின் கைகள்… தன்னைப் பிடித்திருந்த நண்பனிடம் இறுக்கம் காட்டி இருந்தன…

நண்பனுக்கு தான் இருக்கின்றேன் என்று காட்டும் விதமாக தன்னிடம் இறுகியிருந்த கைகளில் அழுத்தம் கூட்டியவனாக..

“என்னாச்சுடா… சொல்லுடா.. சிஸ்டர்க்கு… என்னாச்சுடா” என்று கேட்ட போது கூட… சந்தியாவை விசாரணையில் பார்த்த அதீனாவாக கற்பனை செய்ய முடியவில்லை வெங்கட்டால்

”உன்கிட்ட சொல்லக் கூடாதுனுலாம் இல்லைடா… இப்போகூட சொல்லத் தோணலைடா… ஆனால் என் மனசுல இருக்கிறதை எல்லாம் யார்கிட்டயாவது கொட்டலைனா… பைத்தியம் பிடிச்சுரும் போல இருக்குடா… சந்தியா கூட ரெண்டு நாளா பேசாதது இன்னும் என்னைப் பைத்தியம் பிடிக்க வைக்குதுடா… நாளை ஒரு பொழுது தான்… அது முடியறதுக்குள்ள… எனக்கு ப்ரஷர்ல , இதயம் மூளை எல்லாமே வெடிச்சுரும் போல இருக்குடா… என்னைக் காப்பாத்துடா மச்சான்… “ என்றவன் அடுத்த சில நிமிடங்களில் சந்தியா அதீனாவாக மாற்றப்பட்ட எல்லா நிகழ்வுகளையும் சொல்ல… வெங்கட்டின் கண்கள் ஆத்திரத்தில் கோபத்தில் சிவந்திருக்க…

“உனக்கு ஏண்டா… இவ்வளவு கோபம் வருது… உனக்கெல்லாம் ஐ மீன் உங்க மாதிரி போலிஸுக்கு இது சகஜம் தானே….” என்று அந்த நிலையிலும் கேலியாக ராகவ் கேட்டு வைக்க…

”ஏண்டா…. இதை இப்போ சொல்ல தோணின உனக்கு … ஆரம்பத்திலேயே சொல்லத் தோணலை… ஏதாவது பண்ணியிருக்கலாமேடா…” என்ற வெங்கட்…

“ப்ச்ச்… ஆனால் சிவா மட்டுமே இதைப் பண்ணியிருக்க முடியாது ராகவ்… சிவாவோட அப்ரோச் அவ்ளோ ஈஸியா…. அப்ரூவ் ஆகி இருக்காது… மேலிடம் வரை போய் இருக்கும்… அந்த டீமோட ஹெட்… மினிஸ்டரி வரை இருக்கும்… அந்த நோடோட ப்ரான்ச் எங்க இருக்கும்னே தெரியாது ராகவ்… எல்லாமே சீக்ரெட்…” என்றவன்…

“இப்போ கூட நீ மானிட்டரிங்கலதான் இருப்படா…” என்று வெறித்தவனின் நினைவுகள் இங்கில்லை… அன்றைய தினத்திற்கே செல்ல… நண்பன் இருக்கும் நிலையில் அதீனாவை விசாரிக்கச் சென்றதை சொல்ல மனம் வரவில்லை… சொன்னால் என்ன ஆகும்… என்று யோசிக்க…

அவன் மனைவியை நினைத்து வேதனை தாள மாட்டான்… அதன் பின் கண்டிப்பாக சிவாவிடம் சண்டை போடவே செய்வான்… கடைசி நேரத்தில் சிவா ராகவ்வை அடக்கவே முயற்சிப்பான்.. நண்பன் சொல்லுவது போல இன்னும் ஒரு நாள் தானே அடக்கி வாசித்தால் நண்பனுக்கு பிரச்சனை இல்லை என்றே அவனது போலிஸ் மனம் சொல்ல இன்னொரு மனமோ நண்பனுக்காக பரிதவிக்கவும் செய்தது…

அதே நேரம்… கோர்ட்டில் யாராவது அதீனாவைத் தாக்க முயன்றால்… அதனால் ஏதாவது ஆபத்து என்றால்… அது அங்கு அதீனா உருவில் இருக்கும் சந்தியாவைத்தானே பாதிக்கும்… சிவா அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் சரியாக செய்வானா….

அதீனா விசாரணையில் சிவா கூடவே இருந்தது… ஏன் என்பது இப்போது புரிய… அப்படி என்றால் தாங்கள் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியது தன் நண்பனின் மனைவியையா… சிவா தலையீட்டால் விசாரணை இயல்பாகவே சென்றதுதான்… அப்படியும் சந்தியாவிடம் இவனது டீம் கைவரிசையைக் காட்டியதுதான்.. இரும்பாக அமர்ந்திருந்தான் வெங்கட்….

”டேய் மச்சான்… நாளைக்கு இந்நேரம்…. என் சந்தியா என் கூட இருப்பாள்ள” ராகவ் மனம் அவன் மனைவியையையே சுற்றி சுற்றி வந்தது... காவல் துறை சார்த்த தகவல்கள் என்று ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தான்… வெங்கட் பதில் சொல்லும் வரை… அந்த பதிலில் ஆறுதல் அடையும் வரை கேட்டுக் கொண்டே இருப்பான்… அது திருப்தியானவுடன் அடுத்தடுத்த கேள்விகள் என கேட்டுக் கொண்டே இருந்தான்… சிவாவிடம் கேட்க முடியாதவற்றை எல்லாம் நண்பனிடம் கேட்டு மனதை ஆறுதல் படுத்திக் கொண்டான்….

அதே நேரம் வெங்கட்டின் ஆராயும் பார்வை… அந்த சுற்று வட்டாரத்தை நோக்கியது… தங்களை யாராவது கண்காணிக்கின்றார்களா என்று…

சிவா அங்கும் ஒரு தவறு செய்தான்… சிவா ராகவ்வை முழுமையாக நம்பினான்… அதீனா கோர்ட் கேஸ் நடக்கும் அன்று சிவாவுடன் தானும் வருவதாக ராகவ் பிடிவாதம் பிடிக்க… சிவா அதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை… அதன் பின் வெளியே போக வேண்டும்… இறுக்கமாக இருக்கும் மனதுக்கு ரிலாக்ஸ் வேண்டும் என்று கிளம்பியவனை சிவா தடுக்கவில்லை… மாறாக தான் பிரத்தியோகமாக… சொந்த தேவைக்கு பயன் படுத்தும் காரைக் கொடுக்க… அதையும் மறுத்துவிட்டு… சிவாவின் இருசக்கர வாகனத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டான்… சிவாவுக்கு ராகவ் தங்களைப் பற்றி வெளியே சொல்வான் என்ற எண்ணம் எல்லாம் எப்போதே போயிருக்க.. பெரிதாக ராகவ்வைக் கண்டு கொள்ளவில்லை… அதே நேரம் இந்த சில தினங்களாக சந்தியாவுக்கு அடுத்தடுத்து வந்த சோதனைகள்… சிவாவையும் நிலை குலைய வைக்க… குற்ற உணர்ச்சியில் எதிலுமே அவனால் முழுக் கவனம் வைக்க முடியவில்லை…

ஆனால் ராகவ் அங்கு போயிருந்திருக்காவிடில்… சந்தியா காப்பாற்றப்பட்டிருப்பாளா… அவன் மனைவியின் விதி… அவனால் அங்கு மாற்றி அமைக்கப்பட்டிருந்தது…

ஆனால் மனைவியைக் காப்பாற்றிய அவனது உயிர்… இன்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றது…. அவன் விதி யார்க் கையில்??

வெங்கட் தன் நண்பனை முடிந்த அளவு அமைதிப்படுத்தினான் என்றே சொல்ல வேண்டும்… காவல்துறையின் மற்ற பக்கங்களையோ… இல்லை சந்தியா கஷ்டப்படுகிறாள் என்பதையோ அவனுக்கு சொல்ல வில்லை… நாளை அவனிடம் அவன் மனைவி வந்து சேர்ந்து விடுவாள்… அவளைப் பார்த்தபின்… நடந்த மற்றவை எல்லாம் பின்னுக்கு போய்விடும் என்று உறுதியாக நம்பினான்… அதே நேரம் சிவாவையும் அவனுக்கு நன்கு தெரியும்… அவனது திறமை… அவனுக்கு காவல் துறையில் இருக்கும் மதிப்பு என அத்தனையும் தெரியும்… வெகு நாட்களாக அவனைப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்தான்… என்று தான் பார்த்தான்…

நண்பனாக ராகவ்வுக்கு மனம் துடித்த போதும்…. சிவாவின் நிலையும் புரிந்தது… கத்தி மேல் நடப்பது போல் தான் இந்த ஆபரேஷனில் சிவா இறங்கி இருக்கின்றான் என்றும் புரிந்தது… கொஞ்சம் சொதப்பி இருந்தால் கூட… நாட்டின் சாதாரண பிரஜையை காவல் துறையினர்… தீவிரவாத வழக்கில் சிக்க வைத்திருக்கின்றார்கள் என்ற விசயம் கசிந்தால்… சிவாவுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த காவல்துறைக்குமே அவமானம்.. பிரச்சனை

மக்கள்… மீடியா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது கூட பிரச்சனையில்லை… காவல்துறைக்கே இது கரும்புள்ளியாக அமைந்து விடும்… காவல்துறை அதிகாரியாகவும் வெங்கட் யோசிக்க ஆரம்பித்தான்…

“ஒகேடா… நாளைக்கு எனக்கு எந்த வேலையும் இல்லை… இருந்தாலும் உனக்காக வந்து விடுகிறேன்.. ஆனால் ரிஸ்க் தேவையாடா… நாளைதான் சிஸ்டர் ஜெயிலை விட்டு வந்துருவாங்களே” என்று அப்போதும் தயங்க…

“சும்மாதாண்டா… அதுக்கு முன்னாடி கோர்ட் வாசல்ல அவளை பார்க்கலாம்தானே… அதை ஏன் மிஸ் பண்ணனும்… ” என்றவன்.. ஆவேசமாக…

“எனக்கு அவளைப் பார்க்கனும்டா… என்னைப் புரிஞ்சுக்கடா… என் நிலைமை எனக்கே பயமா இருக்குடா” என்று அக்கம் பக்கம் மறந்து கத்த ஆரம்பிக்க… எப்படியோ அவனைத் தேற்றி மீண்டும் வீட்டுக்கு அனுப்பிய வெங்கட்… கிளம்பும் போது… ராகவ்விடம் சந்தியாவின் போட்டோவை பார்க்க வேண்டும் என்று கேட்க…

ராகவ்வும் காட்ட… சந்தியாவின் சாதரண ஃபோட்டோ தான் அது… புடவை அணிந்து நீண்ட கூந்தலில் பாந்தமாக இருந்த அவளுக்கும் அதீனாவுக்கும் அத்தனை வித்தியாசம்… ஒரு வேளை அன்று சந்துரு போட்டொ அனுப்பியிருந்தால் கூட… அடுத்த நாள் சிறைக்கு போய் அதீனாவாக இருக்கும் சந்தியாவைப் பார்த்த போது இவனுக்கு பெரிதாக ஒற்றுமை தெரிந்திருக்காது என்றே தோன்றியது….. இருவருக்கும் உள்ள உருவ சாயலை கண்டுபிடித்த சிவாவை நினைத்து ஆச்சரியமாகத்தான் இருந்தது… ஒரு போலிஸ் அதிகாரியாக..

அன்று அதீனாவை விசாரித்து விட்டு வந்த பின்னர்… அவனுக்கு அதீனா விசாரணை திருப்தி இல்லை… சிவாவின் தலையீடு அதிகமாக இருக்க… அவர்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும்… இந்த வழக்கை இன்னும் சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்பது போல் தான் தோன்றியது… அப்படித்தான் தன் மேலதிகாரிக்கு தகவலறிக்கையும் அனுப்ப திட்டமிட்டான்… ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது… யார் மூலம் உணமை தெரிந்தால் என்ன… முடிவு நல்ல விசயம் என்ற போது… எதற்கு மாற்ற வேண்டும் என்று… விசாரணையில் பெரிதாக எதுவுமில்லை என்று மாற்றி அனுப்பி இருந்தான்… தவறான தகவலறிக்கைதான்… இருந்தும் மனதுக்கு திருப்தியாக இருக்க… அதன் பின்னே ராகவ்வை சந்திக்க வந்திருந்தான்…

இப்போது ராகவ் சொன்ன விசயங்களை எல்லாம் கேட்டபின்னர்… ராகவ்வையும் சந்தியாவையும் கடவுள் கைவிட மாட்டார் என்றே தோன்றியது… எந்த பிரச்சனையும் வராது என்று வெங்கட்டும் நம்பினான்…

----

ஆனால் பிரச்சனை வந்திருந்ததே…

சிறைச்சாலையில் அம்ரீத்தின் அறை… சிவா, அம்ரீத், நிரஞ்சனா... மற்றும் இரண்டு பேர்… என அங்கிருக்க அனைவரின் முகத்திலும் பதட்டமே…

”சார்… இப்போ என்ன பண்ணச் சொல்றீங்க… இதுக்கெல்லாம் காரணம் அந்த கரண் தான்” என்று உச்சஸ்தாயில் சிவா கத்த ஆரம்பிக்க…

“கத்தாதிங்க சிவா… இதற்கு யார் காரணம்னு ஆராயுறதை விட்டு விட்டு…. பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்துங்க” என்று அம்ரீத் பதட்டமில்லாமல் முடிக்க…

நாளை… அதீனா உயிருக்கு ஆபத்து… இது உளவுத்துறை நமக்கு அனுப்பி இருக்கிற ரிப்போர்ட் சார்.. அதீனா என்றாலே படபடக்க வேண்டிய விசயம்… அப்பாவி பொண்ணு அவ இடத்துல இருக்கிறப்போ… இவ்வளவு மெத்தனமா இருக்கீங்க” என்று ஆரம்பித்தவன்…

சந்தியாவை வைத்து ஆடிய ஆட்டத்தை எல்லாம் முடித்துக் கொள்ளலாம் என்று சிவா வாயைத் திறக்கப் போக… அதே நேரம் நிரஞ்சனா ஆவேசமாக கத்த ஆரம்பித்தாள்…

“சிவா சார்… இதுக்கு மேல ஒரு நிமிசம் கூட சந்தியா இங்க இருக்கக் கூடாது… நாளைக்கு சந்தியா கோர்ட்டுக்கு போனால் சத்தியமா அவ உயிரோட திரும்ப மாட்டா” என்று கத்த ஆரம்பிக்க

அம்ரீத் வேகமாக…

நிரஞ்சனா… யார்கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரிஞ்சு பேசு…” என்று தன் அதிகாரத்தைக் காட்ட… நிரஞ்சனாவும் ஆரம்பித்தாள்…

“தெரியும் சார்… கேவலம் ஒரு அக்யூஸ்ட் கிட்ட வார்த்தையை வாங்க முடியாமல்… சப்ஸ்டியூட் தேடின கூட்டங்கள் தானே… சந்தியா ராகவ் உங்களைப் பத்தி வெளியில வாயைத் திறக்காமல் இருக்கலாம்… இப்போ நீங்க சந்தியாவை இந்த கேஸ்ல இருந்து விடனும்… நாளை அதீனாவைக் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போங்க… சந்தியா கூட்டிட்டு போகக் கூடாது… அதையும் மீறி ஏதாவது பண்ணுனீங்க… நானே எல்லோருக்கும் சொல்லுவேன்.. “ என்று நிரஞ்சனா அவளையும் மீறி உணர்ச்சி வசப்பட…

அம்ரீத் முகத்தில் அர்த்தமுள்ள புன்னகை… அதில் முழுக்க முழுக்க எள்ளல் மட்டுமே இருக்க…


சிவாவைப் பார்த்தாள் நிரஞ்சனா… அவன் என்ன நினைக்கிறான் என்றே நிரஞ்சனாவுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை…

“நிரஞ்சனா… காம் டௌன்… இதுக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டோமா” என்ற படியே அம்ரீத்... சிவாவிடம் திரும்பி…

இனி நிரஞ்சனாவால நமக்கு ஒரு பயனும் கிடையாது…. சொல்லப் போனால்…. நாளை வரை இவள் வாய் திறக்காமல் இருப்பதுதான் நமக்கு நல்லது….” என்று மனசாட்சியே இல்லாமல் பேசிய அம்ரீத்தை நோக்கிப் பாய்ந்த நிரஞ்சனாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிவா முயன்று கொண்டிருக்க…

சிவாவையும் நிரஞ்சனா இப்போது எதிர்க்க ஆரம்பிக்க…

நிமிட நேரத்திக்குள் … நிரஞ்சனா அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தாள்…


“சிவாவுக்கும் மனசாட்சி இல்லையா… ரகுவிடம் சொல்ல வேண்டுமே.. அவனிடம் சொன்னால் கூட அவனால் மட்டும் என்ன செய்ய முடியும்….” நினைத்த போதே….

தான் சந்தியா-ராகவ்விற்கு செய்த செயல்கள் கண் முன் வர அவள் மனம் துடித்தது… நிரஞ்சனாவின் கண்களில் கண்ணீர் மட்டுமே வெளிவரும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்க…. உள்ளம் உலைகளமாக கொதித்துக் கொண்டிருந்தது…. ஒரு புறம் தன்னை நம்பிய சந்தியாவுக்கு அவள் செய்த பாவம் மற்றும் துரோகம் அவளை இம்சித்தது… ஆனால் இந்த சிவா கூட மனசாட்சி இல்லாமல் இருக்கின்றானே… முதலில் அவன் அப்படி இருந்திருக்கலாம்… ஆனால் ராகவ் சந்தியாவுடன் பழகி இருந்த இந்த நாட்களைக் கூட மறந்து விட்டானா… படு பாவி என்று மனம் அடித்துக் கொண்டது…


இருந்து அவளால் ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் இருந்தாளே…. கைகால்கள் கட்டப்பட்டு அங்கிருந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்க… சிவா அவளை எல்லாம் கண்டுகொள்ளாமல் அம்ரீத்துடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்… நாளைக்கு சந்தியாவை கூட்டிச் செல்லும் விதங்களைப் பற்றி…

கிட்டத்தட்ட அவர்களின் நாளைய திட்டங்கள் எல்லாம் பேசி முடித்த சிவா… அம்ரீத்திடம்

“சார்… நிரஞ்சனா கிட்ட நான் பேசுகிறேன்… அவ கொஞ்சம் எமோஷனலா ப்ளாக் ஆவா… எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவா… அவளைப் பற்றி எனக்குத் தெரியும்” என்று நிரஞ்சனாவைப் பார்த்தபடியே பேச…. அதைக் கேட்க கேட்க நிரஞ்சனாவுக்குள் ஆவேசம்

இவ்வளவு பெரிய சுயநலக்காரனா சிவா… அதீனாவின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அந்த இடத்தில் சந்தியாவை நிறுத்தும் அளவிற்கு…

இப்போது கண்ணீர் வடித்து என்ன பிரயோசனம்… சிவாவைப் பார்க்க அவனோ அலட்சியமான பாவத்தோடு… இவளைப் பார்த்துவிட்டு தன் உரையாடலை அம்ரீத்துடன் தொடர்ந்து கொண்டிருந்தான்…

அடுத்த சில நிமிடங்களிலேயே அவன் நிரஞ்சனாவைக் கடந்தும் சென்றிருக்க… என்ன செய்வது… ஏதாவது செய்து சந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமே… மனமெங்கும் இந்த சிந்தனைகள் மட்டுமே இருக்க… அதையே மனதோடு பிரார்த்திக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா…

----

நிரஞ்சனா இன்னும் ஏன் வரவில்லை… கிட்டத்தட்ட ஒரு மணி நேராமாகி இருக்க… நிரஞ்சனா இடத்தில் வேறொரு காவலர் இருந்தார்… அதுவும் ஆண் காவலர்… ஏன் …

இந்த சிந்தனை எல்லாம் சந்தியாவுக்கு இல்லை... அதீனாவுக்குள்….


சந்தியா அரைத் தூக்கத்தில் இருந்தாள்… கொடுக்கப்பட்டிருந்த வலிநிவாரணி மாத்திரைகளால்… நடக்கவே முடியாத நிலையில் தான் அன்று சிறை அறைக்கு வந்தாள்… ஏன் தனக்கு இந்த சித்திரவதைகள் என்று அவளுக்கே தெரியவில்லை… என்ன பாவம் செய்தோம்… விசாரணையின் போது… இரண்டாவது அடி விழுந்த போதே மயங்கி விட்டாள் சந்தியா… அதன் பிறகு அவளால் பேச முடிந்தால் தானே… மயக்கம் தெளியவைத்த போதும் அவளுக்கு நினைவு வரவில்லை… ஒரு கட்டத்தில் தலைமை அதிகாரிக்கும் சிவாவுக்கும் வாக்கும்வாதம் நிகழ… சிவா எப்படியோ காப்பாற்றி விட்டான்… ஆனால் சந்தியாவுக்கு அந்த அடிகளே போதுமானதாக இருந்தது துவண்டு விழ…

நேற்றிலிருந்து அதீனா சந்தியாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றாள்… அவளால் எழவே முடியவில்லை… அந்த அளவு சித்திரவதைப் படுத்தி இருக்கின்றனர்… சாதரண விசாரணைதான் என்பது அவள் ஓரளவு நினைவில் இருக்கின்றாள்… வலி மட்டுமே அவளுக்கு என்பதில் புரிந்து கொண்டாள் அதீனா…

இது போல எத்தனையோ சித்திரவதைகள் அவள் அனுபவித்திருக்கின்றாள்… உயிரை மட்டும் விட்டுவிட்டு… மற்ற அனைத்து வகையிலும்… சில சமயம்… உயிர் போய் விட்டதோ என இவள் மயக்கத்துடன் தரையில் வீழ்ந்திருப்பாள்… ஆனால் எழுந்து பார்க்கும் போது ஐந்து நாட்கள் கடந்திருக்கும்… அப்படிப்பட்ட வேதனைகளை எல்லாம் தாண்டி… தூக்குக் கயிறா… ஆயுள் தண்டனையா என்று காத்துக் கொண்டிருக்கின்றாள் அதீனா…

சந்தியா நேற்று வரை புலம்பிய புலம்பலில்… அவளை மயக்கத்திலேயே வலி தெரியாத வண்ணம் வைத்திருக்கின்றனர் என்பது அதீனாவுக்கும் நன்றாகப் புரிந்தது… இன்று பரவாயில்லை என்பது அவளது புலம்பல்கள் குறைந்திருக்க….. இவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது…. நாளைக் காலை ஓரளவு தெளிவடைந்து விடுவாள்…

சிவாவின் திட்டம் மொத்தமும் இவளுக்கு விளங்கியது…. நாளை தான் கோர்ட்டுக்கு செல்லப் போவதில்லை… இங்குதான் இருக்கப் போகிறோம்…. தனக்காக சந்தியாதான் செல்லப் போகிறாள் என்று… புரியாமல் இல்லை…

சந்தியாவைப் பார்த்து எரிச்சலும் கோபமுமே வந்தது அவளுக்கு… ஏன் இப்படி வந்து மாட்டினாள்… அவள் வந்து மாட்டியது மட்டுமல்லாமல் தன்னையும் இம்சிக்கின்றாளே என்று தோன்ற….

ராகவ்.. ரகு என்று அடிக்கடி காதில் விழும் வார்த்தைகள்..

இளப்பமாக உதட்டைச் சுழித்தாள்… காதல் போல… என்ன சூழ்நிலை என்றே தெரியவில்லை… எந்தப் பொறியை வைத்து இவளைச் சிக்க வைத்திருக்கின்றனர்… ஏன் இப்படி எல்லாவற்றையும் அனுபவிக்கின்றாள்…

அதே நேரம் கணேசனை நினைக்க… எப்படி இவளை இங்கு தவிக்க விட்டார்… ஒரு வேளை அவருக்குத் தெரிந்திருக்காதோ… என்று தவித்த மனதில்…

“ப்ச்ச்… என்னை விட்டு விடவில்லை… அதே போல் தான் இருக்கும்… தெரிந்திருந்தால் அவர் இவளை இப்படி தவிக்க விட்டிருப்பாரா…”

யோசனை செய்து கொண்டிருக்கும் போதே… சிவா வருவது தெரிய…. அமைதியாக அவனையேப் பார்த்துக் கொண்டிருக்க… வந்தவன்….. சந்தியாவிடம் ஏதோ பேச அவள் ஏதோ சொன்னாள்… இவளுக்குச் சரியாகக் கேட்கவில்லை… கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவன் அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன்… அதன் பின் இவள் சிறை அறைக்கு வர…

ஏளனமாக அவனைப் பார்த்து வைத்தாள் அதீனா… ஒரு அப்பாவிப் பெண்ணை மிரட்டி… அவள் வாழ்க்கையைப் பணயம் வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருப்பவனை புழுவிலும் அற்பமாக பார்த்து வைக்க…

சிவாவும் அருகில் வந்திருந்தான்…

சற்று முன் சந்தியாவிடம் இருந்த ஆதுரமானப் பார்வை அவனிடம் சுத்தமாக இல்லை… அதீனாவைப் பார்த்த போது… கண்கள் சிவந்திருந்தன… முகம் இறுகி இருக்க… அதீனாவைப் பார்த்தான்…

“நாளைக்கு கடைசி விசாரணை…. உன்னோட கடைசி வாக்குமூலம்… நீ உன்னோட தவறை ஒத்துக்கிட்ட… ஆனால் உனக்குப் பின்னால இருக்கிறவங்களைப் பற்றி நீ சொல்றதுக்கு உனக்கு கடைசி வாய்ப்பு… மனசாட்சி இருந்தால்” என்று ஹிந்தியில் ஆரம்பித்த போதே….

“எனக்கு எது சரியோ அதைச் செய்தேன்… அதற்கான தண்டனையையும் ஏத்துக்க தயார்…. வேறெந்த வாக்கு மூலமும் என்கிட்ட எதிர்பார்க்காதீங்க” என்று முடிக்க… சிவாவின் கரம்… சட்டென்று அதீனாவின் குரல் வளையை நெறிக்க ஆரம்பிக்க… அப்போது கூட வலியால் முகம் சுளிக்க வில்லை அதீனா… அவன் கோபமெல்லாம் வடிந்து அவளை விட்ட போது… அவனை விட்டு தள்ளிக் கூட நிற்காமல் இருமி சரி செய்து விட்டு… இலேசாக கழுத்தை பிடித்து நீவி விட்டுக் கொள்ள…

”நீ உண்மையைச் சொல்லாததுனால இங்க எத்தனை பேருக்கு பிரச்சனை தெரியுமா…” என்று அவளிடம் உணர்ச்சி வசப்பட்டு கத்த… சந்தியாவுக்கு கூட அவன் கத்தல் கேட்டது தான்..

எழுந்து பார்க்க முடியவில்லை அவளால்.. யாராவது ஒருவர் துணைக்கு வேண்டும் போல் இருந்தது தலையைத் தூக்கிப் பார்க்கவே… அந்த அளவு பாராமாய் இருக்க….

சற்று முன் சிவா சொன்னது ஞாபகம் வந்தது…

“நாளையோடு உனக்கு இந்த துன்பத்திலிருந்து விடுதலை…” என்று சொன்னானே…

இந்த ஒரு இரவைக் கடந்து விட்டால்… நாளை ராகவ்வின் அருகில் தான் இருப்போம்….. நினைக்கும் போதே உள்ளத்தில் அனுபவித்துக் கொண்டிருந்த வலியையும் மீறி… சுகமான இதம் மனதுக்குள் பரவ அந்த இதம் உடல் வலியையும் மறக்க வைத்தது என்னவோ உண்மை…

தன்னை இந்த நிலையில் பார்த்தால் மிகவும் வேதனை அடைவானே… அதே நேரம் கண்டிப்பாக திட்டும் கிடைக்கும்… எதையும் நினைக்காமல் கண்களை மூடினாள்… சந்தியா… நாளைக்கான விடிவெள்ளி அவள் மனதில் இப்போதே தோன்ற… காலக்கடிகாரத்தை இன்னும் ஒரு 18 மணினேரம் கடத்தினால்… எப்படி இருக்கும் என்று நிராசையாக மனம் வேண்டியது… தனக்காக காத்துக் கொண்டிருப்பவனிடம் நான் வந்து விட்டேன் உன்னிடம்… எனச் சொல்லி அவன் மார்பில் தஞ்சமடையும் தருணத்திற்க்காக… இங்கு பட்ட வேதனைகளை எல்லாம் அவன் கையணைவில் மறந்து விடும் அந்த நிமிடங்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்… ரகுவின் சகி….

திடிரென சிவா…. வேக நடையுடன் கிளம்பியவன்… அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அந்த காவலனையும் அழைத்துச் சென்று விட…. சந்தியாவுக்கு சிவாவின் தீவிர யோசனைகள் பெரிதாக ஒன்றையும் நினைக்கவைக்க வில்லை… அவளின் நினைவுகளில் அவள் கணவன் மட்டுமே… மற்ற யாரைப் பற்றியும் பெரிதாக கொண்டு வரவில்லை… அந்த மற்றவர்கள் என்பதில் அவள் அன்னையுமே அடக்கம்… சந்தியா அப்படி இருக்க…

அதீனாவோ தீவிர யோசனைக்குப் போயிருந்தாள் இப்போது… சிவாவின் நடவடிக்கைகள் அவளுக்கு சரியாகப் படவில்லை… அவள் பார்த்தவரை சிவா எப்போதுமே உணர்ச்சி வயப்பட மாட்டான்… இன்று ஒரு வித பதட்டத்தோடே இருந்தான்… அதோடு மட்டுமல்லாமல் சில மணி நேரத்திற்கு முன்பு வரை இருந்த நிரஞ்சனா இங்கு இப்போது இல்லாதது வேறு அவளை உறுத்த…. மனம் சில கணக்கீடுகளை சரியாக எடுத்துக் கொடுக்க… சந்தியாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் அதீனா…

---

”சார்… நாளை அதீனா, சந்தியா ரெண்டு பேருமே இங்க இருக்க வேண்டாம்… அதீனா அப்ரூவர் ஆகிட்டான்றது எப்போது லீக் ஆனதோ… அதீனாவை இங்க விட்டுட்டு போறது அவ்வளவு நல்லதா படலை… எதிரிகள் எங்கும் இருக்கலாம்” அம்ரீத்திடம் சிவா சொல்ல… அம்ரீத் கேள்வியாக புருவம் நெறித்தார்… சிவாவின் முகத்தில் பெரிதாக படபடப்பெல்லாம் இல்லை… நிதானமாக இருக்க…

“அதீனாவை வெளியில கூட்டிட்டு போய்… அதுல எவ்வளவு ரிஸ்க் தெரியுமா…” என்று இடையிட

“தெரியும்… அதீனாவை நான் என் கூட கூட்டிட்டு வருகிறேன்… நீங்க சந்தியாவை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போங்க…” என்று சிவா சொல்ல…

நேற்று வரை அதீனா… இங்கிருந்து வரப்போவதில்லை என்பதே அவர்களது திட்டம்… எதற்காக சந்தியாவை அழைத்து வந்தார்களோ… அதாவது… சந்தியா அதீனாவாக மாறி கோர்ட் வளாகத்தில் சாட்சி சொல்லி முடித்தபின்… அவளை நிரஞ்சனாவுடன் அவளது வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக இருந்த திட்டத்தில்… மாற்றமாக அதீனாவும் வெளியே அழைத்து வரப்படுகின்றாள் என்றால் பாதுகாப்பு கேள்விக்குறியே… அதிலும் அந்த அதீனா தப்பித்து விட்டால் இன்னும் இன்னும் பிரச்சனையே ஆகும்… எனும் போது சிவா இவ்வாறு சொன்னது… அம்ரீத்துக்கு கோபத்தை ஏற்படுத்த

”சிவா… இந்த வொர்ஸ்ட் பிளான எக்ஸிகியூட் பண்ண… நான் எப்படி அப்ரூவல் கொடுப்பேனு நினைக்கிரீங்க அதீனா நம்மகிட்ட இருந்து தப்பிச்சுட்டா… அதுக்கப்புறம் நிலைமை இன்னும் மோசம்…. ரிஸ்க் எடுக்க வேண்டாம்”

சிவா மனதுக்குள் சொல்லிக் கொண்டான்…. இதுவரை நான் போட்ட திட்டங்கள் மட்டுமே மகா கேவலாமானவை… முதன் முதலாக ஒழுங்கான திட்டம் போட்டிருக்கின்றேன்… அப்பாவி உயிரைக் காப்பாற்றுவது மட்டுவது என் நோக்கம்… அதற்கு இது சரியான திட்டமே… இதனால்.. காவல் துறையில் இதுவரை நான் காப்பாற்றி வைத்திருந்த என் பெயர்… ஏன் என் வேலை போனால் கூட பரவாயில்லை..” நினைத்தவன்… நிமிர்ந்து… உறுதியாகச் சொன்னான்

“என்னோட கட்டுப்பாட்ல அதீனா இருக்கிற வரை… அவளுக்கும் ஆபத்து வராது… அவளையும் தப்பிக்க விட மாட்டேன்… என் மேல நம்பிக்கை இருந்தால் அப்ரூவல் கொடுங்க… இது இந்த வழக்கோட கடைசி திட்டம்…” என்றவனை அம்ரீத்தால் நம்பாமல் இருக்க முடியவில்லை

அம்ரீத்துக்கு சிவாவின் பழி வாங்கும் உணர்ச்சி நன்றாகத் தெரியும்.. இந்த குழுவில் இருப்பவர்கள் அனைவருமே… அன்றைய குண்டு வெடிப்பு நிகழ்ச்சியில் இறந்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே… இவர்களால் மட்டுமே உண்மையாக இதில் பங்காற்ற முடியும் என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கபட்டவர்கள்… இதுல் கடைசி நேரத்தில் தவறியது நிரஞ்சனா மட்டுமே…. அம்ரீத் அமைதியாக… இருக்க…

அவரின் மௌனமே அவனுக்கு சம்மதத்தை அளிக்க… சிவா புன்னகைத்தான்… கண்களில் தீர்க்கம் வந்திருந்தது அவனுக்கு…

“ஹ்ம்ம்… உன்னை நம்புகிறேன் சிவா…. ” என்று மட்டும் அம்ரீத் சொல்ல…

“சார்… அந்த எமோஷனல் இடியட் கிட்ட கொஞ்சம் பேசனும்…” என்று மட்டும் சொல்ல… அம்ரீத் புருவம் உயர்த்தினார்

”நிரஞ்சனா கிட்ட நான் பேசுகிறேன்… அவ அந்த சந்தியாவிடம் பழகினதில் கொஞ்சம் எமோஷனல் ஆகிடா… நீதிமன்றத்தில் சந்தியாவுக்கு ஏதாவது ஆகிருமோன்னு அவளாகவே அனுமானம் பண்ணிகிட்டதால வந்த பயத்தில்தான் அவ அப்படி நடந்துகிட்டா… நான் அவளுக்குப் புரிய வைக்கிறேன்… ” என்றவனிடம் பெரிதாக ஒன்றும் வழக்காட வில்லை அம்ரீத்தும்… இது வழக்கமாக நடப்பதுதான்… நிரஞ்சனா இது போல அவ்வப்போது நடப்பதுதான் ... சிவா அவளிடம் பேசி சரிப்படுத்துவது என எப்போதும் நடப்பது தானே

என்ன இன்று அளவுக்கும் மீறி உணர்ச்சிவசப்பட்டு விட்டாள்…. அதில் தானும் கோபப்பட்டு விட்டோம்… அதற்கு தண்டனையும் கொடுத்து விட்டோம்… உயரதிகாரியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இனியாவது புரிந்திருக்கும் அந்த பெண்ணுக்கு… என்று அம்ரீத் நினைத்தபடி… சிவாவிடம்

“நீயாச்சு… அவளாச்சு…. ப்ளான் மட்டும் சொதப்பாம இருந்தால் சரி.. “ என்றவர்….

“எனக்கென்னமோ… நிரஞ்சனா மேல ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை இல்லை… நீ மட்டும் தான் நம்பிக்கை வைத்திருந்த… அதே போல நிரஞ்சனாவும் சந்தியாவை நம்மகிட்ட கூட்டிட்டு வந்து ஒப்படைச்சுட்டா… அந்த நம்பிக்கைதான் மற்றபடி… எதுவுமில்லை” என்று சென்றுவிட்டார்…

”ஊப்ப்ஸ்” பெருமூச்சை விட்டவனாக…. நிரஞ்சனா இருந்த அறைக்கு வந்திருந்தான்… கைகால்கள் வாய் என மொத்தமாகக் கட்டப்பட்டு.. கண்களில் வெறியோடு அமர்ந்திருந்த நிரஞ்சனாவைப் பார்த்தபடியே உள்ளே வந்தவன்… தன்னோடு வந்த போலிஸ் அதிகாரியிடம்

”தினேஷ்… இந்த கட்டை எல்லாம் அவிழ்த்து விடு” என்று சொல்ல… நிரஞ்சனா யோசனையுடன் அவனைப் பார்க்க… அந்த முகத்தில் இருந்து ஒன்றுமே இவளால் புரிந்து கொள்ள முடியவில்லை….

சிவா நிரஞ்சனாவுடன் பேச ஆரம்பித்த அதே நேரம்… அதீனாவும் தன் ஜெயில் அறையை விட்டு வெளியே வந்திருந்தாள்…

சந்தியாவின் அறை முன்னும் வந்து நின்றிருந்தாள்… இருக்கும் சில நிமிடங்களில்… யாரும் வருவதற்கு முன் இந்த முட்டாளை வேறு சரி செய்ய வேண்டுமே… என்று சந்தியாவை மனதுக்குள் திட்டிக் கொண்டவள்… அவளைப் பார்க்க… நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்…

கடுப்பாக வந்தது அதீனாவுக்கு… நாளை என்ன வேண்டும் என்றாலும் நடக்காலும் … இது தெரியாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றாள்… இவளை என்ன செய்யலாம்… என்று கோபம் வேறு வந்து தொலைக்க… அவளை அப்புறம் திட்டிக் கொள்ளலாம்.. முதலில் அவளது சிறைக்கதவைப் பார் என மூளை சொல்ல வேகவேகமாக அதைத் திறக்க முயற்சி செய்ய… முடியாமல் போக… அதீனா நிதானத்தில் இல்லை என்பது அவளுக்கே புரிய

“சிந்தும்மா… பதறாத… இவள எப்படியாவது காப்பத்தனும்… அதை மட்டும் மனதில் வை” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள்.. தன்னை அமைதிப்படுத்த வேண்டுமென்றால் மட்டுமே தன் தந்தை போல தன்னை அழைத்துக் கொள்வாள் அதீனா… இப்படி சொன்ன போதே அவளுக்கு முகமெங்கும் மலர்ந்திருந்ததுதான்… நிதானமும் வந்திருந்தது… தன் செயலில்

இப்போது கவனம் வைத்து திறக்க முயற்சிக்க பட்டென பூட்டும் திறக்க… மீண்டும் அதை பூட்டிப் பார்த்தவளுக்கு… ஏளனத்துடன் அந்த பூட்டைப் பார்த்தவள் தன் கையில் இருந்த சிறு ஆணி போன்ற அந்தப் பொருளை பெருமையுடன் பார்த்தாள் என்று சொல்ல வேண்டுமா… வேகமாக உள்ளே வந்தவள்…

“சந்தியா… சந்தியா…” என்று அவளைத் தூக்கத்தில் இருந்து எழுப்ப… சந்தியாவுக்கோ… தூங்குகிறோமா… மயங்கி இருக்கின்றோமா என்று தெரியாத நிலை… யாரோ அவள் பெயர் சொல்லி அழைக்கின்றார்கள் என்பது மட்டுமே…

மீண்டும் மீண்டும் தட்டி எழுப்பப்பட… வலியில் அவள் முகம் சுருங்க… சந்தியா பதட்டமின்றி எழுந்து அமர்ந்தாள்தான்….

நிரஞ்சனா என்று நினைத்து இருக்க…

தன் முன்னே இருந்தவளைப் பார்த்து…… அடுத்த நொடி…. அவள் கண்களில் ஆச்சரியமும்… பயமும்…கூடவே சொல்ல முடியாத பல உணர்வுகள்…

தன்னைப் போல இருப்பாள் என்று தெரியும்… ஆனால் முதன் முதலாகப் நேருக்கு நேராக பார்க்கின்றாள்…. சந்தியா அதீனாவைப் பார்த்த பார்வையில் பயத்தை விட ஆச்சரியமே இருக்க…

ஏனோ கத்த தோணவில்லை… தன் முன் அமர்ந்திருப்பவளிடம் ஆக்ரோச பாவனை ஏதுமின்றி… அந்த கண்களில் இருப்பது என்ன… புரிந்து கொள்ள முயன்றாள் சந்தியா… ஏனோ முடியவில்லை… இப்போது சந்தியாவுக்கு வேறு கவலை வந்திருந்தது….

யாராவது வந்து விட்டார்கள் என்றால்… இவளைப் பார்த்து விட்டால் என்றால்… கண்காணிப்பு கேமெரா எல்லாம் இருக்காதா யோசித்துக் கொண்டிருக்கும் போதே….

அவள் அருகில் மடித்து வைக்கப்பட்டிருந்த சந்தியாவின் கோட்டை எடுத்தபடியே

“எழுந்திரு…. எழுந்திரு என்னோட செல்லுக்கு போ… நீ தேடுற கேமெராலாம் இங்க இல்லை…” என்று அதீனா சொல்ல.. சந்தியா அப்போதுதான் கவனித்தாள்… ராகவ்வின் கோட் அதீனாவின் கைகளில் இருந்தது

சந்தியா தடுக்கும் முன்னே அவள் மேல் கோட்டை கைப்பற்றி இருந்தாள்…

சந்தியாவுக்கு சுரு சுருவென்று கோபம் வந்திருக்க…

“ஏய் அது என்னோட ஜெர்க்கின்… அதைக் கொடு…. என் ஹஸ்பெண்டோடது…” எனும் போதே சந்தியா அழுது விடுவது போல குரல் மாறி இருக்க…

அந்தக் கோபத்தை அலட்சியமாகப் தள்ளிய அதீனா… சந்தியாவின் ஜெர்க்கினை அணிந்தபடியே…

“இது முக்கியம்னா… நாளைக்கு இந்த கோட் தான் உன் புருசண்ட்ட போய்க் கிடைக்கும்… நீ பொணமாத்தான் அவருக்கு கிடைப்ப….எது முக்கியம்னு நீ முடிவு பண்ணு” என்று சாதரணமாகச் சொல்ல…

”எ… என்ன சொல்ற… அதெல்லாம் எனக்கு ஒண்ணும் நடக்காது… சிவா சார் அப்படியெல்லாம் ஆக விடமாட்டார்” எனும் போதே வார்த்தைகள் நலிவாகத்தான் வந்தன… கடந்த சில நாட்களாக தனக்கு நடந்தவற்றை எல்லாம் சிவாவால் முற்றிலுமாக தடுக்க முடியவில்லையே… அந்த எண்ணத்தில் வார்த்தைகள் நலிந்திருக்க… அதீனாவுக்கு அதே எண்ணம் தான் என்பது போல சந்தியாவைப் பார்க்க…

“சந்தியா… புரிஞ்சுக்கோ… விளக்கம் கொடுக்கிறதுக்கெல்லாம் நேரம் இல்லை… நாளைக்கு நான் கோர்ட்டுக்கு போகிறேன்…” என்ற போதே

”நீ ஏன் அத்தனை பேரைக் கொலை பண்ணின… அப்புறம் ஏன் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேங்கிற… ” என்று ஆவேசமாகக் கேட்டவள்… சற்று நிறுத்தி… எரிச்சலாக

“நீ ஏன் என்னை மாதிரி இருந்து தொலச்ச… இப்போ நான் அனுபவிக்கிறேன்” என்று அழ ஆரம்பிக்க…

அதீனாவுக்கு கோபம் வந்தது என்றே சொல்லலாம் அவளது அழுகையைப் பார்த்து… அதே நேரம் பாவமாகவும் இருக்க… அவளிடம் இப்போது அன்பாக பேசினால்… இன்னும் அதிகமாகப் பேசுவாள் என்று தோன்ற…

“இப்போ நீ என் இடத்துக்கு போற… அதை மட்டும் பண்ணு…” என்று அவளை இழுக்க… சந்தியாவுக்கு முதன் முதலாக உரைத்தது… தன்னிடம் அதீனா தமிழில் உரையாடிக் கொண்டிருக்கின்றாள் என்று… அந்த கேள்வியையும் விடுவாளா…

“உனக்கு தமிழ் தெரியுமா… என்னை ஏன் காப்பாத்தனும்னு நினைக்கிற” முதன் முதலாக சந்தியா நிதானமாக கேட்க…

”ஹ்ம்ம்ம்… வேண்டுதல்… நான் தானே தப்பு செய்தேன்… எனக்குத்தானே தண்டனை கிடைக்கனும்…” என்றவளின் கண்களில் யாராவது வந்து விடுவார்களோ… நேரமில்லையே என்ற அச்சமும் வந்திருக்க

“சந்தியா… பேச நேரமில்லை நாளைக்கு என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் சந்தியா… உன் உயிருக்கு ஆபத்து… எனக்காக நீ மாட்டிகிட்டேன்னா” என்ற போதே

“என் ஒருத்தியோட உயிருக்கு… அப்படி என்ன வேல்யூ அதீனா… நீ எத்தனையோ பேரை கொலை பண்ணின குற்றவாளி… பரவாயில்ல… எனக்காக நீ பாவப்படுகிறாய்னே வைத்துக் கொள்ளலாம்… நான் ஏன் உன் செல்லுக்கு போகனும்… சிவா சார் வரட்டும்… அவர்கிட்ட நீ ஒத்துக்கோ… நாளைக்கு கோர்ட்ல உண்மையை எல்லாம் சொல்றேன்னு… அப்படி நீ சொன்ன பின்னால… எதுக்கு இந்த ஆள் மாறாட்டம் வேலையெல்லாம்” என்ற போதே அதீனா பல்லைக் கடித்தாள்…

சொல்லப் போனால் அவளுக்கு சந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் ... அது மட்டுமே அவளது எண்ணம்… மற்றபடி உண்மையை சொல்லவெல்லாம் மனம் வரவில்லை… இதனால் தான் சந்தியாவைத் தான் இருக்கும் இடத்திற்கு மாறச் சொன்னாள்…

”நீ உண்மைய ஒத்துக்கிறேன்னு சொல்லு… நான் சிவா சார்கிட்ட உனக்காக பேசுகிறேன்… உன்னைக் காப்பாற்ற ட்ரை பண்றேன்” என்று சந்தியா சொல்லி முடிக்க வில்லை… அதீனாவுக்கு உண்மையிலேயே சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை… இருந்தும் இத்தனை நாள் அவள் கற்ற பயிற்சிகள் எல்லாம் கை கொடுக்க… தன்னை அடக்கிக் கொண்டவளாக…

“5 மினிட்ஸ் டைம் தருகிறேன்… உன்னோட உயிர் முக்கியமா… இல்லை நாளைக்கு கோர்ட்டுக்கு போவது முக்கியமா… முடிவு பண்ணு ” என்ற போதே

சந்தியாவுக்கு முதன் முதலாக உள்ளுக்குள் உதறல் எடுத்திருக்க… நம்மை மிரட்ட பொய் சொல்கிறாள் இவள்.. என்று தோன்ற… இருந்தும்

“நீ போனால் மட்டும் உயிர் போகாதா” என்று திமிராகக் கேட்க…

இப்போது அதீனா சந்தியாவை எள்ளலாகப் பார்த்தாள்…

“என் உயிர் எனக்கே முக்கியமில்லை… ரெண்டாவது என்னோட உயிர் என்னைத் தவிர வேற யாருக்குமே முக்கியம் இல்ல” இப்போது அதீனாவின் குரல் சற்று தடுமாறித்தான் வெளிவந்தது…

தனக்காக யாரும் இல்லையா… தந்தையின் முகம் அவள் மனதில் வராமல் இல்லை… ஆனால் அவருக்கு என்னைத் தெரியுமா… இனிமேல் தெரிய வாய்ப்பிருக்கின்றது… இந்த சந்தியா சென்று சொன்னால் அவர் தன்னைத் தெரிந்து கொள்வாரா?…

இப்போது சந்தியா மிகவும் தடுமாறி இருந்தாள்… உண்மையிலேயே நாளைக்கு ஏதாவது ஆகி விடுமோ… நாம் தேவையில்லாத ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமோ… இவ்வளவு பேசுகிறவள்… உண்மையையும் ஒத்துக்கொண்டால் சந்தோஷமாக இருக்குமே… என்று தோன்றினாலும்…. அதீனா சென்றாலும் ஆபத்துதானே எனும் போது மனம் சுணங்க… சிவா சார் அவளை அப்படியெல்லாம் ஈஸியாக விடமாட்டார்… அவளையே எனும்போது தன்னைக் காப்பாற்ற மாட்டாரா…

ஏனோ சிவாவை முழுவதுமாக நம்பினாள் சந்தியா….

மனம் முரண்டு பிடித்தது….

நாளை என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்… எது வேண்டும் என்றாலும்… கண்களில் உண்மையிலேயே சந்தியாவுக்கு மரண பயம் வந்திருந்தது…. ஆனாலும் மனம் ஏதோ ஒரு மூலையில் அவளிடம் அழுத்தமாகச் சொன்னது… உனக்கும் ராகவ்வுமான வாழ்க்கை அவ்வளவு சீக்கிரமாக முடியாது… எப்பாடுபட்டாவது அவனிடம் போய்ச் சேர்ந்து விடுவாய்என்று… அந்தக் குரலை மனதுக்குள் இழுத்து வைத்துக் கொண்டவள் நிமிர்ந்து சொன்னாள்… கர்வமாகவேச் சொன்னாள்…

“உனக்கு உன்னோட உயிர் முக்கியமில்லை அதீனா… ஆனால் என்னோட உயிர் எனக்கு மட்டும் முக்கியம் இல்லை… எனக்காக காத்துட்டு இருக்கிற இன்னொரு உயிருக்கு மிக முக்கியம்… நான் அவர்கிட்ட மறுபடியும் வருவேன்னு காத்துட்டு இருக்கிற அவரோட நம்பிக்கை என்னை அவர்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கும்…” என்று சொல்ல…

அதீனாவுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை… சந்தியாவின் நாடகத்தனமான வார்த்தைகளைக் கேட்டு… அதே நேரம் இகழ்ச்சியாக புருவம் உயர்த்தியவள்…


“நாளைக்கு எவனாவது சுடும் போது.. உன் அவரோட காத்திருப்பு நம்பிக்கை எல்லாம் வருகிற புல்லட்டை திசை திருப்பாது… முட்டாளா நீ… ப்ராக்டிக்கலா பேசு… நம்பிகை… தும்பிக்கை எல்லாம் கதை பேசாத… அது எல்லாம் கதைபுத்தகத்துக்கும்… சினிமாவுக்கும் மட்டுமே… ” என்று சந்தியாவுக்கு புரிய வைக்க முயற்சிக்க… அவளின் எள்ளல் வார்த்தைகளை எல்லாம் சந்தியா கண்டு கொள்ளவே இல்லை

“நானும் உனக்கு அதே ஐந்து நிமிசம் டைம் தருகிறேன்… எல்லா உண்மையையும் சொல்ல ஒத்துக்கிறேன்னு சொல்லு… ” சந்தியா பிடிவாதமாக இருக்க…

அதீனா அவளை வெறித்த பார்வை பார்க்க…

சந்தியாவும் கைகளைக் கட்டியபடி சுவரில் சாய… சந்தியாவுக்கே தெரியவில்லை… எப்படி இந்த பிடிவாதம் வந்தது என்று… ஆனால் நம்பினாள்… இத்தனை நாள் தனக்கு நல்லது நடக்கும் போதெல்லாம் கெட்டது நடந்து விடுமோ என்று நம்பி தன்னைத்தானே வருத்திக் கொண்டவளுக்கு… நடப்பது அத்தனையும் கெட்டது என்ற போதிலும்… அதன் முடிவு தனக்கான பாதகமாக வராது என்று நம்பினாள்…

அதீனா அதற்கு மேல் ஏதும் பேச வில்லை… மாறி மாறி வாக்குவாதம் செய்து… வெல்வதற்கான இடமும் அல்ல… நேரமும் கிடையாது…

“சொல்லி விட்டோம்... இனி அவள் பாடு” என சந்தியாவை விட்டு நகரத் தொடங்க… மனமோ சண்டித்தனம் செய்தது…


இவ்வளவு அப்பாவியாக இருக்கின்றாளே என்று அவளை விட்டும் போக முடியாமல் தவித்தவள்… கண் முன்னே தான் செய்த தவறுக்கு தன் தங்கை சாகக் கூடாது என்று கவலை கொண்டவள்… பல அப்பாவி உயிர்களை வெடிகுண்டு வைத்த தகர்த்த அதீனாவே

எந்த சிறுமியை அடித்து தன் மூர்க்க குணத்தை ஆரம்பித்து இருந்தாளோ…. அவளை மறுபடியும் பார்த்த போது… அவள் குணம் தடுமாறியது ஏனோ… உண்மையைச் சொல்லப்போனால் அவள் தனக்காக மாட்டி சித்திரவதைப் படுவதைப் பார்த்து சந்தோஷப்படத்தானே வேண்டும்… ஏன் முடியவில்லை…

பிடிவாதம் பிடிக்கின்றாளே என்று கோபம் மட்டுமே வந்தது… யோசித்தவளுக்கு…


“உண்மையைச் சொல்லித் தொலைகிறேன்…” என்று சந்தியாவிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியே தெரியவில்லை… மீண்டும் சந்தியாவிடமே திரும்ப…

சந்தியாவாவும் அதே நேரத்தில்

“அதீனா ஜி…” என்று அழைக்க…

வேகமாகத் திரும்பினாள் அதீனா… சந்தியா இவள் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டாளோ அதாவது மாறுவதற்கு ஒத்துக் கொண்டாளோ என்று….

ஆனால் சந்தியா கூப்பிட்டது அதற்காக இல்லை…

“கோட் ஜி” என்று காட்ட… அதினா முகத்தில் முதன் முறை சந்தியாவைப் பார்த்து அழகான புன்னகை… ஏனோ அவளிடம் வம்பிழுக்கத் தோன்றியது… அவளின் பிடிவாதத்தில்… அவளின் காதலில்...

உயிர் போய் விடும் என்று மிரட்டியும் கூட வரமாட்டேன் என்ற அந்த அழுத்தம் பிடித்திருக்க… அதை ரசித்தபடியே

“இனி இதை மறந்துடு….” என்று அவள் கோட்டின் கீழ்பாகத்தில் உள்ள பாக்கெட்டில் கை வைத்தபடியே… அதீனா சொல்ல

சொன்ன அதீனா என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னாள்…

கேட்ட ராகவ்வின் மனைவிக்கோ அது சாதாரண வார்த்தைகள் அல்ல… அந்த வார்த்தைகள் அவள் கணவனையே மறக்கச் சொல்வது போல இருக்க… கண்கள் கலங்கி இருக்க…

“கொடு” என்று அதீனாவை ஆக்ரோஷமாக இழுக்க… அதே நேரம் அதினாவின் கைகளிலும் சந்தியாவின் மாங்கல்யம் பட…

அவளையுமறியாமலே தான் சொன்ன வார்த்தைகளுக்காக சாரி என்று சொன்ன அதீனா…

“நான் உண்மையை எல்லாம் சொல்றேன்… ஆனால் சிவாகிட்ட சொல்ல விரும்பலை…. நான் கோர்ட்ல… அதாவது எனக்கு பேச வாய்ப்பு கிடைத்ததுனா உண்மை எல்லாம் சொல்றேன் சந்தியா… இதுக்கு மேல உனக்காக கீழ இறங்க முடியாது… என்னோட தன்மானம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உனக்காக… உன் உயிரைக் காப்பாத்துறதுக்காகச் சொல்கிறேன்…” என்றவள் தன் கையில் இருந்த சந்தியாவின் மாங்கல்யத்தை அவளிடம் கொடுக்க…

அந்த கண்கள் சொன்ன உண்மை சந்தியாவையே வாய் வார்த்தையின்றி நிற்க வைக்க… அதே நேரம் கையில் வாங்கிய தாலியை உள்ளங்கையில் வைத்து இறுக மூடிக் கொண்டாள்…

“இந்த அளவுக்கு தன்மீது இரக்கம் வைக்க காரணம் என்ன… அந்த ஜெயவேலை சுட்டதற்காகவா… இல்லை நேற்று விசாரணை என்ற பெயரில் தன்னை ரண வேதனை செய்தார்களே… அதில் பாவம் பார்த்தாளா” யோசனையுடன் இருக்க… அவளின் இந்த நிலையை எல்லாம் அதீனா கண்டு கொள்ளவே இல்லை… இவ்வளவு நேரம் கிடைத்ததே அதிகம்… இனி எந்த நிமிடத்திலும் வந்து விடுவார்கள் என்றே தோன்ற… சந்தியாவின் மௌனமே அவளுக்கு சம்மதத்தைத் தர

அவளை அங்கிருந்து அழைத்துச் சென்று தனது சிறை அறையில் அடைத்து பூட்டியவளிடம்… எதற்காக தன் மேல் பாவம் பார்க்கிறாள் என்று தான் சற்று முன் நினைத்தவற்றை எல்லாம் சந்தியா கேட்டு வைக்க

இலேசாக புன்னகைத்த அதீனா…

“ஹ்ம்ம்… அதற்காகவெல்லாம் இல்லை… “ என்றபடி சந்தியாவின் நெற்றித் தழும்பினைச் சுட்டிக் காட்டியவள்

”சின்ன வயசுல நான் அடித்த காரணத்தினால… அநியாயமா தழும்பு வந்திருச்சு… அதுனாலதான்… அந்தப் பரிதாபம் பார்த்துதான்” என்று குறும்பாகச் சொல்லி முடித்த்வள்… சந்தியாவின் திகைத்த பார்வையில்.. கண் சிமிட்ட… சந்தியாவுக்கும் அன்றைய நாள் ஞாபகம் வந்ததுதான்… ஆனால் அதீனாவை எந்த விதத்தில் தன்னோடு தொடர்பு படுத்துவது என்று இன்னும் குழப்பமே

“அதோடு மட்டுமல்ல எனக்கு இந்த உலகத்திலேயே பிடித்த என் அப்பாவோட பொண்ணாகிட்டியே” என்றவள் அடுத்த சில வினாடிகளில் சந்தியா இருந்த சிறை அறையில் அடைக்கலமாகி இருக்க… சந்தியாவுக்குள் இப்போது பல பூகம்பங்கள் வெடிக்கத் தொடங்கி இருந்தது…


அந்த பூகம்பத்துக்கு காரணமாகி இருந்தவளோ… நாளை இந்த உலகம் அவளுக்கு தூரமாகப் போவதை தெரிந்து கொண்டாளோ என்னவோ… இன்றே அதன் அறிகுறியாக நிம்மதியாக உறங்கி இருந்தாள்…

---

சரியாக அடுத்த சில நொடிகளிலேயே சிவா நிரஞ்சனா அங்கு வந்திருக்க… நிரஞ்சனா முகத்தில் இப்போதும் கோபமே… சிவா கண்களில் ஜாடை காட்டி இருந்தான்… அம்ரீத் இருக்கிறார் என்று…

சந்தியாவைப் பார்க்க…. அவளோ நன்றாகத் தூங்கி கொண்டிருந்தாள்…

அடுத்து அதீனா இருந்த சிறை அறைக்குச் செல்ல…. அதீனாவோ ஏதோ யோசனையில் இருப்பது போல அமர்ந்திருக்க… அவளருகே சென்றவன்

“ஹ்ம்ம்… சீக்கிரம் தூங்கு…. கோர்ட்டுக்கு போகனும்… “ என்று அதட்டல் போட… தன்னை அதீனா என்று நினைத்து பேசிக் கொண்டிருக்கும் சிவாவைப் பார்க்க பார்க்க சந்தியாவுக்கு குற்ற உணர்ச்சிதான் அதிகமாகியது…

நாளை மட்டும் அதீனா உண்மை சொல்லாவிட்டால்… என்னாகும்… அதே நேரம் ஏனோ அதீனா உண்மை சொல்லுவாள் என்றே தோன்றியது… இன்னும் ஏதேதோ தோன்றியது….

அதிலும்… ”எனக்குப் பிடித்த என் அப்பாவின் மகள்…” அந்த வார்த்தைகள்… சந்தியாவை சம்மட்டியால் அடித்தாற் போன்ற வார்த்தைகள்… தான் அனுபவித்திருக்காத தந்தை பாசம்…

அதீனா அனுபவித்த அந்த பாசத்துக்காக என் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கின்றதா…

சில நாட்கள் கழித்து அந்த வீணையைப் பார்த்து அன்றைக்கு வந்த அக்கா பேரு சிந்தியாவாம்மா என்று சந்தியா கேட்க… பதில் சொல்லாமல் வசந்தி கண்களில் கண்ணீரைக் கொண்டுவந்து விட… சந்தியா அதற்குப்பின் அதைப்பற்றி பேசுவதையே நிறுத்தி விட்டாள்… அன்றைய தினம் நடந்த எதையுமே இனி தன் அன்னையிடம் கேட்க கூடாது என்று… அப்படியே கடைபிடித்தும் வந்தாள் தான்…


இன்று அதற்கான விளக்கங்கள் தானாகவே விளங்க… ஆனால் தான் என்ன தவறு செய்தோம்… தன் தந்தை ஏன் தன்னிடம் ஒட்டாமலே போய் விட்டார்… உரிமையோடு எதிர்த்து பேசும் போதெல்லாம் தன் தந்தை தாய்க்காக தனக்காக என்றுதானே பேசியிருக்கின்றாள்… ஒரு முறை கூட தன்னிடம் பாசத்தைக் காண்பித்தது இல்லையே…. இன்று யாரோ ஒருத்தி… உனக்குக் கிடைக்காத பாசம் எனக்குக் கிடைத்தது… அந்த பாசத்துக்காக உனக்கு உயிர் பிச்சை போடுகிறேன் என்கின்றாள்…. கண்ணைக் கரித்தது சந்தியாவுக்கு…

“அவருக்காக என்னைக் காப்பாற்றுகிறேன் என்றால் இந்த உயிரே தேவையில்லை என்று…” கத்த வேண்டும் போல் இருக்க…

மனச்சாட்சி சிரித்தது…

“அவரின் மூலம் வந்த உயிர் தான் நீ…” முகத்திலடித்த உண்மை இன்னுமே அவளுக்கு அசிங்கமாக இருக்க… தன்னையே நினைத்து அவமானமாக இருந்தது சந்தியாவுக்கு… ஆனால் இந்த பிறப்பே அவமானச் சின்னம் என்று தன்னை நினைத்து வேதனைப்பட்டாலும்… கணேசனால் வந்த இந்த உயிர் அவரால் மீண்டும் காப்பாற்றபட்டதை நினைத்து வெறுத்தாலும்…

“தன் உயிர் இப்போது ரகு என்ற இன்னொரு உயிருக்கு ஆதாரமாகிப் போய்விட்டதே...” மனம் கனத்தது சந்தியாவுக்கு…

அநேகமாக… தனக்கு நினைவு தெரிந்து… தன் தந்தையைப் பற்றி இன்றுதான் சந்தியா அதிகமாக யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்… தன் அம்மாவைப் பற்றியே யோசித்துப் பழகியவளுக்கு முதன் முதலாக தந்தையைப் பற்றி ஏன் யோசிக்காமல் இருந்தோம்… சிறு வயதில் அப்படி இருந்தோம்… பெரியவளாக வளர்ந்த போது தந்தையிடம் பேசி இருக்கலாமோ என்று தோன்ற…

“ப்ச்ச்… என்ன கேட்க… உங்களுக்கு இந்த குடும்பத்தை விட அந்த குடும்பம்தான் பிடிக்குமா என்றா… முதலில் குடும்பம் என்று இருந்ததே இப்போதுதான் தெரிகிறது… அந்த அளவு முட்டாளாக இருந்திருக்கின்றோம்… இல்லை அதை அறிய வேண்டாம் என்றே தாயால் தெரியாமலே வளர்க்கப்பட்டிருந்திருக்கின்றோமா”

தலையை வலித்தது சந்தியாவுக்கு… அதீனா… தந்தை… தாய் என்று சுற்றிய மனது… மீண்டும் கணவனிடம் வந்து நின்றது

“உனக்காக நான் இருக்கின்றேன்” என வந்த சமீபத்திய உறவு… ஜென்ம ஜென்மமாக என்னோடு தொடர வேண்டும் என்று விரும்பும் உறவு…

“நீ எனக்கு முக்கியம் இல்லை” என்று இவளை அலட்சியப்படுத்தி ஏளனம் செய்த குரலும் அவளுக்கு நினைவிருக்கின்றது…


“நீ எனக்கு எவ்வளவு முக்கியனு… உனக்குத் தெரியாது சந்தியா…” என்று கரங்களுக்குள் முகம் புதைத்து அழுத தழுதழுத்த குரலும் நினைவு வந்தது…

கணவனின் குரலைக் கேட்டு மூன்று நாட்கள் ஆகி இருந்தது… கட்டுப்பாடுகள் அதிகரித்து விட்டதால் இனி கோர்ட் செல்லும் தினம் வரை பேச முடியாது என்று சிவா சொல்லி விட… வேறு வழி… காத்திருக்கத்தான் வேண்டும்

அவனும் உறங்கி இருக்க மாட்டான்… நன்றாகத் தெரியும் அவளுக்கு… நாளைத் தன்னைக் காணும்வரை கண்கள் மூட மாட்டான்… நிச்சயமாக நம்பினாள்… ஆனால் அவன் நம்பிக்கையை எல்லாம் காப்பாற்றி அவனை சந்திக்க வந்த அவளை ஏனோ அவன் ஏமாற்றி இருந்தான்… இவள் பார்க்கும் போது கண் மூடி இருந்தான்…


தான் பட்ட வேதனைகளை மறந்து… அவள் உயிரை… மானத்தை எல்லாம் காத்து… வலியை மறைத்து. அவனைப் பார்க்கச் சென்றபோது…

அவள் உயிரை காப்பாற்றியவனோ… அவள் காதலின் ஜீவனான தன்னை காப்பாற்றிக் கொள்ள மறந்து விட்டதும் ஏனோ… தன்னவளை ஜீவனோடு உயிர்ப்பிக்க… அவனது சகியின் ரகுவாக அவளைச் சந்திக்க வருவானோ?

2,597 views3 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது போல அவளை நடத்த ஆரம்பித்திருக்க கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவே

© 2020 by PraveenaNovels
bottom of page