சந்திக்க வருவாயோ?-58

அத்தியாயம் 58

முதன் முறையாக அதீனாவின் நெஞ்சத்தில் பதட்டம்.. முகமெங்கும் வியர்வைத் துளிகள்… இதுவரை அவள் அடக்கி வைத்திருந்த அடிமனதின் உணர்ச்சிகள் எல்லாம் மேலெழுந்து வந்து கொண்டிருக்க… அடங்கு மனமே அடங்கு என்று சொல்லில் கொண்டாலும் அவளது மனது அடங்காமல் ஆர்ப்பரித்தது…

’அந்தப் பெண்…’ யோசிக்கும் போதே கண்கள் கரித்தது… அவளின் கழுத்தை நெறிக்க முயலும் போதே… உறக்கத்தில் இருந்த அவள் முகத்தைப் பார்த்த போது… அதீனாவால் அது இயலவில்லை… கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இவளும் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை… குறைந்தபட்சம் அவளைப் பயமுறுத்தியாவது வைக்க வேண்டும் என்று நினைத்திருக்க… தான் என்ன செய்தாலும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உறக்கத்தில் இருந்த சந்தியாவைப் பார்க்க பார்க்க ஏனோ பழி வாங்கும் உணர்ச்சி வரவில்லை.. இதுவரை அவள் தன் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த மெல்லிய உணர்வுகள்கள் எல்லாம் அவள் கடினமான பாறைபோன்ற இதயத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர… சிறு வயதில் இவளைப் பார்த்த போது… அவள் நெற்றியில் கல்லை எறிந்து விட்டு… இப்போது உனக்கென்ன பாசம் என்று அவளது மனசாட்சி அவளிடம் கேட்க… சட்டென்று மனம் சொன்ன வார்த்தைகளில் அதீனா அதிர்ந்தாள்… அவளையுமறியாமல் அவள் ஞாபக அடுக்குகளில் இருந்த எண்ணங்கள் மனசாட்சியின் வார்த்தைகளாக வர… யாரோ ஒருத்தி தன்னைப் போல் இருக்கின்றாள் என்று, தான் நினைக்க… அவள் மனசாட்சி ஏன் அவள் சிறுவயதில் தான் பார்த்த அந்த பெண்ணோடு இவளை இணைக்கிறது. மனம் பரபரத்தது அதீனாவுக்கு….

வேகவேகமாக தன் முன் படுத்திருந்தவளின் முன் நெற்றியை மறைத்திருந்த முடிக்கற்றைகளை விலக்கி… வலதுபக்க நெற்றியைப் பார்க்க… அங்கிருந்த மிக மெல்லிய கீற்றலாக தழும்பு… அவள் யார் என்று இவளுக்கு நூறு சதிவிகிதம் பறைசாற்ற… அதீனாவின் கண்களிலோ… கண்ணீர் முதன் முதலாக வெகுநாட்களுக்குப் பிறகு…

அவளைக் கொல்ல நினைத்த கைகளோ… ஆதுரமாகத் தழுவியது அவளையுமறியாமல்

தான் தான் இப்படி ஆகி விட்டோம்… இவளுமா… என்று யோசித்த போதே… உன்னால் தான் இவளுக்கு இந்த நிலைமை என்று தோன்றும் போதே… அவள் காதுகள் கூர்மையாகின… யாரோ வரும் காலடி ஓசை கேட்க…. வேக வேகமாக சந்தியாவை அவள் சற்று தள்ளி படுக்க வைத்து விட்டு அந்த இடத்தைக் காலி செய்தவள்… அடுத்த சில நிமிடங்களிலேயே… தன் சிறை அறைக்கும் சென்று விட்டிருந்தாள்…

நிரஞ்சனாதான் இப்போது வந்திருந்தாள்… கூடவே சிவாவும்…

ராகவ்… சந்தியா என்ற வார்த்தைகள் இப்போது அவர்களின் உரையாடலில் இடம் பெற்றிருக்க… சந்தியா என்ற வார்த்தையில் அவளையுமறியாமல்… அவளது எண்ணங்கள் பின்னோக்கி சென்றன… சிந்தியாவாக…

---

“சிந்தியா” என்று அழைத்தபடியேதான் கணேசன் உள்ளே வர… அவரது குரலில் அவ்வளவு மகிழ்ச்சி.. பெருமை…

“அப்பா” என்றபடி கணேசனைப் பார்த்து ஓடிவந்த சிந்தியாவுக்கும் அதே மகிழ்ச்சி அவள் முகத்தில்…

”வாங்க வாங்க… பாருங்க பாருங்க… ” என்றபடி… தான் வாங்கிய சான்றிதழையும்… பதக்கத்தையும் காண்பிக்க… அதை எல்லாம் பார்த்தவர் உச்சி முகர்ந்தார் தன் மகளை…

“என் சிந்து குட்டிக்கு கிடைக்காம வேறு யாருக்கு கிடைக்கும்” என்று மகளை பாடச் சொல்லிக் கேட்க… சிந்தியாவும் தந்தை சொன்ன உடனே பாட ஆரம்பிக்க.. கண்மூடி மகள் பாடுவதைக் கேட்டு ரசிக்க ஆரம்பித்த கணேசனுக்கு… மனம் எங்கெங்கோ அலைபாய்ந்தது…

இந்த வீட்டுக்கும் வரும் போது மட்டுமே அவரின் மனம் காற்றைப் போல இலேசாக உணர்ந்தது… இந்த வீட்டில் அவரது அதிகாரங்கள் ஆட்சி செய்து அவருக்கானதை நிறைவேற்றிக் கொள்ளத் தேவையில்லை… தனக்காக தன் வரவிற்காக… தன் வார்த்தைக்காக மட்டுமே வாழும் இந்த ஜீவன்களோடு மட்டும் தன் வாழ்க்கை இருந்திருக்கலாமோ என்று தோன்றியது கணேசனுக்கு…

தாரகா… இவரைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் வரும் மகிழ்ச்சி… சிந்தியாவின் குதூகலம் இதெல்லாம் தான் சமுதாயத்திற்கு முன் காட்டிக்கொண்டிருக்கும் அந்த குடும்பத்தில் வருமா…

வசந்தியை நினைக்கும் போதே… அவளது இளக்காரமான பார்வை மட்டுமே அவர் ஞாபகத்திற்கு வரும்… அவள் பெற்ற அவள் மக்களோ அதற்கு மேல்… ஏனோ கொலைகாரனைப் பார்ப்பது போல பார்வை… இவன் ஒரு ராட்சசன் என்பது போல பட்டும் படாமலும்… அதிலும் சந்தியா… கணேசனைப் பார்த்தால் நாலடி தூரம் தள்ளியே நின்று விடுவாள்… காரணம் இல்லாமலும் இல்லை… வீட்டில் அடிக்கடி நடக்கும் சண்டை… அதில் ஆவேசம் தாளாமல் வசந்தியை அடித்த போதெல்லாம்… சந்தியா சந்தோஷ் இருவருமே அந்த இடத்தில் தான் இருப்பனர்…

போதாக்குறைக்கு… வசந்தி என்ன சொல்லி வைத்தாளோ தெரியவில்லை… என்று வசந்தி மேல் கோபம் வந்தாலும்… கணேசன் சந்தோஷிடமும்… சந்தியாவிடமும்.. முக்கியமாக சந்தியாவிடம் கணேசனும் நெருங்க நினைக்கவில்லை என்பதே உண்மை… அதைப் பற்றி அவருக்கு கவலையுமில்லை… அவருக்கு மகள் என்றால் நினைவுக்கு வருவது சிந்தியாதான்.. மகள் பாசம்… தனக்கு சிந்தியாவிடம் பூரணத்துவமாக கிடைக்கும்போது வசந்தி பெற்ற மக்களிடம் அதைத் தேட நினைக்கவில்லை…

“அப்பா மேடைக்கச்சேரி பண்ணலாமாப்பா….” போட்டியில் பாடிய பாடலை பாடி முடித்துவிட்டு தன் பெயர் பொறித்த தன் வீணையைத் தடவியபடியே மகள் கேட்க… தன் செல்ல மகளுக்கு என்ன பதில் சொல்வது என்று கணேசன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே

”ஆமாடி… இதுதான் நமக்கு குறைச்சல்” என்றவளிடம்…. முறைத்தார் கணேசன்… ஆனால் தன் மகளின் முன் தன் கோப முகத்தைக் காட்ட விரும்பாதவராக…

“சிந்தும்மா… நீ வெளில போ” என்று மகளை வெளியே அனுப்பியவர்… தாரகாவிடம் திரும்பி

“தாரகா… இது ஒளிவு மறைவான வாழ்க்கைதான்… ஆனால் சிந்தியா என் பொண்ணு… இதைச் சொல்ல நான் எப்போதும் தயங்க மாட்டேன்… நேரம் காலம் வரட்டும்… அந்த வசந்தியோட நான் வாழுகிற வாழ்க்கை… எனக்கு மூச்சு முட்டுது தாரகா… ஆனால் வேறு வழியில்லை… நான் இந்த சமுதாயத்தில எனக்குனு ஒரு இடம் பிடிக்கனும்னா… அந்த மாதிரியான குடும்பம் தேவை… நான் என் காலை ஊன்றி நின்ற பின்…. அவளை விட்டு அந்தச் ஜெயிலை விட்டு வந்து விடுகிறேன்” என்று முடிக்க…

தாரகாவும் அதை மறுத்து பதில் சொல்லவில்லை… இந்த வாழ்க்கை அவளுக்கு பெரிய அவமானமில்லை… திசைமாறிய வாழ்க்கை… ஏனெனில் அவளின் பதினெட்டு வயதிலேயே அவள் பெண்ணாக பல அவமானங்களை கடந்து வந்தவள்… அந்த சாக்கடை ஏனோ பிடிக்கவில்லை… அங்கிருந்து தப்பி இங்கு கணேசன் வேலை பார்த்த கடையில் வந்து சேர்ந்தவளுக்கு… கணேசனின் அன்பு கிடைக்க… அதை பற்று கோலாகப் பற்றி அவனுக்கு மனைவியாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் மறைமுக வாழ்க்கை… அவளைப் பொறுத்தவரை பேரின்ப வாழ்க்கைதான்… கணேசனும் அவளது பழைய வாழ்க்கை பற்றி எல்லாம் கண்டு கொள்ளவில்லை… இப்போது தனக்காக தன்னை மட்டுமே நேசிப்பவள்… அதே நேரம்… தாலி… அங்கீகாரம் இதெல்லாம் எதிர்பார்க்காத ஒருத்தி என சந்தோஷமாகத்தான் நாட்களை கடத்தி வந்தார்…. தாரகாவைத் திருமணம் செய்யும் என்ணம் எப்போதும் கணேசனுக்கு வரவே இல்லை… இந்த மாதிரி ஒரு பெண்ணை அவர்கள் குடும்பம் ஏற்கவே ஏற்காது… நன்றாகவேத் தெரியும்…

அது மட்டுமின்றி தாராகாவைப் பற்றி சொன்னால்…. அது தாரகாவிற்கு தான் இன்னும் ஆபத்து… இப்படி போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சேற்றில் முளைத்த செந்தாமரையாக அவர்களுக்கிடையே சிந்தியா வந்திருக்க… கணேசனுக்கு மகள் என்றால் அவ்வளவு பிரியம்தான்… ஆனாலும் அந்த உறவை வெளிச்சத்துக்கு கொண்டுவர அவருக்கும் தயக்கமே… தாராகவும் அவரைத் திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லையே தவிர… இந்த வாழ்க்கையும் நிரந்தரமில்லையோ என்ற எண்ணம் எப்போதும் அவளுக்குள் இருந்து கொண்டிருந்ததுதான்… இருந்தும் கணேசனோடு வாழ்ந்து குழந்தையையும் பெற்று விட்டாள்…

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வசந்தி கணேசன் வாழ்க்கையில் நுழைந்தாள்

திடீரென்று ஊருக்கு போன இடத்தில்… உறவுக்காரப் பெண் வசந்தி திருமணத்தில் திடிரென்று பிரச்சனை ஏற்பட… வசந்தியை திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டு… திருமணமும் முடிய... அதுவரை ஏதோ ஒரு கடையில் வேலைக்காரனாக இருந்தவன் திடீரென்று கடை முதலாளி ஆகி விட… இப்போது கணேசன் இருதலைக் கொல்லி எறும்பாக தவிக்க ஆரம்பித்தான்…

வசந்தியின் குடும்பம்… அவர்கள் சுற்று வட்டாரத்தில் செல்வாக்கு மிகுந்தது… அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு தான் துரோகம் செய்தால்… ஒழுங்காக வாழ வைக்காமல் இருந்தால்… என்ன நடக்கும் என்று கணேசன் போராடிக் கொண்டிருக்க…வசந்தியே அவனுக்கு தீர்வையும் கொடுத்திருந்தாள்…

வசந்திக்கு சுத்தமாக கணேசனைப் பிடிக்கவில்லை… தன்னை விட கல்வியில்,பணத்தில், அந்தஸ்த்தில் குறைந்த கணேசனை அறவே வெறுக்க… கணேசனுக்கும் அது நல்லதாகவேப் போய்விட… இன்னும் தாரகா சிந்தியாவிடம் அவரின் நெருக்கம் அதிகரித்தது என்றே சொல்லலாம்… அதே நேரம் நாளுக்கு நாள் மனைவி தன்னை மதிக்காத அலட்சியபடுத்திய பாங்கு என வசந்தியிடம் வெறுப்பு கூடிக் கொண்டே இருக்க… மனைவி தன்னிடம் காட்டிய மெத்தனம்… அலட்சியம் ஒரு கட்டத்தில் வசந்தியிடம் அவர் ஆண்மகனென்பதை காட்டவும் வைத்தது… கணவனாக அவளை வெல்லவும் வைக்க… சந்தோஷ் சந்தியா என மக்கள் வசந்தியோடானா வாழ்க்கையிலும்…

வசந்தி தன் மீது காட்டிய அலட்சியம்… அவளிடம் அதிகாரத்தைக் காட்ட மட்டுமே செய்தது… தன் குரல் ஓங்கினால் வசந்தி அடங்குகிறாள் என்று எப்போது கணேசனுக்கு தெரிந்ததோ… அது முதலே… அதிகாரமும் கூடுதலாக கை நீட்டவும் செய்ய… ஆக மொத்தம் கணேசன் வசந்தி குடும்பம்.. குரங்கு கையில் கிடைத்த பூமாலை ஆகி இருந்தது… குழந்தைகளுக்கு இவர்களின் சண்டைதான் தினமும் காட்சிப் பொருளாக மாறி இருக்க… வசந்தி ஏட்டிக்கு போட்டியாக செய்து கணேசனிடம் சண்டைக்கு நின்று… கடைசியில் அவனிடம் அடி வாங்கி மூலையில் அழுவது மட்டுமே குழந்தைகளுக்கு தெரியும்…

தாய் பாவம் என்று மட்டுமே அந்தக் குழந்தைகள் தாயைப் பாவமாகப் பார்க்க ஆரம்பித்து இருந்தனர்… தந்தையை விரோதியாகவும் நினைக