சந்திக்க வருவாயோ?-55

Updated: Jul 7, 2020

அத்தியாயம் 55:

அதிகாலை 5 மணி… அழகான இனிமையான வேளைதான்… நம் நாயகனுக்கோ… உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் பஞ்சணையில்… மனைவி வெறும் தரையிலும் குளிரிலும் வாடிக் கொண்டிருக்க… கொண்டவனுக்கு நிம்மதியாக உறக்கம் வருமா… உறங்கினால் தானே உறக்கம் கலைவதற்கு… எப்போதடா விடியும் என்று மணியைப் பார்த்துக் கொண்டிருந்தவன்… மெல்ல வெளிச்சம் வெளியில் பரவ ஆரம்பிக்க… இங்கு அவனும் அவன் மனைவியும் அமரும் அந்த முல்லைப் பந்தலில் கீழ் உள்ள கல் பெஞ்சில் வந்து உட்கார்ந்தவனாக அன்றைய நாளை ஆரம்பித்தவன்… கையில் இருந்த செல்போனை பார்க்க ஆரம்பித்தான்…

இன்றைய தினத்தின் எந்த நிமிடத்தில் தன்னவளின் குரல் இந்த செல்போனை அதிர வைத்து… தனக்கு தன் உயிரை மீட்டெடுத்து கொடுக்கப் போகின்றது… எப்போதடா தன் மனைவியுடன் பேசுவோம் என்று இன்றைய நாளின் அவள் குரலைக் கேட்கும் நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பிக்க… அதே நேரம் மனம் அவளை மீண்டும் காணப்போகும் நாளை எண்ணி நாட்களைக் கணக்கிட ஆரம்பித்திருந்தது… 5 நாட்கள் முடிவடைந்து விட்டது… இன்னும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நாட்களே…

தன்னவள் தன்னிடம் மீண்டும் வந்து சேரும் தினம் மட்டும் வரட்டும்… அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டு அவனும் அவளும் மட்டுமே உள்ள தனி உலகத்திற்கு பறந்து விட வேண்டும் என்று உள்ளம் துடிதுடித்தது … கைகள் இரண்டும் அவளை ஏந்திக் கொள்ள பரபரத்தது… ஒவ்வொரு நொடியும்… அவ்வளவு தூரம் வேண்டாம்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழியும் என்று யாராவது முதலில் இவனிடம் சொல்லி இருந்தால் நம்பி இருப்பானோ இல்லையோ… இப்போது நம்பினான்… தனக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் மட்டுமே முடிந்திருக்கின்றது… இதில் அவளோடு சேர்ந்து இருந்தது சொற்ப நாட்களே… துணை இல்லாமல் நாட்களைக் கழிப்பது இத்தனை துன்பமா… இல்லை இவனுக்குத்தான் இப்படி இருக்கின்றதா என்று தெரியவில்லை… தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்…

சந்தியா அங்கு நன்றாகத்தான் இருக்கின்றாள் என்று தெரிகிறது… தினமும் அவளிடம் எப்பாடுபட்டாவது பேசி விடுகின்றான்தான்… ஆனால் சில சமயம் நிரஞ்சனா பேசுகிறாளா… சந்தியா பேசுகிறாளா என்று சந்தேகம் வேறு வந்து விடுகின்றது… சூடுகண்ட பூனை அல்லவா… 100 சதவிகிதம் நம்ப மறுக்கின்றது மனம்…

நிரஞ்சனா பேசும் போது…. அது தன் மனைவி குரல் இல்லை என்று அட்சர சுத்தமாக… கணித்த அவன் மனது… இன்று மனைவியே பேசும் போது… தடுமாற்றமடைகின்றதே நம்பிக்கை இல்லாமல்…

இன்று எப்போது பேசுவோம்… கையில் வைத்திருந்த மொபைலில் மணியைப் பார்க்க… அது 6.30 எனக் காட்ட... இன்றைய தினம் முடிய… இன்னும் கிட்டத்தட்ட 17 மணி நேரம் இருக்க… அந்த 17 மணி நேரத்தில் தன்னவளிடம் பேசும் பொன்னான நேரம் எப்போதோ… இப்போதிருந்தே தவமிருக்க ஆரம்பித்தான்… தன்னவளுக்காக… அதிர்வலைகளில் இவனை அடைய போகும் அவள் குரலுக்காக

---

சிறையில் சந்தியாவுக்கும் அதே நிலைதான் சாதரணமாகவே நன்றாக உறக்கம் வரும் அவளுக்கு… இங்கு கேட்கவா வேண்டும்… ரீங்காரமிடும் கொசுக்கடி… நடுக்கும் குளிர்… மிரட்டும் இருள்... கூடுதலாக வெறும் தரையில் படுத்ததால் ஏற்படும் உடல் வேதனை என அதிகாலையில் தான் அவள் உறங்கி இருக்க… அதே நேரம் நிரஞ்சனா சரியாக வந்து எழுப்பி விட…

அவள் வீட்டு அறையில் படுத்திருப்பது போல… பாதி தூக்கத்திலேயே… கண்களைத் திறக்காமலேயே சந்தியா அவளுக்கு பதில் அளித்தாள்

”ரஞ்சி… இப்போ எழுந்து என்ன பண்ணப் போகிறேன்… எனக்கு தூக்கம் வருது” என்று சொன்னபடியே மீண்டும் உறங்கியவளைப் பார்த்து… நிரஞ்சனாவுக்கு புன்னகை வர… தூங்கட்டும் என்று விட்டு விட்டவள்… அதீனாவை எழுப்பச் சென்று விட்டாள்…

அதீனாவுக்கோ எப்படியாவது அந்த சிறையில் இருப்பவளைப் முகத்தைப் பார்த்து விட வேண்டுமென்று … நேரம் காலம் பார்த்துக் கொண்டிருந்தாள்… இந்த நிரஞ்சனா நகரவே மாட்டேன்கிறாளே என்று நிரஞ்சனாவை முறைக்க மட்டுமே முடிந்தது… அவ்வப்போது நிரஞ்சனாவிடம் சந்தியாவைப் விசாரிக்கவும் செய்தாள் தான்… நிரஞ்சனா வாயைத் திறந்தாள் தானே…

சந்தியாவைப் பார்க்க வேண்டும்… இப்போதைக்கு அதீனாவின் குறிக்கோள் இதுதான்….

---

எல்லாமே சிவா திட்டமிடல் படி ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்க… சிவாவுக்கும் பெரிய மன திருப்தி வந்திருக்க… அதுவரை சூமூகமாக போய்க் கொண்டிருந்த அவனுடைய திட்டத்தை பாதை மாற்றி அமைக்க வந்தனர் ஜெயவேலும்… கரணும்…

கிட்டத்தட்ட 1 மணி அளவில் சிவா, நிரஞ்னாவிடம் வந்தவனாக, தான் அலுவலகப் பணி காரணமாக வெளியில் செல்வதாகக் கூறி விட்டு… சந்தியாவிடமும் கவனமாக இருக்கும் படி எச்சரித்துவிட்டு வெளியேறிவிட… அவன் அந்தப் பக்கம் போக… சரியாக ஜெயவேலும், கரணும் அங்கு வந்தனர்…

இருவரையும் பார்த்த அம்ரீத்துக்கு ஒரு பக்கம் எரிச்சல் இருந்தாலும்… வேறு வழி இன்றி இருவரிடமும் பேச ஆரம்பிக்க…

“அம்ரீத் அதீனா கிட்ட சில விசயங்கள் பேச வேண்டும்… நெக்ஸ்ட் வீக்ல அவ கேஸ் முடியப் போகிறது… அவ அப்ரூவர் ஆகிட்டான்னு நீங்க சொன்னது என்ன ஆச்சு” என்ற போது…

அம்ரீத்தையும் அறியாமல்…

“சார்… அவளை எல்லா விதத்திலயும் தயார் செய்து விட்டோம்… நிச்சயமா கோர்ட்ல அவ உண்மையைச் சொல்லுவா… சோ எந்த பிரச்சனையும் இல்லை… இதுல நீங்க அவளைப் பார்த்து என்ன ஆகப் போகிறது” என்று சொல்லி அவர்களை அங்கிருந்து கிளம்பவைக்க முயற்சிக்க…

கரண் எழுந்தபடி,

“எனக்கு ஆர்டர் போடாதீங்க அம்ரீத்… நீங்களும் சிவாவும்… இந்த மாதிரி என்னைக் கட் பண்ற மாதிரி பேசுறதுதான் எனக்கு சரியா படலை சம்திங் ராங்…“ என்று அம்ரீத்தை ஆராயும் பார்வை பார்க்க…

எரிச்சலாக எழுந்தார் அம்ரீத்… அம்ரீத்துக்கு ஏனோ சரியாகப் படவில்லை… முடிந்தவரை கரண் முக்கியமாக ஜெயவேல் அதீனாவைப் பார்ப்பதை தடுக்க முயன்றார்

“சார்… அதீனாவை நீங்க பார்க்கலாம்… ஆனால் சார்” என்று ஜெயவேலைப் பார்த்தவராக…

“ஏற்கனவே இரண்டு முறை… கோர்ட்ல ஆர்டர் வாங்கமால் தான் வந்து பார்த்துப் போயிருக்கிறார்… அதீனா மிக முக்கியமான பிரிவில் உள்ளே வைக்கப்பட்டிருக்கின்ற குற்றவாளி… அவளை இந்த மாதிரி கோர்ட் அக்செப்டன்ஸ் இல்லாமல பார்க்கிறது தவறு சார்” என்ற போதே…

“ஓ… நான் தான் ஹையர் ஆஃபிசர் பொறுப்பில இருக்கிறேன்னு நினைக்கிறேன்… இதெல்லாம் தெரியாமத்தான் எனக்கு அந்த போஸ்ட் கிடைத்ததா அம்ரீத் சார்” என்ற கரணின் இளக்காரமான பார்வையில் அம்ரீத்தும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை…

வழக்கம் போல தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி… அவர்கள் அங்கு வந்த அடையாளத்தை எல்லாம் மறைத்தவராக… எப்போதும் அதீனாவை பார்க்கப் போகும் அறைக்குச் செல்ல ஆரம்பித்தார் ஜெயவேலோடு….

”சந்தியாவை இவர்களிடம் கூட்டி வந்து நிறுத்தவெல்லாம் அம்ரீத் நினைக்கவில்லை… அதீனாவை அழைத்துக் கொண்டு… இருவரின் முன் போய் நிறுத்துவோம்…” என்று அவர்களை அழைத்துச் சென்ற அம்ரீத்… அவர்களை அந்த அறையில் அமரும் படி சொல்லி விட்டு… நிரஞ்சனாவிடம் அதீனாவை அழைத்து வரச் சொல்ல… அப்போதுதான் ஒன்று உணர்ந்தார்…

அதீனா… அப்ரூவர் ஆக ஒத்துக் கொண்டு விட்டாள் என்று சொல்லி விட்டோமே… கரண் முன் அதீனா சொல்வாளா… என்ன செய்வது என்று யோசித்தவர் சந்தியாவை அவர்களிடம் அனுப்பலாமா… சிவா என்ன சொல்வானோ என்றிருந்தது…

ஏற்கனவே அதீனா விசயத்தில் இவர்கள் அத்துமீறி நடக்க முயற்சித்தது தெரியும்… இவர்கள் குழுவின் தலைமைக்கு சொல்லிருக்கின்றனர் தான்… அதன் பின் கரண் வராமல் போக … கரணை பொருட்டாகவே நினைக்கவில்லை அம்ரீத்தும், சிவாவும்…

ஆனால் இன்று வந்து நிற்கின்றனரே… ஆனால் பெரிதாக என்ன நடந்து விடப் போகின்றது… பத்து நிமிடத்திற்கு மேல் சிசிடிவி காட்சியை நிறுத்தி வைக்க முடியாது என்று இவர்களை வெளியேற்றி விடலாம் என்று முடிவெடுத்தவர்….

நிரஞ்சனாவை அழைத்து… சந்தியாவை அழைத்து வரச் சொல்லி விட்டு… கரண் மற்றும் ஜெயவேல் இருந்த அறைக்குச் சென்று விட…

நிரஞ்சனாவுக்கு ஜெயவேல் மற்றும் கரண் பற்றி பெரிதாக தெரியாது… மினிஸ்டர்… ஹையர் ஆஃபீசர்… என்று மட்டும் நினைத்தவளாக…

சந்தியா இருந்த சிறை அறைக்குப் போனவளாக... அவளது கதவைத் திறந்தவளாக… சந்தியாவை வெளியே அழைத்து வர

“அதீனாவைப் பார்க்க… மினிஸ்டர் அப்புறம் டிசிபி சார் வந்திருக்காங்க…. ஜஸ்ட் நீ அப்ரூவர் ஆனதை மட்டும் அவர்கிட்ட சொன்னால் போதும்… “ என்ற போதே சந்தியா கண்களில் சிறு கலக்கம் வந்து போக…