சந்திக்க வருவாயோ?-47-Part2

அத்தியாயம் 47-2

/*வானம் எங்கும் உன் பிம்பம்

ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன்வாசம்

வெறும் வாசம் வாழ்க்கை இல்லை*/

“சந்தியா” மெதுவான… நிம்மதியான குரலில் தன் வலியை எல்லாம் கட்டுப்படுத்தி… தன்னை ஆசுவாசப்படுத்திகொண்ட குரலில்…. தன்னவள் என நினைத்து… அவளை தன்னை நோக்கி அழைக்க…

அதீனாவோ…. அப்படியே அமர்ந்திருந்தாள்… புருவ முடிச்சோடு… தர்மசங்கடமான நிலையில்…

அதே பார்வையோடு அதீனா இப்போது நிரஞ்சனாவைப் பார்க்க…. நிரஞ்சனா “சந்தியா” ராகவ்” என்று மட்டும் எச்சிலை முழுங்கியபடி சொல்ல…

ராகவ்வோ… அதீனாவையே பார்த்தபடி…

சந்தியா தன்னைப் பார்த்து பயத்தில்… இரத்தத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மிரண்டு போயிருக்கின்றாள்… என்று மட்டும் தான் நினைத்தான்… அவனுக்கு அது அதீனா என்று நினைக்கவே தோன்றவில்லை… அதனால்

“எனக்கு ஒண்ணும் இல்லடா… இங்க வா” என்று மீண்டும் அழைக்க… அவள் அப்போதும் ஆணியடித்தாற் போல அங்கேயே நிற்க…

“மீசை வச்சுருக்கேன்னு அடையாளம் தெரியலையா சகி… “ தான் இருந்த நிலைமையிலும் தன்னவளை வம்பிழுக்க…

நிரஞ்சனாவால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை… வேகமாக அதீனாவிடம் திரும்பியவள்…

“ரகு பக்கத்தில போ… ஆனால் நீ ரகுகிட்ட பேச வேண்டாம்… இப்படியே மெயின்டைன் பண்ணு ப்ளீஸ்… அவருக்கு நீ சந்தியா இல்லைனு தெரிய வேண்டாம்” என்று காது கடிக்க…

கண்களில் தீப்பொறி பறந்தது அதீனாவிற்கு… ஆனாலும் நிரஞ்சனா… அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள… வேறு வழி இன்றி.. மெதுவாக எழுந்தவள்… அப்படியே நிற்க…

வெங்கட்டும்…. ராகவ்வை சோபாவில் அமர வைத்திருந்தான் இப்போது…

சோஃபாவில் தலை சாய்ந்தவனுக்கு… அதற்கு மேல் பேச முடியவில்லை… தன் மனைவியைப் பார்க்கவென்று அதுவரை தான் சேர்த்து வைத்திருந்த கொஞ்ச நஞ்ச சக்தியும் வடிந்தது போல் இருந்தது… கண்கள் ஏனோ இருட்டிக் கொண்டு வர… மூச்சு விடுவதும் ஏனோ சிரமமாக இருக்க… அவனுக்குள் முதன் முதலாக தன் உயிரைக் குறித்த பயம் வரத் தொடங்கியது…. எங்கு சந்தியாவை இந்த உலகத்தில் தனியே விட்டு விட்டு போய்விடுவோமோ என்று… அதை நினைத்த போதே அவனையுமறியாமல் கண்களில் கண்ணீர் பெருக… அதே நேரம் சந்தியாவை இப்போது விட்டால் எப்போதும் பார்க்க முடியாது என்பது போல் தோன்ற…. வேகமாக இமைகளைப் பிரிக்க முயற்சி செய்ய…. அது முடியாமல் போக… கும்மிருட்டான உலகத்தை நோக்கி… அவன் பார்வை ஒட்டம் அவனை இழுக்க… இருந்தும்,

“ச.. ந்… தி… யா” என்றான்… தன் ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி…. நான்கெழுத்து கொண்ட வார்த்தைக்கே அவன் திணறிய விதத்தில்…. நிரஞ்சனாவும் வெங்கட்டும்… பதறியவர்கள்…

“ராகவ்… ராகவ்” வெங்கட் அவன் கன்னத்தை தட்டி அவனை நினைவுக்கு கொண்டு வர முயற்சிக்க…

நிரஞ்சனவோ… “ரகு ரகு” என்று அழைத்தபடி அவன் கைகளைத் தேய்க்க ஆரம்பிக்க…. தொய்ந்து விழுந்தான் ராகவ்….

“வெங்கட் சார் ஏதாவது பண்ணுங்க…. ப்ளீஸ்…. “ நிரஞ்சனா கண்களில் நீரோடு துடிக்க ஆரம்பிக்க… அதீனாவோ கற்சிலையாக நின்றிருந்தாள்… இதையெல்லாம் பார்த்தபடி

வெங்கட் அதிர்ச்சியுடன் தன் அருகில் நின்ற அதீனாவை பார்த்தான்…. “சந்தியா எங்க நிரஞ்சனா” இப்போது வெங்கட்டின் குரல் முற்றிலுமாக உடைந்திருந்தது….

அங்கு இருப்பது அதீனா என்ற உண்மையைக் கண்டு கொண்டவனுக்கு… தன் நண்பனைக் காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ… மனைவியைப் பார்க்க வேண்டும் என்ற அவனின் கடைசி ஆசை கூட நிராசை ஆகி விடுமோ… பயப்பந்து சுழள ஆரம்பிக்க

வெங்கட்டின் கேள்வியில் இப்போது நிரஞ்சனா இன்னும் வேகமாக அழுதபடி…. வேகமாக அவனை ராகவ்விடமிருந்து தள்ளி அழைத்துச் சென்றவள்

“கோர்ட்ல என்ன ஆச்சுனே தெரியலை வெங்கட் சார்…. நியூஸ்ல கூட என்ன ஆச்சுனு சொல்ல மாட்டேங்கிறாங்க… சிவா சார் போனை எடுக்க மாட்டேங்கிறார்…. ஆனால் நியூஸ்ல காட்டுறதைப் பார்த்தால் பயமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…. ராகவ் மெதுவாக கண் திறக்க… இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சட்டென்று நிறுத்தி அவனை நோக்க….

ராகவ்வோ அருகில் நின்ற அதீனாவை நோக்கி தன் அருகே வருமாறு சைகை காட்ட… அவன் பார்வையில் தெரிந்த வலியில்…. தன்னையறியாமல் அதீனா அவனருகே சென்று அமர… வெங்கட்டும்… நிரஞ்சனாவும் அவர்கள் அருகில் வந்திருந்தனர் இப்போது…

தொண்டைக் குழிக்கும் நாசிக்கும் சுவாசத்தை கொண்டு செல்லவே பெரும்பாடுபட்டவனாக…. பெரு மூச்சை இழுத்து விட்டவனாக…

“சாரி சந்தியா” என்று சொல்லும் போதே கண்ணீர் வழிந்த அவன் கண்கள் வேதனையோடு அதீனாவின் கண்களையேப் பார்க்க… அந்த விழிகள் இவன் கண்கள் சொன்ன பாஷையை புரிந்து கொள்ள முடியாமல் திணற… ராகவ்வின் பார்வை அப்படியே ஆணி அடித்தார்ப் போல நின்று அவளையே சில நொடிகள் பார்க்க… அது சொன்ன செய்தி அவனுக்குள் இடியையே இறக்கியது இப்போது…

வார்த்தைகள் இன்றி பதட்டமடைந்தவனின் உடலும் தூக்கிப் போட… அதீனா வேகமாக அவனது கைபற்றினாள் இப்போது….

“ராகவ்… ரிலாக்ஸ்… டோண்ட் லூஸ் யுவர் ஹோப்” என்று இறுக்கமாக அழுத்த…

தன்னவளின் தோற்றத்தில் இருந்தவளின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள்… அப்படி கூட சொல்ல முடியாது… சந்தியாதான் அவளுக்கிருந்த அடையாளங்களை எல்லாம் தொலைத்து விட்டு… தோற்றத்தில் எப்போதோ அதீனாவாக மாறி விட்டாளே..

ஆக மொத்தம் தன் அருகில் இருந்த அதீனாவின் அந்நியத்தனமான வார்த்தைகளில் இன்னுமே உடைந்தவனாக… நிரஞ்சனாவை பார்த்தான்…

நிரஞ்சனாவைப் பார்த்த பார்வையில்… அவளை குற்றம் சாட்டும் பார்வை எல்லாம் இல்லை… மாறாக

“இனி என்ன இருக்கிறது…. எங்களுக்கு… “ என்ற இறுதிப் பார்வை…

இருந்தும் தன் கைப்பற்றி இருந்தவளின் கரங்களை நப்பாசையாக அழுத்தமாகப் பிடிக்க… அதுவும் அவன் மனைவிக்கும் அவனுக்குமான அறுந்த தொடர்பையே உறுதி செய்ய… விரல்கள் மெதுவாக தளர ஆரம்பித்தன….

ஆனாலும் மனைவியைப் பார்க்காமல் அவனால் இவ்வுலக தொடர்பிலிருந்து விடைபெற முடியாத கடினமான உயிர் வேதனை ஆரம்பிக்க… நிரஞ்சனாவிடம் சைகையால் தொலைக்காட்சியை காண்பித்து போடச் சொல்ல…

வெங்கட் வேண்டாமென்று நிரஞ்சனாவிடம் சொல்ல… இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அதினா… ரிமோட்டை உயிர்பித்தவள்…

“பாருங்க ராகவ்… உங்க மனைவிக்கு ஒண்ணுமில்லை…. நம்பிக்கையா இருங்க…” என்று அதீனா சொல்லிய வார்த்தைகள் எல்லாம் அவன் காதுகளில் விழவே இல்லை…

அந்தத் திரையையே அதில் தெரிந்த தன்னவளையே…. கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டிருந்த ராகவ்வின் கண்கள்… மீண்டும் அதுவாகவே இமைகளை மூடிக் கொள்ள… பிரபஞ்சம் தாண்டிய பயணமாக அவன் பயணம் தொடங்க ஆரம்பிக்க….

நிரஞ்சனா அவன் காலடியில் அமர்ந்து கதறத் தொடங்கியிருந்தாள்… கடமை என்ற பெயரில் தான் செய்த அனைத்து மாபாதக செயல்களை நினைத்தும்…

……

பத்திரிக்கை நிருபர்களும்… கேமிராக்களைத் தாங்கிய மீடியா ரிப்போர்ட்டர்களும்… இந்த வழக்கு விசயமாக ஏதாவது தங்களுக்கு ஏதாவது ஒரு சின்ன விசயம் கிடைக்காதா என்று பரபரப்பாக வானில் வட்டமிடும் வல்லூறாக அந்த மருத்துவமனையைச் சுற்றி இருக்க….