சந்திக்க வருவாயோ?-47 -Part1

அத்தியாயம் 47 -1:

/*காற்றின் அலைவரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா*/

இடம் டெல்லி….

“ராகவ்… எனக்கு பயமா இருக்குடா… ஃபர்ஸ்ட் ஹாஸ்பிட்டல் போயிறலாம்டா” வாகனத்தை ஓட்டி வந்த வெங்கட்… குரல் நடுங்க பின் சீட்டில் படுக்கவைக்கப்பட்டிருந்த ராகவ்விடம் திரும்பிக் கேட்டான்…

தோள்ப்பட்டையில் தோட்டா துளைத்த இடத்தில் இரத்தம் தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்க… ராகவ் அணிந்திருந்த மேல்ச்சட்டையைக் கழட்டி இழுத்து கட்டியிருந்தான்தான்…. ஆனாலும் இரத்தம் நின்றபாடில்லை… நண்பனை முன் சீட்டில் தன்னருகே அமர வைக்கவும் வெங்கட்டால் முடியவில்லை…. யாராவது பார்த்துவிட்டால் அது இன்னும் பிரச்சனையைத்தான் உருவாக்கும்… மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகளில் வராமல்… ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலையைத் தேர்ந்தெடுத்துதான் வெங்கட்டும் ஓட்டி வந்தான்… சிவா வீட்டிற்கு வேறு எப்படி செல்வது என்று தெரியவில்லை…

நிரஞ்சனா சற்று முன் அனுப்பியிருந்த தகவலில் இன்னும் குழப்பமே… ”சிவா வீட்டிற்கு செல்வதாக” அவள் கூறியிருந்தாள்

ராகவ் கோர்ட் வளாகத்துக்கு வெங்கட்டுடன் வந்தது நிரஞ்சனா , சிவா என யாருக்குமே தெரியாது…

இன்றைய தின முடிவில் சந்தியாவை அழைத்துக் கொண்டு நிரஞ்சனா அவளது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே சிவாவின் நேற்றைய கட்டளை… ஆனால் காலையில் நடந்தது என்னவோ வேறு…

நிரஞ்சனாவை தனியே அழைத்தவன்…

சந்தியாவைக் கோர்ட்டுக்குச் அழைத்துச் செல்ல வில்லை… என்று சொல்லி சந்தியாவை அவளோடு அனுப்பி அவள் வீட்டுக்கு செல்லச் சொல்லி விட்டான்

காரணம் அதீனாவின் உயிருக்கு ஆபத்து என்ற தகவல் கிடைத்ததுதான்.. சிவாவின் முடிவுக்கு காரணம்… சிவா சந்தியாவின் உயிரோடு விளையாட இனியும் தயாரில்லை… ராகவ்வுக்கு அவன் மனைவியியைத் திருப்பித்தருவதாக சொன்ன வாக்கை எங்கே காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ… என்ற பயம் வேறு வந்திருந்தது…

ராகவ் கேட்டது போல… ”நீங்கள் என்ன கடவுளா… எல்லாவற்றையும் உங்கள் விருப்பபடி நடக்க வைக்க..”

அவன் சொன்னது போல கடவுள் இல்லைதான் சிவா… அதனால் தான் சிவா போட்ட திட்டங்கள் எல்லாம் வேறு வேறு கோணத்தில் போய்க்கொண்டிருக்க… அவனும் தன் கைமீறி நடந்தவற்றை எல்லாம் தடுக்க முடியாதவனாக பார்த்துக் கொண்டிருந்தவன்… கடைசியாக சந்தியா உயிர் மட்டுமே முக்கியம் என்று முடிவெடுத்து சந்தியாவை வைத்து தான் நடத்திய அத்தனை திட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வந்திருந்தான்…

அதீனா என்ன சொன்னாலும் பரவாயில்லை… அவளையே கோர்ட் வளாகத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தான்… அவன் போட்ட அத்தனை திட்டங்களும் விழலுக்கு இறைத்த நீராக மாறிவிட்டது என நினைத்தாலும்… அப்படி வீணாக போனாலும் பரவாயில்லை சந்தியா உயிர்தான் இப்போது முக்கியம் என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்… ஆனால் சிவாவுக்குத் தெரியாமல் அதீனா… சந்தியா தங்களுக்குள் மாறியது அவன் பிரச்சனையை இன்னும் அதிகரித்திருந்தது… இதில் சிவா அறியாத இன்னொன்று ராகவ் குண்டடி பட்டது..

சிவா எப்போதுமே ராகவ்வை வேறொரு மொபைலில் உள்ள எண்ணிலிருந்தே தொடர்பு கொள்வான்… தனக்கிருந்த பதட்டத்தில் ராகவ், நிரஞ்சனாவுக்கு போன் செய்யவே நினைக்கவில்லை… அவர்கள் செய்த போதும் எடுக்க முடியவில்லை..

வெங்கட் ராகவ்விடம் சொன்னான்.. “ஒருவேளை அந்தப் பொண்ணுக்கு குண்டடி பட்டிருக்குமோ… அந்த பரபரப்பில் சிவா சார் எடுக்காமல் இருக்கலாம்டா” என்றவன்

“ஆனால் நிரஞ்சனா ஏன் சந்தியாவைக் கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு போகலை… சிவா சார் வீட்டுக்கு போறாங்க… நிரஞ்சனா வீட்டுக்குத்தானே சிவா சார் உன்னைப் போகச் சொன்னாரு…” என்ற அடுத்தடுத்து அவன் கேட்ட போதே அவன் கேள்விக்கு ராகவ்வால் பதில் சொல்ல முடியவில்லை…

உயிர் போகும் வலி என்று கேள்விப்பட்டிருக்கின்றான்…. இன்றுதான் ராகவ் அதை உடலளவில் அனுபவித்தான் என்று சொல்ல வேண்டும்

தன்னிடம் பேசிக் கொண்டு வந்த ராகவ்விடம் திடிரென்று பதில் வராமல் போக… காரை ஓட்டி வந்த வெங்கட் பதட்டமாக அவனை திரும்பிப் பார்க்க… வலியில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான் ராகவ்….

இன்னும் ராகவ் முற்றிலுமாக சுயநினைவை இழக்காமல் இருந்ததே வெங்கட்டுக்கு இப்போதைய ஆறுதல்… அதே நேரம் தனக்குத் தெரிந்த மருத்துவர்களின் உதவியுடன் ராகவ்வுக்கு சிகிச்சை அளிக்க முடியுமென்றாலும்… ராகவ் விடாப்பிடியாக பிடிவாதம் பிடித்தான்…. சந்தியாவைப் பார்த்தபின் தான் எந்த மருத்துவமனைக்கும் வருவேன் என்று…

வெங்கட்டுக்கு பதட்டம் அதிகமாகவே வந்திருந்தது இப்போது… ராகவ்வின் பிடிவாதம் அவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுமோ என்று… அவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை… ஏதாவது மருத்துவமனைக்கு போய்விடுவோம் என்று நினைக்க…

நண்பன் நினைப்பது ராகவ்வுக்கு புரிந்து விட்டது போல..

மருத்துவமனைக்கு போகலாம் தான்… ஆனால் சந்தியா இனி அவ்வளவு சாதரணமாக வெளியில் தலைகாட்ட முடியாது… அதிலும் இன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு…. அதீனா வழக்கு இன்னும் அதிதீவிரமாக மீடியாக்களில் ஃப்ளாஷ் நியூஸாக ஓடிக்கொண்டிருக்கும் என்று நன்றாகவே தெரியும் இருவருக்கும்…

“இவன் தன்னை ஏதாவது மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டால்… சந்தியாவால் அங்கெல்லாம் வர முடியாமல் போனால்… சந்தியாவைப் பார்க்க முடியாது” என நினைத்தான் ராகவ்….

”சந்தியாவைப் பார்க்க வேண்டும்…” அது மட்டுமே இப்போதைக்கு ராகவ்வின் ஒரே எண்ணமாக இருந்தது…

போனிலாவது பேசலாம் என்று வெங்கட் சொல்ல… அதற்கும் மறுத்து விட்டான்… இந்த நிலைமையில் போனில் பேசினால்… சந்தியா பயந்து விடுவாள்… அதிர்ச்சியில் அவளுக்கு என்ன ஆகும் என்று கூட தெரியாது… சந்தியாவுக்கு மட்டுமல்ல… தன் வீட்டில் இருந்தோ… சந்தியா வீட்டில் இருந்தோ எந்த அழைப்புகள் வந்தாலும் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான்

நேரில் சந்தியாவைப் பார்த்தால் எல்லாப் பிரச்சனையும் முடிந்து விடும் ராகவ் நிச்சயமாக நம்பினான்… அந்த நம்பிக்கையில்

”சந்தியாவைப் பார்க்கத்தான் இந்த உயிரைக் கைல பிடிச்சு வச்சுருக்கேண்டா… என்னைக் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்னு ஏதாவது முட்டாள் தனம் பண்ணி வச்சுறாதாட… அவளப் பார்த்தால் எனக்கு பலமே வரும்… ப்ளீஸ்… எனக்கு அவள பார்க்கனும்டா…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வலியின் வேதனையோடு புலம்பியபடி வந்தவனின் வார்த்தைகளை நிராகரிக்கவும் முடியவில்லை வெங்கட்டால்…

வேறு வழியின்றி… சிவாவின் இல்லத்தை நோக்கி… தன் வாகனத்தை விரட்டுவதைத் தவிர வேறு வழி வெங்கட்டுக்குமே தெரியவில்லை…

---

சிவா வீட்டில் நிரஞ்சனாவோ… சந்தியாவைத்தான் கூட்டிப்போகிறோம் என்ற காரணத்தினால் தான், தன் வீட்டிற்கு செல்வது என முடிவு செய்திருந்தாள்… ஆனால் தன்னோடு இருப்பது…. அதீனா என்று எப்போது தெரிந்ததோ அதன் பிறகு தன் வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக சிவாவின் வீட்டை அடைந்திருந்தாள் அதீனாவோடு… ஆனால் ராகவ் அங்கு இல்லாமல் போக… குழப்பத்தில் இருந்தாள் நிரஞ்சனா… சிவா வேறு போனை எடுக்கவில்லை… ராகவ் வேறு எங்கு போனான் என்று தெரியவில்லை.. அவனும் போனை எடுக்கவில்லை… என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க…

இந்தியா தேசத்தின் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும்… சற்று முன் கோர்ட்வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைப் பற்றிய செய்திகள்…ஃப்ளாஷ் நியூஸாக ஒடிகொண்டிருக்க… புகைப்படத்தில் அதீனாவையும் வீடியோவிலோ பரபரப்பாக அதீனா ஆம்புலன்சில் தூக்கிச் செல்லப்படும் காட்சியும் நொடிக்கொரு தரம் மாற்றி மாற்றி காட்டப்பட்டுக் கொண்டிருக்க… … சில நிமிடங்களில் தேசமெங்கும் பார்க்கப்படும் முகமாக…. பேசப்படும் விசயமாக அதீனா மாறியிருந்தாள்…

நிரஞ்சனா அலைவரிசை அலைவரிசையாக தொலைக்காட்சியை மாற்றி மாற்றி பார்த்தாள்…

கோர்ட் வளாகத்தில்.. சந்தியாவை நோக்கி வந்த குண்டு்களும்.. அவளை ஆம்புலன்ஸில் ஏற்றுவதுமான காட்சிகள் மட்டுமே பரபரப்பாகக் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்க… சந்தியாவுக்கு குண்டடிபட்டதா சரியாகத் தெரியாத காட்சிகள் தான்… அங்கிருந்த அதீனாவோ வெறித்தபடி அந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்தபடி இருக்க…