top of page

சந்திக்க வருவாயோ?-46-2

அத்தியாயம் 46-2

/*எங்கே உனை கூட்டி செல்ல

சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

என் பெண்மையும் இளைப்பாரவே

உன் மார்பிலே இடம் போதுமே...

ஏன் இன்று இடைவெளி குறைகின்றதே....

மெதுவாக இதயங்கள் இணைகின்றதே... */


புது இடம் என்பதாலோ என்னவோ தெரியவில்லை… அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட எழுந்த ராகவ்… சந்தியாவையும் போனில் அழைக்கவில்லை… இந்நேரத்திற்கு எழுந்திருந்திருப்பாளா என்று தெரியவில்லை…. தான் இருந்த அறையில் இருந்து வெளியே வந்தவன் ஹாலில் வந்து அமர்ந்தபடி.. வீட்டைச் சுற்றிப் பார்க்க… அப்போதுதான் கவனித்தான்…


எங்கு பார்த்தாலும் மிருணாளினியின் விருப்பங்களே, அந்த வீட்டில் ஆக்கிரமித்து இருந்தது என்றே தோன்றியது…..


திருமணத்திற்கு முன்னரே மிருணாளினி இந்த வீட்டிற்கு வந்திருப்பாள் போல…. சுவரின் வண்ணம் தொடங்கி இண்டீரியர் வரை அவளது தேர்வுகளே என்பது பார்க்கும் போதே அவனுக்கு நன்றாகத் தெரிந்தது… அவனது செல்லத் தங்கையின் தேர்வுகள்… விருப்பங்கள் தெரியாதவனா ராகவ்


தங்கையை நினைத்த போதே நெற்றியில் தானாகவே கவலைக் கோடுகள் விழ ஆரம்பித்திருந்தன… தங்கையை நினைத்து… அவள் வாழ்க்கையை நினைத்து… பெருமூச்சு விட்டபடி… இன்னும் ஆராய்ச்சிப் பார்வையோடு பார்க்க ஆரம்பித்தான் அந்த வீட்டை….


சிறிய வீடுதான்… இரண்டு அறைகள் ஒரு சமையலறை கொண்ட போர்ஷன் தான் அது…. இதெல்லாம் ராகவ் மிருணாளினியிடம் ஏற்கனவே சுட்டிக் காட்டிய விசயங்கள்….


“என் சந்தோஷ் இருக்கிற இடம் அதுதானே… நானும் அங்கேதான் இருப்பேன்… அந்த வீட்ல இருந்து அவனை எதற்கு பிரித்துக் கூட்டி வர வேண்டும்… எங்க ரெண்டு பேருக்கும் மாடி போர்ஷன்…. சோ பிரைவசிக்கும் பிரச்சனை இல்லை….. “ என்றவள்…


“என்ன எனக்கு சமைக்கத் தெரியாது… அதுதான் பிரச்சனை… கத்துக்கனும்” என்று சிலாகித்தான் ராகவ் தங்கையின் நினைவுகளில்… அவள் வார்த்தைகளில்


அவள் சந்தோஷை எந்த அளவு விரும்பியிருக்கின்றாள் என்பதை நினைத்தவனுக்கு… இப்போது அவள் பிடிக்கும் பிடிவாதமும் நினைவில் வர…. மனம் கனத்தது…


அந்த ஹாலில்…. மிருணாளினி சந்தோஷ் புகைப்படம் மாட்டிப்பட்டிருக்க…. திருமணத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டது போல…. கேசுவலான உடையில் இருவரும் அவ்வளவு பாந்தமாக இருந்தனர்….


என்ன செய்து இருவரையும் ஒன்று சேர்ப்பது என்ற எண்ணமே அவனுக்கு ஆயாசத்தை தர…. அதில் மனம் சோர்ந்தவனாக… பக்கத்தில் இருந்த அறையைப் பார்க்க… இலேசாக ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்த கதவைப் பார்த்தவன்… அந்த அறைதான் சந்தோஷின் அறை என்று புரிந்து கொண்டு…


கதவைத் மட்டும் தட்ட…


“ம்மா…. நான் அப்புறமா வருகிறேன்..” என்ற குரல் மட்டுமே வர…


”சந்தோஷ் “ என்று அழைத்தான் ராகவ் சத்தமாக….


இன்னும் உறக்கத்தில் இருந்து கலையாத, படுக்கையில் இருந்த சந்தோஷுக்கு…. திடிரென கேட்ட ஆண் குரலில்…. திடுக்கிட்டு எழ…


அதே நேரம் அவனைப் பார்த்தபடியே புன்னகையோடு உள்ளே நுழைந்தான் ராகவ்..


”இந்த அதிகாலையில்… ரகுவா..” கண்களை மெதுவாகத் திறந்த சந்தோச்ப்ஹின் முன் ராகவ் நிற்க…. சந்தோஷின் விழிகள் விரிந்தன…


”இவன் எப்படி இங்கு…” திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்ததாலோ என்னவோ….


‘சந்தியா நைட் ஷிப்ட்… மாப்பிள்ளைக்கும் தெரியும்… முடிந்தால் வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன் என்றும் சொன்னார்’ தன் தாய் நேற்றிரவு தன்னிடம் சொன்னது உடனே நினைவில் வரவில்லை….


ராகவ் இந்த அதிகாலையில் வந்திருக்கின்றான் என்றால்… மிருணாளினி வந்திருக்கிறாளோ… அவளை அழைத்துக் கொண்டுதான் ராகவ் வந்திருக்கிறானோ…. இப்படித்தான் சிந்தனை போனது சந்தோஷுக்கு…. அந்த அற்ப நம்பிக்கையில் ராகவ்வைத் தாண்டி அவன் விழிகளின் பயணம் போக…. அங்கு யாரும் இல்லாததை உணர்ந்து… மீண்டும் ராகவைப் பார்க்க…


ராகவ் அதனைப் புரிந்து கொண்டவனாக….


”சந்தியாவை விட வந்தேன்…” என அமைதியாகச் சொல்ல…. சட்டென்று அவன் முகம் ஏமாற்றத்தின் வேதனையைக் காட்டி விட…. இருந்தும்…


“ஓ… சந்தியா நைட் ஷிஃப்ட்ல… அது சுத்தமா ஞாபகம் இல்லை எனக்கு…. நான் வேற என்னவெல்லாமோ திங்க் பண்ணிட்டேன்…“ என்று தன்னைச் சமாளித்தபடி… ராகவ்வைப் பார்த்தவன்…


நேற்று நடந்ததை நினைத்தானோ என்னவோ தெரியவில்லை…


“சாரி ரகு” என்ற போதே அதே சமயம்.. நொடி பிசகாமல் ராகவ்வும்… ”சாரி சந்தோஷ்” என்று சொல்ல…


இருவரும் ஒருவரை ஒருவர்… சில நொடிகள் பார்த்து விட்டு… பின்… ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க….“சாரிடா மச்சான்…” என்று சந்தோஷை ராகவ் கட்டிக் கொள்ள… சில நிமிடங்கள் அங்கு வார்த்தைகளே இல்லை… இருவருமே… நேற்று காலையில் தங்களுக்குள் ஏற்பட்ட சூடான விவாதத்தை நினைத்தபடி… அமைதியாக இருக்கசந்தோஷ்தான் முதலில் சுதாரித்தான்… என்ன இருந்தாலும் தன் வீட்டு மாப்பிள்ளை ஆயிற்றே… வரவேற்கும் விதமாக பேச ஆரம்பித்தான்…


“எப்போ வந்த ரகு… ஏதாவது சாப்பிட்டியா…” என்று மணியைப் பார்த்தபடியே கேட்க….“இல்லை இனிமேலதான் கீழ போகனும்… நைட் இங்கதான் படுத்திருந்தேன்” என்றவன்… சோம்பலாக கையை முறித்தபடி…


”வந்தது வந்துட்டேன்… ஒரேயடியா மறுவீட்டு விருந்தையும் முடிச்சுட்டே போகலாம்னு ப்ளான்… மேரேஜ் அன்னைக்கு உன் தங்கச்சி படுத்துன பாட்டுல… உங்க வீட்ல என்னால காலைக் கூட வைக்க முடியலை”


சந்தியாவின் கணவனாக உற்சாகமாக ஆரம்பித்து முடித்தவன்… அதன் பின்தான் தன் கேலி கிண்டலை உணர்ந்து… அமைதியாக ஆரம்பித்தான்…. அண்ணனாக மனம் மிருணாளியிடம் போய்விட்டிருந்தது இப்போது….


சந்தோஷுக்கும் அதே நிலைமைதான்…. ஆம் சந்தியாவின் அண்ணனாக மட்டுமே அவனும் பேச ஆரம்பித்தான்…. மிருணாளினியைப் பற்றி ராகவ்விடம் பேச விரும்பாமல்..


“சோ ஒரு முடிவோடத்தான் வந்திருக்க…. எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு இன்னைக்கு விருந்து… கலக்கிறலாம்… “ என்று சிரித்தபடி ராகவ்வைப் பார்க்க….


ராகவ் சிரிக்கவில்லை…. பதிலுக்கு…


“உனக்காக நானும் வெயிட்டிங்” என்றபோதே… சந்தோஷ் முகம் சிரிப்பைத் தொலைக்க… இருந்தும் தன்னை மாற்றியவனாக


“சீக்கிரம் வந்துருவேன்…. வருவேன் ரகு” நம்பிக்கையோடு சொன்னவனின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்த ராகவ்விடம்…


“அவ சந்தோஷோட மிருணாளினி…. என்னை விட்டுட்டு அவளால இருக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்…. அஃப்கோர்ஸ் உங்க எல்லாருக்கும் அவளோட பிடிவாதம் தெரியும்…. ஆனால் எனக்கு மட்டுமே அவளோட காதலும் தெரியும் ….” என்றவனை நக்கலாகப் பார்த்தது வேறு யாருமல்ல ராகவ்தான்…


சந்தோஷ் சிரித்தபடி….


“என்ன நக்கல் பார்வை… நான் காதல்னு சொன்ன வார்த்தை கிண்டலா இருக்கா… பத்து நாள் இருக்குமா… இந்தக் காதலுக்கே ஒருத்தி... தலைகால் புரியாம சுத்திட்டு இருக்கா… இதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன….. நேற்று திவா மாமா வேற… உங்களப் பற்றி சொல்லிட்டு… என் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு… அட்வைஸ்” என்றவன்… கண் சிமிட்டியவனாக…


“நைட் ஷிஃப்ட்!!!… ஹ்ம்ம்ம்” என்று மேலும் கீழுமாக பார்த்தவன்…


“அம்மா நம்புவாங்க மச்சான்… நான் நம்புவேனா??? ” என்ற போதே… வேகமாக ராகவ் சுற்றிலும் பார்வையை ஓட்டியபடி… அவன் வாயை மூடப் போக…


சந்தோஷோ திமிறியபடி அவனிடமிருந்து தப்பித்து ஓடியவன்…


“ஏண்டா… என் தங்கச்சி வேலைக்குப் போன இத்தனை வருசத்தில நைட் ஷிஃப்டுனு சொல்லிருக்காளா… அப்டியே இருந்தாலும் போயிருவாளா என்ன… அவ மேனேஜருக்கே பேய்க்கதை சொல்லி… பயமுறுத்திட்டு வருவா… அப்படிப்பட்டவ நைட் ஷிஃப்ட்டாடா… அதிலயும் சார் நீங்க இருந்து கூட்டிட்டு வருவீங்களா… டேய்… எங்க அம்மா அப்பாவிதான்… என்ன வேணும்னாலும் சொல்லி ஏமாத்தலாம்…. என்னையும் ஏமாத்துவீங்களா நீங்க” என்று தன்னை விடாமல் துரத்திய ராகவ்விடம் மாட்டாமல்…. சந்தோஷ் வம்பிழுக்க…“டேய்… விட்டால்… பேசிட்டே போவியா… அடங்குடா” என்று ராகவ்வும் அவனை விடாமல் துரத்த
அப்போது… அதே நேரம்… ராகவ்வை எழுப்பி விடுவதற்காக அங்கு வந்த சந்தியா….. ராகவ் சந்தோஷை விரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து…. மிரண்ட பார்வையை வீச…. இருவரும் தங்கள் விளையாட்டை விட்டு…. அவளைப் பார்த்து அப்படியே நிற்க… ராகவ் கண்களால் சைகை செய்தான் சந்தோஷிடம்….


’இந்தப் பேச்சை இதோடு விட்டுவிடு…. சந்தியாவுக்குத் தெரிய வேண்டாம்’ என்பது போல… சந்தோஷும் அதைப் புரிந்து கொண்டு,,,


“நீ கீழ போ சந்தியா…. வந்துட்டே இருக்கோம்…” என்க…


ஒன்றும் பேசாமல் தமையனின் வார்த்தைகளுக்கு சரியென்று தலையாட்டியபடி திரும்பியவள்…. நின்று … மீண்டும் இவர்களைப் பார்த்து…


“ஒண்ணும் இல்லைதானே…. நீங்க ரெண்டு பேரும் சண்டை போடலை தானே…” என்று உறுதிச் செய்துகொள்ள இருவரையும் பார்த்து கேட்க…


சந்தோஷ்….. அவளிடம் ..


“சத்தியமா சந்தியா” என்று அவள் தலையில் அடிக்கப் போக…. ராகவ் வேகமாக அவனுக்கு இடையில் வந்து…


“டேய் இது என்ன பழக்கம்…. தலைமேல அடிச்சு பிராமிஸ்லாம்” என்று சந்தோஷைக் கடிந்தபடி சொன்னபடி.. சந்தியாவின் தலையில் சத்தியம் வைக்க விடாமல் தடுத்து நிறுத்த…


சந்தியா அவஸ்தையாக தன் அண்ணனைப் பார்க்க


ராகவ்வின் வார்த்தைகளில்… அவனது அக்கறையில் சந்தோஷுக்கு அப்படி ஒரு நிம்மதி…. ராகவ்வை பார்த்தவனின் பார்வையில் ஆயிரம் பரிபாசைகள்…. வார்த்தைகள் இன்றி தங்கையின் கணவனாகத் தன் நண்பனைப் பார்த்தான் மன நிறைவோடு…


அதன் பின் ராகவ் சந்தோஷ் இருவரும் குளித்து உடைமாற்றி விட்டு கீழே வர… காலை உணவு அமோகமாக ஆரம்பித்தது... கணேசன் கடைக்குச் சென்று விட அவர் இல்லாததால் இன்னும் ஆர்ப்பாட்டமே அங்கு…. மணி 11 ஆகி இருந்தது….


வசந்தி ராகவ்விடம் அதிகம் பேச விட்டாலும்…. அவனுக்குத் தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தார்….


மறுவீட்டுக்கு கூட ராகவ்-சந்தியா வரவில்லை…. அதனால் அந்த சடங்குகள் இருவருக்கும் செய்யப்படாமலேயே இருக்க… வசந்தி சந்தோஷை அழைத்து…. அதைப்பற்றிப் பேச…


“சரிம்மா, ஒரு 12.30 க்கு சமையல்லாம் முடிச்சுட்டு கூப்பிடுங்கம்மா…. அதுக்குள்ள நானும் ஆஃபிஸ் வேலையை முடிச்சுட்டு வந்துறேன்… அப்புறமா க்டைக்கு போகலாம்” என்றவன்”ராகவ் மேல வந்து ரெஸ்ட் எடுக்கிறதுனா எடு….” என்று ராகவ்வை அழைக்க… ராகவ்வோ கீழேயே இருப்பதாக கூறிவிட…. சந்தோஷ் அதற்கு மேலும் வற்புறுத்தவில்லை…. சென்றுவிட்டான் …


சந்தியாவோ… தாய்க்கு சமையலில் உதவ அவர் பின்னாலே சமையலறைக்கு வர வசந்தியோ… தானே அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக கூறி… வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையைக் கவனி என்று சந்தியாவை அனுப்பி விட… சந்தியாவும் வேறு வழி இன்றி ஹாலுக்கு வந்தாள்…


ராகவ்வுக்கு இப்போது சந்தியாவின் மேல் துளியும் கோபமில்லை… நேற்றைய கோபம் நேற்றே முடிந்து விட்டிருக்க… தன்னருகே வந்து அமர்ந்தவளிடம்… சாதரணமாக பேச ஆரம்பிக்க… இப்போது கோபப்படும் முறை சந்தியாவின் முறையானது….


கோபத்திற்கு காரணம் நேற்றிரவு போன் ராகவ் செய்யாதது…


இவனும் அவள் கோபத்தை அதற்கான காரணத்தையும் புரிந்துகொண்டு…

“உண்மையிலேயே சந்தியா… அப்படி ஒரு தூக்கம்… அதான் பண்ணல… மற்றபடி வேற காரணம் இல்லடா….” தன் சகியின் பதியாக வழக்கமான கெஞ்சல் கொஞ்சலை ஆரம்பித்திருக்க…

இவளோ இன்னும் வீம்பு காட்டினாள்… அதில் அவனிடம் பேசாமலேயே அவளது அறைக்குப் போக… அவளைப் பின் தொடர்ந்து வந்தவன்…. ஒரு நிமிடம் அப்படியே அவளது அறை வாயிலிலேயே ஸ்தம்பித்து நின்றான்… அவளின் அறை இருந்த நிலையைப் பார்த்து…

“என்னது இது,....” அதட்டலாகவே வந்தன வார்த்தைகள் ராகவ்விடமிருந்து…


ராகவ்வின் அறை எப்போதுமே சுத்தமாக நேர்த்தியாக இருக்கும்…. அவனது கட்டிலின் விரிப்பு சற்று கலைந்திருந்தால் கூட…. யசோதாவிடம் கத்துவான்…. அப்படிப்பட்டவனின் மனைவியின் அறையோ இந்தக் கோலத்தில் இருக்க…


“எனக்கு நாம இருக்கிற இடம் நீட்டா இருக்கனும் சந்தியா” கட்டளை போலச் சொன்னானா…. இல்லை இனி பழகிக் கொள் என்பது போலச் சொன்னானா….


சந்தியா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்…


”ப்ச்ச்… ஊருக்கு போறதுனாலதான் ரகு…. இல்லேன்னா நீட்டாத்தான் இருக்கும்… “ என்ற போதே


“ஹ்ம்ம்… நான்லாம் மாசத்துக்கு நாலு தடவை ஊர் சுத்தறவன்… இந்த டையலாக்லாம் காதுல பூவச்சுட்டு சுத்திட்டு இருப்பானுங்க… அவங்க கிட்ட சொல்லு” இவனும் விடாமல் சொல்ல ஆரம்பிக்க…“அப்டீங்களா சார்… எனக்கு காதுல பூவச்சுட்டு இருக்கவனுங்கள எல்லாம் தேட டைம் இல்லை… உங்க அட்வைஸுக்கு நன்றி” என்று கடுப்பாகச் சொன்னபடியே அறையை சுத்தப்படுத்துவதில் குறியாக இருந்தாள்…


”ஃபர்ஸ்ட் டைம் என் ரூமுக்கு வருகிறான்… அவனுக்கே அவனுக்கான அவன் மனைவி நாம நிற்கிறோம்… என்னைக் கவனிக்காமல்… டூருக்கு வந்த மாதிரி ரூமைச் சுற்றிப் பார்த்ததோட இல்லாமல்… குத்தம் குறை வேற” மனதுக்குள் சிறப்பு அர்ச்சனைகள் ராகவ்வுக்கு அவன் மனைவியால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது வேறு விசயம்…ராகவ்வுக்கு பெரும்பாலும் பகலில் உறங்கி பழக்கம் இல்லை…. இன்று மட்டும் வருமா என்ன… சந்தியாவின் கட்டிலில் அமர்ந்தபடியே… வேலை பார்த்துக் கொண்டிருந்த சந்தியா ஒரு கண்ணும்… அவனது போன் ஒரு கண்ணுமாக மூழ்கி விட

அப்பொது சந்தியா… வேகமாக எதையோ எடுத்து.. உள்ளே வைக்கப் போக…


“ஏய் என்னடி அது… ஏன் மறைக்கிற” என்று கேட்டுக்கொண்டே அவளருகே போனவன்… அவள் கைகளைப் பிடிக்க… அதே நேரம் வசந்தி அழைக்க…


இதுதான் சாக்கென்று… விட்டால் போதுமென்று… அவன் கைகளில் தான் வைத்திருந்ததைக் கொடுத்து விட்டு சிட்டாக பறந்து விட்டிருந்தாள்…


அது ஒரு ஃபோட்டோ ஃப்ரேம்… நாலைந்து புகைபடங்கள் ஒன்றாக வைக்கப்பட்ட தொகுப்பு அது… சந்தியா சிரித்துக் கொண்டிருந்த பெரிய புகைப்படம்… அந்த புகைப்படத்தைச் சுற்றி.. சிறிய அளவில் மற்ற புகைப்படங்கள்… நடுநாயகமாக இருந்த அந்த ஒரு புகைப்படமே ராகவ்வை வேறு எங்கும் பார்க்க வைக்க விடாமல் அவனைக் கட்டிப்போட்டு விட… எப்போது எடுத்த புகைப்படம் என்று தெரியவில்லை சந்தியா வளர்ந்த குழந்தையாக மட்டுமே தெரிய… ரசித்தபடியே இருந்தவன்… அடுத்த புகைப்படத்தைப் இப்போது பார்க்க… சந்தியாவும்… அவளருகில் காதம்பரியும்…


அமைதியாக பார்த்தபடியே இருந்தான் அந்த புகைப்படத்தை… அதில் இருந்த காதம்பரியையும்


காதம்பரியின் அருகில் சந்தியா பெரிதாக புன்னகைத்துக் கொண்டிருக்க… அன்றைய தினத்திற்குப் பிறகு அதாவது திவாகர் திருமண வீட்டில் நடந்த பிரச்சனைகளுக்குப் பிறகு…. வெகுநாட்களுக்குப் பிறகு... காதம்பரியை இன்றுதான் பார்த்தான் ராகவ்… அதுவும் புகைப்படத்தில்… நிச்சயதார்த்த வீடியோவில் காதம்பரி இருந்தாள் தான்… ஆனால் சந்தியா பாடிய பகுதியை மட்டும் பார்த்துவிட்டு… தன்னவளின் துக்கத்தில் தானும் துக்கத்தில் ஆழ்ந்தவன் முழுதாக பார்க்கவில்லை அந்த வீடியோவை… இதில் எங்கிருந்து காதம்பரி நினைவெல்லாம் அவனுக்கு வரும்…


இன்றோ… காதம்பரியைப் பார்த்த பின்னால்… அவன் செய்த சிறுபிள்ளைத்தனமான செயல்களை நினைத்துப் பார்க்க அவனுக்கே அவனை நினைத்து அசிங்கமாகத்தான் இருந்தது… தான் செய்த கேவலமான காரியத்திற்கு தூதாக தன் மனைவியே… இன்னும் இன்னும் கேவலமாக இருந்தது அவனுக்கு“சாரி காதம்பரி…. நானும் என் பொண்டாட்டியும் பண்ணின கூத்துல…. உன்னை கஷ்டப்படுத்திட்டோம்….“ என்று நினைத்தவன் தான் டெல்லி போகும் போது… சந்தியாவோடு காதம்பரியை போய்ப் பார்க்க வேண்டும்…. என்று முடிவு செய்தபடி… சற்று நேரம் தனக்கு வந்த மெயில்களுக்கு… அலைபேசியின் வழியே பதில் அனுப்ப ஆரம்பித்தவன்… சில பல நிமிடங்கள் கழித்து வெளியே வர… அந்த இல்லமே நிசப்தமாக இருந்தது….


“சந்தியா” என்று குரல் கொடுக்க….அவளும்… சமையலறையில் இருப்பதாக அங்கிருந்தே இவனுக்கு பதில் கொடுக்க…. வசந்தியும் இருப்பார்களோ என்று தயங்கி சமையலறைக்குப் போக… சந்தியா மட்டுமே தனித்து இருந்தாள்..


உள்ளே வரும் போதே அவனின் கேள்வியான முகத்தைப் பார்த்து… உணர்ந்தவளாக… ”அண்ணனும் அம்மாவும் கடை வரை போயிருக்காங்க….” என்று சொன்ன படியே…


”பசிக்குதா ரகு… தயிர் வெங்காயம் மட்டுமே ரெடி பண்ணனும்… மத்த எல்லாமே ரெடி… அவங்க வந்ததும் சாப்பிடறீங்களா இல்ல ????” என்று இழுத்தாள் சந்தியா கேள்வியாக…


உண்மையிலயே சந்தியாவுக்கும் சரி ராகவ்வும் சரி... மனம் ஒன்று பட்ட போதும்… உடல் ஒன்று பட்ட போதும்… இருவரின் பழக்கவழக்கங்களை ஒருவருக்கொருவர் இன்னும் அறிந்திருக்கவில்லை… அதற்கு வாய்ப்பும் கிடைக்க வில்லை….


சொல்லப் போனால் அவர்கள் இருவரும் ஒன்றாக அதிக நேரம் இருப்பது இன்றுதான் முதல் முறை… சந்தியாவுக்கு கொஞ்சம் குற்ற உணர்வாகத்தான் இருந்தது அவனது பழக்க வழக்கங்களை தான் இன்னும் அறிந்து வைத்திருக்கவில்லையே என்று….


இதோ இப்போதும்… அவன் எப்போது சாப்பிடுவான் என்று தெரியவில்லை…. சந்தியா வீட்டில் அனைவரும் தாமதாகவே சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள்…


காலை உண்வு 11 மணி… மதிய உணவு மதியம் 3… இரவு உணவு இரவு 10 மணிக்கு மேல் என்று பழகியிருக்க…. ராகவ் பசியாக இருப்பானோ என்ற கவலையாக இருக்க… அதனால் தான் ராகவ்விடம் கேட்டாள்..


ராகவ்வோ… சந்தோஷ் வந்த பின்னர் சாப்பிடுவதாகக் கூறி விட… இவளும்… அதற்கு மேல் அவனை வற்புறுத்த வில்லை…..


அமைதியாக கிச்சன் மேடையின் மேல் அமர்ந்து மனைவி சமைக்கும் அழகை ரசிக்க ஆரம்பித்தான்… அதிலும் தலை குளித்து… கூந்தலை தளர்வாக விட்டிருந்தவள்… புடவையில் வேறு இருக்க… இதை விட கணவனாக அவனுக்கு என்ன வேண்டும்…


உல்லாசத்துடன், அவளைக் கண்களில் நிரப்பியபடியே கேரட்டை கடித்தபடியே… புடவைத்தலைப்பை இடையைச் சுற்றி சொருகியபடி வேலை பார்த்துக் கொண்டிருந்த தன்னவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தவனுக்கு… இத்தனை நாள் தான் கேமிராவின் வழியே படம் பிடித்த காட்சிகள் கோணங்கள் எல்லாம் மிக மிக அற்பமாகத் தோன்ற…


“சந்தியா… அப்டியே.. இதே ஆங்கிள்ள… இந்த லொகேஷன்ல… ச்சேய் கைல கேமரா இல்லையே… டாப் மாடல்லாம் தோத்துப் போய்ருவாங்க…” என்ற போதே சந்தியா பத்ரகாளியின் மறு அவதாரமாக மாறியிருக்க…

அப்படியே வாயை அடக்கிக் கொண்டான் அவள் கணவன்…. அதன் பிறகு தன் தொழிலையும் இவளையும் சம்பந்தபபடுத்தி பேசுவானா என்ன….


சந்தியா இவனிடம் அவ்வப்போது சாதரணமாக பேசிக் கொண்டிருந்தாலும்… இன்னும் கோபம் போகவில்லை என்பது அவள் வெங்காயத்தை வெட்டும் தோரணையிலேயேத் தெரிய…


அவளையே பார்த்தபடி இருந்தவன்… திடீரென சந்தியாவிடம்


”காயா பழமா” என்று மட்டும் ராகவ் கேட்க…


நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் வெங்காயம் வெட்டுவதில் த கவனத்தை வைத்தபடியே…


“புடலங்காய்னு தானே சார் சொன்னீங்க… பழத்தை பற்றி ஏதும் சொன்னதா ஞாபகம் வரலையே எனக்கு… சொன்னீங்களா என்ன” குத்தலாக வார்த்தைகள் தெறிந்து விழுந்தன வார்த்தைகள்… நேற்று அவன் நக்கலாகச் சொன்ன பொண்ணு-பொண்டாட்டி –புடலங்காய்க்கு பதிலடி கொடுத்த திருப்தி வந்திருந்தது இவளுக்கு…


இதற்கு பிறகும் சமாதானப்படுத்தாமல் இருந்தால் சேதாரம் தன்பக்கம் அதிகமாகும் என்று அக்மார்க் கணவனாக உணர… அந்த நொடியே தான் இருந்த இடத்தில் இருந்து வேகமாக குதித்து இறங்கியவன்


“கோபமா” என்று தன்னவளை கட்டிகொண்டபடியே கேட்க


பின்னால் இருந்து கட்டியணைத்த கணவனின் நெருக்கம் இம்சித்ததுதான்… போதும்… இருந்தும் தன்னைச் சமாளித்தவளாக


“இல்லையே… அப்டியே” என்று அவன் சொன்னது போலவே சொல்ல வந்தவள் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை…


சந்தியா பேசிக் கொண்டிருந்த போதே அவள் பின்னங்கழுத்தில் இவன் வைத்த சூடான முத்தம் அவள் வார்த்தைகளுக்கு நிறுத்தம் வைத்து… அவள் கோபத்தையும் ஆவியாக்கி காணாமல் போக வைக்க… இருவருக்குமிடையே ஆரம்பித்த சில நிமிட மௌன பாஷை மாநாடு… நேற்றிரவிலிருந்து இப்போது வரை தொடர்ந்த பல மணி நேர கோபதாபங்களுக்கு முடிவுரை எழுதி உடன்படிக்கை முடிவுக்கு வந்திருக்க… தலைவன் தலைவி இருவருமாக… மனமொத்து சமாதானக் கொடி காட்டி இருந்தனர்


சந்தியா வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு… அது புதிதாகத் தெரிந்தது… மிருணாளினி கிச்சன் பக்கமெல்லாம் வந்து அவன் பார்த்ததே இல்லை… அந்த ஆச்சரியத்தில்


”நீ ரொம்ப பொறுப்பா இருக்க சந்தியா…” பெருமை தொணித்தது அவன் குரலில்…


சந்தியாவும் தீவிர பாவத்தோடே


“பொறுப்பா இல்லைனா… பொண்ணே இல்லைனு சொல்லிருவாங்க பாஸ்.. சும்மாவே பொடலங்காய்னாலாம் வேற சொல்றாங்க” என்று நக்கலாக முடிக்க…


“ஹ்ம்ம்.. ஹ்ம்ம்ம்… அப்படியா” என்று என்றவனின் கரங்கள்… அவசரமின்றி அவள் இடையை சுற்றி வளைத்து அவள் முந்தானைக்கு போட்டியாக தன் அழுத்தத்தைக் காட்டியபடி… அவள் தோளின் மேல் தன் முகவாயை வைத்து …


“நீ பொறுப்பே இல்லைனாலும்… நான் பொண்ணுனு சொல்லுவேன் சகி” மொத்தமாக சரணடைந்த குரலில் கிறக்கம் மட்டுமே இப்போது… அதோடில்லாமல் கரங்கள்…. அதனை உறுதியும் செய்யும் பணியையும் செவ்வனே ஆற்ற போக…தான் கையில் வைத்திருந்த கத்தியாலேயே அவன் கரத்தை தன் வசம் கொண்டு வந்து கீழே இறக்க வைத்தவள்….


“கிடைக்கிற கேப்பில எல்லாம் கிடா வெட்ட கிளம்பிட்ட… நீ நடத்து ராசா நடத்து…. ஆனால் உனக்கு ட்ர்ப்பிள் ஆர் போய் ட்ரிப்பிள் ஏ போட்ற போறாங்க… பார்த்துக்கோ….” சொல்லியபடியே அவன் கரங்களை தன் இடையிலேயை நிறுத்தி வைத்தவள்… மீண்டும் வெங்காயம் வெட்டும் தன் வேலையில் கவனமாக இருக்க…


ராகவ்வும் வாசலில் கவனம் வைத்தபடியே…. மனைவி தடுத்தால் மட்டும் சும்மா இருப்பானா என்ன்… கிடா வெட்டக் கிளம்ப… அதாவது கணவனாக அவளை இம்சிக்க ஆரம்பிக்க… அதே நேரம் சரியாக வந்து சேர்ந்தனர் வசந்தியும்… சந்தோஷும்….


அவர்கள் வரும் அரவம் உணர்ந்தவன்… மெதுவாக சந்தியாவை விட்டு நகர்ந்து… தள்ளி நின்றபடி அவளிடம் பேச ஆரம்பிக்க… இவளும் புன்சிரிப்புடன் அவனுக்கு பதில் சொன்னபடி… தன் வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தாள்


வசந்தியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்…. இதே ராகவ்வைப் பற்றி எப்படியெல்லாம் மனதில் எண்ணி வைத்திருந்தோம்… ஆனால்… மகளின் முகத்தில் இருந்த புன்னகையே அவருக்கு பூரண திருப்தியை கொண்டு வர… அதே முகத்தோடு சந்தோஷைப் பார்க்க… இப்போது மனம் சுணங்கியது… சந்தோஷின் தாயாக


ஆனாலும் மிருணாளினி எப்படியும் இந்த வீட்டில் வாழ வருவாள் என்ற நம்பிக்கை வசந்திக்கு இருந்தது…. முதலில் சந்தியா அவள் புகுந்த வீட்டிற்குப் போகட்டும்… அதன் பின் மிருணாளினியிடம் தானே போய் பேச வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தார் வசந்தி …


கணேசனும் சற்று நேரத்தில் வர… அனைவருமாக சாப்பிட்டு முடிக்கும் போது மணி 3 மணி ஆகிவிட்டிருந்தது…..


கணேசனும் வசந்தியும்…. தங்கள் வீட்டு மாப்பிள்ளைக்கு முறையாக மறு வீடு முறையும் செய்து முடித்திருக்க... ராகவ்வும் அதை எல்லாம் மறுக்க வில்லை…. கணேசன் ராகவ்விடம் பெரிதாக முகம் கொடுத்து பேசவும் இல்லை… அதே நேரம் அவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதைய இம்மியளவும் குறைக்க வில்லை…. ஆனால் சாப்பிட்டு முடிந்த பின் தானாகவே மிருணாளினியைப் பற்றி பேச்சு வர… அதையும் கணேசன் தான் ஆரம்பித்தார்..


உடனே சந்தோஷ் குறுக்கிட்டு …


“அது எனக்கும் மிருணாவுக்குமான பிரச்சனை… அதை இன்னைக்கு…. இப்போ பேச வேண்டாமே…. அதுமட்டுமில்லாமல்… இது நானும் அவளும் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விசயம்னு உங்களுக்குத் தெரியும்…. எல்லோரும் உங்க மனைவி போல ஆக முடியுமா” என்ற போதே கணேசன் முறைக்க…


“ஐ மீன்… புருசனுக்கு அடங்கிய பொண்டாட்டியா” என்று பேச்சை மாற்ற…. வசந்திதான் இருவருக்கும் இடையில் மாட்டினார்…


சந்தியாவுக்கு இது வழக்கமான நிகழ்ச்சிதான் என்றாலும்… ராகவ் இருக்கும் போது இருவரும் வழக்காடிக் கொண்டிருப்பது அவளுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது… அமைதியாக அந்த இடத்தைக் காலி செய்திருந்தாள்… யாரிடமும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று விட்டாள்….

அப்போதும் கணேசன் விடாமல் பேச ஆரம்பிக்க சந்தோஷும் வழக்காட ஆரம்பித்தான் அவரிடம்… அவர்களின் வார்த்தை வீச்சுக்களில் மிருணாளினியும் வந்து போக


தன் தங்கையைப் பற்றி பேசியதில்… ராகவ்வுக்கு இப்போது ஒரு மாதிரியாக ஆகி விட… சங்கடமான சூழ்நிலையைத் தவிர்க்க.. சட்டென்று எழுந்து கொள்ள…. அப்போதுதான் கணேசனும் சந்தோஷும் தங்கள் உணர்வுக்கே மீண்டு வந்தனர்.. தானகவே தங்கள் வார்த்தைப் போரை நிறுத்தியும் இருந்தனர்

…..


அமைதியாக அமர்ந்திருந்தாள் சந்தியா தன் கட்டிலில்…. இலேசாக கண்கள் கலங்கி கூட இருந்தது…. இருந்தும் கணவன் முன்னே காட்டக் கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்தி இருக்க..


இப்போது நடந்த வாக்கு வாதத்தை… ராகவ் கண்டிப்பாக தவறாகத்தான் எடுத்துக் கொள்வான் என்றே தோன்றியது…. அதிலும்… இது அவன் தங்கை வாழப் வரப் போகும் வீடு.. என்ன நினைப்பான்… சும்மாவே சந்தோஷ் பிரச்சனை வேறு…


கதவை தாழிட்டு வந்தவன்…. அருகில் அமர…. அவனை நிமிர்ந்து பார்க்கவே இவளுக்கு தயக்கமாக இருக்க…. ராகவ்வுக்கும் அது புரியாமல் இல்லை….


”சந்தியா சாரி…” சம்பந்தமே இல்லாமல் சொல்ல… திகைத்து நிமிர்ந்தாள்… ’இவன் எதற்கு மன்னிப்பு கேட்கின்றான்’ என்ற தொணியில்…


”மேரெஜ் முன்னால நானும் உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன் சந்தியா…”


மனமாற மன்னிப்பு கேட்க…


”ச்சேச்சேய்… நீ என்ன பண்ணின ரகு… எனக்கு இதெல்லாம் பழகிருச்சு ரகு… நானும் சந்தோஷும் வேலை பார்க்க ஆரம்பிக்கிற வரை… வீட்ல தினமும் ரணகளம் தான்…. சின்ன வயசுல இவருக்கு ஏன் மகளா பிறந்தோம்னே நான் ஃபீல் பண்ணுவேன்… அம்மா ரொம்ப பொறுமை…. எங்களுக்காக மட்டுமே வாழ்ற ஜீவன்… மேரேஜ்னாலேயே அண்ணா வெறுத்து போனதுக்கு காரணம்… தவறிப் போனதுக்கும் காரணம் அப்பா தான்…” என்று தங்கள் குடும்பக்கதையை கொஞ்சம் விளக்க

ராகவ் மனதிலும் பல கேள்விகள் வந்து போயின வசந்தி கணேசன் இருவருக்கும் ஏன் சண்டை…. வசந்தி ஏன் தற்கொலை வரை போனார்…. சந்தோஷின் கனன்ற பார்வை… குத்தல் பேச்சு…. என எங்கோ இடிக்க ஆரம்பித்தது….. அது மட்டுமில்லாமல் . சந்தியாவுக்கு முழுவதுமாக எதுவும் தெரியவில்லை என்றே தோன்றியது….


ஏற்கனவே… இவர்களை யாரோ பின் தொடர்கிறார்களோ என்ற கேள்விக்கே இவனுக்கு இன்னும் பதில் தெரியவில்லை… இதில் இது வேறா…. சந்தியாவுக்கு என்ன தெரிகிறதோ அந்த அளவு தனக்கும் தெரிந்திருப்பதே சரி என்று தோன்ற… இப்போது மனதில் குழப்பம் மறைய…. சந்தியாவைப் பார்க்க… அவள் கண்களில் துக்கத்தோடு… தூக்கமும் போட்டி போட்டுக் கொண்டிருக்க….


“சரி… இதெல்லாம் உனக்கு பழகியதுதானே… அப்புறம் ஏன் இவ்ளோ உன்னைக் கஷ்டப்படுத்திக்கிற….” என்றபடி…


“இதெல்லாம் எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா… உன்னை அனுப்பி இருக்கவே மாட்டேன் சந்தியா… நான் ஒரு லூசுதான்…” நொந்து கொண்டவனிடம்…


” சரி... நான் எல்லாத்தையும் எடுத்து பேக் பண்ண ஆரம்பிக்கிறேன் ரகு…. ” என்று எழ ஆரம்பித்தவளை… அப்படியே அமர வைத்தவன்…


“ஒழுங்கா தூங்கு… உன் முகத்தைப் பார்த்தாலே… டன் டன்னா தூக்கம் வழியுது… “ என்றவனிடம்


“பரவாயில்லை….. இப்போ ஆரம்பித்தாலே… எப்படியும் நைட் ஆகிரும்... ” என்றவள் வேகமாக…


“மவனே… இனிமேல அங்க வா இங்க வான்னு கூப்பிட்ட கொலை வெறி ஆகிருவேன்… பார்த்தேல்ல உன் பின்னாடி சுத்தி சுத்தி… ஒரு வேலையும் முடிக்கலை நான்… முறைக்காத… இந்த பத்து நாளா உன்னோட சுத்தற வேலையைத் தவிர வேற ஒண்ணும் உருப்படியா பார்க்கலை நான்”


என படபடவென பேசிக்கொண்டிருந்தவளை…


‘ஷ்ஷ்ஷ்ஷ் “ என்று அவள் உதட்டில் கை வைத்து அவள் பேச்சை நிறுத்தியவன்….


”ஒழுங்கா படுத்து…. தூங்கு…” எனும் போதே


“எங்க… இதுல ஒருத்தவங்கதான் படுக்க முடியும்… நீங்க ரெஸ்ட் எடுங்க” கட்டிலின் மறு புறம் கிடந்த கோலத்தைப் பார்த்துச் சொல்ல…. இவனும் பார்த்தான்…


“நான் தூங்கலை… நீ தூங்கு…. அப்புறம்… ” என்று கண்சிமிட்டியவன்… அவள் அருகில் வர… இவளும் அதற்கு சற்றும் பயப்படாமல்… சளைக்காமல் ’இப்போ என்ன’ என்பது போல் பார்வையை வீச…


“இந்த இடமே நமக்கு அதிகம்னு நிருபிக்க முடியும் என்னால…. ஆனால்… நேரமின்மையை முன்னிட்டு…” என்று மீண்டும் குறும்பாக கண் சிமிட்டியவன்


”ட்ரிப்பிள் ஆர் பட்டமே எனக்கு போதும்னு இப்போ விட்டு வைக்கிறேன்…. உன்னை” என்றவனிடம்


“ட்ரைலர் கூட காட்டலாம் புருசா” என்றாள் ஒன்றுமே தெரியாத அறியாத குழந்தை போல அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு… இதழில் சிரிப்பை அடக்கியபடி….


“ஒஹ்ஹ்ஹோ…. இவ்வளவு தெளிவு வரக் கூடாதே… என் பொண்டாட்டிக்கு..“ என்றவன்… சிரித்தபடியே… அவளிடம் நெருங்க…


“சந்தியா தூங்கிட்டா” கண்களை அழுந்த மூடிக் கொள்ள… ராகவ் சிரித்தபடி …


“தூங்கு…. சந்தோஷ் கிட்ட பேசிட்டு வருகிறேன்….” என்று எழப் போக…. அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள்…


”இங்கயே இரு ரகு… என்னை விட்டுப் போகாத….” என்றவளிடம் மறுப்பேதும் சொல்லவில்லை…. அதற்கு மேல் அவனும் அவளை விட்டு போகவில்லை….


அவள் அருகில் அமர்ந்தபடி மொபைலை எடுத்து பார்க்க ஆரம்பிக்க… அவனையே பார்த்தபடி… அவனது கைகளைப் பிடித்தபடியே… நிம்மதியாக சந்தியா கண் உறங்க…. ராகவ் இப்போது மொபலை வைத்துவிட்டு அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.../* என் கை விரல்

உன் கை விரல் கேட்கின்றதே ....

உன் சுவாசங்கள் எனை தீண்டினால்

என் நாணங்கள் ஏன் தூக்குதோ

உன் வாசனை வரும் வேளையில்

என் யோசனை ஏன் மாறுதோ....*/


3,062 views1 comment

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது போல அவளை நடத்த ஆரம்பித்திருக்க கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவே

1 Comment


Isai Selvam
Isai Selvam
Jun 04, 2020

சந்தியா நடந்ததை எல்லாம் சரியாக சமாளித்து விட்டான் ராகவ்.இதுநாள் வரை இருந்த சங்கடத்தை தீர்த்துவிட்டான்.கணேசன் ஏதோ இந்த மட்டிலும் நடந்து கொண்டதே பெரிய விஷயம். மிரு மீண்டு வருவாளா?இனிதான் அபாயம் என அலாரம் அடிக்கின்றீர் க்ளே

Like
© 2020 by PraveenaNovels
bottom of page