அத்தியாயம் 44:
/*
இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு.?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு.!
பெண் நெஞ்சை
அன்பால் வென்றாய்.!
ஏ ராணி
அந்த இந்திராலோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாளொரு பூ வீதம்.!
உன் அன்பு அது போதும்.!!
தொடு தொடுவெனவே
வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
*/
காரை வெறித்தனமாக ஓட்டிக் கொண்டிருந்தாள் மிருணாளினி…. தாலி கட்டிய கணவனே என்றாலும்… அதிலும் காதலித்து அடம்பிடித்து அவனையே திருமணம் செய்திருந்தாலும்…. தன்னிடம் அவன் அத்துமீறியது அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை…. அதை நினைக்கும் போதே அவனை இவள் அறைந்ததும் ஞாபகத்துக்கு வர…. அவளையுமறியாமல் கண்களில் நீர் வரத் தொடங்கி இருந்தது…. தன் சுய அடையாளங்கள் எல்லாம் சந்தோஷ் முன் தோற்றுக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் தான் மிருணாளினி… கோபமா…வேதனையா பிரித்தறியா முடியா உணர்வு.. சந்தோஷமாக ஆரம்பித்த வாழ்வு… எப்படியெல்லாம் வாழ ஆசைப்பட்டோம் இருவரும்… நிராசையாகிப் போன நிஜங்களை மிருணாளினியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. மனதில் அழுந்திய வேதனையின் கனம் தாங்க முடியாமல்… கால்கள் ஆக்ஸிலேட்டரில் வேகமாகப் பதிய… காரின் வேகமோ கண் மண் தெரியாமல் எகிறிக் கொண்டிருந்தது… எப்படி அவள் தங்கள் கம்பெனிக்கு வந்து சேர்ந்தாளோ அது அவளுக்கே வெளிச்சம்…
மனைவி இப்படி இருக்க. கணவனுக்கோ பெரிய வருத்தமெல்லாம் இல்லை…. எத்தனை அறை வேண்டுமென்றாலும் தன்னவளிடம் வாங்கிக் கொள்ள அவன் தயாராகத்தான் இருந்தான்… ஆனால் தன்னோடு வாழ வந்தால் மட்டும் போதும் என்ற எண்ணங்களே ஓடிக்கொண்டிருக்க… தனக்குள்ளே ஒரு பிடிவாதக் கோட்டையைக் கட்டிக் கொண்டு அதில் இருந்து வெளிவராமல்… தன்னைத் தவிர்க்க நினைக்கும் அவளை…. எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டே ஓட்டி வந்தவனுக்கு சற்று முன் நடந்த நிகழ்வுகள் மனதினுள் சுழல…. மென்னகை அவன் இதழில் தவழ ஆரம்பித்து இருக்க… அவனது இருசக்கர வாகனமோ எஜமானனின் உணர்வுகளை படம் பிடித்துக் கொண்டதோ என்னவோ… சாலையின் வளைவு நெளிவுகளில் கூட ரிதம் மாறாமல்… வளைந்து நெளிந்து கொடுத்து சுகமான பயணமாக மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தது… அவனின் மனைவியைப் பற்றிய எண்ண ஓட்டங்களுக்கு தடை ஏற்படுத்தாமல்….
ராகவ்வும் சந்தியாவும் அந்த அறையை விட்டு… சந்தோஷ்-மிருணாளினியை தனியே விட்டு சென்றிருக்க…. சந்தோஷ், ராகவ்வுக்கு மனதினுள் நன்றிகள் பல கோடி சொன்னபடி… தன்னைப் பார்க்காமல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்தபடியே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவன்… இந்த சில நாட்களிலேயே…. முற்றிலும் களை இழந்து போயிருந்த அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு…. எந்த அளவுக்கு அவளை, அவளது நினைவுகளை தான் ஆக்கிரமித்து இருக்கிறோம் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது…. அதே நேரம் புரியாமல் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாளே என்ற ஆற்றாமை மனதினுள் வர…. தன்னையும் நினைத்துப் பார்த்தான்…. தான் மட்டும் எப்படி இருக்கிறோம்…. என்னைப் பார்த்தும் என் நிலையைப் பார்த்து, இவளுக்கு என் காதல் புரியவில்லையா… என் உணர்வுகள் புரியவில்லையா… தன்னை மன்னித்து தன்னோடு வர மாட்டாளா என்று ஏங்க ஆரம்பித்தது மனம்…. இருந்தும் தன் மனத் தாங்கல்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு… அமர்ந்திருந்தவன் எழுந்து… மிருணாளினியின் முன் முழங்காலிட்டு அமர்ந்தவன்…. அவளது கைகளைப் பிடித்தபடி…
“ ‘இனி’ என்னைப் பாரும்மா.... என்னை மன்னிக்கவே உனக்கு மனசு இல்லையா…. ஒரு துளி காதல் கூட என் மேல இல்லையா… அது கூட என்னை ஏத்துக்க சொல்லலையாடி” என்றவன் வார்த்தைகளில் பரிதவிப்பும்…. கெஞ்சலும் மட்டுமே இருந்தது… கூடவே இத்தனை நாட்களாக அவளை பார்க்காத ஏக்கங்களும் அவன் வார்த்தைளில் எதிரொலிக்க…
“கடலளவு காதல் இருக்கு சந்தோஷ் உன்மேல…. ஆனால் என்னோட நிலை என்ன தெரியுமா…. கடலுக்கு நடுவுல நின்னுட்டு குடிக்க தண்ணீர்க்கு அல்லாட்ற நிலைமை… சந்தோஷ்….“ சொன்னபோதே அவள் கன்னங்களில் நீர் வழிய ஆரம்பித்து இருந்தது…
வேதனையோடு பார்த்தான் தன்னவளை….
“ஏண்டி இவ்வளவு கஷ்டப்படுத்திக்கிற உன்னை…” என்றுதான் நினைக்கத் தோன்றியது அவனுக்கு….
தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைக்க கூட நினைக்காமல் பேச ஆரம்பித்தாள்….
“அன்னைக்கு ஒரு வேகத்தில் உங்க மேல கோபப்பட்டு வந்துட்டேன்…. நிதானமா யோசிக்க சொன்னாங்க எங்க வீட்ல… ஹ்ம்ம்ம்… யோசிக்கும் போதுதான் தெரிந்தது…. உங்க வாழ்க்கையையும் என்னோட பிடிவாதத்தினால அழிச்சுட்டு இருக்கேன்னு தோணுச்சு” என்று நிறுத்த
மனைவியின் வார்த்தைகளில்… தங்கள் வாழ்க்கைக்கான சிறு ஒளி தெரிய…. அதில் சந்தோஷின் முகம் இலேசாக மலர ஆரம்பித்து இருந்தது…
“தெரியுதுதானடி… அப்புறம் ஏன் ’இனி’ …. “ என்று தன் தன் கைக்குள் வைத்திருந்த அவள் கைகளை இன்னும் தனக்குள் கொண்டு வர….
அவளோ…. தன் கரங்களை அவனிடமிருந்து விடுவித்தபடி….
“யெஸ்…. நான் யாரு உங்கள வாழ்க்கையை அழிக்க… அதுதான் ஒரேயடியா நான் உங்கள விட்டு விலக முடிவு பண்ணிட்டேன் சந்தோஷ்…. நான் எப்போதுமே உங்க கூட வாழ முடியாது… உங்க பழைய விசயங்களை என்னால மறக்க முடியாது… என்னோட இத்தனை வருச வாழ்க்கை முறை என்னை விட மாட்டேங்குது…. அதுக்காக உங்களையும் கஷ்ட்டப்படுத்த முடியாது… எனக்கு அதுக்கான எந்த ரைட்ஸும் கிடையாது... நீங்க… உங்களப் புரிஞ்சுக்கிற ஒரு பொண்ண ரீ மேரேஜ் பண்ணிட்டு… உங்க பாதையைப் பார்த்துட்டு போங்க….” எனும் போதே அது கொடுத்த வலி அவள் முகத்தில் நன்றாகவேத் தெரிய…
சந்தோஷ் இப்போது உணர்ந்தான்… சற்று முன் இவள் வார்த்தைகளினால் தோன்றிய ஒளி… அது இவர்கள் வாழ்க்கைப் பாதைக்கான வழி காட்டும் ஒளி அல்ல… வாழ்க்கையையே மொத்தமாக அழிக்கும் காட்டுத்தீ… என்பது…. கைகளில் இறுக்கம் கூட… அவனுக்குள் பொறுமையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தான் சந்தோஷ்…
இருந்தும்… மிருணாளினியிடம் மிக மிக நிதானமாக பேச ஆரம்பித்தான்… மனதின் அழுத்தம் எந்த அளவுக்கு இருந்ததோ… அதற்கு எதிர்மாறாக அவன் குரல் நிறுத்தி நிதானமாக வெளி வர ஆரம்பித்து இருந்தது…
“ஓகே ’இனி’ … நீ சொல்றெதெல்லாம் சரிதான்…. என்னை என்னோட பாதையை பார்த்துக்கச் சொல்ற…. அதுக்காக டைவர்ஸ் கொடுக்கிற… அதெல்லாம் சரி… நீ உனக்கேற்ற மாதிரி… லைக்… ராமன்… கேட்டகரில ஒருத்தன பார்த்து உன்னோட வாழ்க்கையை மாத்திகிறேன்னு சொல்லு… இப்போதே நான் உனக்கு டைவர்ஸ் கொடுக்க தயார்…”
கண்டிப்பாக மிருணாளினியால் அது முடியாது என்பது அவனுக்குத் தெரியாதா என்ன… அந்த எண்ணம் தந்த தீவிரம்… அவனை இப்படி சொல்ல வைக்க…
அவனின் எண்ணம் உணர்ந்தவளாக
“ஏன் சந்தோஷ்… நான் அப்படி பண்ண மாட்டேன்னு நினைக்கிறீங்களா” தடாலடியாக மிருணாளினி கேட்க…
இவனுக்குள்ளோ…. இன்னும் இறுக்கம் அதிகரிக்க… இன்னும் இன்னும் நிதானம் வார்த்தைகளில்
”பண்ண மாட்டேனு சொல்லலயே ‘இனி’… பண்ணிக்கனும்தான் சொல்றேன்…. பண்ணிக்க… மியுச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங்ல பிரிஞ்சுடலாம்னு சொல்றேன்… யூ ஆர் சோ ப்ரிலியண்ட்னு எனக்குத் தெரியுமே” இவனும் அவன் பிடியிலேயே இருந்தான்…
அவனின் நிதானமான வார்த்தைகள்… அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு… இருந்தும்… அவன் வார்த்தைகளில் இருந்த அலட்சியம் புரிய…
‘நக்கலாகச் சொல்கிறானா’ நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்…
“அஃப்கோர்ஸ்…. கண்டிப்பா ரீ மேரேஜ் பண்ணுவேன்… உன்னையவே நினச்சுட்டு வாழ நான் ஒண்ணும் அந்தக் காலப் பொண்ணு இல்லை… எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை மறுபடியும் வந்தா நான் ஏத்துக்குவேன்” என்றாள் பொறுமையை எல்லாம் கடந்தவளாக ...
“ஒஹோ… நல்லது… ஒக்கே… ஆனால் என் கண்ணப் பார்த்து சொல்லுடி…. இந்த நல்ல வாழ்க்கை அது இதுலாம் பாலிஷான வார்த்தைகள்ளாம் வரக் கூடாது… ஜஸ்ட்… ஐ நீட் கிறிஸ்டல் கிளியர் வேர்ட்... இன்னொருத்தன உன்னால நினைக்க முடியும்னு”
முன்னால் அமர்ந்திருந்தவளின் கரங்களை இழுத்து தன் அருகே கொண்டு வந்தவன்…. அவள் உயரத்திற்கு நன்றாக நிமிர்ந்தான்… அவளைப் பதில் சொல்லுமாறு நிர்பந்திக்க…
ஒரு முறை கண்களை மூடி நிதானித்து பெருமூச்சை இழுத்து விட்டவள்… குனிந்து அவன் கண்களைப் பார்த்தபடியே
“நினைக்க முடியும் சந்தோஷ்…. உன்னை விட பெட்டரா எனக்கு கிடைப்பான்” என்று மூச்சை இழுத்து சொல்லி முடிக்க….
சந்தோஷ்க்கு கோப ஊற்று கொந்தளித்ததுதான்… அது அவன் நாடி நரம்பெங்கும் தன் இருப்பைக் காட்ட ஆரம்பிக்க…. தன்னையே அடக்கிக் கொண்டான்… அடக்கிய கோபம்… மொத்தமும் கண்களில் வந்து விட்டதோ… சிவந்திருந்த கண்கள் அதைக் காட்ட… இருந்தும்… கண்கள் சொன்னதை வார்த்தைகளில் காட்டும் நேரம் இது இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டவன்…
“குட்….100% என் மிருணாளினி தான் என் முன்னாடி நிற்கிறவ… நீ இப்போ பேசுறதைப் பார்க்கும் போது… எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா… ஏன்னா மிருணாளினி… டாட்டர் ஆஃப் சுகுமார்… எப்போதும் உண்மை பேசுவாள்…. நேர்மையா இருப்பா ஆனால்…. இது இது இப்போ என் முன்னால நின்னுட்டு இருக்கிறவ… வைஃப் ஆஃப் சந்தோஷ்… ஏன்னா அவ வாய் பொய் சொல்லுதே.. சொன்ன பொய்யை ஏத்துக்க முடியாம அவ கண்ணு தவிக்குதே…. சூப்பர் மிருணா… ” என்றவன் எள்ளி நகையாட… திகைப்பும் கோபமும்… மிருணாளினியின் கண்களில் இப்போது…
அதைப் பார்த்தபடியே தொடர்ந்தான்…
”என் காதலியா இருக்கிற வரை… சாரி சாரி…. சுகுமார் யசோதா பொண்ணா இருந்த வரை... நேர்மையா இருந்தியே மிருணா,... சந்தோஷோட பொண்டாட்டிய என்னைக்கு மாறினியோ அன்னைக்கே அதெல்லாம் போயிருச்சா” இதழ் வளைந்த ஏளனத்தோடு சொன்னவனை அவள் முறைக்க….
அதற்கு மேல் அவனும்… வாதாடவில்லை… அதுதான் நிரூபித்து விட்டானே… அவள் யாரென்று… இனி வழக்கு முடிந்து விட்டது அவனைப் பொறுத்தவரை… தீர்ப்பு மட்டுமே… அவளுக்கு தண்டனையா… விடுதலையா… தனக்காக வாதாடியவனே தீர்ப்பையும் எழுதிக் கொண்டான்…
”என்னடி முறைக்கிற…” என்று எழுந்தவன் அதே வேகத்தில் அவளையும் எழுப்பி… தன்னோடு இழுத்து அணைக்க… அவளோ திமிற ஆரம்பிக்க… அதையெல்லாம் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல்…
”உன் மனசு கண்ணு எல்லாம்… அப்ரூவர் ஆகிருச்சு மிருணா… இந்த வாய் மட்டும் தான் பிடிவாதமா இருக்கு… இந்த கண்ணு சொல்லிருச்சு மிருணா… என் மிருணா தவிக்கிறதுக்கு காரணம்… அவ வாய்தான்னு… எல்லாத்துக்கும் காரணம் அதிலருந்து வெளிவருகிற வார்த்தைகள் தான் காரணம்னு... என் பொண்டாட்டியவே பொய் சொல்லவைத்த இதை என்ன பண்ணலாம்… என்ன தண்டனை கொடுக்கலாம்”… வார்த்தைகளில் தான் தண்டனை என்றெல்லாம்… அவன் பார்வையோ… ரசனையாக இதழ்களில் பதிந்திருக்க…
மிருணாளியின் இதழ்களோ ’தண்டனையா எனக்கா…’ ஏளனமாக வளைய… அந்த ஏளனம் இவனை இன்னும் அதிகமாக உசுப்பேற்ற… அதற்கான வெகுமதியை அவள் திருமதிக்குக் கொடுக்க ஆரம்பித்திருந்தான் அவள் திருவாளன்…
கொஞ்சம் கூட அவளுக்கு யோசிக்க இடம் கொடுக்காமல் சட்டென்று இழுத்து இதழ் பதித்தவன்…. அவனை விட்டு விலக இடம் கொடுக்காமல் சிறை வைத்து…. சில பல நிமிடங்கள் கழித்து விட… அதே வேகத்தில் மிருணாளினியும் அவன் கன்னத்தில் தன் பதிவைப் பதித்திருக்க… இவனும் விடவில்லை இப்போது அவள் கரங்களையும் சிறை எடுத்திருக்க… மீண்டும் மீண்டும் அவளை இதழ் சிறை எடுக்க ஆரம்பிக்க… இருவருக்குமான முத்த யுத்த களமாகி மாறி இருந்தது … ராகவ்வின் அலுவலக அறை…
அவளை வென்ற பின் தான்... விட்டான்… அப்போதும் அவள் கைச்சிறை இவனிடமிருந்து விடுதலை ஆகாமல் இருக்க…
”நீ என்ன பண்ணினாலும்… அம்மு குட்டிம்மான்னு உன் அண்ணனும் அப்பாவும் கொஞ்சிட்டு இருக்கலாம்…. இனி நீ சந்தோஷ் பொண்டாட்டி…. என்னோட கொஞ்சல்லாம் இப்படித்தான் இருக்கும்…. அதுக்கு தயாராகிக்கோ” என்று கைகளை சட்டென்று விட…
அவன் விட்ட வேகத்தில்… தடுமாறி நின்றவள்… தன்னை நிலைப்படுத்த முடியாமல் நின்று பின் சமாளித்து வேதனை தாங்கிய இறுகிய முகமாய் சந்தோஷை நோக்க… அவனோ கொஞ்சம் கூட தான் செய்ததிற்கு வருத்தம் இல்லாமல் நின்று கொண்டிருந்தான்… அவளைப் பார்த்தபடியே…
“ச்ச்சீ.. நீ மனுசன்னு நெனச்சு உன்கிட்ட பேச வந்தேன் பாரு… காலம் காலமா பொண்ணுங்க கிட்ட உங்க வீரம் இப்படித்தானே “ என்ற போதே... அவள் வார்த்தைகளில் இவன் மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க ஆயத்தமாகி… அவளை நோக்கி குனிய…. அதே வேகத்தில் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர… விலக முடியாமல் அவளை மீண்டும் தனக்குள் கொண்டு வந்தவன்…
“மனுசன்னு நினைச்சு வந்தவ… கூடவே புருசன்னு நெனச்சு வந்திருக்கலாம்…” கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் அசட்டையாகச் சொன்னவன்… மீண்டும் மென்மையான இதழ் முத்தத்தை வன்மையாக உணர வைத்து விட்டு… அவளை விட… நிற்க முடியவில்லை அவளால்… இப்போது தன் கைகளால் தாங்கிப் பிடித்தவன் அவளைப் பார்க்க….
எந்த மாதிரியான உணர்வுகள் அவளுக்குள் இருந்தது அதைத் தேடிப் போக மிருணாளினிக்கு விருப்பமில்லை… விருப்போ வெறுப்போ… சந்தோஷிடமிருந்து தப்பிக்கவே இப்போது நினைத்தாள்…
தன்னைத் இறுகப்பிடித்துக் கொண்டிருந்த அவன் கைகளில் இருந்து வெளியே வந்தவள்… அதே வேகத்தில் அங்கிருந்தும் வெளியேற கதவை நோக்கிச் செல்ல…
“போடி போ… டைவர்ஸ் கிய்வர்ஸ்னு இன்னொரு தரம் என் காதில ஏதாவது வார்த்தை விழட்டும்… அப்போ இருக்கு உனக்கு” என்ற போதே…. மிருணாளினி வெளியேறி இருந்தாள்…
….
நினைத்தபடியே வந்தவனுக்கு…. தன்னவளுக்கு தான் கொடுத்த முதல் இதழ் முத்தம் அவனுக்குள் பரவசத்தை ஏற்படுத்தத்தான் செய்தது… இருந்தும் நிச்சயதார்த்தம் அன்று மிருணாளினி அவள் இதழ்களால்… தன் இதழ்ளை வருடிய நிகழ்வும் வர… அந்த நெகிழ்வை இன்று மனம் எதிர்பார்க்க…
“ம்க்கும்.. இது ஒண்ணுதான் கொறச்சல் உனக்குடா… இப்போதைக்கு அவ கன்னத்துல தடவிக் கொடுத்தாளே அதை வச்சுக்கோ” என்ற போதே அவன் மனசாட்சி அலறி அடித்து அவன் முன் நின்றது…
“அடேய் சந்தோஷ்… அவ அறஞ்சாடா… “ மனசாட்சி கதறிய கதறல்களை எல்லாம் காலடியில் போட்டு நசுக்கியவனாக
”என் ‘இனி’ கை என் மேல பட்ருச்சு… அவ்வளவுதான் அது போது எனக்கு…. தன்னையுமறியாமல் அவன் கன்னங்களை தடவி பார்க்க நினைத்தான் தான்…..
ஹெல்மெட் அணிந்திருக்க…. அது முடியாமல் போக தனக்குள்ளே சலித்துக் கொண்டவன்…. உனக்கு மட்டும் தான் ’இனி’ என்னை அடிக்கவும் அணைக்கவும் உரிமை…. என்று பிதற்றிக் கொண்டவனுக்கு…. தன் மிருணா விவாகரத்து பற்றி யோசிக்க மாட்டாள் என்றேதான் தோன்றியது… மிருணாளினி அடங்குவாளா…. இவர்களின் நிலை இப்படி அந்தரத்தில் ஆட்டம் கொண்டிருக்க…
சந்தியா ராகவ் நிலையோ…
இவர்களுக்கு எதிர்மாறாக குதூகலத்துடனும்… கனவுகளுடனும் புதுமணத் தம்பதிகள் ஒன்றாக இருந்தால் கூட இப்படி இருந்திருப்பார்களா தெரியவில்லை… இருவருக்கும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டு இருப்பதே பேரின்பமாக இருக்க…. அவ்வப்போது பார்க்கும் கண நிமிடங்களிலும் ராகவ் சந்தியாவை காதலில் மூழ்கடித்துக் கொண்டிருக்க…. சந்தியா… தன் அலுவலகத்தில் இப்போதும் அவன் நினைவுகளில் தான் இருந்தாள்…
சந்தோஷின் அதிரடியில் ராகவ் கோபத்தில் தகித்துக் கொண்டுதான் இருந்தான்…
திவாகருக்கோ… என்ன சொல்வதென்றே தெரியவில்லை… ராகவ் சந்தோஷின் சட்டையைப் பிடித்த போது… இருவரும் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு நின்ற போது… திக் திக் நிமிடங்கள் தான் திவாகருக்கு…
ஆனால் இதோ ஒருவன் வெளியேறி விட்டான்…கோபத்தை கொட்டி விட்டு… இங்கு நின்று கொண்டிருப்பவனோ… உக்கிர மூர்த்தியாக மாறி கோபத்தீயை கண்களில் கொண்டு வந்திருக்க…
திவாகருக்கு பக்கென்று இருந்தது… அவனது கோபத்தை அவன் அருகில் இருக்கும் சந்தியாவிடம் காட்டி விடப் போகிறானோ… என்ன சொல்லி இவனை மாற்றுவது என்று திவாகர் யோசித்தபடியே சந்தியாவைப் பார்க்க… அவளோ அதற்கு மேல்
மொத்த முகமும் இருளடைந்தது போல் இருக்க… இப்போது ராகவ்வை அமைதிப்படுத்துவதை விட சந்தியாவுக்குதான் ஆறுதல் மொழிகள் தேவை என மனம் எடுத்துக் கொடுக்க… வேகமாக சந்தியாவை நோக்கி காலடி எடுத்து வைக்க… அப்போது
“ஹேய் சகி… ஒண்ணுமில்லைடா…. நீ ஏன் இவ்வளவு ஃபீல் பண்ற…. சந்தோஷ் கிட்ட நான் பேசறேன்… சால்வ் பண்ணடலாம் எல்லாத்தையும்மா…” என்ற போதே… திகைத்து நின்றது திவாகர்தான்
”இங்க ஒரு ரகு ரகுன்னு ஒரு மானஸ்தான் இருந்தானே” என்று தான் தேட வேண்டியிருந்தது திவாகருக்கு…
அந்த மானஸ்தன் தான்….சந்தியாவின் முக மாறுதலில் சட்டென்று தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்து…. நிமிடத்தில் முகத்தை மாற்றியவனாகி தன்னவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தானே கிடைப்பானா…
சற்று முன் கோபத்தில் ராகவ்வின் கண் சிவந்திருந்ததென்ன… இப்போது சந்தியாவை சமாதானப்படுத்தும் அவன் தொணி என்ன…
’இனி’ ’இனி’ன்னு அவன் கதறுகிறான்… சகி சகின்னு இவன் உருகுகிறான்… கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது திவாகருக்குத்தான் இப்போது…
ஆனாலும் திவாகர் மனமும் நிம்மதியில் சமாதானமடைந்திருந்தது ராகவ் வார்த்தைகளிலும் செயல்களிலும்…
திவாகருக்கு நன்றாகப் புரிந்தது… சந்தியா அவனை அணைக்கும் பனித்துளி என்பது
திவாகர் இருக்கிறான் என்றெல்லாம் ராகவ் நினைக்கவில்லை… சாம, தான, பேத, தண்டம் முறைகளில் முதலிரண்டை மட்டும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு தன்னவளை சமாதானப்படுத்த ஆரம்பித்திருந்தான்..
அவள் முகம் தெளியும் வரை… கெஞ்சி கொஞ்சியும்… கொஞ்சி கெஞ்சியும்…. ஒரு வழியாக… சந்தியாவின் முகத்தில் மலர்ச்சியைக் கொண்டு வர… அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது அவனுக்கு….
அதன் பின்தான்… ராகவ்வுக்கும் … திவாகர் ஞாபகம் வந்திருக்கும் போல… ஞாபகம் வந்ததோ இல்லையோ… இப்போது திவாகரின் உதவி தேவைப்பட்டது ராகவ்வுக்கு… அவ்வளவே…
”திவாண்ணா… ” மரியாதையும் பணிவுமாக வார்த்தைகள் வெளிவர…
“சொல்லுடா… உன் பொண்டாட்டிய… அவ ஆஃபிஸ்ல கொண்டு போய் விடனுமா… இல்ல இடத்தைக் காலி பண்ணனுமா.. உன் பொண்டாட்டிய சமாதானப்படுத்த வேறு ஏதும் இன்னும் பாக்கி இருக்கா” நக்கல் தெறித்தது திவாகரின் வார்த்தைகளில்
சந்தியாவுக்கு… திவாகரின் கிண்டலில்… வெட்கம் தான் வந்து தொலைத்தது… இருந்தும்…
”திவா மாமா” என்று தன் மாமனை முறைத்தபடியே… சிணுங்கியவளை… மகிழ்ச்சியாக திவாகர் அணைத்துக் கொள்ள….
“ம்க்கும்” அந்தக் காட்சியைப் பார்த்த ராகவ்வோ செறும…
திவாகரோ… சந்தியாவை அணைத்தபடி இருந்த கையை எடுக்காமல்….
“பக்கத்தில தான வாட்டர் பாட்டில் இருக்கு… எடுத்து ஊத்திக்கோ… அப்படியும் எரிஞ்சதுனா… வாட்டர் டேங்கயே முழுங்கிரு… ஐ திங்க் கரெக்ட் ஆப்சன் ரெண்டாவதுதான்…. இப்போதைக்கு உனக்கு... ”
மொத்தமாக ராகவ்வை டேமேஜ் செய்ய…
திவாகருடன் சேர்ந்தால் சந்தியா வாயை அடக்குவாளா என்ன…
“திவா மாமா.. இந்த எரிச்சலுக்கு… மோகானாக்காகிட்ட கேட்டு வேணும்னா… பிரிஸ்கிரிப்ஸன் வாங்கிக் கொடுக்கலாமா” சொன்ன போதே ராகவ்விடம் முறைப்பையும் வாங்கிக் கொண்டதை சொல்லவும் வேண்டுமா…
அதற்கு மேலும் அவள் நிற்பாளா என்ன…. கண்களாலேயே விடைபெற்று போக… ராகவ்வும் அவளுக்கு கண்களினாலேயே பதில் சொல்லி அனுப்பி வைத்தவன்
”போடி போ… மாமனப் பார்த்ததும்.. இந்த ஆட்டமா…” என்று நினைத்த போதே … அவனது அலுவலகம் பணிகள் ஞாபகத்துக்கு வர…
”கடவுளே… ஹால்ஃப் அன் ஹவர்ல மீட்டிங் இருக்கு… இப்போதே டைம் ஆகிருச்சு.. மிருணா-சந்தோஷ் பண்ணின டென்சன்ல… ஒண்ணும் பிரிப்பேர் கூட பண்ணலை” என்று மனச்சாட்சியே இல்லாமல் மிருணா-சந்தோஷ் மேல் மொத்த பழியையும் தூக்கிப் போட்டபடி கிளம்ப ஆயத்தமாகினான்…
திவாகர்… சந்தியாவை அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு… நேராக சந்தோஷைப் பார்க்கத்தான் போனான்… ஏனென்றால் சந்தோஷிடம் பேச திவாகருக்கு பல விசயங்கள் இருந்தது… சந்தோஷைப் பற்றி… அவன் வாழ்க்கையைப் பற்றி… இதையெல்லாம் விட ராகவ் சந்தியா பற்றி அவனிடம் பலவற்றை விளக்க வேண்டியிருந்தது… அதனாலேயே சந்தோஷை சந்திக்கச் சென்றான்
….
ராகவ்தான் தன்னை விட வருவான் என்று சந்தியா எதிர்பார்த்திருந்தாள்…
முக்கியமான மீட்டிங் என்று திவாகருடன் அனுப்பி வைத்தவன்… கூடுதல் தகவலாக… மாலை 5 மணி வரை பேச முடியாது என்று வேறு சொல்லி விட்டு… முடிந்தால் நாளை சந்திக்கலாம் என்றும் வேறு சொல்லி விட்டான்…
நாளை சந்தியா அலுவலகம் வர மாட்டாள்…. நாளை மறுதினம் அதிகாலையிலேயே இவளுக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருக்க… டெல்லிக்கு கிளம்ப ஆயத்தமாக நாளை முழு தினத்தையும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதால் நாளையிலிருந்து விடுமுறை…. டெல்லி சென்றதும் நிரஞ்சனா வீட்டிற்கு போய் அவள் தங்குவதற்கான அறையை தயார் செய்ய டெல்லியில் ஒரு நாள் விடுமுறை என நாளையில் இருந்து இரண்டு நாள் விடுமுறை… அதன் பிறகு தான் டெல்லி அலுவலகத்தில் ஆன் போர்ட் செய்ய வேண்டும்….
மானிட்டரை வெறித்துப் பார்த்தபடி… அமர்ந்திருந்தவளுக்கு….. இன்று ராகவ்வை சந்திப்பது முடியாத காரியம் என்பது போல் தோன்ற… அந்த நினைவு தோன்றிய பிறகு அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை… அட்லீஸ்ட் கால் செய்யலாம்… இல்லை மெஸேஜ் செய்யலாம் என்றால் அதற்கும் வழியில்லை…. அவன் மீட்டிங்கில் இருப்பேன் என்று சொல்லி விட்டான்….
இன்னொன்றும் அவளுக்கு உறுத்தியது… புரியாத கவலை ஏதோ ஒன்று அவளுக்குள் சுழன்று கொண்டே இருந்தது… ஏனென்று தெரியாத கவலை… அதுமட்டுமில்லாமல்… சந்தோஷ் மிருணாளினி கவலை வேறு… உண்மையாக சொல்லப் போனால்… இனிமேல் தான் ராகவ்வுக்கும் தனக்கும் பிரச்சனைகள் அதிகம் வரும் போல என்று தோன்றியது… இன்றுதான் அவள் ராகவ் முகத்தை பார்த்தாளே… இவளை இவள் முகத்தைப் பார்த்த உடனே கோபத்தை அடக்கி விட்டான்தான்… ஆனால் எத்தனை முறை அடக்குவான்… சந்தோஷ் மிருணாளினி விசயம் இப்படியே போனால்… ஒருநாள் ராகவ் வெடிக்கப் போவது திண்ணம்… ஆனால் அதை இவளால் தாங்க முடியுமா… அண்ணனா கணவனா என்று மையக் கோட்டில் ஒற்றைக் காலோடு தடுமாறி நிற்கும் காலத்தை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை… ஒன்று மட்டும் தெரிந்தது… டெல்லி போய் விட்டு வந்த பின் தான் இந்த பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து ஆடும் என்று தோன்ற… எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை… தன் மாமனாரிடம் பேச நினைத்திருந்தாள் தான்… அதற்கும் தடா விதித்திருந்தான் ராகவ்… அவனை மீறி பேசவும் முடியவில்லை…
ஏன் ராகவ் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டுகிறாள் என்றே தெரியவில்லை… அவன் ஆட்டுவிக்கும் பொம்மையாக தாம் மாறிக் கொண்டிருக்கிறோமோ.. முதல் முறையாகத் தோன்றியது சந்தியாவுக்கு… அந்த அளவுக்கு மயங்கிக் கிடக்கிறோமா…
சகி என்னும் தன் ரகுவின் ‘சர்க்கரைக் காதல்’… இனித்தது அவளுக்கு… தித்திக்கிறது… அந்த தித்திப்பு வேண்டும் என மனம் இன்னும் அதை நோக்கியே செல்கிறது… அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும் எனும் போது… சர்க்கரை எம்மாத்திரம்… பார்க்கும் போதெல்லாம்.. காதல்… காதல் மட்டுமே… மற்ற உணர்வுகளை அடக்கி… காதலை மட்டும் காட்ட வேண்டும்… காதல் மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதும் கூட வேதனையாக இருந்தது சந்தியாவுக்கு….
ராகவ்க்கும் தனக்குமான பந்தம் என்பது இந்த காதல் பறிமாற்றம் மட்டும் தானா… என்ன எதிர்பார்க்கின்றாள் அவனிடம்… சந்தியாவுக்கே தெரியவில்லை… பார்வையிலும்… செயலிலும்… பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்… தன் காதலைக் காட்டுகிறவனிடம்… இன்னும் என்ன எதிர்பார்க்கின்றாள்… புரியவில்லை அவளுக்கு…
காலையில் அவன் முகம் பார்த்து எழ வேண்டும்… இவளை எழ விடாமல் அவன் பிடிக்கும் பிடிவாதம் வேண்டும்.. அதை மறுக்கும் இவளிடம் விடாபிடியாக நிறைவேற்றும் கணவன் முகம் பார்க்க வேண்டும்… அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பும்போது… நடக்கும் சூடான விவாதங்கள் வேண்டும்… அவன் நினைவுகளை வீட்டிலேயே விட்டு விட்டு அலுவலக வேலையில் ஆழ்ந்து அவனுக்கு போன் செய்ய மறந்து அதற்காக வாங்கிக் கட்டிக் கொள்ளும் கணவன் கோபம் வேண்டும்… இவள் சமைக்கும் போது உதவி செய்கிறேன் பேர்வழி என்று செல்லக் கொஞ்சல்கள்…. வேலை பார்க்க விடாமல் இடையிடையே செய்யும் செல்ல சில்மிஷங்கள்….நாளின் முடிவில்… இரவின் இருளில் தன்னவனின் தாப ரகசியங்களை கண்டுபிடித்து அதை உடைக்கும் சூட்சுமங்களை அவனிடமே கற்றுக் கொண்டு… அவனை வென்று அவனிடமே சரணடந்து அவன் மார்பில் துஞ்சுவதோடு அந்த நாள் முடிய வேண்டும்… என மனம் ஏங்கித் தவித்தது…. சொல்லப்போனால் இதெல்லாம் சாதாரண ஆசைகள்… இதை எல்லாமே கொடுக்க அவனும் தயாராக இருக்கின்றான்… இவளுமே… ஆனாலும்… ஏன் இந்தப் பிரிவு… காதல் காதல் காதல் மட்டுமே… என பார்க்கும் போதெல்லாம் காதலை மட்டும் கொடுக்கும் பிரிவு இனிக்காமல் ஏங்க வைத்தது… இன்னும் இன்னும் ராகவ்விடமே போய் நின்றது…. பெருங்காதலாக
தன்னை இந்த நிலைக்கு மாற்றிவிட்டானே என்று ராகவ் மேல் கோபம் வேறு வந்து தொலைக்க… அவன் சொன்ன வார்த்தையை மீறி ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகம் வந்திருந்தது சந்தியாவுக்குள்…. எல்லாம் காதல் படுத்தும் பாடு… இங்கு யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை… விலகி நின்றது மனசாட்சி கூட…
”போன் செய்ய வேண்டாம்… மெஸேஜ் செய்ய வேண்டாம்” என்று ராகவ் கண்டிப்புடன் கூறியிருந்தது ஞாபகம் வர… மீற வேண்டும்… அவனிடம் திட்டு வாங்க வேண்டும் என்று வேண்டும் என்றே செய்தாள்…
இவள் அலம்பல்களை எல்லாம் பார்த்த காலதேவனுக்கோ… இவளை இப்போதே டெல்லிக்கு அனுப்பி விடலாமோ… என்று யோசனை தான் வந்திருந்தது…
கால தேவனுக்குக்கு கூட கடுப்பை காட்டிக் கொண்டு இருந்தாளோ சந்தியா….
காலம் செய்யப் போகும் கணக்குகள் அறியாமல்…
தன்னவனை டென்சன் ஏற்றிப் பார்க்க வேண்டும்… அது மட்டுமே இப்போதைய அவளின் குறிக்கோளாக இருக்க… சில பல மெசேஜ்களை எல்லா மெஸஞ்சர் வழியாகவும் அனுப்பியவள்… ஹப்பா… அவன் வார்த்தையை மீறி செய்து விட்டோம்… என்று உள்ளுக்குள் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவள்… அவனை தொல்லை படுத்திய திருப்தியில்… இப்போது தனது வேலையைப் பார்க்க ஆரம்பிக்க... இன்னும் எதுவோ குறைவாக இருக்க….
”திவா மாமாக்கு போன் செய்து திட்டனும்…. இன்னைக்கே உன்னைக் கூட்டிட்டு போவான்மானு சொன்னார்ல… அவருக்கு இருக்கு…” என்று நினைத்தவள்….
திவாகருக்கும் போன் செய்து அவனையும் திட்டி வைக்க… இப்போது இன்னும் கொஞ்சம் திருப்தியாக இருந்தது…. ஆனாலும் ராகவ்வை நோக்கி அலைபாய்ந்த மனதை அடக்கும் வழி தெரியவில்லை…. திரும்பும் திசை எங்கும் அவன் பிம்பமே…. அவளுக்கே இப்போது பயம் ஆகி விட்டிருந்தது….. இந்த அளவுக்கு ரகுவை ஏன் தேடுகிறோம் என்று…. அவனுக்கும் இதே போல் இருக்குமா… இதே போல் தன்னைத் தேடுவானா… ரகுவோடு சேர்ந்து இருந்திருந்தால் இந்த மாதிரி அவனை தேடி இருக்க மாட்டேனோ… அவனோடு, அவன் அருகில் இல்லாமல் இருப்பதால் தான் இந்த அளவு பைத்தியம் ஆகி விட்டேனா…
’என்னது பைத்தியமா…. கடவுளே….’ தலையில் கை வைத்து படுத்து விட்டாள் சந்தியா… தன் எண்ணப் போக்கு சென்ற திசையை சிறிது நேரம் மாற்ற வேண்டும் என்று… நிரஞ்சனாவுக்கு போன் செய்தாள்… தான் நாளை வரப் போகும் விசயத்தை சொல்லி விட்டு அவளது அன்னையின் உடல் நிலையையும் விசாரிக்க… நிரஞ்சனாவின் அன்னை… வீட்டிற்கு வந்து விட்ட தகவலை நிரஞ்சனா சொல்லியிருந்தாள்…
நிரஞ்சனாவுக்கும் பேசி ஆகியாயிற்று….
சந்தியா மனம் ஏனோ இன்னும் அலைப்புறுதலாகவே இருந்தது… மனம் அமைதியடையவே மறுத்திருந்தது… இன்று ராகவ்வை பார்க்க முடியாதோ… இருக்கும் 48 மணி நேரத்தில் அவனைப் பார்க்கும் இரண்டு மணி நேரமும் கிடைக்காமல் போய் விடுமோ… அந்த நினைவே அவளை அலைகழிக்க… எத்தனை மணி நேரம் என்றாலும் அவனைப் பார்க்காமல் இன்று வீட்டுக்கு போக கூடாது என்று முடிவை தனக்குள் எடுத்துக் கொண்டாள்… அதை உறுதியும் செய்துகொண்டாள்…
முடிவு எடுத்த பின்…. இப்போது மனம் நிம்மதி ஆகி இருந்தது
அதே நிம்மதியில்… வேலைகளில் மூழ்கியவள்… முக்கியமான பெரிதான வேலைகள் எதுவுமில்லை என்பதால்… நிதானமாகவேதான் பார்த்துக் கொண்டிருந்தாள்… கிட்டத்தட்ட… எல்லாவற்றையும் முடித்தும் வைத்திருந்தாள்… கவனத்தை திசை திருப்பி எப்படி இருந்தும் அவள் முகம் கணவன் நினைவால் வாடித்தான் போய் இருந்தது…
அப்போது… மொபைல் ஒளிர… எடுத்துப் பார்த்தவளின் முகத்தில் அப்படி ஒரு ஒளிப் பிரவாகம்… ராகவ் நினைவால் வாடி வதங்கி இருந்த சந்தியாவின் முகத்தில் இப்போது உற்சாக வெள்ளம்…
ராகவ் என்று நினைத்தால் அதுதான் இல்லை… பின் வேறு யாராக இருக்க முடியும்… அவளது ஆருயிர் உடன்பிறவா சகோதரியின் அழைப்பில் தான் அம்மணிக்கு இவ்வளவு உற்சாகம்… இந்த உற்சாகத்தை மட்டும் அவள் நாயகன் கண்டிருக்க வேண்டும்… தப்பித்தாள் சந்தியா…
“ஹலோ புதுப்பொண்ணு எப்படிடி இருக்க…. போனையே காணோம்…” என்ற போதே….
“காது….” என்று இவள் துள்ளிக் குதிக்காத குறைதான்
“காது எப்டி இருக்க… பேச முடியுதா உன்னால… பெரியம்மா கிட்டயும் முரளி மாமாகிட்டயும் தான் உன்னை விசாரிச்சுட்டு இருந்தேன்… இப்போ நல்லா இருக்கியா… மாமா பாவம் காது… ரொம்ப ஃபீல் பண்ணினாரு… விட்டால் என்கிட்டயே அழுதிருப்பார் போல... உன்னாலதாண்டி எல்லாம்… ஒழுங்கா உன்னைக் கவனிச்சுக்காம விட்டு.. இப்போ அத்தனை பேருக்கும் அவஸ்தை பாரு…” என்று கவலையாக அவள் உடல் நிலையை விசாரிக்க ஆரம்பித்து…. கடைசியில் தன் சகோதரியையும் திட்டி முடித்து விட்டு…
காதம்பரியை பேச விடாமலேயே
”குட்டி என்ன பண்றான்…. முரளி மாமா உன்னைக் கவனிக்கிறாங்களா… ஜூனியர் தான் முக்கியம்னு… உன்னை டீல்ல விட்டுட்டாரா… சொல்லு… நாம ஒரு வழி பண்ணிரலாம்.. மாமுவ… ” என்று விசாரணையை ஆரம்பித்து… முரளியிடம் வம்பளக்க இப்போதே அஸ்திவாரத்தை ஆரம்பித்து வைத்திருந்தாள்… முரளியின் ராட்சசி கொழுந்தியாளாக…
காதம்பரிக்கு அப்படி ஒரு சிரிப்பு… அடை மழையாக பொழிந்து கொண்டிருந்த சந்தியாவின் வார்த்தைகளில்… அவளுக்கு பண்ணப்பட்டிருந்த அறுவைச் சிகிச்சை அவளின் சிரிப்பை நேரம் காலம் தெரியாமல் தடைப்படுத்தி இருக்க... இருந்தும் அதையும் மீறி சிரித்து வைத்து… அருகில் இருந்த கணவனின் திட்டல்களையும் வாங்கிக் கொள்ள…
இங்கிருந்தே முரளி குரல் சந்தியாவுக்கு கேட்டும் விட
“என்னவாம் உன் ஆளுக்கு… என்னவோ சொல்றாரு பக்கதில் இருந்து… அக்கா தங்கச்சிக்கு இடையில ஆயிரம் இருக்கும்… கொஞ்சம் பிரைவசி கொடுக்கச் சொல்லு… எப்போ பாரு… பொண்டாட்டி பொண்டாட்டினு விடாம சுத்திக்கிட்டு… காண்டாகுமா காண்டாகாதா எங்களுக்கு”
“அப்படி என்னடி காண்டு என் புருசன் மேல… அவர் என்னையத்தான் பார்த்துட்டு இருக்காரு… அப்படித்தான் பார்ப்பாரு” டன் டனாக காதல் வழிந்தது….. எதிர்முனையில் காதம்பரியின் குரலில்…
“ஷ்ஷ்ஷ்…. ஹப்பா… தொடச்சுக்கோ… வழியுது இங்க இருந்து கேட்கும் போதே” என்று விடாமல் வாறிக் கொண்டிருந்தவள்… திடீரென
“காது கூடிய சீக்கிரம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ்...”
“சர்ப்ரைஸ்லாம் இருக்கட்டும்… என்னை பேச விடுறியா… சந்தோஷ் மிருணா விசயம் என்னாச்சு…. உனக்கு இன்னும் விளையாட்டுதானா” என்று கடிந்தவள்… பின்.. கொஞ்சம் தயக்கமாக….
“ரகு கூட பேசு சந்தியா…. சந்தோஷ் லைஃப உன்னோட சேர்த்து வச்சு காம்ளிகேட் பண்ணிக்காத… உனக்கு போன் பண்ணனும்னு நினைப்பேன்…. எனக்கும் உடம்பு படுத்திருச்சு… இவனுக்கு திடிர்னு ஜாண்டிஸ்… அப்புறம் அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க… சால்ட் கம்மி ஆகிருச்சு…. அடுத்து ட்ரீட்மெண்ட்… இப்போதான் கொஞ்சம் நார்மல் ஆகி இருக்கான்… அம்மாவும்… இவரும் தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க ” என்றவளிடம்
”சந்தோஷ் விசயம் ரொம்ப சீரியஸ் தான் காது… இப்போ உன்கிட்ட சொல்ல முடியாது… பேசலாம்… அதை விடு… பேசுனா இன்னும் கஷ்டம் தான்… ஹ்ம்ம்.. உன் உடம்பு சரி இல்லைன்றதுனாலதான்… நானும் உன்கிட்ட பேசலை…. நீ வீட்டுக்கு வந்துட்டேனு பெரியம்மா சொன்னதா அம்மா நேத்து சொன்னாங்க.. ரொம்ப கஷ்டப்பட்டுடியா காது…” கேட்டாள் வருத்தம் தோய்ந்த குரலி்ல்…
“இப்போ ஓகே தியா… ரொம்ப கஷ்டம்… இன்னொரு பிள்ளைனா ஓடிப் போயுறுங்கன்னு முரளிகிட்ட இப்பவே சொல்லிட்டேன்” என்று சொல்லிச் சிரித்தவளின் சிரிப்பில்… அவள் பிரசவத்தில் பட்ட வேதனைகளின் மிச்சங்களே இருக்க….
அதை சந்தியாவும் உணர்ந்து கொண்டவளாக… சில நொடி அமைதியாக இருந்தவள்… பின் காதம்பரி சொன்ன வார்த்தைகளை நினைத்து கலகலவென சிரித்தபடி…
“யாரு.. முரளி மாமாவா… நல்லா ஓடிப் போவாரு… வேணும்னா உன்னைச் சுத்தி சுத்தி ஓடுவாறு..” வஞ்சமே இல்லாம முரளியை ஓட்ட…
“உனக்கு.. என் புருசன்னா எப்போதும் தொக்குதாண்டி” காதம்பரி நொடிக்க
“ஹ்ம்ம்… சும்மாவா… அக்கா புருசன்ற போஸ்ட்… கொழுந்தியாக்களால் ஓட்டப்படுவதற்கென்றே தார்மீகமாக அக்காக்களால் கொடுக்கப்பட்ட பதவி... விடுவோமா?? வச்சு செய்வோம்ல”
“ஹலோ… எங்களுக்கு காலம் சான்ஸ் கொடுத்திருக்கு… உன் ஆளு மாட்டுனார்னா… நாங்களும் வச்சு செய்வோம்” என்று காதம்பரியும் கிளம்பி விட்டிருந்தாள் சந்தியாவின் சகோதரியாக…
“பண்ணிக்கோ… பண்ணிக்கோ… உன் பாடு ரகு பாடு” என்ற போதே…
“காது …. தேங்க்ஸ்…. ” என்று சம்பந்தமே இல்லாமல் சொல்ல…
“தேங்க்ஸா எதுக்குடி….. அதுவும் திடிர்னு….. “ என்று புரியாமல் வினவ….
“அது அது… சொன்னால் திட்டக் கூடாது….. ப்ராமிஸ்,... மாமா பக்கதில் இருக்காரா” என்று கொஞ்சியவளிடம்…
“இல்லை.. நீ எப்போ பிரைவசினு சொன்னியோ… அப்போதே அவர் போய்ட்டாரு… சொல்லு” காதம்பரி தன் காதை தீவிரமாக தீட்ட ஆரம்பித்தாள்… தன் தங்கையின் வார்த்தைகளைக் கேட்க…
“இல்ல அன்னைக்கு ரகு ப்ரப்போஸ் பண்ணினப்போ... ஒக்கே சொல்லாம இருந்ததுக்கு… ஒருவேளை என் ஆளு சுப்பரா இருக்கான்னு… இந்த இயர் டிபரென்ஸ்லாம் பார்க்காம அஞ்சலி சச்சினா மாறாம இருந்ததுக்கு…” காதம்பரியிடம் அநியாயமாக வெட்கப்பட்டாள் சந்தியா… ராகவ்விடம் கூட இந்த அளவுக்கு வெட்கப்பட்டிருப்பாளா என்பது ராகவ்வுக்கும் ஆண்டவனுக்குமே வெளிச்சம்…
“அடிங்க…. பண்ணதெல்லாம் நீ… ‘இந்த பேனை பெருமாளாக்கினு’ சொல்வாங்களே அந்த மாதிரி ஒண்ணுமே இல்லாத விசயத்தை பெருசாக்கிட்டு… இப்போ தேங்க்ஸா… வந்தேன்னு வச்சுக்க…” தங்கையைத் திட்டினாலும்… தங்கையின் வெட்க குரல் காதில் தேனாக விழ….
எதிர்முனையில் இருந்த காதம்பரிக்கு அப்போதே தங்கையின் முகத்தைப் பார்க்க வேண்டும் போல் இருக்க…. உடனடியாக வீடியோ காலுக்கு மாறி இருந்தார்கள்… சகோதரிகள் இருவரும்….
“சந்தியா…. ஹைய்யோ என் தங்கையா இது… வெட்கம்லாம் படுறாளே….“ என்ற போதே
சந்தியா இன்னும் வெட்கப்பட….
“ரகு இல்லையே இந்த வெட்கத்தை எல்லாம் பார்க்க…” என்று இன்னும் ஓட்ட,,,
“அதெல்லாம் அவர் பார்க்காத வெட்கமா…. நீ ரொம்ப ஓட்டாத” எனும் போதே
“என்ன என்ன... அவரா அது யாரும்மா….ஹையோ எனக்கு நெஞ்சு வலிக்குதே“ என்ற போதே….. சந்தியா சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் காதம்பரிக்கு விளங்க
“ஹேய்ய்ய்ய்ய்ய்ய் சந்தியா…. ரெண்டு பேருக்கும் இடையில எல்ல்ல்ல்ல்லாம்… ஓகே வா….” எல்லாம் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து பெரிதாக்கி இழுத்துக் கேட்க…
“ஹ்ம்ம்… ஹ்ம்ம்ம்… எல்ல்ல்ல்ல்லாம் ஓகே தான்….” என்று இவளும் அதே அழுத்ததுடன்… கூடவே வெட்கத்துடன் முடிக்க…
“உங்க பல வருச பஞ்சாயத்தெல்லாம் பைசல் பண்ணிட்டீங்களா… என்னாச்சும்மா” என்றவள்… சிரித்தபடியே தொடர்ந்தாள்.
“எனக்கு உன்னை இப்போவே என் கொழுந்தனாரோட பார்க்கனும் போல இருக்கே தியா… ஆனால் நீ நம்ம வீட்டுக்கு வந்துட்டேனு அம்மா சொன்னாங்களே…. அப்புறம் எப்படி சந்தியா…” தன் சந்தேகக் கணைகளை ஆரம்பித்தாள் காதம்பரி….
காதம்பரியுடன் என்ன விசயம் என்றாலும் பகிர்ந்து கொள்ளும் சந்தியா…. இப்போது கொஞ்சம் தயங்கினாள்…. இருந்தும் தயங்கி தயங்கி… அப்படி இப்படி சில பல சென்சார்களையும் போட்டு…. அனைத்தையும் பகிர்ந்து கொள்ள…. காதம்பரி… அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சந்தியா அனைத்தையும் சொல்லி முடிக்கும் வரை…
தன் தமக்கையின் அமைதி சந்தியாவுக்கு புரிய….
“நான் தப்பு பண்றேனா காது…. எனக்குத் தெரியலை…. ரகுவை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குதான்…. ஆனால் இப்போ இருக்கிற அட்ராக்ஷன்… தேடல் எல்லாத்துக்கும் காரணம் காதல் மட்டும் காரணமா… இல்லை…. புதுமணப்பெண்ணுக்கு இருக்கிற வழக்கமான ஆசையானு எனக்குப் புரியலை…. ரகு கூடவே இருந்திருந்தால் கூட எனக்கு இந்த சந்தேகம் வந்திருக்கும் காது… அம்மாகிட்ட கூட சொல்ல முடியலை…. ஆனால் ரகுவுக்கு இந்த சந்தேகம் குழப்பம் எல்லாம் இல்லை காது…. அவர் ரொம்ப தெளிவா இருக்கார்…. நாம சின்ன வயசுல பார்த்த ரகுவே இல்லை….“ என்றவளின் குரலில் பெருமிதம் வழிந்தோட…
சிரித்தாள்…. காதம்பரி…
“லூசாடி நீ…. காதல் இல்லாமத்தான்…. ரகு என்ன சொன்னாலும் கேட்கறியா நீ… உனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லாமத்தான்... உன்னை வீட்டுக்குப் போன்னு சொன்னவுடனே மறுவார்த்தை கூட பேசாமல் வந்தியா… இல்லை… அவர்கிட்ட உன்னை…” என்று ஆரம்பித்தவள்
“அத விடு…. இப்போ ரகுவைப் பற்றிப் பேசும் போதே…. அவரைப் பற்றி என்ன…. அந்தப் பேரைச் சொல்லும்போதே டன் டன்னா காதல் வழியுதே…. இதுல எனக்கு காதல் வந்துருச்சா… இல்லை இது காதலான்னு கேள்வி வேற….” சந்தோஷமாக வாரினாள் தன் தங்கையை காதம்பரி…
“காது…. அவ்வ்வ்ளோ ஓபனாவ தெரியுது…. ” என்று இழுத்தவள்… போன் கேமெராவில் தன் முகத்தை வேறு பார்த்துக் கொள்ள…. காதம்பரி மீண்டும் அவளை ஓட்டுவதற்கு வாயைத் திறக்க….அவள் பேசும் முன்…
”சரி சரி போன்ல ஓட்றதுல இருந்து எனக்கு ப்ரேக் விடு... நேர்ல பார்க்கும் போது என்னை ஓட்ட மிச்சம் சொச்சம் வை”
காதுவோ
“சந்தியா… இங்க வர்றியா” கிட்டத்தட்ட… உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க…
அலறுவது இப்போது சந்தியாவின் முறை ஆகி இருந்தது…. காதம்பரியின் உடல்நிலையை நினைத்து
”அம்மா தாயே நீ ஆடாத… உன் புருசன் பக்கத்தில் இல்லதானே… இல்ல இதுக்கும் என்னைத் திட்டப் போறாரு…. ஆமாம்.. நான் டெல்லி வருகிறேன்…. 2 மந்த் அங்கதான் இருப்பேன்…. தென் உன்னை எப்போ வேணும்னாலும் பார்க்க வருவேன்…. ” என்றவளின் வார்த்தைகளை மறித்த காதம்பரி…
“லூசாடி நீ… அப்போ நீ நம்ம வீட்டுக்கு வரலையா…. எங்க வீட்ல கூட நான் இல்லை இப்போ... உங்க பெரியம்மா வீட்லதானே இருக்கேன்…. இங்க வந்து தங்குறதுக்கென்ன…. மேடம்முக்கு இங்க இருக்கிற வசதி பத்தலையா…. உங்க வீட்டுக்காரர் உனக்காக கட்டி வச்சிருக்கிற வசந்த மாளிகையை பார்த்த உடனே…. எங்க வீட்டுக்கெல்லாம் வரத் தோணலையோ…” ஆதங்கத்துடன் பட படவென்று பொரிந்தவளிடம்…
ரகு அங்கு தங்க மாட்டான் என்று எப்படி சொல்வது…. அதனால் தான் தன் பெரியம்மா வீட்டில் தங்காமல் தவிர்த்தாள்… எப்படிச் சொல்வாள் அதைக் காதம்பரியிடம்
ஆனாலும் அதைச் சொல்லாமல்….
“இல்லக்கா…. ஆஃபிஸுக்கும் நம்ம வீட்டுக்கும் தூரம் அதிகம்… அதுனாலதான்” என்றபடி தனக்கு தோதான வார்த்தைகளைக் கண்டுபிடித்து காதம்பரியை சமாதானப்படுத்தியவள்…
பின் சற்று நேரம் அவளிடம் பேசி விட்டு போனை வைக்க மனம் இலேசாகி இருந்தது……. மணியும் சரியாக 6 ஐக் காட்ட….. வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக ஆரம்பித்திருந்தாள்…
நாளை அலுவலகம் வர மாட்டாள்…. அதற்கடுத்த நாள் அதிகாலை ஃப்ளைட்…. இன்று ஒரு நாள் மட்டும் தான் ரகுவைப் பார்க்க முடியும்….
“ப்ச்ச்… இன்னைக்குனு பார்த்து… இப்படி பண்றான்…. படுபாவி…” என்று கணவனுக்கு வசை மாறி பொழிய ஆரம்பிக்கும் போதே…. அவனின் காதில் விழுந்ததோ என்னவோ… அவனது அழைப்பு அவளின் அவனுக்கான திட்டல்களை தடுத்திருக்க
சற்றுமுன் திட்டிய வார்த்தைகள் எல்லாம் காற்றில் போக…. சந்தியாவின் முகமெங்கும் மலர்ச்சி ஒட்டிக் கொள்ள…. அதே துள்ளளில் அவனோடு பேசவும் ஆரம்பித்தாள்…
“ரகு” என்ற போதே அவளின் மகிழ்ச்சி எதிர்முனையை அடைந்ததோ இல்லையோ….அவளுக்கே புரிந்தது….
சற்று முன் காதம்பரி சொன்ன வார்த்தைகள்தான் அவளுக்குள் ரீங்காரமிட்டது…. ரகு என்ற ஒரு வார்த்தையிலேயே தன் கணவன் மீதான காதல் அவளையுமறியால் வெளிப்படுகிறதோ…..
நினைவுகளை தடுத்து நிறுத்தியது…. ராகவ்வின் குரல்….
“உன் ஆஃபிஸ்க்கு வெளியில வெயிட் பண்றேன் சகி…. ஹாஃப் அன் ஹவரா ட்ரை பண்றேன்…. செகண்ட் கால் வர்றது கூட தெரியாம அப்டி யார்கிட்ட பேசிட்டு இருந்த…”
அவளிடம் தவிர்க்க நினைத்தாலும் …. அவனையும் மீறி…. வார்த்தைகளில் கொஞ்சம் எரிச்சலும் கலந்துதான் வெளி வந்தது…
இங்கு சந்தியாவோ தனக்குள் தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தாள்….
“அடிப்பாவி சந்தியா…. காதம்பரிக்கிட்ட உன் புருசனைப் பற்றிப் பேசறேன்னு… அவன் போன் பண்றதைக் கூட கண்டுக்கலையா….. உன்னலாம்” என்றபடி….
“கா…” என்று ஆரம்பித்தவள்…. அவன் வார்த்தைகளின் சூடான பதம் புரிய
இவன் இருக்கிற கடுப்பில…. ’காது’ கிட்ட பேசிட்டு இருந்தேன்னு சொன்னேன்…. செம்ம டோஸ்தான் விழும்… சந்தியா…. டேக் டைவெர்ஷன்… உனக்கா பொய் சொல்லத் தெரியாது…. என்று தனக்குள் பேசி முடித்தவள்…
“கா… கால் இருந்துச்சு…. ரகு…. இங்க இருக்கிற டீமோட …. இங்க வராத வரைக்கும் அவங்களுக்கான டாஸ்க் பற்றி இன்னொரு லீட்க்கு என் போன்ல கால் போட்டு நாலேட்ஜ் ட்ரான்ஸ்ஃபெர் பண்ணிட்டு இருந்தேன்” என்று சராமரியாக பொய் சொல்லி முடித்தவள்…
“2 மினிட்ஸ்ல வெளியில வந்துருவேன்” என்றபடி சந்தியா போனை வைக்க…
“ஹ்ம்ம்ம்… கம் ஃபாஸ்ட்” ராகவ்… அவளிடம் பேசிமுடித்து விட்டு… காரை விட்டு இறங்கி வெளியில் வேடிக்கை பார்க்கலாம் என்று இறங்க எத்தனித்தவன்….
அப்போது…. அருகில் இருந்த காரில் இருந்தவனைப் பார்த்தவனுக்கு… திடிரென்று ஏதோ தோன்றியது…. நினைவடுக்குகளின் அங்கும் இங்கும் பார்த்த தோற்ற மறைவுகள்… அனைத்தும் விழித்துக் கொள்ள ஆரம்பிக்க…
அந்த கார்க்காரன் போனில் பேசிக் கொண்டிருந்தான்…. யாருடனோ.. இவனது காரைப் அவ்வவ்ப்போது பார்த்தபடிதான் பேசிக் கொண்டிருந்தான்….
அன்றொரு நாள் இவனும் சந்தியாவும் காரில் போகும் போது பிரேக் பிரச்சனையால் விபத்தில் மாட்டிய போது… இதே காரில்… இவன் தான் வந்து உதவி செய்தான்… அதற்கு முன்…. சந்தியா இவனை முதன் முதலாக அலுவலகத்தில் பார்த்துவிட்டு சாலையில் மயங்கி விழுந்த போது…. காப்பாற்றிய போலிஸ் முகம் ஞாபகம் வர… புருவ மத்தியில் தானாகவே முடிச்சொன்று வந்திருந்தது ராகவ்வுக்கு.. அதற்கும் முன்… மூளை வேகமாக வேலை செய்தது ராகவ்வுக்கு…
முதன் முதலாக ஹோட்டல் சவேராவில்… மிருணாளினி சந்தோஷ் திருமண விசயம் பேச அங்கு போயிருந்த போது…. சந்தியா நிரஞ்சனா போன பின் தன்னோடு லிஃப்ட்டில் வந்த முகம்… அனைத்தும் ஒரே உருவமாக பிரதிபலிக்க…. அவனுக்குள் மறைந்திருந்த தோற்ற மறைவுகள் அனைத்தும் இப்போது பிம்பமாக மாறி…. அனைத்தும் ஒரே முகமாக இவன் முன் தோன்ற… திடீரென்று சுருக்கென்ற வலி இதயத்தில்… இறுக்கி பிடித்தார் போல உணர்வு….
அது என்ன ஏது என்று ஆராய்ச்சிக்கு போகும் போதே
அதே நேரம் சந்தியா…. இவன் முன் வந்து நிற்க…. இப்போது அந்த கார்க்காரன் தானாகவே அந்த இடத்தை விட்டு நகன்றிருந்தான்…. மனதில் முதன் முறையாக அடித்த எச்சரிக்கை உணர்வை… ராகவ் நன்றாக உணர்ந்து கொண்டான்… இந்த முறை அலட்சியமாக விடாமல்… தனக்குள் குறித்து வைத்துக் கொண்டான்…
இவனை மீண்டும் பார்த்தால் இனி விடக் கூடாது என்று…. ஆனால் அதற்கு சிவா வாய்ப்பே அளிக்கவில்லை… சந்தியாவை டெல்லிக்கு அழைத்து வர பல முறை தீட்டிய திட்டங்கள் எல்லாம் சிவாவை தோல்வி அடையச் செய்ய… இந்த முறை சிவாவின் திட்டம் கனகச்சிதமாக முடிந்து சந்தியா டெல்லிக்கும் வந்து… நிரஞ்சனாவின் மூலமாக தன் இடத்திற்கும் வரவழைத்து சந்தியாவை தன் கஸ்டடியின் கீழ் கொண்டும் வந்தான்...
இதில் விந்தை என்னவென்றால்…. சந்தியா என்ற மீனை தன் திட்டங்களுக்கெல்லாம் சிக்க வைக்க… சம்மதிக்க வைக்க… ராகவ்வைத்தான் தூண்டில் புழுவாக மாற்றி இருந்தான்… அதில் சந்தியாவும் சிக்கிக் கொண்டாள்தான்… ராகவ்வின் வார்த்தைகளை மீறி ஆனால் அவன் மேல் கொண்ட கரை காண காதலில்… சிவாவின் திட்டங்களுக்கு சம்மதம் சொல்லி தன் கரையைக் கடந்திருந்தாள் சந்தியா… கடலில் இருந்த மீன் கரைக்கு வந்தால் என்ன ஆகும்… சந்தியாவுக்கும் அதே நிலையே… தாக்குப் பிடித்தாளா… ராகவ் காதலைக் காட்டிய வேகத்திற்கே… புலம்பிக் கொண்டிருப்பவள்… இதோ இன்னும் சற்று நேரத்தில் இருந்து அவள் கணவன் காதலில் காட்டப் போகும் அடுத்தடுத்த அதிரடிகளையே தாங்குவாளா… இல்லை அதன் பிறகு அனுபவிக்கப் போகும் சிறைக் கோட்டையின் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் அதிரடிகளை தாங்குவாளா… ?????
/* வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்ஙனம் காப்பாய்.?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா.?
நான் சத்தியம் செய்யவா.?
இந்த பூமியே தீர்ந்துபோய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்.?
நட்சத்திரங்களை தூசு தட்டினால்
நல்ல வீடு செய்வேன்.!
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்.?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என்னுயிர் தந்தே உயிர் தருவேன்.! */
Nice epi ma'am. Next eppo poduveenga. Eagerly waiting
Super, romba alaka romba super a pokuthu. Santhos than pavam.
Semma semma mam.......ena agum aaduthu........
Indha rules raamanuji ya adakurathukku oruthan itukkaana adhu Santhosh dhaan🤩.
sandhiya voda ekkangal ellaathiyum sonna vidham arumai👌🏻
Ooooh Ragu kugan a adayaalam kandu pidicitaana aana it's too late 🥺oh.
waiting for next update.
Nice update. Santhosh miruna life will be safe it seems. At the end of every episode you are making our heart beat up with Sandhya's prison life