top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-41

Updated: May 20, 2020

அத்தியாயம் 41


/*அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே


தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது

தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது

நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்

மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்*/


கிட்டத்தட்ட மதிய வேளை பதினொரு மணி …. சந்தியா அலுவலகம் செல்ல ஆரம்பித்து இருந்தாள்…


அதுமட்டும் இன்றி அன்றைய அவர்களின் எதிர்பாராத கூடல் இருவரையும்… முக்கியமாக ராகவ்வை முடிவெடுக்க வைத்திருந்தது… என்னதான் மனைவி என்றாலும்… உரிமை இருக்கிறது…. தவறில்லை என்ற போதிலும் ஏனோ மனம் ஒப்பவில்லை அவனுக்கு…. இருந்தும் அவளை விட்டு தள்ளி இருக்கவும் முடியவில்லை…. கடந்த ஒரு வார காலமாக எப்படியோ சமாளித்தவன்.. சந்தியா அலுவல பணி நிமித்தமாக டெல்லி செல்வது இப்போது இருக்கின்ற சூழ்நிலைக்கு சரிதான் என்பதைப் போல அவனை யோசிக்கவைக்க அதன் முடிவு …. சந்தியா டெல்லி செல்வதற்கு சம்மதமும் சொல்லி விட்டான்…


கணவன் சம்மதம் கிடைத்த பிறகு சந்தியா தன் வீட்டில் சொல்ல… பெரிதாக வீட்டில்… வீட்டில் என்பதை விட கணேசனிடமிருந்து ஆட்சேபணையில்லை… அதனால் மற்றவர்களிடமிருந்தும் எதிர்ப்பில்லை… அப்படி இப்படி என்று சந்தியா டெல்லி செல்வது உறுதி ஆகிவிட… அடுத்த இரண்டு நாட்களில் அவளின் விமான பயணமும் உறுதி ஆகி இருந்தது.


சந்தியாவுக்கு ராகவ்வை விட்டு அவ்வளவு தூரம் விலகிச் செல்வது பிடிக்கவில்லைதான் இருந்தும்… தனக்கு தன் வாழ்க்கையைப் பற்றி… தனக்கும் ரகுவுக்குமான உறவின் ஆழத்தைப் பற்றி இன்னும் தெளிவாக சிந்திக்க வேண்டும் என்று தோன்றியது… அவனை விட்டு தள்ளிப் போனால் ஏனோ நன்றாக இருக்கும் என்று தோன்றியது..


காதம்பரி வீட்டிற்கு தான் முதலில் செல்வதற்கு முடிவு செய்திருந்தாள்… ஆனால் ராகவ்வோ தானும் அவ்வப்போது வருவேன் என்று சொல்லி… சந்தியா மகளிர் விடுதியில்தான் தங்க வேண்டுமென்று சொல்லிவிட்டான் பிடிவாதமாக… நேரடியாக காதம்பரி வீட்டில் தங்க வேண்டாம் என்று சொல்லவில்லை அவ்வளவுதான்…



ராகவ் சொன்ன பின் சந்தியாவும் காதம்பரி வீட்டுக்குத்தான் போவேன் என்று பிடிவாதம் பிடிக்க வில்லை…


ஆனால் டெல்லியில் அவளுக்கு வேறு யாரைத் தெரியும்.. வேறு எந்த இடம் பாதுகாப்பாக இருக்க முடியும்… இந்த 2 மாதமும்… காதம்பரியோடு சந்தோஷமாக கழிக்கலாம் என்று இருந்த எண்ணத்தில் கணவன் மண்ணைப் போட்டு விட… காதம்பரி வீட்டுக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு… நிரஞ்சனாவிடம் பேசினாள்… ஏதாவது மகளிர் விடுதி ஒன்றை தேடி வைக்குமாறு அவளிடம் சொல்லி வைக்க


ஆனால் நிரஞ்சனாவோ ஏற்கனவே அவள் வீட்டு மாடி அறை காலியாக இருப்பதால் அவள் வீட்டிலேயே தங்க வற்புறுத்த சந்தியாவும் சம்மதம் சொல்லி விட்டாள்… விட்டில் பூச்சியாய் விளக்கில் விழுவது போல் தெரியாமல் விழுந்த சந்தியாவுடன் சேர்ந்து ராகவனும் அந்த வலையில் இழுக்கப்பட்டான்


தன் டெல்லி பயணம், இருப்பிடம் தொடர்பான எண்ணங்களை நிறுத்தியவளின் மனதை இப்போது கணவனைப் பற்றிய எண்ணங்கள் முழுவதுமாக ஆக்கிரமிக்க… வேலையில் மூழ்கவா முடியும்…. கண்கள் கணிணியின் திரையில் மட்டுமே இருக்க… நினைவுகளை ராகவ்வே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்…



கணவன் நினைவு வந்த போதே… தன் உள்ளங்கைகளை விரித்துப் பார்க்க… அதைப் பார்த்த போது புன்னகையில் இதழ்கள் தானாகவே விரிந்தது ராகவ்வின் காதலை நினைத்து….



கடந்த ஒரு வார காலமாகவே ராகவ்வின் நடவடிக்கைகள்… சந்தியாவிடம் தாமரை இலைத் தண்ணீர் போல் தான் இருந்தது…



மொத்தமாக அவனிடம் இவளைக் கொடுத்த பிறகு… சிறு முத்தத்திற்கும் பஞ்சமாகிக் போனதுதான் வியப்பு அவளுக்கு…. தினமும் அரை மணி நேரம் இல்லை ஒரு மணி நேரம் சந்திக்கும் அந்த சந்திப்பில் கூட அவன் வார்த்தைகளோ… தீண்டல்களோ… ஏன் பார்வைகளோ எல்லைகளைத் தாண்டாமல்… இருக்க… குழம்பியவள் சந்தியாதான்…



இரவின் தனிமையில் பேசும் போது கூட… ஏதேதோ பேசினான்… இவளையும் ஏதேதோ பேச வைத்தான்… ஆனால் மறந்தும் அந்த ஏகாந்த வேளைகளின் ஏகாந்த வார்த்தைகளாக மாற்ற வில்லை அவன்…



ஆண்மகன் அவனே கெத்தைக் காட்டும் போது இவளுக்கு மட்டும் என்ன வந்தது…


“உனக்கு மட்டும் தான் கண்ட்ரோல்ல இருக்க முடியும்னு கெத்து காட்டறியா என்கிட்ட… போடா… சகின்னு கொஞ்சிட்டு வரும் போது உனக்கு இருக்கு…“ என்று மனதுக்குள் அவனோடு மனைவியாக சண்டை இட்டுக் கொண்டிருந்தாள்


அதே நேரம் இன்னும் சில தினங்களே இங்கிருக்கும் நாட்கள்… தினமும் சந்திக்கும் அரைமணி நேரமும்… அலைபேசி உரையாடல்களும் அவளுக்கு போதுமானதாக இல்லை… அவனைத் தேடும் நினைவுகளோடும்… தேகத்தோடும்… இவள்தான் போராடிக் கொண்டிருந்தாள்….


இவளை எல்லைகளைத் தாண்ட வைத்து விட்டு… எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் அவனின் செயல்கள் இவளுக்கு ஆத்திரத்தைத்தான் கிளப்பின… என்னதான் பொறுமையாக இருந்தாலும்…. எரிமலை அதன் லாவாக்களை வெளியேற்றாமல் இருக்குமா…


கடைசியில் நேற்று பொங்கியே விட்டாள்...



காத்திருப்பு… கடல்… காதல் என வழக்கமான காதலர்கள் சந்திப்பு… இவர்களுக்கும் வழக்கமாகிப் போக… அதிலும் இவர்கள் அருகில் சற்று தள்ளி அமர்ந்திருந்த ஒரு ஜோடியின எல்லை மீறிய அத்துமீறல்களில் சந்தியா அன்று உண்மையிலேயே தன் பொறுமையை தாண்டிக் கொண்டிருந்தாள் என்றே சொல்ல வேண்டும்…


அந்த ஜோடி… கல்லூரியில் பயிலும் விடலைப் பருவத்தினர்தான்… அவர்களே சுற்றம் மறந்து காதல் என்ற பெயரில் அதன் சூத்திரங்களை தப்பு தப்பாக படித்துக் கொண்டிருக்க…


இங்கு ராகவ்வோ… கணவன் என்ற போதிலும்… அதன் கடமையிலிருந்து விலகி இருக்க… கடலில் அலைகள் ஆர்ப்பரிக்க… இவள் மனதி்லோ ஏக்க அலைகள் சுனாமி அலைகளாக பொங்க ஆரம்பித்து இருந்தது ….


அவள் வீடு இருந்த தெருவில்… வழக்கம் போல ராகவ் இறக்கி விட… இவளோ இறங்காமல்…. கல்லாக சமைந்து அமர்ந்திருந்தாள்… என்ன வேண்டும் என்றாலும் அவன் நினைத்து விட்டுப் போகட்டும்… இன்று இவனா நானா ஒரு வழிபார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தவள் இறங்குவாளா என்ன…



“ஓய்… உங்க வீடு வந்திருச்சு சந்தியா…” இவன் சொல்ல…


யாருக்கோ சொன்ன வார்த்தைகள் என்பது போல அப்படியே அமர்ந்திருக்க…


“சந்தியா உன்னைத்தான்” இவனும் சத்தமாக அழுத்திக் கூற


“எனக்கு தெரியும்…” என்றாள் பட்டென்று … ஆனால் எரிச்சலாக


அவளின் எரிச்சல் வார்த்தைகள் ராக்வவுக்கும் எச்சரிக்கை மணியை சரியாக அடித்து வைக்க…. பதில் சொன்னவளோ ரோட்டையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்க…


“சந்தியா என்னடா ஆச்சு… உடம்பு சரியில்லையா… “ கழுத்தில் கை வைக்கப் பார்க்க…



வெடுக்கென்று கைகளைத் தட்டி விட்டவள்…


“தொடாதடா” என்றவள் அதைச் சொல்லும் போதே அழுது விடுவாள் போல அப்படி இருக்க…


ஆனாலும் அவன் முன் காட்ட பிடிக்காமல்… இன்னும் விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்தவள் அப்போதும் அவனைப் பார்க்காமல் அமர்ந்திருக்க… நிமிடங்கள் தான் கடந்திருந்தன… இவளைச் சமாதானப்படுத்துவான் என்று இவள் அமர்ந்திருக்க… கணவன் பக்கமிருந்து அதற்கான எந்த ஒரு அறிகுறியும் வராமல் போக... அவ்வளவுதான் அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் அணைகளை உடைத்துக் கொண்டு வர… வேகமாகத் திரும்பிப் பார்க்க… அவனோ ஸ்டியரிங் வீலின் மேல் தலை சாய்த்து படுத்திருந்தான்…


பொங்கிய கோபம் எல்லாம் எங்கே போயிற்று என்றே சந்தியாவுக்கு தெரியவில்லை… கொதித்துக் கொண்டிருக்கும் பாலை சிறு துளி தண்ணீர் அடக்கும் விந்தையைப் போல… துவண்டிருந்த ராகவ்வின் தோற்றமே அவளுக்குள் தோன்றிய கோபத்தை எல்லாம் அடக்கி இருக்க…


“ரகு” என்றாள் அவன் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்தவளாக… இவளின் அரவம் உணர்ந்தானோ இல்லையோ… அதே வேகத்தில் அவளின் தோளிலேயே சாய்ந்து அவளை இறுகக்கட்டிக் கொண்டவனின் வேதனைகளை... கொண்டவள் புரிந்து கொள்ள நொடிகள் கூடத் தேவைப்படவில்லை…


தன்னவனை நிமிர்ந்து பார்க்க வைக்க… அவனது கண்கள் அப்படி ஒரு சிவப்பை பூசி இருந்தது… அழவில்லை அவன் அவ்வளவுதான் …


சந்தியாவின் கண்களை சந்தித்த அடுத்த வினாடியே…


“என்னை மன்னிச்சுக்கோ சகி…. என்னால முடியலை… உன்னை டெய்லி பார்த்து… யாரோ ஃப்ரெண்ட்கிட்ட பேசுற மாதிரி பேசிட்டு… வீட்ல விட்ற வேதனை… உனக்கு மட்டும் இல்லை “



”ஆனால்… அதுக்கு மேல நான் தாண்டினேனா… அந்த உணர்வுகளோட உச்சக்கட்ட தேடல்களுக்கு நீ மட்டும் தான் தீர்வா இருக்கும் போது… ஆனால் நீ என்னை விட்டு எங்கேயோ இருக்க… இந்த வேதனைக்கு அந்த வேதனை பரவாயில்லைனு தோணுது… சகி…. எனக்கும் தெரியும் சகி… நீ இந்த ஒருவாரமா என்னை எந்த அளவுக்கு தேடியிருப்பேன்னு… ஆனால் அதை விட பல மடங்கு அதிகமா நான் உன்னை தேடியிருப்பேன் சகி… “ என்ற போதே அவனின் அணைப்பு இறுக்கமாக திணறியவள் சந்தியாதான்…


கோபத்தில் கொந்தளிக்க வந்தவள்… தாபத்தில் வெந்து கொண்டிருப்பவனுக்கு… என்ன ஆறுதல் சொல்லி வேட்கையைத் தவிர்க்கலாம் என்று யோசிக்க ஆரம்பிக்க…


“நாம அன்னைக்கு எல்லை மீறியிருக்க கூடாது சந்தியா” என்று நிமிர்ந்து அவளை கண்களைப் பார்த்து சொன்னவனின் குரல் இப்போது சிறுவனைப் போல மாறி இருக்க…


அதில் சந்தியாவுக்கு சிரிப்புதான் வந்தது… இருந்தும்… அடக்கியவள்….


“டேய்… ரொம்ப நடிக்காதடா… எங்க நான் திட்டிருவேனோன்னு.. உஷாரா முன்னாடியே பொங்கிட்ட” என்றவளிடம் இவன் முறைக்க…


அவன் நெற்றியை மறைத்திருந்த கேசத்தை… ஒதுக்கியவள் அழுத்தமாக தன் இதழ் ரேகையைப் பதித்தவள்… அவனை தன் மார்போடு அணைக்க… அவனும் அளவாக அடங்கினான் அவளுக்குள்…. அவளோடு இன்னும் ஒன்றியவனாக…


“நல்ல பொண்ண கெட்ட பொண்ணா மாத்திட்டு… என்னவொரு சீன் போடறடா…” தன் குரலா எனும் அளவிற்கு… அக்கறையா.. காதலா… மோன நிலையா… என்று பிரித்தறியா முடியாதபடி…. மாறி இருக்க…


“சகி” என்றான் அதே நிலையில் இருந்தபடியே…


“ஹ்ம்ம்” என்றவளின் குரல் இப்போது கசிந்துருக


“இப்போ கெட்டா பொண்ணா மாறிட்டியா” அப்பாவியாகக் கேட்டவனின் வேலைகளோ வேறு மாதிரியாக ஆரம்பித்திருக்க… சில நொடிகளிலேயே அவளை அவர்களுக்கே அவர்களுக்கான வேற்றுலகத்திற்கு ஜெட் வேகத்தில் அழைத்துச் செல்ல.. திணறி… தன் சுயநிலைக்கு வருவதற்கு… பிரம்ம பிரயத்தனம் இவள் பட வேண்டியிருக்க… இருந்தும் சட்டென்று வெளி வந்தவள்


வேகமாக அவனைத் தள்ளி விட்டவள்…


”நான் போறேன்…” என்று வேகமாக இறங்கப் போனவளை இழுத்து தன் மேலேயே விழ வைத்தவன்


“இது இதுக்குத்தான் நான் தள்ளி இருக்கிறது… இதுக்கு பேர்தாண்டி.. எவரெஸ்ட் சிகரத்தில இருந்து தள்ளி விடறது… இது பொண்ணுகளுக்கே பொண்ணுங்களுக்கேயான ஸ்பெஷல் குணம்” என்ற போதே… இவள் முறைத்துக் கொண்டிருந்தாள்…


அவன் வாக்கியத்தில் இருந்த மற்றவற்றை எல்லாம் விட்டு விட்டாள்.. அதை எல்லாம் ஆராயவும் இல்லை… பொதுப் பெயராக ’பெண்கள்’ என்று சொன்னதை மட்டும் பிடித்துக் கொண்டவள்…


“பொண்ணுங்களேவா… அப்படினா எத்தனை பொண்ணுங்கள பார்த்தடா” என்று சிலிர்க்க…


“ம்க்கும்… கையில வெண்ணைய வச்சுட்டே… அலைவாங்கள்ள அந்த மாதிரி…. நானே கேவலமான நிலையில இருக்கேன்.. இதுல எத்தனை வேறன்னு கேளு” என்று சலித்தவனாக பேசும் போதே…


“நீ சரி இல்லை… என்னென்னமோ பேசற” என்று சொன்னவள் உதட்டில் மறைத்த சிறு முறுவலையும் கண்டுகொண்டவனாக…


“இதுக்குத்தான்… எவரெஸ்ட் சிகரம் ஏறுற சாதனையும் வேண்டாம்… கொ” என்று சலிப்பாக ஆரம்பிக்கும் போதே… அவன் வாயை இறுக்கமாக தன் கை கொண்டு அடைக்க..


இருந்தும் திமிறியவனாக… உதட்டை அசைத்து பேசப் போக…


”கொன்னுடுவேன்… இதுக்கும் மேல பேசுன” என்றபடியே கைகளை அவன் உதட்டில் இருந்து எடுக்க…


அவனது கைகள் அவளது உள்ளங்கைகளை சிறைபிடித்தது….


இப்போது விளையாடாமல்… தன் கையிலிருந்த அவள் கையை தன் உள்ளங்கையோடு அழுத்தமாக பதித்தவன்…


”நான் ஓவ்வொரு நாளும் உன்னை விட்டுட்டு போகும் போது… உன்னோட கைய பிடிச்சு பை சொல்வேன்…. ஏன் தெரியுமா… சந்தியா” உண்மையிலேயே சைவ காதலனாக மாறி இருக்க…


புரியாமல் விழித்தாள் சந்தியா… ’ஏன்’ என்ற பார்வை மட்டுமே…


”என் உதட்டோட ரேகையை உன் உதட்டோட பதிக்கிறது மோகத்தை மட்டும் தான் தூண்டும் சந்தியா… ஆனால் உன்னோட கைல இருக்கிற ரேகையை அப்படியே பிரதி எடுக்கிற மாதிரி என்னோட கையோட பதிக்கிற இந்த அழுத்தமான கைபிணைவுக்கு பின்னால ஆயிரம் கதை இருக்கு…


உன்னை விட்டுட்டு போனாலும் உன் கைகள் மூலமா… அதுல பதிஞ்சுருக்கிற உன்னோட ரேகைகள்… என்னை மொத்தமா ஆளுற மாதிரி எனக்கு ஒரு ஃபீல் சந்தியா… அந்த ரேகைகள் என்னோட நாடி நரம்பு மொத்தமும் ஊடுருவுற மாதிரி ஒரு எண்ணம்… உலகத்தில் ஒரே மாதிரி உருவத்தில் ஆயிரம் பேர் இருக்கலாம்… ஆனால் கைரேகைன்றது யுனிக் தானே… அந்த தனித்துவமான உணர்வுகளோட உன்னை உள்வாங்குற ஃபீலும் யுனிக் தான் சந்தியா… தினம் தினம் அந்த உணர்வுகளை எனக்குள்ள நிரப்பிக்கிட்டுத்தான் உன்னை விட்டு கிளம்பிகிறேன்”


அவனின் வார்த்தைகளை இப்போது நினைத்துப் பார்த்தபடி தன் கைகளை அப்படியும் இப்படியுமாக திருப்பிப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சந்தியா… நேற்று அவன் சொன்ன போது… அவன் மேல் ஏற்கனவே இருந்த கோபத்தில்…


இப்படித்தான் சொல்ல வேண்டும் போல் தோன்றியது சந்தியாவுக்கு…


“நீ என்ஜினியருக்குதானே படிச்ச… பின்ன கைரேகை நிபுணன் மாதிரி பேசுற” ஒரு விளம்பரத்தில் மனைவி சொல்லும் வாசகத்தை தனக்கான வார்த்தைகளை மாற்றிக் போட்டு கொண்டு மனதுக்குள் நையாண்டி செய்து கொண்டிருந்தாள் ராகவ்வின் உணர்வுக் குவியல்களை அவன் பதி விரதை


நல்ல வேளை அவனிடம் சொல்லவில்லை… இவள்… இப்போது நினைக்க சிரிப்பு மட்டுமே வந்தது… கரெக்ட்தானே நான் நினைக்கிறது…


”கட்டின பொண்டாட்டிகிட்ட… முத்த ரேகை பற்றி லெக்சர் கொடுக்காமல் … கைரேகை பத்தி பேசுறான்… இந்த ட்ரிப்பிள் ஆர்”… உதட்டைச் சுழித்தவள்…


அங்கிருந்த கணிணித் திரையைப் பார்க்க… மலை போல் கிடந்தது வேலை….


ஏன் திருமணத்திற்கு விடுமுறை எடுக்கின்றனர் என்று இப்போது புரிந்தது இவளுக்கு… எந்த வேலை எடுத்தாலும் ’ட்ரிப்பிள் ஆர்’ ஞாபகமே… அதிலும் இப்போது இன்னொரு ‘R’ உம் சேர்ந்து ‘குவாட்ரிப்பில் ஆர்’ ஆக ராகவ் மாறியிருக்க.. வேலை மலை போல் குவியாமல் இருக்குமா… கடுப்போடு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் மிஸஸ்.RRR



தன் வேலையில் மூழ்கி இருந்த சந்தியாவை கலைத்தது அவள் அண்ணன் சந்தோஷின் அழைப்பு தான்..


"சந்தியா… பெர்மிஷன் வாங்கிட்டு வா… கீழ வெயிட் பண்றேன்…" என்றவன் அடுத்த வார்த்தைகளுக்கு வேலை இன்றி சட்டென்று வைத்துவிட… அடுத்து என்ன பூதம் கிளம்பி இருக்கிறதோ … என்ற எண்ணப் போக்குதான் இவளுக்குள்…


சந்தோஷின் கோபமான குரலும் அதோடு சேர்ந்த அழுத்தமும்… என்னவாக இருக்குமோ… நினைத்தபடியே மேலதிகாரிக்கு அனுமதி வேண்டி மின்னஞ்சல் அனுப்பி விட்டு கீழ் இறங்க சந்தோஷும் காத்துக் கொண்டிருக்க… அவனது தோற்றமே அவனிடம் இவளைக் கேள்வி கேட்க பயப்படுத்தியது….


அந்த அளவுக்கு ரௌத்திரனாக இருக்க… இருந்தும் சந்தியா என்னவென்று விசாரிக்க…


“கொஞ்ச நேரம் வாய மூடிட்டு வற்ரியா” மிருணாளினி மேல் இருந்த கோபத்தில் வார்த்தைகளை விட்டான் சந்தியாவிடம்…


அவன் கோபம் புரிந்தவள்… எதுவும் சொல்லாமல்… அமைதியாக இருந்து விட… தங்கையின் அமைதி புரிந்தவன்… தன்னைத் தானே கடிந்து கொண்டவனாக…


”தியா…” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்…


அவளோ பதில் ஏதும் சொல்லாமல்…. அவனைப் பார்க்க… சந்தியா தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவனாக


“ரகு ஆஃபிஸ்க்கு போய்ட்டு இருக்கோம்… அங்க சொல்றேன்” என்று தணிவாக சொன்ன போதே சந்தியாவின் கண்கள் தானாக ஒளியை நிரப்ப… முகமோ மலர்ந்தது…


நொடி நேரத்தில் தன் தங்கையின் முக மாற்றத்தைக் கண்களில் நிரப்பிய சந்தோஷின் கண்கள் அவனையுமறியாமல் கலங்கியது… மிருணாளினியின் பிடிவாதத்தால் என்று முதலில் யோசித்தவன்…. பின் தன்னை மாற்றி… தான் செய்த தவறால்… எப்படியோ இருக்க வேண்டிய… தன் வாழ்க்கை…. தன் தங்கை வாழ்க்கை… இப்படி ஆகி விட்டதே…. மனம் வருந்தியவனின் நெஞ்சம்… அதே நேரம் தன் மனைவி எடுத்த முடிவை நினைத்து மீண்டும் ருத்ரனாக மாற… அந்த கோபம் அவனது இரு சக்கர வாகனத்தை இன்னும் அதி வேகத்துடன் இயக்கியது…


ஏற்கனவே சந்தியாவுக்கு…. இருசக்கர வாகன பயணம் என்றால் மிகவும் பயம்…. அதில் இவ்வளவு வேகம் என்றால்…. கேட்கவே வேண்டாம்…


“டேய் சந்தோஷ்…. மெதுவாடா” என்ற தங்கையின் குரலில் எல்லாம் அவன் தன் வேகத்தை நிறுத்த வில்லை….


அப்படி அவன் நிறுத்தியபோதோ…. ராகவ்வின் அலுவலகம் வந்திருந்தது….


…….


ராகவ்வின் அலுவலகத்திலோ… அவனது அறையில்… மிருணாளினி… அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தாள்….


சந்தோஷ் தன்னிடம் கோபமாக பேசி விட்டு வைத்திருந்தது வேறு… அவனுக்குள் எரிச்சலாக இருக்க…


தன் தங்கையின் இந்த… குற்ற உணர்ச்சியாக அமைதியாக இருக்கும் பாவம் வேறு இன்னும் கொல்ல … சந்தோஷின் மேல் கோபம் கோபமாக வந்து தொலைத்தது…


”என்ன திமிர் அவனுக்கு … என்னிடமே அவன் கோபத்தைக் காட்டுகிறான்… யார் யாரிடம் கோபத்தைக் காட்டுவது … வரட்டும் இங்கு… ” என்று மனதில் நினைத்தபடி… தன் தங்கையிடம் பேச ஆரம்பித்தான்…


”என்னாச்சு… போன்ல கத்துறான்… உன் தங்கச்சிகிட்ட இப்போதே பேசனும்னு…. அப்படி என்ன பண்ணி வச்ச…” முடிக்கும் போது மிருணாளினியின் மீதும் உள்ள அதிருப்தியை அவன் குரல் அப்பட்டமாக வெளிப்படுத்த


மிருணாளினி வெகு நாட்களுக்குப் பின் வெற்றுச் சிரிப்பு சிரித்தாள்… இதழ் விரித்தாள் அவ்வளவே… கண்களில் ஏதோ ஒரு தீர்க்கம்…


”வாழ்க்கையில் திருமணம் மட்டுமே முடிவா என்ன… அதில் தோல்வி அடைந்தால் வாழ்க்கையே தோல்வி ஆகி விடுமா என்ன…. ”


நிமிர்ந்து தன் சகோதரனைப் பார்த்துக் கேட்டாள்…


அவளின் தெளிவான அழுத்தமான பேச்சு…. ராகவ்வுக்கு எதையோ உணர்த்த… அது சென்று முடிந்த இடம்… இப்போது சந்தோஷின் கோபம் அவனுக்கு முற்றிலும் புரிய


”மிருணா…” என்று கோபமாக எழுந்தவன்…


”உனக்கு நம்ம அம்மா அப்பா கொடுத்த ஃப்ரிடத்தை நினைத்து முதல் முறையா வருத்தப்படறேன். நேற்றே சொன்னேன்… இது உன்னை மட்டும் சார்ந்தது இல்லை… நம்ம எல்லோர் வாழ்க்கையையும் பாதிக்கும்னு…. ”


”ப்ச்ச்… டைம் இருக்கு மிருணா…. ஏன் இவ்வளவு அவசரம்…”


தங்கைக்கு புரியவைத்து விடும் அண்ணனின் தவிப்பாக… அவனின் கோபம்… மாறியிருந்தது இப்போது…


தன் அருகில் வந்து நின்ற தன் அண்ணனின் தவிப்பு… அவனை முதன் முறை சந்தியாவின் கணவனாகக் காட்ட…


புரிந்து கொண்டவளாக,


”சந்தியாவோட உன்னோட லைஃப் பாதிக்கப்படும்னு நினைக்கிறியாண்ணா…” கலக்கமான விழிகளோடு கேட்ட தங்கையைக் கண்டு … தேற்றும் வழி தெரியாமல்…


”குட்டிம்மா… என் லைஃப் அது வேறடா… நான் உன்னைப் பற்றிதான்… உனக்கு எப்படி சொல்றது… எனக்கு உன்னோட கவலைதான்…” என்ற போதே…


”இல்ல வேண்டாம் என்னைப் பற்றி இங்க யாரும் கவலைப்பட வேண்டாம்… அவங்கவங்க அவங்க வாழ்க்கையப் பார்த்துக்கங்க… நீ உன் சந்தியாவைப் பாரு… அவ கூட வாழற வழியப் பாரு..”


இருக்கும் இடம் எங்கு என்பதை உணராமல் மிருணாளினி குரலின் டெசிபல் அதிகரிக்க..


”மிருணா...கூல் கூல்” என்ற போதே அவன் அலுவலக வரவேற்பறையில் இருந்து ராகவ்க்கு கால் வர..


”வரச்சொல்லுங்க” என்று வைத்தவன்… மிருணாளினியைப் பார்த்தபடியே…


“உன்னைக் கேள்வி கேட்க வேண்டிய ஆளே வந்துட்டான்….” என்று இப்போது பார்வையாளன் வரிசைக்கு வந்து விட்டான் ராகவ்… கொண்டவன் வந்த பின்னால் அண்ணனும் தந்தையும் பார்வையாளர் வரிசைதான் என்பது ராகவ்வுக்கு மட்டும் மாறிவிடுமா என்ன….


ராகவ் அனுமதி அளித்த அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் சந்தோஷ் சந்தியாவுடன் அந்த அறைக்குள் நுழைந்திருந்தான்….


சந்தியாவின் குழப்பமான முகத்தை வைத்தே ராகவ் தெரிந்து கொண்டான்…. அவளுக்கும் எதுவும் தெரியாமல் தான் இங்கு கூட்டி வரப்பட்டிருக்கின்றாள் என்று….


சந்தியாவுக்கோ…

“தனக்குத்தான் எதுவும் தெரியவில்லை… அட்லீஸ்ட் ரகுவுக்காவது ஏதாவது தெரியுமா… ஏன் சந்தோஷ்க்கு இத்தனை கோபம் என்பதைப் பற்றி” என்று நினைத்தவாறே ராகவ் முகத்தைப் பார்க்க…


சந்தியா எப்போது தன்னைப் பார்ப்பாள் என்று அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் போல அவனும்… அவள் பார்த்த உடனேயே…. அவள் கேள்விக்கு.. கண்களாலேயே பதிலும் சொல்லி முடித்தான்…


“தனக்கும் ஏதும் தெரியாதென்று…”


இவர்களின் உரையாடல்கள் மௌனமாவும்,பார்வைப் பறிமாற்றமாகவும் இருக்க…. அங்கு சந்தோஷ் மிருணாளினி இடையிலோ வேறு விதமாக இருந்தது…


“ஏய் என்னடி நெனச்சுட்டு இருக்க உன் மனசுல….. சும்மா இருந்தவன லவ் பண்றேன் பண்றேனு சொல்லி சுத்த வச்சது யாருடி….” என்ற போதே…. மிருணாளினியும் ஆக்ரோஷமாகினாள்… சந்தோஷின் குரலுக்கு பதிலடி கொடுப்பது போல…


“ஆமாம்… ஆனால் உலகத்திலேயே உன்ன மாதிரி நல்லவன் இல்லைனு நெனச்சேன்… சொன்னேன்… நல்லவன்னு நெனச்சு உன்கிட்ட என் மனசைக் கொடுத்தது தப்புத்தான்….“ என்றவளின் குரல் ஆக்ரோஷத்திலிருந்து இப்போது சுய பச்சாதாபமாக முடிய… இப்போது சந்தோஷை நேரடியாக பார்த்த பார்வையினைத் தவிர்த்து வேறு புறமாகத் திரும்ப…


தன் தங்கையின் கண் கலங்கியிருந்தது ராகவ்வின் கண்களுக்கு தப்பிதம் இல்லாமல் விழ… ராகவ் இங்கு பொறுமை இழந்தான்….


”சந்தோஷ் என்ன ஆச்சுனு இவ்ளோ கோபம்…. என் முன்னாலேயே அவள அதிகாரம் பண்ற… இன்னைக்கு உங்க ரெண்டுபேர் வாழ்க்கைல இருக்கிற பிரச்சனைக்கு…. காரணம்… என் தங்கை லவ் சொன்னதாலா… இல்லை உங்க கடந்த கால வாழ்க்கையினாலா… யோசிச்சு வார்த்தைய விடு…. முதல்ல உங்களத்தவிர நாங்களும் இங்க இருக்கோம்… உன் கோபத்துக்கு காரணம் என்னன்னு தெரிந்தால்தான் என்னாலயும் பேச முடியும்” என்ற போதே….


சந்தியாவும்…


“ஆமாண்ணா… காலையில நான் ஆஃபிஸ் கிளம்பறப்போ கூட இவ்ளோ கோபம் இல்லையே உனக்கு” என்று சந்தோஷிடம் கேட்க…


சந்தோஷ் தன்னிடம் கேள்வி கேட்டவர்களை எல்லாம் பார்க்கவில்லை… மிருணாளினியிடம் தான் அவளிடம் மட்டும் தான் அவன் மொத்தப் பார்வையும் இருந்தது….


சந்தோஷிடம் கேட்ட படியே சந்தியா அவன் அருகில் போக… அதே நேரம் அவனோ


“சொல்லுடி… பிருந்தாகிட்ட போய் என்ன கேட்ட” என்று காட்டுக் கத்தல் கத்த…. சந்தியா அப்படியே நின்று விட்டாள்… சந்தோஷின் கோபத்தில்…


சிலையாய் நின்றவளை… ராகவ் தன் புறம் இழுத்து தன் அருகில் இழுத்துக் கொண்டவனாக


“நீ இடையில போகாத” என்று வேறு சொல்லி… சந்தோஷைப் பார்க்க… அவனும் இவர்களிடம் திரும்பினான்…


“பிருந்தா போன் பண்ணினா…. இவ அவகிட்ட டைவர்ஸ்க்கு அப்ளை பண்ண போயிருந்தாளாம்…” குரலில் மருந்துக்காக கூட உணர்வுகள் இல்லை…. மரக்கட்டை போல் மரத்துப் போன குரலில்… ஆனால் பார்வையிலோ…. அத்தனை வலி… தன்னவளை நம்ப முடியாத வலி….


அவனைப் பார்க்காமல் மிருணாளினி நின்ற போதும்… இப்போது அவளையுமறியாமல் அவன் புறம் திரும்பினாள் மிருணாளினி….


அடிபட்ட துணையின் இதயத்தின் வலி… அதன் துணையின் இதயம் மட்டுமே உணர முடியும்….என்பதைப் போல.. சந்தோஷைப் பார்க்க…


தன்னவளின் கண்கள் தன்னை நோக்கிய அந்த கணமே சந்தோஷின் குரல்… அவனையுமறியாமல் தளர்ந்தது...


“கேட்கிறாடி அவ… லைலா மஜ்னு காதல்... அமரக் காதல்னு சொல்வீங்க என்ன ஆச்சு…. அவ வந்து விவாகரத்துக்கு பைல் பண்ணனும்னு வந்திருக்கா….” சொல்லியபடியே…


மிருணாளினியின் அருகே சந்தோஷ் வந்திருக்க…. ராகவ் இப்போது பயந்து பதட்டமானான் மிருணாளினியின் சகோதரனாக…


எங்கே இன்றும் அன்று போல வெடித்து விடுவாளோ என்று… வேகமாக சந்தியாவை விட்டு நகன்று சந்தோஷின் அருகே போவதற்குள்


சந்தோஷோ தன்னவளின் கைகளை தன் கைக்குள் வைத்தவன்…


”ஏண்டி உன்னையும் கஷ்டப்படுத்திக்கிட்டு… என்னையும் இவ்வளவு கஷ்டப்படுத்துற….” என்ற போதே … அவன் சிறு தொடுகையிலே… அவனது உரிமையையும் ஆறுதலையும் உணர்ந்த மிருணாளினியின் கண்களில் நீர்… அணை உடைத்து வெளியில் வர…


ராகவ்க்கே ஆச்சரியாக இருந்தது மிருணாளினியின் நிலை…. வீட்டில் யார் என்ன கேட்டாலும் கல்லாக சமைந்திருந்தவள்…. கோப முகம் காட்டியவள்… இல்லை மௌன யுத்தம் புரிந்தவள்… இப்போது உணர்ச்சிக் குவியலாக இருந்தாள்…


எரிமலையோ இல்லை பனி மலையோ…. சந்தோஷின் வார்த்தைகள் அவளை எரித்துக் கொண்டிருந்ததோ இல்லை அவளை உருக வைத்துக் கொண்டிருந்ததோ அது தெரியவில்லை அவனுக்கு… ஆனால் சந்தோஷ் மட்டுமே அவளை சமாளிக்க முடியும் என்பதை மெது மெதுவாக ராகவ் மனம் உணர ஆரம்பிக்க…


சந்தோஷின் தவறுகள் எல்லாம் இப்போது எங்கோ போய் விட…. மிருணாளினி எவ்வளவு முயற்சி செய்து அவனை விட்டு விலகி ஓட நினைத்தாலும்… சந்தோஷ் தன் மனைவியை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டான் என்று நன்றாகப் புரிந்தது…


முதல் முறை மிருணாளினியின் முடிவு கண்டிப்பாக இவனிடம் ஜெயிக்காது என்றே தோன்றியது…. இந்த பத்து நாட்களாக மனதில் உறுத்திக் கொண்டிருந்த தன் தங்கையின் வாழ்க்கை பற்றிய கவலை இப்போது பனி போல விலகத் தொடங்கியிருந்தது ராகவ்வுக்கு….


சந்தோஷ் இல்லையென்றால் கூட… அவளை வேறு வாழ்க்கைக்கு தயார்படுத்த அவள் மன நிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று கூட நினைத்திருந்தான் ராகவ்…


இப்போது புரிந்தது சந்தோஷ் இல்லையென்றால்…. மிருணாளினிக்கு எல்லாமே வெறுமை என்பது….


இதற்கு மேல் சந்தோஷ் மிருணாளினிக்கு இடையில் மூன்றாம் மனிதர்கள் தாங்கள் இருப்பது அவ்வளவு உசிதம் இல்லை என்பதை உணர்ந்தவனாக…


அவர்கள் பேசட்டும்… மனதில் இருப்பதை எல்லாம் ஒருவருக்கொருவர் கொட்டட்டும்.. ஒருவேளை பேசித் தீர்த்தால்… பிரச்சனைகள் தீரலாம் என்று எண்ணினான் ராகவ்…


தான் சந்தியாவிடம் திருமணத்திற்கு முன்னால் மனம் விட்டு பேசி இருந்திருந்தால்.. தேவையில்லாத வருத்தங்கள் சந்தியாவுக்கு இருக்காமல் போயிருந்திருக்கும்… தான் செய்த தவறை சந்தோஷ் செய்யாமல் இருக்க வேண்டுமானால் இப்போது அவன் மிருணாளினியிடம் பேச வேண்டும் என்று நினைக்க….


அந்த எண்ணம் தந்த முடிவால்… சந்தோஷ் மிருணாளினி இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்த ராகவ்…. சந்தியாவைப் பார்க்க…


அவளோ இவனை எல்லாம் பார்க்கவே இல்லை…


விவாகரத்து என்ற வார்த்தையில்…


திக்பிரமை பிடித்தவள் போல் நின்று கொண்டிருந்தாள் சந்தோஷ் மிருணாளினியையே பார்த்தபடியே…



/* தேனில் வண்டு மூழ்கும் போது பாவம் என்று வந்தாள் மாது

நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்

தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்றாய்

தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே

கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமையிலே


அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே*/

3,690 views3 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

3 Comments


Saru S
Saru S
May 22, 2020

Lovely update pa

Raguvin Kai regai unarvu pinnal sandiyava kandukola udavumo

Sandos miruna mudivu epadi irukumo

Like

buvi kumar
buvi kumar
May 20, 2020

Super

Like

Nithya D
Nithya D
May 20, 2020

kairegai dialogue superrrrrrb!!!

Like
© 2020 by PraveenaNovels
bottom of page