top of page

சந்திக்க வருவாயோ?-36

அத்தியாயம் 36:

/*பொன்மாலை வேளைகளில்... உன் வாசல் நான் தேடினேன் கண்ணென்னும் ஓடங்களில் கரை தேடி நான் ஓடினேன் கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே காணும் முகம் இன்று எனை வாட்டுதே கண் மைகளில் சுகம் வளர்கின்றதே உன்னில் தினம் உடல் கரைகின்றதே இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர*/

இரவு ஏழு மணிதான் ஆகி இருந்தது… எங்கோ மழை பெய்திருக்கும் போல… அதன் தாக்கம்... பலமான ஈரக்காற்றும்… ஆங்காங்கே அவ்வப்போது வெட்டிய மின்னல்களும்… அந்தப்பகுதியிலும் மழை வரும் போல என்ற தோற்றத்தை அளிக்க… வெளியே வாசலில் உள்ள படியில் அமர்ந்து.. அதை ரசித்தபடியே... சில்லிட்ட கைகளின் நடுவில் நாவலை வைத்து... படித்துக்கொண்டு இருந்தாள் சந்தியா… எப்போதும் தன்னை மறந்து கதையோடு ஒன்றுபவளுக்கு இன்றோ கதையோடு அதன் நாயகன்-நாயகியோடு மூழ்கவே முடியவில்லை… தன் நாயகனின் நினைவுகளில்.. காலையில் இருந்தே நேரத்தை நெட்டித் தள்ள மிகவும் சிரமப்பட்டிருந்தாள் சந்தியா… வேறு வழி இல்லாமல் தான்.. புத்தகத்தில் தன்னைத் தொலைக்க முயற்சித்தாள்… ரகுவின் நினைவுகள் தந்த இனிமையான தாக்கத்தில்.. படிக்க ஆரம்பிக்க… அதிலும் லயிக்க முடியவில்லை பொதுவாக… சந்தோஷமான தருணங்களை கடக்க முயன்றால் புத்தகங்களை கையிலெடுப்பாள் சந்தியா… இதுவே கடினமான தருணங்கள் என்றால்… லாஜிக்.. அனலிடிக்ஸ்... ப்ராப்ளம் சால்விங் என்று தனது துறைக்குள் புகுந்து கொள்வாள்… ஆனால் இன்றைய நிலையோ… ராகவ்வை நினைத்து சந்தோஷப்படுவதா… இல்லை சந்தோஷ் மிருணாவை நினைத்து கஷ்டப்படுவதா… இந்த விசித்திரமான வித்தியாசமான சூழ்னிலையை எப்படி எதிர்கொள்வது என சந்தியாவுக்கே புரியவில்லை... சந்தோஷ் மாலையில் போனவன் தான் இன்னும் வரவில்லை… கணேசன் தன் ஊரில் இருந்து வந்திருந்த உறவுகளிடம் இன்னும் பேசித்தீர்க்க வில்லை போல… இல்லை ராகவ் குடும்பத்தை திட்டித் தீர்க்கவில்லை போல... திவாகர் வீட்டிலிருந்து இருந்து விட்டு இரவு தாமதமாக வருவதாக சொல்லி விட… “மருமகனுக்கும் மருமகளுக்கும் அர்ச்சனை பண்ணி முடிக்கல போல” கடுப்பாகவும் கோபமாகவும் வந்தது தந்தையை நினைத்து… அப்போது…. “சந்தியா” என்று சாப்பிட அழைத்த தாயின் குரலில் தன்னை மீட்டெடுத்தவள்… வேகமாக வீட்டுக்குள் சென்றவள் தன் தாயைப் பார்க்க... வசந்தி ஓரளவு நார்மலாகி விட்டார் என்பதை அவரின் நடவடிக்கைகள் மூலம் உணர்ந்து கொண்டவள் முகத்தில் புன்முறுவல் இப்போது வர… அது தந்த நிம்மதியோடு தாயும் மகளுமாக சாப்பிட்டு முடித்தனர் இருவரும்... ஆனால் அதன் பின் தான் பிரச்சனை ஆரம்பமானது.. ஆம் வசந்தியின் வருத்தம் இப்போது அதன் அடுத்த கட்டமான புலம்பலில் போய் நிற்க… சந்தியாவோ செய்வதறியாது திகைத்து நின்றாள் அதிலும் கணேசன் வீட்டில் இல்லாததால் வசந்தியின் புலம்பல்கள் அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து … அதிகரித்துக் கொண்டிருந்தன… என்றே சொல்லலாம் சந்தோசைத்தான் திட்டி புலம்பிக் கொண்டிருந்தார் வசந்தி… தனக்குள்ளாகவே “படுபாவி.. இப்படி பண்ணிட்டானே…. அப்படியே அப்பா புத்தி… நான் வாழறேன் என்னோட விதி….” என்ற போதே வசந்திக்கு தன் கணவனைப் பற்றிய பழைய ஞாபகங்கள் எல்லாம் வர… கணேசனுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துதானே தற்கொலை செய்யப் போனது… இப்போது நினைத்தாலும் அவமானத்தில் வசந்தியின் உடல் நடுங்கியது… தந்தை செய்த தவறையே நவநாகரீகமாக தன் மகனும் செய்திருக்கிறான்… எண்ணும் போதே வசந்தி மொத்தமாக உடைந்து போயிருக்க… சந்தியாவும் தன் தாயைக் கவனித்துக் கொண்டேதான் இருந்தாள் வெளியில் வசந்தி வாய்விட்டு சொல்லவில்லை… ஆனாலும்… தன் தாயின் எண்ண ஓட்டங்களை புரிந்தவளுக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்றுதான் தெரியவில்லை… ஒரு கட்டத்தில்… தாயின் வேதனை தாளமுடியாமல்... “ம்ம்மா… சந்தோஷ் பண்ணியது தப்புத்தான்மா… ஆனா மோசமானவன் இல்லைமா….. ” என்ற போதே வசந்தி முறைக்க… “ப்ச்ச்.. அப்படி பார்க்காதம்மா…. அவன் எப்பவோ பண்ணினது மா…. அவன... அவன் செஞ்சத நியாயப்படுத்தலை… அவன் பண்ணின மிகப்பெரிய தப்பே மிருணாளினிகிட்ட இருந்து மறச்சதுதான்… ” என்ற போதே… “உனக்கு அதோட வலி தெரியாது சந்தியா… மிருணாளினி மனசு என்ன பாடுபடும்னு எனக்குத் தெரியும்” என்றபோதே… சந்தியாவின் தன்னைப் பார்த்த வலி மிகுந்த பார்வையில் ஏதோ புரிய… அதற்கு மேல் தன்னை மறைக்க முடியவில்லை… மகளுக்கும் தெரிந்திருக்கிறது என்பது அவள் பார்த்த பார்வையிலேயே புரிய... முதன் முதலாக உடைந்து அழ ஆரம்பித்தார் வசந்தி தன் மகளின் மடியில்… தன் மடியில் புதைந்து அழுது கொண்டிருந்த தாயிடம் அதற்கு மேல் விளக்கமும் கேட்கவில்லை… வசந்தியும் விளக்கவில்லை… முடிந்த, முடிக்கப்பட்ட விசயங்களுக்கான விளக்கங்கள் தேவையில்லை… அதிலும் தன் தந்தையின் மறுபக்கம் ஆராய அவளுக்கு பிடிக்கவில்லை… சாக்கடை என்று தெரிந்த பின் கிளர சந்தியாவுக்கு பிடிக்கவில்லை அதுதான் உண்மை… ஆனால் அது முடிக்கப்பட்ட விசயங்களா… இல்லை தொடரப் போகிற விசயங்களா... வெகுவிரைவில் உணர வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருந்தாள் சந்தியா என்பதை அவள் அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை…. தாயின் கண்ணீரை துடைக்கவில்லை, நிறுத்தவில்லை… ஆனாலும் தாய் அழுவதைப் பார்க்கவும் மனம் இல்லாமல்… “எங்களுக்காகத்தானேம்மா நீ இந்த வாழ்க்கையை சகிச்சுக்கிட்டு வாழுற… எனக்குத் தெரியும்மா...” விரக்தி மட்டுமே சந்தியாவின் வார்த்தைகளில்… சந்தியா கண்களில் கண்ணீர் எல்லாம் வரவில்லை … தாய்க்கு தன் புரிதலை மட்டுமே உணர்த்தினாள்… அமைதியாக மகளின் அமைதியில்… அவளின் புரிதலில்… கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார் வசந்தி…. இன்றைய பெண்கள் சிறகிருக்கும் பெண்கள்… தங்களை போல சிறகொடிந்த இல்லை சிறகொடிக்கப்பட்ட பறவைகள் அல்ல… சந்தியாவின் புரிதல் எந்த அளவுக்கு வசந்தியை அமைதிப்படுத்தியதோ… அதே அளவு மிருணாளினியின் தைரியமும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது…. ”பெண்களுக்கு தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு… இந்த உலக விடுதலை மட்டும்தான்… ஆனால் தன்னால் அதுவும் முடியவில்லை… பெற்ற மக்களுக்காக சகித்துக் கொண்டு வாழ்கிறேன்…. ” என்றிருந்த வசந்தியை இன்றைய தலைமுறையினரின் அதிரடி செயல்கள் குணங்கள்... முதன் முதலில் வேறு கோணத்தில் யோசிக்க வைத்தது என்றே சொல்லலாம்.. வசந்தி இப்போதெல்லாம் கணவனைப் பற்றியோ அவரோடான வாழ்க்கையைப் பற்றியோ பெரிதாக கவலைப்படுவதில்லை… மகன் மற்றும் மகளின் வளர்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தன் கூண்டுக்குள் இருந்து வெளியே வந்திருந்தார்… அதிலும் சந்தியா அவளது தாய்க்காகவே அவளது சந்தோசம் மட்டுமே என வாழ்ந்திருக்க… அதில் வசந்தி பெருமிதமாகவே வாழ்ந்து வந்தார்…. ஆம் தனது மக்களின் வளர்ச்சி அவர்களின் புரிதல் என வசந்திக்குள்ளும் இடைப்பட்ட காலத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருந்தது என்பதே உண்மை... இந்த இல்லம் பெயரளவில் மட்டுமே… கணேசனின் வீடு… மற்றபடி இவர்கள் மூவருக்கும் தனி உலகம்… கணேசன் ஊருக்காக, கடைமைக்காக மட்டுமே அப்பா… அப்படி இருந்த தங்கள் வாழ்க்கையில் சந்தோஷின் செயல் வசந்திக்கு மிகப்பெரிய அடியே... நினைவுகள் தாய் மகள் இருவருக்குமே பின்னோக்கிப் போக… சந்தியாவின் முகம் கவலையாக மாறுவதைப் பார்த்த வசந்திக்கு மனம் தாங்குமா… உடனே தன்னை மாற்றியபடி… தன்னை நிலைப்படுத்தி... எழுந்து அமர்ந்தவர்… மகளை முறைத்துப் பார்த்தார்… சட்டென்று மாறிய தாயின் கோப முகத்தை… சந்தியா யோசனையாகப் பார்க்க வசந்தி ஆரம்பித்தார் தன் அறிவுரையை “என்னைப் பற்றி.. சந்தோஷ் பற்றி எல்லாம்… கவலைப்பட்டது போதும்… மாப்பிள்ளை கூட ஒழுங்கா குடும்பம் நடத்துற வழியப் பாரு… நேற்றே வீட்டுக்கு வரனும்னு சொன்ன… வந்தும் சேர்ந்துட்ட… உன் முகத்தைப் பார்த்தால் அப்பாடா தப்பிச்சு வந்துட்டோம்னு திருப்தியா இருக்கிற மாதிரி இருக்கு…. கண்டிப்பா உனக்கும் மாப்பிள்ளைக்கும் எதுவும் சரியா இருந்திருக்காதுனு எனக்குத் தெரியும்… எங்க அவரோட சண்டை போட்டுட்டு வீட்டுக்கு நடுராத்திரியே வந்துடுவியோனு… நேத்து நீ அழுதுட்டு சொன்னதுல இருந்து ஒரே கவலை... அந்தக் கவலையோட படுக்க போனேன்… ஆனால் தலைகீழா மாறி இருச்சு… ப்ச்ச்…” என்று தன் மகளை கவலையோடு பார்க்க… சந்தியாவின் மனமோ… வசந்தியின் மாப்பிள்ளை என்ற அழைப்பில்… மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருக்க… இருந்தும் அதை மறைத்தபடி ”வாம்மா வா… அடேங்கப்பா பொண்ணு மேல ரொம்பத்தான் அக்கறை... நேத்து அப்படி அழுதேனே அப்போ அட்வைஸ் மழை பொழிஞ்சுட்டு… அம்போன்னு அங்கேயே என்னை விட்டுட்டு வந்துட்டு… இப்போ ஃபீல் பண்ற மாதிரி நடிக்கிற …. போ… “ என்று வரிந்து கட்டிக்கொண்டு பேசி பொய்யாகக் கோபம் காட்டியவள் முகமோ சொன்னதற்கு மாறாக நெகிழ்ந்திருக்க அதைப் பார்த்த அந்த தாயின் உள்ளமோ… முதன் முதலாக சந்தோஷத்தில் திளைக்க.… இன்று காலை நடந்தவற்றை அசைபோட்டவருக்கு… காலையில் ராகவ்வின் முகமும்… அந்த கண்களின் வலியும் இப்போது புரிய… மகளிடம் வாஞ்சையாக பேச ஆரம்பித்தார் “காலையில் உன்னைக் கூட்டிட்டுப் போங்கனு வார்த்தையா சொன்னாலும்... அவர் கண்ல அவ்வளவு வருத்தம் இருந்துச்சு… அந்த வார்த்தையையே சொல்ல பிடிக்கல அந்த தம்பிக்கு... பார்த்தாலே தெரிந்தது…. அப்போவே எனக்கு நம்பிக்கை வந்துருச்சு… நீ என்ன கோல்மால் பண்ணினாலும் மாப்பிள்ளை உன்னை விட மாட்டார்னு” என்ற தாயின் வார்த்தைகளில்.. அதுவும் முதன் முதலாக ரகுவைப் பற்றிய தன் தாயின் நம்பிக்கையான வார்த்தைகளில் மனம் சிறகடிக்க… சந்தியா தாயைப் பார்த்தபடி புருவம் உயர்த்தினாள் வியப்பில்… இருந்தும்…. “அப்படியா… உன் மாப்பிள்ளை மேல அவ்வ்வ்வ்வளவு நம்பிக்கையா… அடப்போம்மா… ” நக்கலாக கேட்டவளை முறைத்தாள் அவள் தாய்…. இருந்தும் சந்தியா விடாமல்… “தொல்லை விட்டதுன்னு சந்தோஷமா இருப்பாரு….” அவளையுமறியாமல் ராகவ்வை மரியாதையாக விளிக்க… புன்னகை முகமெங்கும் பூத்திருக்க… அதில் பூரித்திருந்த தன் மகளின் முகத்தைப் பார்த்த வசந்திக்கு… அன்னையாக உள்ளம் நிறைந்தது…. மகன் வாழ்க்கை படு பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது என்றாலும் மகளின் மணவாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்பதை நினைத்து அந்த தாயின் உள்ளம் உவக்கவே செய்தது… அந்த உவகையில் “அந்த அவரு யாரும்மா… நேத்து வரை அவன் இவன்னு மரியாதைனா என்னனு கேட்ட வாய்… இன்னைக்கு மரியாதையை அள்ளிக்கொட்டுது என் மாப்பிள்ளை மேல” என்று மகளை கிண்டலடிக்க… தாயின் கிண்டலில் … மனம் இன்னும் அதிகமாக ரகுவைத் தேட ஆரம்பிக்க… உள்ளம் திறந்தாள் தன் அன்னையிடம்… கண்களில் தன்னவனின் நினைவுகளைத் தேக்கியபடி “ஹ்ம்ம்… ரகு ரொம்ப நல்லவர்மா… சத்தியமா அவர்கிட்ட இதை எதிர்பார்க்கலை…. என்றவள்…

“நான் அவரை ரொம்ப்ப்ப மிஸ் பண்றேம்மா… நேத்து வரை நீங்க மட்டும் போதும் எனக்கு… ஆனா இன்னைக்கு நீங்க பக்கத்திலதான் இருக்கீங்க… ஆனாலும்… ரகுவைத் தேடுதும்மா மனசு… எல்லாமே இன்கம்ப்ளீட்... ஒரே நாள்ள இப்படிலாம் மாறுவாங்களாம்மா… இல்லை எனக்குத்தான் சம்திங் ராங் ஆகிருச்சா" தாயிடம் தன் ஏக்கங்களை… சந்தேகங்களை எல்லாம் பேச ஆரம்பித்தபடி தன் அன்னையின் மடியில் சாய்ந்தவள்… ராகவோடு பேச முடியாத ஏக்கத்தை எல்லாம் அவனைப்பற்றி பேசியாவது தீர்க்கலாம் என்று பேச ஆரம்பித்தாள் … தன் தாய் வசந்தியிடம் ராகவ் எடுக்காமல் போக... தன் மாமனார் சுகுமாருக்கு கூட அழைத்திருந்தாள்…. ஆனால் அவரும் இவளின் அழைப்பை எடுக்க வில்லை… சந்தியாவிடம் என்ன பேச… எதைப் பற்றி பேச… இருக்கும் நிலைமையில் சந்தியாவிடம் கோபமுகம் காட்டி விடுவோமோ என்று சுகுமார் சந்தியாவிடமிருந்து வந்த அவளது அழைப்பை எடுக்க தயங்கினார் என்பது அவர் மருமகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை…. தன் மகன் சந்தியாவோடு சுமூகமாக இல்லை இதுதான் அவரைப் பொறுத்தவரை அவருக்கு தெரிந்த விசயம்... சந்தியா ராகவ் உறவினைப் பற்றி…. நேற்று என்ன நடந்திருக்குமோ அது அவர் அறியா கதை… ஆனால் ராகவ்… ’உன் பொண்ணை அழைத்துக்கொண்டு போ’ என்று கணேசனிடம் வீராவேசமாக எப்போது சொன்னானோ… அது இன்னும் அவருக்கு வருத்தத்தை அதிகமாக்கி... இருவருக்குமான உறவு இன்னும் சுமூகவாகவில்லை… என்றுதான் நினைத்து வருந்தினார்… மருமகளிடமும் பேசத் தைரியமில்லை அவருக்கு… ஆக பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு பிடித்த கதையாக மாறி இருக்க… தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தார் … சுகுமார் மனதளவில்... அது தெரியாத சந்தியா…. தன் மாமனார்…. தன்னோடு பேசவில்லை என்ற வருத்தத்தில் இருந்தாள்… அதோடு ராகவ்வின் போன் ஏன் ஸ்விட்ச் ஆஃபாக இன்னும் இருக்கிறது என்ற குழப்பம் வேறு… தொடர்பு கொண்டு தொடர்பு கொண்டு அலுத்துப் போய்… ஒரு கட்டத்தில் போனை அறையில் கட்டிலில் தூக்கி போட்டு விட்டு வந்தவள் அன்னையோடு பேச ஆரம்பித்து…. வசந்தியின் அறையிலேயே இருந்து விட…. இந்த ஒரு மணி நேரத்தில்தான் ராகவ் சந்தியாவை அழைத்து அழைத்து அவள் எடுக்காமல் போக…. அந்தக் கடுப்பில் சந்தியாவின் மீது ஏக கோபத்தில் தன் அறையில் படுத்திருந்தான்…. இதெல்லாம் அறியாத அவன் மனைவி… தனக்கும் தன் கணவனுக்குமான உறவின் சுமூக நிலையை விளக்கிக் கொண்டிருந்தாள்…. தன் தாயிடம் வசந்தியிடம் இப்போது நிம்மதி பெருமூச்சு மட்டுமே இருக்க… “ப்ச்ச் ஆனாம்மா…. இதுவரை ரகு பேசவே இல்லை …. நான் ட்ரை பண்ணினாலும் போன் ச்விட்ச் ஆஃப்” கவலையோடு மொழிந்தவளிடம்.. கண்டிப்பாக அவளது ரகு அவளிடம் பேசுவான் என்பதை திண்ணமாகச் சொல்லி தன் மகளைத் தேற்றியவர்…. மணி ஒன்பதைத் தாண்டி இருக்க…. “இப்போ போ.. ட்ரை பண்ணிப் பாருடா… அவருக்கு என்ன பிரச்சனையோ… பேசும் போது கோபப்படாமல் பேசு...” என்று மகளிடம் எடுத்துச் சொல்ல… ”போனே ஸ்விட்ச் ஆஃப்… எங்கிட்டு பேச… இதுல கோபம் வேற படக் கூடாதா… ஹ்ம்ம்ம்… சப்போர்ட்டு.. வேற.” அலுத்தவளாக… “சந்தோஷ் வரலைனு சொல்லிட்டான்… அப்பாவும் வரமாட்டாராம்…. நீ மாத்திரை போட்டுட்டேல்ல…. நானும் கதவை லாக் பண்ணிட்டு தூங்க போகிறேன்…” என்று சொன்ன போதே மாடியில் உள்ள போர்ஷனில் சன்னல் கதவுகள் அடைக்கப் படவில்லை போல… காற்றில் டம் டம் என்று சத்தம் இட்டு ஆடிக் கொண்டிருக்க… “மேல சன்னல்லாம் ஒழுங்க லாக் பண்ணல போல சந்தியா... மேல போய் லாக் பண்ணிட்டு வந்திறலாமா” என்று சந்தியாவைப் பார்த்தார்… வசந்திக்குத் தெரியும் தன் மகளைப் பற்றி… அவள் தனியாக தைரியமாக இருக்கும் ஒரே இடம் அவள் அறை மட்டுமே… மகளைக் கணித்து வசந்தி சொல்ல மகளோ… உடல் நிலை சரியல்லாமல் இருக்கும் தன் அன்னையைக் கணித்து...... அவரை அலையவைக்க மனம் இல்லாதவளாக… “வசந்தி… இன்னும் என்னை சின்னப் குழந்தைனே திங்க் பண்ணிட்டு இருக்கியா… நீ போய்ப் படு.. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று தாயிடம் தைரியமாகச் சொல்லி அவரை படுக்க அனுப்பியவளுக்கு… மாடிப்படியில் ஏறும் போதே உள்ளுக்குள் கொஞ்சம் கிலி தான்… அதிலும் ஊதக்காற்றும்… மின்னல் வெட்டும்… சற்று முன் ரசித்த காட்சிகள் தான்… ஆனால் இப்போது பயத்தை ஏற்படுத்த… “சந்தியா… இந்த வீட்டுக்கே… இப்டி பயந்தேன்னா… இந்த ட்ரிப்பிள் ஆர் வேற காட்டுக்கு நடுவுல வீட்டைக் கட்டி வச்சுருக்கானே… இப்போலாம் என்னைக் கூப்பிட்டா போகவே கூடாது சாமி… அந்த வீட்டுக்காகவே நான் அஞ்சாறு புள்ளைய பெத்துக்கனும் போல… அதுக்கப்புறம் குடும்பம் குட்டியா ஒரு கும்பலா அந்த வீட்டுக்கு போகனும்..” என்று நினைத்தவளுக்கு எண்ணம் தந்த கிளுகிளுப்பு… புன்னகையை தர மனசாட்சியோ அவளை எள்ளி நகையாட ஆரம்பித்து இருந்தது ”அடிப்பாவி… தனியா இருக்க பயந்துட்டு அஞ்சாறு பிள்ளையா… அதுக்கு உன் புருசன் சம்மதிக்கனுமே” என்று வேறு உசுப்பேற்ற… ”ஹான் நான் கேட்டு என் ரகு மாம்ஸ் வேண்டாம்னு சொல்லிடுவாரா என்ன” என்று மனசாட்சியும் அவளுமாக… ரகுவைப் பற்றியும் அவள் எதிர்கால வாழ்க்கைப் பற்றியும் விவாதம் நடத்திக் கொண்டே… மாடி போர்சன் சன்னல் கதவுகளை அடைத்து விட்டு வெளியே வர… அதே நேரம் திடீரென்று மின்சாரம் நின்று விட… அந்த தெருவே கும்மிருட்டாக காட்சி அளித்தது… தெரு மின்விளக்குகள் ஒளிராததால் ரகு.. குழந்தைகள் என குதுகலித்துக் கொண்டிருந்த அந்த மனதில்… இப்போது பயப்பந்து மட்டுமே… கட கட வென மாடிப்படிகளில் இறங்கி…. அடுத்த இரண்டே நிமிடங்களில் வீட்டுக்குள் வந்து கதவை அடைத்தவளின்… மனமெங்கும் திக் திக் தான்… வீட்டில் இன்வெர்ட்டர் இருந்ததால் சந்தியாவின் வீட்டுக்குள் மின்சாரம் தடைப்பட்டிருக்கவில்லை… ”ஹப்பா… ரூம் வந்து சேர்ந்துட்டோம்” ஒருவழியாக… பயம் நீங்கி… தான் அறைக்குள் வந்து… தன் கட்டிலில் விழுந்தவளுக்கு… உடல் அசதி இப்போதுதான் அதிகமாகத் தெரிந்தது... நேற்றைய சரியில்லாத உடல்னிலை இன்றைய வேலைப்பளுவில் இன்னும் பலவீனமாக அவளை மாற்றி இருக்க… தானும் இந்த நேரத்தில் சோகத்தில் மூழ்கினால் அங்கு நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கும் என்பதால்தான் தன் அசதியை வெளியே காண்பிக்காமல் காலையிலிருந்து உலவி வந்தாள்… நிரஞ்சனாவுக்கும் காலையிலேயே பேசியிருந்ததால்… அவளைப் பற்றியும் அவள் அன்னையைப் பற்றிய கவலையும் இல்லை இப்போது… ஆக ரகுவின் குரலைக் கேட்காததே அவளின் இப்போதைய பெரிய மனச்சோர்வாக இருந்தது…. மனச்சோர்வு அவளின் உடல் சோர்வை அதிகமாக்கியது என்றே சொல்ல வேண்டும்... ரகுவின் பேசவேண்டும் என்று உள்ளம் துடித்தது… அவனுடன் அருகில் தான் இருக்க முடியவில்லை… குறைந்த பட்சம் அவன் குரலையாவது கேட்க மனம் ஆவலாய் துடிக்க… அது இயலாத காரணத்தால் ஏனோ அனைத்தும் வெறுமையாகத் தோன்றியது சந்தியாவுக்கு… காலையில் இருந்து தொலைக்காட்சி… அலைபேசி என எதுவும் அவளை... அவள் மனதை திசைதிருப்ப வில்லை….அவளுக்கு மிகப்பிடித்த நாவல் கூட படித்துப் பார்த்தாள்…. அதில் கூட அவளால் மூழ்க முடியவில்லை…. சொல்லப் போனால் இங்கு இருக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு… ஒரே இரவில் தன்னை அவன் புறம் விழ வைத்தவனை நினைத்தபடி... செல்லமாகத் திட்டியபடி…. படுத்தவள்… அந்த கட்டிலின் மறு முனையில் அனாதையாகக் கிடந்த மொபைலை எடுத்து… அட்லீஸ்ட் வாட்ஸப் பண்ணி விட்டாவது தூங்குவோம் என்று அதை உயிர்ப்பிக்க…. அப்போது அதன் அழைப்பு விபரம் திரையில் தெரிய… அது அவளுக்குள் உற்சாகத்தைத் மொத்தமாக மீட்டெடுத்துக் கொடுக்க… வேக வேகமாக ராகவ்வுக்கு அழைத்தாள்…. அவள் அழைத்த அடுத்த நொடியிலேயே … நொடி என்பது கூட அதிகம்… ரிங் போன சத்தம் கூட இவளுக்கு கேட்கவில்லை … மாறாக ராகவ்வின் கோபக் குரலே அவளை அடைந்தது… மீண்டும் சந்தியாவைப் பார்க்கும் போது எப்படி பார்ப்போம்.. அவளோடு பேசும்போது எப்படி பேசுவோம்…என்று காலையில் குற்ற உணர்ச்சியில் மனம் குமைந்தவன்… இப்போது அவள் குரலை மீண்டும் கேட்ட போது.. குற்ற உணர்ச்சி எல்லாம் வேறு கிரகத்திற்குச் சென்றுவிட… அக்மார்க் கணவனாக கோபப் பட்டான்… “நேத்து ஒருத்தன் உன் கழுத்துல தாலி கட்டினானே…. அந்த இளிச்சவாயனப் பற்றி மேடமுக்கு ஞாபகம் இருக்குதா என்ன…” படபடவென்று பொரிந்தான் ராகவ்... சொல்லப்போனால் சந்தியாதான் கோபத்தில் கத்தி இருக்க வேண்டும்.. காலையில் இருந்து அவன் தவிக்க விட்டதற்கு… அவன் போன் எடுக்காமல் போனதற்கு… ஆனால் அவன் கோபத்தில் இவளுக்கு கோபம் எல்லாம் வரவில்லை…. மாறாக “ஹ்ம்ம்ம்ம்… கண்டிப்பா… முந்தின நாள் தாலி கட்டிட்டு… நைட்டெல்லாம் கண்ணே மணியேனு கொஞ்சிட்டு… அந்த சுவடே இல்லாமல்... அடுத்த நாளே.. அவள அவ பிறந்த வீட்டுக்கும் அனுப்பிட்டு… கூடவே காலையில இருந்து போனையும் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சுட்டு…. இப்போ கோபமும் பட்டு… ரொம்ம்ம்ம்ம்ம்ப இளிச்சவாயன் தான் அவன் … நான் தான் கோபக்காரி” என்று அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லிவிட்டு… சிரிக்கவும் செய்ய அவள் தன்னைப் பற்றி பேசிய விதத்தில்…. அதையும் கோபம் எல்லாம் இல்லாமல் சொன்ன விதத்தில்… மனம் நெகிழ்ந்தவன்… ராகவ் தான் ”சாரி சந்தியா… அந்த சிச்சுவேஷன்ல எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.. நான் அப்படிசொல்லிட்” என்று அவன் தடுமாறிய போதே… அவனை முடிக்க விடாமல் “தெரியும் ரகு… நீ என்னை வேணும்னே போகச் சொல்லலை… உன் மனசால சொல்லலைனும் போது எனக்கு என்ன வருத்தம்.. அதுக்கு எதுக்கு சாரி” என்றவள்… மிருணாளினியைப் பற்றி கேட்க… வீட்டில் காலையில் இருந்து நடந்த அனைத்தையும் ஒப்பித்தவன்… கடைசியாகக் இவளிடம் கேள்வியை வைத்தான்… “சோ உனக்கு சந்தோஷ் பற்றி முன்னாலேயே தெரியும்…” என்றபடி கோபத்தில் அமைதியாக நிறுத்தினான்… அவன் கோபம் புரிந்தது அவன் மனைவிக்கு… ஆனாலும் பதிலுக்கு கோபப்படாமல்... “தெரியும் ரகு… ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் யாரும் கட்டாயக் கல்யாணம் பண்ணி வைக்கலையே… 2 வருசமா லவ் பண்ணவங்க அவங்க… இவன் சொல்லி இருப்பான்னு நெனச்சேன்… சந்தோஷ் மிருணாளினிய லவ் பண்றேனு சொன்னப்போ… இந்த விசயத்தை அவன்கிட்ட என்னமோ கேட்கப் பிடிக்கலை… விட்டுட்டேன்…. இதுல என் மேல கோபப்பட என்ன இருக்கு… அதே போல… உங்ககிட்ட சொல்லவும் எனக்கு பிடிக்கலை… ஓகே… ஒத்துக்கிறேன்... நீங்கதான் எனக்கு எல்லாம்னாலும்… நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் ஒளிவு மறைவு இனி இல்லைனாலும்…. இது என் அண்ணனோட ப்ரைவசி… என் அண்ணாவைப் பற்றி நான் எப்படி சொல்ல முடியும்..” என்றவளின் நிறுத்திய நிதானமான வார்த்தைகளில் அவள் சொன்னதை உணர்ந்து தலை ஆட்டியவன்… மனதினுள்ளோ… “ஆனால் தன் தங்கை …. தன் மனைவி செய்ததற்கு எதிர்மறையாக செய்து விட்டாளே... உண்மையான காதல் என்ற போதிலும் தன் கணவனைப் பற்றின கேவலமான விசயத்தை பல பேர் முன்னிலையில் கூவி கூறு போட்டு விட்டாளே…. இன்னும் பொறுமையாக நிதானமாக நிலைமையை மிருணாளினி கையாண்டிருக்கலாமோ” என்ற எண்ண ஓட்டம் ஓட... அதன் விளைவு சில நிமிடம் வேறு ஏதும் பேசாமல் இருக்க… எதிர்முனை அமைதியாக இருக்க… அதை உணர்ந்தவள்… “ ரகு” என்று மென்குரலில் அழைக்க… ராகவ் பேச ஆரம்பித்தான். “என் தங்கையை அவன் மேரேஜ் பண்ணிருக்கான் சந்தியா… அந்த காரணத்துக்காகவது என்கிட்ட நீ சொல்லிருக்கனும்… அட்லீஸ்ட் பிரச்சனைனு மிருணாளினி காலையில வந்து நின்ற போதாவது சொல்லிருக்கலாமே சந்தியா” மிருணாளினியின் சகோதரனாகவே பேசிக் கொண்டிருந்தான் ராகவ் சந்தியாவுக்கு இப்போது கொஞ்சம் எரிச்சல் வந்தாலும்… அதை அடக்கியபடி… “எனக்கு என்ன தெரியும் ரகு… இதுக்காகத்தான் மிருணா.. வந்தா… வந்தாங்கன்னு…” பட்டென்று சொன்னவள்… அடுத்த நிமிடமே… மிருணாவின் வேதனையை உணர்ந்தவளாக… “வேற ஏதாவது இருந்து இதை வேற நான் சொல்லி பிரச்சனை இன்னும் பெருசா ஆகிருமோனுதான்… சொல்லலை... போதுமா… இன்னும் வேறு ஏதாவது விளக்கம் வேண்டுமா… மன்னிச்சுக்கங்க.. ” என்று கடுப்பாக முடிக்க.., முழுவதுமாக மனைவி என்ற அதிகாரத்தைக் கையில் எடுத்தவளை… எதிர்த்து எதிர்முனை இதற்கு மேலும் பேசுமா என்ன… கப்சிப் என்று சராசரி கணவனாக மாறி விட்டிருந்தான் ராகவ்… எதிர்முனை நிசப்தத்தில்… போனை தன் புறம் திருப்பிப் பார்த்தாள் சந்தியா… எங்கு அழைப்பு கட்டாகி விட்டதோ என்று… அப்படி எதுவும் இல்லை “ரகு ரகு “ என்று இரண்டு மூன்று முறை அழைக்க.. அதன் பின்புதான் அங்கு மௌனம் கலைந்தது ”ஹ்ம்ம்… லைன்ல தான் இருக்கேன்" என்றவனின் குரல் ஏக்கத்துடன் ஒலிக்க.. அந்த ஏக்கமான குரலும்… அது சொன்ன ஆயிரம் அர்த்தங்களும்... இவளுக்கும் புரிய…. “ஐ மிஸ் யூ ரகு” சொன்னபோதே அவளையுமறியாமல் அழ ஆரம்பிக்க… எப்படி இப்படி ஆனோம் என்றே தெரியவில்லை அவளுக்கு…. சிறு குழந்தை போல மாறி இருந்தாள்… ரகுவின் மனைவி... “சகி… சகி.. சந்தியா” அவனின் குரல் அவளைத் தேற்ற போதாது என்பது போல இன்னும் வேகமாக அழ…. சற்று முன் தெளிவாகப் பேசிய சந்தியாவா இது.. மனைவியாக தன்னை அதிகாரம் செய்த சந்தியாவா இது... என்றே தோன்றியது ராகவ்வுக்கு…. பிரிவுத் துயர்… இந்த அளவுக்கு மாற்றுமா ?? “ப்ளீஸ்டா… அழாதடா…. காலையில நான் சொன்னப்போ… தைரியமா இருந்த என் சந்தியாவா இது…" இப்போது ராகவ் ஓரளவு தன்னை சமாளித்துக் கொண்டிருந்தான்… சந்தியாவைப் போல நேற்று திடிரென முளைத்த காதல் இல்லையே அவனுக்கு…. இரண்டு வார காலம் அவள் மேல் அவன் வளர்த்து வைத்த காதல்… அவனை நிதானத்திற்கு வர வைத்திருந்தது… இன்று சந்தியா தவித்த தவிப்பை போலத்தான் அன்றிருந்தது அவன் காதல் உணர்ந்த தினம்… அன்று ஆக்சிடெண்ட் ஆன போது…. மயக்கத்தில் இருந்த சந்தியாவை சந்தோஷிடமும் மிருணாளினியிடமும் ஒப்படைத்து விட்டு போன போது … எந்த நிலையில் இவன் இருந்தானோ அந்த நிலையில்தான் இன்று சந்தியா இருக்கிறாள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்க தனக்குள் புன்னகைத்துக் கொண்டிருந்தவனை… சந்தியாவின் குரல் மீண்டும் மீட்டெடுக்க… தன் மனைவியின் புலம்பல்களை காதலோடு ரசிக்க ஆரம்பித்தான்... “அப்போ அவ புருசன் மேல இருந்த நம்பிக்கை… தைரியமா இருந்தேன்… இப்போ அவன் இல்லாமல் ஒரு நிமிசம் கூட இருக்க முடியலை… என்னடா பண்ணின என்னை…இப்படி மாத்திட்ட” அழுகை நின்றிருந்தாலும் அவள் குரல் இன்னும் ஙஞணநமன வாசிக்க…அவளைத் தேற்றத் துடித்த கரங்களை அடங்கியபடி ”ஹ்ம்ம்… சொல்லுவடி… நான் அழனும் ஆக்சுவலா… “ என்று கோபத்தில் சொன்னாலும் மனைவிக்கு தன் மீது இருக்கும் காதல் உணர்ந்தவனின் குரல் இறுதியில் கெஞ்சலாக கொஞ்சலுடன் அவன் மனைவியைச் சென்றடைய… “போடா…. பெட்சீட் கூட போர்த்த பிடிக்கலை…. இப்போ நான் எப்படி தூங்கறது… எனக்கு பேய் பயம் வேற…. இதுல காத்து மின்னல் வேற… ஒழுங்கா இன்னைக்கு என்கிட்ட பேசிட்டே இரு…. நான் தூங்கற வரை… ” என்ற கொஞ்சலில் ஆரம்பித்து மனைவியாக ஆணையிடும் குரலில் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தவன் “ஆனால் நான் ஒண்ணுமே பண்ணலையேடி… அதுக்கே… இவ்வளவு ஃபீல் பண்ற… அப்போ நான் உன்கிட்ட உன் புருசனா என் வேலையக் காட்டியிருந்தேன்ன ” என்று ஆரம்பித்து…. இந்தப்புறம் முகம் சிவக்க ஆரம்பித்து இருந்த தன் மனைவியை வார்த்தைகளினாலேயே தன் அந்தபுரத்திற்கு அழைத்து சென்றிருந்தான் அவள் கணவன்… சில நொடிகள்… சில வினாடிகள்… என கடந்து பல மணி நேரங்களாகத் தொடர்ந்தன அவர்களின் தொலைபேசி உரையாடல்கள்… வீடியோ கால் ஆடியோ கால் என மாறி மாறியும்.. அந்த உரையாடல்கள் அனைத்தும் அவர்களுக்கே அவர்களுக்கான அந்தரங்கமாகி இருக்க… முடிவில் “சகி … நாளைக்கு ஆஃபிஸ் போறேனு சொல்லிட்டு என் ஆஃபிஸ் வந்திரு…. உன் லீவ் முடியற வரைக்கும் ப்ளீஸ்..” என்றவனின் வார்த்தைகளை தட்ட முடியாமல் சம்மதம் சொன்னவள்… “அம்மா பிரச்சனை இல்லை… அப்பாவை சமாளிச்சுறலாம்…” என்று தனக்கு சொல்வது போல அவனிடம் சொன்னவள்…. ஏதோ உணர்ந்தவளாக “போனை வைக்கப் போறியா ரகு” என்ற போது அவள் குரல் அவளுக்கே கேட்காமல் போய் விட… அவனுக்கு மட்டும் வைக்க ஆசையா என்ன போனை வைக்க… நேற்றும் ஒழுங்காகத் தூங்க வில்லை…. இன்றும் ஒழுங்காகத் தூங்கவில்லை… அவள் வாயிலாக அறிந்தது… சந்தியா தூங்கட்டும் என்று நினைத்தே அழைப்பைக் கட் செய்யப் போனான் ராகவ்… ஆனால் அவளின் ஏக்கம் இவன் மனதைப் பிசைய ஆரம்பித்தது… மனைவியின் ஏக்கத்தை போக்க முடியாத தன் கையாளாகாத தனத்தை நினைத்து அவன் மீதே அவனுக்கு வெறுப்பாக வர… தன்னை அடக்கிக் கொண்டவனாக “கொஞ்ச நாள்தாண்டா… மிருணாளினி என்ன முடிவெடுக்கிறாள்னு பார்ப்போம்… அது சாதகமோ பாதகமோ…. பட் இப்போ அவ இருக்கிற நிலைமைல நீ இங்க இருந்தா சரியா இருக்காது சந்தியா…” என்றவன்… அவள் ஏதோ பேச ஆரம்பிக்க… ஆனால் அவள் பேசும் முன்னேயே… “உன்னை உன் அம்மா வீட்டுக்கு போகச் சொன்னதோட ரீசன் நீ சந்தோஷோட தங்கைன்ற காரணத்தினால இல்லை…. என் மனைவின்ற காரணத்தினால்… எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோ சந்தியா ப்ளீஸ்” அமைதியாகவே அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டவள்… மணியைப் பார்க்க மணி இரண்டைக் கடந்திருக்க… ”சரி ரகு… நீ தூங்கு… எனக்கும் தூக்கம் வருகிற மாதிரி இருக்கு.. தூங்க ட்ரை பண்றேன்… ” என்க.. ”ராட்சசி… தூக்கம் வருதுன்னு சொல்றாளா… தூக்கம் வருகிற மாதிரி இருக்கு… ட்ரை பண்றேன்னு… சொல்லி… என் தூக்கத்தை கெடுக்கிறாளே… என்று மனதுக்குள் செல்லமாகத் தன்னவளை திட்டியபடி… அவளிடமோ… “இப்பவும் தூக்கம் வரலை உனக்கு… வர்ற மாதிரிதான் இருக்கா” கரகரத்தது அவன் குரல்.. சற்று நேரம் பதிலே பேசாமல் இருந்தவள்… பின் "எனக்கு நிம்மதியா தூக்கம் வரணும்னா நீ என் பக்கத்தில் வேணும் ரகு…முடியாதுதானே உன்னால... அப்போ கேள்வி கேட்காத " வெட்கம் எல்லாம் பட வில்லை சந்தியா இதைச் சொல்ல… அவள் நிலைமை இதுதான் இப்போது…. மனைவியிடமிருந்து ஒரு கணவனுக்கு இதை விட வேறென்ன வேண்டும்… உருகியது இப்போது அவள் கணவனே… அதில் அவளிடம் நாளை சொல்லலாம் என்று மறைத்து வைத்த விசயத்தை.. சொல்ல முடிவெடுத்தவனாக ”ஒக்கே… எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணனும்… அதாவது… இப்போ நான் சொல்லப் போகிறதைக் கேட்டு… என்னை உடனே பார்க்கனும்… இல்லை உன்னை நான் வந்து பார்க்கனும்னு அடம்பிடிக்க மாட்டேன்னு … ப்ராமிஸ் பண்ணனும்.. பண்ணினால்… உனக்கு ஒரு முக்கியமான விசயத்தை சொல்வேன்..” என்று பீடிகை போட… சந்தியா குழம்பினாள்.. “அப்படி நீ என்ன சொல்லி… நான் உன்னை பார்ப்பேன்னு அடம்பிடிக்க போகிறேன்… ஹ்ம்ம்.. சும்மா சொல்லு ரகு… ” என்று கேட்க … இவனோ… “ப்ராமிஸ்…” ஒற்றை வார்த்தையில் முடிக்க… “ஓகே ஒகே… ப்ராமிஸ்…” என்க… ”செண்டென்ஸ் கம்ளீட் பண்ணி ப்ராமிஸ்…” கறாராக நின்றான் ராகவ் தன் வார்த்தைகளில் எரிச்சலின் உச்சத்திற்கு போன சந்தியா… “அவனவன் ப்ரப்போஸே பண்ணாத லவ்வரப் பார்க்கலாம்… சுவரேறிக் குதிச்சு… ரோமியோ வேலை பார்க்கிறான்... நாம அப்டியா… பேர்லயே இருக்கே ராசி கரெக்டா வொர்க்அவுட் ஆகிருச்சே இந்த ராமனுக்கு… ஒரே நாள்ல கட்டின பொண்டாட்டிய வீட்டை விட்டு போகச் சொன்ன கலியுக ராகவ ரகு ராமன் நீதான்… ஆனாலும் எனக்கு ஒரே ட்வுட் தான் ரகு” என்று இடைவெளி விட ரகு சன்னமாகத் தனக்குள் சிரித்துக் கொண்டான்… இருந்தும்… “இதுக்குத்தான் அதிகமா ரொமான்ஸ் நாவல் படிக்கக் கூடாதுன்னு சொல்றது… சுவரேறி குதிச்சு.. கைகால்லாம் அடிபட்டு… எங்கள ரத்தம் சிந்த வைக்கிறதுன்னா… உங்களுக்கு ஏன் இவ்வளவு குதுகலம்… for your kind information நீ என் பொண்டாட்டி.. என் வைஃப பார்க்கிறதுக்கு நான் எதுக்கு சுவர் ஏறிக் குதிச்சு வரணும்... வாசல் வழியாகவே வருவேன்…" நக்கலாக ஆரம்பித்து கெத்தாக முடிக்க "ஹம்க்கும்… சுவரேறத் தெரியாதுன்னு டேரெக்டா சொல்லு ரகு.. இதுக்கு எதுக்கு என் பொண்டாட்டி என் மனைவினு வெட்டி டையலாக் பேசி கடுப்பேத்துற…" சந்தியா சலிக்க “அதை விடு… என்ன டவுட் சகி பேபி உனக்கு...” மனைவியின் சந்தேகத்தை தீர்க்கும் தீவிர தொணியே இருக்க… “இல்லை... இந்த தலையணை மந்திரம்… முந்தானை முடிச்சு… இதெல்லாம் உன்கிட்ட ஒர்கவுட் ஆகலையாடா” மென்று விழுங்கினாள் வார்த்தைகளை “அடிங்… வாயில ஏதாவது வந்துறப் போகுதுடி… மந்திரமா… அதுக்கான அச்சாரத்தைக் கூட நீ ஸ்டார்ட் பண்ணலை… போர்வையை தலை வரை போர்த்துனவ எல்லாம் தலையணை மந்திரம்… முந்தானை முடிச்சுலாம் இதைப் பத்திலாம்… இதைப் பத்தி என்ன அந்த வேர்ட்ஸ் கூட பேச ரைட்ஸ் கிடையாது..” கணவனாக பொறுமித் தீர்க்க… சந்தியா சைலண்ட் மோடுக்கு சட்டென்று மாறினாள்… நல்ல பிள்ளையாக "இப்போ நாம என்ன சொல்லிட்டோம்னு… ரகு மாம்ஸ் இந்த எகிறு எகிறுறான் …" என்று மனதுக்குள் நினைத்தவளாக “டிர்ப்பிள் ஆர்… மேட்டர் என்னன்னு சொல்லுங்க…. ஏதோ சொல்லப் போறிங்கன்னு சொல்ல வந்ததா ஞாபகம்…” எகத்தாளமாக கேட்க… எழுந்து அமர்ந்தவன்… “சத்தியப்பிரமாணம் கேட்டேண்டி… வார்த்தை மாறாமல் சொல்லு பார்க்கலாம்” “ஹப்பா… இம்சை டா நீ... சொல்லித் தொலையுறேன்…” “நீ எவ்வளோ பெரிய லவ் டைலாக் பேசினாலும்…” என்று ஆரம்பிக்க… வழவழ டைலாக்லாம் பேசாதடி… “இன்னைக்கு நைட்… நைட் என்ன இப்போ நீ சொல்லபோறதைக் கேட்டு உன்னை பார்க்கனும்னு அடம்ப்பிடிக்க மாட்டேன்… உன்னையும் என்னைப் பார்க்க வரச்சொல்லி அடம்பிடிக்க மாட்டேன்… ப்ராமிஸ் ” வேக வேகமாக அவசரமாக சொல்லி முடித்தவள்… “சொல்லு ரகு” என்று அரைத் தூக்கத்தில்… சிணுங்கலாகச் கெஞ்சியவளிடம்… ”ம்க்கும்” என்று தன்னை மீட்டுக் கொண்டு… தொண்டையைச் செறுமியவன்… “எங்க சொல்லு பார்க்கலாம்… “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” புருசான்னு இல்லை ட்ரிப்பிள் ஆர்… இல்லை ரகு மாம்ஸ்னு முடிக்கலாம் அது என் பொண்டாட்டி இஷ்டம்..” கிண்டலாகச் சொன்னாலும்… மனைவி தன் அருகில் இல்லை என்ற வலி குரலில் முற்றிலுமாக இருக்க… எதிர்முனை… அதிர்ச்சியில் உறைந்து போய்க்கொண்டிருப்பது நன்றாகவே ராகவ்வுக்கு புரிய… இருந்தும் தொடர்ந்தான் ரகு “என்னோட இந்த பிறந்த நாளை என் சகியோட ஸ்பெஷலா கொண்டாடனும்னு என்னென்னவோ கற்பனையில் இருந்தேன்… சந்தியா” குரல் தழுதழுத்தது, அது அவனுக்கு… இயலாமையில் வந்த வருத்தமாக இருக்க… கணவனின் அந்த வருத்தம் மட்டுமே போதுமானதாக இருந்தது. சந்தியா என்ற உறைந்த பனி சிற்பத்தைக் கண்ணீராக மாறி கரைக்க…

/*சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன் காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே*/

1,701 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page