ஹலோ ஃப்ரெண்ட்ஸ்
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்…
படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க… கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றிகள்…
குறிப்பு:
அப்டேட் எழுதி வச்சும் கொடுக்க முடியல... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.... சீக்கிரம் களத்துல இறங்கிறலாம்...
நன்றி
உங்கள் பிரவீணா…
அத்தியாயம் 8:
நாயகன்:
என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ…
ஓஓ…இல்லை ஏமாற்றம் தருவாளோ…
நாயகி :
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ.. மன்னவா வா வா
அந்த இரவில் ராஜசேகர் உள்ளே நுழைந்த போதே தன் கோபத்தை வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் உணரும்படி வர... அவர் வந்த சத்தம் கேட்டு பதறி அவரை நோக்கி ஓடியது மேகலா மட்டுமல்ல… வீட்டில் இருந்த அத்தனை பேரும் தான்
“அவன் எங்க… உன் உத்தம புத்திரன்…” உன் உத்தமபுத்திரன் என்ற அந்த ஒரு வார்த்தையிலேயே கணவனின் கோபம் எந்த அளவுக்கு என்பது மேகலாவுக்குப் புரிந்தது…
”ராஜா… என்னப்பா நடந்துச்சு… கார்த்திக் இன்னும் வரலயே… உனக்கு ஏன் இவ்வளவு கோபம்” பதட்டத்துடன் நீலவேணி அருகில் செல்ல…
தன் அம்மாவை எல்லாம் ராஜசேகர் கண்டுகொள்ளவில்லை… நேராக தன் மனைவியிடம்தான் வந்து நின்றார்
”மேகலை… இன்னைக்கு உன் புள்ள வந்தான்னா… இனி அவனுக்கு இந்த வீட்ல இடமில்லைனு சொல்லிரு… “ மேகலை அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்… கணவனின் வார்த்தைகளைக் கேட்டு..
ராஜசேகர் யாரையும் கண்டுகொள்ளவில்லை… கோபத்தின் மொத்த திரு உருவமாக… பேசிக் கொண்டே இருந்தார்
“கட்சி ஆஃபிஸ்ல சண்டை போட்டுட்டு வந்திருக்கான்… தலைவர்கிட்டயே சவால் விட்டுட்டு வந்திருக்கான்…”
“துரை குடிச்சுட்டு ரோட்ல விழுந்து கிடப்பாராம்… இவருக்கு எலெக்ஷன்ல சீட் வேணுமாமா?… இவனுக்கு எப்படி கொடுப்பாங்க… என்ன தகுதி இவனுக்கு இருக்குனு சீட் கேட்டு தலைவர்கிட்டயே சண்டை போட்ருப்பான்… அவர் என்னை போன்ல போட்டு வறுக்கிறார்… எனக்காக அவனை ஒண்ணும் பண்ணாமல் விட்ருக்கேன்னு என்கிட்டயே சொல்றாரு…”
ஆராதனா அங்கிருந்த தூணில் சாய்ந்தபடி அனைத்தையும் பார்த்தபடி இருக்க… இராஜசேகரின் கோபத்தில் ஆராதனா மாட்டினாள் இப்போது
“ஏய் தனா நீ என்ன… இன்னும் தூங்காமல் இருக்க… போ முதல்ல… பெரியவங்க பேசுற இடத்துல நின்னுகிட்டு… போ… போன்னு சொல்றேன்ல” இருக்கிற கோபத்தோடு மகளையும் அதட்டி இருக்க…
“அவ மேல ஏண்டா கோபத்தைக் காட்ற” நீலவேணி மகனிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ராஜசேகர் அங்கிருந்த இருக்கையில் தடுமாறி அமர…
“என்னங்க!!!”
“ராஜா!!”
“அப்பா!!”
மூன்று பெண்களும் கத்தியபடி அவர் அருகில் சென்றிருக்க… சட்டென்று சமாளித்தவராக
“ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை…”
“மே... மேகலா சுடுதண்ணி மட்டும் வச்சுக் கொடு” மார்பைத் தடவியபடியே மனைவியைப் பார்த்து கேட்க... இப்போது மேகலாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது கணவனின் நிலை தாளாமல்
ஆராதனாதான் சுதாரித்து வேக வேகமாக ஓடிப் போய்… சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க… அதை வாங்கி குடித்து முடித்தவர்… தன்னைச் சுற்றி நின்றிருந்த மூன்று பெண்களின் நிலையைக் கணித்தவராக
“இப்போ பரவாயில்ல… சரி ஆகிருச்சு” என்ற போது அவரது முகம் இயல்பாகி இருந்தாலும்…
“அவன் இன்னைக்கு வரட்டும்… “ மீண்டும் அவர் குரலில் கர்ஜனை வந்திருந்தது
இப்போது நீலவேணி மேகலாவிடம் கண்ஜாடை காட்டினார்
“நீ உன் புருசனை உள்ள கூட்டிட்டு போ…”
மேகலாவுக்கும் நிலைமை புரிந்தது… இப்போது தன் மகன் வந்தால் கணவனுக்கும் -மகனுக்கும் கண்டிப்பாக வாக்குவாதம் வரும்… குடும்பத்தில் நிலவிக் கொண்டிருக்கும் இப்போதைய சூழ்நிலைக்கு இன்னுமே நிலை மோசம் தான் ஆகும்
அதுவும் கணவன் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகள்…
“இனி உன் புள்ளைக்கு இந்த வீட்ல இடமில்லை…” இதுவே போதுமே… அவர் கோபத்தை உணர்ந்து கொள்ள… ஆக தன் கணவனின் கோபம் உணர்ந்தவராக… அவரிடம் சென்றார் மேகலா
“உங்க கோபம் புரியுதுங்க… நான் கார்த்திகிட்ட பேசுறேங்க… நான் பேசுனா அவன் கேட்பான்… நான் கொஞ்சம் விட்டுட்டேன்… அதுனாலதான் அவன் இந்த அளவுக்கு போயிட்டான்… நா… நான் சரிபண்ணிடறேன்…” மேகலா தழுதழுக்க…
ராஜசேகர் இப்போது அமைதியாக இருக்க… அவரின் அந்த அமைதியே மேகலாவின் பேச்சை அவர் கேட்க ஆரம்பித்துவிட்டார் என மேகலாவுக்குப் புரிய…
“நீங்க வாங்க… தூங்குங்க.. கார்த்திய நான் பார்த்துக்கிறேன்… இனி அவனால உங்களுக்கு ஒரு அவமானமும் வராது… நான் சொல்றதைக் கேட்பீங்களா இல்லையா..” கணவனிடம் சொன்னபடியே தன் மாமியாரிடம் திரும்பியவராக
”அத்தை கார்த்தி வந்தால்” மேகலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“ஏன் துரை சுடச் சுடத்தான் சாப்பிடுவாரா… தோசைய ஊத்தி வச்சுட்டு போய்ப் படுங்கம்மா… குடிச்சுட்டு வர்றவனுக்கு பறிமாற வேற ஆள் வேணுமா என்ன..” ராஜசேகர் மீண்டும் சிடுசிடுக்க ஆரம்பிக…
”சரி… சரி… யாரும் அவனுக்குப் பறிமாறல… அத்தை நீங்க போங்க… தனா தோசை மட்டும் சுட்டு ஹாட்பேக்ல வச்சுட்டு போய்ப் படு…” என்றபடி தன் கணவரை அறைக்கு அழைத்தும் சென்று விட்டார் மேகலா…
---
ஒரு மணி நேரம் கடந்திருக்கும்…
“அ.. ம்..மா… அம்மா… கதவைத் திறங்க” தன் தாய் தந்தை இருந்த அறையின் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் கார்த்திக்… ஆக்ரோஷமாக
மேகலாவோ கணவனைத் தயக்கத்தோடும்.. கலவரத்தோடும் பார்த்தார்… ராஜசேகர் வேறு தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்…
ஒரு மாதிரியான அலைப்புறுதலோடு அவர் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்க… வேறு வழியில்லை.. என்பதால் மேகலாவும்
“அவன்கிட்ட சாப்பாடு எடுத்து வச்சிருக்கறதை மட்டும் சொல்லிட்டு வந்துறேன்” கணவனிடம் சொல்லியபடியே… அவர் முறைப்பையும் கண்டுகொள்ளாமல் எழுந்து மேகலா கதவைத் திறக்க
“அம்மா… பசிக்குது வாங்க வந்து சாப்பாடு போடுங்க” கார்த்திக் மேகலாவை அழைக்க
“டைனிங்க் டேபிள்ள எடுத்து வச்சுருக்கேன்… போட்டுக்க” மேகலா மெல்லிய குரலில் சொல்ல… அதிர்ந்து தாயைப் பார்த்தான் கார்த்திக்…. இருந்தும் அதிர்ச்சியை உள்ளடக்கியவனாக
“என்னது நானா போட்டுக்கவா… வாங்கம்மா எனக்கு நீங்கதான் போடனும்…” தன் அன்னையின் கைப் பிடித்து அழைக்க… அவன் குரல் வழக்கமான குரலாகவும் இல்லை… அதே நேரம் குடி போதையில் உளறுவது போலவும் இல்லை
மேகலாவுக்கு ஏதோ ஒரு உணர்வு மகனின் குரலில்… மனம் பரிதவிக்கத்தான் செய்தது…
கணவனைப் திரும்பி பார்த்தபடியே மீண்டும் மகனிடம் திரும்பியவர்…
“அப்பாக்கு… உடம்பு சரி இல்லைனு சொன்னார்டா… மருந்து தடவிட்டு இருந்தேன்… கைல எல்லாம் பாரு… மருந்து… நீயே போட்டுக்கடா தம்பி “ என்று சாக்கு சொல்லி மகனைத் தவிர்க்கப் பார்க்க…
“பரவாயில்ல கையைக் கழுவிட்டு வாங்க…” கார்த்திக்கோ பிடிவாதமாக இருக்க… ராஜசேகர் எல்லாவற்றையும் கேட்டபடியேதான் படுத்துக் கொண்டிருந்தார்…
“சரி… இரு அப்பாத்தாவை வந்து சாப்பாடு போடச் சொல்றேன்” கணவருக்கு கேட்காத குரலில் சொன்னபோதே
“அப்பாத்தாவும் வேண்டாம்…. யாரும் வேண்டாம்… நீங்கதான் வரணும்” இப்போது கார்த்திக் தன் அன்னையின் கைகளைப் பிடித்து இழுக்க..
மேகலாவுக்கே ஒன்றும் புரியவில்லை… மகன் இப்படியெல்லாம் இருக்க மாட்டேனே… பேச மாட்டானே… என்ன ஆயிற்று.. யோசித்துக் கொண்டிருக்கும் போதே
கார்த்திக் கன்னத்தில் பட்டென்று ஒரு அறை… அவன் கண்களில் நெருப்புப் பொறி பறந்திருக்க… கண்கள் கலங்கியவனாக தன்னை அறைந்த தன் தந்தையைப் பார்க்க…
“உனக்கு அம்மா கையால சாப்பாடு கேட்குதோ… குடிக்கும் போது… எங்களப் பற்றி யோசிச்சியாடா… இப்போ அம்மா அம்மானு உருகுற”
கன்னத்தில் கைகளை வைத்து அழுந்தப் பிடித்தவனாக… தன் தந்தையிடம் ஏதும் பேசாமல்
“அம்மா… நீங்க வாங்கம்மா… எனக்கு நீங்க மட்டும் தான்மா இருக்கீங்க… என்னை யாருக்குமே பிடிக்கலம்மா… எனக்கும் யாரும் வேண்டாம்… “ என்றவனின் கண்களில் தானாகவே நீர் வந்திருக்க
“நடிக்கிறியாடா… கட்சி ஆஃபிஸ்ல என்னடா பண்ணி வச்ச… தலைவர்கிட்ட என்னடா பேசுன…”
கார்த்திக் அமைதியாக இருக்க
“பொண்ணுக்காக … அதுவும் உன்னை வேணாம்னு விட்டுட்டு ஓடிப் போன பொண்ணுக்காக… உன் வாழ்க்கையை அழிச்சுக்க… ஆனால் என் மானத்தை வாங்காத புரிஞ்சுதா… ஒழுங்கா இருந்தா இங்க இரு… இல்லையா ஏற்கனவே தம்பினு ஒரு தருதலைய தலை முழுகிட்டேன்… இப்போ உன்னையும் சேர்த்து தலைமுழுகிறேன்…” ராஜசேகர் சொல்ல..
“யாரை யாருடன் சேர்த்து வைத்து பேசுவது…” மேகலாவுக்கு தாயாக மனம் பரிதவித்திருக்க… கணவனைப் பார்வையால் எரித்தார்
இப்போதும் கார்த்திக் தந்தையிடம் பேசாமல்..
“அம்மா… எனக்குப் பசிக்குது” என்று தன் பிடிவாதத்திலேயே நின்று தன் தாய் மேகலாவை அழைக்க.. ராஜசேகரின் கோபம் கட்டுக்கடங்காமல் பெருக ஆரம்பித்தது மகனின் நடவடிக்கைகளில்
தான் இவ்வளவு பேசிக் கொண்டிருக்கின்றோம்… ஆனால் இவன் என்னடாவென்றால் கொஞ்சம் கூட மதிக்காமல் அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றான்..
மனைவியை பின்னால் தள்ளிவிட்டு முன்னால் வந்தவர்… மேகலாவைப் பிடித்து வைத்திருந்த அவன் கைகளையும் தட்டி விட்டவராக
“போடா… அவ வரமாட்டா” ராஜசேகரின் கோபம் அந்த ஊரே அறிந்தது… மகன் தந்தையின் கோபம் அறியாதவனா என்ன…. அவரைப் பார்த்து வளர்ந்தவன் ஆயிற்றே
“நான் என் அம்மாட்ட பேசிட்டு இருக்கேன்…” கார்த்திக்கும் திமிராகச் சொல்ல…. அவனைச் சொல்லி முடிக்கவிடவில்லை ராஜசேகர்… மகனின் கழுத்தைப் பிடித்தவர்…
“சொல்லிட்டே இருக்கேன்… திமிரா பேசிட்டு இருக்க.. நான் உன் அப்பண்டா… என்கிட்டயே திமிரைக் காட்டிட்டு இருக்க…” தந்தையின் கை கழுத்தில் இருந்தும்… கார்த்திக் அசையாமல் அப்படியே இருக்க…
நிலைமை மோசமாவதை உணர்ந்த மேகலா பதறித் தடுக்க ஆரம்பித்திருக்க
“அப்பா… ஒரு நிமிசம் ஆகாது… நீங்க என்மேல வச்சிருக்கிற கையத் தட்டி விட…” கார்த்திக் தன் தந்தையிடம் முறைப்பான பார்வையோடு பேசியபடியே…
“அம்மா… வாங்கம்மா… எனக்குப் பசிக்குது…” பேசிய வார்த்தைகளையே சொன்னபடி… இப்போது கார்த்திக் தன் அன்னையைப் பார்க்க… ராஜசேகர் அடுத்து யோசிக்கவெல்லாம் இல்லை…. கழுத்தைப் பிடித்து இழுத்தபடி மகனை அறை வாசலை விட்டு வெளியே கொண்டு வர முயற்சிக்க… அவனோ நகராமல் முரண்டு பிடிக்க மேகலா இருவரிடமும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க… இப்போது ஆராதனா வேகமாக ஓடிவந்தாள்…. உறங்கவில்லை அவள்… அவள் அறையில் இருந்தபடி அனைத்தையுமே கேட்டுக் கொண்டிருந்தாள் தான்…
தன் தாயின் குரல் உயராதவரை…. வெளியே வராதவள்… ஒருகட்டத்தில் சத்தம் அதிகமானதால் அறையை விட்டு வெளியே வர… கதவைத் திறக்கும் போதே மேகலாவின் குரல் இன்னும் சத்தமாக ஒலித்தது
அங்கு அவள் கண்ட காட்சியோ… தன் அண்ணன்… அவள் அப்பாவை…. சுவரில் சாத்தி… அவர் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான்…
ஆராதனா தயங்கவெல்லாம் இல்லை… வேகமாக தன் அண்ணனின் அருகில் சென்றவளாக…
“ஐயோ அப்பா… அண்ணே விடுண்ணே… ஏண்ணா இப்படியெல்லாம் பன்ற “
கார்த்திக்கோ இன்னும் மூர்க்கத்தனமான மாறியவனாக… சட்டென்று தங்கையைத் தள்ளிவிட… ஆராதனா கீழே விழுந்திருந்தாள்…
”நீ போ தனா… அவன் மிருகம் மாதிரி நடந்துக்கிறான்…” மகளிடம் சொன்னபடியே மேகலா கணவனை எப்படியோ மகனிடமிருந்து பிரித்திருக்க
இப்போது ஆராதனா பதட்டத்துடன் வேகமாக அண்ணனின் கைகளைப் பிடித்தவளாக
“நான் சாப்பாடு போட்றேன்னா… வாங்கண்ணா…” கண்களில் கண்ணீர் ஒருபுறம் வழிந்தாலும் அதைத் துடைத்தபடியே தன் அண்ணனை தன் புறம் இழுக்க ஆரம்பித்திருக்க…
இராஜசேகர் மகனின் முன் மீண்டும் வந்து நின்றார்
”என் மகடா அவ… இந்த ராஜசேகர் மகடா… அவ போயும் போயும் குடிகாரன் உனக்கு சாப்பாடு போடனுமா… என்னையே கழுத்தைப் பிடிச்சுட்டேல்ல…” ராஜசேகர் குரல் உடைந்திருந்தது….
கார்த்திக் என்ன நினைத்தானோ… சட்டென்று தங்கையின் கையை உதறியவனாக… தந்தையிடம் எதிர்த்து பேசாதவனாகத் தன் தாயிடம் போனவன்
“அம்மா… இனி உன் வாழ்க்கைல என்னைக்குமே எனக்கு சாப்பாடு போட முடியாது… நீ நெனச்சாலும் முடியாது… கண்டிப்பா வேதனைப்படுவம்மா” வேகமாகத் தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்…
மேகலாவின் கவனம் முழுக்க முழுக்க கணவனிடம் இருக்க… மகனின் வார்த்தைகளை எல்லாம் கவனிக்கவில்லை…
கணவனைச் சமாதானப்படித்தியபடி அவர் அறைக்குச் சென்றுவிட…
ஆராதனா மட்டுமே அங்கு தனிமையில்… கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடியே படபடத்த நெஞ்சத்துடன் நின்று கொண்டிருந்தாள்…
---
சென்னை
வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்க… மொட்டை மாடியில் விஷ்வா கையில் மதுக் கோப்பையுடன் அந்த விமானத்தை பார்த்தபடியே வெறித்திருக்க…
சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்தபடி இருந்தவனுக்கு தன்னை அவமானப்படுத்திய செழியன் ஞாபகம் வந்திருக்க தனது அலைபேசியை எடுத்தான்… யாருக்கோ அழைத்தான்
“இப்போதாண்டா மச்சி உன்னை நினச்சேன்… நானே போன் பண்ணலாம்னு இருந்தேன்” எதிர்முனை சொன்ன போதே… அதை எல்லாம் கேட்காமல்
”என்ன உங்க உத்தம பாஸ்… அந்த பூஜாவைக் கரெக்ட் பண்ணி… அமெரிக்காக்கும் கிளம்பிட்டான் போல… என்ன பேச்சு பேசினான்… என்னமா நியாயம் பேசினான் ”
“ப்ச்ச்…. நான் சொல்லித்தானே உனக்கே தெரியும்… என்னமோ நீயாக் கண்டுபிடிச்ச மாதிரி பேசுற“ செழியன் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் பாஸ்கரன் சொல்ல
“சரி விடு… உனக்கு ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லவா…”
“என்ன விஷ்வா”
“நான் வேற கம்பெனில ஜாயின் பண்ணிட்டேன்… இதுவும் ரெஃபெரென்ஸ் தான்… உங்க டூபாக்கூர் கம்பெனி எக்ஸ்பீரியன்ஸ்லாம் காட்டாமல் நேரடியா ஜாயின் பண்ணியிருக்கேன்… இந்த எம்டியும் அவன் ஊர்க்காரன் தான்…”
“என்னடா சொல்றா விஷ்வா… “ பாஸ்கர் ஆச்சரியமாகக் கேட்க…
“என் அப்பா – தாத்தா செல்வாக்குலாம் அப்படிடா… நரேனாம் இவன் பேரு… பெரிய கம்பெனிடா… அந்தச் செழியன் பத்து பேரை வச்சுட்டு அதைக் கம்பெனினுன்னு சொல்லிட்டு பந்தா பண்ணிட்டு இருக்கானே… அது மாதிரி இல்ல இந்த கம்பெனி… இருநூறு முன்னூறு பேர் இருக்காங்க…”
“டேய் அப்போ எனக்கும் அங்க ஏதாவது ஓபனிங்க்ஸ் இருந்தா சொல்லுடா… இந்த சிடுமூஞ்சிகிட்டலாம் நான் ரொம்ப நாள் காலம் தள்ள முடியாது” பாஸ்கர் சொல்ல
“பார்க்கலாம்… பார்க்கலாம்… அந்த செழியனுக்கு ஒரு வழி பண்ணிட்டு அப்புறமா பார்க்கலாம்… அதுவரை அங்க இரு…” விஷ்வா நக்கல் சிரிப்பு சிரித்தபடியே சொன்னவனாக
“அந்த பூஜாக்கும்… அவனுக்கும் இடையில ஏதாவது மாட்டும்… அது கெடச்சுச்சுனா உடனே என்கிட்ட வந்து சொல்லிரு… அன்னைக்கு இருக்கு அந்த செழியனுக்கு தீபாவளி… ”
“கண்டிப்பா… அப்புறம் விஷ்வா … செழியனை பற்றி எல்லாம் போட்டுக் கொடுத்தேனே… எனக்கு என்ன தேவைனு தெரியும்ல “ என்ற பாஸ்கர் இழுக்க…
அப்பொது விஸ்வாவுக்கு மற்றொரு எண்ணில் இருந்து அழைப்பு வர…
“இந்த அம்மா வேற… “ சலிக்க
“என்னடா… இவ்ளோ சலிப்பு” பாஸ்கர் கேட்க
“மேரேஜ் பண்ணு மேரேஜ் பண்ணுனு… ஒரே கடுப்பேத்துறாங்கடா… அதுவும் இந்த வேலை கிடச்சவுடனே…. எதிர்பார்த்த சம்பாத்யம் வந்துருச்சில… பொண்ணு பார்க்கவான்னு…”
“சரி என் கதை எதுக்கு … அதை விடு… நீ ஏன் விஷ்வான்னு இழுத்தேன்னு தெரியும்… புது வீடியோ வந்திருக்கு… செம்ம வீடியோ… உனக்கு அனுப்புறேன்… மஜா பண்ணு” என்று அனுப்பி விட்டு அலைபேசியையும் விஷ்வா வைத்திருந்தான்…
----
அமெரிக்கா- வெஸ்ட்ஜெஸ்டர் …
பூர்ணிமா சமையலறையில் அங்கும் இங்கும் நடைபயின்று கொண்டிருந்தவள்… அவ்வப்போது தன் அக்கா மகன் செழியனையும் அவன் அழைத்து வந்திருந்த அவன் தோழியையும் பார்த்தபடிதான் இருந்தாள்…
அக்காவிடம் கேட்க பயம்… பிறந்த வீட்டினருக்கும் பயம்… ஏற்கனவே தன் அக்கா மகள் கமலி செய்த வேலையில் பிறந்த வீட்டில் இருந்து இவளுக்கும் மண்டகப்படிதான் நடந்திருந்தது…
இப்போது இவன் என்னடாவென்றால் தோழி என்று… அலுவலக வேலை என இந்தப் பெண்ணை அழைத்து வந்திருப்பது மட்டும் தன் பிறந்த வீட்டுக்கு மட்டும் தெரிந்தால் என்ன ஆகும்…. தன் அருகில் நின்றிருந்த தன் கணவனை முறைத்துப் பார்த்தாள் பூர்ணிமா…
“என்ன பூர்ணி டார்லிங்… நோ வொரி டார்லிங்…. எல்லா ஹெல்ப்பும் நான் பண்ணித் தரேன்… சமைக்கிறதுக்கு போய் சோகமா இருக்கலாமா… நாமே சேர்ந்தே குக் பண்ணலாம்” பூர்ணிமாவின் கணவன்…. மதிவாணன் இவள் அவஸ்தை புரியாமல் அவளிடம் கொஞ்ச… கையில் இருந்த பூரிக்கட்டையை அவன் முன் நீட்டியவளாக
“நானே இந்த செழியனை நினைச்சு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருக்கேன்… நீங்க வேற கடுப்படிக்காதீங்க…”
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க… அவனை இங்க தனியா வரச் சொல்லுங்க….”
“இதானே… இவ்ளோதானே… இதுக்கு இதுக்கு செல்லம் டென்ஷன் ஆகனும்…” என அவள் அருகில் மதிவாணன் நெருங்கியபோதே…
“இதுக்கு ஒண்ணும் குறச்சல் இல்லை… போங்க அவனை வரச்சொல்லுங்க… “ என்றபடி கணவனைத் தள்ளி விட… மதிவாணனும் சிரித்தபடி வெளியே வந்தவனாக…. எப்படியோ செழியனை பூஜா அறியாமல் அனுப்பி வைக்க…
இப்போது பூர்ணிமாவும்… செழியனும்… மாடியில் தனியே நின்றிருந்தனர்…
பூர்ணிமாவும் தயங்கியபடி… செழியனிடம் கேட்போமா… வேண்டாமா என்ற ரீதியில் யோசனயோடு நின்றிருக்க
“என்ன சித்தி… என்கிட்ட ஏதாவது கேட்கனுமா” செழியன் தன் சித்தியின் யோசனைப் பாவத்தைப் பார்த்தபடியே புன்னகையுடனும் அதே நேரம் கேள்விக் குறியாகவும் கேட்க…
இப்போது பூர்ணிமாவும்…
“இல்ல… இந்த பூஜா..” என அடுத்த வார்த்தையைக் கேட்க முடியாமல் செழியனின் கோபத்திற்கு பயந்து தயங்கி நிற்க…
செழியனோ அவன் சித்தியைப் போல தயங்கவில்லை…
“அதான் சொன்னேனே… அவங்க ஃபேமிலி வர்ற வரை… அவ இங்க இருப்பான்னு… நான் இங்க தங்குற ரூமை அவளுக்கு கொடுங்கனு சொன்னேனே… எல்லாம் அவ ஃபேமிலி வர்ற வரைக்கும் தான்… இன்னும் என்ன சொல்லனும் உங்களுக்கு… என்ன சந்தேகம்” என்றவனிடம்
“செழியா…” என இப்போது மென்று முழுங்க
“என்ன சித்தி…” செழியன் இப்போது கடுப்போடு கேட்க… அவன் பொறுமை அவ்வளவுதான்…
“இல்ல அந்தப் பொண்ணு வெறும் ஃப்ரெண்டு மட்டும் தானா உனக்கு… “
செழியனின் பார்வையில் மாற்றம் வர ஆரம்பித்திருக்க…
“இல்ல… பூஜா மேரேஜ் ஆனவன்னு தெரியும்… அவளுக்கு பொண்ணு இருக்கான்னு தெரியும்… இப்போ சிங்கிளாத்தானே இருக்கா… அதுவும் தெரியும்… நீயும் அவளும் ஒண்ணா வந்துருக்கீங்க… அதான்” எனும் போதே செழியனின் மூக்கு விடைத்திருக்க… நெற்றிப் பொட்டில் அவன் கோபம் மையம் கொள்ள ஆரம்பித்திருக்க…
பூர்ணிமா இப்போது பின்வாங்கவில்லை… பேச ஆரம்பித்தாகிவிட்டது… இனி முடிவு தெரியாத வரை விடக்கூடாது என முடிவு செய்தவராக
“இங்க இதெல்லாம் சகஜம்… அதான்… இப்போதான் கமலி வேற பெரிய பிரச்சனையை இழுத்து விட்டா… நீயும்..” எனும் போதே
“சித்தி…” பல்லைக் கடித்த செழியனிடம்…
“உன்னைத் தப்பா சொல்லலடா…. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுனு தான் சொல்றேன்….”
“சித்தி…. இன்னும் ஊர்ல இருந்த கிராமத்து பூர்ணி தான் போல…” வேறெதும் பேசாமல்… வெளியேறப் போனவனிடம் வேகமாக அவன் முன்னே ஓடி வந்தவளாக
“செழியா… சொல்லிட்டுப் போ… நான் என்ன எங்க அம்மா… அண்ணன் மாதிரி உன்னை என்ன திட்டவா போறேன்… உனக்கு இப்படி… அதாவது ஏற்கனவே மேரேஜ் ஆன பொண்ணுதான் வரப்போறான்னு விதி இருந்தா என்ன பண்றது” அக்கா மகன் முறைத்தாலும்… அந்தப் பார்வைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் பூர்ணி அவனைக் கெஞ்சலாகப் பார்த்தபடி…
”கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆகிருச்சு தானே.. பொண்ணு இருந்தா என்ன… அது கூடப் பரவாயில்ல… நம்ம ஆளுங்…” என பூர்ணி பேச ஆரம்பித்த போதே
“சித்தி… ஸ்டாப் இட்… “
”அவ என் ஃப்ரெண்ட்… ஏற்கனவே பல கஷ்ட்டத்துல இருக்கா…” கத்தியவனாக என்ன நினைத்தானோ…
“சித்தி… நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒண்ணும் இல்ல சித்தி….” தன் நிலையை சித்திக்கு புரியவைக்கும் முயற்சியில் பேசிக் கொண்டிருக்க… மதிவாணன் உள்ளே வந்தவனாக… செழியன் சொன்னவற்றைக் கேட்டபடியே
“அப்போ லவ் ஏதும் பண்ணலை….” என்று உறுதி செய்யும் விதத்தில் அவனிடம் பேச ஆரம்பித்திருக்க
செழியன் தன் சித்தப்பாவையும் முறைத்தவனாக
“எனக்கும் பூஜாக்கும் இடையில இருக்கிறது ஒரு நல்ல நட்பு… அவ்ளோதான்… இதுக்கும் மேல இனி இதைப் பற்றி பேச மாட்டீங்கன்னு நினைக்கிறேன்…” என்றபடி நகன்றவன்… மீண்டும் அவர்களிடம் வந்தவனாக
”நீங்க ரெண்டு பேரும் இனி இந்த மாதிரி என்னை சங்கடத்துல நிறுத்துற மாதிரி கேள்வி கேட்க மாட்டீங்கன்னு நம்புறேன்… புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்…”
“சாரி செழியா… மனசுல தோணினதை கேட்டேன்… அவ்ளோதான்… மத்தபடி வேற ஒண்ணுமில்லை… நீயும் இதோட இதை விட்ரு…” பூர்ணி சட்டென்று செழியனிடம் மன்னிப்பும் கேட்டும் விட… செழியனும் அதற்கு மேல் கோபப்படவில்லை
“சரி சரி… இங்க பூஜா தங்கலாம் தானே… என்கிட்ட கேட்ட மாதிரி அவகிட்ட ஏதும் கேட்றாதிங்க.. ப்ளீஸ்… அப்படி ஏதாவது கேட்கிற மாதிரி எண்ணம் இருந்தா என்கிட்ட சொல்லிருங்க… நான் அவளுக்கு வேற இடம் பார்த்துக்கிறேன்” என்றபடி மீண்டும் ஹாலுக்கு போயிருக்க..
மதிவாணன் இப்போது மனைவியைப் பார்க்க… பூர்ணிமாவின் முகத்தில் மெலிதான புன்னகை…
”ஹப்பா… இப்போதான் போன உசுரு திரும்பி வந்துச்சு…” பூர்ணி சொல்ல…
“எனக்கென்னமோ… இப்போதான் டவுட்டே வந்திருக்கு….” கணவனின் அதிரடியான வார்த்தைகளில்… சற்று முன் சந்தோசமான பூர்ணிமா முகம் இப்போது மீண்டும் கூம்பியிருக்க
“ஏண்டி… பையன் நழுவுற மாதிரி தெரியல… கோபமா பேசுனா ஏதும் கேட்க மாட்டாங்கன்னு பேசுன மாதிரி தெரியுதே… அப்புறம் அவனே ஆஃப் ஆன மாதிரியும் தெரியுது… அதுலயும் நான் கேட்ட கேள்விக்கு அவன் பதிலே சொல்லலையே…. வேற பொண்ணு யாரையும் லவ் பண்றானோ?… ஆனால் இந்த பூஜா இல்லை… அது மட்டும் கன்ஃபார்ம்” யோசனையோடு சொல்ல
“ப்ச்ச்… அதெல்லாம் இருக்காது… இவ்ளோ நாளா ஏதாவது அடுத்த பொண்ணுங்களைப் பத்தி பேசி இருக்கானா… இன்னைக்கு இந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்து…. இங்க தங்கட்டும்னு சொன்னவுடனே…. கொஞ்சம் டவுட்…. ஃப்ரெண்ட்… பரிதாபம்…. லவ்னு எங்க மாட்டிட்டானோன்னு…. நான் தான் அவன்கிட்ட கேட்டேன்… மத்தபடி இவனாவது லவ் பண்றதாவது… ”
“இவன்… கார்த்தி… இவனுங்களுக்கெல்லாம் அப்படியே லவ் வந்துட்டாலும்… திமிரு… கெத்துனு அலையுற கேசுங்க… கமலிட்ட இந்த கார்த்தி ரெண்டு வார்த்தை ஒழுங்காப் பேசியிருந்தால் அவ ஏன் இப்படி பண்ணியிருக்கப் போறா… கார்த்திக்காவது நாமளே பேசி வச்சிருந்தோம்… செழியனுக்கு அதுவும் இல்லை… இவனுக்கு எப்படி பொண்ணு பார்த்து… அவ இவனுக்கு பிடிச்சு… அப்புறம் கல்யாணம் பண்ணி…. எங்கக்காவை நெனச்சா எனக்கே கவலையா இருக்கு”
”விடு… இந்த மதி சித்தப்பாவைப் பார்த்தாவது நம்ம பையன் லவ்வர் பையன் ஆகிற மாட்டான்” மதிவாணன் மனைவியின் கைகளைப் பிடித்தபடி அவள் அருகே போனபோதே…செழியன் அங்கு மீண்டும் வந்திருக்க…
கணவன் மனைவி இருவரும் விலகியவர்களாக… இப்போது திருதிருவென்று விழித்திருக்க… செழியன் அடக்கிய புன்னகையுடன்…
“பார்த்துட்டேன் பார்த்துட்டேன்… வாங்க…வாங்க.. போதும்… உங்க வயசுக்கு கொஞ்சம் அதிகமாவே பெர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டீங்க சித்தப்பா…” என்றபடி கையோடே தன் சித்தியின் கணவனை இழுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்திருந்தான் செழியன்…
“ஏண்டா… உனக்கு ஏண்டா இவ்ளோ கொலை வெறி… பொறாமை… இவ்ளோ நாள் நீ இடையில இருந்த… இப்போ அந்தப் பொண்ணை தங்க வைச்சுட்ட… ”
“அட வாங்க சித்தப்பு… வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கங்க… போதும் போதும் வழியுது தொடச்சுக்கங்க…” செழியன் தன் சித்தப்பாவிடம் சொன்னபடி நகர்ந்து அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து தன் மடிக்கணினியோடு ஐக்கியமாகி விட… அந்த வரவேற்பறையில்… பூஜாவும் மதிவாணன் – பூர்ணிமாவின் ஒரே செல்ல மகளான அனுவும் அமர்ந்திருக்க…
“அனும்மா… ” மகளைக் கொஞ்சியபடி மகள் அருகில் அமர்ந்த மதிவாணன்… பூஜாவிடம் திரும்பியவனாக
“பூஜா… என் பொண்ணோட காமெரா கைவண்ணம் எப்படி இருக்கு… உன்னையும் இவ கேமராக்குள்ள சிக்க வைப்பா…” மகள் பெருமையைப் பேச ஆரம்பித்தவரிடம்
“சூப்பரா இருக்கு அங்கிள்… செம்ம டேலண்ட்” பூஜா அனு எடுத்த புகைப்படங்களை பார்வை இட்டபடியே சொன்னவள்… ஒரு பக்கத்தில் நிதானித்து …
“இது யாரு… இந்தியால எடுத்ததா… சிங்கிள் ட்ராப் வியர்வைத் துளியோட… ஓடுறதுக்கு தயாரா நிற்கிற வீராங்கனை…. ஒரு பக்க போஸ்… அவங்க கண்ல யப்பா செம்ம வெறி… வின் பண்ற வெறி” என்று அனுவைப் பார்க்க…
“இது யாரா… இதான் எங்க ’தனா’ அத்தாச்சி… அத்லெடிக்ஸ்… ஹான் அவங்கதான் அன்னைக்கு ஃபர்ஸ்ட் ஃப்ரைஸ்… லாஸ்ட் இயர் இந்தியா போனப்போ அவங்க காலேஜ்க்கு என்னையும் கூட்டிட்டுப் போனாங்க…”
செழியன் அவர்கள் பேச்சில் எல்லாம் கலந்து கொள்ளாமல்… தன் மடிக்கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்… அதே நேரம் அவன் காதில் ஆராதனாவைப் பற்றிய தகவல் தானாகவே அவனை அடைய… அதில் அவன் முகம் மென்மையான புன்னகையைப் பூச ஆரம்பித்து இருந்தது…
“ஓ… நம்ம ஆராதனவா… சின்னப் பொண்ணா பார்த்தது… ஃபேஸ் ஞாபகம் இல்லை…” என்ற பூஜாவிடம்…
“ஓ…. அப்டியா… அங்க பாருங்க அந்த ஃபோட்டோல நான்… கமலிக்கா… தனா அத்தாச்சி எல்லோரும் இருக்கோம் பாருங்க…” என்று அனு சொல்ல… பூஜா நிமிர்ந்து பார்க்க… ஆராதனா… கமலி… அனு மூவருமாக சிரித்தபடி நின்றிருந்த புகைப்படம்…
கமலியின் அருகில் ஆராதனா… சிறுவயதில் கமலியோடே சுற்றி வரும் ஆராதனா… அன்று போல் இந்தப் புகைப்படத்திலும் ஆராதனாவின் கைகளைப் பிடித்து நின்றிருக்க…
”அவங்க கமலியக்காதானே… அப்போ இது ஆராதனாவா… “ என்றபடியே… பூஜா செழியனை அழைத்தவளாக…
“கமலியக்கா முகம் அப்படியே இருக்கு… ‘தனா’ டோட்டலா மாறிட்டாள்ள… சுடிதார்ல பார்க்கிறதுக்கே வித்தியாசமா இருக்கு… அவ சின்னப் புள்ளைல ட்ரவுசர் சட்டை… இதானே போடுவா செழியன்… ” என்றபோதே…
“இதைப் பாருங்க… எங்க அத்தாச்சி தாவணில இருக்கிற போட்டோ…. எனக்கும் இது மாதிரி போட்டு விட்ருக்காங்க… இங்க பாருங்க… நானும் அதே ட்ரெஸ்…” பூஜாவிடம் அனு தன் புகைப்படத்தொகுப்பில் இருந்த ஆராதனாவின் வேறு சில புகைப்படங்களைக் காட்டியபடி பேசிக் கொண்டிருக்க..
செழியன்… பூஜா கேட்ட கேள்விக்கெல்லாம் பதிக் சொல்லாமல்… அமைதியாக தான் அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்தவனாக… தன் வாலட்டை(wallet) எடுத்தவன் அந்த புகைப்படத்தை எடுத்தான்…
ஆராதனா… அவன் பார்வையில் அவனின் ’ஆரா’ வாக மாறியபின் அவன் கையில் கிடைத்த அவளின் முதல் நிழற்படம்… அது கூட தனியாக இல்லை… குடும்பத்தோடு சேர்ந்திருந்த புகைப்படம் தான்…
தன் அக்கா கமலியின் பூப்புனித நீராட்டு விழாவில் எடுத்தது… அமைதியாக அந்தப் புகைப்படத்தை பார்த்தபடி மீண்டும் தன் வாலட்டில் வைத்தவன்…. முகிலன் ஞாபகம் வந்தவனாக அழைக்க அலைபேசியை எடுத்த போதே
”என்னம்மா சொல்றீங்க…” பூர்ணிமாவின் அழுகை கலந்த சத்தமான குரல் சமையலறையைத் தாண்டி… இவர்கள் இருக்குமிடம் வரை வந்தடைந்திருந்தது…
---
”பூர்ணி… ராஜாக்கு இப்போ பரவாயில்ல… உன் அண்ணிதான், ஆபரேஷன் முடிந்த பின்னால சொல்லலாம்… யாரையும் பதட்டப்பட வைக்க வேண்டாம்னு… யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா…”
“ஹ்ம்ம்… மூணு நாள்ள டிஸ்சார்ஜ் பண்ணிறலாம்னு சொன்னாங்க…”
“தூங்கிட்டு இருக்காப்ல… நீ ரெண்டு நாள் கழிச்சு பேசலாம்… உன் அண்ணிகிட்ட பேசு… அவளுக்கு ஆறுதல் சொல்லு… என் மருமக ரொம்ப கஷ்டப்பட்டு போயிட்டா…” எனும் போதே நீலவேணி பீறிட்டு வந்த அழுகையை அடக்கி தன் இளையமகளிடம் பேசி சமாளித்திருக்க… அதே நேரம் முகிலனும் செழியனுக்கு தகவல் சொல்லியிருந்தான்
”ஏண்டா இவ்ளோ நடந்திருக்கு… எனக்கு ஏண்டா தகவல் சொல்லல… அட்லீஸ்ட் மெசெஜாவது அனுப்பி இருக்கலாம்ல”
“நான் ட்ரை பண்ணேண்டா… உன் போனுக்கு ரீச் ஆகல… சரி நீ எப்படியும் போயிட்டு போன் போடுவேன்னு தெரியும் அப்போ சொல்லலாம்னு நினைத்தேன்…”
“ஆரா… எப்படியிருக்கா…” செழியன் வழக்கம் போல தன்னவளிடம் வந்து நிற்க
“ஏண்டா… உன் மாமாக்கு ஹார்ட்ல ப்ளாக் எடுத்திருக்காங்கன்னு சொன்னா… நீ யாரைக் கேட்கிற…”
“ஏண்டா… அவர்க்குத்தான் ஆபரேஷன் முடிஞ்சிருச்சு… நல்லா இருக்கார்னு நீ சொன்னியே… அப்புறம் என்னடா விசாரிக்கிறது… இல்ல உன்கிட்ட விசாரிச்சு என்ன ஆகப் போகுது… என் பொண்டாட்டி என்ன பண்றான்னு தானே கேட்க முடியும்… பாசக்காரி ஆச்சே… டன் டன்னா அழுகையை கொட்டிருப்பாளே… அப்பாக்கு ஆபரேஷன்னு…” எனும் போதே
“ஹ்ம்ம்… தெரியலை… ஆரா ஆரான்னு அவ புராணம் படிக்கிற நீ அவ அழுத கணக்கெல்லாம் எடு… என்னை ஆள விடு…“ முகிலன் கடுப்படித்தபோதே… செழியனும் சுதாரித்தாபடி…
“மாப்ள… நீயே கோவிச்சுக்கிட்டா எப்படி… “ என்று நண்பனைச் சமாளித்தபடியே
“சொல்லுடா… அவ ஓகே தானே…” மீண்டும் ’ஆரா’ என்ற அவனின் மையப்புள்ளியிலேயே நின்றிருக்க… முகிலனுக்கு இதெல்லாம் புதிதா என்ன… ஒரு வருடமா… இரண்டு வருடமா… ஆண்டுக்கணக்கில் செழியனின்- ’ஆரா’ காவியம் கேட்டுக் கொண்டிருப்பவன் அல்லவா… அதனால் நண்பனுக்கு பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தான்
”தனாவை ஹாஸ்பிட்டல்ல ஒரு தடவை பார்த்ததுதான்… தனா கூட ஓகே தான்டா மாப்ள… இந்தக் கார்த்திக்தாண்டா ஆளையே காணோம்டா… வயசான அந்த பெரியவங்களும்… மேகலா பெரியம்மாவும்… நம்ம தனாவும் தாண்டா பெரியப்பா கூட இருந்தது… அன்னைக்கு நைட் எங்ககிட்ட கூட சொல்லாமல்… எப்படியோ ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து சேர்த்திருக்காங்க…”
செழியனின் முகம் கவலையோடு கூம்பியிருந்தது…
“என்னடா பேச்சையே காணோம்..”
“அம்மாக்கு தெரியுமான்னு தெரியலையே முகிலா…… ஏற்கனவே அண்ணன், அண்ணன் குடும்பம்னு… கவலைல இருந்தாங்க… இப்போ இதுவும் தெரிஞ்சா இன்னும் நொறுங்கிருவாங்க…” செழியனின் கவலை இப்போது தாயிடம் சென்றிருக்க
“உங்க மாமா கூட இப்போ ஓகே தான்… இந்த கார்த்திக் ரொம்ப பண்றாண்டா… தோட்ட வீட்ல இருந்துட்டு… கூட ஒத்தாசைக்கு கூட இங்க வர்றதுல… பெரியப்பா திட்டிட்டாரம்… கட்சில பிரச்சனை போல… வீட்டை விட்டு போன்னுலாம் சொல்லியிருப்பார் போல… உங்க சின்ன மாமா மாதிரி கார்த்தியையும் உங்க மாமா விலக்கி வச்சுட்டாரோன்னு எங்க அம்மாவும் அப்பாவும் புலம்பிட்டு இருந்தாங்க…”
செழியன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் வைத்து விட்டான்… இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ…. மனமெங்கும் பாரம் மட்டுமே அவனுக்கு…
---
“தனா” திலகாவின் குரல் ஆராதனாவின் அலைபேசியில் தேம்பிய குரலில் ஒலிக்க…
“அத்தை…”
“இருங்க அப்பாத்தாகிட்ட கொடுக்கிறேன்” என்றபடி ஆராதனா வேகமாக எழுந்து….
“அப்பத்தா!!! அத்தை லைம்ல” என்றபடி அலைபேசியை நீட்ட..
”இப்போதானே பேசிட்டு வச்சேன்…” தன் இளையமகள் என்று நினைத்தபடி அலைபேசியை வாங்கிய நீலவேணியின் காதில் விழுந்த மூத்த மகள் திலகாவின் குரலில்
அடுத்த நொடியே
“பெத்த பொண்ணுக்கே சாபம் விட்ற பாவத்தை பண்ண வச்சுறாத… ஏற்கனவே நொந்து போயிருக்கோம் நாங்க… வச்சுரு…” என்று அழுதபடியே… அலைபேசியை கோபத்தோடு தன் பேத்தியிடம் கொடுத்தவர்
”எனக்கு ஒரு மகன்… ஒரு மகள் அவ்ளோதான்… “ தனக்குள் சொல்லிக் கொண்டாரோ…
ஆராதனா தன் அப்பத்தாவை கவலையோடு பார்த்தபோதே… சுகுமார் அங்கு வந்து நின்றிருந்தான்… சுகுமார் - ஆராதனாவின் சித்தப்பா
“சித்தப்பா… நீங்க ஏன் வந்தீங்க… அப்பா திட்டப் போறாங்க… ஏற்கனவே பிபி அதிகமானதுனாலதான் இவ்ளோ பிரச்சனையும்… நீங்க வேற… நீங்க ஏன் வந்தீங்க இப்போ” தன் சித்தப்பாவை கண்டஆராதனா பதறியவளாக சுகுமாரைத் திட்ட
“ஏண்டா தனா… சித்தப்பாவை வெளியப் போகச் சொல்றியா… என் அண்ணனுக்கு முடியலேன்னு பார்க்க ஓடி வந்துருக்கேண்டா… என் அண்ணன் முகத்தை மட்டும் பார்த்துட்டு போயிறேண்டா… அண்ணன் எங்க..” என்ற போதே
இப்போது நீலவேணி தன் இளைய மகனை முறைத்தார்
”நீ வேற தேவையில்லாத பிரச்சனையை இழுத்து வைக்காத… ஒழுங்கா போயிரு ராஜா கோபம் தெரியும்ல… “ என்றவரிடம்
“அண்ணனை எப்போதும் போல தூரத்துல இருந்தே பார்த்துட்டு போறேன்ம்ா… என் பாசம் இங்க யாருக்கு தெரியுது” சுகுமார் கண்களில் கண்ணீர் வந்திருக்க… அது முதலைக் கண்ணீர் என அவன் தாய்க்குத் தெரியாதா என்ன… நீலவேணியின் முகம் இன்னும் கோபமாக மாறி இருந்தது…
“உன் நடிப்பெல்லாம் நாங்க எத்தனையோ தடவை பார்த்துட்டோம்” நீலவேணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே… தன் அன்னையைத் தாண்டிச் சென்று அங்கிருந்த செவிலியரிடம் சென்றிருந்தான் சுகுமார்…
”நான் ராஜசேகர் தம்பி… அண்ணனைப் பார்க்கனும்…” என எப்படியோ அந்த செவிலியிடம் விசாரித்து அனுமதியை வேண்டியிருக்க
ஆராதனா அவன் அருகில் வந்தவளாக…
“சித்தப்பா… அப்பா தூங்கிட்டு இருக்காங்க… 2 மினிட்ஸ் பார்த்துட்டு வந்துருங்க” என்று முடித்தபோதே
“அம்மா எங்கடா…” சுகுமாரின் குரல் குழைந்திருந்தது…
மேகலாவை அவன் கேட்ட போதே… பேத்தி முன் தன் இளைய மகனை ஒன்றும் சொல்ல முடியாமல்… நீலவேணி மகனைக் கண்களாலேயே எரித்திருக்க…
“அம்மா… அப்பா கூடத்தான் இருக்காங்க…” எனும் போதே சுகுமாரின் முகம் பிரகாசமாகி பின் சாதாரணமாகியது… அடுத்த நிமிடமே தன் அண்ணன் இருந்த அறையில் நின்றிருக்க…
நல்ல வேளை ராஜசேகர் உறக்க நிலையில் இருந்தார்…
”அண்ணன்… உனக்கு இப்படி ஒரு நிலையா…” அழுதபடியே மேகலாவின் அருகே நின்று தன் அண்ணனைப் பார்த்து அழுது வைக்க… மேகலா அருவருப்பான பார்வையுடன்… சில அடிகள் தள்ளி நின்றவராக
“உன்னை யார் வரச்சொன்னது… அவருக்கு மட்டும் தெரிஞ்சது…” மேகலா பல்லைக் கடித்துக் கொண்டு சுகுமாரைத் திட்ட
“அண்ணனை இந்த நிலமையில என்னால பார்க்க முடியலையே… அதைவிட… உங்கள… அண்ணன் இல்லாமல் இருந்துருவீங்களா… உங்களுக்கு எங்கண்ணன்னா உயிராச்சே… “ தன் அண்ணனை விட்டுவிட்டு மேகலாவின் அருகே இப்போது சென்றிருக்க…
மேகலா அனிச்சையாகவே அவனை விட்டு தள்ளியவராக…
“போடா வெளில… இல்ல…” என்று கோபமும் ஆத்திரமுமாக கைகாட்டி எச்சரித்தபோதே… சுகுமார் மேகலாவைப் பார்த்து சிரித்தபடியே…
“மேகி… அப்பவும் என்னைப் புரிஞ்சுக்கல… இப்போதும்” எனும் போதே… மேகலாவின் கண்கள் ஆத்திரத்தில் சிவக்க ஆரம்பித்திருக்க
“அண்ணனுக்கு வயசாகிருச்சு… இதெல்லாம் நடக்கிறது சகஜம் தான்… உன் வயசென்ன அவர் வயசென்ன… ஹ்ம்ம்… அப்போவே சொன்னேன்… இதெல்லாம் சொன்னா என்னை இந்த உலகம் கெட்டவன்னு சொல்லுது… விடு… நான் இருக்கேன்… உ…” எனும் போதே… மேகலா அவனை திட்ட வாயெடுத்த போதே… நீலவேணி உள்ளே வந்திருக்க
“அத்தை…. இ.. இவனைப் போகச் சொல்லுங்க இல்ல…” மேகலா சொல்லி முடிக்கவில்லை….
”சரி சரி போறேன்…” தன் அண்ணனைப் பார்க்க வந்தவன்… அவர் மனைவியிடமே பார்வையை வைத்திருக்க…
கணவனுக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் இந்தப் பொறுக்கியோடு ஏதும் பிரச்சனை கூடாது என மேகலா பல்லைக் கடித்துக் கொண்டிருக்க…
நீலவேணிதான்… எப்படியோ சுகுமாரை வெளியே அழைத்து வந்திருக்க… வெளியே வந்தவன் தன் அன்னையிடமிருந்து பிரிந்து வந்து… அண்ணன் மகள் ஆராதனாவிடம் போய் நின்றிருக்க…
நீலவேணி ஆராதனாவிடம்
“தனா வா கிளம்பலாம்… இவன்கிட்டலாம் பேசாதீங்கன்னு யாராச்சும் சொன்னா கேட்கறீங்களா” தங்கள் வீட்டு இளைய தலைமுறைகளை கடிந்தபடியே பேத்தியைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு போக நினைக்க…
ஆராதனாவைப் பிடித்திருந்தஅவரின் கையைத் தட்டி விட்டவராக… ஆராதனாவின் கைகளை தனக்குள் கொண்டு வந்த சுகுமார்…
“குட்டிம்மா… கார்த்தி எங்கடா… அவனைப் பார்த்தே ரெண்டு மூணு நாளாச்சு… பார்க்கிறப்பலாம் காசு கொடுப்பான்… அவனையும் பார்க்க முடியல… சித்தப்பா நல்லா சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுடா… சொத்துல என்னோட பங்கைப் பிரிச்சுக் கொடுத்திருந்தா… நானும் நல்லா இருந்திருப்பேனே…” என்றபடி முகத்தை போலியாக கவலையாக மாற்றிய சுகுமார்…
“உனக்கு நான் பணம் கொடுக்கனும்… ஆனா சித்தப்பா உன்கிட்ட பணம் கேட்க வேண்டிய நிலை… நான் என்னடா ஒண்ணும் இல்லாத நாதாரியா… முப்பாட்டன்லருந்து என் அப்பா சம்பாதித்த வரை எனக்கான சொத்து இருந்து என்ன பிரயோசனம்…”
“ப்ச்ச்… சித்தப்பா… இது ஹாஸ்பிட்டல்… சும்மா புலம்பிட்டு கத்திட்டு நிற்காதீங்க… இந்தாங்க… கிளம்புங்க” என்றபடி தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவனிடம் நீட்ட… சுகுமாரும் அண்ணன் மகளிடம் இருந்து பணம் கிடைத்த அடுத்த நிமிடமே
“என் மகன்னா மகதான்…” என்றபடி சுகுமார் அங்கிருந்து செல்ல… நீலவேணி ஆக்ரோஷமாக தன் இளைய மகனை முறைத்தபடி நின்றிருந்தார்…
---
சுகுமார் சென்றபின்
”அப்பத்தா… கெளம்பலாமா…. அண்ணனுக்கு வேற மருந்து கொடுக்கனும்… தாத்தா மட்டும் வீட்ல இருக்காரு… அவரும் சாப்பிடனும்ல” ஆராதனா கேட்டபடியே கொண்டு வந்திருந்த பொருட்களை சரிபார்த்து மீண்டும் வீட்டிற்கு எடுத்து போக ஆயத்தமானாள்…
அப்போது பார்த்து, செல்வி… அவள் பெற்றோரோடு வந்திருக்க… ஆராதனா செல்வியின் பெற்றோர்களை பார்த்து விசாரிப்பான மெல்லிய புன்னகை பூக்க
“அப்பாக்கு நல்லாருக்காங்களா தனா…” செல்வியின் தாய் ஆராதனாவிடம் கேட்க… செல்வியின் தந்தை நீலவேணியிடம் பேசிக் கொண்டிருக்க… செல்வியின் பார்வையிலோ தேடல்…
பிறகு செல்வி… அவளது பெற்றோர் மூவரும் ராஜசேகரை பார்க்கச் சென்றனர்…
“நல்லாதானேமா இருந்தாரு…. திடீர்னு என்னாச்சு…” உள்ளே அறையில் செல்வியின் தந்தை கேட்க மேகலாவிடம்… மேகலா அமைதியாக இருக்க… நீலவேணி அவரிடம்
“எல்லாம் இந்த கார்த்திக்னால தான்ப்பா… உன்கிட்ட சொல்றதுக்கென்ன…” எனும் போதே மேகலா நீலவேணியிடம் ஏதும் சொல்ல வேண்டாம் என்று சைகையாக சொல்ல… நீலவேணியும் சுதாரித்து அமைதியாக இப்போது இருக்க… அதன் பின் செல்வியின் பெற்றோர் மேகலை நீலவேணியிடம் பேசிக் கொண்டிருக்க… அவர்களை விட்டுவிட்டு செல்வி வெளியே வந்து ஆராதனாவிடம் வந்து நின்றாள்….
“அப்பாக்கு இப்படின்னு யாரோ சொல்லி எனக்குத் தெரியனுமா… அப்படி என்னடி உனக்கு என் மேல கோபம்… ஒரு போன் போட்டு… அது கூட வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் பண்ணியிருக்கலாமே” செல்வி தன் தோழியிடம் படபடவென பொறிந்து கொண்டிருக்க
“ஏன் உன்கிட்ட சொன்னவுடனே என் குடும்பத்துல நடக்கிறதை எல்லாம் மாத்திருவியா என்ன… இவ்ளோ கோபம் வருது உனக்கு…” என்ற ஆராதனா… தோழியின் கோபப் பார்வையில்… என்ன நினைத்தாளோ…
“இல்ல செல்வி… அம்மாதான் வெளில யார்கிட்டயும் சொல்லவேண்டாம்னு சொன்னாங்க…”
“நானும் வெளில இருக்கிறவங்களும் ஒண்ணா…” செல்வி ஆராதனாவின் கண்களைப் பார்த்துக் கேட்க…
இதற்கு ஆராதனா பதில் பேசவில்லை…
“என்னடி ஆச்சு உனக்கு… ” செல்விக்கு ஆராதனாவிடமிருந்து இப்போதும் மௌனமே கிடைக்க…
“உனக்கு அப்புறமா வச்சுக்கிறேன் கச்சேரி… ஆமா உங்க அண்ணன் எங்க… உங்க அப்பத்தா சொல்றாங்க உங்க அண்ணன்னாலதான் பிரச்சனை அது இதுன்னு… இங்க எங்கேயும் உங்க அண்ணாவையும் காணோம்… என்ன நடக்குது இங்க… இவ்வளவு நீங்க கஷ்டப்படுறீங்க… சார் குடிச்சுட்டு எங்க விழுந்து மட்டையாகிக் கிடக்கிறாரு” என செல்வி வார்த்தைகளை முடிக்கவில்லை…
“இன்னொரு வார்த்தை என் அண்ணனைப் பற்றி பேசுன… ஃப்ரெண்டுனு கூட பார்க்க மாட்டேன்…” செல்வி… தன் தோழியின் உச்சஸ்தாயில் உயர்ந்த குரலில் வாய் மூடி அதிர்ந்து பார்க்க..
“ஆமாம்… நீ யாரு என் அண்ணனைப் பற்றி கேட்கிறதுக்கு… அவர் செய்யறதைப் பற்றி விமர்சிக்கிறதுக்கு… உனக்கு என்ன உரிமை இருக்கு… நீ தனாவோட ஃப்ரெண்ட் மட்டும் தான்… அந்த உரிமை மட்டும் தான்… இதுக்கும் மேல ஒரு வார்த்தை என் அண்ணனைப் பற்றி பேசின… அவ்ளோதான் மரியாதை உனக்கு”
தோழியின் திடீரென்ற அதிரடியான வார்த்தைகளில் செல்வியின் கண்களில் அவளையுமறியாமல் கண்ணீர் வந்திருக்க… வேகமாகக் கண்களைத் துடைத்தவள்… தன்னைச் சமாளிக்கவே திணறினாள் தான்… இருந்தும் எப்படியோ சமாளித்தவளாக… அதே நேரம் தோழியின் காட்டமான வார்த்தைகள் தந்த கோபத்தில்… அவளுக்கு அவள் தன்மானம் சுட
“த…னா… இதுக்கு மேல நானா வந்து உன்கிட்ட பேசினா … நீ என்னன்னு கேளு…” விடுவிடுவென்று வெளியே செல்ல ஆரம்பித்தவளை… ஆராதனா சமாதானப்படுத்தவெல்லாம் இல்லை… மாறாக கடுப்போடு பார்த்தபடி இருந்தவள்… பின் அலட்சிய பாவனையோடு அமர்ந்து விட்டாள்..
---
கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்திருக்க… செல்வி தன் அறையில் படித்துக் கொண்டிருக்க… அப்போது அவளது அலைபேசி அடிக்க… எடுத்துப் பார்த்தவள்… அழைத்த நபர் யாரென்று பார்த்தபடி… முழு அலைபேசி ஒலியும் அடங்கும் வரை அலைபேசியையே பார்த்து விட்டு அலைபேசியை மீண்டும் கீழே வைத்தாள்…
“அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இஷ்டத்துக்கு பேசினா… இப்போ மட்டும் எதுக்கு கூப்பிடறாளாம்… “ கடுப்பாக தனக்குள் சொன்னபோதே… மீண்டும் ஆராதனா அழைக்க… மீண்டும் எடுக்கவில்லை செல்வி… ஆனால் மூன்றாம் முறையும் ஆராதனா விடாமல் அடிக்க.. இப்போது செல்வியும் தன் பிடிவாதத்தை விட்டவளாக அலைபேசியை எடுத்தாள் தான்… ஆனால் பேசாமல் இருக்க
“செல்வி… நான் தனா பேசுறேன்…” ஆராதனா எதிர்முனையில் சொல்ல
“நான் உன் பேரை என் போன்லருந்து இன்னும் எடுக்கலை… இருக்குது.. அது ‘தனா’ன்னும் காட்டுது.. அது சொல்லலைனா கூட எனக்கு என் ஃப்ரெண்டோட நம்பர் தெரியும்…” கோபத்துடன் சொல்ல
தனா.. சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு… பின் பேசினாள் தன் தோழியிடம்
“செல்வி… உன்கிட்ட முக்கியமான விசயம் சொல்லனும்… அதுனாலதான் போன் பண்ணேன்…”
“பரவாயில்லையே… என்னை யாரோன்னு இப்போ நினைக்கல போல”
“ப்ச்ச்… செல்வி… நான் சொல்ல வர்றதைக் கேளு… இப்போ உன் வார்த்தைப் போர்க்கெல்லாம் என்கிட்ட பதில் இல்லை… என்னை நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க…” பட்டென்று சொல்ல வந்ததைச் சொல்ல
செல்விக்கு அப்படியே உலகம் நின்றார் போல உணர்வு… தோழி பேசியது… அவள் மேல் உள்ள கோபம்… அத்தனையும் மறந்தவளாக
”எ.. என்னடி சொல்ற… “
“ஹ்ம்ம்.. பொண்ணு பார்க்க வர்றாங்கதான்… ஆனால் எல்லாமே முடிவாகிருச்சு… சும்மா சம்பிராதாயத்துக்குத்தான் வர்றாங்க… தை கடைசி முகூர்தத்துல மேரேஜ்… அவங்க பேரு ஷண்முகம்… போட்டோ அனுப்புறேன் பாரு…”
செல்விக்கு பேச்சே வரவில்லை… வேகமாக தோழி அனுப்பிய அவளின் வருங்கால கணவனின் புகைப்படத்தை திறந்து பார்த்தாள்…
“ஏய் உனக்கு பதினெட்டு வயசுதாண்டி ஆகுது… இவ்ளோ சீக்கிரம்… படிச்சு கூட முடிக்கலை… அட்லீஸ்ட் யூஜி முடிச்சுட்டாவது மேரேஜ்…” என்றபோதே
“வீட்ல ஒரு மாதிரி நடக்கிறதெல்லாம் நல்லதா படலையாம்… அதுனாலதான் ஏதாவது நல்லது நடக்கனும்னு… இவ்ளோ சீக்கிரமா எனக்கு மேரேஜ் பண்றாங்க… அப்பத்தா ஏற்பாடு…”
“அப்புறம் இது என் வாழ்க்கைல நடக்கிற முக்கியமான விசயம்… உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல… இப்போ நான் உன்கிட்ட பேசாமல் விட்டேனா… அப்புறம் எப்போதுமே என்னால பேச முடியாமல் போயிருமோன்னு பயம் வந்துருச்சு செல்வி…” ஆராதனாவின் குரல் கரகரத்திருக்க… செல்விக்குமே கண்களைக் கரித்துக் கொண்டு வந்திருக்க
“ஆமாம் செல்வி…. நான் படிப்பை டிஸ்கண்டினியூ பண்ணப் போறேன்…”
செல்விக்கு இப்போது செழியனின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது…
“செல்வி… அட்லீஸ்ட் அவளை யூஜி வரையாவது உன்கூட கூட்டிட்டு வந்துரு… படிப்பு முக்கியம்னு அவளுக்கும் தெரியாது… அவ குடும்பத்துக்கும் தெரியாது…”
“ஆரா… என்னடி இப்படிலாம் சொல்ற… உங்க குடும்பத்துல இருக்கிறவங்க சொல்லலாம்… உனக்கு எங்கடி புத்தி போச்சு… நீ மேரேஜ் வேண்டாம்னு சொல்லலாம்ல…” செல்விக்கு பேசும் போதே குரல் தடுமாறியது
“என் மேல எனக்கு இருக்கிற அக்கறையை விட என் அப்பா… அம்மா.. அப்பத்தா தாத்தாக்கு என் மேல அதிகமா அக்கறை இருக்கு… அதை நானும் நம்புறேன் செல்வி… அவங்க எனக்கு நல்ல வாழ்க்கைதான் அமச்சுக் கொடுப்பாங்க… கண்ண மூடிட்டு அவங்க காட்ற வாழ்க்கைக்கு சரி சொல்லலாம்… எங்க திலகாத்தை… பூர்ணி அத்தை இவங்க எல்லாம் எப்படி இருக்காங்க இன்னைக்கு… அதே மாதிரி நானும் நல்லா இருப்பேன்… “
“தனா… தனா… நான் என்ன சொல்ல வர்றேன்னா…” செல்வியைப் பேச விடவில்லை ஆராதனா
“மாப்பிள்ளையை பார்த்த தானே… எப்படி இருக்கிறார் எங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளை… நீயே சொல்லு… அவசரத்துல பார்த்த மாதிரியா இருக்காரு… இலண்டன்ல இருக்காரு… ”
“தனா உனக்கு மேரேஜ்னா சாதாரண விசயமா என்ன… இவ்ளோ ஈசியா சொல்ற… யோசிடி… உன் லைஃப்டி இது… எவ்ளவோ பிரச்சனை இருக்கு… அதெல்லாம் உன்னால சமாளிக்க முடியுமா இந்த சின்ன வயசுல… உனக்கும் ஒரு மெச்சூரிட்டி வரனும்ல… தெரியாத இடம்… அறியாத மனுசங்க.. யாரோ ஒரு ஷண்முகம்…” செல்விதான் படபடத்தாள்… ஆராதனவுக்கோ சிறிதும் படபடபில்லை… தெளிவாக இருந்தாள்… நிதானமாகவும் தன் தோழிக்கு விளக்கம் அளித்தாள்
“இங்க பாரு செல்வி… நீ மாப்பிள்ளையை மட்டும்தான் பார்க்கிற… நான் குடும்பத்தையும் பார்க்கிறேன்… நான் உன்னை மாதிரி இல்லை… உன்னை மாதிரி வளரவும் இல்லை… எவ்வளவு பெரிய குடும்பத்தையும் என்னால சமாளிக்க முடியும்… சின்னக் குழந்தைல இருந்து கெழவி வரை நான் பார்த்துப்பேன்… 50 பேருக்கு கூட என்னால சமைக்க முடியும்… எங்க அம்மா என் அப்பத்தா எல்லாம் சொல்லிக் கொடுத்துருக்காங்க… சோ எனக்கு மேரேஜ்… இன்னொரு புது குடும்பம் இதெல்லாம் எப்படி சமாளிக்கிறது இந்த பயம்லாம் இல்லை… உண்மையைச் சொல்லப் போனால்… எங்க வீட்ல நான் பெரிய பொண்ணானனதுல இருந்தே… இப்படி ஒரு விசயத்துக்கு தயார்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க… அதுனால நான் எல்லாத்துக்கும் தயாராத்தான் இருந்தேன் செல்வி… உன்கிட்டயே எத்தனையோ தடவை சொல்லியிருக்கேனே… எங்க வீட்ல எப்போ வேணும்னாலும் எனக்கு மேரேஜப் பண்ணிருவாங்கன்னு… அவங்களப் பொறுத்தவரை… எங்க ஆளுங்கள்ள நல்ல குடும்பம்… நல்ல பையன்… கிடச்சா போதும்…”
செல்வி பெருமூச்சு விட்டவளாக…
“சரி விடு… என்னால போன்ல உன்கிட்ட ஆர்க்யூ பண்ண முடியல.. நான் நேர்ல வர்றேன்…”
“நீ நேர்ல வந்தாலும் இதுதான் என்னோட பதில்… நாளைக்கு காலைல 10 மணிக்கு மாப்பிள்ளை வீட்ல வர்றாங்க… நீ வர்றியா… என் கூட நீ இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.. லீவ் போட்றியா… ப்ளீஸ்” ஆராதனா செல்வியின் நண்பியாக மாறி இருக்க
செல்வியும்… சரி என்று சொல்லி வைத்தவள்… வேகமாக தன் அலைபேசியை வைத்துவிட்டு… தன் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்தவளாக
“அம்மா… நான் தனா வீட்டுக்கு போயிட்டு… ஒன் ஹவர்ல வந்துறேன்…” என்று தகவலைச் சொன்னபடி… ஆராதனா வீட்டை நோக்கிச் சென்றாள் செல்வி…
செல்வி ஆராதனாவின் மனதை மாற்றுவாளா????…
Lovely update praveee
Karthi en ipadi
Selvi onnume triyama judge pannuvaya
Thana Anna va vittukudukala
Inda froud sugunar oh god
Sezhiya enna da unaku Vanda sothana