/* கண்மணி - ரிஷியை தேடுனா ஆராதனா வர்றாளேன்னு கடுப்பாகமால் செழியன் - ஆராதனாவுக்கு உங்க ஆதரவு கொடுங்க... இவங்களும் சீக்கிரம் உங்க மனதை ஆள்வாங்க... */
அத்தியாயம் :4
”என்னடி இன்னும் பஸ்ஸையே காணோம்… மணி 7.40ஆகிருச்சு” செல்வியின் எண்ணங்களைக் கலைத்தது அவள் எண்ணங்களை ஆட்கொண்டிருந்த அவள் நாயகனின் தங்கை... நம் நாயகி ஆராதனா
செல்வியும் தோழியின் வார்த்தைகளை செவிமடுத்திருந்தாள்…
“இரு…. ’உமா’க்கு கால் பண்ணிப் பார்க்கலாம்” என்று மொபைலை கையில் எடுத்துக் கொண்டு செல்வி பேச ஆரம்பிக்க…
கார்த்திக்கும் நரேனும் இவர்கள் அருகே வந்திருந்தனர்…
”நானும் நரேனும் ஒரு இடம் விசயமா பேசப் போகிறோம்….. பஸ் வந்தா கிளம்புறியா” கார்த்திக் ஆராதனாவிடம் கேட்க…
நரேன் ஏதும் பேசவில்லை… தன் கார்க்கீயை விரலில் சுற்றி காற்றில் ஆட்டியபடி சுற்று வட்டாரத்தை நோட்டமிட்டுக் கொண்டிருக்க… ஆராதனாவின் விழிகளோ அவன் கையில் இருந்த கீயைச் சுற்றிக் கொண்டிருந்தது… தன் அண்ணனின் வார்த்தைகளில் மீண்டும் அவனிடம் கவனம் வைத்தவள்…
‘சரி’ என்று தலையை மட்டும் ஆட்டி வைக்க… அதன் பின் கார்த்திக் நரேன் இருவருமாக நரேனின் காரில் ஏறிப்போய்விட…
பேசி முடித்துவிட்டு அலைபேசியை அணைத்த செல்வியோ பதட்டத்தோடு ஆராதனாவிடம் பேச ஆரம்பித்தாள்
“தனா… நம்ம காலேஜ் பஸ் ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சாம்டி… “ என்ற போதே… அவளின் பதட்டம் ஆராதனாவுக்கும் தொற்றிக் கொள்ள… அதைக் கண்ட செல்வி என்ன ஏதென்று சொல்லாமல் மொட்டையாகச் சொன்ன தன் தவறை உணர்ந்தவளாக…
“யாருக்கும் ஒண்ணும் பெருசா அடி இல்லையாம்… ஆனால் பஸ் வர லேட் ஆகுமாம்...” பேருந்து வராத மற்றும் தாமதமாகும் காரணத்தைச் சொல்ல ஆராதனாவின் முகத்தில் மீண்டும் நிம்மதி வந்திருக்க... அதில் மீண்டும் இயல்பாகியவளாக
”யாருக்கும் ஒண்ணும் ஆகலேல்ல... அதுவரைக்கும் நிம்மதி“ மீண்டும் தன் தோழியிடம் உறுதிபடுத்திக் கொண்டவளாக... காற்றிலேயே கடவுளுக்கு நன்றி சொன்னவள் செல்வியைப் பார்க்க..
பார்த்தவளின் பார்வையில்... “அடுத்து என்ன செய்யப் போகிறோம்” என்ற கேள்வி தாங்கி இருந்தது
“இப்போ என்ன பண்ணலாம் தனா…. நரேன வரச் சொல்லவா…. கார்ல போயிறலாமா” என்ற போதே அலறியிருந்தாள் ஆராதனா..
“ஃபர்ஸ்ட் க்ளாஸ் மாலா மேம் கிளாஸ்…. ஜெனிடிக்ஸ்ல மாடல் எக்சாம் வேற… எஸ் ஆகுற சான்ஸ் கெடச்சுருக்கு... உனக்கு ஏண்டி இந்த கொலவெறி… மெதுவா பஸ் வந்த பின்னால போகலாம்…”
“ப்ளீஸ்டி ப்ளீஸ்டி” என்று கடகடவென்று ஆரம்பித்து கெஞ்சலில் முடிக்க…
“ஆமாம் அப்படியே எக்ஸாமுக்கும்... அந்த மாலா மேம்க்கும் பயம்தான் உனக்கு… என்கிட்டயே என்ன சீனைப் போடற… அதை விடு… ஆனால் நான் எழுதப் போறேன்… நீ பார்த்து எழுதப் போற…. இதுக்கு இவ்ளோ சீனா….” என்று சொல்ல…
“அட பயம்னா சொன்னேன் உன்கிட்ட… எழுதனும்ல… கை வலிக்காது... நீ கொஞ்சமாவா எழுதுவ.. அதுல பாதி எழுதினாலே நாலு பக்கம் எழுதனுமே” அசால்டாக தெனாவெட்டாக ஆராதனா அலுத்தாள்…
“அவ்ளோ பெரிய ரங்கோலி போடற உனக்கு 4 பக்கம் எழுதறதுதான் வலிக்குதா” செல்வியோ சந்தேகக் கணை வீச….
“ப்ச்ச்…. ஏண்டி…. மாடல் எக்ஸாம் தானே…. செமஸ்டர் எக்ஸாமா… ரொம்பத்தான் அலுத்துக்கிற… போக வேண்டாம்னா வேண்டாம் தான்… “ என்று முடித்தவளிடம் செல்வியும் வற்புறுத்தவில்லை
“எங்க அண்ணா மாதிரி… ஏழாவதோட முடிச்சுருந்துருக்கலாம்…. இப்படி காலேஜ் வர கூட்டிட்டு வந்து ஏழரைய இழுத்து வச்சுட்ட.. இல்லைனு வச்சுக்கோ இந்நேரம் மிஸ்ஸா இல்லாம மிஸ்ஸஸா ஆகி இருப்பேன்... ஜாலியா வீட்ல இருந்தோமா... புருசன கவனிச்சோமா... புள்ளையக் கவனிச்சோமான்னு... எப்படி இருந்திருப்பேன் தெரியுமா” புலம்பிய தனாவின் வாயிலேயே போட்ட செல்வியின் கைகளைக் கடுப்போடுத் தட்டியவள்….
“ஸ்கூல்ல்லதான் படிக்க சொல்லி உயிர எடுத்தாங்கன்னு பார்த்தால் இங்க அதுக்கும் மேல்... புக்கு... நோட்டு... பேனா இதெல்லாம் என்னமோ ஒரே அலர்ஜி.. உன்னை மாதிரிலாம் இங்க படிக்கனும்.. அப்படி ஆகனும்னு வெறித்தனமா குறிக்கோள் வச்சுட்டு சுத்துற ஆள் கிடையாதுடி நான்... நீ மட்டும் என் ஃப்ரெண்ட் ஆகலேன்னா... ஹ்ம்ம்ம்... வேற மாதிரி ஆகியிருக்கும்... யோசிச்சு இருக்கனும்டி” என்றவளை செல்வி பார்த்து முறைக்க
“சும்மாடி... லுல்லாய்ய்க்கு.... நீ என் உயிர்டி... “ என்று தோழியைக் கட்டிக் கொண்டவளாக அவளைத் தாஜா செய்தவள்
”ஆனாலும் சைட்ல எங்க அண்ணாக்கும் ரூட் விடற... எப்படிடி இப்படி எல்லா விசயத்திலும் அஷ்டாவதனியா இருக்க… என் அறிவுக் களஞ்சியமே… உன்னை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைக்க நான் பல ஜென்மமா தவம் செய்திருப்பேன் போல” என்ற போதே… செல்வி சிரித்து விட
“இது குட் கேர்ள்க்கு அழகு…சரி இரு…. ரெண்டு கலர் கம்மியா இருக்கு… காலேஜ் பக்கத்தில இருக்கிற கடையில வாங்கலாம்னு பார்த்தேன்… இப்போ டைம் இருக்குதானே… முருகேசன் அண்ணாச்சி கடையில தான் இருக்கும்….. அவங்க வீட்ல போய் வாங்க்கிட்டு வறேன்…”
சாலையின் எதிர்புறம் அந்த கடை…. கடைதிறக்காத போதிலும்… வீடு கடை இரண்டுமே ஒன்றுமே...
ஆராதனா சாலையைக் கடந்து அங்கு செல்ல வேண்டியிருக்க… ஆராதனா அங்கு சென்று விட செல்வி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தாள்…
ஆராதனாவிடம்… மற்றவர்களிடம் பேசி சிரித்தபடி இயல்பாக இருப்பது போல செல்வி காட்டிக் கொண்டாலும் அவள் மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது அவள் மட்டுமே அறிவாள்…
சற்று தொலைவில் தனியே நின்ற கார்த்திகேயனின் புல்லட்டைப் பார்த்தவாறே…
“இந்த மாதிரியே என்னையும் விட்டுட்டு போகப்போறியாடா” என்ற எண்ணம் அவளைச் சூறாவளியாகச் சுற்ற…..
”இன்னும் ஒரே மாதம் தான்…. கார்த்திக் மச்சானுக்கு கல்யாணம் ஆகிவிடும்,… அப்புறம் என்ன பண்றது” என்று மனம் சுணங்கியவளிடம்
“கமலி அக்காவையும் இவனையும் சேர்த்து ஜோடியா சைட் அடிச்சுக்க” மனசாட்சி நக்கலாக சொல்ல.. தனக்குள் சிரித்துக் கொண்டாள் செல்வி…. வேறு என்ன செய்ய முடியும்…
ஆராதனாவுக்கு கமலி என்றால் மிகவும் பிடிக்கும்... கமலி இருந்தவரை அவளை விட்டு யாரிடமும் வரமாட்டாள் ஆராதனா... கமலி சென்னை சென்ற பின்னால் தான் செல்வியிடமே ஆராதனா நெருக்கமானாள்...
அமைதி, அறிவு, பொறுப்பு, பணிவு என அத்தனை குணமும் ஒருங்கே அமைந்திருந்த கமலியை யாருக்குத்தான் பிடிக்காது... செல்வி ஆராதானா இவர்களே ’கமலி அக்கா’ ,’கமலி அக்கா’ என்று அவளைச் சுற்றி வந்திருந்த போது... கார்த்திகேயனுக்கு மட்டும் பிடிக்காமல் இருக்குமா என்ன... ஆனால் தனக்கு ஏன் கார்த்திகேயனைப் பிடித்தது என்றால் காரணமே தெரியவில்லை... செல்விக்கு
“இது காதாலா என்று கேட்டால் அது கூட அவளுக்குத் தெரியாது…. இது நடக்க வாய்ப்பே இல்லை என்ற தைரியத்தில் பெரிய விசயமாக இதுநாள் வரை பெரிதாக தோன்றவில்லை அவளுக்கு… வெகு சாதரணமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்… ஆனால் சில நாட்களாக ”
“ஓய்.. செல்வி என்ன நின்னுட்டே கனவு கண்டுட்டு இருக்க” தன் முன் சொடக்கு போட்டு அவள் முன் பரந்து விரிந்த கைகள் காற்றில் ஆட,,
காதில் கேட்ட குரல் வந்த வந்த திசையை நோக்க….. வியப்பில்… சந்தோசத்தில் விரிந்தன… செல்வியின் கண்கள்…
“செழியண்ணா” என்று கத்திய அந்தக் குரலில் அத்தனை சந்தோசம்… செழியனுக்கும் இப்போது முகம் மலர்ந்திருந்தது…
”தனா சொல்லவே இல்லை… நீங்க இன்னைக்கு வர்றீங்கண்ணு” அவளின் குரலே தனக்கு மிகவும் பிடித்த ஒருவரை வெகுநாட்களுக்குப் பிறகு கண்ட உற்சாகத்தில் துள்ளளாக வெளி வந்தது..
அவனிடம் பேசியபடியே அப்போதுதான் கவனித்தாள்… செழியனின் தந்தை முத்துராம் அருகில் இருந்த டீக்கல்டையில் தேநீர் அருந்திக் கொண்டிருப்பதை..
”மாமாவும் வந்திருக்காங்களா… அத்தை…. கமலிக்கா.. அப்புறம் நீங்க... நீங்க எப்போ யூஎஸ் ல இருந்து வந்தீங்க…. ரெண்டு வாரத்துக்கு முன்னால அப்பா சென்னை வந்தப்போ கூட நீங்க அங்க தான் இருக்கீங்கன்னு சொன்னாங்க... கமலிக்கா மேரேஜ்க்குத்தான் வருவேன்னு சொன்னீங்கன்னு அப்பா சொல்லிட்டு இருந்தாங்க” என்று பட படவென்று அடுக்கியவளிடம்,….
மென்னகையுடன் அமைதியாக செல்வியைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தவன்…
”பதில் சொல்ல விடும்மா” என்று புன்னகை புரிந்தவனைப் பார்த்து…. நாக்கைக் கடித்தவள்…
”சொல்லுங்கண்ணா” என்று அவன் பேச வாய்ப்பு கொடுக்க…
பேசுவது இப்போது செழியனின் முறையானது..
“நானும் அப்பாவும் மட்டும் தான் வந்திருக்கோம்” என்றவன்…
“அந்த தண்ணீர் பாட்டிலைக் கொடு…. அப்பா மாத்திரை போடனும்” என்று அவளிடமிருந்து வாங்கி தனது தந்தையிடம் கொடுக்க நகர… செல்வியும் அவனோடு சென்றாள்…
செல்வியைப் பார்த்த செழியனின் தந்தை முத்துராமின் முகம் அதுவரை இருந்த கவலை படிந்த முகத்தினை மாற்றி…… இப்போது புன்னைகையை பூசிக்கொள்ள…
“எப்படி இருக்கீங்க மாமா… உடம்பு எப்படி இருக்கு… ஏன் ஒருமாதிரி டல்லா இருக்கிறீங்க… இது எங்க ’ராம்’ மாமா இல்லையே” என்று அக்கறை கலந்த வார்த்தைகள் செல்வியின் வாயிலிருந்து வர …. கண்களோ சல்லடை போட்டு அலசியது அவரை…
வழக்கமாக முத்துராமிடம் இருக்கும் உற்சாகம் இன்று அவரிடம் இல்லை என்பதையும் உணர… கவலையோடு செழியனை நோக்கினாள்…
“ஏண்ணா... மாமா ஏன் டல்லா இருக்காரு... இப்படி அவரை நான் பார்த்ததே இல்லை“ என்று அவனைப் பார்த்துக் கொண்டே கேட்க…
“சுகர் பீபீ எல்லா இருக்கு… அதோட இன்னும் கம்பெனி…கம்பெனினு சுத்திட்டு இருந்தா எப்படி இருப்பாரு... ஒண்ணும் பிரச்சனை இல்லை…. நல்லாத்தான் இருக்கார் உங்க மாமா..” என்றவனின் குரலில் சிறிது அனலும் அடித்ததோ???….
இப்போது முத்துராமும் செல்வியிடம் பேச ஆரம்பிக்க… அவர்களைப் பேசவிட்டபடி சற்று தள்ளி நின்றவனின் கண்களோ அந்த சுற்றுவட்டாரத்தை 360 டிகிரி கோணத்தில் சுற்றி வந்தது…
“செல்வி வந்துருக்கா…. இவளக் காணோம்…” கடிகாரத்தைப் பார்க்க …
“அது 8” என்று காட்ட
“7.30 க்குதானே காலேஜ் பஸ்.. ஒருவேளை போயிருப்பாளோ” எண்ணம் தோன்ற… அவனையுமறியாமல் அவன் கண்களில் ஏமாற்றம் வந்திருந்தது …
கிளம்பும் போதே... இவன் இங்கு வரும் முன்னேயே ஆராதனா கல்லூரிக்கு போய்விடுவாள் என்பது தெரிந்துதான் வந்திருந்தான்.... அவளை இன்று பார்க்க 99 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று ஓரளவு அனுமானித்து தான் வந்திருந்தான்... நடக்க வாய்ப்பிருந்த 1 சதவிகித வாய்ப்பையும் நடக்காது என்றே எண்ணி மனதோடே பூட்டி வைத்துக் கொண்டான்....
ஆனால் செல்வியைப் பார்த்தவுடன்... இவள் இங்கிருந்தாள் என்றால் ஆராதனாவும் இருப்பாளே... நிமிடங்களே என்றாலும் தன்னவளை பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகம் மற்ற விசயங்களை எல்லாம் மறக்கடித்திருந்தது...
ஆனாலும் அவன் நாயகியின் தரிசனம் கிடைக்காமல் போக... ஏமாற்றம் மீண்டும் அவன் கண்களில் சட்டென்று ஒட்டிக் கொண்டதுதான்... இருந்தும் அதை மறைத்தவனாக..
”பஸ்ஸ விட்டுட்டுடியா…. தனா உன்னை விட்டுட்டு போய்ட்டாளா” என்று இயல்பாக விசாரிப்பது போல செல்வியிடம் விசாரிக்க…
இப்போது முத்துராமை விட்டு இருவரும் சற்று தள்ளி வந்து நின்றிருந்தனர்…
.
நடந்த விபரத்தைச் சொன்ன செல்வி… ”பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்னா…” என்று முடித்தபோது… செழியனின் மனம் பரபரத்திருந்தது...
நடக்காது என்று நினைத்த 1 சதவிகிதம் வாய்ப்பு என்னும் நிகழ்தகவில் வென்று ஆராதனாவைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது அவனின் அதிர்ஷடமே... மனம் இலேசாகி காற்றில் பறப்பது போல உணர்வு செழியனுக்கு
தன்னவளும் இங்குதான் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல... அவள் இல்லையோ என்று நினைத்தபோது வந்த ஏமாற்றத்தை அடக்க முடிந்தவனால்... இங்குதான் தன் அருகில்தான் இருக்கிறாள் என்று அறிந்தபோது வந்த சந்தோச உணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கத்தான் பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது.. இருந்தும் தன்னை... தன் உணர்வுகளை செல்வியிடம் காட்டிக் கொள்ளாமல்
“அவ எங்க…. பஸ் வரல... விட்டது தொல்லை ஜாலினு வீட்டுக்கே போய்ட்டாளா… படிக்கனும்னா அவ்வ்வ்வ்ளோ கஷ்டம் மேடமுக்கு” அதில் சிறிது நக்கலும் எட்டிப் பார்க்கத்தான் செய்தது…
“அண்ணா… தனாவைக் கிண்டல் செய்யலேன்னா தூக்கம் வராதே உங்களுக்கு….” என்று செல்வி பொய்க்கோபமாகச் சொல்ல….
”அவள் கனவில்லாத தூக்கமும் தனக்கு இல்லை” என்று சொல்லத் துடித்த மனதை அடக்கியவனாக…
“அப்புறம் எங்க” ஆவலை அடக்கிய தொணி அவனிடம்
செல்வியும் எதிர்புறம் கை காட்ட... தன் தலையைத் திருப்பி அவள் காட்டிய திசையைப் பார்க்க தாவணி போட்ட தேவதையாக அங்கு வந்து கொண்டிருந்தாள்…. அவன் தேவதை ஆராதனா….
இங்குதான் இருக்கிறாள் என்று தெரிந்த போதே எகிறிக் குதிக்க ஆரம்பித்திருந்த அவனது இதயம் … நேரில் பார்த்த போது சும்மா இருந்திருக்குமா என்ன…
வெகு நாட்களுக்குப் பிறகு... இன்றுதான் அவளை நேரில் பார்க்கிறான்.... அதுவும் பாவாடை தாவணியில்......
இவர்களுக்கான முகிலனின் காதல் சேவையில் அலைபேசி காணொளி மற்றும் புகைப் படம் வழியாக பலமுறை பார்த்திருக்கிறான் தான்... கண்களால் சிறை பிடித்திருக்கின்றான் தான்...
ஆனால் ஆராதனாவை ஒளி ஊடகங்களின் இடைஞ்சல் இல்லாமல் அதுவும் தாவணியில் பார்ப்பது இதுவே முதல் முறை… அனுபவித்துப் பார்த்தான்
வெகுநாட்களுக்குப் பிறகு நாயகனுக்கு நாயகியின் நேரடி தரிசனம்... விடுவானா என்ன... அவனையுமறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் தேனாக வந்து விழுந்தது ’நண்பன்’ திரைப்படப் பாடல் அங்கிருந்த தேநீர் கடையில் ஒலித்த எஃப்மிலிருந்து…
ஏனோ தன்னாலே
உன் மேலே காதல் கொண்டேனே!! ஏதோ உன்னாலே
என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லைபே.. அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே.. லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ ஒரு காதல் உந்தன் மேலே.. அஸ்க் அஸ்க்… அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்றும் கொய்தேன் மொத்தமாய் கோர்த்துத்தான் காதல் செண்டொன்று செய்தேன் உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..
இந்தப் பாடல் செழியனுக்கு மிகவும் பிடித்த பாடல்… ’அஸ்க்’ என ’தர்கிஷ்’ மொழியில் காதலைச் சொல்ல ஆரம்பித்து… 16 மொழிகளில் இருந்து காதலுக்கான வார்த்தைகளைக் கோர்த்து இறுதியில் ’காதல்’ என்ற தமிழ் மொழியின் வார்த்தையில் முடிந்திருக்கும் பாடல் வரிகள்…
செழியனும் காத்திருக்கின்றான்… இந்த 16 மொழியில் மட்டுமல்ல… இன்னும் பல மொழிகளில் வார்த்தைகளைல் கோர்த்து தன் காதலைத் தன்னவளிடம் சொல்ல… தலை கோதி பெருமூச்சு விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்… தன் உணர்ச்சிகளை அடக்கும் முயற்சியில் பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி சாதாரணமாகப் பார்ப்பது போல அவளைப் பார்க்க ஆரம்பித்திருந்தவன்… ஆராதனா அருகில் வந்த போதுதான் செல்வியின் புறம் திரும்பினான்…
செல்விக்கு செழியன் முகம் தெரியாததால்… பெரிதாக வித்தியாசம் தோன்றவில்லை.. அப்படியே தெரிந்தாலும் அது காதலாக இருக்கும் என்றெல்லாம் நினைத்திருக்க மாட்டாள்.
ஏனென்றால் செழியன் - ஆராதனா கடந்த கால வரலாறு அப்படி…
இங்கு ஆராதானா நடந்து வரும் போதே... தூரத்திலேயே.... செல்வியின் அருகில் இருந்த செழியனையும் பார்த்து விட்டாள்தான்…. அவன் முகத்தின் மாறுதல்களையும் கண்டாள் தான்…
செழியனின் சந்தோச முகத்தைப் பார்த்த வினாடி… பல கேள்விகள் மனதோடு வந்து போயின… அது கண்டிப்பாக தன்னைப் பார்த்து அவனுக்கு வந்து போன பார்வை மாற்றங்களைப் பற்றின யோசனைகள் இல்லை… அந்த எண்ணத்துக்கே அவள் போக மாட்டாள் என்பது வேறு விசயம்…
ஆம்! ஆராதனாவின் எண்ணங்களோ முற்றிலும் வேறாக இருந்தது
”இன்னைக்கு அத்தை வீட்ல வர்றேன்னு சொல்லி இருந்தாங்களா?… இவங்க(செழியன்) எப்போ அமெரிக்காலருந்து வந்தாங்க… யாரும் சொல்லலையே… இல்லை எனக்குத்தான் தெரியலையா?…. இல்லையே... அத்தை,மாமா வீட்டுக்கு வர்றாங்கன்னா… ரெண்டு நாள் முன்னாடியே தெரிந்து விடுமே…. விருந்து தடபுடல் மட்டுமல்ல…. பூட்டியிருக்கும் அத்தை வீட்டைக் கூட இவள் தானே சுத்தம் செய்து வைப்பாள்… ”
அதுமட்டுமில்லாமல்….. அங்கிருந்த தேநீர் கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் தன் மாமாவைப் பார்த்தவளுக்கு முன்னுக்கு பின் முரணாகத் தோன்றியது…
“நேராக வீட்டுக்குச் செல்லாமல் இங்கு ஏன் டீ சாப்பிடுகிறார்” அடுத்த யோசனை அவளைப் புயலாகத் தாக்கியதுதான்... ஆனால் செழியன் வந்திருக்கிறதே முரண்தான் எனும்போது மற்றதெல்லாம் பிறகு எப்படி இருக்கும்…
மனதை அவளாகவேச் சமாதானப்படுத்திக் கொண்டாள் ஆராதனா...
செழியனைப் பார்த்து விட்டாலும் அவனிடம் முதலில் செல்லாமல்… தன் மாமா அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்தவள்….
அவரை மரியாதையோடு வரவேற்றவள்…
“வீட்டுக்கு போகலாம்ல மாமா… இங்க ஏன் டீ குடிக்கிறீங்க….. “ என்று வருத்தம் இழையோடச் சொன்னவள்…. அவரோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு போனால் போகிறது என்று செழியனின் அருகில் வந்திருந்தாள்...
“வீட்டுக்கு வந்த உறவினர்களை ’வா’ என்று அழைக்காவிட்டால்... தெய்வக் குற்றம் செய்த அளவுக்கு அவளது அப்பத்தாவும் அவளது அம்மாவும் அவளை வாட்டி எடுத்து விடுவார்கள்... இது தேவையா... வாங்கன்னு சொல்றதுல குறைஞ்சிற மாட்டோம்” என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு
நாயகன் ’காதல்’ என்ற ஒரு வார்த்தையைச் சொல்லவே பல மொழிகளைத் தேடிக் கொண்டிருக்க... நாயகியோ... ‘வா’ என்ற ஒரு ஒற்றை வார்த்தை உதிர்க்கவே... பல நிமிடங்கள் யோசனை செய்து கொண்டிருந்தாள்...
அவள் வந்ததில் இருந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த செழியன்… தன்னைக் கண்டு கொள்ளாமல்… தன் தந்தையை நோக்கிச் சென்ற ஆராதனாவைப் புன்னைகையோடேயே பார்த்துக் கொண்டிருந்தது வேறு விசயம்….
“வாங்க…” என்று மட்டும் செழியனிடம் சொன்னவள்… அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல்… செல்வியிடம் திரும்பி…
“இன்னும் பஸ் வரலையா… ” என்று தோழியிடம் சலிப்பாகக் கூற…
’வாங்க’ என்று மட்டும் சொன்னவளிடம் இவனும் பெரிதாக பேசவில்லை… பதிலுக்கு தலையை மட்டும் அசைத்து விட்டு… நின்றிருக்க… முத்துராமும் இப்போது இவர்கள் அருகில் வந்திருந்தார்…
தன் தந்தையிடம் திரும்பியவன்,….
“போகலாமாப்பா… நீங்க கார்ல போய் உட்காருங்க… பே பண்ணிட்டு வர்றேன்” என்றவனுக்கு கண்கள் வேறு தீயாக எரிந்தது… நேற்றைய முந்தின தினம் தான் இந்தியா திரும்பி இருந்தான்… சரியான உறக்கம் இல்லை… அது மட்டுமா தன் தமக்கை கமலினியின் வாழ்க்கை பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டிய உச்ச கட்டம்… அவளிடம் போராடி… பெற்றோரிடம் போராடி… அதில் ஏற்பட்ட மன உளைச்சலும்… என எல்லாம் சேர்ந்து சோர்ந்து போயிருந்தான் செழியன்….
இதோ ஒரே ஆறுதல் தன்னவளை வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மட்டுமே... ஆனாலும் அது நல்ல சூழ்நிலையில் இல்லை எனும் போது அது இன்னும் சுணக்கத்தை ஏற்படுத்த… மனம் வலிக்கத் தொடங்கிய நிமிடம்… கண்களும் எரிய…. அருகில் நின்ற தன்னவளின் புத்தகப்பையில் சொருகப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எட்டி எடுத்தவன் வேகமாக முகம் அலம்பத் தொடங்க…
.
“கேட்டால் எடுத்துக் கொடுத்திருக்க மாட்டேனா??” என்று ஆராதனா நினைக்கும் போதே அவன் முகம் கழுவி முடித்திருக்க
“அது குடிக்கிற தண்ணி” என்றாள் கடுப்பாக...
அந்த ஊரில் குடிநீர் என்பது சற்று பெரிய விசயம்… குடிப்பதற்கு தவிர வேறு எதற்கும் அதை வீணாக்க மாட்டார்கள்…” அதனால் ஆராதனா அப்படிச்சொல்ல
“நானும் இந்த ஊர்காரன் தான்” என்று அழுத்தியவன்…. இப்போது மீதமுள்ளதினை முற்றிலும் குடித்து முடித்தவன்… வெறும் பாட்டிலை மட்டுமே அவளிடம் கொடுக்க…
“இது மட்டும் எனக்கெதுக்கு” என்ற பார்வையுடன் அவனிடமிருந்து வாங்கி தன் பையில் வைத்தவள்….. அவனிடம்
“நீங்க வர்றது அப்பாக்கு அப்பத்தாவுக்குத் தெரியுமா…. போன் பண்ணவா” என்று சந்தேகத்தோடு கேட்க….
’இல்லை’ என்று தலை அசைத்தவன்… “போன் பண்ண வேண்டாம்... “ என்று மட்டும் சொல்லியபடி... ஏதோ சொல்ல வந்து மீண்டும் அமைதியாகி விட… மனதுக்குள் அபாயச் சங்கு மீண்டும் ஒலித்தது ஆராதனாவுக்குள்….
அருகில் இருந்த செல்விக்குமே புரிந்தது…. ஏதோ சரி இல்லை என்பது…..
“என்னாச்சு அண்ணா… ஏதாவது பிரச்சனையா” செல்விதான் இப்போது கேட்டாள்
செழியனும் மறைக்கவில்லை இப்போது
”ஹ்ம்ம்… ஆமாம்… சரி பஸ் வந்தா. நீங்க போங்க…. நாங்க வீட்டுக்கு போகிறோம்” வேறு எதுவும் பேசாமல் … இல்லை பேசப் பிடிக்காமல் என்று கடைக்குச் சென்று பணத்தைச் செலுத்திவிட்டு வந்து காரில் அமரப் போனவனிடம்…..
“நானும் வர்றேன்… “ என்றபோதே ஆராதனாவின் குரலில் பிடிவாதம் இருந்தாலும் பிசிறு தட்டி இருந்தது…. ஒன்றும் ஒன்றும் இரண்டு தானே… அது போல தன் அண்ணனின் திருமணப் பேச்சுதான் பிரச்சனை என்பது அவளுக்குப்புரியாமல் இருக்க இன்னும் சின்னப் பெண் இல்லையே இவள்….
”ஆராதனா…. நீ காலேஜ்க்கு போ… எதுடா சாக்குனு படிக்கிறதுல இருந்து எஸ்கேப் ஆகனும் உனக்கு” என்ற கண்டிப்பான செழியனின் குரலில் அதிர்ந்து அவனை நோக்க… அவன் முகம் இப்போதும் கடினமாக இருக்க..
காரில் அமர்ந்திருந்த முத்துராம் தான் இப்போது பேசினார்….
‘நீ போம்மா… ஒண்ணும் பிரச்சனை இல்லை…” என்றபோதே செல்விக்கு போன் வர….
“அவர்களின் கல்லூரிப் பேருந்து இப்போதைக்கு வராது என்ற தகவல் தான் அது…”
பஸ் இப்போதைக்குச் பழுது பார்க்க முடியாது என்பதால் இவர்களாகவேதான் பஸ்பிடித்து செல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்க…
“செல்வி... நீ போ…. எனக்கு என்னமோ சரியா தெரியலை…. உங்க அண்ணாக்கு போன் பண்ணி எங்கண்ணனைக் கூட்டிட்டு வரச் சொல்லு” என்ற படியே காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த தன் மாமாவின் அருகில் அமர… முறைத்த செழியனை ஏறெடுத்து பார்த்தால் தானே ஆராதனா…
செழியன் வேறெதுவும் சொல்லாமல்... ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து விட்டான்....
இப்போது செல்வியும் …. “நானும் போகல” என்று செழியனின் அருகில் அமர்ந்து விட… வேறு வழியின்றி காரை எடுத்தான் செழியன்…
Kamali ku vera edum enna
Karthi ah venam soldralo
Lovely update
Nicely going on
Super
உங்க கதையில் வரும் ஓவ்வொரு கதாபத்திரமூம் அருமை.செழியனுக்கு ஆராதனா கிட்ட சேதாரம் அதிகமா இருக்கும் போல பின்னால ஆனாலூம் ஓவர் கண்டிப்பு
கமலிக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை போல இருக்கே.அது மட்டும் இல்லாமல் அவள் வேற யாரையோ கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுறளோ??🤔🤔🤔லவ் ஆக இருக்குமோ!!
கார்த்திக் செல்விக்கு தான்னு இருக்கும் போது கமலி என்ன செஞ்சா என்ன?ஆனாலும் இந்த செழியன் over strict officerஆ இருந்தா பொண்ணுக்கு எப்படி தான் love வரும் 🤦♀️🤦♀️
Kamali is not interested in getting married with Karthi ahh jii...