ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
கீர்த்தனா... தீக்ஷா... சந்தியா... கண்மணி... அனைவருக்கும் பிடித்த நாயகிகள்... இந்த வரிசையில் இப்போதைக்கு ஆராதனாவுக்கு இடம் இல்லை.... ஆனால் ஸ்டோரி முடியும் போது ஆராதனா எந்த இடத்தில் இருக்கான்னு பார்ப்போம்...
ஃபீமேல் லீட்... நெகட்டிவ் ஷேட் ... வருதான்னு ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு நப்பாசை...
ஸ்டோரி கரெக்டாத்தான் போயிட்டு இருக்கு...
ஆராதனா பிடிக்கலனு சொல்லிட்டீங்க... அடுத்து என்ன... செழியனுக்கு ஆராதனா வேண்டவே வேண்டாம்னு சீக்கிரமே சொல்வீங்க....
பட்.... அதையும் தாண்டி... செழியன் ஆராதனா ஜோடிய பிடிக்க வைக்கனும்.... ஆராதனா தான் என்னைக் காப்பாத்தனும்.... பார்க்கலாம்....
ஹேப்பி ரீடிங் ஃப்ரெண்ட்ஸ்...
நன்றி
பிரவீணா
----------------------------------------
அத்தியாயம் 21
4 மாதங்கள் கடந்திருந்தது…
அடுக்குமாடி கட்டிடம்… வாகனங்கள்…மரங்கள்… மனிதர்கள் என கலந்து விரவியிருந்த அந்த விடுதியின் மைதானத்தில் மத்தியில் ராஜசேகர்-மேகலா ஒட்டு மொத்த உறுப்பினர்களும் ஆராதனாவை சுற்றி அமர்ந்திருக்க… அனைவரின் முகங்களிலும் ஆராதனாவை அங்கு விட்டு விட்டு இப்போது விடைபெற வேண்டும் என்ற வருத்தம் மட்டுமே இருக்க… மேகலாவோ வார்த்தைகள் இன்றி கண்கள் சிவந்து அமர்ந்திருந்தார்… மகளைப் பார்த்தபடியே…
அனைவருக்கும் நரேன் தான் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்…
“நான் பார்த்துக்கிறேன் மாமா…”
“அத்தை எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க…”
“டேய் நீயாவது ஆறுதல் சொல்வேன்னு பார்த்தா நீயும் இப்படி மூஞ்சியத் தூக்கி வச்சுட்டு இருக்க”
செல்வி அமைதியாக அமர்ந்திருந்தாள்…
“யாருக்கு ஆறுதல் சொல்வது… என்ன சொல்வது” என்று தெரியாத நிலையாலும்… இன்று தோழி தனியாக நின்று கொண்டிருப்பதற்கு தானும் ஒரு காரணம் என்பதாலும் … வேடிக்கை பார்ப்பது போல அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் பல போராட்டங்கள்
பேசி வைத்திருந்தது போல இருவரும் ஒன்றாக இங்கு படிக்க வந்திருந்தால் இந்தக் குடும்பம் இவ்வளவு சோகமாகி இருந்திருக்குமா தெரியவில்லை… தன் அத்தையைப் பார்க்க பார்க்க இவளுக்கு எப்போது அழுகை வருமோ என்ற நிலையில் செல்வி நின்றிருக்க…
ஆராதனா இப்போது செல்வியிடம் வந்தவளாக… அவளிடம் பேசாமல்… குனிந்தவள்…
“ஓய்… பேபி… உனக்காகத்தான் என் ஃப்ரெண்ட விட்டுக் கொடுக்கிறேன்… ஒழுங்கா என் ஃப்ரெண்ட கஷ்டப்படுத்தாம இருக்கனும்… அத்தை படிச்சுட்டு வந்ததும்… அத்தைகிட்ட சமத்தா இருந்துட்டு என் ஃப்ரெண்ட படிக்க அனுப்பனும் ஓகேவா” நிமிர்ந்த ஆராதனா செல்வியின் கன்னத்தை தட்டி தான் தைரியமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டவளாக….
“அம்மாவைப் பார்த்துக்கோ செல்வி… அம்மாக்கு இதெல்லாம்… இந்த பிரமாண்டமெல்லாம் நான் சமாளிப்பேனான்னு பயம்…” என்றபடியே… தன் தாயின் அருகே வந்தவள்…
“அம்மா… இது ஸ்கூல் ஹாஸ்டல் இல்ல… நான் சமாளிச்சுப்பேன்” சொல்ல…
மகளையேப் பார்த்த மேகலாவின் கண்களில் கமலிதான் வந்து நின்றாள்…
சந்தோஷமாகத்தான் படிக்க வந்தாள் கமலியும்… விடுதி… கல்லூரி என நன்றாக இருக்கின்றது சொன்னாள் தான்….
ஆனால் எல்லாம் சில வாரங்கள் தான்…
மருத்துவப் படிப்பே வேண்டாமென்று பிடிவாதம் பிடிக்க… மொத்த குடும்பமும் என்ன கேட்டும் ஒன்றும் சொல்லாமல் படிக்கப் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவள்… கடைசியாக விடுதி பிடிக்கவில்லை என்று சொல்லி முடிக்க… திலகாவும் முத்துராமும் ஏதேதோ சொல்லி சமாளித்து மகளை சென்னைக்கு அனுப்ப முயல… கமலியின் பிடிவாதம் நிற்கவே இல்லை… ஒரு கட்டத்தில் அவளது மருத்துவப் படிப்புக்கே முழுக்கு போடலாம் என்று மொத்த குடுமபும் முடிவெடுத்த போது மேகலாதான்… திலகா-முத்துராம் குடும்பத்துடன் சென்னை சென்றால் என்ன என யோசனை சொல்ல… கமலியும் இப்போது சரி சொல்ல… ஒரு வழியாக கமலியின் மருத்துவப் படிப்பு மீண்டும் தொடங்கியது…
மேகலாவுக்கு கமலி ஞாபகம் வந்த போதே…. செழியனின் ஞாபகமும் வந்தது… அவன் பேசியதும் ஞாபகமும் வந்து போனது…
“இங்க பாருங்க… உங்க வேலையைப் பார்த்துட்டு இருக்க மாட்டீங்களா… நீங்க சொன்னதாலதான் இப்போ எங்க வீட்ல சென்னைக்கு கிளம்புறாங்க…”
கமலி பிரச்சனை முடிந்தது என்று வீட்டில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட போதே… செழியன் ஊரை விட்டு வர மாட்டேன் என்று அடாவடி செய்ய ஆரம்பிக்க
திலகா முத்துராம் இருவரும் மீண்டும் கவலையில் ஆழ்ந்திருந்தனர் தங்கள் மக்களை நினைத்து…
ஒரு புறம் மகள்… சென்னை செல்வது… அவளது படிப்பு… இன்னொரு புறம் மகன்… கிராமத்தில் தான் இருப்பேன்… சென்னை வரமாட்டேன் என்ற அவனின் பிடிவாதம்… யாருடைய பிடிவாதத்திற்கு இணங்குவது … திலகா இவளிடம் புலம்பித் தீர்த்த நாட்கள் மனக்கண்ணில் வந்து நின்றிருக்க
“அம்மா” ஆராதனாவின் குரலில்… மேகலா நடப்புக்கு வந்தவராக… அதே நேரம் மகளிடம் தன் மொத்த கவலையையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்…
“பார்த்து பத்திரமா இருக்கனும் தனா… “ என்ற போதே மேகலாவின் கண்கள் அங்கு ஆங்காங்கே இருந்த மொத்தக் கூட்டத்தையும் சுற்றி வந்தது தான்…
மாணவியர்…. அவர்களின் பெற்றோர்… என குடும்பம் குடும்பமாக அந்த மைதானம் முழுக்க மக்கள் கூட்டம் விரவியிருந்தது…
ஆனால் பெரும்பாலும்… பெரும்பாலும் என்ன… 99% பேர் நாகரிக நகர வாழ்க்கையை அடிப்படையாக கொண்டவர்கள்… இவர்களைப் போன்ற கிராமத்து வாழ்க்கையைக் கொண்ட குடும்பங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக அரிதாகத்தான் காண முடிந்தது…
“தனா… நம்ம பழக்க வழக்கத்துக்கு ஏத்த மாதிரி்… செல்வி மாதிரி குணம் இருக்கிற புள்ளைங்கள தேடி தேடிப் பார்த்து பழகிப் பார்த்து நட்பாக்கிக்கோ… யாரையும் சீக்கிரம் நம்பிறாத… பிடிக்காத ஏதும் இருந்தா என்கிட்ட சொல்லலைனா கூடப் பரவால்ல… செல்விகிட்ட சொல்லிரு… எங்களுக்கு நீதான் முக்கியம்… படிப்பெல்லாம் அடுத்ததுதான்… எது தேவைனாலும்… எங்க போகனும்னாலும் நரேன் தம்பி கூட போ… ” என்ற போதே…
“நீ எங்க போனாலும் நரேன்க்கு ஒரு போன் அடிச்சு சொல்லிட்டு போ… இல்ல.. மெசேஜ் பண்ணிட்டுப் போ… அவன் தான் இங்க உனக்கு லோக்கல் கார்டியன்… புரிஞ்சதா”
கறார் குரலில் சொல்லிவிட்டு ராஜசேகர் மீண்டும் அமைதியாக நின்றிருந்தார்…
மேகலாவுக்கு மட்டுமே கணவரின் நிலை புரிந்திருக்க… இதற்கு மேல் இங்கு இருந்தால்… கணவர் தாங்க மாட்டார் என்று நினைத்தபடி….
“புள்ளைகிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு வாங்க… கிளம்பலாம்… கார்த்தி கிளம்பலாமா… தனா வரட்டுமா…” என்றபடி மெல்ல நகர… அனைவரும் வேறு வழி என்று கிளம்பத் தயாராகினர்…
ராஜசேகர்.. மகளிடம் தலை அசைத்தபடி கிளம்பியவர்… காரில் ஏறி அமர்ந்ததுதான் தெரியும்… கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது… இன்னொரு புறம் மேகலாவோ கண்ணீர் கரையை உடைத்திருந்தார்…
மனைவிக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தத்தளித்தவர்
“என் தங்கச்சி திலகா இருக்கும் போதே… அரண்மனை மாதிரி வீடு… தங்கமா பார்த்திருக்கும் என் மகளை…. எதுக்கும் கொடுப்பினை இல்லாமப் போச்சு மேகலை… புள்ளையை இப்படி தனியா விட்டுட்டு வந்துட்டோம்னு நினைக்கும் போது கவலையா இருக்கு… கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தா கூட இப்படி உடஞ்சிருக்க மாட்டேன்…” சொல்லி முடிக்கும் முன்னரே கண்களில் கண்ணீர் கரை கடந்திருக்க… வேகமாகக் கண்களை துடைத்துக் கொண்டவராக…
“ஏம்பா நரேன் தம்பி… இது பொம்பளப் புள்ளைங்க படிக்கிற ஹாஸ்டல் தானே… புள்ளைங்களா… பசங்களான்னே வித்தியாசமே தெரியல.. வெளில கார்ல ஏறும் போது ஒரு கூட்டம் நின்னுச்சு… கைல சிகரெட்லாம் வச்சிருக்குதுங்க… நம்ம தனாவை வேற வெறிச்சு வெறிச்சு பார்த்துச்சுங்க…” ராஜசேகர் நரேனிடம் ஆரம்பித்த போதே
“என் புள்ளை அறியா புள்ள… கைக்குள்ளயே வச்சு வளர்த்த புள்ள… ஏதோ ஓட்டபந்தயம்… விளையாட்டுனு சென்னைக்கு வரும்… அப்போ கூட கார்த்தி கூட வருவான்… திலகா வீட்ல தங்கும்… அதுவும் யாரோ கிண்டல் பண்ணாங்கன்னு கார்த்தி அப்புறம் தனாவை விளையாடக் கூட அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டான்…”
வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டு வந்த மேகலாவையும் … ராஜசேகரையும் கார்த்திக்கும் நரேனும் ஆறுதல் படுத்தியபடி வந்து கொண்டிருக்க… செல்வி குற்ற உணர்வுடன் காரில் அமர்ந்திருந்தாள்… நினைவுகளோ பின்னோக்கி சென்றிருந்தது
---
”அம்மா… என்னோட கட் ஆஃப் க்கும் செலெக்ட் ஆகிட்டேன்” ஆராதனா துள்ளிக் குதித்தபடி ஓடி வந்தாள்…
ஆராதனா சொன்ன தகவலில் மொத்த குடும்பத்துக்குமே ஆச்சரியம்… ஆராதனா இந்த அளவு படிப்பாளா…. அதிலும் கிட்டத்தட்ட செல்விக்கும் அவளுக்கும் சில புள்ளிகளே வித்தியாசம்… அந்த சிறு அளவு புள்ளி அளவு வித்தியாசத்திற்கே செல்விக்கு கல்லூரியில் இடம் கிடைத்து ஆராதனாவுக்கு காத்திருப்போர் பட்டியலில் தள்ளப்பட்டிருந்தாள்… கடைசியில் ஆராதனாவுக்கும் இடம் கிடைத்திருக்க… அனைவருமே ஆராதனாவைக் கொண்டாடித் தீர்த்து விட்டனர்…
ராஜசேகருக்கு அப்படி ஒரு பெருமை… மகன் தான் படிக்கவில்லை… மகளும் மருமகளும் படிப்பதில் அவரைப் பிடிக்க நாலு ஆள் தேவைப்பட்டிருக்க… மேகலாவுக்கோ மகள் மதிப்பெண் எடுத்ததில்… மெரிட்டில் தேர்வானதில்… சந்தோஷம் என்றாலும்… சென்னை செல்ல வேண்டுமே… விடுதியில் படிக்க வேண்டுமே… மனம் தயங்கினாலும் மருமகள் செல்வியும் அவளோடு இருக்கின்றாள் என்ற ஒரு ஆறுதலில் மனம் நிம்மதியுடன் இருந்தார்…
இவர்கள் அனைவரையும் விட கார்த்திக் ஒரு படி மேலே போய் விட்டான். தங்கைக்கும் மனைவிக்கும் கல்லூரிக்கு அருகிலேயே தனியே வீடு… அவர்களைக் கவனித்துக்கொள்ள… கிராமத்தில் இருந்து நான்கு வேலையாள்… என மறுபுறம் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து விட்டிருந்தான்…
ஆக மொத்தக் குடும்பமும் சந்தோஷத்தில் திளைத்திருக்க… ஒரே ஒரு ஜீவன் மட்டும் அந்தச் சந்தோஷத்தை முழுமையாகக் கொண்டாட முடியவில்லை… கார்த்திக்கும் தன் மனைவியின் கவலை புரியாமல் இல்லை… அவனுக்கு மட்டும் ஆசையா என்ன… மனைவியைப் பிரிந்து இருப்பதில்
“சீக்கிரம் எலெக்ஷன் வர்றதுனால… கட்சி சார்பா வேலை இருக்கு… இப்போ களத்துல இறங்கினால் தான் அடுத்து எனக்கு சீட் கன்ஃபார்ம் ஆகும்… ரெண்டு வருசம்தானே… நீ படி… நான் இங்க இருந்தால் தான்… களப்பணில இருந்தால் தான்… தலைவர்கிட்ட நல்ல பேர் எடுக்க முடியும்டா… இதெல்லாம் யாருக்காக… உனக்காகத்தானே… நீ ஏன் மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருக்க… வெள்ளிக் கிழமை ஆனவுடனே ஐயா வந்து செல்லத்தைக் கூட்டிட்டு வந்துருவேனாம்… அதுவரை சமத்தா படிப்பீங்களாம்…” செல்வியிடம் கார்த்திக் தான் கொஞ்சிக் கொண்டிருக்க… செல்வி அப்போதும் சமாதானம் அடையாமல்
“வேண்டாம்… நான் போகல… எக்சாம் எழுதும் போது… சீட் கிடைக்கும் போது… ஒண்ணும் தெரியல… ஆனா இப்போ உங்கள விட்டு போகனும்னு நினைக்கும் போது… எனக்கு எதுவுமே பிடிக்கல… ப்ளீஸ்… என்னமோ தெரியலத்தான்… நீங்க இல்லாம இருக்க முடியாதுன்னு தோணுது… ஒரு வேளை ரெண்டு வருசம் கழிச்சு… நார்மல் ஆகிருவேன்னு நினைக்கிறேன்… அப்போ போய்க்கிறேன்... நான் அப்புறமா படிச்சுக்கிறேனே… இல்லனா ஒண்ணு பண்ணலாம்… இங்க பக்கத்துல கூட பிஜி படிக்கிறேன்… ப்ளீஸ்த்தான்… ப்ளீஸ்த்தான்” செல்வி மற்றவர்களிடம் ஏதும் சொல்லாமல் கணவனிடம் மட்டும் கெஞ்சிக் கொண்டிருக்க
“செல்வி… விளையாடாத… ஏற்கனவே என்னை வில்லன் மாதிரி ஒரு கூட்டம் பார்க்குது… என்னமோ உன்னை மேரேஜ் பண்ணி உன் வாழ்க்கையே கெடுத்த மாதிரி… இப்போ இது மாதிரி நீ பண்ணினால்… மொத்தமா என்னை வச்சு செஞ்சுருவாங்க… எனக்கு மட்டும் ஆசையாடி உன்னை அனுப்பிட்டு இங்க மோட்டு வளையத்தை பார்த்து படுத்துட்டு இருக்கிறது… பிடிவாதம்லாம் பிடிக்காத ஒழுங்கா படிக்கப் போற வழியப் பாரு,.. ” என்றபடி… மனைவியைச் சமாதானப்படுத்தும் சாக்கில் மனைவியிடம் தன் வேலையக் காட்ட… வேகமாக அவன் கையைத் தட்டி விட்டவள்…
“போடா… நீதான் என்னை ஊருக்கு போகச் சொல்லிட்டேல்ல… அப்புறம் என்ன… இப்போ மட்டும் பொண்டாட்டி வேணுமா என்ன… பழகிக்கோங்க “ என்று கட்டிலின் மறு ஓரத்தில் படுத்தவளை தன் புறம் இழுத்துக் கொண்டு புன்னகைத்தவனிடம்…
“இல்லைனா இல்லதான்… “ என்ற போதே…
“ஆனால் கண்ணு வேற சொல்லுதே… இந்தக் கன்னம் வேற சொல்லுதே” கார்த்திக் மனைவியைத் தன்வசப்படுத்த ஆரம்பித்திருக்க… செல்விக்கும் யோசனை உதிக்க ஆரம்பித்திருந்தது…. பின் வந்த நாட்களில்… தாம்பத்ய உறவில் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததை மெல்ல மெல்ல தவிர்க்க ஆரம்பித்திருந்தாள்… கார்த்திக்கையும் தவிர்க்க வைத்தாள்…
விளைவு… அடுத்த நாற்பது நாட்களில் செல்வி கருவுற்றிருக்க… அதுவும் அவள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருக்க… செல்விதான் ஆரம்பித்தாள்…
“அத்தை எனக்கு என் குழந்தைதான் முக்கியம்… நான் படிக்கப் போகல… நீங்கதான் மாமாகிட்ட… இவர்கிட்ட… எங்க வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லனும்…” என்று மேகலாவிடம் சொல்லிவிட…
மேகலாவுக்குமே அதுதான் சரி என்று தோன்ற… மேகலா வார்த்தைக்கு மறுப்பு ஏது…
செல்வி தாயானதில் மீண்டும் அந்த குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்க… படிப்பு இரண்டாம் பட்சம் ஆகிப் போனது செல்வி விசயத்தில் மட்டுமல்ல… ஆராதனாவுக்குமே சேர்த்து
“தனா நீயும் போக வேண்டாம்… படிக்கனும்னு நினைச்சா இங்க மதுரைல சேர்ந்துரு…” மேகலா சொல்லிவிட…
ஆராதனாவுக்குத்தான் இப்போது என்ன செய்வதென்று புரியாத நிலை…
“அம்மா… இங்க இருக்கிற சென்னைதானே… செல்விய நான் பார்த்துக்கிறேன்… இல்ல அப்பத்தா தாத்தாவை எங்க கூட வரச் சொல்லுங்க… அத்தைதான் வேலைக்குப் போறாங்க… அவங்களால வர முடியாது… அப்பத்தா வரலாம்ல… ஏன் அவங்க பார்த்துக்க மாட்டாங்களா… வேலைக்காரங்களும் இருக்காங்க… உங்க மருமகளுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்காதுன்னு நினைக்கிறீங்களா… நான் இருக்கேன்ல… நான் சமச்சு போட்றேன்” ஆராதனா எப்படி எப்படியோ காரணங்களை காட்டி சென்னைக்கு வர முயற்சிக்க
“ஐயோ… போ தனா… நான் இவரை விட்டு வர மாட்டேன்…” செல்வி கறாராகச் சொல்லி விட்டாள்… கார்த்திக்கும் இப்போது வாய் திறக்க வில்லை…. இந்தச் சூழ்நிலையில் அவனுக்கு மட்டும் எப்படி மனது வரும்… தன் மனைவியைத் தனியே அனுப்ப…
அதன் பின் ஆராதனாவும் செல்வியும் சென்னைக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்க… ஆராதனா இப்போது தன் மறுப்பை பிடிவாதமாகக் காட்ட ஆரம்பித்திருந்தாள்…
“இல்லம்மா… நான் படிக்கப் போகனும்… “ அனைவரிடமும் அவர்கள் முடிவை மறுத்துப் பேச…
“தனியா உன்னை அனுப்ப முடியாது தனா… அந்த வீட்ல வேலையாள மட்டும் நம்பி உன்னை அனுப்பி வைக்க முடியாது”
“தனியான்னு ஏன் சொல்றீங்கம்மா… செல்வி என் கூட வரலைல… சோ தனி வீடு வேண்டாம்… ஹாஸ்டல்ல சேர்ந்துக்கிறேன்… அங்க என்னை மாதிரி ஆயிரம் பேர் எனக்குத் துணையா இருப்பாங்க… எனக்கு சென்னைக்கு போகனும்மா..” ஆராதனாவும் பிடிவாதம் பிடிக்க…
“யார் நீ…. ஹாஸ்டல்ல தங்கப் போறியா… ஏற்கனவே கமலி… ஓரளவு எல்லாம் சமாளிக்கிறவ… அவளே போயிட்டு இருக்க முடியாம அழுதது தெரியாதா… அவளுக்காக மொத்த குடும்பமும் ஊரை மாத்திட்டு போனாங்களே…. என் பொண்ணு திலகா போக மாட்டேன்னு மாட்டேன்னு அழுதா… பேத்திக்காக போன்னு அவளை அனுப்பி வச்சேன்… இப்போ என் பொண்ணைத் தொலச்சுட்டு நிக்கிறேன் நான்” நீலவேணி பாட்டி ஒருபுறம் அழ ஆரம்பித்திருக்க
ஆராதனா யாரின் பேச்சையும் கேட்கவே இல்லை… தீர்மானத்தோடு இருந்தாள்…
“எனக்கு சென்னைக்குப் போகனும்.. எனக்கு கிடச்சிருக்க வாய்ப்பை மிஸ் பண்ண இஷ்டம் இல்ல… யார் என்ன சொன்னாலும்… நான் போவேன்…” ஆராதனாவின் தன் பிடிவாதத்திலேயே இருக்க…
ராஜசேகர் இப்போது…
“என்ன வாயெல்லாம் நீளுது… போகக் கூடாதுன்னா போகக் கூடாது… அவ்ளோதான்… அம்மா சொன்ன அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்” என்று எழுந்து போய் விட… மேகலாவும் தன் முடிவு இதுதான்… சென்னைக்கு போக வேண்டாம் என்று சொல்லி விட்டு செல்ல… ஆராதனா கோபத்துடன் அறையை விட்டே வெளியே வராமல் பிடிவாதம் பிடித்திருக்க…செல்வியும் கார்த்திக்கும் சமாதானப்படுத்த வந்திருந்தனர்
“தனா… நீ படிக்கப் போகனுமா…” செல்வி அவள் அருகில் வந்து அமர.. வேகமாக அவளை முறைத்த ஆராதனா
“போடி… பெருசா பேச வந்துட்ட… கனவு இலட்சியம் சொல்லிட்டு திரிஞ்ச… எல்லாம் சும்மா பேச்சுதானா…”
“இல்ல தனா…” என்ற செல்வியின் கைகளைத் தட்டி விட்டவளாக
“ப்ச்ச்… உன்னோட வாழ்க்கை… உனக்கு எது முக்கியம்னு நீ முடிவெடுத்துட்ட… ஆனால் எங்க அண்ணனை யாராவது சொன்னாங்க அதுக்கப்புறம் இருக்கு உனக்கு… ஏண்டி… இப்படி பண்ணின… எவ்ளோ பேசுவ… எம்ப்ரியாலஜிஸ்ட் ஆகனும்… எவ்ளோ பேர் குழந்தை இல்லாம இருக்காங்க… அவங்களுக்குலாம் சேவை பண்ணனும்னு சொல்வியே… இன்னைக்கு உன்னோட குழந்தைனு சுயநலமா ஒதுங்கிட்டேல்ல…” ஆராதனா செல்வியின் கண்களைப் பார்த்து கேட்க…
“படிக்க மாட்டேனு சொல்லலவே இல்லையே தனா… இப்போ படிக்கலைனுதானே சொல்றேன்… என்னைப் புரிஞ்சுக்கோ” செல்வியின் குரல் தயங்கி வர…
“செல்வி… எனக்குத் தெரியும்… என்ன பண்ணனும்னு… எப்படி சென்னைக்குப் போகனும்னு… சோ எனக்காக யாரும் ஒண்ணும் கரிசனப் பட வேண்டாம்…” கடுப்பாகச் சொன்னபோதே கார்த்திக் செல்வியின் முன் வந்து நிற்க… சட்டென்று வாயை மூடியவளாக அமைதியானாள் ஆராதனா…
கார்த்திக் இப்போது தங்கையின் அருகில் வந்து அமர்ந்தான்…
“தனா… என்னைப் பாரு… “ கார்த்திக் தங்கையிடம் பேச ஆரம்பித்தான்
“உனக்குப் படிக்கனுமா…”
“ஹ்ம்ம்…” ஆராதனா எங்கோ வெறித்தபடி தலை ஆட்ட…
“நீ படிக்கப் போ… யார் என்ன சொன்னாலும் நான் பார்த்துக்கிறேன்… அம்மா அப்பா கிட்ட நான் பேசுறேன்… நான் அண்ணன் இருக்கேன் உனக்கு… உனக்குப் பிடிச்சத பண்ணு” கார்த்திக் தங்கையிடம் தீர்மானமாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல்… அதற்கான நடவடிக்கையிலும் இறங்கினான்…
அதன் விளைவு…
‘இதோ ஆராதனா இன்று கல்லூரி விடுதியில்…’
’ஆராதனா மட்டும் சென்னையில்… நான் இல்லாமல்…’
செல்விக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது… இங்கு வரும் போது கூட ஒன்றும் தெரியவில்லை… ஆனால் விடுதியில்… அங்கு இருந்த சூழல்… மாணவிகள்… இங்காவது மாணவிகள் மட்டும்… கல்லூரியில் அது ஆண் பெண் இருபாலரும் பயிலும் கல்லூரி… அனைத்தையும் பார்த்த பின் செல்வியின் குற்ற உணர்ச்சி மேலும் மேலும் அதிகமாகி அவள் மனபாரம் அதிகமாகி இருந்தது…
நினைவுகளின் தாக்கத்தில் இருந்து தன்னை விடுத்து… திரும்பி தன் மாமியாரைப் பார்க்க… காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து அழுது கொண்டிருக்கின்றார்… தன் அத்தை அழுது இன்றுதான் பார்க்கிறாள் செல்வி… தன்னால் தானோ எல்லாம் என்ற உணர்வில் கணவனைப் பார்க்க
”ஏய் உனக்கென்ன ஆச்சு… நீயும் அழுதுறாத… ஆளாளுக்கு அழுதுட்டு இருக்கீங்க… அம்மா அவளுக்கு மேரேஜ் பண்ணிக் கொடுத்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க… படிக்கத்தானே வந்திருக்கா… சமாளிக்கிறாளான்னு பார்ப்போம்… நரேனும் பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கான்… இல்ல முடியாதுன்னா வீட்டுக்கு வந்துறட்டும்… நானே கூட்டிட்டு வந்துறேன் போதுமா… நாம அவளைக் கட்டாயப்படுத்தி விட்டுட்டு வரலையே… அவளா இஷ்டபட்டு தானே வந்திருக்கா” என்றபடி கார்த்திக் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க….
இங்கு சென்னையில்… ஆராதனா அவர்கள் சென்றபின்….
தன் குடும்பம் தன் கண்பார்வையில் இருந்து மறையும் வரை… கையசைத்து வழி அனுப்பியவள்… அவர்கள் சென்ற பின்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள் வெறுமையான எண்ணங்களோடு…
அப்போது…
“ஏய்… “ விரல் சுண்டி யாரோ அழைக்க… ஆராதனாவுக்கு கேட்டதுதான்… ஆனால் திரும்பவில்லை… வெறித்த பார்வையுடன் சாலையைப் பார்த்தே நின்றிருக்க
”ஏய்… யெல்லோ ப்ளெயின் சுடி” ஆராதனாவின் வெகு அருகில் குரல் கேட்க… அவளைத்தான் அழைக்கிறார்கள் என்பது புரிய வேகமாகத் திரும்பியவள் முன்… கூட்டமாக ஏழெட்டு பெண்கள்…. அதில் பாதிப்பேர் பெண்ணா… ஆணா எனக் கண்டுபிடிக்க முடியாத தோற்றம்…
ஆராதனா இப்போது தன் குடும்பம் பற்றிய எண்ணங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவளாக…
“சொல்லுங்கக்கா…” என்று தன் முன் வந்து நின்ற பெண்ணிடம் இயல்பாக பேச ஆரம்பித்தவள்…
“ஏய்னு கூப்பிட்டீங்களா… அதான் யாரோன்னு நெனச்சுட்டேன்… நல்ல வேளை அப்புறம் என் சுடி கலரை வச்சு கூப்பிட்டவுடனே நான்னு புரிஞ்சுகிட்டேன்… என் பேர் ஆராதனா… சுருக்கமா தனான்னு கூப்பிடுங்க..” ஆராதனா புன்னகைக்க…
அவள் முன்னால் நின்ற பெண் இப்போது முறைத்தபடி…
“ஓய்… உன் பேர் என்னன்னு நாங்க கேட்டோமா… அது என்ன வேணும்னாலும் இருக்கட்டும்…” என்றவள்..
ஏதோ ஞாபகம் வந்தவளாக…
“ஆமா என்ன சொன்ன… அக்காவா… என்ன சேட்டையா… சீனியர்னு கூப்பிடனும் சரியா…”
“ஹ்ம்ம்… சரி சீனியர்.. சொல்லிட்டீங்கள்ள சீனியர்… அப்படியே கூப்பிட்றேன்…. சீனியர் லீடர்… உங்கள மட்டும் சீனியர் கூப்பிடனுமா… இல்ல இவங்களையுமா…” கூட்டத்தில் இருந்த மற்றவர்களைக் கைகாட்டிக் கேட்க
“ஏய்… என்ன நக்கலா… ரதி… இவள இப்படி கவனிக்க கூடாது…”
“சரி சரி… விடுங்க… யெள்ளோ சுடி… எல்லாரையுமே சீனியர்னுதான் சொல்லனும்… நான் கேட்க வந்ததைக் கேட்க விடு” என்றவள்…
“அந்த பிஎம்டபிள்யூ பையன் யாரு… அவன் பேர் என்ன… அவன் நம்பர் கொடு… அதை மட்டும் பண்ணிட்டு கிளம்பு…” ரதி என்ற பெண் அலட்சியமாகக் கேட்க
“யார் எங்க செல்வி அண்ணனா…”
“ஹலோ அது யாரா இருந்தா என்ன…வேற பேச்சு பேசாம எங்க தலைக்கு நம்பரக் கொடு… அந்தப் பையன் பேர் என்ன..” என்ற போதே
“சீனியர்… அந்த டீக்கடைல தம் அடிச்சுட்டு இருந்தீங்க தானே… நான் பார்த்தேனே… எங்க செல்வி அண்ணா பற்றி பேசுறதுக்கு அவரைப் பற்றி கேட்கிறதுக்கு ஒரு தகுதி வேணும்… உங்கள மாதிரிப் பொண்ணுலாம் எங்க செல்வி அண்ணாக்கா… சான்ஸே இல்ல… ” நக்கலாக ஆராதனா சொல்ல
அந்த கூட்டத்தின் தலை என்று அழைக்கப்பட்ட அந்த ரதியின் முகம் கோபத்தில் கொப்பளித்திருக்க
“என்ன உன் ஆளா… அதான் துள்றியா…”
“ஐயோ சீனியர்… அவர் பக்கத்தில நிக்கிறதுக்குலாம் எனக்கு தகுதியே இல்ல… நரேன்னா மிஸ்டர் பெர்ஃபெக்ட்… எங்க வீட்டுக்கு மருமகளா , மிஸஸ் நரேனா வரனும்னா அவர மாதிரியே தங்கமான… எப்படி எப்படி… சுத்தமான 916 கேடிஎம் பொண்ணாத்தான் வர முடியும்… நீங்க மட்டும் இல்ல நானுமே அவர் பேரைக் கூடச் சொல்ல தகுதி இல்லாதவங்க… அதுனால நீங்க என்ன பண்றீங்கன்னா… உங்க பேருக்கு ஏத்த மாதிரி மன்மதன்… மதன்… இப்படி யாராவது பார்த்து போயிருங்க…” என்றவள்…
“அப்புறம்… உங்களுக்கு ’அக்கா’ன்னு எப்படி கூப்பிடப் பிடிக்காதோ அதே மாதிரி… இந்த எள்ளோ சுடி… ஆரஞ்சு சுடின்னு கூப்பிடறது எனக்கும் பிடிக்காது… ஆராதனான்னு … இல்ல… ஜூனியர்னு கூப்பிடுங்க… சரியா…”
“ஏய்” அந்த ரதி குரலை உயர்த்திய போதே… அவளை நிறுத்திய ஆராதனா
“இருங்க… என்னைப் பேச விடுங்க… ஜூனியர்னு கூப்பிட்டால் மட்டுமே… ஆராதனா நிப்பா… சாரி… எனக்கு டைம் இல்ல… ரூம் ரெடி ஆகிருச்சான்னு பார்க்கனும்… என்கிட்ட இன்னும் பேசனும்னா… சாரி சாரி உங்க உங்க பாசைல சொல்லனும்னா… ராகிங் பண்ணனும்னா… டைம் சொல்லுங்க ரூமுக்கு வர்றேன்” என்றபடி… அந்த விடுதியின் நிர்வாகப் பிரிவுக்குச் சென்றாள் ஆராதனா..
”எப்போது தன் அறை தயாராகும்” என்ற கோரிக்கையோடு
----
“ஆராதனா இந்த ரூம்ல இப்போதைக்கு தங்கிக்கோ… ரூம் ரெடி ஆன உடனே ஷிஃப்ட் பண்ணிறலாம்… உனக்கு பிரச்சனை இல்லதானம்மா” என்று அந்த விடுதியின் கண்காணிப்பாளர் கேட்க… ஆராதனாவும் ஒத்துக் கொண்டாள்…
தான் கையில் கொண்டு வந்திருந்த பொருட்களோடு அந்த அறையில் உள்ளே நுழைய… அங்கு ஏற்கனவே ஒரு பெண் இருந்தாள்… பார்ப்பதற்கு வட இந்தியப் பெண் போல இருக்க…
“நமக்கு செட் ஆகுமா” யோசனையோடு உள்ளே வந்தவளாக
“ஒரு நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” தனக்குள் சொல்லிக் கொண்டபடி தான் கொண்டு வந்த பெட்டியையும்… பையையும் அங்கு போடப்பட்டிருந்த கட்டிலில் வைக்கப் போக
“ஹலோ… யாரைக் கேட்டு இந்தப் பொண்ண உள்ள கூட்டிட்டு வர்றீங்க… என்னால எல்லாம் இந்தப் பொண்ணோட இந்த ரூமை ஷேர் பண்ண முடியாது… என் ஃப்ரெண்டும் நானும் இருக்கனும்னு டிசைட் பண்ணினதால தான் டபுள் ரூம் கேட்டேன்”
“இப்போதான் அந்தப் பொண்ணு வரலைல… “
”அதுனால… எனக்கு சிங்கிள் ரூம் கேட்டேன்ல… எப்போ அரேஞ்ச் பண்ணுவீங்க”
“இங்க பாரு ஊர்விஷா… உனக்கு ரூம் ரெடி ஆகல… இந்தப் பொண்ணுக்கும் ரூம் ரெடி ஆகல… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தங்கிக்கங்க… நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் உங்க ரூம் ரெடி ஆகிரும்…”
ஆராதனா சம்மதமாக தலை அசைக்க…
“என்னால எல்லாம்… இந்த பொண்ணு கூட ரெஸ்ட் ரூம்லாம் ஷேர் பண்ண முடியாது மேடம்…. இந்தப் பொண்ண வேற ஏதாவது ரூம்ல்ல அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லுங்க…” அந்த ஊர்விஷா கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் பேச… விடுதிக் கண்காணிப்பாளருக்கு என்ன சொல்வதென்றே புரியாத நிலை…
ஆராதனாதான் நிலைமையைப் புரிந்து கொண்டவளாக…
“மேடம்… நான் காமன்ல இருக்கிற ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கிறேன்… ஊர்விஷா ஜஸ்ட் ரூம் மட்டும் ஷேர் பண்ணினா உனக்கு ஓகே வா” ஆராதனா தானாக இறங்கி வந்திருக்க… இப்போது ஊர்விஷாவின் புருவம் மேலே இறங்கி வந்திருந்தது…
ஊர்விஷாவின் மௌனமே இப்போது சம்மதமாகி இருக்க… விடுதிக் கண்காணிப்பாளருக்கும் பிரச்சனை முடிந்திருந்தது… ஒரு வழியாக அவர் கிளம்பியிருக்க.. ஆராதனாவும் ஊர்விஷாவும் அவரவர் கட்டிலில் அமர்ந்து தங்கள் பொருட்களை சரிபார்த்துக் கொண்டிருக்க… அப்போது தீடீரென்று ஊர்விஷாவின் துணி அடுக்கி இருந்த பெட்டி கீழே விழுந்து அத்தனை உடைகளும் தரையில் கொட்டி இருக்க…
“அச்சச்சோ… என் ட்ரெஸ்லாம் அயர்ன் பண்ணி வச்சிருந்தது… எல்லாம் களஞ்சு போச்சு…” ஊர்விஷா அழுதே விட்டிருக்க… ஆராதனாவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும்… அடக்கிக் கொண்டவளாக
“ஊர்வி… இதுக்கு போய் அழுவாங்களா… அரை மணி நேரத்துல அடுக்கி வச்சிறலாம்…”
“ப்ச்ச்… அரை மணி நேரமா… நான்லாம் ட்ரெஸ்ஸே மடிச்சு வச்சதில்ல… எனக்குத் தெரியவும் செய்யாது… அத்தனையும் காலேஜ்க்கு போட்ற ட்ரெஸ்… இன்னொரு தடவை அயர்னிங்கு கொடுக்கனும்… “ என்றபடியே அங்கிருந்த உடைகளை அப்படி அப்படியே எடுத்து அள்ளி வைக்கப் போக…. ஆராதனா வேகமாக அவளைத் தடுத்து நிறுத்தியவளாக
“ஏய்… இரு இரு…” என்றபடி தரையில் அமர்ந்தவள்
“உன் பெட்டியக் கொடு…” என்றபடி… சொன்னபடியே அடுத்த அரை மணி நேரத்தில் அவளது உடைகளை முதலில் இருந்தவாறே நேர்த்தியாக அடுக்கி வைத்து பெட்டியை அவளிடம் கொடுக்க…
“ஹேய் சூப்பர்ப்பா… எப்படி இப்படி மடிக்கிற… அதுவும் அயர்ன் பண்ணின மாதிரியே” ஊர்விஷா அப்பாவியாகக் கேட்க
“எங்க வீட்ல நான் தான் எல்லார் ட்ரெஸ்ஸையும் மடிப்பேன்… பழகிருச்சு அப்புறம் உன் ட்ரெஸ் அயர்ன் பண்ணவே தேவையில்ல… அழ மாட்டதானே இனி” ஆராதனா எழுந்தபடியே சொல்ல.. ஊர்விஷாவும் இப்போது அவளைப் பார்த்து புன்னகைத்தாள்… ஆனால் நன்றி எல்லாம் சொல்லவில்லை… அடுத்தடுத்து அவளுக்கு வந்த அலைபேசி அழைப்பில் அவள் ஆராதனாவைக் கண்டு கொள்ளாமல் பேச ஆரம்பித்திருக்க…
ஆராதனாவுக்குத்தான் நேரமே போகவில்லை… அவள் அம்மாவிடம் பேச வேண்டும் போல் இருந்தாலும் பேசவில்லை… கண்டிப்பாக அழுதுகொண்டிருப்பார் என்று தெரியும்… இவள் பேசினால் இன்னுமே அழுவார்… என்ன தைரியம் சொன்னாலும் அவர் கேட்கப் போவதில்லை… இவள் ஒருவாரம் இருந்து காட்டினால் மட்டுமே தன் அம்மா இயல்புக்கு வருவார் என்று தெரியும்…
செல்விக்கும் அழைத்துப் பேசப் பிடிக்கவில்லை… ஏனோ ஏதோ கோபம்… அவள் மீதா… தன் மீதா தெரியாத நிலை… நரேனுக்கு மட்டும் அழைத்து தனது பொருட்கள் எல்லாம் எப்போது வரும் என்று விசாரித்து விட்டு… அவளுக்கு அறை நாளைதான் கிடைக்கும் என்பதையும் சொல்லியவள்…
“அவசரமில்ல செல்விண்ணா… நாளைக்கு வந்தால் கூடப் பரவாயில்ல… என்கிட்ட ரெண்டு செட் ட்ரெஸ் இருக்கு… அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்”
“ரூம் ரெடி ஆகலையா… அட்மின்ல பேசவா தனா…” நரேன் அக்கறை கலந்த குரலில் வேகமாகக் கேட்க
“இல்லல்ல… இப்போதைக்கு ஒரு ரூம்ல கொடுத்திருக்காங்க… மார்னிங் என் ரூம் ரெடி ஆனதும் அங்க போயிருவேன்… ஒண்ணும் பிரச்சனை இல்ல செல்விண்ணா “ என்றவளிடம்
“நாளைக்கு நான் மார்னிங் வர்றேன் தனா… ஏதாவதுன்னா… என்னைக் கூப்பிடு… தயங்காத… எத்தனை மணினாலும் பரவாயில்ல… சரியா…”
“ஹ்ம்ம்… பை” என்று வைத்தவள் மணியைப் பார்க்க… மணி மாலை ஐந்து ஆகி இருக்க… வயிறு பசிப்பது போல் இருக்க… வெளியே போய்ப் பார்க்க… அவள் நினைத்தது போல… அங்கிருந்த பெண்கள்… கையில் கோப்பையோடு வந்து கொண்டிருக்க… வேகமாக மீண்டும் தங்கள் அறைக்கு வந்தாள்… ஊர்விஷா இப்போதுமே அலைபேசியில் தான் பேசிக் கொண்டிருந்தாள்…
“எல்லாம் நல்லா இருக்கு மம்மி… டாடியும் போன் பண்ணினாங்க… மிஸ் யூ.. லவ் யூ” என்றபடி அலைபேசியை வைத்தவள்… தனக்கு முன் வந்து நின்ற ஆராதனாவைப் பார்த்து என்ன என்று சைகை மொழியில் கேட்க
“டீ குடிக்க வர்றியா… ஸ்னாக்ஸ்லாம் இருக்கு…” என்றவளிடம்
“இல்ல நான் வரலை… ஃப்ரெண்ட்ஸ் வர்றாங்க… 6.30 க்கு மேல வெளில போய் சாட் ஐட்டம் சாப்பிட்டுக்குவேன்” என்றபடி அலைபேசியில் மீண்டும் கவனம் வைக்க…
“நான் வேணும்னா உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வரவா… பிடிச்சிருந்தா சாப்பிடு… “ என்றபடி அவள் பதிலையே எதிர்பார்க்காமல் ஆராதனா கிளம்பியிருக்க…
ஊர்விஷா அவள் போவதைப்ப் பார்த்தபடியே அலைபேசியில் தனது தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்…
”தாரா… இங்க ஒரு அடிமை சிக்கியிருக்கு… நம்ம டிபார்மெண்ட் தான்…
“ ஹான் நம்ம கூடத்தான் படிக்க வரப் போறா… ”
“சௌத் சைட்லருந்து வந்திருக்கா… என்ன சொன்னாலும் செய்வா போல… நமக்கும் இப்படி ஒரு ஆளு வேணும் தானே எடுபிடி வேலைக்கு… “
“சரி சரி… கூட்டிட்டு வர்றேன்… வருவாளான்னு தெரியல… பார்க்கிறேன்…” என்று முடித்தவள்… அடுத்து ஆராதனாவை விடுத்து அவர்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்க… அவள் பேசி முடித்த போது ஆராதனாவும் உள்ளே வந்திருந்தாள்
“இன்னைக்கு நியூ ஜாயினர்ஸ்… ஃப்ரெஷர்ஸ் ஸ்பெஷலாம்… “ என்றபடி ஊர்விஷாவிற்கு ஒரு கோப்பையை நீட்ட…
ஊர்விஷாவும் அதை வாங்கிக் கொண்டவளாக…
“தேங்க்ஸ்… ஆனால் நான் வெளில கிளம்புறேன்… வேண்டாம்னு நினச்சேன்… நீ கஷ்டப்பட்டு கொண்டு வந்ததால நான் குடிக்கிறேன்” நட்பாகப் பேச
“தேங்க்ஸ்… நான் கொண்டு வந்ததை வாங்கிக் கிட்டதுக்கு” ஆராதனாவும் சொன்னவளாக
“நீ நல்லா தமிழ் பேசுற… எப்படி” தன் சந்தேகத்தைக் கேட்டாள் ஆராதனா
“நான் தமிழ்ப்பொண்ணு தானே… இதுல என்ன ஆச்சரியம்” என்றவளிடம்
“பார்த்தா அப்படி தெரியல… உங்க அப்பா அம்மா லவ் மேரேஜா…” ஆராதனா கதை கேட்கும் பாணியில் அவள் முன் அமர்ந்தவளாக
”இல்ல எங்க ஊர்ல கூட ஒரு பொண்ணு இருந்தா…. அவங்க அம்மா நார்த் இண்டியா… அவங்க அம்மா சாயல்ல இருப்பா… செம்ம அழகா இருப்பா… எங்க ஊர்ல அவள சேட்டு வீட்டுப் பொண்ணுனுதான் சொல்வாங்க… அவ பேர் பூஜா…”
என்றவள்…
“அப்போவே… அவ பின்னால பசங்க சுத்துவாங்க….”
“பூஜா பின்னால ரோஜாவோடயா…” ஊர்விஷாவும் அவளோடு சேர்ந்து கொள்ள…
“அதே ஊர்விஷா…” அவளுக்கு ஹைஃபை கொடுத்தவளிடம்
“அந்த பூஜாவுக்கு ஃப்ரெண்டுன்ற பேர்ல ஒரு கறார் பேர்வழி பாடிகார்டா இருந்திருப்பானே… இருந்தானா…” என்ற போதே…
“ஹான்… ஹான்… அதே அதே… எப்படி கரெக்டா சொல்ற ஊர்வி… “ஆராதனா மீண்டும் ஹைஃபை கொடுக்க… மெல்ல மெல்ல தோழிகள் என்ற வட்டத்திற்குள் செல்ல ஆரம்பித்திருந்தனர் ஊர்விஷாவும், ஆராதனாவும்
“ஆராதனா…. நீயும் எங்கூட வர்றியா… என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட உன்னைப் பற்றி சொன்னேன்… அவங்களும் நம்ம கிளாஸ் தான்… நாளைக்கு எப்படியும் பார்க்கப் போற… இன்னைக்கே இண்ட்ரட்யூஸ் ஆகிக்கோ… எல்லோரும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் தான்…. வர்றியா.. பக்கத்துல தான்… 10 மினிட்ஸ் தான்“ ஊர்விஷா கேட்க… ஆராதனாவுக்கும் மறுக்கத் தோன்றவில்லை… அடுத்த பத்தாவது நிமிடத்தில் இருவருமாக வெளியே கிளம்பியிருந்தனர்…
“இரு என் பைக்கை எடுத்துட்டு வந்துறேன்” என்ற ஊர்விஷா அடுத்த சில நிமிடத்தில் அவளது இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்திருந்தாள்…
”ஹெல்மெட் போட்டுக்கோ… பத்திரமா பிடிச்சிக்கோ…” என்றவள்…
“பைக் ஓட்டத் தெரியுமா…” ஆராதனாவிடம் திரும்பிக் கேட்க
“பைக் ஓட்டப் பிடிக்காது” அவள் கேள்விக்கான பதிலாக ஆராதனா சொன்னாள்…
“நான் கேட்ட கேள்வி என்ன … இவள் சொல்ற பதில் என்ன…”
புருவம் சுருக்கிய ஊர்விஷாவும் அதற்கு மேல் கேள்வி கேட்காமல்… ஆராதனாவைப் பின்னால் அமரவைத்து அருகில் இருந்த ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் சென்றாள்….
அங்கு அவளது நண்பர்களும் காத்திருந்தனர்… மூவர் ஆண்கள்.. இருவர் பெண்கள்…
“இவ… பிரித்தா… பாக்யா… பாக்யா நம்ம கூட படிக்க வரப் போறா…. பிரித்தாக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருச்சு….”
“இவன் கோகுல்… இவன் மணிஷ்… “ என்று அறிமுகப்படுத்தியவள்… சற்று நிறுத்தி…
“இவன் ’விபின்’… ” என்று மூன்றாமவனை அறிமுகப் படுத்த… அவன் கல்லூரி மாணவனா என்று தோன்றியது ஆராதனாவுக்கு… தொலைக்காட்சியில் டபிள்யூடபிள்யூ எஃப்ஃபில் வருபவர்கள் போன்ற ஆஜானுபாகுவான தோற்றம்… ’விபின்’னு வச்சதுக்கு ’பீமன்’னு வச்சிருக்கலாம்… இதுதான் ஆராதனாவுக்குத் தோன்றியது…
“பேருக்கு அவனைப் பார்த்து சிரித்து வைக்க…” அந்த விபினோ ஆராதனாவை எல்லாம் கண்டு கொள்ளவில்லை… ஊர்விஷாவை மட்டுமே பார்த்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான்… அவன் மட்டுமல்ல மற்றவர்களும் ஆராதனவோடு பெரிதாக பேச வில்லை…
ஆராதனா அதெல்லாம் கண்டு கொள்ளாமல்.. தன் சாப்பாடு… தன் தட்டு என அவ்வப்போது அவர்கள் பேசுவதையும் கேட்டபடி இருக்க
“ஊர்வி… நான் இனிமே உங்கள எல்லாம் பார்க்கப் போறதில்ல… நாளைக்கு வேர்ல்ட் டூர் போறேன்… அதுக்கப்புறம் டாட் அவரோட பிஸ்னசைப் பார்க்க கூப்பிட்ருவாரு… ஃபைனலா ஒரு பார்ட்டி… ப்ளீஸ்… இன்னைக்கு நைட்… நாம எப்போதும் மீட் பண்ற பப்தான்… ”
ஊர்விஷா இப்போது…
“நாளைக்கு காலேஜ் ஃபர்ஸ்ட் டே… ஹேங்க்ஓவர் ஆகிரும்… வேண்டாமே” என்றவளிடம்…
“நோ ஆல்கஹாலிக்… அப்போ ஓகே வா” அவன் விடாமல் பேச…
மற்றவர்கள் சம்மதமாகத் தலை அசைக்க… ஊர்விஷாவும் தலை ஆட்ட… ஆராதனா அவர்கள் பேச்சில் எல்லாம் தலையிடவில்லை… அதே நேரம் அந்த விபினின் பார்வையையும் அது ஊர்விஷாவையே நோட்டமிட்டதையும் பார்க்கத் தவறவில்லை… ஏனோ அவன் பார்வை நட்பாகத் தோன்றவில்லை…
”முதல்லயே சொல்லியிருந்தா… நேரா அங்கேயே வந்திருக்கலாம்… இங்க மீட் பண்ணாம இருந்திருக்கலாம்…” என்று சலித்தவர்களாக… அனைவரும் கிளம்ப…
”மணிஷ்… வந்து உங்கள பிக் அப் பண்ணிப்பான்…” விபின் சொல்ல… அனைவரும் சரி என்று சொல்லியபடி கிளம்பியிருக்க… இப்போது ஆராதனாவுக்கு பல சந்தேகங்கள்…
“ஊர்வி… நைட் பனிரெண்டு மணிக்கு மேல ஆகும்னு சொல்றாங்க… ஹாஸ்டல்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா…”
“அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க… ஜஸ்ட் இன் அண்ட் அவுட் மட்டும் செக் பண்ணுவாங்க… பிஜி மாதிரிதான் கிட்டத்தட்ட… யாரும் கண்ட்ரோல் பண்ண மாட்டாங்க… சரி நீ ஏறு…” என்றவள் பைக்கை ஸ்டார்ட் செய்ய…
“அந்த விபின் உன் ஃப்ரெண்டா… ஆனா அவன் ஏன் உன்னையே வெறிச்சு வெறிச்சு பார்க்கிறான்… அவன் பார்வையே சரியில்ல… அவன் கூப்பிடறான்னு பார்ட்டிக்கு வேற போற” ஆராதனா யோசிக்கவெல்லாம் இல்லை… ஊர்விஷாவுடம் தன் மனதில் உள்ளதைக் கேட்டு விட… ஊர்விஷாவும் அவளிடம் உண்மையை மறைக்காமல் பேசினாள்…
“அவன் என்னோட எக்ஸ் பாய் ஃப்ரெண்ட்… ப்ரேக் அப் ஆகிருச்சு… ஆனால் இப்போ மறுபடியும் என்கிட்ட வந்து நிக்கிறான்” ஊர்விஷா சாதரணமாகச் சொல்ல… ஆராதனா விழி விரிக்க
“ஆனால் எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல… “ என்றவள்..
“யூ நோ… எனக்கு இது 6 வது ப்ரேக் அப்… எவனுமே பிடிக்கல… “ சாதாரணமாகச் சொல்லிவிட்டு தன் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்திருக்க… வாய் பிளந்து நின்றது ஆராதனா தான்….
அடுத்து ஹாஸ்டலுக்கு வந்து அறைக்குள் வரும் வரை வாய் திறக்கவில்லை ஆராதனா…
---
இரவு சாப்பாடும் முடித்திருந்தனர் இருவருமாக…
இதற்கிடையே ஆராதனாவுக்கு வீட்டில் இருந்து அழைப்பு… அடுத்து நரேன் என அடுத்தடுத்து அலைபேசி அழைப்பில் பிஸி ஆகி இருக்க… இரவு ஒன்பதையும் கடந்திருக்க…
ஊர்விஷா நள்ளிரவு பார்ட்டிக்கு தயாராக ஆரம்பித்தாள்…
பார்ட்டிக்கென்றே பிரத்யோகமான ஆடையை அணிந்திருந்தாள்… ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கு ஏற்ப அவள் இருந்தாள்… கழுத்துக்கு கீழே… ஆரம்பித்து பாதித் தொடை வரை மட்டுமே அவளது ஆடை அவளை மறைத்திருக்க… அவளது மேனியின் நெளிவு சுளிவுகளோடு அந்த ஆடை போட்டி போட்டு பொருந்தியிருக்க… மெலிதான ஒப்பனை… காஜல்… டார்க் ஷேட் லிப்ஸ்டிக்… மெல்லிய பிளாட்டின செயின்… ஹை ஹீல்ஸ்… என நின்றவள்…
“ஏய் ஆரா… கிளம்பலையா… ட்ரெஸ் மாத்திக்கோ…. வா போகலாம்…. வந்திருவாங்க…”
ஆராதனா விழித்தாள்…. என்ன சொல்வதென்று தெரியாமல்… இருந்தும் சமாளிக்க வேண்டுமே…
“இல்ல ஊர்விஷா … நான் அங்கல்லாம் வரல… ”
“ப்ச்ச்… அட தப்பில்லப்பா.. பழகிக்கோ” என்றவள்…
“நீ என் ஃப்ரெண்ட்ணா வரனும்…”
“இல்ல” ஆராதனா தயங்க…
“நான் பார்த்துக்கிறேன்… யாரும் உன்கிட்ட வம்புக்கெல்லாம் வர மாட்டாங்க… அண்ட் இன்னைக்கு யாரும் ட்ரிங்க்ஸ் அடிக்கல… ஜஸ்ட் கெட்டூகெதர் மட்டும் தான்… கமான் கமான் கெளம்பு கெளம்பு…” ஆராதனாவை பேசவே விடாமல் கிளம்பச் சொல்ல…
“இல்ல… அங்க போட்டுட்டு வர்ற அளவுக்கு எனக்கு வேற ட்ரெஸ் இல்ல…” எனும் போதே
“இது போட்டுக்கோ… இந்த ட்ரெஸ் உனக்கு கரெக்டா இருக்கும்… தென் இந்த ஹீல்ஸ் கொஞ்சம் உனக்கு வசதியா இருக்கும்” என்று ஆராதனா முன்னால் அவளுக்கான உடைகளை வைத்திருந்தாள் ஊர்விஷா…
சில மணி நேரங்களுக்கு முன்னால் இந்த அறையை பங்கிட்டுக் கொள்ள முடியாது என்று சொன்ன ஊர்விஷா… இப்போது தன் உடைமைகளை அவளுக்கு கொடுக்க முன்வந்திருக்க…
”நீ போய்ட்டு வா ஊர்வி… அதோட இப்படி ட்ரெஸ் எனக்கு ஒத்து வராது…” என்றவளிடம்
“இனிப் பழகிக்கோ… ஏன் சின்னதா இருக்குனு பார்க்கிறியா… அங்க எல்லோரும் அப்படித்தான் போட்ருப்பாங்க வித்தியாசம் தெரியாது” என்ற போதே…
“போட்டதில்லேன்னு சொல்லலையே… ஸ்போர்ட்ஸுக்காக சென்னை வரும் போதெல்லாம் ஷார்ட்ஸ் போடுவேன்… ஆனால் அது கூட இப்போலாம் போட்றதில்ல…” என்றவளிடம்…
“நான் ஸ்டேட்ஸ் அத்லெடிக் ப்ளேயர் ஊர்வி… ஒரு தடவை என்னைப் பார்த்து ஒரு பையன் கிண்டல் பண்ணிட்டான்… அண்ணா அதைக் கவனிச்சுட்டு கலவரம் ஆகி… போலிஸ் ஸ்டேஷன் வரை போயிருச்சு… அதுக்கப்புறம் நான் ஸ்போர்ட்ல ஜாயின் பண்ணல… விலகிட்டேன்.. ” என்ற ஆராதனாவிடம்
“ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வாங்க… அதுக்காக உங்க அண்ணா ஏன் இப்படி பண்ணினான் “ என்று கடுப்பான தொணியில் சொன்னபடியே…
“இங்க அந்த மாதிரி நடக்காது…” என்று ஆராதனாவை இழுக்க…
“இல்ல… சும்மா கிண்டல் பண்ணல… எனக்கு தொடைல ஒரு காயம்… சைக்கிள்ள இருந்து கீழ விழுந்து கல் குத்தினது… சர்ஜரி பண்ணினதுனால தழும்பு இருக்கும்… அந்த தழும்பை வச்சு கிண்டல் பண்ணிட்டான்… தப்பா பேசிட்டான்… அப்புறம் என் அண்ணாவை அவன் இவன்னு பேசாத… எனக்குப் பிடிக்காது “
இப்போது ஊர்விஷா… அமைதியாக இருக்க… ஆராதனாவுக்கோ இப்போது செழியனின் மிரட்டல் குரல் காதில் இப்போதும் ஒலித்தது
“இங்க பாரு… யார்கிட்டயாவது… இந்தக் காயத்தைப் பற்றி சொன்ன அவ்வளவுதான்…”
“ஐயோ… எவ்ளோ ரத்தம் வருது.... அம்மா” ஓவென்று ஆராதனா அழ ஆரம்பிக்க..
“ஷ்… வாய மூடு… அதெல்லாம் ஒண்ணும் ஆகாது” என்றபடி அவன் கர்சீப்பை எடுத்து அவளது தொடையில் இருந்த காயத்தில் இருந்து வழிந்த இரத்தத்தை துடைத்தவன்
“காலை நீட்டு… கட்டி விட்றேன்… இனி இரத்தம் வராது… முதல்ல நீ பொம்பளப் புள்ள மாதிரி ட்ரெஸ் பண்ணு… இனி இந்த ட்ரவுசர் போட்டு சுத்துனா… அவ்ளோதான்… போன உடனே ட்ரெஸ்ஸ மாத்திரு… அதுவா ஆறிரும் புரிஞ்சதா… வீட்ல சொன்ன… என்ன நடக்கும்னு தெரியும்ல… பெரிய பிரச்சனை ஆகிரும்… எங்க வீடும் உங்க வீடும் சண்ட போட்டு பிரிஞ்சுருவாங்க… எனக்கு ஒண்ணும் இல்ல… என்னை அடிக்க மட்டும் தான் செய்வாங்க…. ஆனால் உனக்கு… உங்க திலகா அத்தை… உன் கமலிக்கா யாரும் உன் கூட பேச மாட்டாங்க… இதெல்லாம் தேவையா… இப்போ சொல்லு… சொல்லுவியா… வீட்ல…” செழியன் கேட்க…
“இல்ல சொல்ல மாட்டேன்… சொன்னா… கமலிக்கா என் கூட பேச மாட்டாங்களே…. நான் சொல்ல மாட்டேன்… நீங்களும் அடி வாங்க மாட்டீங்க…” தன்னை மிரட்டிய செழியனைப் பார்க்கப் பிடிக்காமல்… வலியால் வந்த அழுகையைக் கூட அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டாள் ஆராதனா
”ஆரா…” ஊர்விஷா அவளை உலுக்க…
”என்னடி… காயத்துக்குப் பின்னால பெரிய ஃபிளாஸ்பேக் இருக்கும் போல” ஊர்விஷா நக்கலாகக் கேட்க
சிரித்தபடி…
“அவ்ளோலாம் சீன் இல்லதான்… ஆனாலும் இந்த காயத்துக்கு பின்னால நான் பொண்ணா ட்ரெஸ் போட ஆரம்பிச்சிட்டேன்… அதுக்கு முன்னால வர… ஹால்ஃப் டரவ்சர் தான் போடுவேன்… எனக்கு அது மட்டும் தான் மாற்றம்… ஆனா எங்க அம்மா சொல்வாங்க… சின்னக் காயத்தை நான் சொல்லாம விட்டதால அது செப்டிக் ஆகி… நான் சாகிற நிலைமைக்கு போயிட்டேனாம்… டாக்டர்லாம் கைய விரிச்சுட்டாங்களாம்… கடைசியில எப்படியோ பிழச்சிட்டேனாம்… மறு பிறவி எடுத்து வந்தேனாம்… அம்மா இப்போதும் வேண்டுதல் நிறைவேத்திட்டு இருப்பாங்க… ” ஆராதனா சொல்லி முடித்தவளாக…
“ப்ச்ச்… நான் ஏதேதோ சொல்றேன் பாரு… நான் வரல ஊர்வி… நீ கெளம்பு… கட்டாயப்படுத்தாத” என்ற போதே…
“என்னோட ட்ரெஸ் எப்படி இருக்கு… இது பிபின் கொடுத்தான்… இன்னைக்கு பார்ட்டிக்கு வரும் போது போட்டுட்டு வரனும்னு சொன்னான்…” என்றவளை ஆராதனா யோசனையோடு பார்த்தவள்… அடுத்து என்ன நினைத்தாளோ… தானும் அவளுடன் கிளம்புவதாக சொன்னவள்……
“ஆனா ஜீன்ஸ் டாப் போட்டுட்டு வருவேன்… சும்மா எடுத்து வச்சேன்… அது இப்போ யூஸ் ஆகுது” என்றபடி… தன் பெட்டியைத் திறந்தவள்…
அடுத்த நிமிடம் ஜீன்ஸ்… டாப்… ஹை ஹீல்ஸ்… மேக்கப்… ஹேர் ட்ரெஸ்ஸிங் என அசத்தலாக கிளம்பியிருக்க…
“ஹேய் ஆரா… இதெல்லாம் உன்கிட்ட இருக்கா… எல்லாமே ப்ராண்டட்… காஸ்ட்லி”
“எங்க சித்தி யூ எஸ்ல இருக்காங்க… அவங்கதான் வாங்கித் தருவாங்க… ஊர்ல போட மாட்டேன்… அவங்க வந்தாங்கன்னா… இண்டர்னேஷனல் டூர் போவோம்…. அப்போ போடுவேன்…” என்றபடி ஊர்விஷாவோடு பேசிக் கொண்டிருக்கும் போதே…
”ஆராதனா உன்னோட திங்க்ஸ்லாம் வந்திருச்சு… ரூம்ல ஷிஃப்ட் பண்ணிட்டோம்… செக் பண்ணிக்க… அரேஞ்ச் பண்ணிறலாம்” என்று கண்காணிப்பாளர் வர…
இப்போது ஊர்விஷாவும் அவளுமாக ஆராதனாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் செல்ல…
ஆராதனாவின் அறை… அவளுக்காகவே பிரத்யோகமாக தயார் செய்யப்பட்டிருந்தது… ஆராதனாவே இதை எதிர்பார்க்கவில்லை
ஊர்விஷாதான் வாயடைத்துப் போயிருந்தாள் இப்போது…
“இண்ட்டீரியர் செலவு… கட்டில்… பீரோ… ட்ரெஸ்ஸிங் டேபிள்… எல்லாமே… எங்களோடது… ரூம் மட்டும் ரெண்ட்… இங்க அப்படித் தருவாங்கன்னு சொன்னாங்களாம்… அண்ணாவும் செல்வியண்ணாவும் சொன்னாங்க… இப்டிலாம் ஹாஸ்டல் இருக்குன்னு எனக்கு இப்போதான் தெரியும்…” என்றவள்… ஊர்விஷாவைப் பார்த்து
“இவ்ளோ பெரிய ரூம்ல நான் மட்டும் இருக்க ஒரு மாதிரி இருக்கு… நீ என்கூட தங்கிக்கிறியா…” என்று கேட்க… இப்போது ஊர்விஷாவின் தலை தானாக அசைந்தது….
அதே நேரம் கீழே அவர்களின் நண்பர்கள் வந்திருக்க…
“போலாமா ஆரா… நீ வர்றியா… இல்ல… இதெல்லாம் செக் பண்ணனுமா“ என இப்போது தயக்கமாக ஊர்விஷா கேட்டாள்… ஆராதனாவைக் கட்டாயப்படுத்த முடியவில்லை….
“ஏய் நான் ட்ரெஸ்லாம் மாத்திட்டேன்… நீ கூப்பிட்டேன்றதுக்காக மட்டுமே வர்றேன்… வா வா… இதெல்லாம் காலைல பார்த்துக்கலாம்” என்றபடி ஊர்விஷாவை இழுத்துச் சென்றாள் ஆராதனா
---
அன்றுதான் தன் வெளிநாட்டுப்பயணத்தை முடித்து விட்டு… வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான் செழியன்… பயணக் களைப்பு ஒரு புறம் இருந்தாலும்… இனி சென்னையிலேயே பெரும்பாலும் தான் இருக்கும்படி அனைத்தையும் செட்டில் செய்து வந்தாகி விட்டது…
இந்த இரண்டு வருடம் அவன் வாழ்க்கையில் அதாவது சொந்த வாழ்க்கைக்கு முக்கிய வருடங்கள்… இது அவனுக்கும் அவனது ஆராதனாவுக்கும் மட்டுமான காலம்… தொழில்… தந்தை தாய் சகோதரி இவர்களை விட்டு விட்டு இனி தன் காதல்… தன் பிரியமானவள் என்று தன் வட்டத்தை சுருக்க முடிவு செய்திருந்தான்…
ஆராதானாவின் நினைவுகளோடு கட்டிலில் படுத்திருந்தவன்… வழக்கம் போல் முகிலனுக்கு அலைபேசியை அடித்தான்
“என்னடா எப்போ… சென்னை வர்ற…” முகிலன் தூக்க கலக்கத்தோடு கேட்க
“மடையா போனப் பார்த்து பேசு… வாட்சப் கால் இல்ல” செழியன் குரலில் உற்சாகம் மட்டுமே
“ஓ வந்துட்டியா…” முகிலன் குரலில் அலட்சிய பாவம் மட்டுமே
“டேய் நான் வந்துட்டேண்டா… ஆராவுக்காக எல்லா வேலையையும் முடிச்சுட்டு வந்துட்டேன்… ஆரா அவள லவ் பண்ற வேலை மட்டும் தான் எனக்கு… எப்போடா ஆரா சென்னைக்கு வர்றா… நெக்ஸ்ட் வீக் வர்றான்னு சொன்னியே… அவளுக்காக எல்லா வேலையையும் முடிச்சுட்டு வந்துருக்கேன்… உனக்குத் தெரியுமா பூஜாகிட்ட யுஎஸ் ஆஃபிச ஒப்படைச்சுட்டேன்… தென் பூஜா பாட்டியையும் அங்க செட்டில் பண்ணிட்டா… பூஜா இங்க வர வேண்டிய வேலையே இல்ல… அதே போல இனி சென்னைல தான் நான் ஃபுல் அண்ட் ஃபுல்…”
செழியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“பூஜா வெல்லாம் இருக்கட்டும்… உன் ஆளு நேத்தே வந்துட்டா… ஹாஸ்ட்டல்லயும் சேர்ந்திருப்பான்னு நினைக்கிறேன்… பெரியப்பா பெரியம்மா வந்த பின்னால அட்ரெஸ் சொல்றேன்…” முகிலன் நிதானமாக
“டேய்… அடப்பாவி… எவ்ளோ பெரிய விசயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்ற… ஏண்டா … என்னாச்சு உனக்கு” உன்னை… செழியன் நண்பனாக மாறி… அவர்களுக்கே பரிச்சயமான தோழமை வார்த்தைகளில் அவனை திட்ட ஆரம்பித்திருக்க…
“டேய் நிறுத்துடா…. ஏன் சொல்லலனா… திடீர்னு அவங்க கெளம்புனாங்க… உடனே உன்கிட்ட சொன்னா என்ன பண்ணியிருப்ப…. இதோ கிளம்பிட்டேன்னு சொல்லி ஆக்ஸிடெண்ட்ல சிக்கிகிருவ… இல்ல… பிஸ்னஸ் மீட்டிங்காவது ஒண்ணாவதான்ன்னு கேன்சல் பண்ணிட்டு அவளப் பார்க்கிறதுக்கு வந்து சென்னைல வந்து அவ ஹாஸ்டல் முன்னால நின்னிருப்ப… அதான் சொல்லல…”
செழியனிடம் அமைதி மட்டுமே
”அண்ட்… உன் ஆளு இனி சென்னைல… இனி உன் பாடு… ஆராதனா பாடு… என்னோட தூதுவர் வேலைய இந்த நிமிசத்தோட ராஜினாமா செய்யலாம்னு இருக்கேன் ராஜா…” முகிலன் முடிக்க
“இனி நீ தேவையே இல்லடா… நானே உன்னை ரிலீஸ் பண்றேன்… அவ சென்னை வந்துட்டாள்ள… இனி இந்த செழியனோட ஆட்டத்தைப் பார்க்கத்தானே போற.. உன் தங்கச்சி… கொஞ்ச நாள்ல இந்த செழியன் அத்தான் புராணம் பாடப் போறத… ” செழியன் சொன்ன போதே
”சந்தோசப் பட்ற முத ஆளு நானாத்தான் இருப்பேண்டா” முகிலன் வார்த்தைகளில் அவ்வளவு சந்தோசமும் நண்பனின் போராட்டத்துக்கு விடிவு காலம் வரப் போகிறது என்ற நிம்மதியும் மட்டுமே…
முகிலன் அலைபேசியை வைத்திருக்க…. செழியனுக்கு மனம் துள்ளாட்டம் போட கல்லூரி படிக்கும் வாலிப வயதுக்கு சென்றது போல உணர்வு… அவளை எப்படி பார்ப்பது… அவள் கல்லூரிக்கே செல்லலாமா… இல்லை தங்கியிருக்கும் விடுதிக்குச் செல்லலாமா…
எதுவாகிலும் அவளை நேரில் சந்தித்து விட வேண்டும்… அவள் மனம் நோகாதாவறு தன் காதலை அவளுக்குப் புரிய வைத்து… அவளின் காதலையும் பெற வேண்டும்…
தன்னவளின் நினைவில் சந்தோஷத்தில்… தூக்கம் வரவில்லை… வெகு நாளைக்குப் பிறகு… உற்சாகம் மட்டுமே இருக்க… அவனின் உற்சாகத்தை அந்த அறைக்குள் அடக்கி வைக்க முடியவில்லை…மொட்டை மாடிக்கு வந்தனுக்கு நிலவில் கூட அவனவள் காட்சி அளிக்க
“ஆரா……அவளோடான காதல் .. காதல் மட்டுமே இனி…” தன் உறவான நிலவின் நினைவுளோடு உலாவிக் கொண்டிருக்க….
செழியனினின் உறவான அந்த நிலவோ…. சென்னையின் எங்கோ ஒரு மூலையில் அமைந்திருந்த கேளிக்கை விடுதியில் தன் முன் நின்ற அந்த அந்நியனை அலட்சியமாகப் பார்த்தபடி…
“ஓ… டேட்டிங்…” விழி விரித்து வியந்தவள்…
”ஆனா… எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான்… அந்த கண்டிஷன் உங்களுக்கு ஒக்கேன்னா… எனக்கு சம்மதம்தான்…” அவனிடம் நிதானமாகச் நிறுத்தி சொன்னதோடு மட்டுமல்லாமல்… அந்த அந்நிய ஆடவனை நேருக்கு நேராகப் பார்த்து புருவம் உயர்த்தி புன்முறுவலும் பூத்தாள்…. அவள் உதிர்த்த அந்தப் புன்முறுவலின் ஓரத்தில் மில்லி மீட்டருக்கும் குறைவாக சிறு அளவு இருந்தது அவளின் எகத்தாளம் மட்டுமே…
அவளின் புன்முறுவலை மட்டுமே பார்த்திருந்தான் அந்த அந்நிய ஆடவன்… அவளின் எகத்தாள புன்னகையோ… நிமிர்ந்து அமர்ந்து அலட்சிய பாவனையுடன் புருவம் இறக்கிய அவள் பார்வையின் திமிரோ… அவனின் கண்களில் படவே இல்லை…
…
Lovely update praveee
Ooorvi kapatha Kalam erangiduchi
Rowdy aaara ha ha
Nice epi. Whatis nexr. I am exciting. Puy soon
Nice sis