இதயம் - 4
கை முட்டியில் அடிப்பட்டிருந்ததால் முந்தைய இரவு முழுதும் வலியில் துடித்துப்போனாள் மல்லி.
நல்ல அழகான குடும்பம் இருக்கிறதுதான் அவளுக்கு. ஆனால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவளது அப்பாவின் நிலையோ பரிதாபமாகிப்போனது. தம்பியும் மிகவும் சிறியவன்.
அம்மாவிடம் கூட நடந்தது எதையும் சொல்லவில்லை மல்லி. ஏற்கனவே அப்பாவின் உடல்நிலையில் ஓரளவிற்குமேல் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற கவலையில் இருப்பவர், இதுவும் தெரிந்தால் மிகவும் வருந்துவார் அவர்.
இது போன்ற பிரச்சினையைச் சொன்னால் அவருடைய முதல் நடவடிக்கை, இருப்பதையெல்லாம் திரட்டி மகளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
குறைந்தபட்ச ரொக்கம், நகை, மற்ற பொருட்கள் என்று நிறையச் செலவு செய்ய வேண்டி வரும். மேலும் அவர்கள் வழக்கத்தில் மாப்பிள்ளைக்கு என்று பைக் வேறு எதிர்பார்ப்பார்கள். மொத்தத்தில் தீபனின் படிப்பிற்கு உலை வைப்பது போல் ஆகிவிடும்.
தீபன் ‘நீட்’ தேர்விற்காக முயற்சித்தால் கட்டாயம் மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சொல்வதற்குத்தான் அவனுடைய வகுப்பு ஆசிரியர் அன்று அவளைப் பள்ளிக்கு அழைத்ததே. அதோடு நிறுத்தாமல், தனிப்பட்ட முறையில் அவரது நண்பர் ஒருவர் நடத்தும் பயிற்சி வகுப்பில், குறைந்த கட்டணத்தில், அவன் சேரவும் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளி நேரம் முடிந்தபின் அந்த வகுப்புகளுக்கும் போகத் தொடங்கியிருந்தான் தீபன்.
ஆக வலியுடன் இந்த பிரச்சனையையும் பொறுத்துக்கொண்டாள்.
காலை எழும் பொழுது வலி கொஞ்சம் குறைந்திருந்தது. விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தனியாக இருக்கவும் மனமில்லை அவளுக்கு. எனவே அலுவலகம் கிளம்பிவிட்டாள் மல்லி.
எனோ தேவாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் மனம் அலைபாயத்தொடங்கி விடுகிறது. ‘வேண்டாம்! அவனிடமிருந்து விலகியே இரு அதுதான் உன் குடும்பத்துக்கு நல்லது’ என்ற அறிவின் கட்டளையை அவளால் புறந்தள்ள முடியவில்லை.
அவனது அக்கறையான செயல் ஒவ்வொன்றும் அவன் பால் அவளை ஈர்ப்பதைத் தடுக்க முடியாமல்தான் அவனிடம் அவள் அப்படி எடுத்தெறிந்து பேசியதே.
அவன் அவளுக்காக வைத்திருந்த வலி நிவாரணி அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மாலை வீட்டிற்குக் கிளம்பும் முன் தீபனுக்கு, “உன்னால ஒரு ஐந்து நிமிடம் முன்னதாகவே வந்து வெயிட் பண்ண முடியுமா?” என்று குறுந்தகவல் அனுப்பினாள்.
“அக்கா! க்ளாஸ்ல இருக்கேன் சீக்கிரம் வர முயற்சி செய்யறேன். முன்ன பின்ன ஆனாலும் வெயிட் பண்ணு ப்ளீஸ்!” என்று அவனிடமிருந்து பதில் வந்தது.
முதல் நாள் நடந்த நிகழ்வு அவளை மிகவும் பாதித்திருக்கவே, ‘மறுபடியும் வந்து அவன் ஏதாவது தொந்தரவு செய்தால் என்ன செய்வது?’ என்று எண்ணியவளாய் தன் கரங்களால் தலையை தாங்கிப் பிடித்தவாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள் மல்லி.
பிறகு பேருந்திற்கான நேரமாகிவிடவே, அங்கிருந்து கிளம்பிச்சென்றாள். ஆனால் அங்கே நிலைமையோ தலை கீழாக மாறியிருந்தது!
அனைத்தையும் நினைத்தவாறே, குழப்பத்துடனேயே வீடு வந்து சேர்ந்திருந்தாள் மல்லி.
‘இதே மாதிரியே போச்சு நமக்கும் பைத்தியம்தான் பிடிக்கும். யார்ரா அவன் இந்த வீராவோட கைய இப்படி ஓடிச்சு வச்சிருக்கான்? அவன் நேத்து பேசின பேச்சுக்கு இன்றைக்கு இப்படி பம்முறான்? ஐயோ!’ என மனதிற்குள்ளேயே புலம்ப மட்டுமே முடிந்தது அவளால்.
‘ஆனால் இனி அவன் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யமாட்டான்’ என்ற எண்ணம் தோன்றவே சற்று நிம்மதியாக உணர்ந்தாள் மல்லி.
அடுத்த நாள் அலுவலகத்திற்குள் நுழையும்போதே அந்த மெல்லிய நறுமணம் இதமாக அவளை வரவேற்றது. சிறிது நாட்களாகவே அவளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் அந்த ஸ்பிரே மாற்றப்பட்டிருந்தது. எப்பொழுதிலிருந்து என்றுதான் அவள் கவனிக்கவில்லை.
மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தவளைக் கண்ட தேவா அவளை அழைத்து, “உன் கை வலி தலை வலி எல்லாம் சரியா போச்சு போல இருக்கே” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்க,
“தேவா சார்” என்று ஆரம்பித்தவளை, “மிஸ் மரகத...வல்லி! நீங்க என்ன சொல்லுவீங்கன்னு தெரியும். இனி நாம வேலையை மட்டுமே பார்க்கலாம்” என்றவனின் வார்த்தைகள் அவளை ஊசி போல் குத்தியது.
“இனி உங்களுக்கான வேலைகளை சுமாயாவிடம் ரிப்போர்ட் பண்ணுங்க” என்றதோடு முடித்துக்கொண்டான் தேவா.
அன்றுமுதல் அவன் மல்லியிடம் நேரடியாக எந்த வேலையும் கொடுப்பதில்லை. சுமாயா மூலமாகேவே அவளை தொடர்பு கொண்டான். மதிய உணவு அவர்களுடன் உண்பதையும் தவிர்த்தான். மல்லிக்கு அவனைப் பார்ப்பதே அரிதாகிப்போனது.
அவனுடைய இந்த பாராமுகம் நல்லதுக்கே என்று அவளுக்குத் தோன்றினாலும் அவளை மிகவும் பாதிக்கவே செய்தது. அவள் எவ்வாறு உணர்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.
உணவு இடைவேளையில் பெண்கள் நால்வரும் அமர்ந்து சாப்பிடும் நேரம் சுமாயா, “மல்லி! உங்க ஏரியால ஏதாவது பிளாட் காலியா இருக்கா? எனக்கும் என் ஹஸ்பண்ட்க்கும் வேலைக்குப் போக அந்த ஏரியாத்தான் வசதியா இருக்கும்” என்று கேட்க,
அதற்கு மல்லி, “ஹேய்! எங்க பக்கத்து பிளாட்டே, ரொம்ப நாளா காலியாகத்தான்பா இருக்கு நீங்