இதயம்-13
இந்த திருமணத்தைப் பற்றி தெரியவந்தால், தோழிக்கு அமைந்திருக்கும் நல்ல வாழ்க்கையை நினைத்து, அம்மு மகிழ்ச்சிதான் அடைவாள் என்ற எண்ணம் மல்லியின் மனதில் தோன்றவே, அதுவரை இருந்த கலக்கம், தயக்கமெல்லாம் அவளை விட்டுப் போயிருந்தன.
அதன் பிறகு நடந்த சடங்குகளிலெல்லாம், முழுமையான மகிழ்ச்சியுடனேயே ஆதியுடன் தன்னை இணைத்துக்கொண்டாள் மல்லி.
பொரியிடுதல் எனும் சடங்கிற்காக பெண்ணின் சகோதரனை அய்யர் அழைக்க, பெருமை ததும்ப மேடைக்கு வந்தான் தீபன். பிறகு அய்யர் சொல்லச் சொல்ல அங்கே சடங்குகள் தொடர்ந்தது.
தீபன் கைகளால் பொரியை அள்ளிக் கொடுக்க, ஆதியின் கரங்களின் மேல் தனது கரங்களை வைத்து அதை, வாங்கிய மல்லி பிறகு ஹோம நெருப்பில் அந்தப் பொறியை இட்டு மகிழ்ச்சியுடன் தம்பியை நோக்கினாள். பிறகு அரசாணிக்காலைச் சுற்றிவந்தனர்.
இரண்டாவது முறையும் அதே போல் செய்து பிறகு, மல்லியின் பாதத்தை மென்மையாகப் பற்றி அங்கே மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மியின் மேல் வைத்து மெட்டியை அணிவித்தான் ஆதி.
அதற்கு அருகில் நின்றிருந்த சசிகுமாரின் மனைவி வினோதினியோ, “ஆதி அண்ணாவுக்கு மெட்டியை தீபனைப் போடச்சொன்னாங்க. இப்ப அவங்க மட்டும், மல்லியின் காலை பிடிக்கணுமா இதெல்லாம் கொஞ்சம் ஓவர்” என கலாட்டா செய்ய,
அதற்கு ஆதி கொஞ்சமும் யோசிக்காமல், “வினோ! நாங்களெல்லாம் இன்னைக்கு ஒரு முறை மட்டுமே பொண்டாட்டி காலை பிடிப்போம் உங்க வீட்டுல நடக்குற மாதிரி தினமும் இல்லை” என்று அவளை வார,
சசிகுமாரோ, “டேய் உங்க போதைக்கு நான்தான் ஊறுகாவாடா” என்று கூறி விட்டு, மனைவியை நோக்கி, “வினிமா தினமுமெல்லாம் அப்படி இல்லைனு சொல்லிடும்மா; மாமா பாவமில்ல” என்று கூற, அங்கே கொல்லென்ற சிரிப்பொலி எழுந்தது.
பிறகு ஐயர் சொல்லிக்கொடுக்க, அதுபோல் மல்லி ஆதியிடம் மேலே சுட்டிக்காட்டி, “துருவனைப் பார்த்தீர்களா?” எனக் கேட்க அதுபோல் ஆதியும், “நான் பார்த்தேன். நீ அருந்ததியைப் பார்த்தாயா?” எனக் கேட்க, அருந்ததி பார்த்தல், சேஷமிடுதல், கங்கணம் களைதல் என எல்லா சடங்குகளும் முடிந்தன.
பின்பு ஐயர் நீர் நிரம்பிய குடத்தினுள் மலர்களுடன் ஒரு பாலாடை சிறு மரப்பாச்சி பொம்மை அத்துடன் ஆதியின் மோதிரத்தையும் போட்டு மணமக்கள் இருவரையும் எடுக்கச் சொன்னார்.
அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு, ஆதி செய்த சேட்டைகளில் மல்லி செங்கொழுந்தாக சிவந்துதான் போனாள். அவனை எல்லோரும் ஓட்டி எடுத்தாலும் கடைசியாக, அவளே மோதிரத்தை எடுக்கும்படி விட்டுக்கொடுத்து அவளை மகிழ்விக்கத்தான் செய்தான் ஆதி.
லட்சுமியின் கால்களில் பணித்து பாலாடையையும் மரப்பாச்சியையும், மல்லி அவரிடம் கொடுக்க, அவற்றை, தனது சேலையின் முந்தானையில் வாங்கிக்கொண்டவர் கண்கள் கலங்க,
“என் பலநாள் கனவு ஒருவழியாய் இன்றுதான் பலித்தது. அதுபோல் நீ சீக்கிரமே எங்கள் குலம் விளங்கச் செய்ய வேண்டும்” என அவர் ஆசி வழங்க, யாரும் கவனிக்காதவாறு கண் சிமிட்டி ஆதி அவளைப் பார்த்த பார்வையில் விதிர்விதிர்த்துப் போனாள் மல்லி.
பெரியவர்கள் அனைவரிடமும் மணமக்கள் ஆசி பெற்று பிறகு, ஆரத்தியுடன் அனைத்துத் திருமண சடங்குகளும் இனிதே முடிந்தன.
பிறகு, அவர்கள் வீட்டிலிருக்கும் பூஜை அறையில் விளக்கேற்ற, ஆதியுடன் மல்லியை அழைத்துச் சென்றார் லட்சுமி.