இதயம்-15
தேவாதிராஜன் மரகதவல்லியின் திருமண வரவேற்பு வெகு விமரிசையாக, சிறு குறை கூறக்கூட இடம் இல்லாமல் நடந்து முடிந்திருந்தது.
அவளுக்காக வடிவமைக்கப்பட்டிருந்த புடவையை உடுத்தும்போதுதான் கவனித்தாள் மல்லி அது தேவாவாக, ஆதி சொன்னதனால் அவள் டிசைன் செய்த, அதுவும் முதல் முதலாக டிசைன் செய்த புடவை என்பதை.
அவள் முதன்முதலாக வடிவமைக்கும் புடவையை தனக்குத்தான் கொடுக்கவேண்டுமென அம்மு கேட்டிருந்தாள்.
அதை உடுத்த அவள் இன்று உயிருடன் இல்லை. ஆனால் அது அவளுக்குப் படைக்கப்பட்டு பின்பு மல்லியின் கைகளுக்கே திரும்ப வந்திருக்கிறது.
விதியை நோக மட்டுமே முடிந்தது மல்லியால்.
அழகிய ஆரஞ்சு நிறத்தில் பச்சை நிற, வெள்ளி சரிகையுடன் ஆங்காங்கே சிறிய தாமரைப் பூக்களுடன் நெசவு செய்யவென, அவள் டிசைன் செய்திருந்தாள்.
ஆனால் கூடுதலாக அத்துடன் அங்கங்கே அசல் மரகதக் கற்கள் பாதிக்கப்பட்டு, ஜொலித்தது அந்தப் புடவை. அவள் கற்பனையில் இருந்ததைக் காட்டிலும் அவ்வளவு அழகாய் இருந்தது அது.
அதில் இருந்த தாமரைப் பூக்கள் போன்றே வடிவமைக்கப்பட்ட மரகதக் கற்கள் பதித்த நகைகளும் அதற்குத் தகுந்தவாறு, அவளுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்தது.
புடவை நகைகள் என ஒவ்வொன்றும் ஆதியினுடைய ரசனையைப் பறைசாற்றின.
அனைத்தையும் அணிந்து தங்கச்சிலையென மிளிர்ந்த மகளைக் காணக் காண மகிழ்ச்சி தாங்கவில்லை பரிமளாவிற்கு. லட்சுமியின் கரங்களை பிடித்துக்கொண்டு, “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணி! மல்லியை இப்படிப் பார்க்க ரொம்பவே சந்தோசமா இருக்கு” என நெகிழ்ந்துவிட்டார் அவர்.
வரவேற்புக்கென ராயல் அமிர்தாசை ஒட்டி அதை விரிவு படுத்துவதற்காக வாங்கிப் போடப்பட்டிருந்த அதிக பரப்பளவுள்ள நிலத்தில் வெகு ஆடம்பரமாக தீம் செட் அமைக்கப்பட்டிருந்தது.
அடர்நீல கோட் மற்றும் சூட்டில் உள்ளே தூய வெள்ளை சட்டை அனைத்து கம்பீரமாக ஆண்மையின் இலக்கணமாய் புன்னகை முகமாக மேடையில் நின்றிருந்தவனை, கண்களில் நிரப்பியவாறே விநோதினி மற்றும் சுமாயா துணைவர மல்லி அவன் அருகில் வந்து நிற்க,
தன் அருகில் வந்து நின்றவளின் செவிகளில் உரசியவாறு, “செம்ம அழகா இருக்கடி மல்லி!” என்றவன் தொடர்ந்து, “என் மரகதவல்லிக்கு மரகதத்தையே கல்யாணப் பரிசாகக் கொடுத்திருக்கேன் பிடிச்சிருக்கா?” எனக் கேட்க,
அவனது கண்களை நேராகப் பார்க்கும் துணிவில்லாது, நாணம் தடுக்க தரையைப் பார்த்தவாறே பிடித்திருக்கிறது என்பது போல் தலையை ஆட்டிவைத்தாள் மல்லி.
அவனது ஒவ்வொரு செயலிலும் அன்பிலும் அக்கறையிலும் அவள் மனது கரைந்துகொண்டிருந்தது.
மிகப் பெரிய தொழிலதிபர்கள், திரைப்பட பிரபலங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் பத்திரிகையாளர்கள் என முக்கியப் பிரமுகர்கள் பலரும், வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
அத்தனைப்பேரையும் கவரும் விதத்தில் ஆடம்பரமான விருந்து, கேளிக்கைகள் என பக்காவாகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஆதி டெக்ஸ்டைல்ஸ், அமிர்தம் ரெஸ்டாரன்ட்ஸ், மற்றும் ராயல் அமிர்தாசில் வேலை செய்பவர்கள் என தனித்தனிக் குழுக்களாக, வந்திருந்த அனைவரையும் குறைவின்றி கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.
அதுமட்டுமில்லாமல் அன்று முழுவதும் ஆதி க்ரூப் ஆஃப் கம்பெனிஸில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர் வரை, அனைவருக்கும் அவர்களது ஒவ்வொரு கிளைகளிலும் தடபுடலான விருந்துடன் பரிசுகளும் வழங்கப்பட்டன.
அனைத்தையும் பார்த்துப் பிரமித்துப்போயிருந்தாள் மல்லி. குறுகிய நாட்களுக்குள் அதுவும் வெளிநாட்டில் இருத்தவாறே அனைத்தையும் செய்து முடித்திருந்த தனது கணவனின் திறமையையும், ஆளுமையையும் நினைத்து வியந்துதான் போனாள்.
அனைத்தும் முடிந்து வீடுவந்து சேர இரவு மணி பன்னிரண்டை தாண்டியிருந்தது.
மகனையும் மருமகளையும் திருஷ்டி கழித்த பிறகே வீட்டிற்குள், விட்டார் லட்சுமி.
****
அடுத்த நாள் காலையிலேயே கிளம்பி மறுவீடு சம்பிரதாயத்திற்கென மல்லியின் பிறந்த வீட்டிற்கு அவளை அழைத்து வந்திருந்தான் ஆதி.
அவர்கள் உள்ளே நுழையவும், செய்தித்தாளைப் பிரித்து வைத்துக் கொண்டு, “அப்பா இந்த அக்காவைப் பாருங்களேன் எவ்ளோ அழகா இருக்கா! மாமா என்… னா ஹாண்ட்சம் மாஆஆ இருக்கார்!” என ஆர்பரித்துக் கொண்டிருந்தான் தீபன்.
ஜெகனும் அதை ஆமோதிப்பதுபோல் அந்தச் செய்தித்தாளில் இடம்பெற்றிருந்த அவர்களது படத்தை கைகளால் வருடியவாறு அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மகள் மருமகனுடன் வருவதைக் கண்டவர் எழுந்து சென்று அவர்களை வரவேற்க, மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தனர் இருவரும்.
உணவகங்கள் நடத்திவரும் ஆதியையே தனது விதவிதமான உணவு வகைகளால் திணறடித்தார் பரிமளா.
“அத்தை நீங்க இவ்ளோ அற்புதமா சமையல் செய்யறீங்க, ஆனால் உங்க மகளைப் பார்த்தால் தான் ஒன்றையும் சாப்பிடுவதுபோல் தோணலையே” என அவள் ஒல்லியாக இருப்பதை ஆதி கிண்டல் செய்ய,
“மாம்ஸ் அப்படிலாம் அக்காவைப் பத்தி தவறாக நினைக்காதீங்க. சமயத்துல என்னோட சாப்பாட்டையும் சேர்த்து காலி செஞ்சு வச்சிடுவா” என தீபனும் அவனுடன் சேர்ந்து கொள்ள,
அவன் தலையிலேயே நறுக்கெனக் கொட்டிய மல்லி ஒரு விரலைக் காட்டி அவனை எச்சரிக்கவும்,
தலையைத் தடவிக்கொண்டே, “மாம்ஸ் எதுக்கும் இவகிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க” என்று கூற,
“நீ சொல்வதும் சரிதான் தீபா!” எனப் பயத்தில் நடுங்குவது போல் செய்தான் ஆதி.
அதைப் பார்த்த ஜெகன் சிரித்து விட,
அதற்குக் கோபம் வருவதற்குப் பதிலாக இருவரின் அரட்டையைப் பார்த்த மல்லிக்கும் சிரிப்புதான் வந்தது. பரிமளாவும், சிரிப்பை அடக்க முடியாமல் சமையற்கட்டிற்குள் சென்றுவிட்டார்.
காலை உணவு முடிந்து தீபனுடன் அவனது படிப்பு சம்பந்தமாகச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த ஆதி.
பிறகு, “எனக்கு சில வேலைகள் இருக்கு மல்லி நான் சாயங்காலம் வந்திடுவேன். இரவு உணவு முடித்து நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று கூற, “சரி” என்று மட்டும் சொன்னாள் மல்லி.
‘அவள் மனதில் இன்னும் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாளோ?’ என்று நினைத்தவாறே, அவன் தனது காரை நோக்கிப் போக,
அவனைத் தொடர்ந்து அவன் பின்னாலேயே வந்து, “மாம்ஸ்! சீக்கிரம் வந்துடுவீங்கதானே?” எனக் கேட்டாள் மல்லி.
அவளது வீட்டில் அவளுடைய பெற்றோர் மற்றும் தம்பியுடன் இருக்கும் பொழுதுகூட தன் அருகாமையை அவள் நாடுவது ஆதிக்கு புரிய அவனுடைய இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
“வேலை முடிந்த உடனே வந்துவிடுவேன்!” என்றவாறு கிளம்பிச் சென்றான் ஆதி.
அவனது பதிலில் மகிழ்ந்தவளாக வீட்டிற்குள் வந்தாள் மல்லி.
அதற்குள் வாண்டுகளெல்லாம் அவளைத் தேடி வந்துவிட, அவர்களுடன் இணைத்து சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க முந்தையநாள் களைப்பில் தூக்கம் சொக்கியது மல்லிக்கு.
“மல்லிமா நீ உள்ளே போய் தூங்கு” என அவளை அதட்டி மகளை அங்கிருந்து அனுப்பினார் பரிமளா.
“மல்லி! மல்லி!” என்ற கரகரப்பான அம்முவின் குரல் அவளை அலைக்கழிக்க,
“அம்மு! ஏண்டி இப்படி பண்ண?” என்று முனகினாள் மல்லி.
“ராஜா அண்ணா கூடத்தானே இருக்க அவரிடம் உன் தாத்தாவோட நோட் புக்கை கேளுடி மல்லி!
கேளுடி மல்லி!”
என்ற அம்முவின் கட்டளையை மறுக்க முடியாமல், எழுந்து உட்கார்ந்த மல்லி சுற்றிலும் திரும்பி ஆதியைத் தேட, அவன் அங்கே இல்லாமல் குழம்பியவளுக்கு பின்பு தெளிவாகப் புரிந்து போனது அது கனவுதானென்று.
‘அதுவும் இந்தக் கனவு மறுபடி மறுபடி தோன்றுகிறதே ஏன்?’ என்ற கேள்வி எழுந்தது அவளுக்கு.
‘அந்தக் குறிப்பேட்டில் அப்படி என்ன இருக்கும்?’ என அறியும் ஆவல் உண்டாகவே, ‘இது பற்றி ஆதியிடமே கேட்டுப் பார்த்தால்தான் என்ன?’ என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு.
ஒருவேளை தன்னைக் கிண்டல் செய்வானோ எனத் தயக்கமாகவும் இருந்தது, ‘அதுவும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்த நோட்புக் அவர்களிடம் பத்திரமாக இருக்குமா’என்னும் சந்தேகமும் எழுந்தது.
அந்தக் கனவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, முன்பு ஒரு முறை கனவில் அவள் ஒரு கைப்பேசி எண்ணிற்கு அழைக்கச் சொன்னது வேறு நினைவில் வர வெகுவாகக் குழம்பித்தான் போனாள் மல்லி.
அப்பொழுது கூட, முதல் முறை அம்மு கனவில் தோன்றி அந்த எண்ணைக் குறிப்பிட்டது மட்டுமே அவளுக்கு நினைவில் இருந்ததே தவிர அவள் மறுமுறை ஆதிக்கு கால் செய்தது அவள் நினைவிலேயே இல்லை!.
ஒருவாறாக அவனிடம் கேட்டுவிடுவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்திருந்தாள் மல்லி.
அனைத்தையும் சிந்தித்தவாறே கண்மூடி கட்டிலில் சாய்ந்து, உட்கார்ந்திருந்தவளின் அருகில் நிழலாட பரிமளாதான் என்று நினைத்தவள், “அம்மா! இன்னும் ஒரு பத்து நிமிடம் தூங்கிக்கறனே ப்ளீஸ்!” என்று கூற,
“மல்லி!” என்ற ஆதியின் குரலில் திடுக்கிட்டு எழுந்து நின்றாள் மல்லி.
“மல்லி! சில்! தூக்கம் வந்தால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு” என்று கூறி விட்டு அவன் அங்கிருந்து வெளியேச் செல்ல எத்தனிக்க,
“மாம்ஸ்! பரவாயில்ல நான் தூங்கல்லாம் இல்லை நீங்க வர இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்னு நினைத்தேன் அதனாலதான்” என்று சொல்லிக்கொண்டே அவனுடனேயே அறையை விட்டு வெளியில் வந்தாள் மல்லி.
பிறகு அவர்கள் அங்கு இருப்பதை அறிந்து, அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள் ஒவ்வொருவராய் அங்கே வர அவர்களுடன் பேசியிருக்கவென நேரம் ஓடியே போனது.
இரவு உணவு முடிந்து அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.
ஆதி காரை செலுத்த யோசனையுடன், அமைதியாக வந்த மல்லியை நோக்கிய ஆதி, “என்ன யோசனையெல்லாம் பலமாக இருக்கு?” எனக் கேட்கவும்,
தயக்கத்துடனேயே தனது கனவைப் பற்றி அவனிடம் சொன்னாள் மல்லி. அந்த கைப்பேசி எண்ணைப் பற்றியும், அவள் குறிப்பிடவே, அவளது கனவுகளின் தாக்கம் பற்றி அவள் முன்பே அவனிடம் சொன்னதும் அவனுக்கு நினைவில் வர,
‘அவனது பிரத்தியேக எண் அவளுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?’ என்ற அவனது நெடு நாளைய கேள்விக்கான விடை அவனுக்குப் புரிவதுபோல் இருக்க, ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்வியும் அவனுக்குள் எழுந்தது.
அவனது மௌனத்தைக் கண்டு, “சாரி! என் கனவில் வந்ததைத்தான் சொன்னேன் மற்றபடி அந்த நோட்புக் எல்லாம் எனக்கு வேண்டாம்” என அவள் வருந்த.
“இல்லை மல்லி அந்த நோட் ஒருவேளை ஐயங்கார்குளம் வீட்டில் இருக்கலாம். அங்கேதான் அம்முவின் பொருட்களெல்லாம் இருக்கு. அதை நாளை தேடிப் பார்க்கச் சொல்கிறேன்” என்றவன், “அந்த நோட்புக் எப்படி இருக்கும்?” எனக் கேட்க,
அவளது முகம் சுவிட்ச் போட்டது போல் பளிச்சென்று ஒளிர்ந்தது, “அதன் அட்டையில் பலவண்ணங்களில் பந்துகளுடன் தவழும் கண்ணன் படம் போட்டிருக்கும். முதல் பக்கத்தில் கரியமாணிக்கம், பூவரசந்தாங்கல் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்னு எழுதப்பட்டிருக்கும்” என்றவள்.
“கிடைக்கிறதா பாருங்க இல்லைனாலும் பரவாயில்லை” என்று முடித்தாள்.
பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். பின்னர் லட்சுமி வரதன் இருவரிடமும், சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு தூங்கச் சென்றனர் இருவரும்.
அதிகப்படியான களைப்பில் மல்லி தூங்கிவிட, யோசனையில் ஆதிக்குத்தான் தூக்கம் வரவில்லை. அம்முவின் மரணத்திற்குப் பிறகுதான் மல்லிக்கு இது போன்ற கனவுகள் வருகிறது என்பதை யூகித்திருந்தான் ஆதி.
கனவில், அவனது கைப்பேசி எண்ணை அவள் மல்லிக்குக் கொடுத்தாள் என்பதையெல்லாம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருவேளை அவள் சொன்னதுபோல் அந்த நோட்புக்கில் எதாவது இருக்குமானால் இதை நம்பலாம் என்று எண்ணியவன் ஒரு தெளிவான முடிவுக்கு வர, பிறகே உறக்கம் அவனை நெருங்கியது.
அடுத்த நாள் வழக்கம்போல தி. நகரில் இருக்கும் அவர்களது முக்கிய அலுவலகத்திற்கு கிளம்பிப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனவன் இரவுதான் வீடு திரும்பினான்.
அமைதியாக உணவை உண்டுவிட்டு அவன் தனது அறை நோக்கிப் போய்விட,
மகனுடைய முகத்தைப் பார்த்த லட்சுமி மல்லியிடம், “அவனுக்கு இன்று எதோ பிசினஸ் டென்சன்னு நினைக்கிறேன். நீ இப்பொழுது அவனிடம் ஏதும் பேசிடாத, பிறகு உன்னிடம் கோவித்துக் கொள்ளப் போகிறான்” என்று மருமகளை எச்சரித்தே அனுப்பினார் அவர்.
அறைக்கு அவள் வருவதற்குள் எளிய உடைக்கு மாறியிருந்தவன், தனது லேப்டாப் பேகிலிருந்து அவள்சொன்ன அந்தக் குறிப்பேட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான் ஆதி!
நெடு நாட்களுக்குப் பிறகு அதில் இருந்த அவளது தாத்தாவின் கையெழுத்தைப் பார்க்க, அவள் கண்களில் நீர் கோர்த்தது.
பிறகு அவசரமாக அதன் பக்கங்களை பிரித்து ஆராய்ந்து பார்க்க, அவள் எதிர்பார்த்தது போல் குறிப்பிடும் படியாக எந்தத் தகவலும் அதில் இல்லை, ‘பிறகு அம்மு ஏன் அந்த குறிப்பேட்டை ஆதியிடம் கேட்கச்சொன்னாள்?’ என்று குழம்பித்தான் போனாள் மல்லி.
அதே குழப்பத்துடன் ஆதியின் முகத்தை அவள் பார்க்க, கண்கள் இரண்டும் சிவந்து போய் அவனது முகம் கல்லென இறுகிப்போயிருந்தது.
லட்சுமியும் எச்சரித்திருந்ததால் அவனிடம் பேசவே தயக்கமாக இருந்தது மல்லிக்கு.
‘அவன் இப்படி இருப்பதன் காரணம்தான் என்ன?’ பயந்துதான் போனாள் மல்லி
Strday no ud😒😕..What was in that note..? Eagerly awaiting sis..