இதயம்-17
பால்கனியில் போடப்பட்டிருந்த இருக்கையை நகர்த்திப் போட்டுக்கொண்டு கடலையே வெறித்தவாறு உட்கார்ந்திருந்தாள் மல்லி.
இருளில், காட்சிகள் எதுவும், கண்களுக்கு தெரியாவிட்டாலும் தெளிவாக இருந்த வானத்தில் நட்சத்திரக் கூட்டங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. கடல் காற்று, இதமாக வருடிக் கொண்டிருந்தது.
அவை எதையும் ரசிக்கும் மனநிலையில்தான் இல்லை அவள்.
தலை வேறு 'விண் விண்' என்று வெடித்து விடுவது போல் வலிக்கவே கையில் வைத்திருந்த வலி நிவாரணி தைலத்தை எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டாள் மல்லி.
கையில் ஒரு கிண்ணத்துடன் வந்த ஆதி, “போதும் மல்லி! இப்பவே பாதி பாட்டிலை காலி பண்ணிட்ட. முகமெல்லாம் எரிச்சலில் வெந்து போயிடும்! கத்தரி வெயில் வேற”
அவன் அதட்டுவது போல்தான் சொன்னான். ஆனாலும் அதில் அவளிடம் அவன் கொண்ட அக்கறையே தெரிந்தது.
மாலையிலிருந்து அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அன்றைய பொழுதின் தொடர் அதிர்ச்சிகளால் துவண்டுதான் போயிருந்தாள் மல்லி. இரவு உணவைக் கூட பெயருக்குக் கொறித்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.
“தலை வலி தாங்கமுடில மாம்ஸ்” தலையைப் பிடித்துக்கொண்டே அவள் சொல்ல, அவன் கையில் வைத்திருந்த கிண்ணத்தை அவளிடம் நீட்டினான் ஆதி.
அழகிய துண்டங்களாக வெட்டப்பட்டிருந்த மாம்பழங்கள் அதில் நிறைந்திருந்தது. அதன் இனிய மனம் அவளைத் தூண்ட, ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டவள்.
“வாவ்! செம்மயா இருக்கு மாம்ஸ்! மாம்பழம் என்னோட ஃபேவரைட் தெரியுமா?”
ஒரு நிமிடத்திற்குள் அனைத்தையும் மறந்து ஒரு குழந்தையின் குதூகலிப்புடன் உற்சாகமானவளைப் பார்த்து ஆதியின் இறுக்கமெல்லாம் தளர்ந்து மின்னல் போன்ற புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவனது இதழ்களில்.
“இது படப்பைல இருக்கற நம்ம தோப்பிலிருந்து வந்த பங்கனப்பள்ளி மாம்பழம்” என அவன் பெருமையுடன் சொல்லிக்கொண்டே, அவளது பின்புறமாக வந்து நின்றுகொண்டு அவளது நெற்றிப்பொட்டுகளில் தனது கட்டை விரலை வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்க சங்கடத்துடன் நெளிந்தாள் மல்லி.
“ஷ்... இப்ப என்ன கிஸ்ஸா பண்ணிட்டேன்? இந்த சீன் போடுற!” என்றவன், “சும்மா இரு மல்லி! எனக்கு தலைவலி வரும்போதெல்லாம் முன்பு அம்மு இதுபோல் செய்வாள். தலைவலி நன்றாகக் குறையும்” என்று சொல்லிக்கொண்டே அவன் அதை தொடரவும் சில நிமிடங்களிலேயே அவளுடைய தலைவலி குறைந்திருந்தது.
“ஆமாம்! தலைவலி குறைந்திருக்கு தேங்க்யூ மாம்ஸ்!” என்றவள் அவன் அம்முவைப் பற்றி பேசியதில், ‘அவளது பிரிவு அவனை எந்த அளவிற்குப் பதித்திருக்கும்?’ என்ற எண்ணம் எழ.
“எனக்குத் தெரியும் மாம்ஸ்! அம்மு உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு! அவ அடிக்கடி சொல்லியிருக்கா! நீங்க அவளை ரொம்ப மிஸ் பண்றிங்க இல்ல?!” என அவனிடம் கேட்கக்கூடாத ஒரு கேள்வியை மல்லி கேட்டுவிட,
எப்படி அவன் தன்னை மறந்து அம்முவைப் பற்றிப் பேசினான் என்று அவனுக்கே புரியாமல், அதுவரை இருந்த சுமுகமான மன நிலை மாறி அவன் முகத்தில் கடுமை குடியேறி இருந்தது.
“ப்சு அவளை நான் ஒண்ணும் மிஸ் பண்ணல! ஒரு நொடி கூட எங்களைப் பற்றி நினைக்காமல் போயும் போயும் என்னிடம் வேலை செய்துகொண்டிருந்த டிரைவரை அதுவும் ஒன்சைடா லவ் பண்ணிட்டு, அவனுக்கு கல்யாணம்னு தெரிஞ்சதும் ட்ரைன்ல குறுக்க விழுந்து தற்கொலை செய்துகொண்டவளை நான் ஏன் மிஸ் பண்ணனும்?
தெரியுமா மல்லி! அவ அப்பதான் பிளஸ் டூ முடித்திருந்தாள்! மெடிக்கல் சேர எல்லா ஏற்பாடும், செய்து வைத்திருந்தேன்.
அதுவும் அப்பொழுது, நான் கால் ஃப்ராக்சர் ஆகி ஹாஸ்பிடலில் இருந்தேன்! தெரியுமா? ச்ச!
கூழ் கூழாகி பொட்டலமாகக் கொண்டுவந்து போட்டார்கள் மல்லி அவளை!”
அன்று அவனுடைய பெற்றோர்கள் அடைந்த வேதனை, அதுவும் அவனது அம்மா லட்சுமி அழுத அழுகை, அனைத்தும் அவன் கண் முன் வந்து அவனைக் கொன்றது. அது அவனது வார்த்தைகளிலும் வெளிப்பட, இப்படிச் செய்துவிட்டாளே என்ற ஆற்றாமையும் வேதனையுமாக கலந்து ஒலித்தது அவனது குரல்.
“சுயநலப் பேய்! போயும் போயும் அவளை! நான் ஏன் மிஸ் பண்ணனும்?” வெடித்தான் ஆதி.
அவளது, தோழியைப்பற்றி ‘சுயநலப் பேய்’ என்று அவன் சொன்ன வார்த்தை மல்லியின் மனதை மிகவும் காயப்படுத்திவிட,
“தேவா! நீங்க ரொம்ப தப்பா பேசறீங்க என்னமோ அவளைப் பற்றி எல்லாம் தெரிந்ததுபோல் பேசறீங்களே! அம்மு, உண்மையிலேயே உங்களோட தங்கைத்தானா?”என்றவள்,
“நான் உங்ககிட்ட இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கல?”
அவளது முகச்சுளிப்பைப் பார்த்தவனின் கோபம் உச்சிக்கு ஏற,
“என்னடி உனக்குத்தான் அவளைப் பற்றி எல்லாம் தெரியும் என்பதுபோல் பேசுறியே!
ம்ம்! என்ன தெரியும் உனக்கு?” பல வருடங்களாக அவனுக்குள் மையம் கொண்டிருந்த வேதனை, கோபம், என மன அழுத்தம் மொத்தமும் அவளிடம் கரையை கடந்துகொண்டிருந்தது.
“நான் முழுசா மூணு வருஷம் அவளுடன் பழகியிருக்கேன் எனக்கு அவளைப் பற்றி நன்றாகவேத் தெரியும்!” என்ற மல்லியின் பதிலில்,
‘தனது தங்கையைப் பற்றி தனக்குத் தெரியாதது அப்படி என்ன அவளுக்குப் பெரியதாகத் தெரிந்திருக்கப்போகிறது?’ என்ற எண்ணம் தோன்ற அவளது வார்த்தைகள் ஆதிக்குத்தான் எரிச்சலை மூட்டியது.
“என்னவோ! எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறியே; ரியலி எ குட் ஜோக்!
என்ன ஒரு மூணு வருஷம் அவகூட இருந்தியா?
அதுவும் இரண்டும்கெட்டான் வயசுல!
அவள் பிறந்த உடனே, அவளை முதல்முதலாகக் கைல வாங்கினதே நான்தான்! அப்ப எனக்குப் பத்து வயசு தெரியுமாடி உனக்கு?
அப்பொழுதிலிருந்தே அவளை எனக்குத் தெரியும்!
அவளுக்குப் பொறுமை என்பதே துளியும் கிடையாது! தெரியுமா உனக்கு?
அவளோட அவசர புத்தியால எவ்வளவு பிரச்சனைல மாட்டியிருக்கான்னு, தெரியுமா உனக்கு?
எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச வந்துட்ட!”
மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தவனை, போதும் என்பதுபோல் கையைக் காட்டி நிறுத்தியவள்,
“நீங்க சொன்னது போல அவளைப் பற்றி முழுவதுமாக எல்லாமே எனக்குத் தெரியுமோ தெரியாதோ! ஆனால் ஒன்று மட்டும் தெரியும். இந்த உலகத்திலேயே அவளுக்கு மிகவும் முக்கியமானவர்கள் அவளுடைய அம்மா! அப்பா! அவங்க எல்லாரையும் விட அவளது ராஜா அண்ணா!
அப்படி அவள் உயிரை விட்டாலும், அது அவர்களுக்காகத்தான் இருக்குமேத் தவிர, நீங்கள் சொன்னதுபோல வேறு யாரோ ஒருவனுக்காக நிச்சயமா இருக்காது” நடுவில் எதோ சொல்ல வந்தவனை கையைக் காட்டி தடுத்தவள்,
“அவளோட லட்சியங்களை பற்றித் தெரியுமா உங்களுக்கு?” அதையெல்லாம் மறந்து அவள் ஒருவனை ஒன் சைடா லவ் பன்னாளா?! வாய்ப்பே இல்லை!
அதை அவளே, என்னிடம் நேரில் வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.
நீங்கதான் உண்மையை புரிஞ்சுக்காம அவளைப் பற்றி ஏதோ தவறான ஒருமுடிவுக்கு வந்திருக்கீங்க!”
தோழியிடம் அவள் வைத்திருந்த முழுமையான, நம்பிக்கையே மல்லியை அப்படிப் பேசத்தூண்டியது.
அந்த நேரம் சில்லென்ற காற்று அவளது கன்னத்தை உரசிச்செல்ல அவளது உடல் நடுங்கி சிலிர்த்தது.
திருமணம் முடிந்தும் அவனிடம் கணவன் என்ற உணர்வு கொஞ்சம் கூட ஏற்படாமல் தங்கையின் தோழியாக மட்டுமே அவள் பேசும் வார்த்தைகள் சுள்ளென அவன் மனத்தைத் தைக்க, மேலும் அவளிடம் எதுவும் பேசப் பிடிக்காமல் அங்கிருந்து உள்ளே சென்றுவிட்டான் ஆதி.
தோழியைப் பற்றிய நினைவிலேயே உழன்றுகொண்டிருந்தவள், மாம்பழம் நிறைந்த கிண்ணத்தைப் பார்க்க அது அவளது பசியைத் தூண்டவே அதில் இருந்த பழத்துண்டுகளை சாப்பிட்டுக்கொண்டே மல்லி அன்றைய தினத்தில் நடந்த ஒவொன்றையும் நினைத்துப் பார்க்கத் தொடங்கினாள்.
அன்று அதிகாலை கிளம்பி டெல்லி வரை சென்று வந்திருக்கிறான். அதுவும் வந்ததும் வராததுமாக அந்த உச்சபட்ச அதிர்ச்சியிலும் எவ்வளவு வேகமாக அவன் செயல்பட்டிருக்கிறான்!.
எத்தனைப் பெரிய ஆபத்திலிருந்து அவன் தன்னை காப்பாற்றியிருக்கிறான் என்பது அவளுக்குப் புரியவும்,
அதுவும் மனைவி என்ற உரிமை இருந்தும் அவளது மனநிலை உணர்ந்து ஆண்மையின் இலக்கணமாக அவன் காக்கும் கண்ணியம், அவள் மனதின் மிக உயரத்தில் சிம்மாசனமிட்டு ஆதியை ஆட்சிபுரியச் செய்தது.
அவனது ஒவ்வொரு செயலும் அவளிடம் அவன் கொண்டிருக்கும் காதலையும் அக்கறையையும், பறைசாற்ற, ‘அம்முவைப் பற்றிய பேச்சையே தான் இன்று தொடங்கியிருக்கக்கூடாதோ’ என்ற எண்ணம் தோன்றவும், அடுத்த நொடி அவன் கோபத்துடன் அங்கிருந்து சென்றது அவளது நினைவிற்கு வர, அவனைத் தேடி உள்ளே சென்றாள் மல்லி.
தலையணையில் முகம் புதைத்து வேதனையுடன் அவன் படுத்திருப்பதைக் கண்டு வருந்தியவள் அவன் அருகில் சென்று உட்கார்ந்தவாறே,
“சாரி மாம்ஸ்! உங்களை வருத்தப்பட வைக்கணும்னு நான் அப்படி பேசல!
உண்மையிலேயே என் மனதில் இருந்ததைத்தான் சொன்னேன்!
எனக்கு, அவள் எவ்வளவு முக்கியமோ; இப்பொழுது அதைவிட நீங்கள் எனக்கு ரொம்பவே முக்கியம்!
அவளை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ; அதைவிட அதிகமாக இப்பொழுது உங்களை எனக்குப் பிடிக்கிறது!
ஆனாலும் அம்முவை என்னால் விட்டுக்கொடுக்கவே முடியாது. நமக்குச் சண்டை வரும்பட்சத்தில் இனிமேல் நாம அவளைப் பற்றி பேசவே வேண்டாம்.
என்னால உங்களை இப்படிப் பார்க்க முடியல!” என தன் மனதை மறைக்காமல் அவள் சொல்லவும்,
அவள் மனதில் தனக்கான காதல் இருக்கிறது என்பது அவனுக்குப் புரிய, அதுவரை அவனுக்கிருந்த கலக்கம் மறைந்து போக, அந்த எண்ணம் தந்த உரிமையில் தலையணையிலிருந்து அவனது முகத்தை அவளது மடிக்கு இடமாற்றம் செய்தான் ஆதி அவளை அணைத்தவாறு.
மல்லிதான் கூச்சத்தில் நெளியத் தொடங்கினாள்.
“ப்சு! கொஞ்ச நேரம் சும்மா இரு மல்லி. இன்றைய நாள் எனக்கு ரொம்பவே டென்ஷனாகவே போச்சுi ஐ நீட் பீஸ் ஆஃப் மைண்ட்! ப்ளீஸ்!” என அவன், கெஞ்சலாகச் சொல்லவும் அவள் சற்று தன்னை சமன்படுத்திக் கொண்டு அமைதி காக்க சில நிமிடங்களில் அப்படியே உறங்கிப்போனான் ஆதி.
அவனது அந்தச் செய்கையே சொல்லாமல் சொல்லியது அவனது நிம்மதி அவளிடம்தான் உள்ளது என்பதை!.
நேரம் செல்லச்செல்ல கால்கள் வலிக்கத்தொடங்கியது மல்லிக்கு.
ஆனாலும் அவளுக்குத் தெரிந்து இரண்டு நாட்களாக அவன் சில நிமிடங்கள் கூட உறங்கவே இல்லை. எனவே அவனது தூக்கம் தடைப்படாமல் இருக்க அப்படியே நகர்ந்து கட்டிலில் வசதியாகச் சாய்ந்து அமர்ந்தவாறே உறங்கத் தொடங்கினாள் மல்லி.
கைப்பேசி இசைக்கும் ஓசை எங்கோ தொலைவில் கேட்பதுபோல் தோன்றவும் பிரிக்கமுடியாமல் ஓடிக்கொண்டிருந்த இமைகளை மிகவும் முயன்று மெல்லத் திறந்தாள் மல்லி.
உட்கார்ந்த நிலையிலேயே இல்லாமல் இழுத்துப் போர்த்தியவாறு வசதியாகப் படுத்திருப்பது புரியவும் எழுந்து உட்கார்ந்தவள் கைப்பேசியை காதுக்குக் கொடுத்தவாறே பால்கனி நோக்கிப் போய்க்கொண்டிருந்த ஆதியைக் கண்டு மெதுவாக அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
அங்கே அவன் பேசிக்கொண்டிருப்பது நன்றாகக் காதுகளில் ஒலித்தது.
“என்ன ஜித்”
‘ஓஹ் விஜித்துடன் பேசிக்கொண்டிருக்கிறான் போலும்’ நினைத்தாள் மல்லி.
““
“ஓஹோ! செல்வியுடையதுதானா?”.
“டி என் ஏ டெஸ்ட் பண்ண கொஞ்சம் டைம் எடுக்குமில்ல? எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றாங்க?”
““
“என்ன எவிடென்ஸ்?”
““
“ஓஹோ”
“அப்படினா மற்ற இரண்டும்?”
““
“தோரயமா கெஸ் பண்ணியிருக்காங்க?”
““
“ ம்ஹும்!”
“என்ன? லவ்வரோட ஓடிபோய்ட்டதா கேஸை கிளோஸ் பண்ணியிருந்தாங்களா?”
““
மறுபுறம் விஜித்! எதோ சொல்லவுமே அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியின் முகம் கடுமையாக மாறிக்கொண்டிருந்தது.
“மை காட்”
““
“சரி ஜித்! நான் பார்த்துக்கறேன் பை!” என கைகள் நடுங்க அழைப்பைத் துண்டித்தவன் அருகில் இருந்த சோபாவில் உடல் தளர்ந்துபோய் தொப்பென! விழுந்தான்.
“மாம்ஸ்! என்னாச்சு?” பதறியவாறு ஓடிவந்து அவனது கைகளை பிடித்துக்கொண்டு அருகில் உட்கார்ந்து மல்லி கேட்கவும்,
“மல்லி! நீ சொன்னதுதான் சரி; அம்முவை நான் சரியாகப் புரிந்துகொள்ள வில்லைதான்.
என் தங்கையை நான் பாதுகாக்கத் தவறிட்டேன்”
அவனது முகத்தை அவளுக்குக் காண்பிக்காமல் அவள் தோள்களிலேயே புதைத்துக்கொள்ளவும் அதில் ஈரத்தை உணர்ந்தவள் கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் மல்லி.
“மாம்ஸ்! என்ன பிரச்சினை ஏன் இப்படி” அழறீங்க எனக் கேட்கவந்து தயங்கியவள், “ப்ளீஸ்! சொல்லுங்க” என்று கூற,
ஒருநொடியில் உணர்ச்சியின் பிடியில் சிக்கிய தனது நிலையை வெறுத்தவனாக முகத்தை வேறு புறமாகத் திருப்பி, உதடுகளைக் கடித்து தன்னை சமன் செய்துகொண்டு இரு கைகளால் முகத்தை அழுந்தத் துடைத்து தன்னிலைக்கு வந்தவன் மல்லியை நோக்கி.
“ஒண்ணுமில்ல நீ போய் தூங்கு” என்றான்.
“இல்ல மாம்ஸ்! எனக்கு நன்றாகவே புரிகிறது, உங்களுக்கு எதோ பிரச்சனை. இப்படியே உள்ளுக்குள்ளையே வச்சிட்டு வருத்தப்படாதீங்க ப்ளீஸ்! சொல்லுங்க” என அவள் மேலும் அவனை வற்புறுத்தவும் அவளிடம் சொல்லாமல் தன்னை விடமாட்டாள் என்பது புரிய,
“இல்ல மல்லி நீ பேசியதைக் கேட்டதிலிருந்தே எனக்கு மனசே சரியில்லை.
அதுபோல் இப்ப விஜித் சொன்ன, சில தகவல்களை கேட்ட பிறகு அம்முவை யாரோ திட்டம்போட்டு, கொலை செய்திருப்பாங்களோன்னு எனக்குச் சந்தேகம் வருது.
“மாம்ஸ்! கொலையா!?” ஆடித்தான் போனாள் மல்லி.
“அம்முவை கொலை செய்யும் அளவிற்கு என்ன நடந்திருக்கும்?” அவள் அதிர்ச்சி மாறாமல் கேட்கவும்,
“அம்மு அறிய நிறையவே நடந்திருக்கு மல்லி!” என்றவன்.
“அம்முவைக் கொன்றவன்தான் உன்னையும் கொல்ல துடிச்சிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்!
நான் எதிர்பார்க்கும் தகவல் மட்டும் கிடைக்கட்டும்!” அடக்கப்பட்ட கோபத்தில் பல்லைக்கடிதான் ஆதி.
அவனுடைய அந்தக் கோப முகம் மல்லியின் மனதில் கிலியை கிளப்பியது.
இதற்கே இப்படி என்றால் ஆதி நினைத்திருப்பதை விட பிரச்சனை மிகப் பெரியது என அவனுக்குத் தெரிய வரும்போது! எப்படி உணருவாள் மல்லி?