இதயம்-23
மல்லி தூங்குகிறாள் என்று நினைத்து சத்தம் எழுப்பாமல், ஆதி குளியல் அறையில் புகுந்து கொண்டதால் அவன் அங்கே வந்ததையே அறியவில்லை மல்லி.
அவன் குளித்து, முடித்து அவள் அருகில் வந்து உட்காரவும் அந்த மெல்லிய அதிர்விலும், அவனிடமிருந்து எழுந்த குளியல் சோப்பின் மணத்திலும், கண்ணீரில் கரைந்துகொண்டிருந்த மல்லி அவன் வரவை உணர்ந்து திடுக்கிட்டு முகத்தைத் துடைத்தவாறே எழுந்து அமர,
அழுது சிவந்திருந்த அவளது முகத்தைப் பார்த்தவாறு, “என்னாச்சு மல்லி? மறுபடியும் கனவு கண்டியா?” என்று கேட்டவாறு ஆதி அவளது நெற்றியில் கை வைத்துப் பார்க்கவும்,
களைத்து வந்திருப்பவனிடம் எதையாவது பேசி அவனது மனநிலையைக் கெடுக்க வேண்டாம் என எண்ணியவன் என்ன சொல்வது என்று புரியாமல் பொதுவாகத் தலையை ஆட்டி வைத்தாள்.
பிறகு நேரத்தைப் பார்க்க மணி பதினொன்றைத் தொட்டிருக்கவும்,
“ஐயோ! ரொம்ப நேரம் ஆகிவிட்டதே… என்ன சாப்பிடுறீங்க இட்லி எடுத்துட்டு வரட்டுமா?” என மல்லி கேட்க,
“ராணிம்மா கிட்ட சொல்லிட்டேன்… இட்லி அனுப்பிட்டாங்க…” என ஆதி சொல்லவும், வெளியில் சென்று உணவு டிரேவை எடுத்து வந்தாள் மல்லி.
சாப்பிட்டுக்கொண்டே, “கண்களெல்லாம் இப்படி வீங்கியிருக்கு ஏன் அழுத மல்லி?” என அவன் மறுபடி கேட்கவும்,
அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதி காத்த மல்லி, “நீங்க ஏன் மாம்ஸ் உங்க ஸ்டேட்டசுக்கு தகுந்த பெண்ணை தேர்ந்தெடுக்காமல் என்னைக் கல்யாணம் பண்ணிங்க?” எனக் கேட்கவும்,
திடுக்கிட்டவன், “உன்னுடைய இந்தக் கேள்விக்கான பதிலை, நான் உனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சொல்லிவிட்டேன் மல்லி! அதுக்குள்ள மறந்துட்டியா?” என்றான் ஆதி அழுத்தமான குரலில்.
“மல்லியை மல்லிக்காக மட்டுமே கல்யாணம் செய்து கொண்டிருக்கிறேன்” என்று ஆதி அன்று சொன்னது மல்லிக்கு நினைவில் வர,
குற்ற உணர்ச்சியில் அவளது விழிகள் தானாகவே தாழ்ந்தது ஆனாலும், “அதுதான் ஏன்?” என்றவள், “உங்களுக்கு ஏற்கனவே கயல் பெரியம்மா வழியில் ஒரு பெண்ணுடன் கல்யாணம் முடிவாகி இருந்ததுதானே?
அம்மு இறந்ததும் அதை நீங்கதான் நிறுத்தினீங்கன்னு சொன்னாங்களே!
அதனால அம்முவின் அந்த போட்டோவை பார்த்த பிறகுதான் என்னை மணக்கும் முடிவுக்கு வந்தீங்களோன்னு தோன்றியது?” என அவள் மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னாள் மல்லி.
ஆதியின் முகம் இறுகிப்போய் கண்கள் கோபத்தில் சிவந்தது.
“அத்தையும் சித்தியும் உன்னை ஏதாவது சொன்னாங்களா?
நான் உன்னைக் கீழே போகவேண்டாம்னு சொன்னேன் இல்லையா? ஏன் போன?” என அவன் அடிக்குரலில் சீறவும்,
“இல்ல... இல்ல... நான் கீழே போகல! இங்க பால்கனிலதான் உட்கார்ந்திருந்தேன்.
“சின்ன அத்தையும், பெரியம்மாவும் ஸ்விமிங் பூல் பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க!