இதயம் - 8
தீபன் சொன்ன செய்தி என்னவென்று புரியவே சில நொடிகள் பிடித்தது மல்லிக்கு, “எ.. ன்.. ன.. டா! தீ.. பா! சொல்ற?” குரலே வெளிவரவில்லை, மூச்சு முட்டுவதுபோல் தோன்றியது அவளுக்கு.
“ஒண்ணும் இல்லைக்கா. பயப்படாதே! அன்று அந்த ஆள் உன்னிடம் சண்டை போட்டாரே, அப்ப எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா? ஆனாலும் அவர் இப்படி செத்துப் போகணும்னு நினைக்கல கா. அந்த பொண்ணு ரொம்ப அழுதாக்கா. ரொம்ப பாவமா இருக்கு அக்கா.
இதை உடனே உன்னிடம் சொல்லணும்னு தோனிச்சு; அதனாலதான் கால் பண்ணேன். வீட்டுக்கு வா மற்றதை பேசிக்கலாம்” என்றவனிடம், “சரிடா பை” என்று அழைப்பைத் துண்டித்தாள் மல்லி.
அவளுடைய முகத்தில் தோன்றிய கலவரத்தையும் அவள் குரலில் ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவனித்த தேவா, “என்ன மல்லி இப்படி ஷாக் ஆகும் அளவுக்கு உன் தம்பி என்ன சொன்னான்?” என்று கேட்க,
ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், “அந்த வனிதாவோட அப்பா இறந்துட்டாராம்!” என்று கூற,
“ஐயோ எப்படி!?” என்றான் தேவா அவனுக்கும் இது புதிய செய்திதான்.
“ஆக்சிடெண்டாம்!” மல்லியின் பதிலில் அதிர்ந்தான் தேவா.
முதல் நாள் இரவுதான் அவனை நன்றாக கவனித்திருந்தான் தேவா. அம்முவின் செயின் மட்டுமின்றி, ‘ஆ’ என்ற எழுத்தின்மேல் வைரம் பதித்த, அவளுடைய ஒரு மோதிரமும், ஒரு ஜோடி வளையல்களும் வனிதாவின் அப்பாவிடம் இருந்தன.
அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தன்னுடைய ஆட்களை வைத்து அவனை அடிப் பின்னியெடுத்து விட்டான். அவ்வளவே!
அப்பொழுதே அவனைக் கொன்று புதைக்கும் அளவிற்கு அவனுக்கு கோவம் வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்த அளவிற்குச் செல்ல அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனாலேயே அவனை விட்டுவிட்டான்.
‘உண்மையிலேயே விபத்துதானா? இல்லை!?’ அவனுடைய மரணம் தேவாவிற்குள்ளும் பல கேள்விகளை எழுப்பியது.
அம்முவைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது நினைத்து சோர்ந்துதான் போனாள் மல்லி.
“ப்சு இப்ப என்ன ஆச்சு; அவனுக்கு அம்மு இருக்கும் இடம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் அந்தச் செயினை அவளிடமிருந்து திருடிக் கூட வைத்திருக்கலாம்” என்று தேவா சொல்ல அவள் அதற்கும் தெளிவடையாமல் இருக்கவே.
“இதோ பாரு அம்மு அம்முனு இப்படியே இருந்தால் உன்னால் எந்த வேலையையும் முழுமையாய் செய்ய முடியாது. இதோ இந்த சில்க் சாரி டிசைன் செய்யற வேலை பாதியிலேயே நிற்பதைப் போல” என்று அவன் கடிந்து கொள்ள.
“ப்சு உங்களுக்குச் சொன்னால் புரியாது தேவா?” என்றாள் மல்லி விரக்தியுடன்.
அம்முவின் நினைவிலேயே உழன்றுகொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் வேறு எதையும் கவனிக்காமல் இருக்கும் அவள் நிலை அவனுக்கு அச்சத்தைக் கொடுக்க, “என்ன புரியாது? நீதான் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் செய்யற. அப்படி என்ன அவள் ஊருல உலகத்துல இல்லாத பெரிய ஃப்ரெண்ட்; அவளை மறக்க முடியாத அளவிற்கு? ஆயாசமாக வந்தன வார்த்தைகள்.
கண்களில் நீர்த் திரள, “நானே மறக்கணும்னு நினைத்தால் கூட அவ என்னை மறக்க விடமாட்டா” என்ற மல்லித் தனக்கு அடிக்கடி வரும் கனவுகளைப் பற்றி தேவாவிடம் சொன்னாள்.
<