இதயம் - 7
சசிகுமாருடைய அறையில், அவனுக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தான் தேவா.
எதோ ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டே அவனிடம், அது குறித்த தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தவனின் கைப்பேசி அறிவிப்பு வந்ததற்கான ஓலியை எழுப்பவே அதை எடுத்துப் பார்த்த தேவா புன்னகைத்துக் கொண்டான்.
“என்னிடம் சொன்னால் நானும் சேர்ந்து சிரிப்பேன் இல்லையா?” என்ற சசியிடம்.
தேவா, “மோஸ்ட் பர்சனல்” என்று கூற,
“நிச்சயமா அது 'ஐ லவ் யூ’ கிடையாது பிறகு எதுக்கு ஓவர் பில்ட் அப்” என்று, சசி அவனை நக்கலடித்தான்.
“லவ் மெசேஜ் இல்லதான் ஆனால் என் ஆள் கிட்டயிருந்து வந்திருக்கும் முதல் மெசேஜ். அதுவும் சுகுணாவிற்காகத்தான்!” என்று சிரித்துக்கொண்டே போனை சசியிடம் காண்பித்தான் தேவா.
வாட்ஸ் ஆப்பில் இருந்து இரண்டு ஸ்மைலியுடன், “நன்றி” என்று அனுப்பியிருந்தாள் மல்லி.
பதிலுக்கு ஒரு ஸ்மைலியை மட்டும் அனுப்பிவிட்டு சசியை நோக்கி, “மல்லி தவிர மற்ற இரண்டு பேரையும் பர்மனென்ட் செய்துடலாம் தானே?” எனக் கேட்டவன் தொடர்ந்து,
“எனக்குத் தெரிந்தவரையில் அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் போட வேண்டாம். மற்றபடி இரண்டு பேருமே திறமையானவர்கள்தான்” என்று முடித்தான் தேவா.
“எனக்கும் அதுதான் சரின்னு தோனுது. ஆனால் மல்லிக்குப் பதிலாக அந்த இடத்தில் ஒருவரைச் சேர்த்தாக வேண்டும். மறுபடியும் ட்ரைனிங்னா, முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்குமே” என்று சசி கேள்வியாய் நிறுத்த,
“இல்லை போனமுறை ஒரு கேண்டிடேட் வாட்ஸ் ஹிஸ் நேம்?” என்று அவனது மடிக்கணினியைக் குடைந்தவன், “ஹான் ஆதித்யா அவனை நேரடியாக அப்பாய்ண்ட் செய்துடலாம்” என தேவா சொல்லவும்,
ஒரு நொடி அதிர்ந்த சசிகுமார், “அவன் முன்பு இங்கே ட்ரைனிங்ல இருந்த பொழுது டைலரிங் பிரிவில் வேலை செய்யும் பெண்களிடம் பிரச்சினை செய்தான் என்றுதானே அவனை நீக்கினோம்?” என்று தயங்க,
“இல்லை! அப்பவே நாம அதை கொஞ்சம் பொறுமையா ஹாண்டில் பண்ணியிருக்கணும்; சரியா கவனிக்காமல் விட்டுட்டதால நடந்த தப்பு அது அதை நாமதான் சரி செய்யணும்” என்று சொல்லி விட்டு,
“நீ ஒருமுறை, மணியிடம் அவனை அழைத்துப் பேசச்சொல்லு. அவன் இங்கே ஜாயின் செய்தால் ஓகே இல்லையென்றால், புதுசா வேறு யாரையாவது பார்க்கலாம்” என்று தேவா முடிக்க,
அப்படியும் தயங்கிய சசியிடம், “அவனோட பெயரை கவனிச்சியா அவன் தப்பு செய்திருக்க மட்டான்” என்று சொல்லி கண்ணடித்தான் தேவா.
அதற்கு சசி நக்கலாக, “எப்படி! வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டானே அப்படியா? போடா” என்று கூறி விட்டு, “நீ சொல்றதால செய்யறேன். ஆனால் நீ இனிமேலும் தள்ளிப்போடாமல் சீக்கிரம் மல்லியிடம் பேசிடு!” என்று முடித்துக்கொண்டான்.
“நானும் அதைப் பற்றித்தான் யோசிச்சிட்டு இருக்கேன் சீக்கிரம் ஒரு முடிவு எடுக்கணும்” என்றான் தேவா தீவிரக்குரலில்.
***
தேவாவோ அடுத்த நாள் காலையிலேயே மல்லியிடம் பேச வேண்டும் என்று நினைத்திருக்க, இரண்டு மணிநேரம் விடுப்பு கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள் மல்லி.
“வர வர இந்த மல்லி அடிக்கடி இப்படி பெர்மிஷன் எடுக்கிறாளே! அதுவும் நாளைக்கு முக்கியமாக அவளிடம் பேசணும்னு நினைத்திருக்கும் இந்த நேரத்தில்” என்று அவளை மனதிற்குள் கடிந்துகொண்டே, அவன் அதற்கு அனுமதி அளித்து பதில் அனுப்பினான்.
மறுநாள் சரியாகப் பதினோரு மணிக்கு அலுவலகத்திற்கு வந்த மல்லி, அனுமதி கூடக் கேட்காமல் கதவைத் தள்ளிக்கொண்டு தேவாவின் கேபினுக்குள் நுழைந்தாள்.
அங்கே அவனுக்கு எதிரில் சசியும், மணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கவே ஒரு நொடி அதிர்ந்து நின்றவள், பின்பு, “சாரி” என்று உரைத்துவிட்டு அங்கிருந்து வெளியில் செல்ல எத்தனிக்க,
சசி, “ஓகே மரகதவல்லி நீங்க இருங்க” என்று கூறி விட்டு, புன்னகையுடன் தேவாவை நோக்கி, “மற்ற தகவல்களை பிறகு கொடுக்கிறேன் ஆஆஆ” என்று தடுமாறி, “தேவா” என்று கூற,
“ஓகே குமார் சார்” என்றான் தேவா, பற்களை கடித்தவாறே. பிறகு சசிகுமார் வெளியே செல்ல, மணியும் அவனுடனேயே வெளியே சென்றான்.
யோசனையின்றி மல்லி நடந்துகொண்ட விதத்தில் தேவாவிற்குத்தான் கொஞ்சம் எரிச்சலாகிப்போனது.
அதே மன நிலையில் அவன் அவளைப் பார்த்து முறைக்க, அதில் அதிர்ந்த அவளது தோற்றத்தைக் கண்டு கொஞ்சம் கோவம் தணிந்தவன், இருக்கையை காட்டி அவளை உட்காருமாறு சைகை செய்தான்.
அவளுக்கும் படபடப்பு அடங்க, உட்கார வேண்டும்போல் இருக்கவே அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.
பிறகு தேவா அவளை நோக்கி, “அப்படி என்ன அவசரம் இதுபோல் அனுமதி இன்றி உள்ளே நுழையும் அளவிற்கு” என்று அவளைக் கடிந்துகொள்ள,
கண்களில் நீர் கோர்க்க, “சாரி” என்ற மல்லி, “எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்கவும்,
அடுத்து எந்தப் பிரச்சினையை இழுத்து வந்திருக்கிறாளோ என மனதிற்குள் கலங்கிய தேவா, “என்ன செய்யணும்?” என்று கேட்டான்.
அடுத்த நொடி, “அம்மு பற்றி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு; அதை வைத்து உங்களால அவளைக் கண்டு பிடிக்க முடியுமா?” என்றாள் மல்லி கெஞ்சலாக.
“என்ன அம்முவைப் பற்றி க்ளூவா?” என்று தேவா ஆச்சரியக் குரலில் கேட்கவும், அன்று நடந்ததை அவனிடம் சொல்லத்தொடங்கினாள் மல்லி.
காலை தீபனின் பள்ளியில் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டு கொடுப்பதற்காக, பெற்றோரை அழைத்திருந்தனர்.
வழக்கம்போல் மல்லிதான் அங்கே சென்றாள்.
ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு திரும்பும் சமயம், தீபனுடைய வகுப்பில் படிக்கும் பெண் ஒருத்தி அவள்மீது தெரியாமல் மோதிவிட, “பார்த்து” என்று சொன்ன மல்லியிடம், “அக்கா சாரி” என்றாள் அவள்.
அவள் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தால் ஆன சங்கிலியை அப்பொழுதுதான் கவனித்தாள் மல்லி. அதே போன்ற செயினை ஒரு முறை அம்மு அவளிடம் காண்பித்திருக்கிறாள்.
அதில் ஒரு நொடி திடுக்கிட்டவள் அந்தப் பெண்ணிடம், “இந்த செயின் ரொம்ப அழகா இருக்கு; இதை எங்கே வாங்கினீங்க?” என்று கேட்க,
அருகே நின்ற தீபனைப் பார்த்த அந்தப் பெண், மல்லி அவனது சகோதரி என்பது புரிய, “இது கொஞ்சம் பழசு அக்கா; அம்மாவின் செயின்; அப்பாதான் வாங்கி தந்தாங்க” என்று சொல்ல,
“என் ஃப்ரெண்ட் அம்முவும் இதே மாதிரி ஒரு செயின் வைத்திருக்கிறாள்” என்றவாறே மல்லி அதில் கோர்க்கப்பட்டிருந்த டாலரை தொட்டுப்பார்க்க,
அதைப் பார்த்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்த அந்தப் பெண்ணின் தந்தை அவரது மகளை நோக்கி மிரட்டுவது போல், “ஏய் வனிதா நீ உள்ளே போய் வந்திருக்கும் வேலையைப் பாரு; இங்க என்ன வெட்டியா பேசிட்டு இருக்க?” என்று அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டு மல்லியிடம்,
“என்ன இப்படித்தான் சின்னப் புள்ளைய மிரட்டுவியா? உனக்கெல்லாம் வேற வேலை இல்ல?” என்று சண்டைக்கு வருவதுபோல் பேசவும்,
மல்லி, “இங்கே பாருங்க உங்க பெண்ணை யாரும் மிரட்டல. பப்ளிக் ப்ளேஸ்ல இப்படியா கத்துவீங்க?”என்று கேட்க,
அதற்குள் தீபன் ரகசிய குரலில், “அக்கா இவங்களோடல்லம் சரிக்குச் சரியா பேசவேண்டாம். நீ முதலில் இங்கிருந்து கிளம்பு” என்று அவளை அங்கிருந்து போகச்சொல்லவே, அவளும் அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்தாள்.
தீபன் வகுப்பறை நோக்கிச் சென்றுவிட, அவளைத் தொடர்ந்து வந்த அந்தப் பெண்ணின் தந்தை, “நீ மறுபடியும் என் மகளுடன் பேசுவதைப் பார்த்தால் உன்னைக் கொன்னுடுவேன்!” என்று மல்லியை மிரட்டிவிட்டு அவளுக்குப் பேச வாய்ப்பே தராமல் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார்.
இது அனைத்தையும் தேவாவிடம் சொல்லி முடித்தாள் மல்லி.
“உனக்கு அம்மு பைத்தியம் கொஞ்சம் அதிகமாகிப் முத்திப் போச்சு. தேவை இல்லாமல் இப்படி யார் யாரிடமோ பிரச்சினையை விலை கொடுத்து வாங்கற” என்று வெகுவாக அவளைக் கடிந்துகொண்டான் தேவா.
“இல்லை தேவா நான் சொல்வதை நம்புங்க. அங்கிருந்து கிளம்பிய பிறகுதான் புரிந்தது, நிச்சயமா அது அம்முவோட செயினேதான். அவளுக்கு அவளோட ராஜா அண்ணா, வாங்கிக் கொடுத்தது” என்று சொன்னாள் மல்லி.
“ப்சு அதே மாதிரி செயின் யார் வேணாலும் வாங்கலாம் மல்லி நீ ஏன் இப்படி இருக்க?” என்று அவன் சலிப்புடன் சொல்ல,
“சான்ஸே இல்லச ஏனென்றால் அந்தச் செயின் ஆர்டர் கொடுத்து ஸ்பெஷலா செஞ்சது” என்று மல்லி சொல்லவும் அவன் முகம் யோசனையில் சுருங்கியது.
அதனைக் கண்டவள், “ப்ளீஸ் தேவா! நான் சொல்வதை கேட்டுட்டு நீங்களே முடிவுசெய்யுங்க” என்றவள் அந்த தங்கச் சங்கிலியை அம்மு அவளிடம் காண்பித்த அந்த நிகழ்வை அவனிடம் சொல்லத்தொடங்கினாள்.
****
அவர்கள் ஏழாம் வகுப்பில் படிக்கும்பொழுது அரை ஆண்டுத் தேர்வு விடுமுறைக்குச் சென்று திரும்பிய சமயம் அம்மு மல்லியிடம் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி வாங்கி இருப்பதாகச் சொல்லி அழகிய அனார்கலி உடை ஒன்றைப் பரிசளித்தாள்.
அதில் மகிழ்ச்சி அடைந்த மல்லி பதிலுக்கு தன்னிடம் இருந்த புடவைகளில் பதிக்கும் வண்ணக் கற்கள் சிலவற்றை அம்முவிற்குக் கொடுத்தாள். அவை வெறும் கண்ணாடி கற்கள்தான்.
அடுத்து வந்த முழு ஆண்டுத் தேற்வு விடுமுறைக்குச் சென்று திரும்பிய அன்று அவசரமாக உள்ளே வந்த அம்மு மல்லியிடம் ஒரு செயினைக் காண்பித்தாள். அதில் இதய வடிவில் ஒரு டாலர் கோர்க்கப் பட்டிருந்தது.
“இது ராஜா அண்ணா எனக்காக ஆர்டர் கொடுத்து செஞ்சாங்க!” என்று சொல்லி அந்த டாலரில் பொறிக்கப் பட்டிருந்த, “அ” என்ற எழுத்தைக் காண்பித்தவள்,
“தமிழின் முதல் எழுத்து, என் பெயரோட முதல் எழுத்து” என்று பெருமையாகச் சொல்லிவிட்டு, அந்த டாலரைக் குலுக்க சலங்கைப் போன்று அதில் சத்தம் வரவும் அதை அதிசயமாகப் பார்த்த மல்லி அதைக் குலுக்கியவாறே, “அழகா இருக்கு அம்மு”என்று சொல்ல,
“இதுக்குள்ளே என்ன இருக்குத் தெரியுமா?!” என்று கேட்டுவிட்டு, “நீ என்னிடம் சில கற்களைக் கொடுத்த இல்ல அதுதான் அதை நகைகளில் பதிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதனாலதான் இதுக்குள்ள வைக்க சொல்லி அண்ணாகிட்ட சொன்னேன்” என்று சொன்ன அம்மு.
“அப்பா கிளம்பிட்டு இருக்காங்க; இதை அவங்ககிட்ட கொடுத்துட்டு வந்துடறேன்” என்று அங்கிருந்து ஓடிப்போனாள்.
அவள் சொல்லி முடிக்கவும் மௌனமாக அவளையே பார்த்திருந்தான் தேவா.
“அந்த செயின் அவர்களிடம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சா அம்மு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சுடலாம் தேவா” என்று மல்லி சொல்ல,
“சரி நான் முயற்சி செய்யறேன். ஆனால் நீ இனிமேல் தனியாக எங்கேயும் போகக் கூடாது” என்றான் தேவா.
“ஏன்?” என்று கேட்ட மல்லியிடம் தேவா, “அந்த ஆளு உன்னை மிரட்டினான்னு நீதானே சொன்ன?” என்று கேட்க,
வெகுளியாக, “ஐயோ அவர் சும்மா மிரட்டியிருப்பர். அந்த அளவுக்கெல்லாம் யாரும் போக மாட்டங்க” என்றாள் மல்லி.
“நான் சொல்வதைக் கேட்டால் மட்டுமே நான் உனக்கு அம்முவை கண்டுபிடித்துக் கொடுப்பேன்” என்று அவன் நிபந்தனை விதிக்க,
“சரி” ஆனால் அம்முவை கண்டு பிடிக்கும் வரைதான் நீங்க சொல்வதை நான் கேட்பேன்” என்று அவள் அதற்குச் சம்மதித்தாள்.
“அந்தப் பெண்ணுடைய பெயர் உனக்குத் தெரியுமா?” என்று தேவா கேட்க,
மல்லி, “ம் வனிதா அப்படிதான் அவளோட அப்பா அவளைக் கூப்பிட்டார்” என்ற சொல்ல,
“சரி நான் பார்த்துக் கொள்கிறேன்; நீ போய் வேலையைப் பார். அம்முவைத் தேடுவதற்கு நடுவில் கொஞ்சம் நம்ம வேலையையும் பார்க்கணும் இல்லையா” என்று கிண்டலாகவே முடித்தான் தேவா.
பிறகு அவர்களுடைய வேலை அவர்களை இழுத்துக்கொள்ள அன்றைய நாள் முடிந்தது.
***
ஆன்லைனில் அறிமுகப் படுத்தவிருக்கும் விடுமுறைக்கால புதிய ஆடைகளுக்கான வேலைகளில் அலுவலகம் முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
மாலை நெருங்கும் நேரம் மல்லியை அழைத்த தேவா, “எப்பொழுது அந்தப் பட்டுப் புடவை டிஸைனை ரெடி பண்ண போற மல்லி? என்று கேட்க,
“ரெடி பண்ணிடுவேன், ஆனால் ஹாலிடே கலெக்ஷன்ஸ் வேலை இருக்கே” என்று அவள் இழுக்கவும்,
“அதை மத்தவங்க பார்க்கட்டும். நீ இந்தப் புடவை வேலையை மட்டும் பார்” என்றான் தேவா.
சரி என்று அவள் அங்கிருந்து செல்ல எத்தனிக்கவும்,
“எப்ப ரெடி ஆகும்னு சொல்லிட்டு போ” என்று தேவா அவளைப் பார்த்துப் புன்னகைக்க,
அதில் முகம் பிரகாசித்தவள், “இப்பவே தயாராகத்தான் இருக்கு பார்க்கறீங்களா?” என்று ஆவலுடன் கேட்டாள் மல்லி.
“ம் ம் பார்க்கலாமே” என்றான் தேவா.
சிறிது நேரத்திலேயே, காகிதத்தில் வரையப்பட்ட சில டிஸைன்களுடன் அங்கே வந்தாள் மல்லி அதை ஒவ்வொன்றாக அவனிடம் காண்பித்துக் கொண்டிருக்கும்போது அவளது கைப்பேசி ஒலித்தது.
தீபன் அழைத்திருந்தான்.
வேலைக்கு நடுவில் இருக்கும்போது எப்படி அழைப்பை எடுப்பது என மல்லி யோசிக்க,
தேவாவே, “எடுத்துப் பேசு மல்லி எதாவது முக்கியமாக இருக்கப்போகிறது” என்று சொல்லவும் மல்லி கைப்பேசியைக் காதில் வைத்து, “சொல்லு தீபா” என்று கூற,
“அக்கா அன்னைக்கு உன்னிடம் சண்டைப் போட்டாரே அந்த வனிதாவோட அப்பா அவர் இறந்து போய்ட்டார்கா! ரோட் ஆக்சிடென்ட்?! ஒரு டிப்பர் லாரி மோதிவிட்டதாம். அந்தப் பெண்ணை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துப் போனார்கள் அக்கா” என்று அதிர்ச்சியுடன் சொல்லிக்கொண்டே போனான் தீபன்.
பேச்சிழந்து நின்றாள் மல்லி.
O Gosh..!!! What's happening sis..😱😱