தோழமைகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அத்தியாயம்-6
ஏறிய போதையின் பக்கவிளைவாக கருணாகரனின் முகமே வீங்கிப்போய் பார்க்க சகிக்கவில்லை அவரை. இந்த அழகுடன் வீட்டிற்கு சென்றார் என்றால் நிச்சயம் தாமரையின் பதட்டம் அதிகரிக்கும். எனவே இப்பொழுது வீட்டிற்கு செல்வதென்பது உகந்ததில்லை.
இந்த விருந்தினர் இல்லத்துக்கு வரும்பொழுது அணிய ஏதுவாக லுங்கி டீ-ஷர்ட் போன்ற சில எளிய ஆடைகள் மட்டுமே அங்கே இருப்பில் இருந்தன. மற்றபடி முந்தைய தினம் அவர் அணிந்துவந்த உடையும் கூட மீண்டும் உடுத்தும் நிலையிலில்லை. எனவே அலுவலகத்திற்கும் போக இயலாது.
காலை உணவை ஆன்லைனில் தருவித்துச் சாப்பிட வைத்தவன், அவரை மதியம் வரை அங்கேயே ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு, மாற்று உடை எடுத்துவர வீட்டுக்குக் கிளம்பினான் சத்யா.
உள்ளே நுழைந்ததுமே முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு 'உர்' என அவனை எதிர்கொண்டார் தாமரை.
எதையாவது பேசிவைத்தால் சும்மா இருக்கும் சிங்கத்தைச் சொறிந்துவிட்டதுபோல் ஆகிவிடும் என்பதால், ஒன்றுமே நடக்காதது போன்று தன் அறைக்குள் போய் புகுந்துகொண்டவன், சில நிமிடங்களில் குளித்து அலுவலகம் செல்ல தயாராகி வந்தான்.
உணவு மேசையின் மேல் சிற்றுண்டிகள் தயாராக இருக்க, அவனுக்காக அங்கே காத்திருந்தார் தாமரை.
'பசங்க மாமா அத்தை எல்லாரும் சாப்டாங்களாக்கா, நீ சாப்பிட்டியா" எனக் கேட்டுக்கொண்டே அவன் வந்து உட்கார, "மணி பத்தாச்சு இன்னுமா சாப்பிடாம இருப்பாங்க?" எனக் குதர்க்கமாகத் தொடங்கியவர், "ஏண்டா, என்ன பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கு" என உச்சஸ்தாயியில் தொடர, "டிபிக்கலா... கணவனே கண் கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் படத்துலயெல்லாம் வருவாங்க இல்ல அந்த ஹீரோயின் மாதிரி இருக்க..க்கா" என அலட்டிக்கொள்ளாமல் பதில் கொடுத்தான் அவன்.
அவன் சொன்ன பாவனையில் கோபம் கொஞ்சம் பின்னுக்குப் போனதால் எட்டிப்பார்த்த லேசான சிரிப்புடன், "டாய்" என அவர் போலியாகப் பற்களைக் கடிக்க,
"பின்ன, பழைய படத்துல வர மாதிரி, 'என் அத்தானுக்கு என்ன ஆனதோ'ன்னு ஓவரா டயலாக் விட்டன்னா வேற எப்படி தோணும்?" என அவன் அதே பாணியில் தொடரவும்,
"ப்ச்... சத்யா" என இலகுவானவர், "நேத்து அத்தான் கிட்ட பேசறேன்னு சொல்லிட்டு போனவன், இப்பதான வீட்டுக்கு வர. என்னை பத்தி யாராவது கவலை படறீங்களா?" என விடாமல் படபடக்கவே,
"ப்ச்... அக்கா, சைட்ல முக்கியனமான ஒர்க் போயிட்டு இருக்கு, நைட் அங்க தங்க வேண்டிய சூழ்நிலைன்னு போன் பண்ணேன் இல்ல, அப்பறம் என்ன" எனக் கொஞ்சம் குரலை உயர்த்தினான் சத்யா, அவரிடம் எதையும் உடைத்துச் சொல்லமுடியாமல் பொய் சாக்கு சொல்வதால் உண்டான இயலாமையில்.
அதற்கும் அவர் முகம் சுணங்கவும், 'ப்ச்... அத்தானுக்கு ஒர்க் டென்ஷன்தான் வேற ஒண்ணுமில்ல. அந்த வேலயும் இப்ப முடிஞ்சுபோச்சு. ஸோ, இனிமேல் நார்மலாயிடுவாருன்னு நினைக்கறேன்" என்றவன், "உன் ஊட்டுக்கார ஈவினிங் சீக்கிரமே ரிலீஸ் பண்ணி அனுப்பிவிடறேன், நீயே அவர்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா" என்று சொல்லிவிட்டு வேகமாக உண்டு முடித்து, அவருக்கான உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பி வெளியில் வந்தான் சத்யா.