அத்தியாயம்-16
குறித்த நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் மூத்தோர் ஆசியுடன் சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது ஹாசினி-கௌசிக் திருமணம்.
மாலை வரவேற்புக்காக மக்களெல்லாம் வந்தவண்ணம் இருந்தனர்.
திருமண மண்டபம் அமைந்திருக்கும் வீதியின் முகப்பிலேயே, இரு பக்கமும் தங்க நிற தூண்களில் அமைந்த 'கருணா ஃபௌண்டேஷன்ஸ் லிமிடெட் - கருணாகரன் - தாமரை ஃபேமிலி வெல்கம்ஸ் யூ' என்ற அலங்கார வளைவு அனைவரையும் வரவேற்க, 'ஹாசினி-பீ.ஈ வெட்ஸ் கௌசிக் பீ.ஈ' எனப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை மண்டபத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டமாக நின்றது. அந்த வீதி முழுவதுமே மணமக்கள் இருவரின் விதவிதமான படங்களுடன் ப்ளெக்ஸ் போர்ட்கள் வைக்கப்பட்டிருந்தன.
முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்து பார்த்தால், மலர்கள், பழங்கள், பன்னீர், சந்தனம் என கொடுத்து அனைவரையும் உபசரிக்க சீருடை அணிந்த பெண்கள் தயாராக நின்றிருந்தனர்.
குழந்தைகளைக் கவரும் விதமாக பலூன்கள், முகமூடிகள் பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் போன்றவை ஒரு பக்கம் தாராளமாக விநியோகிக்கப்பட, மற்றொருபுறம் சில பெண்கள் உட்கார்ந்துகொண்டு, நீட்டுபவர் கரங்களிலெல்லாம் மெஹந்தியை வரைந்துதள்ளிக்கொண்டிருந்தார்கள்.
பலவித பழ ரசங்கள், காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் என ஒவ்வொருவரின் தேவையையும் கேட்டுக் கேட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
போதும் போதும் என அனைவரும் சலிக்கும் அளவுக்கு எண்ணிக்கையில் அடங்காத வகையில் உணவு வகைகள் தயாராக இருக்க, உள்ளே நுழையும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கவனித்து சாப்பிட அழைத்துச் சென்று உபசரிக்கவென பிரத்தியேக ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்க, சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தனர் அனைவரும். ஐஸ் கட்டியில், சர்க்கரை பாகில். காய்-கனிவகைகளில் என விதவிதமான சிற்பங்கள் அலங்காரமாக அடுக்கப்பட்டிருந்தன.
கோவில் திருவிழாக்களே தோற்றுப்போகும் என்கிற அளவுக்கு எந்த பக்கம் திரும்பினாலும் அப்படி ஒரு ஆடம்பரம் ததும்பி வழிந்தது. அந்த அளவுக்கு, மகளின் திருமணம் எந்த ஒரு குறையுமின்றி நடந்தேற பணத்தை தண்ணீராக செலவு செய்திருந்தார் கருணாகரன்.
வண்ணமிகு மணிகளும் கற்களும் பதித்த அடர் நீலமும் பிங்க்கும் கலந்த கௌனில், அதற்குத் தோதாக வைரம் பதித்த மெல்லிய ஆரமும் மிகப்பெரிய காதணியும் அணிந்து, தூக்கிப் போடப்பட்ட அலங்கார கொண்டையும், இரு கைகள் முழுவதுமாக வரையப்பட்ட மெஹெந்தியும், பொருத்தமான ஒப்பனையுமாகத் தாரகையென ஜொலித்தாள் ஹாசினி. அன்று காலை கௌசிக் அணிவித்திருந்த பொன் மஞ்சள் தாலி அவளுக்கு ஒரு புதுவித சோபையைக் கொடுக்க, எடை அதிகமில்லாமல் அவளுடைய உடைக்குத் தகுந்தாற்போல பிங்க் நிற ரோஜா இதழ்களில் தொடுத்த மெல்லிய மாலையைக் கழுத்தில் சூடி, அடர் நீல கோட் சூட்டில் மாலையும் கழுத்துமாகக் கம்பீர தோற்றத்துடன் அவளுக்குப் பொருத்தமாகத் திகழும் கணவனுடைய கையை பற்றியவாறு மேடைமேல் ஏறி வந்து நின்ற மகளைக் காணக்காணத் திகட்டவில்லை கருணாகரனுக்கு.
அந்த நொடி தன் மகள் தன்னை மீறி அவளாகவே ஒரு வாழ்க்கைதுணையைத் தேர்ந்தெடுத்துவிட்டாள் என்கிற எண்ணம் கூட மறந்து போயிருந்தது அவருக்கு.