அத்தியாயம்-5
எட்டு முதல் பத்துபேர் வரை சுற்றி உட்கார்ந்து அரட்டை அடிக்க ஏதுவாக வட்டவடிவிலான அலங்கார 'சோஃபா'க்கள் அந்த வரவேற்பறையை அலங்கரித்திருக்க, நடுவில் போடப்பட்டிருந்த வட்ட-தேநீர்மேசை மீது, பாதிக்கும் மேல் காலியான நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மது பாட்டில் ஒன்று திறந்த நிலையில் அமர்த்தலாக வீற்றிருந்தது. அருகே, பீங்கான் தட்டுகளில் கொஞ்சமும் மேசைமேல் மீதமுமாக சிதறிக் கிடந்தன வறுத்தவை பொறித்தவை என அந்த உயரடுக்கு மதுவின் துணையுண்டிகள்.
கண்ணாடிக் குவளை ஒன்று கீழே விழுந்து நொறுங்கியிருந்தது. தரையில் கிடந்த காலி 'சோடா' பாட்டில்கள், சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி வீசிய காற்றின் வேகத்திற்கேற்ப இப்படியும் அப்படியுமாக உருண்டுகொண்டிருந்தன.
இது வழக்கமாக நடப்பதுதான் என்றாலும் அவனறிந்து கருணாகரன் மட்டும் தனியாக வந்து இப்படி கவிழ்ந்து கிடப்பது இதுவே முதன்முறை.
அவர்களுடைய தொழிலுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒரு சிறு நட்பு வட்டம் அவருக்கு உண்டு. எல்லோருமே அவருடைய வயதை ஒற்ற, மனைவிக்கு பயந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அப்பாவி குடும்பஸ்தர்கள்தான்.
எப்பொழுதாவது, சில மாதங்களுக்கு ஒரு முறை அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, 'சரக்கும் சைட் டிஷ்'சுமாக ஒரு நாள் முழுவதையும் கழிப்பார்கள். அதுவும் இந்த 'கெஸ்ட் ஹவுஸ்'ஸில் மட்டுமே நடக்கும்.
பின்-மாலைக்கு மேல் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட கருணாகரன் மட்டும் அன்றைய இரவு அங்கேயே தங்கிவிடுவார் தாமரைக்கு அஞ்சி.
மற்றபடி தொழில்முறை பார்ட்டிகளில் கூட மது அருந்த மாட்டார் அவர்.
தாமரையிடமிருந்து மறைத்தாலும் கூட இதையெல்லாம் சத்யாவிடம் மறைக்கவே இயலாது அவரால். மறைக்கவும் மாட்டார்.
இந்த விஷயத்தில் கணவன் மனைவி இருவரின் மனநிலையையும் புரிந்தவனாதலால், நடுநிலைவாதியாக அவனும் கண்டும் காணாமலும் இருந்துவிடுவான். மற்றபடி இதுபோன்ற நிலையில் கருணாகரனை தனித்திருக்க விடாமல் அன்று அவருடனேயே தங்கிக்கொள்வான் அவ்வளவே. காரணம், அவர் ஐம்பதை கடந்த பிறகு அவருடைய உடல்நலம் குறித்த கவலை தம்பி மற்றும் தமக்கை இருவருக்குமே தொற்றிக்கொண்டது.
ஆனால் இந்த அளவுக்கெல்லாம் தன்னிலை மறந்து நினைவு தப்பும் அளவுக்கு அவர் சென்றெல்லாம் இதுவரை பார்த்ததே இல்லை அவன்.
"என்ன நேர்ந்தது இந்த மனிதருக்கு" என்றுதான் தோன்றியது அவனுக்கு.
"கோபால்" என அங்கிருந்தே குரல் கொடுத்தவன், அவரை திருப்பி நேராகப் படுக்க வைத்தான். கோபால் உள்ளே வரவும், இருவருமாக அவரை தூக்கிப் பிடித்து படுக்கை அறைக்குள் இழுத்துச்சென்றனர்.
அங்கே அவரை கட்டிலில் உட்கார வைக்கவும், பித்தம் தலைக்கேறி அவருக்குக் குமட்டிக் கொண்டு வர, அருகிலிருந்த குப்பைக் கூடையை எடுத்து அவர் வெளியேற்றியதை அனாயாசமாக கேட்ச் பிடித்தான் சத்யா அங்கே ஒரு அலங்கோலம் நடந்தேறுவதை லாவகமாகத் தவிர்த்து.
பின் அங்கேயே ஒரு வாளியில் தண்ணீரைக் கொண்டுவந்து அவரை முகம் கழுவ வைத்தான். அவர் முன்னமே லுங்கி - டீஷர்ட்டுக்கு மாறியிருக்க, அவன் வேலை கொஞ்சம் மிச்சமானது.
அதன் பின் கோபாலை ஏவி அவருக்கு எலுமிச்சை பழச் சாற்றைக் வாங்கிவரச் செய்து அவரை பருக வைத்தவன், அவனுடன் சேர்ந்து வரவேற்பறையை சுத்தப்படுத்தி முடித்து பின் அவனை வீட்டிற்குப் போகுமாறு சொல்லிவிட, விட்டால் போதுமென்று அங்கிருந்து ஓடியேபோனான் கோபால்.
சில நிமிடங்களில் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்த கருணாகரன், இப்படியும் அப்படியுமாக உருண்ட தலையைத் தூக்க முடியாமல் தூக்கி, அவருக்கு அருகில் உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஒரு பழைய பாடலில் மூழ்கியிருந்த மைத்துனனைப் பார்த்துவிட்டு வாயில் வந்த எதையோ உளறி வைக்க, "அத்தான், எது சொல்றதுனாலும் புரியற மாதிரி தமிழ்ல சொல்லுங்க. இப்படி பாகுபாலில வர மாதிரி, 'நிம்ம்ம்டா தோஸ்ரஸ் தெல்மி...'ன்னு கிலிக்கிலில எல்லாம் பேசினா எனக்கு சுத்தமா புரியல" என்றான் அவன் கடுப்புடன்.
அவர் இருந்த நிலையில் அவன் பேசிய எதுவும் அவரது மூளையை எட்டவேயில்லை. குளறலாக வாய் பாட்டிற்கு 'குட்டிம்மா' 'ஹாசினி' என மகளுடைய பெயரையே மந்திரமாக ஜெபிக்க, உச்சிக்கு ஏறியிருத்த போதையின் பயனாக, அதுவரை மனதை அழுத்திய பாரம் உடைபடக் கண்களில் கண்ணீர் திரண்டு அவருடைய செவி நோக்கி பாய்ந்தது.
அவரது கலக்கத்தையும் கண்ணீரையும் முதன்முதலாகப் பார்ப்பதாலோ என்னவோ, "ஐயோ, அத்தான்! என்ன ஆச்சு?!" என பதறியே போனான் சத்யா.
அவனுடைய பதற்றத்தை உணரும் நிலையிலெல்லாம் இல்லை அவர். அதேபோல், "நீ போய் இப்படி பண்ணுவேன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல! என்னை பத்தி நீ கொஞ்சம்கூட நினைச்சே பார்க்கல இல்ல? உனக்காக ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செஞ்ச எனக்கு உனக்கேத்த ஒரு நல்ல பையனா பார்க்க தெரியாதா? என்னை ஏமாத்திட்டயே குட்டிம்மா!" என அவர் உளறிக் கொட்டிய எதையும் புரிந்துகொள்ள சத்யாவாலும் முடியவில்லை.
நடுநிசி வரை உறக்கமும் விழிப்புமாக இப்படியே அவனை உண்டு இல்லை என நன்றாக 'வைத்து' செய்துவிட்டு, அதன் பின் மொத்தமாக மட்டையாகிப்போனார் கருணாகரன்.
அத்தானின் புண்ணியத்தில் அந்த ராத்திரி சிவராத்தியாகிபோய் வெகு தாமதமாக உறங்கியிருந்தாலும் வழக்கமாப்போல அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்புத்தட்டிவிட்டது சத்யாவுக்கு.
புரண்டு படுத்து நேரத்தை கடத்தினாலும் கருணாகரன் விட்ட குறட்டையில் சில நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் படுக்கையை விட்டு எழுந்தவன் காலை கடன்களை முடித்துக்கொண்டு வரவேற்பறை சோபாவில் வந்து அமர்ந்து, தொலைக்காட்சியை உயிர்ப்பித்து ஒரு மியூசிக் சேனலை ஓட விட,
விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி...
என ஒலித்த பாடலில் சூடாகிப்போன அவனுடைய ரத்தம் மொத்தமாக மூளைக்கு பாய, 'ப்ச்... காலங்கார்த்தால சொந்த செலவுல சூனியம் வெச்சுகிட்ட போ! இன்னைக்கு பொழுதுக்கும் நம்மள நல்லா வெச்சு செய்ய இந்த ஒரு பாட்டு போதுமே' என்று மனம் சலிப்படைய, அப்படியே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
அந்த பாடலுடன் பின்னிப்பிணைந்த அவனது நினைவுகள் அவனை இருபது வருடம் பின்னோக்கி இழுத்துச்சென்றது.
இருக்கும் ஒரே அக்காவையும் 'இன்ஜினியர்' மாப்பிளைக்கு திருமணம் செய்துகொடுத்திருக்க, அம்மா அப்பா மற்றும் இவன் மட்டுமே என்கிற நிலையில் எந்த ஒரு பொறுப்பையோ அல்லது குடும்ப பாரத்தையோ தலை மேல் தூக்கி சுமக்கும் தேவை இல்லாமல், எதிர்காலத்தை பற்றிய பெரிய கனவுகளோ, திட்டமிடலோ அல்லது பயமோ எதுவுமே இன்றி, வாழ்க்கையை அதன் போக்கில் அனுபத்துக்கொண்டு கல்லூரி படிப்பின் மூன்றாமாண்டில் அவன் அடியெடுத்துவைத்திருந்த காலகட்டம் அது.
அன்றைய கடைசி வகுப்பை கட் அடித்துவிட்டு அவனுடைய நகமும் சதையுமாக இருக்கும் நண்பர்கள் நால்வர் சூழ, கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் மூலையில் இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தான் சத்யா. மாலை ஒரு திரைப்படத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்ததால் மேலும் சிலருக்காக முன்னமே வாங்கிவந்திருந்த டிக்கெட் சகிதம் அவர்கள் அங்கே காத்திருக்க, அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த பெண்கள் இருவர் 'அவர்களை நெருங்கி மேலும் முன்னேறி வரலாமா இல்லை அப்படியே திரும்பச் சென்றுவிடலாமா?' என்கிற தயக்கத்துடன் சற்று தொலைவிலேயே நின்று அங்கேயும் இங்கேயுமாக திரும்பிப் பார்ப்பதைக் கவனித்தவன், நண்பர்களை நோக்கி ஒரு பார்வையை மட்டும் வீச, அதன் பொருள் புரிந்தவனாக, "சரிடா மச்சான், பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்றோம், நேரத்தோட வந்து சேரு" என்ற சரவணன் என்பவன், "வாங்கடா போகலாம். பக்கத்துல நின்னு வேடிக்கை பாக்கற சான்ச கூட இவன் நமக்கெல்லாம் கொடுக்கமாட்டேங்கறான், நம்மளையெல்லாம் ஒரு பொண்ணு கூட திரும்பி பார்க்கவும் மாட்டேங்குது. அட்லீஸ்ட் ஒரு சீனியர்ங்கற மரியாதையாவது இருக்கான்னா, அதுவும் இல்ல" என சன்னமாகப் புலம்பியவாறு மற்றவருடன் அங்கிருந்து அகன்றுவிட, அவர்களுடன் அந்த பெண்களின் தயக்கமும் தூரச் சென்றிருக்க, அவனை நோக்கி வந்தனர் இருவரும்.
ஒருத்தி அவனுடைய சொந்த அத்தையின் மகள் மல்லிகா. மற்றொருத்தி அவளுடன் பசைபோட்டதுபோல் ஒட்டிக்கொண்டு திரியும் அவளுடைய உயிர்த் தோழி தேன்மொழி, அவனுடைய ஒன்றுவிட்ட மாமனின் மகள்.
"என்ன மல்லி... உன் காத்து இன்னைக்கு என் பக்கம் அடிக்குது. வீட்டுல கோள் மூட்டி பத்தவைக்க ஏதாவது மேட்டர் கிடைக்குமான்னு துப்பறிய வந்தியா?" என அவன் எகத்தாளமாக அவளிடம் கேட்க, அவனுடைய பார்வை மட்டும் தேன்மொழியிடம் தஞ்சம் புகுந்தது.
"சத்யா... என்னை போய் என்ன வார்த்தை சொல்லிட்ட நீ? அய்யகோ, இது உனக்கே அடுக்குமா?" என அடுக்குமொழியில் வசனம் பேசி மூக்கால் அழுதவள், தன் பையிலிருந்து ஒரு வாக்மேனை எடுக்க, "ஓய், வாக்மேன்னெல்லாம் வங்கியிருக்கியா? என்ன செட்டு? புதுசா இல்ல செகண்ட்ஸா" என்றான் அவன் குதூகலத்துடன்.
"சோனி. ப்ச்... இது என்னோடது இல்ல. உன் மாமன் பொண்ணுது. அவதான் அவங்க அப்பாவை பிடிங்கி எடுத்து இதை வாங்கியிருக்கா. அதுவும் புதூஊஊஊஊசா" என நொடித்தவள், "சத்யா... ஒரு பாட்டு பாடி அதை இதுல பதிஞ்சு கொடுக்கறியா? வீட்டுல இருக்கிற டேப் ரெக்கார்டார்ல போட்டு நான் தினமும் கேட்பேன்" என்று கேட்டாள் அவள் சலுகையாக.
உடல் முழுவதும் ஒரு வித பரவசம் பாய்ந்தோட, அவனது பார்வை மறுபடியும் தேன்மொழியையே தழுவியது.
"ஆள பாரு. என் பாட்டையெல்லாம் உட்கார்ந்து கேக்கறவளா நீ. யார் கிட்ட ரீல் சுத்தற. வாக்மேன் இவளோடதுன்னா அப்ப பாட்டும் உன் ஃப்ரெண்டுக்குத்தான? உண்மைய சொல்லு" என அவன் வார்த்தையால் மல்லிகாவிடமும் கண்களால் தேன்மொழியிடமும் கேட்க, "நிஜம்மா எனக்குதான் கேட்கறேன் சத்யா" என மல்லிகா பதில்சொல்லிக்கொண்டிருக்க, அது தனக்குத்தான் எனச் சொல்லாமல் சொன்னது தேன்மொழியின் விழிகள்.
"சரி என்ன பாட்டு வேணும்" என அதையும் அவன் தேன்மொழியைப் பார்த்துக்கொண்டே கேட்க, "அன்னைக்கி பிரெஷர்ஸ் பார்ட்டில பாடின இல்ல அந்த அஜித்குமார் பாட்டு. அதுதான் வேணும்" என பதில் வந்தது மல்லிகாவிடமிருந்து. உண்டான உவகையுடன் 'அந்த பட்டா?' என்ற கேள்வியுடன் அவன் தேன்மொழியைப் பார்க்க, அவள் இமைகள் தழைந்தன 'ஆமாம்' என்றபடி.
இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் - இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட
கயிறொன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
என்தன் வாழ்க்கையே
உன்தன் விழி விளிம்பில்
என்னை துரத்தாதே
உயிர் கரை ஏறாதே…
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்?
கல்லூரி வகுப்புகள் முடிய இன்னும் சில நிமிடங்களே இருக்க, வேகமாக அந்த ஒலிப்பதிவு கருவியை அவளிடமிருந்து வாங்கியவன் அவள் கேட்ட பாடலை பாடி அதில் பதிவு செய்து மறுபடியும் அவளிடம் நீட்டவும், அவனுடைய தோழர் குழாமெல்லாம் வகுப்பு முடிந்து அங்கே வரவும் சரியாக இருக்க, அதை அவன் கையிலிருந்து பறித்தவாறு, அவனுடைய குரலில் லயித்து கிறங்கி நின்ற தோழியை தரதரவென்று இழுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து நழுவினாள் மல்லிகா. தோழியின் இழுப்புக்கு ஈடுகொடுத்து சென்றவாறே அவசரமாக அவனைத் திரும்பிப் பார்த்த தேன்மொழியின் விழிகள் 'லவ் யூ சத்யா' என்று சொல்வது போலவே தோன்றியது அவனுக்கு.
'தேனு' மனதில் தேனாக இனித்தவளின் பெயரை உச்சரிக்கக்கூட இயலாமல் வறண்டிருந்த அவனுடைய இதழ்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ள, 'அந்த கேசட்ட இன்னும் கூட அவ பத்திரமா வெச்சிருப்பாளா? சச்ச... சான்ஸே இல்ல. அவ அதை அப்பவே டிஸ்போஸ் பண்ணியிருப்பா!' என அவனே ஒரு கேள்வியையும் கேட்டு தனக்குத்தானே ஒரு பதிலையும் சொல்லிக்கொண்டிருக்க, அறைக்குள்ளிருந்து டமால்... டுமீல் என எதுவோ உருளும் சத்தம் அவனை நிகழ்வுக்கு மீட்டுவந்தது.
பதறியடித்து அவன் உள்ளே சென்று பார்க்க, போதை இன்னும் கூட முழுவதும் இறங்காமல் தள்ளாடியபடி நான்கு ஐந்து எட்டுக்களில் அடையக்கூடிய குளியலறைக்குள் நுழைய பகீரத பிரயத்தனம் செய்துகொண்டிருந்தார் கருணாகரன் அங்கே இருந்த பொருட்களையெல்லாம் பந்தாடியவாறு..
ஒருவாறு அவரை பிடித்து உள்ளே செல்ல உதவியவன், அங்கேயே நின்றிருந்து முகம் கழுவி அவர் வெளியில் வரவும், தள்ளாட்டமும் சற்று குறைந்திருக்க, அறையை விட்டு வெளியில் வந்தான்.
சில நிமிடங்களில் அவரும் அங்கே வந்து இருக்கையில் அமர, எதுவும் பேசாமல் அங்கிருந்த சமையலறைக்குள் போய் இருவருக்குமான சூடான காஃபியை கலந்துவந்தான் பாலே இல்லாமல்.
தலையை கைகளில் தாங்கி பிடித்தபடி உட்கார்ந்திருந்தவரின் முகம் வீங்கி கண்கள் சிவந்து தடித்திருந்தன.
கையிலிருந்த காஃபி கோப்பையை அவரிடம் நீட்டவும், 'இது எப்பொழுதும் நடக்கும் விஷயம்தான்' என்பதைப் போல மௌனமாக அதை வாங்கி பருகத்தொடங்கினர் அவர்.
அக்காவுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஒரு 'சிவில் எஞ்சினியர்' என்று கேள்விப்பட்டதிலிருந்தே அவனை கையிலேயே பிடிக்க முடியவில்லை, அவ்வளவு பெருமை சத்யாவுக்கு. அதுவும் அவர் தாமரையை பெண் பார்க்க வந்த தினத்தில், அவருடைய உயரமும், நிறமும் ஆளுமையான தோற்றமும், மலர்ச்சியுடன் கூடிய முகத்தில் மிகவும் ஸ்டைலாக அவர் வைத்திருந்த மீசையும் அவனை அப்படியே சொக்கிப்போக வைத்துவிட்டது. இவர்தான் அக்காவுக்குக் கணவராக வரவேண்டுமென்று எல்லா கடவுள்களிடமும் மனு போட்டு மன்றாடி வேண்டிக்கொண்டான் சத்யா.
வீட்டிலிருக்கும் நேரத்தில் கூட அவர் சுணங்கி உட்கார்ந்து இதுவரை பார்த்ததில்லை அவன். எத்தகைய சவாலான பிரச்சனைகள் வந்தாலும் கூட துவண்டு சரியமாட்டார் மனிதர். ஏன் இப்படி இருக்கிறார்?
காலி கோப்பையை அவர் கீழே வைக்கும் வரை பொறுத்திருந்தவன், "என்ன ஆச்சு அத்தான்?" எனக்கேட்டான் சத்யா, அவர் சொல்லியே தீரவேண்டும் என்ற பிடிவாதமா அல்லது கட்டளையா என வரையறுக்க முடியாத ஒரு தொனியில்.
ஏற்கனவே, தாமரை இதை எப்படி எடுத்துக்கொள்வாள் என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்.
ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டமே அங்கீகரிக்கும் அளவுக்கு என்னதான் காலம் எங்கேயோ போய்க்கொண்டிருந்தாலும் கூட, இதுவரை அவர்கள் குடும்பத்துக்குள் காதல் திருமணமோ அல்லது கலப்பு திருமணமோ நிகழ்ந்ததே இல்லை. அவருடைய தமக்கையின் ஒரே மகளுக்குக் கூட தேடித் தேடி வரன் பார்த்து, சென்ற ஆண்டுதான் அவ்வளவு விமரிசையாகத் திருமணம் நடத்தி முடித்தனர். எனவே அவருடைய தமக்கையிடமோ அல்லது தம்பியிடமோ கூட இதைப்பற்றிப் பகிர இயலாது. சுலபமாகத் தீர்வுகாண ஒரு வாய்ப்பிருந்தாலும் கூட அவர்கள் இதை ஒரு கேலிக்கூத்தாக்கிவிடும் அபாயம் இருக்கிறது. அவருடைய அம்மா அப்பாவை பற்றிச் சொல்லவே வேண்டாம். தாமரையை மணந்த பிறகு அந்த அளவுக்குப் பட்டுவிட்டார் அவர்.
எனவே, சர்வ நிச்சயமாக இந்த விஷயத்தில் சத்யாவை தவிர வேறு யாருடைய உதவியையோ அல்லது ஆலோசனையையோ நாடமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், அன்று நேரில் பார்த்த அனைத்தும் சொல்லி, மன உளைச்சல் அனைத்தையும் மைத்துனனிடம் கொட்டித்தீர்த்துவிட்டார் கருணாகரன்.
சத்யா அதிர்ந்து ஸ்தம்பித்தது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே. விரைவிலேயே ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டான் அவன்.
"காதல் ஒண்ணும் தப்பு இல்ல அத்தான். ப்ளைண்டா எதிர்க்க வேண்டாம். நீங்க எதையும் தெரிஞ்சமாதிரி காட்டிக்காதீங்க. நானே ஹாசினியை கூப்பிட்டு பேசறேன். முடிஞ்சா அந்த பையனையும் நேர்ல மீட்பண்ணி பேசி பாக்கறேன். என் ஃப்ரெண்ட் மனோ இருக்கான் இல்ல, அவன் ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்சிலதான வேலை சொய்யறான். அவன் மூலமா அந்த பையனை பத்தி இன்சைட்-அவுட் விசாரிச்சுட்டு தென் நாம ஒரு முடிவுக்கு வரலாம். அது வரைக்கும் நீங்க டென்ஷன் ஆகாம ரிலாக்ஸ்டா இருங்க சரியா" என இதமாக அவன் சொல்லவும், அதற்கு தலையாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை அவருக்கு.
ஆனால் விஷயத்தை அவனிடம் பகிர்ந்துகொண்ட பிறகு மனதை அழுத்திய பாரம் கொஞ்சம் குறைந்துதான் போயிருந்தது.