Hi Friends,
Here is the second episode. Kindly share your valuable comments.
Episode-2
சாவித்ரியுடன் இணைந்து காலை உணவு வகைகளை மேசை மேல் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் தாமரை.
"பசங்க இன்னும் சாப்பிட வரலயா தாமர?" என்றவாறே இருக்கையில் வந்து அமர்ந்தவர், "பிரேக் ஃபாஸ்ட்க்கு என்ன செஞ்சிருக்க இன்னைக்கு" என்று கேட்டுக்கொண்டே ஒரு பாத்திரத்தை திறந்து பார்த்துவிட்டு, "ஐயோ, பூரியா?" என்று அலற, "ப்ச்... பூரி பசங்களுக்காக செய்ய சொன்னேன்ங்க. உங்களுக்கு ஆப்பம் இருக்கு. தொட்டுக்க ரெண்டுக்கும் காமனா குருமா" என்றவாறு அவருக்கு அவற்றை பரிமாறிய தாமரை, "இந்த பிள்ளைங்க ஏன் இன்னும் சாப்பிட வரலன்னு தெரியலையே" என்றார் சிறு சலிப்புடன்.
அன்று அவருடைய மாமனாரும் மாமியாரும் அங்கே வருவதாக இருக்க, அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துவைத்து அவர்களுடைய அறையை தயார் செய்ய வேண்டும். அவர்கள் வந்த பிறகு செய்ய இயலாது. சீக்கிரமாகக் காலை உணவை முடித்துக்கொண்டால் தேவலை என்றிருந்தது அவருக்கு. அதுதான் காரணம்.
அதற்குள்ளாகவே கையில் செல் போனும் காதில் ஹெட் செட்டுமாக மகள் அங்கே ஆஜராக, "ஹசி, சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் இதையெல்லாம் கழட்டி தூர வை" என சொல்லிக்கொண்டே அவளுக்கு பூரியை பரிமாறியவர், "இந்த பையன் ஏன் இன்னும் சாப்பிட வரல' என்று என தம்பியைக் குறிப்பிட்டு தனக்குத்தானே கேட்டுக்கொண்டு, "சத்யா" என்று குரல் கொடுக்க, "அவன் ஒரு பிசினெஸ் கால் பேசிட்டு இருக்கான்..மா முடிச்சிட்டு வருவான்” என கருணாகரன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அன்னைக்கு பிடிக்காத காரியத்தை செய்ய வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கையுடன், கையில் வைத்திருந்த கைப்பேசியை பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்தவாறே வந்து உட்கார்ந்தான் சந்தோஷ்.
அவனைப் பின் தொடர்ந்து வந்து அவனுக்கு அருகில் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்தான், சத்யா என அனைவராலும் அழைக்கப்படும் சத்யநாராயணன்.
முதல் காரியமாக மருமகனுடைய உச்சி முடியை கலைத்து விட்டவன், "அக்கா, ஒரு நாப்பது அம்பது பூரியாவது செஞ்சியா? இல்லனா சந்து ஒருத்தனுக்கே போறாது" என்று வேறு சொல்ல, இடதுகையால் கலைந்த தன் கேசத்தை சரிசெய்தவாறே, "மாம்ஸ்!" என்றான் சந்தோஷ் சிணுங்கலாக.
அவனை அடக்குவதுபோல், 'சீண்டலை ஆரம்பிச்சிட்டியா?' என்பதாக சத்யாவை கருணா ஒரு பார்வை பார்க்க, அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், "யக்கோவ், சாப்பிடும்போது செல் போன கையில எடுத்தா என்னவோ உலகமகா குத்தம்னு எங்களுக்கு ஒன் ஹவர் ட்யூஷன் எடுப்ப, இந்த பப்பிளிமாஸ் சைலண்டா ஹெட் போன் போட்டுட்டு கேம் விளையாடிட்டு இருக்கு, கொஞ்சமும் கண்டுக்க மாட்டேங்கற" என மருமகளையும் தமக்கையிடம் வகையாக மாட்டிவிட்டான் சத்யா.
அவன் இலக்கு மாறாமல், "அடியேய்... முதல்லயே சொன்னேன் இல்ல. நீயே லாக் பண்ணி வெக்கறியா இல்ல ஹெட் போன் ஒயரை கட் பண்ணவா?" என தாமரை மகளை எச்சரிக்க, வேறு வழி இல்லாமல் அதை கழற்றி மேசை மேல் வைத்துவிட்டு, ஹாசினி சத்யாவை ஒரு தீ பார்வை பார்க்க, "அக்கா இவ என்ன முறைக்கறா பாரு" என அதற்கும் அவன் பஞ்சாயத்து கூட்ட, தலையில் கை வைத்துக்கொண்டார் கருணாகரன்.
தாமரைக்கு சிரிப்பு வந்துவிட, "சத்யா... சேட்டை பண்ணாம சாப்பிடு" என அவனை அடக்கியவர், "குட்டிப்பா, நீ என்ன இன்னைக்கு டிப்டாப்பா டிரஸ் பண்ணிட்டு கிளம்பி வந்திருக்க" என மகனிடம் தன் கவனத்தை திருப்ப,
"மா... நான் அன்னைக்கே சொன்னேனே மறந்துட்டியா? இன்னைக்கு நம்ம அருணோட பர்த்டேம்மா. அவங்க வீட்டுல ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணியிருக்கான். மார்னிங் டு ஈவினிங் அங்கதான்" என அவன் சொல்ல, "ஸ்ஸ்... ஆமாம். கிஃப்ட் கூட வாங்கி வெச்ச இல்ல" என்றவர், "அவன் வீடு குரோம்பெட் இல்ல? எப்படி போகப்போற?" என அவர் கேட்டுவைக்க, தந்தையை நோக்கியவன், "பா... ஆபிஸ் போகும்போது குரோம்பெட் ஸ்டேஷன் கிட்ட ட்ராப் பண்றீங்களா. அங்க இருந்து வாக்கப்பிள்தான்" என்றான் சந்தோஷ்.
"இன்னைக்கு நான் மறைமலை நகர் சைட்டுக்கு போறேன் கண்ணா" என்றவர் சற்று யோசித்துவிட்டு, "சத்யா, ஒண்ணு பண்ணு, நீ இவனை குரோம்பெட்ல அருண் வீட்டுலயே ட்ராப் பண்ணிட்டு, நம்ம ஹாசினி பேர்ல ஒரு இடம் ரெஜிஸ்டர் பண்ணியிருக்கோம் இல்ல அதோட டாகுமெண்ட்ஸை வாங்கிட்டு அப்பறம் ஆபிஸ் போ போதும்" என அவர் மைத்துனனிடம் சொல்லி முடிக்க, முந்தைய தினம் இரு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது எக்குத்தப்பாக காலை ஊன்றியதில் லேசான சுளுக்கு ஏற்பட்டிருந்தது அவனுக்கு. வெளியில் அலைந்தால் வலி அதிகாமக்கூடும். இதையெல்லாம் அவரிடம் விளக்கி சாக்கு சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை. மேலும் அலுவலத்தில் பார்க்க வேண்டிய கணக்கு வழக்குகளும் கொஞ்சம் இருக்கவே, "அது எப்படி அத்தான், ஆபிஸ்ல நீங்களும் இல்ல, நானும் இல்லன்னா சரியா வராது" என அவன் வேறு விதமாக மறுக்க,
"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல. நம்ம மேனேஜரை பார்த்துக்க சொல்லிக்கலாம். இது நம்ம பர்சனல் ஒர்க் அதனால வேற யாரையும் விடவேண்டாம்னு பார்க்கறேன்" என்றார் அவர் ஒரே முடிவாக. அதற்குமேல் மறுத்துப் பேசாமல் அதை ஏற்றுக்கொண்டான் சத்யா.
***
மெல்லிய பனியன் துணியால் ஆன குல்லாவை அணிந்து அதன் பின் தலைக் கவசத்துக்குள் தலையைக் கொடுத்து, ஞாபகமாக மருமகனுடைய தலைக் கவசத்தையும் எடுத்து வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கின் மேல் வைத்துக்கொண்டு, ஒரே உதைப்பில் அதைக் கிளப்பிக்கொண்டு வீட்டு போர்ட்டிகோவில் வந்து நின்றான் சத்யா.
சரியாக அதே நேரம், கையில் ஒரு கிஃப்ட் பேக் சகிதம் வெளியில் வந்தான் சந்தோஷ். திருத்தமாக உடை அணிந்திருந்த அவன் பாங்கு, அவனுடைய உயரம், நிறம் அவனிடம் தெரிந்த 'ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி' தோற்றம் என அவனையே சில நொடிகள் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த தாய்மாமன் வாஞ்சையுடன். 'சந்தோஷ் அப்படியே அவங்க மாமா ஜாடை இல்ல' என ஒருவர் பாக்கி இல்லாமல் சொல்லும்பொழுது அப்படி ஒரு பெருமிதம் உண்டாகும் அவனுக்கு.
அதுதான், 'இவன் இன்னும் கல்யாணம் ஆகாம ஒண்டி கட்டையா நிக்கறானே' என அவனது அம்மா வாய் விட்டு புலம்பியும், அக்கா மனதிலுமாக வருந்தும்பொழுதும் கூட, "ப்ச்... நான் ஒண்ணும் ஒண்டிக்கட்டை இல்ல. எனக்குதான் என்னோட ஹாசினி குட்டியும், சந்து குட்டியும் இருக்காங்களே" என அவனை மனதார சொல்லவும் வைத்தது. பிள்ளைகள் காண்பிக்கும் மாசற்ற அன்பும் நெருக்கமும்தான் அவனை அந்த கூட்டிற்குள் இன்னமும் கட்டி வைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.
பலவாறான எண்ணத்துடன் அவன் நின்றிருக்க, தயக்க நடையுடன் மாமனை நெருங்கியவன், "மாம்ஸ், டூ வீலர்லயா போகப் போறோம்?” என்றான் சந்தோஷ் 'என்னத்த கண்ணையா' பாணியில் நீட்டி முழக்கி.
அவன் எங்கே வருகிறான் என்பது புரிய, "ஏன் தொற கார்லதான் ஏறுவீங்களோ? அடிங்க, இந்த வெய்யில் உடம்புல பட்டா உன்னோட மஞ்ச சிவப்பழகு ஒண்ணும் மங்கிப்போயிடாது, ஹெல்மெட்ட போட்டுட்டு பின்னாடி ஏறி உட்காருடா" என சத்யா நக்கலாக பதில் கொடுக்க, "இல்ல, எதுக்கும் அப்பாகிட்ட ஒரு வார்த்தை" என அவன் இழுக்கவும், "ஏண்டா, ஏன்? உடனே, பிள்ளை ஐஸ் கிரீம் மாதிரி கரைஞ்சி உருகி ஓடிடுவான் ரேஞ்சுக்கு, உங்கப்பா கார்லயே போ... இதுவே என் கட்டளை கட்டளையே சாசனம்னு டயலாக் விடணும். நானும் கட்டப்பா ரேஞ்சுக்கு 'சரிங்க அத்தான், சரிங்க அத்தான்'னு தலைய தலைய ஆட்டிட்டு காரை எடுக்கணும், அப்பறம் சப் ரெஜிஸ்ட்டார் ஆபிஸ் வாசல்ல பார்க்கிங் கிடைக்காம லோ... லோன்னு அலையனும். இதுதான உன்னோட பிளான். பேசாம உங்க அப்பாவையே கூட்டிட்டு போக சொல்லு. நான் போய் என் வேலைய மட்டும் பார்க்கறேன்" எனக் கடுப்படிக்க, மேற்கொண்டு வம்பை வளர்க்காமல் நல்ல பிள்ளையாக மாமனின் பின் புறம் போய் அமர்ந்தான் சந்தோஷ், 'இது வேற' என முணுமுணுத்தவாறே தலைக்கவசத்தை அணிந்துகொண்டு.
சில நிமிட பயணத்தில் சந்தோஷை அவனுடைய நண்பனின் வீட்டில் இறக்கி விட்டவன், "ஹெல்மெட்டை பத்திரமா எடுத்து உள்ள வச்சுக்கோ. அப்பா சீக்கிரம் வந்துட்டாங்கன்னா டிரைவரை அனுப்பி உன்னை பிக்கப் பண்ணிப்பாங்க, இல்லனா போன் அடி நான் வீட்டுக்குப் போகும்போது வந்து பிக்கப் பண்ணிக்கறேன்" என சத்யா சொல்லிக் கொண்டிருக்க, "ஹாய் சந்து! ஹாய் மாம்ஸ்!" என்றவாறு அவர்களை நோக்கி ஓடி வந்தான் அவனுடைய தோழன் அருண்,அவர்களுடைய வளர் இளம் பிராயத்துத் தோழர் தோழியர் சிலர் தொடர.
சந்தோஷ், அதற்குள் கீழே இறங்கி தன் தலைக் கவசத்தையும் கழற்றி இருக்க, ஃபிரன்ட் பௌச்சை திறந்து, வரும் வழியில் வாங்கியிருந்த சாக்லேட் அடங்கிய ஒரு உரையை எடுத்து அருணிடம் நீட்டியவாறு, "ஹாப்பி பர்த்டே சேம்ப்!" என அவனை வாழ்த்தினான் சத்யா.
"தேங்க் யூ மாம்ஸ்" என முகம் மலர அவன் அதை வாங்கிக்கொள்ள, "எப்படி இருக்கீங்க கைஸ்" என மற்றவர்களையும் நலம் விசாரித்து அதற்கான பதிலையும் பெற்றுக்கொண்டான் அவன், அடிக்கடி அந்த பட்டாளத்தை சந்தோஷின் பள்ளியிலும் சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு வரும்பொழுதும் சந்தித்ததால் ஏற்பட்டிருந்த நெருக்கம் காரணமாக.
அதன் தொடர்ச்சியாக உள்ளே வருமாறு அவனுக்கு விடப்பட்ட அழைப்பை நாசூக்காய் மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் சத்யா.
***
அடுத்து வருவது பங்குனி மாதம் என்பதாலும் அன்றுதான் அந்த மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதினாலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
எப்படியோ ஒரு இடத்தை கண்டுபிடித்து வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்திருந்தான் சத்யா. அங்கே இருந்த கும்பலைப் பார்த்து கண்ணைக் கட்டியது அவனுக்கு. அப்படிப்பட்ட கூட்டத்திலும் பரபரப்பிலும் கூட, கோழி போலத் தனது தலையை தூக்கி அவனைப் பார்த்துப் புன்னகைத்து கையை உயர்த்தினர் அங்கே பணியிலிருந்த பெண்மணி ஒருவர். அவரைப் பார்த்து பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு, காற்றில் ஒரு சதுரத்தை வரைந்து ஜாடை செய்துவிட்டு உட்கார ஒரு இருக்கை கூட கிடைக்காமல், அங்கே ஓரமாக அவன் போய் நிற்க, சில மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகே அவனுக்கு அழைப்பு வந்தது.
உள்ளே போய் சில பல கேள்விகளுக்குப் பதில் கொடுத்து, அடையாள அட்டைகளைக் காண்பித்து, பயோ மெட்ரிக் கருவியில் தன் கைரேகையைப் பதித்து, பின் ஹாசினியின் பெயரில் பதிவு செய்திருந்த இடத்திற்கான பத்திரத்தை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தான் சத்யா.
அதற்குள்ளாகவே வியர்த்து வழிந்து, கால் வலியோடு பசியும் வேறு சேர்ந்துகொண்டு அவனுடைய பொறுமை மொத்தமும் வறுமை நிலையை எட்டியிருந்தது.
அதே மனநிலையில் அவனது வாகனத்தை நிறுத்திவைத்திருந்த இடத்தை அடைந்தது, உயிருக்கு பயந்து என்று இல்லாமல், காவலர்களின் மாமூல் நடவடிக்கைகளுக்கு பயந்து, நம் நாட்டு சட்ட திட்டங்களை மனதிற்குள்ளேயே திட்டி தீர்த்தவாறு, குல்லாய் மற்றும் தலைக் கவசத்தை அணிந்துகொண்டு, வாகனத்தின் இருக்கையை தொட்டுப்பார்த்தவன், நல்லவேளையாக அது சூடேறி கொதிநிலைக்குப்போகாமல் இதமாய் பதமாய் இருக்கவும், ஏறி அமர்ந்து சாவியைத் திருகி வெகு நிதானமாகக் காலை ஊன்றி, வண்டியைக் கொஞ்சமாக வெளியில் எடுத்து, கவனமாக பின் புறம் திரும்பிப் பார்க்க, 'தொட்டால் பூ மலரும்' என்கிற ரீதியில் கொஞ்சமே கொஞ்சமாக பட்டும் படாமலும் அவனது மனதிற்கினிய புல்லட்டின் பின் புறமாக வந்து தட்டியது ஸ்விஃப்ட் டிசையர் ஒன்று.
வேறு வழி இல்லாமல் போராடி அவன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, அழுந்த ஊன்றியதால் மறுபடியும் பட்ட காலிலேயே பட்டது அவனுக்கு, 'மொளுக்' என்ற சத்தத்துடன்.
வலி உயிர் போக, ஆவேசம் வந்து சாட்சாத் 'கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி'யாகவே மாறியிருந்தான் சத்யநாராயணன்.