அத்தியாயம்-19
மூன்று தளங்களைக் கொண்டு வெகு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த கே.ஆர் லா அசோசியேட்ஸ் அலுவலகத்தின் வரவேற்பில் காத்திருப்போருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தான் சத்யா.
உள்ளே நுழைந்ததும் அங்கே பணியிலிருந்த பெண்ணிடம் அவன் கைப்பேசியில் படம்பிடித்துவைத்திருந்த வக்கீல் நோட்டிஸை காண்பித்து தகவல் சொல்ல, "ஓஹ்... பேமிலி இஷ்யூவா, கே.ஆர் சார் ஜூனியர் யாராவதுதான் அட்டென்ட் பண்ணுவாங்க. கூப்பிடுவாங்க, அதுவரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணுங்க" எனக் கொஞ்சும் குரலில் சொல்லவிட்டு அவள் பாட்டிற்கு தன் வேலையைத் தொடர, அரைமணிநேரம் ஆகியும் அவனுக்கு அழைப்பு வந்தபாடில்லை.
எரிச்சல்தான் மூண்டது சத்யாவுக்கு. அங்கே போடப்பட்டிருந்த இருக்கைகள் மொத்தமும் நிரம்பிவழிய, 'இங்க கூட இவ்வளவு கூட்டமடா யப்பா, ஊர் மொத்தம் வம்பும் வழக்குமாதான் இருக்கும்போலிருக்கு!' என்று எண்ணி மலைத்தவாறு தன் கைப்பேசியை குடைய, "மிஸ்டர் சத்யா, உங்கள கூப்பிடறாங்க! ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல, பெருமாள்னு ஒருத்தர் இருப்பாரு. போய் பாருங்க" என்று அந்த பெண் சொன்ன அடுத்த நிமிடம், 'ஷ்..அப்பாடா' என்கிற ஆசுவாசத்துடன் அங்கே சென்றான் சத்யா.
அங்கே வரிசையாகக் கணினிகளுடன் மேசைகள் போடப்பட்டிருக்க, ஆண்களும் பெண்களுமாகப் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர்.
'ப்ச்... நல்ல லாயரை பிடிச்சான். தனியா பிராக்டிஸ் பண்ற ஒருத்தரும் இவனுக்கு கிடைக்கல போலிருக்கு' என் கடுப்படித்துக்கொண்டே அங்கே இருந்த ஆபிஸ் அசிஸ்டன்ட்டிடம் "இங்க மிஸ்டர் பெருமாள்னு" என அவன் இழுக்க, அவரை சுட்டிக்காட்டினான் அவன்.
கே.ஆர் சார் ஜூனியர் என்று அவன் நினைத்த அந்த மனிதருக்கே ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும்.
அவருக்கு முன்னே போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தவன், தான் வந்த காரணத்தைச் சொல்ல, "நோட்டீஸ் எங்க" எனக் கேட்டார் அவர் நீட்டி முழக்கி.
தன் கைப்பேசியில் அதனைக் காண்பிக்க, "ஒரிஜினல் நோடீஸ ஏன் எடுத்தது வரல" எனகுறைபட்டுக்கொண்டே அதைப் பிடுங்கிப் படித்தவர், "மிஸ்ஸர்ஸ் ஹாசினி எங்க?" என அடுத்த கேள்வியைக் கேட்க, "இல்ல, அவங்க வரல" என்றான் சத்யா.
"ப்ச்... அவங்களுக்கு பதில் நீங்க எப்படி பேச முடியும்? ஆமாம் நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?"
அடுத்து கறாராக வந்து விழுந்த கேள்விக்கு, 'யப்பா, இங்கயே இவ்வளவு குறுக்குவிசாரணை செய்யறாங்களே, கோர்ட் கேஸுன்னு போனா... என்னல்லாம் கேட்பாங்க" என மனதில் எண்ணியவன், "நான் அவங்களோட மாமாதான். அவங்க வர மனநிலைல இல்ல. அவசரப்பட்டு ஒரு ரிலேஷன்ஷிப் முறிஞ்சுபோகக்கூடாதேன்னுதான், பேசிப்பார்க்கலாம்னு நானே வந்தேன்” என்றான் சத்யா சுற்றிவளைக்காமல்.
"ரொம்ப நல்லது, அப்பறம் பாருங்க எங்க ஃபெர்ம்ல அதிகமா டைவர்ஸ் கேஸெல்லாம் எடுக்கறதில்ல. ரொம்ப தெரிஞ்சவங்கன்னா மட்டும்தான். மத்தபடி ஒன்லி ப்ராப்பர்டி கேஸஸ்தான். இதுவே ஜீவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஜீவானந்தம் சார் சொன்னாரேன்னுதான் சார் எடுக்க சொல்லியிருக்காங்க" என அவர் சொன்னதும் அப்படி ஒரு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது சத்யாவுக்கு.