அத்தியாயம்-18
சில நிமிடங்களுக்குள் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்ட மகளைப் பார்க்கையில் 'எப்படி இதுபோல் சட்டெனக் கண்ணயர்ந்தாள் இவள்' என அதிசயமாக இருந்தது தாமரைக்கு. அவளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் வந்தார் அவர்
சத்யா அவனுடைய அறைக்குச் சென்றிருக்க, உட்கார்ந்தது உட்கார்ந்தபடி அப்படியே இருந்தார் கருணா. அவருக்கு அருகில் வந்து அமர்ந்தவர், "அவதான் அப்படி தையாதக்கான்னு குதிக்கறான்னா, நிதானமா யோசிக்காம நீங்களும் இப்படி உணர்ச்சிவசப்படறீங்களே ப்ச்" என ஆற்றாமையுடன் சொல்ல, "இப்ப என்ன சொல்ல வர தாமரை" என கேட்டார் கருணா கடுப்புடன்.
"அவ லவ் பன்றேன்னு உங்க கிட்ட நேருக்கு நேரா சொல்லக்கூட இல்ல, சாப்பிடாம சத்யாகிரகம் பண்ணான்னு, நான் சொன்ன எதையும் காதுல வாங்காம, அவசர அவசரமா அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சீங்க. இன்னைக்கு கண்ணீரும் கம்பலையுமா வந்து நின்ன உடனே, பொசுக்குன்னு போலீசுக்கு போறேன்னு கிளம்பறீங்க.
வேணும்னா வேணும் வேண்டாம்னா வேண்டாம்னு கை கழுவி விட்டுட்டு போக காதல், கல்யாணம் இதெல்லாம் விளையாட்டா போச்சா அப்பாவுக்கும் பொண்ணுக்கும்? இது என்ன ஒரே நாள்ல முடிஞ்சு போற சமாச்சாரமா உங்களுக்கு?
உங்க பொண்ணு ஒரு சரியான ஏடாகூடம் பிடிச்சவ! மாப்பிள்ளை அடிக்கற அளவுக்கு போயிருக்கார்னா, அந்த அளவுக்கு அவ என்ன செஞ்சுவெச்சான்னு அவங்கள கேட்டாதான தெரியும்" என தாமரை சொல்லிக்கொண்டே போக, "மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை, மண்ணாங்கட்டி மாப்பிளை, இதுல அவர் இவர்னு அவனுக்கு மரியாதை ஒரு கேடு" என முணுமுணுத்தவர்,
"அவளுக்கு என்ன தெரியும், அவ சின்ன பொண்ணு தாமர. நீ சொல்ற மாதிரி அப்படியே எடக்கா அவ ஏதாவது செஞ்சிருந்தாலும் பக்குவமா பேசி புரியவெச்சிருக்கணும். அது அவனால முடியலன்னா நம்ம கிட்டயாவது சொல்லியிருக்கணும். அப்பறம் நாமெல்லாம் எதுக்கு பெரியவங்கன்னு? எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி கையை நீட்டற அளவுக்கு போயிருப்பான் அவன். என் பொண்ணுக்காக ஏன்னு கேட்க நாதி இல்லன்னு நினைச்சுட்டானா?" என அவரை தொடர்ந்து பேசவிடாமல் கருணாகரன் படபடவென பொரிய, அவரை கூர்மையாக பார்த்தவர், "பொண்ணுங்களுக்கு நாதி இருக்கா நாதி இல்லையான்னு யோசிச்சுதான் கையை நீட்டுவாங்களா. எல்லாம் ஒரு ஃப்ளோல வரதுதான? இதுக்கு பேர்தான் ஆம்பள திமிறுங்கறது... வேற என்ன?" என்றார் குதர்க்கமாக.
எதிர்பாரா நேரத்தில் பளார் எனக் கன்னத்தில் அறை விழுந்தது போல, என்ன பேசுவதென்று புரியாமல் ஒரு நொடி அவர் தடுமாற, "உங்க மக மட்டும் சின்ன பாப்பான்னா, அப்ப நம்ம மாப்பிளை என்ன நூத்து கிழவனா? சில விஷயங்களைத்தான் பொதுவில் சொல்ல முடியும். சிலது சென்சிட்டிவான புருஷன் பெண்டாட்டி அந்தரங்கமா கூட இருக்கலாம். அதையெல்லாம் தூக்கிட்டு பெரியவங்க கிட்ட பஞ்சாயத்து வர முடியாது. இதெல்லாம் இன்னும் உங்களுக்கே புரியல" என அனாயாசமாகச் சொன்னவர், "என்ன தாமரை நீயே இப்படி பேசற" என அவர் இறங்கிய குரலில் கேட்கவும், " ஒரு பக்கம் வரதட்சணை கொடுமை அது இதுன்னு பெண்கள் மீதான வன்முறை நடந்துட்டே இருந்தாலும், இப்ப நடைமுறை சட்டம் பெண்களுக்கு சாதகமாத்தான் இருக்கு. ஒரு வகைல பார்த்தால் பெண்ணை பெத்தவங்க கை ஓங்கி இருக்கற காலம் இது. கட்டிக்க பெண் கிடைக்காம திண்டாடறதால பிள்ளையை பெத்தவங்க கொஞ்சம் பயந்து அடக்கித்தான் வாசிக்கறாங்க. சங்கரி கூட நம்ம பொண்ணுகிட்ட நேரடியா எந்த பிரச்சனைக்கும் வரதில்ல, அது தெரியுமா உங்களுக்கு. இவளும் அவங்ககிட்ட எதுவும் மரியாதைக் குறைவா நடத்துகற மாதிரி தெரியல, பின்னால வந்து புலம்பினாலும் எங்கிட்ட பேசறமாதிரி முகத்துல அடிச்சது போல அவங்ககிட்ட எதுவும் பேசறதும் இல்ல. இங்க ஒரு துரும்பை கூட அசைக்காதவ மூக்கால அழுதுட்டுன்னாலும் அங்க அவங்க சொல்ற வேலையெல்லாம் செஞ்சிட்டுதான் இருக்கா. மறைமுகமா பிரச்சனை இல்லாமலும் இல்ல. ஆனா பிரச்சனை இல்லாத குடும்பம்னு ஏதாவது இருக்கா சொல்லுங்க?" என்றவர், மாலை சங்கரி அங்கே வந்ததையும் அவர் மகளைப் பற்றிச் சொன்ன குற்றச்சாட்டுகளையும் சொல்லி முடித்தார் தாமரை. "இது வேறயா?" என நொந்துகொண்டார் கருணா.
"அதுக்கு அப்பறம் அங்க வேற ஏதோ பெருசா நடந்திருக்கு. அது என்னனு தெரியாம நாம போலீசுக்கு போறது தப்புங்க. ஒரு வேளை உப்புசப்பு இல்லாத பிரச்சனையா இருந்து, அவங்க நல்லபடியா சேர்ந்து குடும்பம் நடத்த வாய்ப்பிருந்தாலும் அது சிதைஞ்சு போயிடும்" என தாமரை முடிக்கவும், "இப்ப என்ன செய்யணும்ங்கற. நீங்க என் பெண்ணை அடிச்சு அவ மண்டைய உடைச்சாலும் நான் கண்டுக்க மாட்டேன். தயவு செஞ்சு அவளை ஏத்துக்கோங்கன்னு அவன் கிட்ட போய் கெஞ்ச சொல்றியா?" என அவர் எகிற, "ப்ச்... யார் உங்களை கெஞ்ச சொன்னா, என்ன நடந்ததுன்னு விசாரிக்கத்தான் சொல்றேன்" என அவர் பொறுமையாகவே விளக்க, "என்னால முடியாது, உனக்கு வேணும்னா நீ போய் விசாரி" என முடித்துக்கொண்டார் கருணாகரன்.
எப்படியோ ஒருவழியாகக் கணவரை சமாதானம் செய்து, அவரை காவல்நிலையம் வரை போக விடாமல் தடுத்து நிறுத்தியவர் அடுத்த நாள் விடிந்தும் விடியாமலும் தம்பியைக் கட்டி இழுத்துக்கொண்டு கௌசிக்கின் வீட்டிற்குச் செல்ல, 'உள்ளே வாருங்கள்' என்று கூட அழைக்கவில்லை, வந்து கதவைத் திறந்த சங்கரி.
வரவேற்பறையிலேயே உட்கார்ந்திருந்த சிவநேசன்தான் தலையை மட்டும் அசைத்துவைத்தார் 'வாருங்கள்' என்பதாக.
அவரும் வேறு எப்படி நடந்துகொள்வார் பாவம்? முந்தைய இரவு பதைபதைக்க அக்கறையுடன் அவர்கள் வீடு நோக்கி ஓடிவந்த மனிதரை இவர்களும் நல்ல விதத்தில் நடத்தவில்லைதானே?
யாரும் முகங்கொடுக்கவில்லை என்றாலும், வேறு வழியில்லை பேசித்தான் ஆகவேண்டும் என்கிற உறுதியில், "என்ன நடந்தது அண்ணி" என தாமரை தொடங்கியதுதான் தாமதம், "நல்ல குடிகார பொண்ண பெத்து எங்க தலைல கட்டினீங்க" என உச்சஸ்தாயியில் அவர் கத்தத்தொடங்க, ஸ்தம்பித்தே போனார் தாமரை.
தமக்கையிடம் அவர் பேசிய விதத்துக்கு அதுவும் ஹாசினியை பற்றி, வேறு ஒருவராக இருந்திருந்தால் அவரை அடித்தே இருப்பான் சத்யா. ஒருவாறாகத் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவன், "நீங்க என்ன சொல்றீங்கன்னு உங்களுக்கே புரியுதா?" என அவன் பற்களைக் கடித்துக்கொண்டு கேட்க,
"ஏன் புரியாம, நான் என்ன இல்லாததையா சொன்னேன். என்னவோ அவளோட பிரெண்டுன்னு ஒருத்தன் இருக்கானே அந்த தருணு, அவனோட பிறந்தநாள் பார்ட்டின்னு போனவ, நேரத்துக்கு வீடு வந்து சேரல. போன் பண்ணாலும் எடுக்கல. பாவம் எங்க பிள்ளைதான் ஹால்லயே உட்கார்ந்து காத்துட்டு கிடந்தான்.
ஒன்பது மணி இருக்கும் அந்த பொண்ணு பாலா இல்ல, அதுதான் அவளை கை தாங்கலா தள்ளிட்டு வந்துது. கார் சாவியை கௌசிக் கிட்ட கொடுத்துட்டு, ‘சொல்ல சொல்ல கேக்காம பார்ட்டில நல்லா குடிச்சிட்டா, அதனால நான்தான் டிரைவ் பண்ணிட்டு வந்தேன், பார்த்துக்கோங்க'ன்னு சொல்லி சோபாவுல உருட்டிவிட்டுட்டு போயிட்டே இருந்துது.
அக்கம்பக்கத்துல இருக்கறவங்க கண்ணுலயெல்லாம் இது படாமலா இருந்திருக்கும்? எங்க எல்லாருக்குமே அவமானமா போச்சு. வயசு பொண்ணு இருக்கற வீட்டுல தேவையில்லாத ரசாபாசம் வேணாம்னு கௌசித்தான் அவளை ரூம்குள்ள கூட்டிட்டு போயிட்டான். அதுக்கு பிறகு என்ன நடந்துதோ ஏது நடந்ததோ,, அவன் கை நீட்ற அளவுக்கு போயிருக்கான். அவளும் வெருட்டுனு கிளம்பி உங்க வீட்டுக்கு வந்துட்டா" என மூச்சுவிடாமல் சொல்லிமுடித்தார் அவர்.
'மனைவி பேசுவது அனைத்தும் உண்மைதான்' என்பதுபோல் சிவநேசன் மௌனம் சாதிக்க, அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை தாமரைக்கு. அவர்கள் அபாண்டமாகப் பழி சுமத்துவதுபோல் தோன்றவில்லை என்றாலும் அதை நம்ப இயலவில்லை சத்யாவால். ஏனென்றால், முந்தைய இரவு பதினோரு மணி அளவில் அவள் அங்கே வந்தபோது மது அருந்தியதற்கான எந்த ஒரு அறிகுறியும் அவளிடம் இல்லவேயில்லை.
அவர்களை பார்க்கவே விரும்பவில்லை என்பதுபோல் அவனுடைய அறையை விட்டு வெளியிலேயே வரவில்லை கௌசிக். ஹாசினியை நேருக்கு நேர் வைத்துக்கொண்டு பேசினால்தான் இதற்கொரு விடை கிடைக்கும் எனத் தோன்றியதால், மேற்கொண்டு ஏதும் பேசாமல் வீடு திரும்பினர் இருவரும்.
***
தன்னை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பிள்ளைகள் தவறான பாதையில் போய்விடக்கூடாதே என்பதில் மிகவும் கவனமாக இருப்பதால்தான் தொழில்முறை பார்ட்டிகளில் கூட மது அருந்தமாட்டார் கருணா. சத்யாவை பற்றிச் சொல்லவே வேண்டாம், அப்படி ஒரு பழக்கமே அவனுக்குக்கிடையாது.
பிள்ளைகளும் அதற்கேற்றாற்போல் கவனமாக இருப்பார்கள். ஹாசினி சமயத்தில் விவரமில்லாமல் நடந்துகொண்டாலும் கூட இந்த அளவுக்கெல்லாம் போகும் துணிவு அவளுக்கு ஒருநாளும் வந்ததில்லை. இதையெல்லாம் செய்யக்கூடாது தவறு என்கிற கொள்கை கோட்பாடெல்லாம் இல்லை அவளுக்கு. குடும்ப பின்புலம் அப்படி. அப்பா தாத்தா தாய்மாமா என இயல்பாகவே ஒரு அச்சம் அவளுக்குள்ளே உண்டு அவ்வளவுதான்.
மகள் மீது இப்படி ஒரு பழியை அவர்கள் சுமத்தியிருக்க, "அவங்க நம்ம பொண்ணை பத்தி இந்த அளவுக்கு கேவலமா பேசறத கேட்டுட்டு இப்படி வாயை மூடிட்டு திரும்பி வரத்தான் ரெண்டுபேரும் அங்க போனீங்களா. நான் மட்டும் அங்க வந்திருந்தா அவங்க எல்லாரையும் ஒரு வழி செஞ்சிருப்பேன்" என கருணா சீற, அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது தாமரைக்கு.
ஹாசினியிடம் அது பற்றி கேட்டால், "நான் பார்ட்டிக்கு போனது உண்மைதான். ஆனா ட்ரிங்க் பண்ணலாம் இல்ல. திடீர்னு எனக்கு கொஞ்சம் தலை சுத்தலா இருந்துது. அதனால பாலா காரை ட்ரைவ் பண்ணிட்டு வந்து என்னை வீட்டுல விட்டுட்டு போனா, அவ்வளவுதான். ட்ரவ்சியா இருந்ததால, அவங்க என்ன பேசினாங்கன்னு நான் சரியா கவனிக்கல. அதுதான் தப்பா போச்சு.
அவ, நான் ட்ரிங்க் பண்ணதா சொன்னான்னு கௌசிக் சொல்றான். நான் இல்லன்னு சொன்னா அவன் நம்பவே மாட்டேங்கறான். நான் பிரெண்ட்ஸ் கூட வெளியில போறது, பார்ட்டி அட்டென்ட் பண்றது இதெல்லாம் கௌசிக்கும் சரி, அவங்க அம்மா அப்பாவுக்கும் சரி கொஞ்சம் கூட பிடிக்கல. அதை தடுக்கத்தான் இப்படி என் மேல வீண் பழி சுமத்தறாங்க. நான் என்ன புதுசாவா இதையெல்லாம் செய்யறேன். என் லைஃப் ஸ்டைல் பத்தியெல்லாம் நல்லா தெரிஞ்சுதான அவன் என்னை லவ் பண்ணன், கல்யாணமும் செஞ்சுட்டான். என்னை இப்படி கண்ட்ரோல் பண்ண மாட்டான்னு நம்பித்தான நானும் அவனை கல்யாணம் பண்ணிட்டேன். அம்மா சொல்றாங்க ஆயா சொல்றாங்கன்னு இப்ப இப்படி தலை கீழ மாறிப்போனா, என்னால எப்படி டாலரேட் பண்ணிக்க முடியும் சொல்லு. அதை கேட்க போய்தான் சண்டை பெருசாயிடுச்சு. என்னை அடிச்சிட்டான். அதை விட பெரிய இன்சல்ட், அவன் நான் சொன்னத கொஞ்சம் கூட நம்பலை. எனக்கு அவன் வேண்டவே வேண்டாம்"என ஒரே பிடியில் நின்றாள்.
அன்றே பாலாவை வீட்டிற்கு வரச்சொல்லி, அம்மாவை வைத்துக்கொண்டே அவளிடம் நேருக்கு நேராக இதைப் பற்றிக் கேட்டதற்கு, "நான் அப்படி எதுவம் சொல்லவே இல்லை, கௌசிக் ஏன் இப்படி என்னை வெச்சு பிளே பண்றார்னு புரியல. என்னால சண்டை வேணாம். வா நேர்ல போய் அவர்கிட்ட பேசலாம்" என பாலா சத்தியம் செய்யாத குறையாகக் கெஞ்ச, அசைந்தே கொடுக்கவில்லை ஹாசினி. அதற்குமேல் எதையும் பேசி நிரூபணம் செய்யவும் அவள் தயாராக இல்லை. புகுந்த வீட்டிற்குத் திரும்பிப் போகும் எண்ணமும் அவளுக்கு இல்லை.
அவளாக தேடி வந்து பேசவேண்டும் என்பதில் கௌசிக் உறுதியாக இருக்க, அவனும் அவளைக் கண்டுகொள்ளவில்லை.
மருமகன் வந்து மகளிடம் மன்னிப்புக்கேட்டு அவளை கூப்பிட்டால், பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனக் கருணாகரன் விட்டேற்றியாக இருக்க, அவரும் இதை சரிசெய்யத் தயாராக இல்லை. இது தவறான நடவடிக்கை, எதுவாக இருந்தாலும் நேரில் பேசித்தீர்க்கவேண்டும் என தாமரையும் சத்யாவும் படித்துப் படித்து சொன்ன வார்த்தைகள் எதுவும் தந்தை மகள் இருவரின் செவிகளுக்குள்ளும் ஏறவே இல்லை.
இப்படியே ஒரு மாதம் கடந்திருக்க, 'எங்கே போய்விடப்போகிறான். என்றாக இருந்தாலும் தங்களைத் தேடி வந்துதானே ஆகவேண்டும்’ என அவர்கள் அலட்சியமாக எதிர்பார்த்ததுபோல் ஹாசினியைத்தேடி கௌசிக் நேரில் வரவில்லை, ஆனால் அவளை தன்னுடன் வந்து வாழச்சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தான். இது சம்பந்தமாக ஏதாவது பேசவேண்டும் என்றால் அவனுடைய வழக்கறிஞரை வந்து சந்திக்குமாறு அந்த நோடீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் கொதித்துப்போய், விவாகரத்து கோரி பதில் நோட்டீஸ் அனுப்பும் முடிவுக்கு ஹாசினி வந்திருக்க, அதற்கு கருணாகரனும் ஒத்து ஊத, ஏதாவது நன்மை செய்ய இயலுமா என்ற ஆதங்கத்தில், அப்பா மகள் இருவருக்கும் தெரியாமல், கௌசிக் நியமித்திருக்கும் வழக்குரைஞரைச் சந்திக்க கிளம்பினான் சத்யா 'அங்கே எந்த பூதம் காத்திருக்கிறதோ?' என்கிற ஆயாசத்துடன். ஆனால் அங்கே காத்திருந்தது பூதம் இல்லை. ஒரு அழகான தேவதை. அந்த தேவதை வேறு யாருமில்லை,அன்று அவனுடைய விரிசல் விட்ட கால் எலும்பு ஒன்றுகூட அவனை மருத்துவமனை அழைத்துப்போய் கட்டுப்போட்டு பத்திரமாக வீட்டிற்கு அழைத்துவந்த அதே சக்திதான்!
இன்று விரிசல் விட்டுப்போயிருக்கும் ஹாசினி - கௌசிக்கின் வாழ்க்கை ஒன்றுகூட இவள் சத்யாவுக்கு உதவியாக இருப்பாளா?
பார்ப்போம்...
****************