இதழ்-8
பகலவனைக் கண்டு மலருமாம் தாமரை!
வெண் மதியைக் கண்டு பூக்குமாம் ஆம்பலும்!
மின்னல் வெட்டும் ஒளியில் விரியுமாம் தாழையுமே!
நீயே என் பகலவன்!
நீயே என் முழு மதியும்!
மின்னல் போல என் வாழ்வில் தோன்றி மறைந்தவனும் நீயேதான்!
உன்னைக் கண்டு மலராமல்...
தொட்டால் சிணுங்கியாய்...
என்னுள்ளே நானே சுருங்கிப்போவதால்...
பூவும் நானும் வேறுதான்!
மிக மும்முரமாக அவனது மடிக்கணினியில் ஆழ்ந்திருந்த தீபனின் கைப்பேசி ஒளிர்ந்து, அதில் ஏதோ அழைப்பு வருவதை அவனுக்கு உணர்த்த, அது யார் என்பதைக் கூட பார்க்காமல் அந்த அழைப்பை ஏற்றவன், "சொல்லுங்க மேம்!" என்றான் எதிர் முனையில் இருப்பது பாரதிதான் என்ற முடிவுடன்.
அவன் பதில் கொடுத்த வேகத்தை உணர்ந்து, "ஸோ... என்னோட காலை நீ எக்ஸ்பெக்ட் பண்ணிட்டுதான் இருந்த ரைட்!" எனக் கொஞ்சம் காரமாகக் கேட்டவர், "எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டுதான் ஹாஸ்பிடலுக்கே வந்திருக்க!
அவ்வளவு அவசியமா உன் ஸ்டாஃபோட அப்பாவை நீ பார்க்க வந்திருக்கேன்னு சொன்ன போதே நான் யோசிச்சேன்.
ஸோ... நீ அங்க வந்தது வசுந்தராவ பார்க்கத்தான் இல்ல?
நீ லீக் பண்ணியிருக்கும் வீடியோ அவளோட போன்ல இருந்து எடுத்ததுதானே?" எனக் கேள்விகளைத் தொடுத்துக்கொண்டே போனார் பாரதி.
"மே....ம்! சமயத்துல நீங்க கூட உணர்ச்சிவசப்பட்டு போயிடறீங்க! இன்னைக்கு பீபீ மாத்திரை எடுக்கலையா?" என அவரது பதட்டத்தைச் சுட்டிக்காட்டியவன், "இதெல்லாம் போன்லயே பேச முடியாது இல்ல? இந்த பாதி ராத்திரில வேண்டாம்; நாளைக்கு நேரில் வந்து விளக்கமா சொல்றேன்!
ப்ளீஸ் பீபீ மாத்திரை போட்டுட்டு தூங்குங்க!" என்றான் தீபன் நிதானமாக.
"நேரில் வா; உனக்கு இருக்கு" என்ற மிரட்டலுடன் அந்த அழைப்பைத் துண்டித்தார் அவர்.
அவரது மிரட்டலில் தொனித்த உரிமைத்தன்மையில் முகத்தில் மலர்ந்த புன்னகையுடனேயே மறுபடியும் மடிக்கணினிக்குள் புகுந்துகொண்டான் தீபன்.
***
அடுத்த நாள், தலையில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக, கால அவகாசம் பெற்று பள்ளிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாள் வசுந்தரா.
தலைமை ஆசிரியர் அறையில் அப்பொழுது காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்க, பள்ளிக்கூடமே வெகு பரபரப்பாக இருந்தது.