இதழ்-9
மேலே அமைதியைப் போர்த்தி...
உள்ளுக்குள்ளே கனன்றுகொண்டிருக்கும் எரிமலை நான்.
எந்த நொடிப்பொழுதும் வெடித்துச் சிதறுவேன் என்றறிந்தும்...
என்னருகே மலர்ந்து நின்றால் மலர்களும் தீப்பற்றும் என்றறிந்தும்...
தீக்குள் விரலை வைக்க நீ துணிவதால்...
பூவும் நீயும் வேறுதான்!
சில தினங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் மாலை நேரம் அவனுடைய அறையில் பெட்டியில் அவனுடைய உடைகளை அடுக்கியவாறு, அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த தீபன், அவனுக்கு காஃபியை எடுத்துவந்த அருணாவிடம், "ம்மா! என்னோட பாஸ்ப்போர்ட்ட பார்த்தீங்களா! எங்கேயோ மிஸ்பிளேஸ் ஆகியிருக்கு!" எனப் படபடக்க,
"என்னடா தீபா என்னை இப்படி பதைபதைக்க வெக்கற! உன் செர்டிபிகேட்ஸ் இருக்கும் பைல் குள்ளத்தானே வெச்சிருப்ப; தேடிப்பாரு" என சொல்லிக்கொண்டே முக்கிய ஆவணங்களை வைக்கும் அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்து அவனிடம் நீட்டினார் அவனுடைய அம்மா அருணா.
கைப்பேசியில் மணியைப் பார்த்துக்கொண்டே, அவன் அந்த கோப்பின் பக்கங்களைத் திருப்ப, அவனது கண்ணில் பட்டது அந்த அழகிய வாழ்த்து அட்டை!
புசு புசுவென 'டெட்டி பியர்' ஒன்று 'ஹாப்பி பர்த்டே' என எழுதப்பட்ட கண்ணாடியால் செய்த அழகிய இதயம் ஒன்றைக் கையில் வைத்திருப்பதுபோல் படம் போடப்பட்டிருக்க, அதன் கீழே குண்டு குண்டாக அழகிய கையெழுத்தில், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்; அன்புடன் சரிகா & மித்ரா’ என எழுதப்பட்டிருந்த அந்த வாழ்த்து அட்டையிலிருந்து அவனது கண்களைப் பிரிக்க இயலாமல் தவித்தவன், நேரம் ஆவதை உணர்ந்து அதை மூடி வைத்தான் தீபன்.
அதற்குள் அவனுடைய அப்பா அரங்கநாதன், "தீபா பிளைட் டிக்கெட் கூடவே அதை வெச்சிருக்க பாரு!
ஆட்டை தோளிலேயே போட்டுட்டு தேடின கதைதான் போ!" என்றவாறு அவனுடைய கடவுச்சீட்டு, விமான பயணச்சீட்டு அனைத்தையும் கொண்டுவந்து அவனிடம் கொடுக்க, “தேங்க் காட்!" என்றவாறு அதனை வாங்கி அவனது மடிக்கணினியை வைக்கும் பைக்குள் அதனை வைத்துப் பத்திரப்படுத்தினான் தீபன்!
"கண்ணா! குட்டிம்மாவ பத்திரமா கூட்டிட்டு வாப்பா! அவளுக்கு அஞ்சாம் மாசம் வேற! நீங்க இங்க வந்து சேரும் வரைக்கும் எனக்குத் தூக்கமே வராது! சாது குட்டிக்கு வேற ரொம்ப நேரம் ட்ராவல் பண்ணி பழக்கமில்லை!" என அருணா மகனிடம் கெஞ்சலாகச் சொல்ல, "ம்மா! பேசாம நீங்களும் அப்பாவும் அங்கேயே போய் இருக்கலாம் இல்ல! சரிகாவுக்கும் தேவை இல்லாத அலைச்சல் இருக்காது!" என அவன் அங்கலாய்க்க,
"ப்ச்! எனக்கு அந்த ஊர் குளிர் செட் ஆகலேயே! சாது குட்டி பிறந்த போது டெலிவரிக்காக அங்கே போய் இருந்த போதே ரொம்ப கஷ்டமா போச்சு! அப்பாவுக்கும் அங்கே செட் ஆகல!
பொண்டாட்டியையும் பிள்ளையையும் பிரிஞ்சிருக்க ஒத்துக்கிட்டு மாப்பிள்ளையே அனுப்பறாரு;
நீ என்னடான்னா இவ்வளவு பேச்சு பேசற!" என அவர் மகனிடம் சண்டைக்குக் கிளம்ப,
இரு கைகளையும் தூக்கி, "தாயே ஆளை விடுங்க! உங்க மா