நிலமங்கை-4
நினைவுகளில்...
தாமோதரன், பெங்களூரு வந்து இரண்டு தினங்கள் கடந்திருந்தன. காலை முதல் நெட்டித் தள்ளிய வேலைகள் அனைத்தும் ஒரு வழியாக முடிவுக்கு வரவும், இருக்கையிலிருந்து எழுந்து உடலை முறுக்கி நெட்டி முறித்தவன் தன் மடிக்கணினி பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, எதிர்பட்டவர்களையெல்லாம் நோக்கி சிறு புன்னகையை படரவிட்டவாறு நேராக வந்து மின்தூக்கியில் நுழைந்தான்.
ஓட்டமும் நடையுமாக அவனை பின் தொடர்ந்து வந்து, ஒரு நொடியில் அவனை முந்திக்கொண்டு உள்ளே நுழைந்து, தாமோதரனை உரசியும் உரசாமலும் நின்று, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் ஒரு வஞ்சிக்கொடி.
அலுவலகம் என்கிற காரணத்தினால், அவர்களுடைய 'டிரஸ்-கோட்'க்கு உட்பட்டு வேறு வழி இல்லாமல் 'ஜீன்ஸ் - ஷார்ட் டாப்'தான் அணிந்திருந்தாள். ஆனால் இரவை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் கூட கண்களைப் பறிக்கும் அளவுக்கு அவளுடைய முகத்தில் மிகையாகத் தெரிந்த ஒப்பனையும், உதட்டுச் சாயமும், மூச்சு முட்டும் அளவுக்கு அவளிடமிருந்து கிளம்பிய 'சென்ட்'டின் மணமும் அப்பொழுதுதான் கொஞ்சம் அதிக சிரத்தையெடுத்து அவள் தன்னை அழகுபடுத்திக்கொண்டிருக்கிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்ல, பதிலுக்கு நாகரிகம் கருதிய ஒரு செயற்கை புன்னகையை அவன் சிந்தவும், அதையே தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டவள், "லாஸ்ட் வீக் எண்ட் பார்ட்டிக்கு நீங்க வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன் மிஸ்டர் தாமோதர்! பட் உங்க நேடிவ்க்கு போயிட்டிங்களாமே! சந்தோஷ் சொன்னான்" என்று கொஞ்சி கொஞ்சி பேசினாள் அந்த பைங்கிளி.
அதற்கும் கூட ஒரு புன்னகையையே அவன் பதிலாக கொடுக்கவே, தலைதூக்கிய எரிச்சலை வெளிக்காண்பிக்காமல் இன்னும் கொஞ்சம் புன்னகையின் நீளத்தை கூட்டியவள், "இப்ப லாங் வீக் எண்ட் வருதில்ல. ஸோ... எங்க டீம்ல எல்லாரும் கோவா ட்ரிப் பிளான் பண்ணியிருக்கோம். நீங்களும் ஜாயின் பண்ணிக்கறீங்களா?" என குழையவும் தரை தளம் வந்துசேரவும் சரியாக இருக்க, மின்தூக்கியிலிருந்து வெளியேறியவாறே, அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன், "வில் ட்ரை மிஸ்..." என்றவாறு அவளுடைய பெயரை மறந்தவன் போல அந்த பெண்ணின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு, "மமதி" என்று முடித்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து அகன்றுவிட, கொதிநிலைக்கே போனாள் அவள்.
அவனுடைய அலட்சியம் தந்த ஆத்திரம் மேலோங்க, "வாட் எ * பார்க்க இப்படி இருக்கும்போதே இவனுக்கெல்லாம் இந்த திமிரு. இன்னும் நல்ல ஃபேரா மட்டும் இருந்தான்னா இவனையெல்லாம் கையிலேயே பிடிக்க முடியாது. ஆளும் இவனும். சரியான காட்டான்" என முணுமுணுக்க, அதற்குள்ளாகவே சில அடிகள் அவளைக் கடந்து முன்னேறியிருந்தவன், ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த திரும்பிப் பார்க்கவும் அவள் எதையோ முணுமுணுப்பது புரிந்தது. ஆனால் அது என்னவென்றெல்லாம் அவன் செவிகளுக்கு எட்டவில்லையென்றாலும் அகத்திலிருந்ததை அவளுடைய முகம் அவனுக்குக் காண்பித்துக் கொடுக்க, இதெல்லாம் அவனுக்கொன்றும் புதிதில்லை என்பதனால் ஒரு நக்கல் சிரிப்பு தானாக அவன் முகத்தில் படரவும் அதை உணர்ந்தவளின் முகம் அப்பட்டமாக பயத்தை தத்தெடுத்தது.
அது அவனுடைய மனதிற்கு அப்படி ஒரு உவகையைக் கொடுக்க, வேகமாக வாகன நிறுத்தத்தை நோக்கிச் சென்றவன், தலை கவசத்தை அணிந்தபின் தன் இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு அவனுடைய இருப்பிடம் நோக்கி அதைச் செலுத்தினான் தாமோதரன்.
*
பதினைந்து நிமிட பயணத்தில் அவனுடைய 'பிளாட்'டுக்கு வந்தான் அவன். தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கும்படி பார்த்துத் பார்த்து தேர்ந்தெடுத்திருந்தான் அந்த 'பிளாட்'டை. வாடகை சற்று அதிகம்தான் என்றாலும் அவன் வாங்கும் ஆறு இலக்க சம்பளத்துக்கு அது ஒன்றும் அதிகமில்லை.
நிலபுலன்கள், வீடு, பசு எருமை என நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் என குடும்ப சொத்துக்கும் ஒன்றும் குறைவில்லை. வாலாஜாபாத்தில் முக்கிய பகுதியில் அவர்களுக்குச் சொந்தமாக 'ஹார்டவெர்' கடை ஒன்று வேறு இருக்கிறது. அதில்லாமல் விவசாயமும் ஓரளவுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறது.
உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவன் இப்படி வேலைக்கு போய் சம்பாதித்துதான் ஆகவேண்டும் என்று ஒன்றுமில்லை. உள்ளதை நல்லபடியாக கட்டிக் காப்பாற்றினாலே போதும். ஆனாலும் அவனுடைய அதீத விருப்பத்தில் கணினித் துறையை தேர்ந்தெடுத்து, பொறியியலில் முதுகலை வரையிலும் படித்தான்.
'கேம்பஸ் செலெக்க்ஷனில்' வேலையும் கிடைத்துவிட, பெங்களூரு வந்துவிட்டான்.
சாப்பாடு விஷயத்தில் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவே மாட்டான் அவன். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சத்துள்ளதாகவும் வாய்க்கு வக்கணையாகவும் இருக்கவேண்டும் அவனுக்கு.
வேலை நாட்களில் காலை மதியம் இரு வேளையும் உணவை அலுவலக உணவகத்திலேயே முடித்துக்கொண்டு, எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, இரவு உணவை மட்டும் வீட்டிற்கு வந்து தானே தயாரித்துக் கொள்வான். எனவே வீட்டை பராமரிக்க மட்டுமே ஆள் போட்டிருந்தான் தாமு.
அன்றும் அதுபோல் உள்ளே நுழைந்து, தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவன் நேராக சமையலறை நோக்கித்தான் போனான்.
ஒரு அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டவன் அதில் ஆம்லெட் தயாரிக்க, மற்றொன்றில் மணிமணியாக இருக்கும் பொன்னி அரிசியை ஒரு பாத்திரத்திலிட்டு அதைக் களைந்து வைத்தான்.
ஊரில் அவர்களுடைய நிலத்தில் விளைவித்த நெல்லை பக்குவமாய் புழுக்கி மில்லுக்கு அனுப்பி, பின் அதைச் சுத்தம் செய்து என ஒவ்வொரு கட்டத்திலும் பார்த்துப் பார்த்து பதப்படுத்தப்படுத்திய அரிசியை, வேண்டாம் என்றாலும் கேட்காமல், அவன் ஒருவனுக்குத்தான் என்பதால் சிறு மூட்டையாகக் கட்டி, ஊரிலிருந்து அவனுடைய காரை எடுத்துவரும் சமயங்களில் திணித்து அனுப்புவார் கிட்டி.
கூடவே காரக்குழம்பு அல்லது மீன் குழம்பு, பருப்புப் பொடி, பூண்டு பொடி, வடகம் எனப் பாட்டியும் அம்மாவுமாகச் செய்து நிரப்பி அனுப்புவார்கள்.
அம்மா பாட்டி என இருவரின் நச்சரிப்புக்கும் பயந்து மாதத்தில் ஒரு வார இறுதியை மட்டுமே ஊரில் செலவிடுவான். மற்றபடி மீத விடுமுறைகளெல்லாம் 'வீக் எண்ட் ட்ரிப்ஸ்’ அல்லது ‘பார்ட்டி’ என மதுவின் போதையுடன் இனிதே முற்றுபெறும்.
தான் உண்டு தங்கள் வேலை உண்டு என்கிற வகை மக்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்தாலும், இதற்குத்தான் வாழ்க்கையே என்கிற ரீதியில், களியாட்டம் ஆடித்தீர்க்கும், தாமுவையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமே உண்டு அங்கே.
மற்ற விஷயங்களில்தான் அப்படியே தவிர பெண்களைப் பொறுத்தவரை 'ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும்... பூசாத மாதிரியும் இருக்கணும்' என்கிற ரீதியில் சகஜமாக நெருங்கிப் பழகுவதுபோல் காட்டிக்கொண்டாலும் சற்று தள்ளிதான் இருப்பான்.
காரணம், சற்று முன் அந்த மமதி சொல்லிவிட்டுச் சென்றதுபோல் அவனுடைய இந்த வட்டத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்களில் எண்ணப் போக்கு அவனைப் பொறுத்தவரையில் அப்படிதான் இருக்கும்.
அவள் சொன்னதைப்போலப் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் மோசமான தோற்றதிலெல்லாம் இருக்கமாட்டான் அவன்.
அளவான உயரம், இவர்களைப் போன்றோரின் வாயை அடைக்கவென, உடற்பயிற்சி செய்து கச்சிதமாக வைத்திருக்கும் உடல்வாகு, இயற்கையாகவே அமைந்திருக்கும் களையான முகம் எனச் சராசரிக்கும் சற்று அதிகமாகவே நன்றாகத்தான் இருப்பான்.
ஒரே ஒரு குறை என்றால் அது, பலருடைய தாழ்வுமனப்பான்மைக்கு முக்கிய காரணமாக விளங்கும், நம் சமூகத்தில் மக்கள் மனதில் வேரூன்றிப் போயிருக்கும் நிற வெறிக்குச் சற்றும் பொருந்தாமல் இருக்கும், தொட்டு மையிடும் அளவுக்குக் கருமை நிறம் அவன்.
ஊரில் இருக்கும் அரசுப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்துக்கொண்டிருந்தவன் நாமக்கல் விடுதியில் ஆங்கிலவழிக் கல்வியில் போய்ச் சேர்ந்தபொழுது தன் தோற்றம் மற்றும் ஆங்கில மொழி அறிவை குறித்து உண்டான தாழ்வுமனப்பான்மையை மிக மிகப் போராடி அவன் வெற்றி கொண்டான் என்றுதான் சொல்லவேண்டும்.
திக்கல் திணறலின்றி, வெகு சளரமாக உரையாடும் அளவுக்கு தன் ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொண்டதுடன், தன்னை விட மேன்மையாக அவன் நினைத்தவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிப் படிப்பிலும் விளையாட்டிலும் முதல் இடத்தில் வந்து, அந்த இடத்தை அப்படியே தக்கவைத்துக்கொண்டான் அவன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை.
அலுவலகத்திலும் கூட அந்த முதன்மைத்தன்மை என்பது அப்படியே தொடர்கிறது. 'தாமுன்னா ஜீனியஸ்' என்கிற பார்வைதான் அனைவருக்கும் அவனிடம்.
உடை, கைக்கடிகாரம், காலணி, அவனுடைய கருமை நிறத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாக டால் அடிக்கும் பிளாட்டினம் செயின், அவன் வைத்திருக்கும் பைக்கிலிருந்து கார் வரைக்கும் ஒவ்வொன்றும் அவனுடைய செல்வச்செழிப்பைப் பட்டவர்த்தனமாக வெளிக்காண்பிக்க, அனைத்தையும் கடத்த அவனுடைய 'ஜீனியஸ்' அந்தஸ்து, அவனுக்காகப் பிரகாசமாகக் காத்திருக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் எனப் பல பெண்கள் அவனைச் சுற்றி வரக் காரணமாக அமைந்தன.
அதை நன்றாகவே உணர்ந்தவனாக இருப்பதால், இப்படிப் பட்ட பெண்களைக் கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே தள்ளிதான் நிறுத்துவான் அவன். இவர்களைப் போன்றோரிடம் எந்த வித நாட்டமும் இல்லை ஈடுபாடும் இல்லை அவனுக்கு.
திருமணம் என்கிற விஷயத்தைப் பொருத்தமட்டும் சராசரி இந்திய ஆண்மகன்களுக்குள் வேரூன்றிப் போன அடிப்படை எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகமாகவே உண்டு அவனிடம்.
முதலாவதாக, அவனுக்கு அருகில் நிற்கும்பொழுது, நம் ஆட்கள் போகிற போக்கில் வழக்கமாகச் சொல்லிவிட்டுப் போவது போல், 'பொண்ணுக்கு பக்கத்துல நிக்கும்போது நம்ம தாமு கொஞ்சம் சுமார்தான்/மட்டுதான்' போன்ற வார்த்தைகள் வரவே கூடாது. எனவே அவனை ஒற்ற நிறத்தில்தான் இருக்கவேண்டும்.
வசதி வாய்ப்பில் அவர்களுக்கு இணையாகவோ அல்லது கூடவோ இருக்கவே கூடாது. படிப்பில் கூட தன்னை விடச் சற்று குறைவாகத்தான் இருக்கவேண்டும்.
அம்மா அப்பா பாட்டி என அனைவரையும் அனுசரித்துப்போகும் விதமாகவும், அவர்கள் சாதி சனத்திற்குள்ளேயும் இருக்க வேண்டும்.
மற்றபடி எதிர்காலத்தில் அவன் எதாவது ஒரு வெளிநாட்டில் போய் குடியேற நேர்ந்தால் அதற்குத் தகுந்தபடியும் இருக்க வேண்டும்.
அனைத்தையும் விட மிக முக்கியமாக எக்காரணம் கொண்டும் விவாகரத்து என்கிற வார்த்தை அவர்களுடைய அகராதியிலேயே இருக்கக் கூடாது.
இவை அனைத்திற்கும் உட்பட்ட ஒரு பெண் மட்டுமே அவனுக்கு மனைவியாக முடியும் என்கிற உறுதியிலிருந்தான் அவன்.
மொத்தத்தில் அவனுடைய மனதின் ஓரத்தில் மீதமிருந்த அவனுடைய தாழ்வுமனப்பான்மை அவனை இப்படியெல்லாம் சிந்திக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.
*
அவன் வேலையில் சேர்ந்து ஓராண்டை நெருங்கிக்கொண்டிருக்க, புஷ்பாவின் ஆசையைப் புறந்தள்ளி, தாமுவுக்கு அசலில் பெண் தேட ஆரம்பித்தார் கிருஷ்ணமூர்த்தி அவருடைய அம்மா வரலட்சுமியின் தூண்டுதலால்.
"நம்ம மங்கை பொண்ணுக்கு என்ன கொரன்னு உங்கப்பன் இந்த ஆட்டம் ஆடுது. எல்லாம் உன் ஆயாவை சொல்லணும். அதுதான் தூபம் போடுது.
நானு வளர்த்த பொண்ணு அது. அது கண்டி எனக்கு மருமவளா வந்தா, ஒரு கொரவும் இல்லாம பெத்த ஆத்தா கணக்கா என்னை பார்த்துக்கும்.
ப்ளஸ் டூ படிக்குது... இன்னும் ரெண்டு மூணு மாசத்துல இஸ்கூல் படிப்பு முடிஞ்சிரும். அதுக்குள்ளாற, அது என்னவோ சொல்லுவாங்களே... மேஜர் கீஜர்னு அது போல கல்யாணம் கட்டிக்கற வயசும் அதுக்கு வந்துடுங்காட்டியும். போலீஸ் கேசுன்னு பிரச்சனையும் வராது.
பொண்ணு கேட்டா, சந்தானம் அத்தான்தான் வேணான்னுமா இல்ல வேலுதான் குடுக்கமாட்டேன்னு சொல்லிப்புடுமா?" எனச் சென்ற முறை அவன் ஊருக்கு வந்ததும் வராததுமாக மகனிடம் புலம்பித் தீர்த்தார் புஷ்பா.
எப்பொழுதும் பேசும் பேச்சுதான், அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு இதுவரை ஒருமுறை கூட அந்த கோணத்தில் அவன் யோசித்ததே இல்லைதான். ஆனால் அன்று ஏனோ புதிதாக அவளைப் பற்றிய ஒரு கணக்கீடு மனதில் எழுந்தது.
அவனுடன் ஏழு வயது சிறியவள். நிறத்தில் அவனை விட ஒரே ஒரு 'ஷேட்' கொஞ்சம் கூடுதலாக, களையாக அழகாக இருப்பாள்.
இன்னும் கூட ஒரு வளர்ச்சி அவளுக்கு இருக்கும் என்பதால், அவனுடைய தோளை எட்டும் உயரம் அவள் வளரக்கூடும்.
அவர்கள் ஊரிலேயே இருக்கும் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறாள். ஆனாலும் ஆங்கிலம் பேசும் ஆர்வத்துடன் 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' புத்தகங்களை வாங்கி வரச்சொல்லி, சிறிது சிறிதாகப் பயிற்சியும் எடுக்கிறாள்.
வாயில் நுழையாத வார்த்தைகளைக் கூட வரிசையாக எழுதி வைத்து, அவன் ஊருக்கு வரும் வரையிலும் காத்திருந்து அவனை உச்சரிக்கச் சொல்லி, மறுபடி மறுபடி சொல்லிப்பார்த்து அது துல்லியமாக வரும் வரை விடமாட்டாள் அவள்.
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேறியிருந்தாள். பதினொன்றாம் வகுப்பில்,பொறியியல் படிக்க ஏதுவான பாடத்திட்டத்தில்தான் சேர்ந்திருந்தாள்.
அவனுக்குக் கிடைத்த வாய்ப்புகள் மட்டும் அவளுக்குக் கிடைத்திருந்தால் அவனையே மிஞ்சியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சமையலைப் பொறுத்தவரை அவளது கை பக்குவத்தை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. சிறு வயது முதலே பழகியிருந்ததால் அவர்களுடைய பாரம்பரிய சமையல் அனைத்தையும் அனாயாசமாக செய்வாள் அவள்.
சமீபமாக ஒருமுறை ஊர் சென்றிருந்த சமயம் புஷ்பாவிற்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்று மங்கைதான் அவர்களுடைய வீட்டிற்கு வந்து சமையல் செய்திருந்தாள். உண்மையிலேயே சாப்பிட்டுவிட்டு அசந்துதான் போனான் தாமோதரன். அதுவும் ஒரு கூடுதல் தகுதி ஆகிப்போனது நிலமங்கைக்கு.
சரியாக சொல்லவேண்டுமென்றால், அவனை பொறுத்தவரை அவன் விரும்பும் வடிவத்தில் பிடிக்க ஏதுவான பச்சை மண் அவள் என்றே நம்பினான் தாமு.
ஆனால் அவனுடைய அம்மா சொல்வது போல் உடனடியாக, அதுவும் ஒரு குறைந்தபட்ச கல்வித் தகுதி கூட இல்லாமல் அவளை மணக்க இயலாது அவனால்.
அதனால் இளங்கலை படிப்பை முடிக்கும் வரையாவது காத்திருக்க வேண்டியிருக்கும் அவன்.
அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்றே புரியவில்லை அவனுக்கு. காரணம் திருமணத்திற்கான அனைத்து தகுதிகளும் அவனுக்கு வந்திருக்க, போவோர் வருவோருக்கெல்லாம், 'கல்யாண சாப்பாட எப்ப போட போற?' என்பதுதான் சூடான சுவையான கேள்வியாக இருக்கிறது. அது வீட்டில் அனைவரிடமும் அப்படியே எதிர்வினையாற்றுகிறது.
'சரி, வேற எதாவது நாம டிமாண்ட்ஸ்கு தகுந்த மாதிரி செட் ஆகுதா பார்க்கலாம். நிலமங்கையை செகண்ட் ஆப்ஷனா வெச்சுக்கலாம்' என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் அவனுக்குத் தூக்கமே வந்தது.
ஆனால், 'இவ நமக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகமாட்டா' என்ற முடிவுக்கு அவன் வரும் அளவுக்கு அடுத்த நாளே அவனை எரிச்சல் படுத்தினாள் நிலமங்கை.
*
அடுத்த நாள் மாலை அவனுடைய அறையில் உட்கார்ந்து புதிதாக வந்திருந்த ஆங்கில திகில் படம் ஒன்றை மடிக்கணினியில் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான் தாமு.
ஜல்ஜல் என்ற கொலுசொலி மாடிப்படிகளைக் கடந்து அவனுடைய அறை நோக்கி வரவும், அது மங்கைதான் என்பது புரியவும், "ப்பா... ஏற்கனவே பேய் படம் பார்த்து பயந்து போயிருக்கேன்... நீ வேற இப்படி மோகினி பிசாசு மாதிரி ஜல்ஜல்ன்னு வந்து நின்னா என்ன ஆவும்?" என அவன் அவளை கிண்டல் செய்ய, "யாரு... நானு மோகினி பேய்... என்னை பாத்து நீயி அப்படியே பயந்துபூட்டாலும்" என்று நொடித்தவள், "நம்ம ஊருல கண்டி இந்த மோகினி... காட்டேரி... இதெல்லாம் இருந்துச்சுன்னு..வை உன்னை பார்த்து அதுங்கதான் பயந்து ஓடும் தாமு" என்று சிரிப்புடன் சொன்னவள், "சுத்தி சலங்கை வெச்ச கெட்டி கொலுசு... போனவாரம் ஜீ.ஆர்.டி போயி எனக்காக அப்பா எடுத்துட்டு வந்துச்சு" என்று சொல்லிக்கொண்டே அவள் தன் பாதங்களைக் காண்பிக்க, அந்த புதிய கொலுசை கொண்டாடவோ என்னவோ சில தினங்களுக்கு முன் மருதாணி வேறு அரைத்து காலில் பூசியிருப்பாள் போலும், அதன் நிறம் சற்று மங்கியிருக்க அவளுடைய மாநிற கால்களுக்கு அந்த புத்தம்புதிய வெள்ளிக் கொலுசு உண்மையிலேயே அழகாகத்தான் இருந்தது..
அரசுப்பள்ளி சீருடையன 'சுடிதார்' அணிந்திருந்தாள். நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்தான் அவன்.
மடித்துக் கட்டிய இரட்டைச் சடையுடன், சிறுமியாகவே தோன்றினாள் மங்கை. அவளுடைய முகத்தில் இன்னும் கூட கள்ளம் கபடமில்லாத குழந்தைத்தனம் மீதம் இருக்க, சுரீர் என முள் ஒன்று தைத்தது அவனுடைய மனதில், 'இவளைப் போய் திருமணம் என்ற நிலையில் வைத்து யோசித்துவிட்டோமே?' என்ற குற்ற உணர்ச்சியில்.
அதற்குள், "தாமு! பேச்சு வாக்குல நீ வந்திருக்கன்னு பூங்காவனம் கிழவி சொல்லிச்சு" என்ற பீடிகையுடன் அவள் ஆரம்பிக்க, முதன்முறையாக, அவள் தன்னை பெயரிட்டு அழைத்தது ஏனோ பிடிக்கவில்லை தாமுவுக்கு.
"ஏய்... அது என்ன எப்பவும் பேர் வெச்சே கூப்புட்றது... மரியாதையா அத்தான்னு கூப்புடு" என அவன் சீற, "என்னாது... அத்தானா? காமடி பண்ணாத தாமு" என அவள் சட்டென பதில் சொல்லிவிட, கடுப்பானவன், "புக்கு வாங்கிட்டு வர சொல்லி கேக்கதான இங்க வந்திருக்க. இனிமேல் நீ என்னை அத்தான்னு கூப்ட்டாதான் புக்ஸ் வாங்கிட்டு வருவேன்... இல்லனா வேற யார் கிட்டயாவது கேட்டுக்க" என தாமு கண்டிப்புடன் சொல்ல, உறுத்து விழித்தவள் சரி என்பதுபோல் தலையசைத்தாள்.
அவளுடைய பாவனையில் சற்று இலகுவானவன், "என்ன புக்கு வேணும் சொல்லு... கிடைச்சா வாங்கிட்டு வரேன்" என்று இறங்கி வர, "எந்நாடுடைய இயற்கையே போற்றி" என அவள் இலகுவாகச் சொல்ல, "என்ன... தென்னாடுடைய சிவனே போற்றியா?" என அவள் ஏதோ தவறாக சொல்கிறாளோ என்கிற ரீதியில் அவன் இழுக்க, "தாமு..." என சிணுங்கியவள், "நான் சரியாதான் சொன்னேன்... எந்நாடுடைய இயற்கையே போற்றி..தான்" என அவள் மறுபடி சொல்லவும், அவள் பெயரை சொல்லி அழைத்ததையே கவனிக்காமல், "ஆமா... அது என்ன புக்" என அவன் அடுத்த கேள்விக்குத் தாவ, “அது நம்மாழ்வார்ன்னு ஒரு வேளாண் விஞ்ஞானி இருக்காரு தெரியுமா? அவர் எழுதின இயற்கை விவசாயம் பத்தின புக்கு" என அவள் விளக்கம் கொடுக்க, "இதையெல்லாம் படிக்கறதுக்கு, ஜெ.ஈ.ஈ என்ட்ரன்ஸ் சம்பத்தப்பட்ட புக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன். அதை படி. ஹயர் ஸ்டடிஸ்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்றான் அவன் காட்டமாக.
"ஐய... தாமு... நான் ஒன்னும் ஐ.ஐ.டிலாம் போக போறதில்ல... நான் பி.எஸ்.சி. அக்ரீதான் பண்ண போறேன்... எனக்கு இந்த புக் போதும்" என அவள் தீவிர பாவத்தில் சொல்ல, சப்பென்று ஆகிப்போனது அவனுக்கு.
'செயற்கை நுண்ணறிவு - ராக்கெட் தொழிற்நுட்பம்' என அவனும் 'இயற்கை விவசாயம் - செயற்கை உரங்களால் விளையும் கெடுதல்கள் என அவளும் ஒருவருக்கொருவர் புரியவைக்க முயல, பின் அது ஒரு காரசாரமான விவாதத்திற்கு இருவரையும் இட்டுச்சென்றது.
"நம்ம ஊரு போற போக்குல, வருஷம் பூராமும் கொளுத்தற வெயிலுக்கும், விக்கர வெலவாசிக்கும், நஷ்ட பட்டு போயி, வாங்கின கடன கட்ட முடியாம அவனவன் நெலத்தையெல்லாம் வந்த வெலைக்கு வித்துபுட்டு கூலி வேலைக்கு போறான் இல்லனா தூக்குல தொங்கறான். இனிமேல் இங்க விவசாயம் பண்ணி ஒருத்தனாலயும் பொழைக்க முடியாது. இப்படி லூசுத்தனமா பேசறத வீட்டுக்கு ஒழுங்கா உறுப்புடற வழிய பாரு" என ஒரு கட்டத்தில் அவனுடைய குரல் உயரவும், "நீயும் இந்த ஊருல பொறந்தவந்தான? என்ன கொறஞ்சு பூட்ட இப்ப? இதே மாதிரி ஒவ்வொவரு விவசாயியும் சொன்னான் வைய்யி... இனி வர காலத்துல நாம கல்லையும் மண்ணையுந்தான் ஆக்கி துன்னணும்?" என முணுமுணுத்தவளின் கண்கள் கலங்கிவிட, சற்று தணிந்தானவன்.
ஒரு வழியாக, 'இந்த பட்டிக்காட்டுல இருந்துட்டு இதுக்கு மேல இவளால யோசிக்கவே முடியாது. மூளையே வளரல... இவ நமக்கு செட்டே ஆக மாட்டா' என்ற முடிவுக்கு வந்தவனுக்கு, 'இவ எந்த புக்க படிச்சா நமக்கு என்ன வந்தது' என்ற எண்ணம் வந்துவிட, "கிடைச்சா வாங்கிட்டு வரேன்" என்று முடித்துக்கொண்டான் தாமு. அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவள் வேகமாக கீழே இறங்கி சென்றுவிட, அவளுடைய பாத கொலுசொலி கொஞ்சமும் கொஞ்சமாக தேய்ந்து கரைந்தது.
*
அதற்கு மேல் மங்கையை பற்றியெல்லாம் அதிகம் எண்ணவேயில்லை தாமோதரன்.
அடுத்த முறை அவன் ஊருக்குச் செல்லும்பொழுது வழக்கத்துக்கு மாறாக இரண்டு மாதங்கள் கடந்திருந்தன.
அவள் சுணக்கத்துடன் சென்றது மனத்தை விட்டு அகலாமல், மனம் கேட்காமல் மங்கை கேட்ட புத்தகத்தையும் வாங்கித்தான் வந்திருந்தான் அவன்.
அவன் வந்து சேரவே இரவாகியிருந்தது. அடுத்த நாள் காலை நடைப்பயிற்சிக்காகக் கிளம்பியவன், அப்படியே அவள் கேட்ட புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் கையுடன் அதை எடுத்துவந்தான்.
அன்றைய விடியலின் இதமான குளுமையை அனுபவித்தவாறே அவன் வரப்பில் நடந்துவர, அங்கே சூழ்ந்திருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அவளுடைய இனிய குரல் செவியில் தீண்ட, அவளுடைய முகத்தைக் காணும் ஆவல் அவனையும் மீறி மேலெழுந்தது தாமுவின் மனதில்.
சில நிமிடங்கள் தலை நிமிராமல் அவனது தவிப்பைக் கூட்டி, பின் நிமிர்ந்து நிலமங்கை அவனுடைய முகத்தைப் பார்க்கவும், அவளுடைய அந்த பரவச பார்வை ஒரு புத்தம்புதிய உணர்வுக்குள் அவனை இழுத்துச்சென்றது.
சேற்றில் மலர்ந்த செந்தாமரை ஒன்று மிதந்து வருவதுபோல் அவனை நோக்கி வந்தவள், ஏதேதோ ரசாயன மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தாள் அவனுடைய சிந்தைக்குள்.
அவனை ஒரு பொருட்டாகவே எண்ணாமல், வழக்கம்போல அவள் தன்னியல்பாக நடந்துகொள்ள, அது கொஞ்சம் கூட ரசிக்கவில்லை தாமோதரனுக்கு.
தான் எடுத்த முடிவுக்குச் சற்றும் பொருந்தாத தன் எண்ணப்போக்கை உணர்ந்து குழம்பியவனாக, அவனுக்கு தன் மீதே கோபம் உண்டாக, அதை அப்படியே அவள் புறம் திருப்பி எரிந்து விழுந்தவன் அங்கிருந்து வீட்டிற்கு வந்துவிட்டான்.
வீட்டிலும் இதுவே தொடர, கோபித்துக்கொண்டு சென்றாலும் அவள் தன்னை தேடி வருவாள் என அவன் காத்திருக்க, அதையும் பொய்யாக்கினாள் நிலமங்கை.
ஊருக்குச் செல்லும் முன் அவளுடைய முகத்தை ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்று தலைதூக்கிய அவனது வேட்கையும் நிறைவேறாமல் போனது.
அவளைப் பற்றிய நினைவுகளுடனேயே இரவு உணவைத் தயாரித்து, சாப்பிட்டும் முடித்தான் தாமு.
அவளிடம் பேசவாவது செய்யலாம் என்ற எண்ணம் தலைதூக்கினாலும், அதுவும் சாத்தியப்படாது என்றே தோன்றியது அவனுக்கு.
காரணம் தாத்தாவுக்கும் பேத்திக்கும் பொதுவாக ஒரே ஒரு கைப்பேசிதான் உண்டு அவர்களிடம். அதுவும் பழைய ரக 'பட்டன் போன்'தான்.
சந்தானத்துக்கு ஆங்கிலம் படிக்க வராது என்பதால் எண்களை வைத்துத்தான் யாருடைய அழைப்பு என்பதையே அடையாளம் காணுவார் அவர்.
அதனால் பெயரைக் கூட பதிந்து வைத்திருக்க மாட்டார்கள். யாருக்காவது அழைக்கவேண்டும் என்றாலும் எழுதி வைத்திருக்கும் எண்களை அழுத்தித்தான் பழக்கம் அவர்களுக்கு. அவர்களுக்கு என்றில்லை அவர்கள் ஊரில் பெரும்பாலும் இப்படித்தான்.
இவனுடைய அழைப்பை அவர் ஏற்க நேர்ந்தால், எண்ணை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்வார். மங்கையிடம் பேசும் வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.
'செல் போனை கூட லேண்ட் லைன் மாதிரி எப்படி யூஸ் பண்ணனும்னு இவங்ககிட்டலாம் இருந்துதான் கத்துக்கணும்' என்று கடுப்புடன் எண்ணியவனுக்கு ஒரு யோசனை வர, அவனது இரண்டாவது 'சிம்'மிலிருந்து அந்த எண்ணுக்கு அழைத்தவன், 'ஐ ஆம் காலிங் ஃப்ரம் * பேங்க்' என்று ஆங்கிலத்திலேயே தொடங்கி நீளமாக ஏதேதோ சொல்ல, பதட்டத்துடன் "கண்ணு மங்க! இங்க வா... ஏதோ விளம்பர காலு போல... இங்கிலீசுலயே பேசறான்... கொஞ்சம் என்னான்னு கேளு" என சந்தானம் சொல்ல, கைபேசி மங்கையின் கைக்கு மாறவும், "எஸ்... ப்ளீஸ்" என்றாள் அவள் தயக்கத்துடன்.
அவளுடைய குரல் அவனுக்குள் அப்படி ஒரு பரவசத்தை ஏற்படுத்த, "மங்க... நான்தான் தாமு" என்றவன் அவள் பேச இடைவெளியே விடாமல், அவசரத்துடன், "நான்தான்னு பெரியப்பாவுக்கு தெரியவேணாம்... கொஞ்சம் தள்ளி வந்து பேசேன்" என்றான் அவன் அவளை நிர்ப்பந்திப்பதுபோல்.
"தாமு இப்படில்லாம் செய்யாதே… இதுமாறிலாம் பேசாதே" என்ற எண்ணம் தோன்ற அவள் அமைதி காக்கவும், "யாரு மங்க! என்னவாம்" என தாத்தாவும், “என்ன மங்க லைன்லதான் இருக்கியா?” என தாமோதனும் சேர்ந்தாற்போல் ஒரே நேரத்தில் கேட்டுவைக்க, மனம் முழுவதும் கிலி பரவியது நிலமங்கைக்கு. "சாரிங்க... ராங் நம்பர்" என்று பதட்டத்துடன் சொல்லிவிட்டு பட்டெனத் துண்டித்தாள் நிலமங்கை, அந்த அழைப்பை மட்டுமல்ல தாமோதரனையும்தான்.
அவள் காண்பிக்கத்தொடங்கியிருக்கும் இந்த பாராமுகம்தான், இன்னும்... இன்னும்... நெருக்கமாக அவளிடம் இழுத்துவந்தது தாமோதரனை, அவனுடைய பிடிவாதத்தை மிகைப்படுத்தி.
*
நிதரிசனத்தில்...
தாமோதரனின் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றவாறே, "நமக்கு நடந்ததா நீங்க சொல்ற கல்யாணத்துக்கே எந்த அர்த்தமும் இல்ல. பொறவு எதுக்கு இந்த மிஸ்ஸஸ்... கிஸ்ஸஸ் எல்லாம்... விடுங்க என்னை" என அவள் நடுங்கும் குரலில் சொல்ல, "ங்க... ம்... நல்லவேளை நெனவு படுத்தின... ஹா... ஹா...” என்று சிரிப்புடன் சொன்னவன், “என்னால என் மிஸ்ஸஸையும் விடமுடியாது... நம்ம கிஸ்ஸஸையும்" என அவள் அவசரத்தில் தனை மறந்து, விட்ட சாதாரண வார்த்தையை கூட தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டவன், அசராமல் அவளுடைய காது மடலில் மென்மையாக இதழ் பதிக்க, கொதித்தே போனாள் அவள்.
தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளி நிறுத்தி, தன்னை விடுவித்துக்கொண்டு நேருக்கு நேராக அவனுடைய முகத்தை பார்த்தவள், "நீ எந்த உரிமைல இப்படியெல்லம் செய்யறன்னு எனக்கு தெரியும் தாமு. இதுனாலதான் நான் நம்ம ஊர் பக்கமே வராம இருந்தேன்" என அவள் படபடவென பொரிய, அவளுடைய இந்த உரிமையான பேச்சைக் கேட்கத்தானே அவன் இப்படி அவளிடம் எல்லைமீறி நடந்துகொண்டது.
"இந்த உரிமை இருக்கவேபோய்தான் உன்னை உன் விருப்பப்படி விட்டுவெச்சிருக்கேன் மிசஸ் நிலமங்கை. அத புரிஞ்சிக்கோ மொதல்ல" என அவன் ஒரு குறுஞ்சிரிப்புடன் சொல்ல, "இனிமேல் இந்த உரிமையெலாம் எப்படி காணாம போக போகுதுன்னு நீயே பாரு... இந்த வனா பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் மொத வேலையா டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ண போறேன்" என அவள் காரமாகச் சொல்ல, "டிவோர்ஸா... அவ்ளோ ஈஸியா எங்கிட்ட இருந்து உன்னால டிவோர்ஸ் வாங்கிட முடியுமா?
ஹா... ஹா... வருஷக்கணக்கா வெளிநாட்டுல இருந்துட்டுல்ல வந்திருக்க. அதனால உனக்கு தெரியல போல. இப்பல்லாம் நம்ம நாட்டோட சட்டம் பொண்ணுங்களுக்கு கொஞ்சம் கூட ஃபேவரா இல்ல... அது தெரியுமா?
ஒரு படத்துல விவேக் காமடில வரும் நெனவு இருக்கா... அதுல மைனர் குஞ்சுமணிக்கு பஞ்சாயத்துல ஒரு தீர்ப்பு சொல்லுவாங்க இல்ல, அந்த மாதிரி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பெல்லாம் வந்துட்டு இருக்கு நம்ம நாட்டுல. ஸோ... நீ இதையெல்லாம் நம்பாத. என்னை மட்டும் நம்பு, அதுதான் உனக்கு நல்லது" என அவன் கொஞ்சம் கூட அசராமல் அவளுக்கு பதில் கொடுக்க, அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் நிலமங்கை.
பதிலுக்கு, அசராமல் அவளைப் பார்த்து கண் சிமிட்டி நிலமங்கையின் ரத்தக் கொதிப்பை எகிறவைத்தான் தாமோதரன்.
What happened very is nila mangai. Two weeks gone.🤔🤔🤔
waiting for next ud mam🙂🙂
Hi Mam, why not u try to post this us also daily. If possible pls try . Just a smaller request from our end.
Superb eagerly waiting for today
அருமையான பதிவு
Nice ud. Curiosity rises. Waiting to know about their life history
Nice ud sissy...Nilamangai divorce...Impossible sissy...
Who is most affected by their marriage? Dhamu? Will they unite?
Nice update