நிலமங்கை-3
நிதரிசனத்தில்...
படபடவென்ற சத்தத்துடன் ஓட்டிவந்த தனது 'புல்லட்'டை தாமோதரனுக்கு அருகில் நிறுத்தி காலை ஊன்றியபடியே, "எப்ப வந்த தாமு? மங்க பொண்ண இட்டாந்துட்டதான? பிரச்சன ஒண்ணும் இல்லையே?" என இயல்பாக அவனிடம் விசாரித்தார் கிருஷ்ணமூர்த்தி, தாமுவின் தந்தை.
அவர் கேட்ட விதத்தில் சிரிப்புதான் வந்தது அவனுக்கு. "ஹா.. ஹா... அது என்ன மங்கையோட சேர்த்து எல்லாரும் ஏதோ பிரச்சனைய எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கற மாதிரியே கேள்வி கேக்கறீங்க?" என விளையாட்டாகத்தான் கேட்டான் அவன்.
ஆனால் அவனது கேள்வியில் அவருடைய முகம் இறுகிப்போக, "என்ன பண்ண சொல்ற தாமு... நம்ம குடும்பத்த பொறுத்தவரைக்கும் மங்கன்னாலே பிரச்சனைன்னு ஆயிடுச்சே! நீ இப்படி பட்ட மரமா நிக்கறத பார்த்தா எங்களுக்கு வேற என்ன நெனப்பு வரும்' என அவர் வருத்தத்துடன் சொல்ல, "இந்த ஏழெட்டு வருஷத்துல என்னோட வளர்ச்சியை பார்த்ததுக்கு பொறவும் நீங்க இப்படி சொல்ல கூடாதுப்பா. ஒரு விதத்துல இது நீங்க ஆசைப்பட்ட மாதிரி வளர்ச்சியுந்தான?" என அவன் பதில் கொடுக்க,
"நீ உன்னோட தொழில் வளர்ச்சிய பத்தி சொல்றன்னா, கொஞ்சம் பின்னால போய், நல்லா யோசிச்சு பாரு. உனக்கே பதில் கெடைக்கும். நான் ஆசை பட்டது இது இல்ல" என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 'கார்' சாவியை அவனிடம் நீட்டியவாறு, "ணா... வூட்டாண்ட போயிட்டு மதியம் வந்துர்றேண்ணா. ரவைக்கு ஏன் வூட்டுக்கு வரலன்னு இந்த தேவி போ...ன போட்டு சண்ட புடிக்குது. சின்ன பொண்ணு வேற அப்பா அப்பான்னுகினே கெடக்குதாம்" என்று சொல்லிவிட்டு தாமுவின் அனுமதிக்குக் கூட காத்திருக்காமல் அங்கிருந்து அகன்றான் செல்வம்.
உடனே, மகனை நோக்கி ஒரு குதர்க்கமான பார்வையை வீசிவிட்டு தனது வாகனத்தை 'ஷெட்'டை நோக்கி கிட்டி செலுத்த, 'உன்கிட்ட வேலை செய்யறவனெல்லாம் பொண்டாட்டி புள்ளகுட்டின்னு செட்டில் ஆயிட்டான். நீ என்னடான்னா இன்னும் புடிவாதம் புடிச்சிகினு இப்படி ஒண்டிக்கட்டையா நிக்கற' என்கிற குற்றச்சாட்டை அவரது அந்த பார்வை தாங்கியிருக்க, அதற்குப் பதில் கொடுக்க விரும்பாமல், வீட்டின் பக்கவாட்டில் அமைந்திருந்த மாடிப்படியை நோக்கிப் போனான் தாமு.
'நமக்கு இதெல்லாம் சாதாரணமப்பா' என்கிற ரீதியில் தந்தை மகனுடைய இந்த உரையாடலைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், சத்தமான குரலில், "டிபன் எடுத்து வெக்கறேன். ரெண்டு பெரும் நேரத்தோட வந்து சேருங்க" எனக் கணவன் மகன் இருவருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார் புஷ்பா.
நேராகத் தனது அறைக்கு வந்தவன் குளித்து 'லுங்கி-டிஷர்ட்' அணிந்து கீழே வந்தான் தாமு.
பழமை மாறாமல் பராமரிக்கப்படும், மூன்று நான்கு தலைமுறைகளைப் பார்த்த வீடு தாமோதரனுடையது.
நவீன முறைப்படி தன் விருப்பத்திற்கும் ரசனைக்கும் தகுந்தாற்போன்று தரைதளத்தில் வாகன நிறுத்தமும் முதல் தளத்தில் பளபளப்பான கிரானைட்டால் இழைக்கப்பட்ட பெரிய கூடம், அதனுடன் இணைந்த 'ஓப்பன் மாடுலர் கிட்சன்' வகை சமையலறை கூடவே சூரிய சக்தியில் இயங்கும் ‘கைஸர், பாத் டப்’ இத்தியாதிகளுடன் கூடிய குளியலறை, உடை மாற்றும் அறை, என சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒற்றை படுக்கை அறை என அந்த பழைய வீட்டை ஒட்டி சற்று விரிவு படுத்தி சில வருடங்களுக்கு முன்பே கட்டியிருந்தான் தாமோதரன்.
மாடியிலிருந்து இறங்கி வந்தவன் வீட்டிற்குள் நுழைய, சந்தானத்தின்... அதாவது நிலமங்கையுடைய தாத்தாவின் உற்சாகக் குரல் கணீரென்று வாயில் வரையிலும் கேட்டது. அவருடன் பேசிக்கொண்டிருப்பது வரலட்சுமி... அதாவது தாமோதரனின் பாட்டி வேறு என்பதாலும் இருவருக்குமே காது சரியாகக் கேட்காது என்பதாலும் அவர்களுடைய குரல்கள் அந்த வீட்டையே கிடுகிடுக்கச் செய்துகொண்டிருந்தது.
"என்ன