/*ரிஷிக்கு கண்மணி சொல்ற ஃபீல் லாம் ஹைப்பாத்தான் இருக்கும்... அவளே சொல்லிட்டா... அவ வியூல இருந்து யாரும் பார்க்க முடியாதுன்னு... வழக்கம் போல ரிஷிக்கு இதுலாம் ஒவர்னு சொல்லிட்டே இந்த எபிய முடிச்சுருங்க...
ஜோக்ஸ் அபார்ட்... கண்மணி ரிஷியை பற்றி நினைக்கிறது எழுத்தாளரா... ரீடரா எனக்கே கொஞ்சம் அதிகமா எழுதிட்டேனொன்னு எனக்கே தெரியுது...எழுதும் போது கண்மணி ஃப்ளாஸ்பேக் எனக்குத் தெரியும் அந்த ஃபீல்ல எழுதிட்டேன்... ரீடரா படிக்கும் போது... அதிகப்படியா சொன்ன மாதிரி ஃபில்... ஷார்ட் பண்ணனும்... பட் இப்போதைக்கு எதையும் கட் பண்ணலை... பட் ஃபைனல் வெர்ஷன் ட்வீக் பண்ணனும்...
தேங்க்ஸ் எல்லோருக்கும்...
பிரவீணா&/
-----
அத்தியாயம் 38-3
/* வான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வருவான் வருவா…………ன்
வான் வருவான் வான் வருவா……ன்
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
தொலைவில் பணிவான் !*/
ஊட்டி வந்து சேரும் போது… கிட்டத்தட்ட… இரவு எட்டு மணி ஆகி இருக்க… ஊட்டியில் உள்ள ஒரு பெரிய கான்வெண்ட்டின் முன் இவர்கள் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டது…
சுற்றுலா முடியும் வரை தங்கி இருக்க அந்தப் பள்ளியைத்தான் தேர்ந்தெடுத்திருந்தனர்… அங்கிருந்த மிகப்பெரிய கூடத்தில்.. மாணவர்கள் எல்லாம் தங்கவைக்கப் பட… ஆசிரியர்களுக்கென்று தனித்தனி அறைகள் கொடுக்கப்பட்டிருந்தன…
…
இப்போது ரித்விகா மாணவிகளோடுதான் இருந்தாள்… அவள் தோழிகளோடு ரித்விகா ஐக்கியமாகி விட.. கண்மணி அவளை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தவோ… இல்லை தனியே முக்கியத்துவம் கொடுக்கவோ விரும்பவில்லை…
அதே நேரம்… கணவனுக்கு அவன் தங்கை மேல் இருக்கும் அக்கறையையும்… அவனின் எச்சரிக்கை மொழிகளையும் கருத்தில் கொள்ளாமல் இல்லை… அதனால்… மாணவிகளோடு ரித்விகா படுத்திருந்த அறையை நன்றாக பார்வையிட்டவள்… அவள் படுத்திருந்த இடத்தையும் கவனித்துக் கொண்டவள்… ரித்விகாவுக்கு சில பல அறிவுரைகள் கொடுத்தவளாக… அவளைத் தூங்கச் சொல்லி விட்டு தன் அறைக்குச் சென்று விட்டாள்…
கண்மணிக்குத் தனி அறை… கண்மணி அனைவரிடமும் சகஜமான பேசினாலும்… பழகினாலும் அவள் எப்போதுமே யாரோடும் ஒட்ட மாட்டாள்… இத்தனை வருடங்களில் ரித்விகாவை மட்டுமே மூன்றாம் நபராக இருந்த போதும் தன் அருகே படுக்க அனுமதித்திருக்கின்றாள் …
அந்த வகையில் ரித்விகாவுக்கு எப்போதுமே கண்மணியிடம் தனியிடம்தான்… தனக்குள் எண்ணியபடி படுக்கையில் விழுந்தவளுக்கு வாழ்க்கையில் முதன் முதலாக தனிமையாக இருப்பது போல ஒரு எண்ணம்…
பலமணி நேரம் ஆகியும் ரிஷியிடம் பேசாத காரணத்தால்… ரிஷிக்குப் பேசலாமா என்று யோசனை வந்தது… குறைந்த பட்சம் ஊட்டி வந்து விட்டோம் என்று சொல்லலாம் என்று அவள் நினைத்தாலும்… அவனது தொழில் ரீதியான சந்திப்புக்களைப் பற்றி கண்மணிக்கும் தெரியும்… நேரத்தைப் பார்த்தவள்… இப்போது மீட்டிங்கில் இருப்பான் என்று அந்த யோசனையையும் கைவிட்டு விட்டாள்….
முக்கியமான விசயம் என்றால் மட்டுமே கண்மணி அவனை அழைப்பாள்… அதுபோல இந்த அலைபேசியில் தம்பதியருக்கிடையே இருக்கும் ’ஸ்வீட் நத்திங்க்ஸ்’ எல்லாம் ரிஷி-கண்மணி உலகில் ’ஆல்வேஸ் நத்திங்’ … அதுபோல இரவுக்குள் அவனே அழைப்பான் என்றும் கண்டிப்பாகத் தெரியும்…இவளுக்காக இல்லாவிட்டாலும் தங்கைக்காக கண்டிப்பாகச் பேசுவான்… அதனால் அவன் அழைக்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டவள்… கண்களைப் மூடிப் படுக்க.. தூக்கமே வரவில்லை… அதிலும் ஒன்பது பத்து மணிக்கெல்லாம் தூங்கியே பழக்கம் இல்லாதவளுக்குப் புதிதாக வருமா என்ன…
கண்களை மூடினால்… தந்தை… காந்தம்மாள் கிழவி… ஏன் மருது கூட… என ஏனோ எல்லோருமே அவள் ஞாபகத்திற்கு வந்து போனர்… இந்த நபர்களை எல்லாம் கண்மணி தன் அருகே நெருங்க விட்டதில்லை என்றாலும்… அவர்கள் யாரும் இவளை தனியே விட்டதில்லை… அதனால் கண்மணி தனியே இருப்பது போல் இருந்தாலும்… தனிமை உணர்ந்ததில்லை… திருமணத்திற்குப் பிறகோ ரிஷி அவனின் குறிக்கோள்… எண்ணம் இவைகளை எல்லாம் சொன்னபின்… கணவன்… அந்த உறவுக்கான எண்ணங்கள் இவற்றில் எல்லாம் மனம் கண்மணியின் மனம் சிறிதளவும் அலைபாயவில்லை… அதே போல ரித்விகாவும் கண்மணிக்கு நல்ல துணையாக இருக்க… இதுநாள் வரை தனிமை என்ற எண்ணம் சிறிதும் தோன்றியது இல்லை… ஆனால் இன்று….
சுத்தமாக உறக்கமே வரவில்லை கண்மணிக்கு… புரண்டு புரண்டு படுத்தவளுக்கு ஏதோ ஒன்று குறைவது போல் இருக்க… அப்போதுதான் உணர்ந்தாள் கண்மணி… அவள் கைகளில் வழக்கமாக ஒலிக்கும் அவள் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்களின் ஒலி…
சிறு வயதில் இருந்தே அவளுக்கு கண்ணாடி வளையல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்… அதன் ஒலி அதை விட பிடிக்கும்… காரணம் தெரியாது… ஏன் என்ற ஆராய்ச்சிக்கும் போனதில்லை…
ரிஷி கழட்டி வைத்தபின்… அதைத் திரும்ப அணியவில்லை… மறந்துவிட்டாள்… தெரியவில்லை… ஆக இன்று அந்த ஒலி இல்லை…. பிறந்ததில் இருந்தே அவளோடு உறவாடிய நெருங்கிய உறவு ஒன்று இன்று திடீரென மறைந்தது போல் இருக்க… எதிர்மறையான எண்ணங்கள் ஏனோ சட்டென்று அவளை ஆக்கிரமிக்க ஆரம்பிக்க…. அது தாங்காமல் எழுந்து அமர்ந்து விட்டாள்…
எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டால் அந்த எண்ணங்களுக்கு பதிலடி கொடுத்து விரட்ட வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றுதான் கண்மணிக்கு தீர்வாக இருக்கும்… அது அவளது எழுத்தாளர் மூளை மட்டுமே… கதையைப் பற்றி… கதை மாந்தர்களைப் பற்றி… அவர்களுக்கான காட்சி அமைப்புகளுக்கான எண்ணங்களுக்குத் தாவி விடுவாள் கண்மணி…
யோசிக்க ஆரம்பிக்க… கதை … கதை மாந்தர்கள்… என அனைவருமே அந்நிய உலகமாக இருந்தனர்…
காதல் வந்தால் கவிதைதான் எழுத வரும் போல… கதையெல்லாம் எழுத வராதா என்ன… தனக்குள்ளே சிரித்துக் கொண்டவளாக… எழுந்து உட்கார்ந்தவள்… தலையணையை மடியில் வைத்து மார்போடு கட்டிக் கொண்டவளாக… தன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்க… அதுவும் முடியவில்லை
காரணம்… ரிஷி… ரிஷி மட்டுமே அவளது ஞாபகங்களில்… இது கண்மணிக்கே மிகப் பெரும் ஆச்சரியம்… அவளது கற்பனை உலகத்தை… கற்பனை மாந்தர்களைக் கூட இவள் எண்ணங்களில் நெருங்க விடாமல் மாற்றி விட்டான்… அதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்… ஆனால் அவள் நினைவுகளையும் மறக்க வைத்துவிட்டானே…இன்றும் இப்போதும் இந்த நொடியிலும் கணவனைப் பற்றிய நினைவுகள் தான்… ஆனால் என்ன கணவன் என்ற முறையில் இல்லாமல்…
காதல்… கணவன்… இந்த உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஏதோ ஒரு உணர்வே… ரிஷியின் மீது கண்மணிக்கு இருக்கும் உணர்வுகள்… அதற்கு என்ன பெயர் என்பது அவளுக்கேத் தெரியவில்லை என்பதே உண்மை…
சில உணர்வுகள் இதயத்தை ஆக்கிரமிக்கும்… ஆனால் இது அதை விட ரிஷியின் மீதான அவளுக்கிருந்த ஆத்மார்த்தமான உணர்வுகள் அவளது ஆத்மாவை ஆக்கிரமித்து இருந்தது… ஏன் இப்படி கண்மணி யோசிக்க ஆரம்பித்தாள்…
ரிஷி யார்??? அவளுக்கு எப்படிப்பட்டவன்… கண்மணி மட்டுமே உணர்வாள்… அவளைத் தவிர… இந்த உலகில் வேறு யாருமே அதை உணர முடியாது… அவனோடான அவளின் உறவுக்கும்… உணர்வுக்கும் உச்சக்கட்ட விளக்கம் கொடுக்க கண்மணி என்பவளால் மட்டுமே முடியும்…
ரிஷி என்பவனுக்கு கண்மணி என்பவள் முக்கியம் இல்லை… இதை வேறு யாரும் சொல்ல வேண்டாம்… ரிஷியே சொல்வான்… காரணம் ரிஷியே அவனது முழுமையான அன்பைக் காட்டியதில்லை… அவனது நடவடிக்கைகளும் அது போலத்தான் இருக்கும்
ஆனால் கண்மணிக்கோ ரிஷி என்பவன் காட்டும் இந்த சிறிதளவு அன்பு???!!!!!… தனக்குள்ளே அதை எண்ணி நெகிழ்ந்து கொண்டாள் கண்மணி…
அன்பு… காதல்… பாசம்… நேசம் இதெல்லாம் கொடுக்கின்ற நபரைப் பொறுத்தல்ல… அதை அனுபவிப்பவர்கள் அதை அனுபவிக்கும் அளவே அந்த உணர்வுகளுக்கெல்லாம் அளவீடு…
அதே போல்தான் கண்மணிக்கும் ரிஷியின் அன்பும்!!!
இங்கு ரிஷி காட்டுகின்ற நேசத்தின் அளவு குறைவாக இருக்கலாம்… ஆனால் அதை அனுபவிக்கும் கண்மணிக்கோ அது அளப்பறியது… எல்லையற்றது… ரிஷி அவன் காட்டும் அன்பின் அளவு சிறிதாக இருந்தாலும்… அதன் உண்மைத்தன்மை கண்மணி மட்டுமே அறிந்தது…
நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவள் ஏங்கிய அன்பு…. உணர்வோடு உரிமையோடு கலந்த அன்பு… ரிஷியிடம் மட்டுமே முதன் முதலாக உணர்ந்தது… தான் நேசித்த ஒவ்வொருவரிடமும் ஏங்கி தவித்து… தேடி அலைந்த… யாரிடமுமே கிடைக்காத அன்பு ரிஷி என்பவனிடம் மட்டுமே கண்டு கொண்டாள்…
பிறந்த போது… அவளுக்கு ஏதுமே தெரியவில்லை… ஆனால் நினைவு தெரிந்த பின்… அன்பு… பாசம்… இவற்றிற்கெல்லாம் அர்த்தம் தெரிய ஆரம்பித்த போது… அதற்காக ஏங்கிய போது…
காந்தம்மாளிடம் கிடைத்தது… வளர்க்கவேண்டுமே என்ற கடமை… கடமை கடுப்பாகவே கிடைத்தது
நட்ராஜிடம் கிடைத்தது… மகள் என்ற உறவை விட வெறுப்பு… வெறுப்பு மட்டுமே காட்டப்பட்டு தள்ளிவைக்கப்பட்டாள்…
நட்ராஜ், கணவன் என்ற உறவில் இருந்து தந்தை என்ற உணர்வுக்கு மீண்டு வந்த போது, மகள் மட்டுமே அவர் உயிர் என ஆன போது… தந்தையாக ஏற்றுக் கொண்ட கண்மணிக்கு மகளாக நெருங்க முடியவில்லை …
நாராயண குருக்கள்–வைதேகியிடம் கிடைத்தது… அவமானமும்… இகழ்ச்சியும்… ஏளனமும்… அன்று வீட்டின் வாசலில் அப்பாவிச் சிறுமியாக கால் வைத்த போது நாயை விட்டு விரட்டியவர்கள்தான் இன்று அவர்களது சாம்ராஜ்ஜியத்தின் அரசணையில் அரசியாக அமர வைத்து அழகு பார்க்கத் துடிப்பவர்கள்… கண்மணி என்பவளை பவித்ராவின் வாரிசு என முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களால்… நட்ராஜின் வாரிசாக இப்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…
மருது… முதன் முதலாக இவளுக்கு ஒரு தனி நபர் மூலம் கிடைத்த அன்பு… மருது என்பவனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்ய நினைத்தவள்தான் கண்மணி… ஆனால் அந்த அன்பு… போலி முலாம் பூசப்பட்ட அன்பு எனப் புரிந்த போது… கண்மணி என்பவள் முற்றிலுமாக மாறி இருந்தாள்… கண்மணி அதன் பிறகு வேறு யாரிடமும் இந்த அன்பு என்ற ஒன்றை யாரிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை… எதிர்பார்க்கவும் நினைக்கவுமில்லை… இன்று வரை இந்த நிமிடம் இந்த நொடி வரை… ரிஷியின் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு வைத்தது மருதுவிடம் சூடு கண்ட கண்மணியாகக் கூட இருக்கலாம் …
அர்ஜூன்… கண்மணிக்கு எப்போதுமே தனித்துவமானவன்தான்… ஆண்மகனாக கண்மணியை முதன் முதலில் வசீகரித்தவன் அர்ஜூன் மட்டுமே… அவனது நேர்கொண்ட பார்வை… ஆளுமை… கம்பீரம்… நான் உனக்கானவன்… நீ எனக்கானவள் என்ற உரிமையோடு கலந்த உறவோடு அவன் பழகுவது என்று இதயத்தின் மனக்கதவை திறக்க முயற்சித்தவன் அவனே… ஆனால் என்னவென்று சொல்வது… கண்மணியாக உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டேன்… அவளை அவளாக ஏற்றுக் கொள்ளாமல்… அவனுக்கான இளவரசியாக அவளை மாற்றி தன்னவளாக்குவேன் என்ற அவனது ஆணவம்… அவனுக்காகத் திறக்க முயற்சித்த மனம் தனக்குள் மீண்டும் பூட்டிக் கொண்டதே… இன்னும் சொல்லப் போனால் நட்ராஜின் மகள் கண்மணி என்ற பிடிவாதத்தை அவளுக்குள் இன்னுமே அதிகப்படுத்தியது கண்மணி மீதான அர்ஜூனின் காதலே…
கண்மணி என்பவள் அவ்வளவு சுலமாக ஒருவரை தன் வட்டத்துக்குள் விடமாட்டாள்… பாசம் வைக்க மாட்டாள்… அப்படி நேசிக்க ஆரம்பித்தால்… உலகத்திலேயே கொடுத்து வைத்த நபர் அவர்களாக மட்டுமே இருப்பர்… மருது அதை அனுபவித்திருந்தான்… ஆனால் விழலுக்கு இறைத்த நீர் என்று கண்மணி விலகிவிட்டாளே… அவனோ இன்று கண்மணியின் அன்புக்கு ஏங்குகிறான்…
ஆக எந்த உண்மையான.. இயல்பான அன்பை எதிர்பார்த்து ஏமாந்து நின்றாளோ… அது ரிஷியிடம்… அவனது குணத்தால் கண்மணிக்கு யாருடைய தூண்டலுமின்றி… கட்டாயமில்லாமல்… அனிச்சையாகக் கிடைத்தது…
இந்த உலகத்தில் அனைத்து அன்புக்குமே அளவுகோல் உண்டு…… அளவுகோள் இல்லாத ஒரே அன்பு… கொடுப்பவர்… வாங்குபவர் என்ற விகிதம் கூட இல்லாத உலகத்திலேயே விலை மதிப்பில்லாதது… அது தான் இதுவரை உணராத தாயன்பு… இந்த அன்பு மட்டுமே சுயம்பாக கிடைக்கும் அன்பு… ஆதியில்லா அந்தமில்லா அன்பு…
அப்படிப்பட்ட சுயநலமில்லா… எதிர்பார்ப்பில்லா… உரிமையுள்ள… தவறு செய்தால் தட்டிக் கேட்கும்… செல்லக் கோபப் படும் அன்பு…. இன்னும் இன்னும் என்ன உலகத்தின் அத்தனை உணர்வுள் இருக்கிறதோ நிரப்பிக் கொள்ளலாம்… அப்படிப்பட்ட தாயன்பை அனுபவிக்காத கண்மணிக்கு… ரிஷியிடமிருந்து அவன் அறியாமலேயே கண்மணிக்கு கிடைத்துக் கொண்டிருந்தது….
தனக்கு ஒரு வாய் யாராவது ஊட்ட மாட்டார்களா ஏங்கிய காலமும் உண்டு… அதே போல அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட மாட்டோமோ ஏங்கித் தவித்த பந்தங்களை கண்டுகொள்ளாமல் ஏங்க விடுபவளும் கண்மணியே…
தான் ஏங்கிய போது கிடைக்காததை… திகட்ட திகட்ட திரும்ப கொடுத்தாலும் ஏனோ ஏற்கப் பிடிக்கவில்லை கண்மணிக்கு… அதைவிட மனிதர்களின் அன்புக்கு அடிமையாவது இன்னுமே பயம்…
ஆக யாரிடம் எதையும் எதிர்பார்க்காமல்… வாழப் பழக ஆரம்பித்திருந்தவளிடம்… ரிஷியோ இயல்பாக அவளிடம் அந்தப் பழக்கங்களை எல்லாம் அவள் வழக்கமாக்கி இருந்தான்… இந்த ஒரு விசயத்திலேயே கண்மணி ரிஷியின் அன்புக்கு அடிமை ஆகி இருந்தாள்…
என் குடும்பத்துக்காகத்தான் உன்னைத் திருமணம் செய்கிறேன் என்று சொன்னவன் தான்… ஆனால் அவனது இத்தனை நாள் குடும்ப வாழ்க்கையில் ஒருமுறை கூட அவளை அப்படி உணர வைத்ததில்லை…
அவளை வேலைக்காரியாகத்தான் திருமணம் செய்கிறேன் என்று சொன்னவன் தான்… அந்தக் குடும்பத்தை ஆளும் அரசியாக ஆளுமை செய்ய வைத்தான்…
எனக்காக நீ… உனக்காக நான்… என்று அவனது செயல்கள் இல்லை… மாறாக… நீ வேறில்லை… நான் வேறில்லை… என்னுள் நீ… உன்னுள் நீ… நீயே நான்.. நானே நீ என்பது போல் தான் அவனது செயல்கள் இருந்து கொண்டிருக்கின்றன…
கண்மணி இவன் குடும்பத்தை எந்த அளவுக்கு பார்த்துக் கொள்கின்றாள் என்பது அவளுக்குத் தெரியவில்லை… ஆனால் அவனோ அவளது தந்தை நட்ராஜை முதலாளி என்ற மரியாதையோடு தந்தையின் இடத்தில் வைத்து ஆராதித்துக் கொண்டிருக்கின்றான்…
இவளுக்காக அவன் வானத்தை வளைக்கவில்லை… அது போல கண்மணி என்பவளை மாற்ற நினைக்கவும் இல்லை… கண்மணியை கண்மணியாக பார்த்ததே பெரிதாக இருந்தது…
திருமணமான இந்த ஐந்து மாதங்களில்…. கண்மணியின் எண்ணம்… நினைவு பார்வை அனைத்தும் ரிஷியிடம் மட்டுமே குவிந்து இருக்க… ரிஷிக்கோ அவன் எண்ணம் நினைவு எல்லாம் கண்மணியைத் தவிர மற்ற அனைத்தையும் நோக்கி விரிந்திருந்தது.. ஆனால் யாருக்குமே தெரியாத ஒன்று… ரிஷி எங்கெங்கு அலைந்து திரிந்தாலும் எண்ணங்களிலும் சரி… நினைவுகளிலும் சரி… பார்வையிலும் சரி… கடைசியாக வந்து நிற்பது கண்மணி என்பவளிடமே…
கண்மணி அவளது எண்ணங்களால் ரிஷியை முழுமையாக ஆள… ரிஷியும் அதற்கேற்றார்ப் போல…. அவனைப் பற்றிய எண்ணங்களையும்… நினைவுகளையுமே… தன் மனைவியிடம் கொடுத்து வைத்திருந்தான்… அவன் கவலை… துக்கங்கள்… சோகம்… சந்தோசம்….
அதே நேரம் எல்லாவற்றையும் அவன் அவளிடம், சொல்லவில்லை என்பது தெரியும் … ஆனால் அவன் எதையும் மறைக்க நினைக்கவில்லை என்பதும் கண்மணிக்குத் தெரியும்… எப்போது ரிஷியை உணர்வுகள் அழுந்துகிறதோ… கண்மணியின் கரங்கள் கொடுக்கும் சிறு ஆறுதலில் அனைத்தையும் கொட்டி விடுவான்… என கணவனைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருப்பவள்… ஏன் இன்னும் அவன் என்னென்ன கொடுக்க நினைத்தாலும் அத்தனையும் தாங்கிக் கொள்ளக் காத்துக் கொண்டிருக்கிறாள் அவனின் கண்மணி….
தன் கணவனை அழுந்தும் உணர்வுகளின் வடிகாலாக இருக்க எந்தச் சூழ்நிலையிலும் தயாராக இருந்தாள் கண்மணி…
ரிஷி இவளைப் போல இரும்புக் கோட்டையல்ல… சுலபமாக யாரிடத்திலும் அவன் உணர்வுகளை கொட்டி விடுபவன்… அப்படிப்பட்டவன்… தன் உணர்வுகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கின்றான் என்றால் அது சாதாரணம் இல்லை…
வேதனைகள் வடு ஆகி விட்டால் சாதாரணமாகி விடும்… கண்மணி அந்த நிலையில் இருக்க… ஆனால் ரிஷிக்கோ இன்னும் ரணமாக இருக்கிறது… அதன் வலி தாங்கவில்லை என்றாலும் அதை மறைக்கப் போராடுகிறான்… இவள் ஒருத்தியிடம் மட்டுமே… அந்த வலியின் வேதனையை, தன் அடி ஆழ உணர்வின் குமுறலைக் காட்ட நினைக்கின்றான்…
அவனைப் பற்றி முழுமையாகத் வெளிப்படுத்த வில்லை தான்… ஆனால் இவள் ஒருத்திக்கு மட்டுமே அவனது ரகசியப் பக்கங்களைத் தெரிந்து கொள்ள அனுமதி அளித்திருக்கின்றான் என்பதே கண்மணிக்கு ரிஷி மிகப்பெரிய அளித்த அங்கீகாரம்.. கண்மணியே அவனுக்கு கொடுக்காத அங்கீகாரம்…
இதிலேயே தெரிந்து கொள்ளலாம் தான் அவன் மீது வைத்திருக்கும் அன்பு பெரிதா… அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பு பெரிதா… என்பது…
யார் வேண்டுமென்றாலும் குறை சொல்லலாம்… கண்மணி ரிஷியின் மேல் வைத்திருக்கும் பாசத்தின் அளவில் சிறிதளவு கூட ரிஷி கண்மணியிடம் காட்ட அளவில்லை என்று… ஏன் ரிஷி என்பவன் கண்மணி போன்ற பெண்ணின் அன்புக்குத் தகுதியானவன் இல்லை என்று…
அத்தனை பேருக்கும் கண்மணி பதிலடி கொடுப்பாள் தன் கணவன் தன் மீது காட்டும் அன்பு அவன் மீது தான் காட்டும் அன்பைக் காட்டிலும் உயர்ந்தது என்று…
அவனது அன்பை அந்த அளவுக்கு ஆழமாக உணர்ந்ததால் தான்… அதை உயர்வாக மதித்ததால் தான்… இவள் அவன் அன்போடு போட்டி போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றாள் என்பதை அவள் மட்டுமே உணர்வாள்…
கண்மணியாக மாறி… அவளது உணர்வின் வழியாக பார்க்க முடிந்தால் மட்டுமே ரிஷி என்பவனை புரிந்து கொள்ள முடியும்… வேறு யாராலும் முடியாது… அப்படி தன்னைப் போல் அவனைப் புரிந்தவர்கள் அவன் அன்பை உணர்ந்தவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்… இருக்கவும் கூடாது… பிறந்திருக்கவும் மாட்டார்கள்… பிறக்கவும் கூடாது..
எண்ணங்களில் முடிவில் கண்மணி நிமிர்ந்த போது… அவள் மனமெங்கும் ஒரு மாதிரியான உற்சாகம்… ரிஷியின் பரிமாணங்கள் இவள் அறிந்தது கடலின் துளி அளவே… அவனின் ஒவ்வொரு பரிமாணங்களும்… இவளுக்கு பிரமிப்பே… இன்னும் பல பரிமாணங்களுக்காக காலத்தோடு சேர்ந்து இவளும் காத்துக் கொண்டிருக்கின்றாள்…
இப்படி ரிஷியை பற்றிய எண்ணங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம் ரிஷியின் நினைவுகளைத் தாங்கியவளாக படுக்கையில் படுத்தவளுக்கு இப்போது… அவனின் கையணப்பு… ஞாபகம் வர… இதிலும் ரிஷி வென்றான் என்றே சொல்ல வேண்டும்…
குழந்தையாக இருந்தபோது யார் இவளை மார்போடு தூக்கி வைத்து அணைத்து கொஞ்சினர்.. கொண்டாடினர் என்றெல்லாம் தெரியாது… நினைவு தெரிந்து ரிஷி மட்டுமே… ரிஷியிடம் மட்டுமே அதை உணர்ந்தாள்…
தாயின் அணைப்புக் கூட கிடைக்காத துரதிருஷ்டசாலி கண்மணி என்றால்… யாருமே நெருங்க முடியாத கண்மணியை நெருங்கிய அதிர்ஷ்டசாலி ரிஷி என்ற ரிஷிகேஷ்
கண்களை உறக்கம் மெல்லத் தழுவ… ஒரு முறை அலைபேசியை நிராசையாகப் பார்க்கவும் மறக்கவில்லை… அவன் போன் செய்யவில்லை என்ற கவலையை விட… தனக்கு போன் செய்யக் கூட முடியாமல் அவனை என்ன வேலை சூழ்ந்திருக்கிறதோ என்றுதான் கண்மணி கவலை கொண்டாள்…
மனைவி இங்கு இப்படி இருக்க… ரிஷி கிளைண்ட் மீட்டிங் ஒன்றில் முழுவதுமாக மாட்டிக் கொண்டான்.. முடிந்து வெளியே வரும் போது மணி பத்தரை ஆகி இருக்க…. அவனது மொபைல் ரீங்காரமிட… அந்தப் புல்லாங்குழலின் ஓசையை ரசித்தபடியே மெதுவாக எடுத்தவன் அதை ஆன் செய்யும் முன் அதன் உயிர்ப்பை முடித்து விட.. யாரென்று பார்க்க
பிரேம் தான் அழைத்திருந்தது…
முதன் முதலாக வீட்டுக்கு வந்தவர்களோடு இருந்து அவர்களை கவனிக்க முடியவில்லை… இப்போது இத்தனை மணி நேரம் ஆகி விட்டது… அவர்களை உடன் இருந்து வழி அனுப்பக் கூட முடியவில்லை…
தன்னைத் திட்டிக் கொண்டே பிரேமுக்கு அவனது அலைபேசியில் இருந்து அழைக்க… இன்னுமே பிரேம் மற்றும் மகிளா ரிஷியின் வீட்டில் தான் இருந்தனர்…
“ப்ரோ நீங்க வாங்க… நீங்க எத்தனை மணிக்கு வந்தாலும் இருந்து பார்த்துட்டே போகிறோம்… ஒரு மணி நேரம் தான் ஆகும் வீட்டுக்கு போகிறதுக்கு… இதுல என்ன கஷ்டம்” என்று பிரேம் வைத்து விட… அவனது அன்பில் நெகிழ்ந்து விட்டான் ரிஷி…
சமீபகாலமாக அவன் சந்திப்பவர்கள்… அவனைச் சுற்றிலும் இருப்பவர்கள்… என அனைவரும் நேர்மறை எண்ணங்கள் கொண்ட மக்களே… எதார்த்தமாக அமைகிறதா… எண்ணம் போல் வாழ்க்கை… என்று சொல்வார்களே… அது போல… வாழ்க்கை மாறுகிறதா… நல்ல எண்ணங்கள்… நம்மைச் சூழ்ந்திருந்தாலே போதும்… அதுவே நமக்கான நம் வாழ்க்கைக்கான வழியைக் காட்டும்… அனுபவித்துக் கொண்டிருந்தான் ரிஷிகேஷ்
பிரேமுடன் பேசியவன்… ரிதன்யா மற்றும் தன் அன்னையுடனும் பேசி விட்டு… முடிவில் கண்மணிக்கு அழைக்க முடிவு செய்தான்…
கண்மணியிடம் தன் அன்னையைப் பற்றி.. அவர் உடல்நிலை நலமான சந்தோஷத்தை இதற்குமேல் மறைக்க விரும்பவில்லை… பகிர்ந்து கொள்ளவே விரும்பினான்…
கண்மணியிடம் மட்டும் சொல்லுவோம்… ரித்விகாவிடம் சொல்ல வேண்டாம் என்று கண்மணியிடம் சொல்லி வைப்போம் என்று முடிவு செய்தவனாக… அழைக்க… அழைத்த அடுத்த நொடியே கண்மணியும் உடனே அலைபேசியை எடுத்திருந்தாள்…
ரிஷி லட்சுமியைப் பற்றி சொன்னவுடன்… கண்மணி மிகவும் சந்தோசப்பட்டாள்… அதற்காக துள்ளிக் குதிக்கவில்லை… ஆர்பரிக்கவில்லை… அதாவது கேட்டுக் கொண்டாள்.. தன் குண இயல்புப்படி உணர்ச்சி வசப்படாமல் அவள் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்ள… ரிஷியோ இங்கு தனக்குள் சிரித்துக் கொண்டான்…
இதுதான் அவன் மனைவி… இவ்வளவுதான் அவளது ரியாக்சன் இருக்கும் என்று அவன் அனுமானித்தது போலவே அவளும் நடந்து கொள்ள… கணவனாக அவனுக்குள்ளேயே தனக்கு நூறு மதிப்பெண்கள் கொடுத்துக் கொண்டான்…
அடுத்து ரித்விகாவிடம் தன் அன்னையைப் பற்றி சொல்ல வேண்டாம் என்று சொல்ல… கண்மணியோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை…
”இதெல்லாம் சர்ப்ரைசா ரிஷி… ஒருத்தவங்க ஃபீலிங்ஸோட விளையாடாதீங்க… ரித்விகா ஒவ்வொரு நாளும் தூங்கப் போகும் போதும்… அத்தைகாக ப்ரே பண்ணுவா… இப்போ ப்ரே பண்றதுக்கு பதிலா… அவ அம்மாக்கு நல்லாகிருச்சுனு சொன்னா அவ சந்தோசம் எப்படி இருக்கும்” என்று சொல்ல…
“இல்லம்மா… அவ உடனே பார்க்க வருவேன்னு பிடிவாதம் பிடிப்பா… அதுனாலதான்” என்று ரிஷி இழுக்க
“ப்ச்ச்… ரிஷி.. வீடியோ கால் இருக்கவே இருக்கு… அத்தைகிட்ட பேச வைப்போம்… அப்படியும் பிடிவாதம் பிடிச்சா… அவள நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்…” என்ற போதே
“கிழிச்ச” என்று ரிஷி இப்போது கடுப்பாகச் சொல்ல… அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்று உணர்ந்தவளாக இவளுமே பதிலடி கொடுத்தாள் …
“ஹான்… அவள டூருக்கு நீங்க விட மாட்றீங்கன்னு நான் ஏன் உங்ககிட்ட கேட்கலை… உங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்தேன்… அதே போல டூருக்கு வருவேன்னு அவள் பிடிவாதம் பிடித்த போது அவ உணர்வுக்கு மதிப்புக் கொடுத்தேன்… அதுல தலையிடல… எதுலயும் ஒரு நேர்மை வேண்டும் ரிஷிக்கண்ணா” என்று கண்மணி இப்போது உண்மையைப் போட்டு உடைக்க…
இங்கிருந்தே பல்லைக் கடித்தவன் அவள் கணவனே…
“எனக்குத் தெரியும்டி… ரித்விகிட்ட நீ சொல்ற விதத்தில் சொல்லியிருந்தா அவ கேட்ருப்பா… எங்கேயோ இடிக்குதேன்னு யோசிட்டேன்” என்றவன்
”உனக்கு… நீ என்கிட்ட மாட்டும் போது உனக்கு இருக்கு”
“நான் ஊட்டில இருக்கேன் ரிஷிக் கண்ணா… இப்போதைக்கு உங்ககிட்ட மாட்ட மாட்டேன்” கண்மணி உல்லாசமாக அவனிடம் வம்பிழுக்க…
சில நிமிடங்கள் எதிர்முனை மௌனித்து பின்
“எங்க போனாலும் என்கிட்டதான வரணும்… அப்போ உன்னைத் தனியா கவனிச்சுக்கிறேன்… இப்போ என் தங்கச்சிகிட்ட போனைக் குடுக்கறீங்களா” என்றவனின் உரிமைக் கோபத்தை எதிர்முனையில் இருந்தவளோ ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்...
“கட் பண்ணுங்க… ரித்திம்மாட்ட போய்ட்டு அங்க இருந்து கால் பண்றேன்” கண்மணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“அப்போ ரிதி உன்கூட இல்லையா…” சட்டென்று ரிஷியின் குரல் மாறி இருக்க…
கண்மணி அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லப் போக… சட்டென்று போன் கட் செய்யப்பட்டு… வீடியோ காலாக மாற… திரையில் தெரிந்த ரிஷியின் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்… அதிலும் முகச்சவரம் செய்யப்பட்டு இருந்த முகத்தில்… அவன் தாடை இறுகிய விதம் கூட அப்பட்டமாகத் தெரிய அவன் கோபத்தின் அளவைக் கண்மணியால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது… இவளும் மௌனித்தவளாக ரித்விகா படுத்திருந்த ஹாலுக்கு வந்தவள்…
“ஸ்டூடண்ட்ஸ்லாம் இங்க ஒண்ணாத்தான் படுத்திருக்காங்க ரிஷிம்மா… ஒண்ணும் பயப்படுறதுக்கு இல்லம்மா” அவன் கோபம் உணர்ந்து அவனை ஆறுதல் படுத்த முனைந்தபடியே… ரித்விகா படுத்திருந்த இடத்துக்கு வர… அங்கோ ரித்விகா படுத்திருந்த இடம் காலியாக இருந்தது…
சட்டென்று விளக்கைப் போட்டவள்… அங்கு கண்காணிப்பு பொறுப்பை ஏற்றிருந்த ஆசிரியையை எழுப்பி… விசாரிக்க…
அவரோ.. “இங்குதானே படுத்திருந்தாள் “ என்று சொன்னபடியே அவள் அருகில் படுத்திருந்த மாணவியரிடம் விசாரிக்க…
ரித்வி அவர்களோடு தூங்கிக் கொண்டுதான் இருந்தாள் என்று சொன்னார்களே தவிர… வேறு பதில் இல்லை…
அருகில் இருந்த ஓய்வறையிலும் ஓடிச் சென்று பார்க்க… அங்கும் ரித்விகா இல்லை… கண்மணிக்கே பதற்றம் வந்திருக்க… ரிஷிக்கு எந்த அளவு இருந்திருக்கும்…
தான் பதட்டமானால் ரிஷியும் பயந்து விடுவான் என்று கண்மணி தன் உணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரித்விகாவை சாதாரணமாக தேடுவது போல் பாவனை செய்தபடி இருந்தாள் கண்மணி
அதன் பின் அடுத்தடுத்து ஆசிரியர்கள் என வர… ராஜமும் வந்திருக்க… ரித்விகாவைத் தேட ஆரம்பித்து இருந்தனர்…
“நான் சொன்னேன்ல… எனக்குச் சரியாபடலைன்னு… பெருசா நான் பார்த்துக்கிருவேன்னு சொன்ன” என்று ரிஷி படபடத்த போதே
“ரிஷி… நீங்க டென்சன் ஆகாதீங்க.. ப்ளீஸ்… ரித்வி இங்கதான் இருப்பா” என்றபடி கணவனுக்கு ஆறுதல் கூற…
“இப்போ என்னோட டென்சன் தான் முக்கியமா படுதா உனக்கு… என் தங்கச்சிக்கு மட்டும் ஏதாவதுன்னா… அப்புறம்… “ என்ற போதே…
“ரிதி இங்க இருக்கா மேடம்…”
எங்கிருந்தோ யாருடைய சத்தமோ கேட்டது
கேட்ட கண்மணியும் நிம்மதி பெருமூச்சு விட்டவளாக… சட்டென்று நிலைக்கு வந்தவளாக… ரிஷியைப் பார்க்க..
அவனோ இப்போதும் அதே கோப முகத்துடன் இருக்க…
ரித்விகா வந்த பின் அவளோடு சேர்ந்து மீண்டும் பேசுவதாகச் சொல்லி விட்டு.. போனை அணைத்து விட்டாள் கண்மணி…
/* கர்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவா……ன்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
என் கள்ள காமுகனே அவன் தான் வருவான்
வான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வருவான் வருவா…………ன்
வான் வருவான் வான் வருவா……ன் !*/
Super