top of page

சந்திக்க வருவாயோ? -45

Writer: Praveena VijayPraveena Vijay

அத்தியாயம் 45:


/*நள்ளிரவில் நான் கண் விழிக்க

உன் நினைவில் என் மெய்சிலிற்க

பஞ்சணையில் நீ முள்விரித்தாய்

பெண் மனதை நீ ஏன் பறித்தாய்

ஏக்கம் தீயாக ஏதோ நோயாக

காணும் கோலங்கள் யாவும் நீயாக

வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்*/


புன்னகை முகமாக தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவளை பார்த்த ராகவ்வுக்கு… அதுவரை மனதில் இருந்த எச்சரிக்கை மணியெல்லாம் அதன் டெசிபலைக் குறைத்து…. எங்கோ போய் விட…. இப்போது காதல் மணியின் ரீங்காரம் மட்டுமே இருக்க… அதே சந்தோஷத்தோடு… சந்தியாவைப் பார்க்க


இவனைப் பார்த்ததால் வந்த மலர்ச்சியையும் மீறி அவளது முகத்தில் ஏதோ ஒரு சஞ்சலம் இருந்தார்ப் போலவே தோன்றியது… ராகவ்வுக்கு…. யோசனையில் தானாகப் புருவம் சுருங்கியது….


சந்தியாவின் சஞ்சலத்திற்கு காரணம் தான் தான் என்பதை அவன் அறிவானோ???…. ராகவ்விடம் தன்னை முழுமையாக ஒப்படைக்காமல் இருந்திருந்தால் இந்த குழப்பம் சந்தியாவுக்கு வந்திருக்காதோ என்னவோ… தன் கணவன் முகம் வாடுதலைத் தாங்காமல் தான் அன்று அவனிடம் அவன் மனைவியாகத் தன்னை ஒப்படைத்தது என்ற எண்ணமே அவளை ஆட்கொண்டிருந்தது…. மனைவியாக அவனிடம் எல்லைகளை தாண்டி விட்டிருந்த அவளுக்கு பெண்ணாக சமூகத்தின் கட்டமைப்புகளை தாண்டி விட்டோமா…. என்பதுதான் சந்தியாவினைக் கொல்லும் குற்ற உணர்ச்சியாக மாறி அவளை கொன்று கொண்டிருந்தது… அதிலும் மிருணாளினி சந்தோஷ் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும் போது தாங்கள் மட்டும் எந்தக் கவலையுமல்லாமல் இருப்பது போலத் தோன்றியது வேறு… குற்ற உணர்ச்சியை இன்னும் இன்னுமே அதிகரி்க்க


சந்தியா என்ற தராசு, பெண் மற்றும் மனைவி என்ற இரு பக்கங்களுக்குமிடையே தன்னை சமநிலைப்படுத்த போராடிக்கொண்டிருந்தது….


இந்த போராட்டமெல்லாம்… கணவனைக் காணும் வரையில் தான்… அவனைக் கண்டுவிட்டால்… அந்த தராசு அப்படியே மனைவி என்ற பக்கம் சாய்ந்து விடும் மர்மம் தான் அவளுக்கும் புரியவில்லை…. அந்த மர்மத்தை கண்டுபிடிக்கும் விடை தெரியாததால் தான் இந்த போராட்டமே….


அவளுக்குள் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்த இந்த எண்ணங்கள்… கணவனைப் பார்த்தவுடன்… தானாக தங்கள் ஓட்டத்தை நிறுத்தி… கணவனின் யோசனை பாவத்தை குறித்துக் கொள்ள…


கார்க்கதவைத் திறந்தவள்….

“ரகு.. என்ன இவ்ளோ டீப்பா திங்கிங்…” அவனருகில் அமர்ந்தபடியே ராகவ்விடம் கேட்க…



சற்றுமுன் பார்த்தவனைப் பற்றி சந்தியாவிடம் விசாரிக்க தோன்றியதுதான்…. ஆனாலும் சந்தியா பயந்து விடுவாளோ…. சும்மாவே ஏதாவது யோசித்து குழம்புவாள்… இதில் இதை வேறு சொல்லி…. அதிலும் டெல்லிக்கு தனியாக வேறு செல்கிறாள்…. மீண்டும் அந்தக் கார்க்காரனைப் பார்த்தால்… கண்டிப்பாக அது எதேச்சை கிடையாது…. தன்னை அல்லது சந்தியாவை இருவரில் ஒருவரை.. இல்லை இருவரையுமே தொடர்கிறானா….” கண்டுபிடிக்க வேண்டும்…. என்று யோசித்த போதே….


சந்தியாவைத் தொடர்கிறான் என்று அவனால் நினைக்க முடியவில்லை… ஏனெனில் அன்று தன் காரின் ப்ரேக் வேலை செய்யாததை மனம் போட்டுக் கொடுக்க… ஆனால் அதே நேரம் அவன் காப்பாற்றத்தானே செய்தான் என்றும் தோன்ற… குழப்பம் தான் பதிலாகக் கிடைத்தது… குழப்பமான ஒன்றைப் பற்றி சந்தியாவிடம் சொல்லி அவளையும் குழப்ப மனம் வரவில்லை… சந்தியா டெல்லி கிளம்பட்டும்… அதன் பின் விசாரிக்கலாம்… தீர விசாரித்த பின் சந்தியாவிடம் சொல்வோம் என்று விட்டவன்…


இப்போதிருந்து சந்தியா டெல்லி செல்லும் வரை உள்ள நிமிடங்கள் தனக்கும் தன் மனைவிக்குமான சந்தோஷ நிமிடங்கள்…. அதில் ஒரு நொடி கூட வீணாக்க அவன் மனம் விரும்பவில்லை… அதன் வெளிப்பாடாக…


”ஒண்ணுமில்லை சகி…” என்று சந்தியா கேட்ட கேள்விக்கு பதிலாகக் கூறி புன்னகைக்க…


“இல்லையே… ஏதோ ஒண்ணு இருக்கே… கள்ளத்தனம் தெரியுதே ரகு” புருவம் உயர்த்தினாள் கேலியில்


“ஹ்ம்ம்….அப்டியா ” ரியர் வியூ மிரரில்…. தன்னைப் பார்த்தபடியே தலைக் கேசத்தைக் கோதியபடியே கேட்டவனைப் பார்த்து… கண்சிமிட்டியவள்…


“ஏதாவது தேறுச்சா ரகு… ஹால்ஃப் அன் ஹவர் வெயிட்டிங்ல… “ என்று சீண்டலாய்க் கேட்க…


அவனோ சோம்பலாக கை தூக்கி நெட்டி முறித்தபடி… அவள் அருகில் குனிந்து….


“எங்க… எந்தப் பீஸப் பார்த்தாலும்…. நான் கட்டிக்கிட்ட பீஸ் மாதிரியே தெரியுது… அதுக்கு எதுக்கு பார்க்கனும்… வேஸ்ட்தானே… அதுதான் ஒரிஜினல் பீஸ் வரட்டும்னு வெயிட் பண்றேன்…” சலிப்பாக அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…


“வாட் நான் உனக்கு பீஸாடா…“ கையில் இருந்த ஹேண்ட்பேகிலேயே அடித்தபடி…


“பரவாயில்ல… எப்டியோ சைட் அடிக்காம இருந்தா சரி… நமக்கு அதுதான் வேணும்” என்றபோதே….


“ஐயோ… “ என்று பதற…


“ஏண்டி… என்னடி ஆச்சு” என்று இவனும் பதற…


“நீ பாட்டுக்கு… நான்னு நினைத்து எவ பின்னாடியாவது போயிட்டேன்னா”


“ஹா ஹா… இது வேற இருக்கோ… கொஞ்சம் டேஞ்சர் தான் சகி பேபி” என்று கல்மிஷப் புன்னகை பூக்க… இப்போது உதடு சுளித்தவளாக தோளைக் குலுக்கியவளாக


“ஆனா எனக்கு பயம் இல்லை…. என் புருசன் தான் கை ரேகை நிபுணண் ஆச்சே… ” இதழ் சுழித்து நக்கல் அடிக்க… அந்த இதழ் சுழியில் சிக்கிக் கொண்டவன் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்


“அதுதான் சகி யோசிக்கிறேன்… கையைப் பிடிச்சா சரி… எமோசனல்ல… வேற ஏதாவது பண்ணிட்டேன்னா…” என்றவன்… சட்டென்று அவள் இதழில் லேசாக தன் இதழை வைத்து… ஒற்றியவன்…. அதே வேகத்தில் எடுத்தும் விட்டு…


”இந்த மாதிரி… ஏதாவது நடந்திருச்சுனா” என்றவன் தன் சகியின் கண்களில் கண்ட ருத்திர தாண்டவத்தில்….


“சரி விடு… உதட்டுக்கும் ரேகை இருக்குதானே… யுனிக் ஃபீல் கண்டுபிடிச்சுறலாம் சகி… பட் ஃபீல் பண்ணனும்னா… எக்ஸ்ட்ரா எஃபோர்ட் போடனும் சகி… என்ன நீதான் விட மாட்டேங்கிற…“ என்று கண்சிமிட்டியபடி சமாளித்தவனாக… சொன்னாலும்…. இன்னுமா சந்தியாவின் கைகளால் அடி வாங்காமல் தப்பி இருப்பான்…



“அடேய்… கையை பிடிச்சு பார்ப்ப… சொல்லிருவ… உதட்டை டச் பண்ணி டச் பண்ணி கண்டு பிடிப்பியாடா… நான் போறேன்… என் மொத்த மூடையும் ஸ்பாயில் பண்ணிட்ட…” என்று உஷ்ணமாகவேச் சொன்னவள்… உண்மையிலேயே கொஞ்சம் கடுப்பாக ஆரம்பித்து இருந்தாள் என்றே சொல்ல வேண்டும்…


அதைக் கண்டு கொண்டவனாக… இன்னும் அவளிடம் விளையாடாமல்…..


”சகி…. உன் போனை எடு” என்றபடி கையை நீட்ட…


இவன் இப்போது தன் போனை எதற்கு கேட்கிறான்…. என்று நினைத்த போதே…. சற்று முன் காதம்பரி பேசியதும் ஞாபகமும் வர…


”அய்யோ காதுகிட்ட பேசிட்டு பொய் சொல்றியானு திட்டப் போறானே” என்று மனதுக்குள் அஞ்சியவளாக…. ஆனாலும் வேறு வழி இன்றி அவனிடம் போனை நீட்ட…


ராகவ்வின் கண்களிலும் அவளின் கால் ஹிஸ்டரி தவறாமல் பட்டது தான்… இருந்தும் அதைக் கேட்காமல் நிமிர்ந்து ஒரு முறைப்பை மட்டும் வழங்கிவிட்டு… வசந்தியின் எண்ணை எடுத்து டையல் செய்தவன்... போனை சந்தியாவிடம் கொடுத்தபடியே


“உங்கம்மாக்குத்தான் ரிங் போகுது…. நைட் ஷி்ஃப்ட்…. இன்னைக்கு வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லு” இதைச் சொல்லவேண்டும் என்ற நிர்பந்தம் மட்டுமே அவன் குரலில் இருக்க.. இவளோ


“பொய்யா… நைட் ஷிஃப்ட்டா…” என்று இவள் பதற ஆரம்பிக்கும் போதே வசந்தி போனை அட்டெண்ட் செய்து விட…


இவளின் நைட் ஷிஃப்ட் என்ற வார்த்தையும் வசந்திக்கும் கேட்டு விட…“என்னது நைட் ஷிஃப்டா…. யாருக்கு “ என்றுதான் ஆரம்பித்தார் வசந்தி


சந்தியாவையும் அறியாமல்….


“எனக்குத்தாம்மா….” என்றவளுக்கு பொய் சொல்கிறோம் என்ற எண்ணத்தில் அடுத்த வார்த்தைகள் வராமல் போக…


“உனக்கென்ன நைட் ஷிஃப்ட்…. லேப்டாப் எடுத்துட்டு வந்து வீட்ல தானே பார்ப்ப…. இன்னைக்கென்ன புதுசா” வசந்தி அடுத்தடுத்து கேள்விகளை வீச…. தன் தாயின் கேள்விக்கணைகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை அவளுக்கு…. பட்டென்று போனை கட் செய்தாள் சந்தியா….


“ரகு…” கோபத்தில் பல்லைக் கடிக்க…. அவனோ…. விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்….. சத்தம் இல்லாமலே…


”லூசாடா நீ”…. ராகவ்விடம் கோபத்தில் வார்த்தைகளை விட… இப்போது ராகவ் முகத்தில் புன்னகை மறைந்து… அழுத்தமான முகம் வந்திருக்க…


“ஆமாடி நான் லூசுதான்…. என்கிட்ட மட்டும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எப்படி பொய் சொன்ன…. கா…கா… காது , கா…கா.. கால்… னு மாறல… அப்போ சொன்ன வாய்க்கு இப்போ பொய் சொல்ல வரலையா” என்று பட்டென்று கேட்டவனிடம்..


”ரகு… என் அம்மாகிட்ட நான் பொய் சொல்லி பழக்கமில்லை…” என்றவள்… கொஞ்சம் வருத்தத்தோடு…


“என்னைக்கு உன் பின்னால சுத்த ஆரம்பித்தேனோ…. அப்போதிருந்தே “ என்றவளிடம்


“நான் உன் பின்னால சகி…. என்னைக்கு நீ என் பின்னால வந்த” என்று இவனும் கோபத்தை விடுத்து கண்சிமிட்ட…


“ரொம்ப முக்கியம்…. இப்போ அது பிரச்சனையா…. நான் அம்மாகிட்ட பொய் சொல்ல மாட்டேன்…” அடம் பிடித்தாள் சந்தியா… வசந்தியின் மகளாக…


“சரி…. பொய் சொல்லாத…. உன் அம்மாகிட்ட என் புருசன் கூட இன்னைக்கு நைட் இருந்துட்டு வரேன்னு சொல்லு…. இது உண்மைதானே …” இவனும் கறாராக இருந்தான் சந்தியாவின் கணவனாக…


“கடவுளே...கேட்கவே கேவலமா இருக்கு” தலையிலடித்த சந்தியாவிடம்…


“தெரியுதா…. பொய் டீசண்டா இருக்குதானே… இப்போ நம்ம இருக்கிற நிலைமைக்கு… பொய் தான் சொல்லனும்… அப்புறம்…. எவ்வளவு தைரியம் உனக்கு…. உனக்கு நான் முக்கியமில்லை அப்படித்தானே… உன் அம்மாகிட்ட பொய் சொல்லமாட்ட…. ஆனால் என்கிட்ட பொய் சொல்லுவ…” சந்தியாவுக்கான தன் உரிமையின் இரண்டாவது இடம் குறித்து பொறாமையில் வெகுண்டெழ… சந்தியா திரு திருவென்று விழித்தாள் இப்போது…. என்ன சொல்வதென்று தெரியாமல்…


ராகவ்வுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் போதே…. வசந்தியிடமிருந்து கால் வர…. ராகவ்விடமிருந்து, அவனது கேள்வியில் இருந்து… தப்பிக்கும் முயற்சியில் வேகமாக அட்டெண்ட் செய்ய…. அவளை முறைத்தபடியே ஸ்பீக்கரில் மோடை மாற்றினான்…


“சந்தியா போன் கட்டாகிருச்சு….” என்றபடியே….


”நைட் ஷிப்ட்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு வா… இல்லை லேப்டாப்பை எடுத்துட்டு வந்து வீட்ல வேலை பாரு…. இவ்ளோ நாள் இல்லாத பழக்கம் என்ன… அதுவும் இப்போ பார்த்து… மாப்பிள்ளை என்ன நினைப்பார்….” கேட்ட சந்தியாவுக்கு தலையிலடித்துக் கொள்ளலாம் போல இருந்தது


“யம்மா…. ஏன்ம்மா இப்படி படுத்துற…. உன் புருசன் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டார்…. உனக்கு என்ன ஆச்சு… இவ்ளோ கேள்வி இன்னைக்கு” என்று சந்தியா சலிக்க….


“அதெல்லாம் அப்போ சந்தியா…. இப்போ நீ இன்னொரு வீட்டுக்குப் போயிட்ட.. நீ என் பொண்ணு மட்டும் இல்லை… அது மட்டும் இல்லாமல் மாப்பிள்ளை கூட சேர்ந்து இருந்திருந்தேன்னா… நான் எதுக்கு இவ்வளவு கேள்வி கேட்கிறேன்…” என்ற போதே ராகவ் அவள் காதுக்குள் கிசுகிசுத்தான் தன் பங்குக்கு...


”நோட் மை லார்ட்… அவங்க பொண்ணு மட்டும் இல்லையாம்… ராகவ்வோட பொண்டாட்டியும்” வேகமாக அவனைத் தள்ளி விட்டவளாக


“ஆமாமா உன் மாப்பிள்ளை கூட அவர் வீட்ல இருந்திருந்தேன்ன்னா…. இந்த நைட்ஷிப்டே இருந்திருக்காதே” என்று மனதுக்குள்ளாக தன் தாய்க்கு பதில் சொன்னவள் …


“ப்ச்ச் அம்மா... இன்னிக்கு நான் இங்கதான் இருக்கனும்…. சொன்னா புரிஞ்சுக்கோ.. படுத்தாதா” என்ற போதே வசந்தி இன்னும் ஏதேதோ கேட்க…


வசந்தியிடம் பேச முடியாமல்…. ராகவ்வைப் பார்த்து முறைத்து வைத்தவள் ஒரு வழியாக வசந்தியைச் சமாதானப்படுத்தி… போனை வைக்கப் போக….


“சந்தியா… சந்தியா…. போனை வச்சிறாத…. என்னமோ பண்ணு…. ஆனால் மாப்பிள்ளைகிட்ட சொல்லிட்டு பண்ணு….. அவர்கிட்ட சொல்லிட்டியா…. அவர் சரின்னு சொல்லிட்டாரா…”


”சொல்லிட்டேன்மா…. பைமா… சாப்பிட்டுத் தூங்கு…. மறக்காமல் டேப்லெட் எடுத்துக்க” என்று வைத்தவள்… ராகவ்வைப் பார்க்காமல் அமைதியாக ரோட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்…


சில நிமிடங்கள் கழித்து… தானாகவே ராகவ்விடம் பேச ஆரம்பித்தாள்… அவனைப் பார்க்க பிடிக்காமல்…. தன்னையே பிடிக்காமல்


“எனக்கு என் அம்மாவை ஏமாத்துறது…. அவங்ககிட்ட பொய் சொல்றது பிடிக்காது ரகு…. ப்ளீஸ் ரகு,... இன்னொரு தடவை இந்த மாதிரி என்னை பண்ண வைக்காத…. அவங்க உலகம் நானும் சந்தோஷும் மட்டும் தான்…. ஏற்கனவே சந்தோஷ் வேற தேவையில்லாதத பண்ணி…. அம்மா மனசைக் கஷ்டப்படுத்திட்டான்… இப்போ நானும் வேற அவங்களுக்குத் தெரியாம என்னென்னமோ பண்ணிட்டு இருக்கேன் ” என்றவள் குரல் மாறுபாடிலேயே….அவளின் மனநிலையை புரிந்து கொண்டவனாக… அவளைத் தன்னருகில் இழுத்து கொண்டவன்….


“நானும் வேணும்னு பண்ணலை சகிம்மா… புரிஞ்சுக்க ட்ரை பண்ணு…. நாளைக்கு உன்னை மீட் பண்ண முடியாது… எனக்கு இன்னைக்கு இருக்கிற டைம்ல ஒவ்வொரு நொடியும் முக்கியம்….“


இறுகிய அவனது அணைப்பு அவனின் பிரிவின் வேதனையை உணர்த்த சந்தியாவும் புரிந்து கொண்டவளாக அவன் தோள் சாய்ந்தாள்…. அவனுக்கு இருக்கும் அதே வேதனை தனக்கும் என்பதை புரிய வைத்து விடும் விதமாக….


மோக நிலையையும் மிஞ்சி விட்ட மோன நிலையாக அந்த நிமிடங்கள் இருக்க…. அப்போது ரகுவின் மொபைல் ஒலி எழுப்ப…. சந்தியாவை அணைத்தபடியே அதை எடுத்துப் பார்த்தவன்…. இப்போது அதை சந்தியாவிடம் காட்ட… அது யாரென்று பார்த்தவள்... புன்னகைத்தாள்…


“பேசுங்க” என்றபடி அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள்… இவனும் ஸ்பீக்கர் மோடுக்கு மாற்றியபடி


“சொல்லுங்க அத்தை…” என்றான் முதன் முறையாக வசந்தியிடம்….


எதிர்முனையில் அப்பாவியாக வசந்தி சந்தியாவின் நைட் ஷிப்டைப் பற்றி சொல்ல…


“தெரியும் அத்தை…. இப்போதான் உங்க பொண்ணு போன் பண்ணினா…. நானே நாளைக்கு காலைல பிக் அப் பண்ணி வீட்ல கொண்டு வந்து விடுகிறேன்….” என்றான் மிக மிக நல்ல பிள்ளை குரலில்…


“இல்ல தம்பி…. அவ தனியா இருந்ததே இல்லை…. வெளிநாடு ஆஃபர்லாம் வந்த போது கூட போகல அவ…. டெல்லி வேற போறா…. இன்னைக்கு நைட் ஷிப்ட்னு திடிர்னு சொல்றா…. மனசே சரி இல்லை ரகு…. என்னமோ மனசு கெடந்து அடிச்சுக்குது…. என் பொண்ணுக்கு ஏதோ தப்பா நடக்கப் போகுதோனு…. அவகிட்ட கூட என்னால சொல்ல முடியல…. ” என்ற வசந்தியின் தவிப்பான வார்த்தைகளில் உண்மையாகவே கலவரம் ஆனவன் என்னவோ இவன் தான்…


வசந்தி எப்போதுமே தன் பயங்களை சந்தியாவிடம் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தவர்… இப்போது தன் மருமகனிடம் ஆரம்பித்திருக்க… அது தப்பாமல் இவனையும் தாக்கியதுதான்….


ஆனாலும் அவனது கலக்கத்தை மறைத்துக் கொண்டவனாக…


“அத்தை…. இவ்வளவு நீங்க சஞ்சலப்படுறீங்கன்னா…. நான் அவ ஆஃபிஸ்ல இருந்து அவ வேலை முடிக்கிற வரை இருந்து கூட்டிட்டு வருகிறேன்…“ என்ற சமாதானப்படுத்தும் விதமாக பேச…


சந்தியா புருவம் உயர்த்தினாள்…


தன் மருமகனின் வார்த்தைகளில் வசந்திக்கு இப்போது நிம்மதி மட்டுமே இருக்க…


“அய்யோ அதெல்லாம் வேண்டாம் தம்பி….” என்று படபடத்த வசந்தி…


“அந்த அளவுக்கெல்லாம் என் பொண்ணு தைரியம் இல்லாதவ இல்லை…. எனக்குத்தான் தைரியம் இல்லை… அவள ஏதாவது சொல்லி சொல்லி பயமுறுத்தியே வச்சுட்டேன்… இப்போதான் என் பொண்ணுக்கு நீங்க இருக்கறீங்களே அதுவே எனக்கு நிம்மதி…” என்று சந்தோசமாக போனை வைக்க…. போனை கட் செய்தவன்…


“ஹப்பா… அம்மா பொண்ணு பாசம்… முடியலைடா ரகு…. இங்க பொண்னு… அம்மா அம்மான்னு உருகுது….. அங்க அம்மா… பொண்ணு பொண்ணுனு உருகுறாங்க…. ரகு…. உன் நிலைமை கஷ்டம் தாண்டா” கொஞ்சம் கிண்டல்… கொஞ்சம் சலிப்புமாக… சந்தோஷமாக அவளைச் சீண்ட…. பதிலுக்கு முறைத்தாள்… சந்தியா


“என்ன முறைப்பு…. நீயே சொல்லு சகி…. இந்த பத்து நாள்ள என்னைக்காவது ஒருநாள் என்கிட்ட ஐ லவ் யூ ரகுனு சொல்லிருக்கியா நீ…. “ ஏக்கமாகக் கேட்டான் ராகவ்… பார்வையிலும் அதே ஏக்கம்…


“ஐ லவ் யூன்ற வார்த்தைலதான்… அதைச் சொல்றதுலதான் காதல் இருக்கா ரகு...” சட்டென்று கேட்டாள் சந்தியா, அவன் கண்களை நோக்கியபடியே…


இவன் பதில் சொல்ல வில்லை… அவளை ஒரு முறை ஆழ்ந்துப் பார்த்தான் அவ்வளவே… அதற்கு மேலும் பேசாமல்…. காரைக் கிளப்ப….


அவனின் அந்தப் பார்வை இவளை ஊடுருவிய போதும்…


தேவையில்லாத தருணங்களில்…. விருப்பமின்றி அவனிடம் சொன்ன அந்த வார்த்தைகளை…. இப்போது சொல்ல அவளுக்கு விருப்பமில்லை


தன் முன்னாலேயே தன் கணவன் இன்னொருத்திக்கு சொன்ன அந்த வார்த்தைகள் பெரிய முக்கியத்துவம் கொண்ட வார்த்தையாக இவளை உணரவைக்க வில்லை….


ஆனால் ரகு தன் மனைவியிடம் அதை எதிர்பார்க்கின்றான்…. அது சந்தியாவுக்கு தெரியாமல் இல்லை… ஆனால் சொன்னால்தான் காதலா… அந்த வார்த்தைகள்தான் தன் காதலை இவனிடம் உணர வைக்க முடியுமா… இவள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள்…


---


அந்தி சாய்ந்து செவ்வானம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்க…. சாலையோர விளக்குகள் உயிர் பெற்றிருக்க…. ராகவ் அமைதியாகவே காரை ஓட்டி வந்து கொண்டிருந்தான்….


சந்தியாவாகவே அனுமானித்து வைத்திருந்தாள்…


கண்டிப்பாக அவர்கள் வீட்டுக்குச் செல்ல வில்லை…. ஏதோ ஒரு ஹோட்டெல்…. இல்லை ரிசார்ட்டுக்குத்தான் கூட்டிக் கொண்டு போகிறான் என்று…. அதை உறுதிப் படுத்தும் விதமாக பைக்கில் வராமல் காரில் வந்திருக்க…. மறுபடியும் மனமென்னும் வேதாளம் முருங்கை மரம் ஏறத் தொடங்கியிருந்தது சந்தியாவுக்குள்…. இது தேவையா தவறில்லையா பெண்ணாக தராசு தன் பக்க நியாயத்திற்காக போராட ஆரம்பிக்க... வெல்ல முடியவில்லை…. இருந்தும் கணவனுக்காக சகித்துக் கொள்ள ஆரம்பித்து இருந்தாள் ரகுவின் சகி….. ஹனி மூன் என்று போனால் ஹோட்டல் ரெசார்ட் என்று தங்க மாட்டோமா…. அது போலத்தான் இதுவும் என்று தன் மனதுக்கும் வேறு தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு…. அமைதியாக வந்து கொண்டிருந்தவள்…


“எக்ஸ்கியூஸ்மி…. புருஷா….. உங்க பொண்டாட்டிய எங்க தள்ளிட்டுப் போறிங்கன்னு தெரிஞ்சா…. உங்க பொண்டாட்டிக்கு கனவு காணுறதுக்கு லொகேஷன் தேடற வேலை மிச்சம்…. கொஞ்சம் சொல்றீங்களா…” தன் குறும்பு முகத்தை காட்ட ஆரம்பித்தாள் கணவனிடம்… தான் குழம்பிக் கொண்டிருக்கும் கனமான நிமிடங்களைக் கடக்க… தன் குறும்பை ஆயுதமாக எடுத்திருந்தாள்…


”நக்கல் அதிகம்டி உனக்கு…” சாலையில் கவனம் வைத்தபடியே இவனும் பதில் சொல்ல...


“அது தெரிஞ்ச விசயம் தான்…. ஆனால் என்ன டவுட்னா…. இந்த சல்வார்லலாம் சார்க்கு ஹார்மோன் வொர்க் பண்ணாதுனு வேற சொன்னிங்க…. தள்ளிட்டு போய் என்ன பிரயோசனம்…. அது வேற யோசனை ஓடிட்டு இருக்கு ட்ரிப்பிள் ஆர் மச்சான்….” நன்றாகத் அவன் புறம் திரும்பிப் பார்த்து… அவனை ஓட்ட ஆரம்பிக்க


இப்போது அவள் சொன்ன வார்த்தையில்… சட்டென காரையே நிறுத்தி இருந்தான் ராகவ்


“அடிப்பாவி…. விட்டா உன் புருசன…. ஒண்ணத்துக்குமே லாயக்கில்லாதவன்னு தம்பட்டம் அடிப்ப போல…. காலையில வேலை இருக்குனு அதைச் சொல்லி உன்னை கஷ்டப்படுத்தக்கூடாது சும்மா ஒரு பேச்சுக்கு உன்னை டைவர்ட் பண்ணா… எனக்கே ஆப்படிப்பியாடி நீ…. சல்வார்.. சேலை எல்லாத்துக்கும் மேல அடுத்த கட்டம்னு ஒண்ணு இருக்கு சகி…. அது தெரியாதா உனக்கு…. அப்போ என் ஹார்மோன் ” என்று அவன் ஆரம்பிக்க…


வேகமாக தன் காதுகளைப் பொத்தியவள்…. மந்தகாசமாக சிரித்தபடி இன்னும் பேசிக்கொண்டிருக்கும் அவன் உதடுகளின் அசைவைப் புரிந்தவளாக…


தன் காதிலிருந்து கையை எடுத்தவள்… அவன் வாயை மூட…. அவனும் நிறுத்தினான்…. ஆனாலும் அவன் முகம் இன்னும் மந்தகாசத்தை நிறுத்தாமல் இருக்க… இவள் முகத்தை நாணம் சூழ்ந்து கொள்ள…. அதை மறைக்கும் வழி இன்றி அதற்கு காரணமானவனிடமே சரணடைய….. அவளின் சரணடைதலில்… இவனோ உருகினான்


“லவ் யூ சகி” காதலில் தோய்ந்து வெளிவந்தன வார்த்தைகள் ராகவிடமிருந்து…


கைகளும் கால்களும்…. ஓட்டுனர் வேலையைச் செய்ய… அவனது கண்களோ சாலையைப் பார்ப்பது போல பொய்மை காட்டியிருக்க… அதில் இருந்த பளபளப்பு அவனது கண்களை மின்னச் செய்து… உண்மையை அதன் வருத்தத்தை அவளிடமும் கடத்தி இருக்க… சந்தியாவுக்குள்ளும் அதே நிலை… உணர்வுகளின் மொத்த குவியலாக இருந்த அந்த ஜோடிகளின் பிரிவுத் துயரை அவர்கள் மட்டுமே உணர்ந்திருக்க….


ராகவ் தான் நிதானத்திற்கு வந்து…. அவர்கள் வந்த வழியில் இருந்த மிகப்பெரிய மாலின் முன் நிறுத்தினான்


“சந்தியா…. உனக்கு நான் எதுவும் வாங்கிக் கொடுத்ததே இல்லை…. ட்ரிப்புக்குத் உனக்கு என்ன வேண்டுமோ அதை பர்சேஸ் பண்ணிக்கோ “ என்றவன்….


தனது கார்டை அவளது கையில் கொடுத்தபடி….


“மேடம்…. 2 ஹவர்ஸ் ஒன்லி…. லிமிட்டெட் டைம் …. மைண்ட்ல வச்சுக்கங்க” என்று சிரிக்க… சந்தோஷமாக… வேகமாக கட்டை விரலை உயர்த்தினாள் அவனது சகியும்…


சொன்னது போலவே இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே தனக்குத் தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்தவள்…. பில் தொகையைக் கட்டிவிட்டு…. கணவனின் கார்டை அவனிடமே திருப்பிக் கொடுக்க…


“நீயே வச்சுக்க சந்தியா….“ என்றவனிடம்…. மறுத்து அவனிடமே கொடுத்தவள்…


”ஹஸ்பண்ட் கிட்ட இருந்து வாங்கி செலவு பண்றதுலதான் கிக்கே இருக்கும் ரகு…. அன்னைக்கு பட்டுச் சேலை எடுக்கும் போது…. இவ லிமிட் தாண்டி எடுத்துருவாளோனு லைட்டா ஜெர்க் ஆனீங்கள்ள…. அந்த மாதிரி….. ஷாப்பிங் பண்ணும் போது பசங்க டென்சனைப் பார்க்கும் போது… பொண்ணுங்களுக்கு வருகிற கிக்கு இருக்கே அது வேற லெவல் பாஸ்” என்றவளைப் பார்த்து….


“ஷப்பா…. நீ மாறவே இல்லடி…. அராத்துடி நீ….” என்றவன் அப்போதும் எங்கு செல்கிறோம் என்று சொல்லவில்லை…


போகின்ற வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்தியவன்… டிஷுயூவை அவளிடம் நீட்டி அவள் முகத்தை துடைக்கச் சொன்னவன்…


”லைட்டா டச்சப் பண்ணிக்க சந்தியா… உன்கிட்ட இருக்குதானே…” என்றபோது இவள் குழம்பினாள்தான்… இருந்தும் தன் ஹேண்ட்பேக்கில் வழக்கமாக வைத்திருக்கும் அலங்காரப் பொருட்களின் உதவியுடன் ஐந்தே நிமிடத்தில்… தன்னை அழகுபடுத்திக் கொண்டு அவனிடம் திரும்பியவள்…


“என்னை வீட்ல விட்டு… மேக்கப் போடச் சொன்னாலும் இவ்வளவுதான் போட்டுட்டு வந்திருப்பேன்… இதுக்கும் மேல தெரியாது…” என்று பரிதாபமாகச் சொன்னவளிடம்


கட்டைவிரலை உயர்த்திக் காட்டி திருப்தியாக புன்னகைத்தவன்…


“ஐ வாண்ட் மேக் யூ டூ பி ஃப்ரெசன் அப் … மத்தபடி வேறதுக்கும் இல்லை” என்றவன்…


காரில் மியூஸிக் சிஸ்டத்தை ஆன் செய்ய… வேகமாக


“ரகு ரகு ப்ளீஸ்… உன் சாங்க் செலெக்ஷன்லாம் காதை வலிக்க வைக்கும்… ப்ளீஸ் ப்ளீஸ் வேண்டாம்..” பரிதாபமாகக் கெஞ்சியவளிடம்….


”ஹலோ நிச்சயதார்த்த வீடியோல… ‘கண்ணா வான்னு” நீ மெல்லிசையில என்னைக் கொல்லாமல் கொன்ன போது நான் ஏதாவது சொன்னேனா… கேட்கலை…. நவ் மை டர்ன் பேபி… “ என்று இடது கண்ணை சுருக்கியவன்.. சந்தியா புறம் திரும்பி… தனது இடது கையின் விரல்களை கன் போல் நீட்டியபடி… அவளது வலது நெற்றிப் பொட்டில் இருந்த தழும்பின் மேல் வைத்து … ட்ரிக்கர் பாயிண்ட்டை வைத்து அழுத்துவது… போல நடித்தவன்…


“எனை நோக்கிப் பாயும் தோட்டா” என்று கண் சிமிட்டியவன்…


”இட்ஸ் நாட்ஸ் கோன்னா… ஹர்ட் பேப்… இட்ஸ் கோன்னா ஷூட்” என்றவனிடம்…


அவனின் வார்த்தையாடலில் பக்கென சிரித்தவள்…


“என்னை கன் பாயிண்ட்ல நிறுத்திட்டு அப்புறம் எப்படிடா தோட்டா உன்னை நோக்கி பாயும்…” தன் வழக்கமான பாணியில் அவனைக் கலாய்க்க ஆரம்பிக்கும் போதே…


"அது படத்தோட பேருனு சொன்னேன்டி..” என்றவன் சிறிது இடைவெளி விட்டு…


“அப்படி ஒரு நிலைமை வந்தால்… நான் உனக்கு முன்னால் அந்த குண்டடியை வாங்கிக்குவேன் "


இப்போது அவன் வார்த்தைகளை அவள் ஏனோ ரசிக்க வில்லை.. அதில் சந்தியா அமைதியாகி விட… அப்போது


ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..

ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..

ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே…..”



சத்தமாக அவள் காதருகே ஒலித்த பாடலோடு இவனும் பாட.. அவனின் அதிரடியில் இவள் … தன் நிலைமை மீண்டு எழ…


இவனோ உற்சாக தொணியில் ”நவ் யுவர் ட்ர்ன் சகி பேபி ஐ மீன் ஃபீமேல் வாய்ஸ்… ஹ்ம்ம் பாடு…” என்று ஊக்குவிக்க… இவளுக்கோ…


“வார்த்தை தெரிந்தால்தானே பாட முடியும்… பாடு பாடுன்னா எங்கே பாடுவது…” என்று நினைத்தவாறு ஒலித்த வரிகளில் கவனம் வைக்க…


“திருடாதே திருடாதே

என் நெஞ்சம் வேண்டும் எனக்கு

வருடாதே வருடாதே

உன் விழிகள் குளிரும் நெருப்பு

எனதுள்ளம் எனதுள்ளம்

அதில் கள்ளம் இப்போ எதுக்கு

இருந்தாலும் இருந்தாலும்

நீ அருகில் வந்தால் கிறுக்கு

விரல் நகங்களை கடித்தேன்

வீம்பு வந்தாலும் மறைத்தேன்

வெளியிலும் கொஞ்சம் நடித்தேன்”


இரவு சூழ்ந்ததே தெரியாதே

நிலவு வந்ததும் தெரியாதே

வெளியே என்னதான் நடந்தாலும்

எதுவும் புரியாதே…..ஏ…..

கதவு திறந்ததும் தெரியாதே

காற்று வந்ததும் தெரியாதே

களவு சென்று யார் போனாலும்

அதுவும் தெரியாதே”


அமைதியாக பாடலைக் கேட்டபடியே… துள்ளளுடன் இருக்கும் தன்னவனைப் பார்க்க…. அவனோ அடுத்து வந்த ராப் வார்த்தைகளை அதே ரிதத்தில் வாசிக்க ஆரம்பித்து இருந்தான்…



சகி… இதுக்கு சங்கீத ஞானம் தேவையில்ல…” … என்றான் நக்கலாக கண்சிமிட்டியபடியே



தள்ளாடி கோட்ட பீச் பார்ட்டி

மச்சி ஆடி தக்காளி

லேடி கில்லாடி

ஒன்னா கூத்தாடி

செம கச்சேரி

பக்கத்துல ஜூஸ் கிளாஸ் இருக்கு

தொட்டுகத்தான் ஊறுகாவும் இருக்கு


அப்படியே ரிப்பீட் அடித்தான் ராகவ்… இல்லை கத்தினான் என்றே சொல்ல வேண்டும்… பெரிதாக மெனக்கெடாமலேயே… இசை கற்றுக் கொள்ளாத அவனது குரலிலேயே அது அழகாகத்தான் வெளி வந்தது…


வழி எங்கும் உன்னை பார்த்தேன்

விழி ரெண்டில் கோளாறோ

கனவெங்கும் சிரிக்கின்றாய்


கமலாலயம் கண்தானோ

பதில் சொல்ல தெரியாமல்

தடுமாறி சிரிக்கின்றேன்

எதில் சென்று முடிந்தாலும்

சரி என்று நினைக்கின்றேன்”


ரசித்துப் பார்த்தாள் விழி அகற்றாது தன் ராகவரகுராமனை…. அவனின் வேற கோணத்தை….



ரகசிய விழியில் தெரியும்

ரசனைகள் மெதுவாய் புரியும்

தொலையுது இதயம்

அது தெரிந்தேதான் நிற்கின்றேன்

அருகினில் வரவா வரவா

அனுமதி பெறவா பெறவா

அணைத்திட நினைத்தால் அது தவறா தவறா”



மொத்ததில் அவன் குரலில் அப்படி ஒரு துள்ளல்… அவனின் வேகத்தைப் போலவே காரும் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல…. அவனின் இந்த உற்சாக முகத்தை…. கண்களால் நிரப்பியபடியே மெய் மறந்து வந்தவள்.. ஒரு கட்டத்தில் அவளையுமறியாமல்… அந்தப் பாடலில்… அவளும் ஒன்ற ஆரம்பிக்க… அதில் அவள் தோள்களும்… அந்த துள்ளளிசைக்கு ஈடாக நடனமாட ஆரம்பிக்க… ராகவ் கண் சிமிட்டிச் சிரித்தான் இப்போது…


இரவு சூழ்ந்ததே தெரியாதே

நிலவு வந்ததும் தெரியாதே

வெளியே என்னதான் நடந்தாலும்

எதுவும் புரியாதே…..ஏ…..

கதவு திறந்ததும் தெரியாதே

காற்று வந்ததும் தெரியாதே

களவு சென்று யார் போனாலும்

அதுவும் தெரியாதே”



”தட்ஸ் மை பேபி… இதே ஃபீலோட இதே எனர்ஜியோட… இப்போ இங்க நமக்கு நடக்கப் போற பார்ட்டிலயும் மெர்ஜ் ஆகுற” என்று பாடலை நிறுத்தியவன்…. காரையும் நிறுத்தியபோது… அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் பார்க்க… இவனும் அவளிடம் தன்னிடம் பதிந்திருந்த பார்வையைத் திருப்பி… முன்னால் பார்க்கச் சொல்ல…


அவளுக்கு புரிந்தது… என்ன சொல்கிறான் என்று… நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டெல் முன் நின்றிருந்தது வாகனம்…


காரை விட்டு இறங்கியவன்… தன்னவளையும் இறங்கச் சொன்னபடி.. காரை பார்க் செய்யக் கொடுத்துவிட்டு… சந்தியாவோடு… அவளின் இடையில் கை போட்ட படி… உள்ளே நுழைய…


அவளின் அதிர்ந்த பார்வையில்..


“பழகலையா இன்னும்” காதில் உரசிச் சென்றன வார்த்தைகள்… பேசினானா இல்லையா எனும் படி…


இவளோ…


“உனக்கு அறிவிருக்காடா… முன்னமே சொல்லிருக்கலாம்ல…. இந்த மாதிரி இடத்துக்கு வர்ற மாதிரினாலும் ட்ரெஸ் போட்ருப்பேன்ல…”


”ரியலி…” என்றவன் பார்வையில் என்ன இருந்ததோ…


”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…. நீ நீயா வா… அதுதான் எனக்கு வேணும்… தென் இது சர்ப்ரைஸ்…அப்புறம் எப்படி சொல்வேன்” என்ற போதே….


“கிழிச்ச… எங்க கூப்பிட்டால், இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் நான் வருவேனா மாட்டேன்னு பயந்துட்டு… சொல்லாம கொள்ளாமல் தள்ளிட்டு வந்துட்டு…. சர்ப்ரைஸாம் சர்ப்ரைஸாம்” அவன் மனதில் என்ன நினைத்து அவளிடம் சொல்லாமல் கூட்டி வந்தானோ… அதைப் அப்படியே சொல்ல…


ராகவ்வுக்கோ… அப்படியே ஆச்சரியத்தில் கண் விரிய…. இவளோ “இப்போ ஒரு பழமொழி ஞாபகம் வருது ரகு… பட் ஆனால் உனக்கு செட் ஆகாது…”


“தெரியும்… தெரியும்…. தட் மீசை மண்ணு பழமொழிதானே… புரியுது புரியுது” மீசையைப் பற்றி கூறியதில் கடுப்பாக ஆனதில்… கைகள் இடையை விட்டு இப்போது தளர்வாக மாறி இருக்க…. அது புரிந்தவளாக


“சரி சரி… வா போகலாம்” என்று அவன் கைகளை மீண்டும் தனது இடையைச் சுற்றிப் போட்டுக் கொள்ள…


”நாம இவள கூட்டிட்டு வந்தோமா… இல்லை இவள் நம்மள கூட்டிட்டு வந்தாளா…” சந்தேகம் அவனுக்குள் வந்திருந்தது இப்போது இவனுக்குள்


அவனோடு நடந்தபடியே வந்தவளுக்கு இப்போது ஒன்று தோன்ற


“மவனே… உள்ள போனதும் இந்த கண்ணு எவளனாச்சும் மெஷர்மெண்ட் எடுத்துச்சு…” என்ற போதே ராகவ் ஏதோ சொல்ல வாயெடுக்க..


“பொத்து…. இந்த கலைக்கண்… இதெல்லாம் சொல்லி கடுப்பேத்தாத என்கிட்ட… ஃபர்ஸ்ட் நைட்லயே உன்ன வச்சு செஞ்சுருக்கனும்… புடவை ப்ளவுஸ்னு எடுத்துக் கொடுத்து…. என்னை மயக்கிட்டேன்னு நினைக்கிறியா…” என்ற போதே…


“கள்ளி… கண்டுபிடிச்சுட்டியா… உன் ரகு மாம்ஸோட லேசர் கண்ண” என்ற போதே… தனது ஹை ஹீல்ஸ் காலால் அவனில் காலில் நன்றாக மிதித்து வைக்க…


அவனும் ஷூ போட்டிருந்ததால் தப்பித்தான்… ஆனாலும்


“ஆ… கொல்றாளே” என்று பொய்யாக அலறியபடி… அவளோடு லிஃப்டின் முன் வந்து நின்றவனுக்கு.. இப்போது அனிச்சையாகவே குகனின் முகம் மனதில் வர… ஒரு முறை சுற்றுப்புறத்தை அவனையுமறியாமல் நோட்டமிட ஆரம்பித்து யாரும் இல்லாமல் போக…. மனம் நிம்மதி அடைய…. லிஃப்ட்டினுள் உள்ளே நுழைந்தவன்… திருமணத்திற்கு முன்பே… அவளிடம் அந்த குறுகிய நான்கு சுவர்களுக்குள் வம்பிழுத்தவன்… இப்போது மட்டும் சும்மா இருப்பானா…. லிஃப்ட் அவர்கள் செல்லவிருக்கும் தளத்தில் நின்ற போது வெளியில் வந்த சந்தியாவின் முகம் செவ்வானமாகியிருந்தது…


இவனின் அலுவலக நண்பர்கள்… ராகவ்வுக்குத் தெரிந்த முக்கிய விளம்பர உலக நண்பர்கள் என அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட… இவர்களுக்கான பார்ட்டி… அந்த பார்ட்டி ஹாலுக்குள் நுழையும் போதே….


ஒரு நிமிடம் நின்றவன்… தயங்கியவனாக


“சந்தியா… மேனேஜ் பண்ணிருவேல்ல.. உனக்கு இது புதுசு….” என்று அவள் முகத்தைப் பார்த்து சங்கடமாகக் கேட்க…


“நீ இருக்கேல்ல ரகு… ஐ வில் மேனேஜ்” என்று தைரியமாகச் சொன்னபடி உள்ளே நுழைந்தாலும்… அந்தக் கூட்டத்தைப் பார்த்தவளுக்கு… உள்ளுக்கு பய அலைதான்… இருந்தும்… பில்டிங் ஸ்ட்ராங்க்… பேஸ்மெண்ட் வீக்… என்ற தாரக மந்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அனைவரையும் பார்க்க…


“ஹேய்…. ராம்….” என்ற ஆரவாரம்…. ஆர்பரித்தது ராகவ் அந்த ஹாலுக்குள் காலை வைத்த போது…. ஆண் பெண் என பேதமே இல்லாமல் அத்தனை பேரின் கைகளிலும்… அழகான கண்ணாடி குவளைகள்… வண்ண வண்ண பானங்கள்… ஜோடி ஜோடியாக வேறு… அங்கிருந்த பெண்களின் உடைகள்.. நீ என்னை அளவெடுக்கவே வேண்டாம்… என் அளவுகளை நானே காட்டுக்கிறேன் என்ற பாணியில்…


ஆடை பாதி ஆள் பாதி என்ற வார்த்தைகள் கூட இல்லை… ஆடை கால்… என்று சொல்லலாம்…. எதை மறைக்க வேண்டுமோ… அதைத் தவிர மற்றவற்றை மறைக்கும் உடைகள்… சந்தியா அங்கிருந்தவர்களைப் பார்த்து மிரளவில்லை… சற்று சலிப்புடன் ராகவ்வோடு வர…


அங்கிருந்த ஆண்களில் பெரும்பாலான ஆண்களின் பார்வைகளோ…. இயல்பிலேயே அவர்கள் பார்வை அப்படித்தான் என்பது போல… அளவெடுக்கும் கூர்மையான ஊடுருவும் பார்வைகள்… ராகவ்வின் மனைவி என்றெல்லாம்… இவளைக் கூட விட்டு வைக்க வில்லை…. இப்போது தெரிந்தது… ராகவ் ஏன் தயங்கினான் என்று….


“ஹே மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராம்” என்று ரூபன் வந்து இவர்களை வரவேற்க… சந்தியாவை விடமிருந்து கையை எடுக்காமலேயே… அவளோடேயே சேர்ந்து நின்றபடியே ராகவ்…. அனைவரிடமும் பேச ஆரம்பித்தான்…


வழக்கமான கேக் கட்டிங்… இவன் அவளுக்கு ஊட்ட… அவள் இவனுக்கு ஊட்ட.. என அதன் பின் அனைவரும் சோம பானம்… நடனம் என பார்ட்டி களை கட்ட..


இப்போது சற்று தள்ளி வந்த சந்தியாவுக்கு தலையை வலிக்க ஆரம்பித்தது என்றே சொல்லலாம்


அங்கிருந்த விளக்குகள்… வண்ணங்களையும் நிழல் வரிகளையும் மாற்றி மாற்றி ஒளிர்ந்து கொண்டிருக்க… ஒலித்த இசையும் வாத்தியக் கருவிகளும்… மாறி… மாறி மாற்றி மாற்றி ஒலித்துக் கொண்டிருக்க… ராகவ் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்க அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா…. ராகவ்வின் மேல் கண்வைத்தபடியே…


இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளாமல்… இவர்கள் இருவரையுமே இன்னொரு ஜோடி விழிகளுமே அளவிட்டுக் கொண்டிருந்ததை சந்தியா அறியவில்லை…


சந்தியாவோ அமர்ந்தபடியே அங்கிருந்த சூழ்நிலையை அளவிட்டுக் கொண்டிருந்தாள்…

அவளறிந்த இசை… அவளை மனதினை ஆழ் உலகத்திற்கு…. உணர்வுகளோடு இழுத்துக் கொண்டு போகும்… மெய் மறக்கச் செய்யும் போதை…

ஆனால் இந்த இசையோ… தலைவிரித்தாடும் உணர்வுகளை உடலில் இருந்து வெளியே இழுத்து வந்து… தன்னை மறந்து இந்த பிரபஞ்சத்தை மறந்து… ஆட வைக்கும் வேறு ஒரு போதை


ஒரே இசைதான்…. ஆனால் மனிதனை மெய் மறக்க வைக்கும் விதம் வேறு… ஒன்று உணர்வுகளை குவித்து… ஆழ்ந்து போக வைக்கும் இசை என்றால்…. இன்னொன்று உணர்வுகளை விரித்து… பறக்க வைக்கும் ஆர்ப்பரிக்க வைக்கும் இசை…


முரண்கள் உலகமெங்கும்…. எண்ண ஓட்டங்களில் சந்தியா இருக்க… பிடிக்காத பாவத்தில் சந்தியா அமர்ந்திருப்பதை ராகவ் இப்போது கண்டு கொள்ள… அடுத்த நொடி அவளருகில் வந்திருந்தான்…



“என்ன ஆச்சு சகி” என்றபடியே அவளருகில் வந்து அமர்ந்து கேட்க…


“தலை வலிக்குது ரகு… அம் நாட் பானிக்கிங்… பட் ஐ டொண்ட் வாண்ட் டூ கெட் இன் டூ திஸ் ப்ளேஸ் ஆர் சிட்சுவேஷன்… ” என்றவள் அவன் முகத்தைப் பார்த்து தயங்கியபடி


’ஐ திங்க் வி அர் வேஸ்ட்டிங அவர் டைம் ஹியர்… ” என்று சொல்ல…


சில நொடிகள் யோசித்தவன்… எழுந்தபடி…


“உனக்கு பிடிக்கலைனா… கிளம்பலாம்…” என்று சொல்லியபடியே அவளையும் கை கொடுத்து எழுப்பியபடி


ரூபனிடம் சொல்ல… அவரும் அங்கிருந்தவர்களிடம் இதை அறிவிக்க.. அங்கிருந்தவர்களும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை… அவர்களின் மொத்த கவனமும்… வெறித்தனமான ஆட்டம் பாட்டங்களோடு உலகம் மறந்த அந்த நிமிடங்களில் கரைந்திருந்தன... யார் வந்தால் என்ன!!! யார் போனால் என்ன!!!…


ராகவ்… சந்தியாவோடு சேர்ந்து நடந்தபடி… அந்தக் கூட்டத்தைக் கடந்து வர….

அப்போது

“ஹேய் ராம்” அவர்கள் முன் வந்து நின்றவள் சாதனாவே….


போதை வழிந்த கண்களும்… லிக்கர் அடங்கிய கண்ணாடி குவளையை வைத்திருந்த கைகளும்… அவள் அணிந்திருந்த அசிமெட்ரிக் வகையிலான உடையும்… என எதுவுமே அவள் சீராக இல்லை என்பதை நன்றாகவே உணர்த்த….. சந்தியாவுக்கு அவளை நன்றாக ஞாபகமிருந்ததது…. ராகவ் அலுவகலத்தில் வைத்து அவனது கன்னத்தில் முத்தம் வைத்தவள்…


”இவளா” என்ற விதத்தில் ராகவ்வைப் பார்க்க… அவனின் கண்களில் என்ன இருந்தது…. இந்த மாதிரி பார்வை… சந்தியாவை பிடிக்காத சமயங்களில் அவனிடம் கண்டது… இப்போது இவளிடம்…. அதை விட அதிகமாக… அதிலும் அதில் இருந்த அருவருப்பு… இவளுக்கே நெஞ்சுக்குள் சுரீர் என்றிருந்தது…


இருந்தும் இருவரையும் மாறி மாறி பார்க்க… அவளோ அவன் பார்வையை எல்லாம் கண்டு கொள்ள வில்லை…


“தேங்க்ஸ்…. ராம்… அண்ட் சாரி ராம்” என்றவள் அவனருகில் வர….


வெறுப்புடன் அவளைப் பார்த்தவன்… எதுவுமே பேசவில்லை… சாதனாவைக் கடந்து போவதிலேயே குறியாக இருக்க… அவனை விடாமல்…


“ராம்… சிவா சார்” என்று அவள் ஆரம்பித்த போதே…. ராகவ் தீம்பிழம்பாகியிருந்தான்…. அந்த பார்வையோடே திரும்பி அவளைப் பார்க்க…


சாதனா அப்படியே நிறுத்தினாள் வந்த வார்த்தைகளை… அவனையே பார்த்தபடி அதிர்ச்சியான வேதனையான பார்வையைப் பார்த்து வைக்க…


“சந்தியா போலாம் வா” என்று சொன்னபடி வேகமாக சந்தியாவை இழுத்துக்கொண்டு அந்த தளத்தை விட்டு வெளியேறியவன்.. அதே வேகத்துடன் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறியும் இருக்க… அவன் கோபத்தின் அளவு… கார் ஓட்டுவதிலேயே தெரிந்தது… எதிலிருந்தோ தப்பித்துச் செல்வது போல போய்க் கொண்டிருந்தான்… மனைவியோடு… அருகில் அவனை அணைக்கும் பனி இருந்தும்… அனலில் உழன்று கொண்டிருந்தான்…


ராகவ்வின் கண்களில் நெருப்பு கனன்று கொண்டிருந்தது…. நினைவுகள் அன்றைய அந்த கருப்பு தினத்திற்கு தானாகவே அவனை இழுத்துச் செல்ல… தன் அருகில் அமர்ந்திருந்த சந்தியாவை ஒரக் கண்ணால் பார்த்தான்.. அவளும் இவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தாள் போல…. இவனுக்கோ மனம் குறுகுறுத்தது


அந்த புகைப்படங்களும்… வீடியோக்களையும் சந்தியா பார்த்தால் என்ன ஆகும் என்று யோசிக்கும் போதே… அன்றுதான் சந்தியா தன்னை நம்பாமல் தன்னை விட்டு போய்விடுவாள் என்று பயந்தான்… இப்போதோ தன்னவள்… அதைப் பார்த்தால் கண்டிப்பாக நம்ப மாட்டாள் என்பது திண்ணம்… பிறகு எதற்கு தனக்கு இத்தனைக் கோபம்… மனதுக்குள் நிம்மதி வர… அது அவனுக்குள் நம்பிக்கையையும்… குளுமையையும் தர…


“என்னாச்சு ரகு…” படபடத்த விழிகளோடு… கேட்டவளைப் பார்த்து….


“ப்ச்ச்… ஒண்ணுமில்ல… “ என்றவன்… அமைதியாக வர… அவனின் மாறுபாடு உணர்ந்து…. அவனையே….. அவனது கண்களையே ஆழ்ந்து ஊடுருவினாள் சந்தியா….


“என்ன” என்றான் உள்ளுக்குள் வந்த பதட்டத்தை மறைத்தபடியே…


”ம்ஹூம்ம்ம்ம் ஒண்ணுமில்லை…” என்றவள்… அவனிடம் ஏனோ தோண்டித் துருவ மனம் இல்லை…. விருப்பமும் இல்லை…


அவனே தன்னை சமநிலைப்படுத்த முயன்று கொண்டிருப்பது நன்றாகவே தெரிய… இதை மட்டுமே கேட்டாள்…


“ஏன் ரகு... இந்த ஃபீல்ட விட்றலாமே… உனக்கும் பிடிக்கலைதானே” கண்டிப்பாக ராகவ் திட்டுவான் என்று தெரிந்தும்… எச்சிலை முழுங்கியபடி கேட்டும் விட்டாள்…


இதோ இப்போது திட்டப் போகிறான் என்று அவன் திட்டலுக்கு காதைத் தீட்டி வைத்துக் கொண்டிருக்கும் போதே


“ஹ்ம்ம்… யோசிக்கிறேன்…” என்றான் அவளைப் பார்க்காமலேயே….


மகிழ்ச்சியில் கண்கள் விரிய…. “ரகு… ஆர் யூ சீரியஸ்” என்று குதூகலிக்கும் போதே…. சந்தியாவுக்கு இப்போது தாங்கள் செல்லும் வழி புலப்பட….


“ரகு நம்ம வீட்டுக்கு போறோமா…. கார் போவது கஷ்டம்னு சொன்ன…. “ என்றவள்…. இப்போது…. பயந்தவளாக… தன் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள்… மணி 10:30க்கும் மேல்….


இப்போது வேறு விதமாக கண் விரிந்தது…


“கேண்டில் லைட் டின்னர்னு… சர்ப்ரைஸ் கொடுக்கிறேனு…. கரெண்ட் கனெக்ஷன் இல்லாத வீட்டுக்கு அர்த்த ராத்திரில கூட்டிட்டு போறியாடா…. அப்படி ஏதாவது ப்ளான் பண்ணியிருந்தேன்னா உனக்குத்தான்…. சர்ப்ரைஸ் கிடைக்கும் ஞாபகம் வச்சுக்க…. “


“ஏன் …. என்னாகும்…” தெரியாமல் புரியாமல் கேட்டான்…


“எனக்கு இருட்டுன்னா பயம்….. தெரியும் தானே உனக்கு…. அதை விடு…. உனக்கு கராத்தே …. குங்ஃபூ…. இதெல்லாம் தெரியுமா…. “ உண்மையாகவே பதட்டம் இருந்தது…. அவள் வார்த்தைகளில்….


ஹோட்டெல்…. ரெசார்ட்… என்று நினைத்தபோது இருந்த பதட்டம் வேறாக இருக்க…. இப்போது இருந்த பதட்டம் தங்கள் பாதுகாப்பையும் சேர்த்து இருக்க….


ரகு…. அவளிடம்….


“யாமிருக்க பயமேன்…. “ என்று முகத்தில் கொஞ்சம் தீவிர பாவம் வேறு வந்திருந்தது…. ஆனாலும் மனதில் மாலையில் பார்த்த நெடியவன் முகம் வந்து போனதை அவனால் தவிர்க்க முடியவில்லை…. அவன் முகம் நொடியில் மாறி மீண்டதை உணர்ந்து கொண்டவள்..


அவன் கையை சுரண்டினாள்… பயந்த விழிகளோடு…. யோசனை பாவனையோடு…

அவளின் வித்தியாசமான பாவனையில்…

“என்னடி” இவனும் சாலையில் கவனம் வைத்தபடி கேட்க…


“ரகு நீ, என்னை ஏதும் பண்ணிற மாட்டியே…. நாளைக்கு பேப்பர்ல….. சிறுவயதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக… பழி வாங்க அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொலை செய்த கணவன்னு…. உன் பேரை போட வச்சுறாதடா…” என்றவள்….


”நீ கோர்ட்ல கை விலங்கோட நிற்கிற மாதிரி…. நான் ஆவியா மேல இருந்து பார்க்கிற மாதிரியும்லாம் எனக்கு தோணுதேடா… அப்டிலாம் ஏதாவது எண்ணம் இருக்காடா உனக்கு” சந்தியாவின் கற்பனைக் குதிரைகளின் இறக்கைகள்… மேலுலகம் வரை அவளைக் கூட்டிச் செல்ல… அதில் மொத்தமாக நொந்தவன் அவளது கணவனே


“ஏண்டி.. படுத்துற…. பழிவாங்க… மேரேஜ் பண்ணி பழிவாங்கனுமா என்ன… கேவலமான லாஜிக்… உன் கற்பனைத்திறன்லாம் அப்படியே என்னை புல்லரிக்க வைக்குது... இருக்கிற மூடை வேற திசைக்கு மாத்துற மாதிரி ஐடியா ஏதும் இல்லையே… ஐயோ இவள வச்சுச்சுட்டு ஒரு ரொமான்ஸ் கூட பண்ண முடியாது போலயே” என்று புலம்ப ஆரம்பித்தவன்… ஒரு கட்டத்தில் தனது புலம்பலை நிறுத்தியபடி… அவளிடம் திரும்பி


”வீடு வருகிற வரைக்கும் பேசாமல் வரனும்… இல்லை நீ சொன்னது தான் நடக்கும்….” என்று மிரட்ட….


கப்பென்று வாயை அடக்கினாள்… அமைதியாகவே வந்தாள்…..


அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் வீடும் வர….. விழி விரித்தாள் ஆச்சரியத்தில்…. வீட்டைச் சுற்றி இருந்த சுற்றுப்புற சுவரின் மேல் விளக்குகள் ஒளிர… ராகவ்வைப் பார்த்து…. இவளது கண்கள் மிளிர்ந்தன…


“இன்னும் இருக்கு…. இதுக்கே இவ்ளோ பெருசா உன் கண்ணை விரிச்சேன்னா….” என்று காரை நிறுத்திவிட்டு வந்தவன்… சட்டென்று அவளது கண்களை பின்னிருந்து கைகளால் மூட… இவள்… தடுமாற


“ஷ்ஷ்ஷ்… பேசாமல் வா… ” என்று கண்களைப் பொத்தியபடி அந்த இல்லத்தின் கதவின் முன் நிறுத்தியவன்… மெதுவாக கைகளை கண்களில் இருந்து எடுக்க… அவளது கண்களில் முதலில் பட்ட அந்த பெயர் பலகையைப் பார்த்தவளுக்கோ… கண்கள் பனித்தது…


“சந்தியா பவனம்” என்ற பெயர் கொட்டை எழுத்துகளில் மின்னியது… அந்த பலகையில்


சட்டென்று திரும்பி அவனைப் பார்க்க… புருவம் உயர்த்தினான்… வார்த்தைகளே வரவில்லை… சந்தியாவுக்கு….


’இவ்வளவு அன்புக்கு தான் தகுதியானவளா…’ பயம் தான் வந்தது அவளுக்குள்… கண்களில் இருந்து சட்டென்று கண்ணீர் துளி விழ… அது ஆனந்தக் கண்ணீர் அன்றி வேறென்ன…



”ஹேய்… ரொம்ப ஃபீல் பண்ணாத… உங்க மாமனார ஐஸ் வைக்கத்தான்… நான் இந்த வீடு கட்டினதே அவருக்குப் பிடிக்கலை… ராகவ் கட்டின வீடு பிடிக்காது… ஆனால் சந்தியா பவனம்னா உங்க மாமா அடுத்த நிமிடம் இங்க ஓடோடி வந்திற மாட்டாரு… சந்தியான்ற சின்ன மீனை போட்டு சுகுமார்ன்ற அந்த பெரிய மீனைப் பிடிக்கத்தான் இதெல்லாம்…” பொய்யை மட்டுமே கூறி… கண் சிமிட்டியவனை… விழி விரிய…. பெருமையாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா….



“ஹ்ம்ம்ம்…... ஹ்ம்ம்ம்… உள்ள போ…. ஏற்கனவே இந்த கண்ல விழுந்துதன் வெளிய வர முடியாமல்தான் திணறிட்டு இருக்கேன்… இன்னும் இன்னும் ஆழமா இழுக்காதடி… உன் ட்ரிப்பிள் ஆர் பாவமில்ல….” என்று அவளைத் தள்ளியபடியே வீட்டுக்குள் நுழைய….



அங்கு யாரோ வசித்துக் கொண்டிருப்பது போல பொருட்களால் நிரப்பப்பட்டு இருந்தது வீடு…. வரவேற்பறை… கிச்சன்…. மேலே படுக்கை அறை… உடற்பயிற்சிக் கூடம்…. இவனது தொழிலுக்கான பிரத்யோக அறை…. எல்லா இடங்களிலும்… அந்தந்த இடத்திற்கான பொருட்களால் நிரம்பி வழிய…. அனைத்து இடங்களையும் பார்த்தபடி உலா வந்தவளை…. கடைசியாக…. அவர்கள் வாழப்போகும்… அவர்களுக்கு மட்டுமேயான அந்தரங்கத்தை…. தனக்குள் அடக்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்கு அழைத்து வந்தவன்….


”புதுமனைப் புகுவிழா…. கிரகபிரவேசம் இதெல்லாம் நமக்கு தேவையே இல்லைனு முடிவு பண்ணிட்டேன்… ஆனால் நேம்சேக்குக்கு ஃபங்ஷன் வச்சு முடிச்சுருவோம்னு….”


அமைதியாக அவனையே அவன் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள்….


இவர்கள் திருமணத்திற்கு கூட ராகவ் மீடியா நண்பர்களை அழைக்கவில்லை…


இவள் சுகுமாரிடம் கேட்ட போது… கிரகபிரவேசம் கிராண்டா பண்றானாம்… அதுக்கு இன்வைட் பண்ணிக்கிறேனு சொல்லிட்டான்மா” தன் மாமனார் சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வந்தது…

”ரகு…. நான் இதுக்கெல்லாம் டிசர்வ்டானு…. எனக்கு தெரியலை… உன் காதல் அதோட வேகம்லாம் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு” என்றவளிடம்….


“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ ஃபீல் பண்ற… ஜஸ்ட்…. என்னால முடிந்ததை செய்கிறேன்…. உண்மையைச் சொல்லப் போனால்… கல்யாணம் ஆன அடுத்த நாளே உன்னை வீட்டை விட்டு அனுப்பின கேவலமானவன் நான்…. அதுதான் உண்மை” என்றவன்…


அதெல்லாம் விடு…. இவ்ளோ ஃபீல் பண்றேல்ல… அதை ஆக்ஷன்ல காட்டு… “ என்று தன் கைகளை விரிக்க…. ஓடிச் சென்று அவனுக்குள் அடங்கினாள்….


வாழ்க்கை வண்ண மயமாக இருக்கும் என்று வாய் வார்த்தைகளிலும்…. எழுத்துக்களிலும் அவள் அறிந்திருந்ததை… உணர்வுகளின் மூலம் உணர வைத்துக் கொண்டிருந்தான் அவளுக்குள்…. அவளது கணவன்…


சந்தியாவுக்கு…. அவன் பொருட்கள் வாங்கித் தந்தது, இந்த வீடு…. இதை எல்லாம் விட…. அவன் அவளுக்கு உண்மையாக இருந்தான்…. எந்த ஒரு இடத்திலும் அவளிடம் அவன் நடிக்கவில்லை…. தனக்கு வந்த அவள் மீதான காதலைச் சொன்னவன்… அவள் தேகம் மீதான அவன் மோகத்தையும் மறைக்கவில்லை…. அவளைக் கொள்ளை கொண்டவன்…. அவளிடம் கொள்ளை போனைதையும் உணர வைத்தான்…. தங்கைக்காக அனுப்புகிறேன் என்று சொன்னவன்…. தங்கையினால் ஏற்பட்ட கவலையை தங்கள் வாழ்க்கையில் இறக்கி வைக்கவும் வில்லை…. ராகவ் ராகவ்வாக இருந்ததே…. சந்தியாவுக்கு…. பேரின்பமாக இருந்தது…. அவனிடம் பெருங்கோபமும் இல்லை… சிறு அலட்சியமும் இல்லை…. நீ என் வாழ்க்கை… உன் ஓவ்வொரு பார்வையும் எனக்கு முக்கியம் என்ற செய்தி அவனின் ஒவ்வொரு செய்கையிலும் இருக்க...



இந்த திருமண பந்தம் பிடிக்கவில்லை…. கடைமைக்காக, மற்றவர்களுக்காக உன்னோடு வாழ்வேன்… என்று அந்நிய ஆடவனாக அவன் அன்று சொன்ன வாய் வார்த்தைகள் வாய் வார்த்தைகளாவே மாறி அழிந்துபோயிருந்தன….


கணவனாக… காதலனாக அவனின் செயல்பாடுகள் மாறியிருந்த பரவசத்தில் இருந்தவள்….


”ஏழு ஜென்மம்னு சொல்வாங்க ரகு…. அதெல்லாம் வேண்டாம் எனக்கு….இந்த ஜென்மத்துல உங்கூட சந்தோசமா வாழனும்…. கொஞ்சம் சண்டை…. சின்ன பிடிவாதம்…. இவன் என் புருசன்ற கர்வம்…. ரெண்டு குழந்தைங்க…. டெய்லி என்கிட்ட கொஞ்ச நீ கெஞ்ச… இப்படினு சராசரி வாழ்க்கை… இது மட்டும் போதும் எனக்கு…. ரகு….“ அவனோடு மார்பில் சாய்ந்தபடியே உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தவளிடம்…


”ஓய் சந்தடி சாக்கில்…. நா கூப்பிட்டால் நீ வரமாட்டேன்னு சொல்லாமல் சொல்லிட்டியேடி….” அவள் சொன்ன மற்றதெல்லாம் விட்டு விட்டு… கணவனாக தன் காரியத்தில் கவனமாகச் சொன்னவன்…


”இப்போ… இன்னைக்கு நமக்கு முக்கியமான நைட்…. அதாவது ஆக்சுவலான ஃபர்ஸ்ட் நைட்டுங்க…. அதுக்கு ரெடியாகிட்டு வாங்க மேடம்…. ஷெல்ஃப்ல உனக்கான கிஃப்ட் இருக்கும்…. நான் கீழ போகிறேன்…” என்று சொன்னவன் முத்தமிட்டு விலக…


சந்தியாவோ அவனை விலக விடவில்லை… தன் பதில் முத்தங்களால்…. அவனை அவளோடு மீண்டும் சேர்த்தவள்…


”ரகு நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரனும்னு நினைத்தேன்… பட்… இப்போ அது எனக்குப் பிடிக்கலை…”


”உங்களுக்கு மாடர்ன் ட்ரெஸ்னா பிடிக்கும்னு நினைத்து…. இன்னைக்கு நான் அதை பர்சேஸ் பண்ணினேன்…. உங்க முன்னாடி அதுல வந்து சர்ப்ரைஸ் தரனும்னு…. பட்… நீங்க நீங்களா இருக்கீங்க…. அதே மாதிரி…. என்னையும் நான் என்னவா இருக்கேனோ அதை அப்படியே விரும்பறீங்கனு…. உங்க ஒவ்வொரு செயலும் இருக்குது…“ என்றவள்…


“சந்தியா அவ ரகுகிட்ட டோட்டலா சரண்டர்…. ஆகிட்டா ரகு“ என்று அவனுக்குள் புதைய



அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவன்…



”ஏண்டி… இவ்ளோ எமோஷனல்… நான் உனக்கு வாங்கி வச்சுருக்கிற புடவையை கட்” என்ற போதே



அவனைப் பேச விடாமலே… மீண்டும் இதழ் பொருத்தியவளின் வேகம் தாங்காமல் இவன் அவளை அணைத்துப் பிடிக்க…


இதழை அவனிடமிருந்து பிரித்தவள்…


“ப்ச்ச் போடா… ஏன் உனக்கு சல்வார்ல ஹார்மோன் வேலை பார்க்காதா” என்று சீண்டியவளாக நிமிர…


“தாங்காதுடி… தாங்காது…. உன் ரகுவுக்கு இந்த வேகம்” என்றவனின்… வார்த்தைகளுக்கு மாறாக… அவனின் செயல்களும் ஆரம்பிக்க….


அதே நேரம்…


“ஓய்… தனியா புடவை மாத்த பயந்துட்டுதானே… பேச்சை மாத்துற… எனக்குத் தெரியும்டி…” கிசுகிசுப்பாக சீண்ட…


“கண்டிபிடிச்சுட்டியா” என்றபடியே… அவன் சட்டைப்பட்டனைத் திருக ஆரம்பிக்க


“நான் வேணும்னா துணைக்கு நிற்கிறேன் சகி… சாரி மாத்துறியா…” கிறங்கியபடியே இவன் வம்பிழுக்க ஆரம்பிக்க


“உன் சாரி மன்னிப்பெல்லாம் நீயே வச்சுக்க இல்ல கட்டிக்கோ… எனக்கு நீ தான் வேண்டும்… உன்னத்தான் கட்டிப்பேன்” என்று அவனை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொள்ள… தடதடத்த இவனின் இதயத்துடிப்பின் வேகத்தை அடக்க முடியாமல் திணறியவன்… அவள் முகமெங்கும் முத்திரை பதித்து பின் அவள் இதழில் நிலைத்து… அவளை மூச்சுக்காற்றுக்கு திணற வைத்த போதுதான் இவனின் இதயத் துடிப்பு நிதானமானது போல் இருந்தது…


சந்தியாவோ மொத்தமாக அவனிடம் சரணடைந்திருந்தாள்…. அன்று போல் இல்லாமல் அவளாகவே அவனிடம் தன்னை ஒப்படைத்திருந்தாள்… அவளின் சரணடைதலில்… அவளிடம் மெதுவாக முன்னேற ஆரம்பித்தவனின் உள்ளுணர்வுக்கு… தனக்கு கீழாக இருந்தவளின் தேகம் சொன்ன செய்தி உவப்பாக இல்லை… எங்கோ எதையோ எடுத்துக் கொடுக்க… வேகமாக நிமிர்ந்து… அவள் மூடிய கண்களைப் பார்க்க… அவளின் கருமணிகள் மூடிய கண்களுக்குள் அலைபாய்ந்து கொண்டிருக்க


ராகவ் தான் சுதாரித்தான் முதலில்…. சந்தியாவோ இன்னும் உணர்வுகளின் பிடிகளிலேயே இருக்க….


“சகி…“ கரகரத்த குரலில்…. தன்னவளை…. அழைக்க… அவன் குரல் கேட்ட அடுத்த நொடி….


“என்னைப் பழி வாங்கிட்ட ரகு” என்று கண்களை திறக்காமல் அவள் சொன்ன போதே அவள் கண்களில் கரகரவென்று நீர் வடிய… அவளின் கண்ணீரில் அதிர்ந்து… அவளைப் பார்க்க…. இப்போதும் அவள் கண்கள் மூடியபடிதான் இருந்தது…


தன் உணர்வுகளை எல்லாம் ஒரே நொடியில் அறுத்து தன்னை மீட்டெடுத்தவன் அவளைப் பார்த்தான் உணர்ச்சி அற்ற பார்வையில்…


எதிர்பாராத கூடலின் குற்ற உணர்ச்சி… இன்னும் அவள் அடி மனதில் இருக்க… இன்று அவளாகவே சரணடந்த போதும்… ஒன்ற முடியவில்லை அவளால்… அதை அவனிடமும் சொல்ல முடியாமல் தனக்குள் தவிக்க… ராகவ் அதை உணர்ந்து கொண்டான்


”இந்த மாதிரி… இப்படி நான் மாறுவேன்னு கனவில கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை ரகு… இப்டி உனக்காக… உன் தீண்டலுக்காக… இந்த இடத்தில” என்று நிறுத்தினாள்…


நிதானமாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.. தவறு செய்து விட்டோமோ… அவனிடம் பைத்தியமாகி தவறில்லாத… தவறு செய்து கொண்டிருக்கிறோமோ… குற்ற உணர்ச்சியில் தனக்குள் மறுகியவள்… இதோ இன்று இறுதியில் அவனிடம் சொல்லியே விட்டாள்… மனைவியாக தவறவில்லை… பெண்ணாக தவறுகிறாள் என்பதை


”அன்னைக்கு கூட எதிர்பாராமல் நடந்தது… இப்போ தெரிந்தே… மனைவியா உன்னைத் தேடறது சரினாலும்…. பொண்ணா நான் தப்பு பண்றனா ரகு” வார்த்தைகள்… இப்போது மெலிதாக விசும்பலாக வர…


இதற்கு மேல் அவளிடத்தில் மோகத்தில் முத்தெடுப்பானா இல்லை தாபத்தில் தத்தளிப்பானா அவன்…. சட்டென்று வேகமாக அவளை விட்டு விலகி… எழுந்து அமர்ந்தவன்… அடுத்த சில மணி நேரங்களில்… அவளோடு சந்தியாவின் வீட்டை அடைந்திருந்தான்…


/*எப்பொழுதும் உன் சொப்பனங்கள்

முப்பொழுதும் உன் கற்பனைகள்

சிந்தனையில் நம் சங்கமங்கள்

ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்

காலையில் நான் பாடும் காதல் பூபாளம்

காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்

ஆசையில் நாள் தொழும் ஆலயம் நீயல்லவா*/


Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

3 Comments


Unknown member
Jun 05, 2020

Nice update,

Like

Isai Selvam
Isai Selvam
May 30, 2020

Nice update.உணர்வுப்பூர்வமான உளவியல் அலசல்.சந்தியாவின் மனநிலை கணவனென்றாலும் மற்றவருக்கு தெரியாமல் அவனுடன் இணைவதில் உள்ள தயக்கம் ரகு அதை சரியான விதத்தில் புரிந்து கொள்வது என அனைத்தும் அருமை

Like

Isai Selvam
Isai Selvam
May 30, 2020

Nice update.உணர்வுப்பூர்வமான உளவியல் அலசல்.சந்தியாவின் மனநிலை கணவனென்றாலும் மற்றவருக்கு தெரியாமல் அவனுடன் இணைவதில் உள்ள தயக்கம் ரகு அதை சரியான விதத்தில் புரிந்து கொள்வது என அனைத்தும் அருமை

Like
© 2020 by PraveenaNovels

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon
bottom of page