ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
ஹேப்பி ரீடிங்...
நன்றி
பிரவீணா
அத்தியாயம் 17:
ஏழு மாதங்கள் கடந்திருந்த நிலையில்…
”செல்விம்மா” மேகலா அழைத்திருக்க…
“அத்தை… இதோ கெளம்பிட்டேன்…. எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா…” செல்வி தன் புடவையைச் சரிசெய்தபடி வெளியே வந்திருக்க
“தனா எங்க” என்று மேகலா செல்வியைத் தாண்டி அறை வாசலை ஆராய்ச்சி செய்தவராகக் ஆராதனாவை விசாரிக்க
“அவ ஏற்கனவே கிளம்பிட்டாத்தை… வனிதாக்காவும் வர்றாங்கள்ள… அவங்க ரெடி ஆகிட்டாங்களான்னு பார்க்கப் போயிருக்கா…”
அப்போது ராஜசேகர் அங்கே வந்தவராக
”ஏன் மேகலை… இந்த வயசுல இந்த இதெல்லாம் தேவையா…. இதுல விரதம் வேற…” தன் மனைவியின் மேல் அக்கறை கொண்டவராக கடிந்து கொள்ள…
“உங்க ரெண்டு பேருக்காகவும் வேண்டிகிட்டது… நம்ம கார்த்தி வாழ்க்கைல நல்லது இவ்ளோ நடந்திருக்கு… ஆனால் இன்னும் வேண்டுதலை நிறைவேத்தல… எதுக்கு வேணும்னாலும் கடன் இருக்கலாம்… சாமிக்கு மட்டும் இருக்கக் கூடாது…”
மேகலா கணவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே இப்போது ஆராதனாவும் வனிதாவும் வந்திருக்க…
“வாங்க வாங்க கெளம்பலாம்…” என்ற மேகலை தன் மாமியாரிடமும்…மாமனாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியிருந்தார்…
வெளியே வாசலில் வாகனத்தை நிறுத்தி தன் குடும்பத்தினருக்காக காத்துக் கொண்டிருந்த கார்த்திக் காரில் ஏறி அமர்ந்த தன் அன்னையைப் பார்த்தவனாக…
“அம்மா… நான் பத்து நிமிசம் தான் இருப்பேன்…” என்ற போதே செல்வி கார்த்தியை முறைக்க…
“சாமி கும்பிட்டுத்தான் கிளம்புவேன்… நீ முறைக்காதடி” மனைவியையும் சமாதானப்படுத்தியவனாக காரை எடுத்திருந்தான் கார்த்திக்… கோவிலையும் அடைந்திருந்தனர்…
----
மேகலா அம்மனையேப் பார்த்திருந்தாள்…
“என் பையனை விசம் குடிச்சுட்டு வாழ்வா சாவான்னு படுத்திருந்தப்போ உன்னை மனசுல வச்சுட்டுத்தான்… நீ என்னைக் கை விட மாட்டேனுதான்.. என் புருஷனைக் கூடப் பார்க்காமல் என் பையன்கிட்ட நின்னேன்… அது போலவே ரெண்டு பேரையும் காப்பாத்திக் கொடுத்துட்டம்மா… கூடவே என் பையனையும் தங்கமான பொண்ணுக்கிட்ட சேர்த்துட்ட… அதுவும் அவன் மனசறிஞ்சு நடக்கிற பொண்ணு… இது போதும்மா… இது போதும் எனக்கு“ மேகலா மனதுக்குள் வேண்டிக் கொண்டிருக்க… அர்ச்சகரும் தீபாராதனையை முடித்திருக்க
ராஜசேகரும்… கார்த்திக்கும் பூஜை முடியும் வரை மட்டுமே இருந்தன்ர்….
”செல்வி வேண்டுதல் எல்லாம் முடிச்சுட்டு போன் பண்ணு… சரியா.. நானே வந்து கூட்டிட்டுப் போறேன்… ” என்றபடி கார்த்திக் கிளம்பியிருக்க… அதன்பின் வனிதாவும்… செல்வியும் மேகலா நேர்த்திக் கடனுக்கு உதவியாக ஆயத்தமாக ஆரம்பித்திருந்தனர்…
”தனா…” மூவரும் ஆராதனாவை அழைக்க….
”அம்மா… நான் இங்க இருக்கேன்… “ ஆராதனா இன்னும் அம்மனின் முன்புதான் நின்றிருந்தாள்… சன்னிதானத்தை விட்டு வரவில்லை
“என்ன தனா… உனக்கு மட்டும் வேண்டுதல் லிஸ்ட் பெருசு போல” என்று வனிதா சத்தமாகக் சொல்லி ஆராதனாவைக் கிண்டல் செய்ய…
”உனக்காகவும்தான்க்கா வேண்டிட்டு இருக்கேன்… சீக்கிரம் உன் ஜாதகத்துக்கேத்த மாப்பிள்ளை கிடைக்கனும்னு வேண்டிட்டு இருக்கேன் வனிதாக்கா… வேண்டவா… வேண்ட வேணாமா”
வனிதா முறைக்க…
“சரி சரி உனக்காக இல்ல… பெரியம்மா… பெரியப்பா… முக்கியமா முகிலண்ணனுக்காக…. உனக்கு முடிஞ்சாதானே எங்க முகிலண்ணாவுக்கு ஒரு வழி கிடைக்கும்… அவங்களுக்கு அக்காவா போயிட்டியே…” என்றவள் அதற்கு மேல் வனிதாவிடம் கிண்டலடிக்காமல்…. அர்ச்சகரை நோக்கினாள்…
”சாமி… இந்தக் கோவில்ல ஸ்பெஷல் கயிறு கொடுப்பீங்களே… எனக்கு வேணும்” என்றபடி ஆராதனா அர்ச்சகரிடம் கேட்க… அந்த ஆலயத்தில் இது தொன்று தொட்டு நடக்கும் வழமை என்பதால் அந்த அர்ச்சகரும் எடுக்கப் போனார் கருவறை உள்ளே…
இதற்கிடையே…
”தனா வரும் போது வரட்டும்…. நாம ஆரம்பிக்கலாமா அத்தை… வெயில் வர்றதுக்குள்ள உங்க வேண்டுதலை முடிக்கனும்” செல்வி மேகலாவிடம் சொல்ல… மேகலாவும் தலை அசைத்தபடி அங்கிருந்து கோவில் சுற்றுபிரகாரத்திற்கு வந்திருந்தனர்….
அப்போது
“ஹேய் செல்வி…” யாரோ உற்சாகமான குரலில் செல்வியை அழைக்க … மேகலாவும், வனிதாவும் அது யாரென்று பார்த்த போதே….
“லதா மேடம்…. எப்படி இருக்கீங்க…” செல்வியும் அந்த யாரோ ஒருவரைக் கண்டுகொண்டு புன்னகைத்தவளாக…. தன் கணவனின் தாயாரிடம் அவரை அறிமுகப்படுத்தினாள்
”அத்தை இவங்கதான் எங்களுக்கு லாஸ்ட் இயர் .. ப்ரஃபெஸரா இருந்தாங்க… இப்போ வேற ஊர்க் காலேஜ்ல வொர்க் பண்றாங்க… “ செல்வி தன் விரிவுரையளரை மேகலையிடம் அறிமுகம் செய்து வைத்திருக்க…
மேகலாவும் மரியாதை கொடுத்து அவரை வரவேற்று மரியாதை கொடுத்தும் பேச ஆரம்பித்திருக்க.… அப்போதுதான் லதா கவனித்தார்… செல்விக்கு திருமணம் ஆகியிருந்ததை…. ஒரு கணம் அவர் கண்களில் ஆச்சரியமும்… அதிருப்தியும் கலந்த பார்வை வந்திருக்க…. செல்வியும் அதைக் கண்டு கொண்டவளாக…
“ஆமாம் மேடம் மேரேஜ் ஆகி இருச்சு…” செல்வியின் குரல் தாழ்ந்திருக்க
”படிச்சிட்டு இருக்கதான… படிப்பை விடலையே… “ என்றவர் இன்னும் செல்விக்குத் திருமணம் ஆனதை நம்ப முடியாதவராக
“உங்க அம்மா அப்பா லெக்சரர்னு தெரியும்… படிச்ச அவங்க இப்படி பண்ணிட்டாங்களானு நினைக்கும் போதுதான் கோபம் வருது… ஏன் இவ்ளோ அவசரமா மேரேஜ்… யூஜி கூட முடிக்கல நீ…” செல்வியை அவர் தவறாகவே நினைக்கவில்லை… அந்த அளவுக்கு அவர் செல்வியின் மேல் நம்பிக்கை வைத்திருக்க… அவர் கோபமெல்லாம் ஏனோ செல்வியின் பெற்றோர் மேல் மட்டுமே…
மேகலா இப்போது வேகமாக…
“செல்வியோ… செல்வி அம்மா அப்பா மேலோ தப்பு இல்லங்க… என் பையனுக்கு ஜாதகப்படி உடனே மேரேஜ் நடக்கனும்னு இருந்தது… நாங்கதான் விடாப்பிடியா நின்னு செல்வியை எங்க மருமகளா ஆக்கிட்டோம்…. ஆனா அவ படிப்புக்கு நாங்க எந்த விதத்திலயும் குறை வைக்க விட மாட்டோம் மேடம்… அவ நெனச்ச மாதிரி மேல்படிப்பு படிக்கத்தான் வைக்கப் போறோம்” மேகலா வேகவேகமாக மருமகளை… அவள் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் பேச…
லதாவும் அதற்கு மேல் அதிருப்தி பாவத்தைக் காட்டவில்லை… அது போக செல்வியுடன் இருப்பது செல்வியின் மாமியார்…தான் ஏதாவது பேசி அந்தக் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்து விட்டால் என்ன செய்வது… தன்னால் ஏதும் ஆகி விடக் கூடாது என்று கவனமாக இருந்தவர்…
மேகலாவிடம் இப்போது….
“என்னை மன்னிச்சுக்கங்க… செல்விய எனக்கு ரொம்ப பிடிக்கும்… ரொம்ப நல்ல பொண்ணு… படிப்பு மட்டுமல்ல குணத்திலயும் தங்கம்… அவ படிச்சு முடிக்கிறதுக்குள்ள அதுவும் இந்த சின்ன வயசுல மேரேஜ்னு… சட்டுனு ஆதங்கப்பட்டுட்டேன்… இப்படி ஒரு பொண்ணு உங்க குடும்பத்துக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்…” என்றவர்… செல்வியிடம் திரும்பி
“உனக்கு பிடிச்ச வாழ்க்கைதானே… சந்தோஷமா இருக்கதானே… அப்போ எனக்கும் சந்தோஷம்” செல்வியின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி லதா தன் சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டவர்… மேகலாவிடம்
“உங்ககிட்ட கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான்ம்மா… உங்க பையன் கிட்டயும் சொல்லுங்க… செல்வி அச்சீவ் பண்ண வேண்டியது இன்னும் நிறைய இருக்கு… அதுக்கு இன்னும் நிறைய படிக்கனும்… நீங்கதான் அதுக்கு அவகூட இருந்து அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்” என்றவரிடம்
மேகலாவும் புன்னகைத்தபடி…
“எங்க ’தனா’ இவளுக்காக எங்ககிட்ட பேசுறதை அப்படியே ஒண்ணு விடாம ஒரு வரி மாத்தாம நீங்களும் பேசுறீங்க மேடம்…” மேகலா சொன்ன போதே லதா புரிந்தும் புரியாமலும் செல்வியைப் பார்க்க…
செல்வி இப்போது
“மேடம்… இவங்க…” ஆராதனாவின் அம்மாதான் மேகலா என்று செல்வி விளக்க ஆரம்பிக்கும் போதே
“குட்மார்னிங் மேடம்… பார்த்து ரொம்ப நாள் ஆச்சு… எப்படி இருக்கீங்க” அலட்சிய பாவத்தோடு சொன்னபடி ஆராதனா வந்து சரியாக நின்றிருக்க… ஆராதனாவை பார்த்த லதாவின் முகத்திலோ ஈயாடவில்லை…
”ஆனால் சந்தோசமாத்தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்… ஹஸ்பண்ட் கூட இருக்கீங்களே… அப்போ ஹேப்பியாத்தான் இருப்பீங்க… இந்தாங்க பிரசாதம் எடுத்துக்கங்க…” லதாவை நோக்கி கைகளை நீட்டிய ஆராதனாவின் குரலில் இலேசாக நக்கல் தொணி கலந்திருந்தது…
இவள் கொடுத்த பிரசாதத்தை வாங்காத லதாவை இலட்சியம் செய்யாமல்…. இப்போது தன் அன்னையிடம் திரும்பியவள்…
“அம்மா… நான் சொல்லியிருக்கேனே… அந்த அந்த மேடம்தான் இந்த மேட்டம்” ஆராதனா அழுத்தம் கொடுத்து சொன்னவள்…
“செல்விதான் இவங்களோட பெட்… டார்லிங்….”
“மேடம்… உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா… செல்வி…. எங்க அண்ணாவைத்தான் மேரேஜ் பண்ணியிருக்கா… அந்த நேரத்தில இன்விடேஷன் அனுப்ப முடியல… ரிஷப்ஷன் மட்டும்… அதுகூட பிரைவேட் ஃபங்ஷன் தான்” என்றவள்…
“அப்புறம் சார் எப்படி இருக்காங்க மேடம்… ஹான் புது காலேஜ் எப்படி… அங்க போய் நீங்க ஏதும் அட்வைஸ் அது இதுன்னு எந்த ஸ்டூடன்சையும் தொல்லை பண்ணலையே… எல்லோரும் எங்க அண்ணா மாதிரி லேடிஸ்னு பாவம் பார்க்க மாட்டாங்க…” என்ற மகளை மேகலா முறைத்தபடி…. இப்போது அவர் பேச ஆரம்பித்தார்…
“சாரி மேடம்… உங்க விசயத்தில் என் பையன் கார்த்திக் கொஞ்சம் அவசரப்பட்டுட்டான்… ஆனால் அது எதுக்குமே இவ காரணம் இல்ல… நீங்க திட்டுனீங்கன்னு என்கிட்ட தான் சொல்லிட்டு இருந்தா… அவ அண்ணன் அதைக் கேட்டுட்டான்… இவளுக்கு ஒண்ணுனா அவன் யாரையும் விட்டு வைக்க மாட்டான்… தங்கச்சி மேல கொஞ்சம் பாசம் அதிகம்… ஆனால் நீங்க இவளத் தப்பா நினச்சுட்டீங்க போல..” என்றவரிடம்…. லதா ஏதும் சொல்லாமல் ஆராதனாவை மட்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு…
‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா… நான் கெளம்புறென்… நீங்க வேண்டுதலை ஆரம்பிங்க…” என்றபடி செல்வியிடம் மட்டும் விடைபெற்றுக் கொண்டு கருவறை சன்னிதானம் நோக்கிச் சென்றுவிட்டார்…
----
மேகலா மகளைப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்கப் போன போதே…
”அம்மா நீங்க நடங்கம்மா… அடிப்பிரதட்சனம் பண்ணும் போது வேற டைவர்ஷன்லாம் வரக்கூடாது” என்று ஆராதனா சொல்ல… மேகலாவும் கைகளைக் குவித்தபடி செல்ல ஆரம்பித்திருக்க… அவர் முன்னே சென்ற போதே
”வனிதாக்கா…. ஏய் செல்வி… இங்க பாருங்க…” ஆராதனா தன் கைகளைக் காட்ட…
“ஹேய் சூப்பர்…. ’எல்லோ’ ’ரெட்’… வந்திருக்கு… யார் யாருக்கு வேண்டிகிட்டு எடுத்த….”
“ஹான்… அதேதான்… அக்கா உங்களுக்காக வேண்டிக்கிட்டு எடுத்தேன்னா… மஞ்சள் கயிறு…” என்றபடி
“இதக் கட்டிக்கங்க அக்கா… கரெக்டா மஞ்சக்கயிறு வந்திருக்கு… அப்புறம் என்ன அடுத்து டும் டும் டும் சத்தம்தான்…. நீங்க வேணும்னா பாருங்க இதோட ஈரம் காயிறதுக்குள்ள கூடிய சீக்கிரம் உங்க மேரேஜ்தான்… கொண்டாட்டம்தான்… நான் சொன்ன மாதிரி நடந்ததுன்னா…. நான் தான் மணப்பெண் தோழி… இவதான் ஏமாத்திட்டா… “ என்று செல்வியையும் விட்டு வைக்காமல் அவளைக் கிண்டல் செய்ய…
“ஒரு மஞ்சக் கயறு கிடைச்சதுக்கு என்ன ஒரு சீனு…” செல்வி நொடிக்க…
“வனிதாக்கா நெனச்சுட்டு எடுத்தப்ப வந்துச்சே அதான் மேட்டர்மா… இப்போ நாங்க என்ன சீன் போட்றோம்… நாத்தனார் இல்லாம தாலி கட்டிட்டு வந்தவங்கள்ளாம் பேசவே கூடாது….…“ செல்வியை ஆராதனாவும் விடாமல் தாளிக்க… செல்வி பேச்சை மாற்றினாள்…
”அப்புறம் இந்த சிவப்புக் கயிறு… அது யாருக்கு” செல்வி கேட்க
”சொல்றேன்.. சொல்றேன் இது உன்னை நினச்சு எடுத்தப்ப வந்துச்சு… ”
“ஏன் உங்கண்ணன நினைக்கலையா…”
“நான் எதுக்கு எங்க அண்ணனை நினைக்கனும்… என் அண்ணனுக்காக கடவுளே அனுப்பி வச்சிருக்கிற தேவதை செல்வி இருக்க கார்த்திக்கு பயமேன்… சோ அண்ணனுக்காக வேண்டிக்கல… உனக்காகத்தான்…” என்றபடியே
”அப்புறம் ரெட்னா டேஞ்சர் இல்ல… அம்மனோட குங்குமம்… சோ நீ நம்ம காலேஜ் டாப்பர் மட்டுமில்ல… அடுத்து எழுதப் போற என்ட்ரன்ஸ்… அப்புறம் அந்தக் காலேஜ்லயும் ஃபர்ஸ்ட்… கோல்ட் மெடலிஸ்ட் இன்னும் இன்னும் மேல மேல என்ன என்ன படிக்கனுமோ… அதெல்லாம் படிக்கனும்… பட்டையக் கெளப்பனும்… பெரிய பதவில உட்காரனும்… நம்ம குடும்பம்… உங்க குடும்பம் முக்கியமா மிஸ்டர் கார்த்திகேயனை… மிஸஸ் கார்த்திகேயனாக பெருமையாக்கப் போறிங்க… இதெல்லாம் வேண்டாமலேயே நடக்கும்தான்… என் அறிவாளி ஃப்ரெண்டுக்கு சாமி ஹெல்ப்லாம் தேவையில்லதான்… இருந்தாலும் அறிவாளிப் ஃப்ரெண்டோட மக்கு ஃப்ரெண்டுக்கு… இந்த வேண்டுதல் மேலல்லாம் நம்பிக்கை இருக்கே… எனக்காக… இனி எல்லாம் உனக்கு சக்ஸஸ் தான்” மூச்சு விடாமல் பேசியவள்…. பேசியதோடு மட்டுமல்லாமல்… அந்தக் கயிற்றை தன் தோழிக்கு தானே கட்டிவிட்டவளாக… சன்னிதானத்தை நோக்கினாள்…
“அம்மா தாயே…என் ஃப்ரெண்டு அவ ஆசைப்பட்ட மாதிரி… சென்னைல… அவளோட ட்ரீம் காலேஜ்ல அவளுக்கு சீட் கிடைக்கனும்… சீட் மட்டுமல்ல… அங்கயும் என் ஃப்ரெண்ட் தான் டாப்பர்… கோல்ட் மெடலிஸ்ட்டா இருக்கனும்… இதுல ஏதாவது மாறுச்சு… அவ்ளோதான் பார்த்துக்க” என்று அம்மனுக்கே மிரட்டல் விடுத்தவள் கையில் மீதி இரு கருப்புக் கயிறு இருக்க… செல்வி கேள்வி கேட்கும் முன்னேயே…
“இதுவும் நான் ஒருத்தவங்களுக்காக வேண்டிகிட்டதுதான்… அவங்களுக்கான கரெக்டான கயிறுதான் வந்திருக்கு…. என்ன அவங்க கைலதான் கட்ட முடியாது…” ஆராதனா அந்தக் கயிறைத் தன்னோடு வைத்துக் கொள்ள…
”இந்தக் கயிறு கட்டினாலும்,… நாம என்ன நினைக்கிறோமோ அது அவங்களுக்கு நடக்கும்… எல்லா கயிறும் ஒண்ணுதான் செல்வி… கலர் தான் வித்தியாசம்… நாம் என்ன நினைக்கிறோமோ… அதுக்கு ஏத்த மாதிரி கலர் வந்தா சந்தோசம்…”
செல்விக்கு ஒன்றும் புரியவில்லை… இதெல்லாம் அவளுக்கு பழக்கமும் இல்லை… அவளெல்லாம் சாமியை வாசலில் இருந்தே கையெடுத்துக் கும்பிட்டுப் போகும் வழக்கமுடையவள்… ஆராதனாவின் நட்பில் செல்விக்கு இது ஒரு பெரிய தொல்லை…
ஆராதானா ஆ ஊ என்றால்… செல்லும் வழியில் செங்கலில் மாலை போட்டிருந்தால் கூட கற்பூரம் காட்டி அந்த செங்கலை வணங்கிவிட்டுச் செல்லும் பக்தி மான்…
அதுவும் பள்ளி செல்லும் வயதில்… சைக்கிளில் போகும் போது… ஆராதனா வழியில் உள்ள அனைத்து கோயில் உள்ளே சென்றும் வழிபட்டு விட்டுத்தான் வருவாள்… இவளையும் விடாமல் அழைத்துக் கொண்டுதான் செல்வாள்… செல்வியும் வேறு வழியின்றி அவளோடு செல்வாள்…
ஒரு கட்டத்தில் செல்வியே கடுப்பானவளாக
“இங்க பாரு தனா… எனக்கும் சாமி நம்பிக்கை இருக்குதான்… ஆனால் உன் அளவுக்கு முட்டாள் தனமா இல்ல… ஆனாலும் உன்னை நான் தடுக்க மாட்டேன்…… நீ விழுந்து விழுந்து சாமி கும்பிடு… ஆனால் என்னைக் கூப்பிடாமல் நீ பாட்டுக்கு கோவில் உள்ள போயிட்டு வந்துரு,,, நான் வெயிட் பண்றேன் நீ வர்ற வரைக்கும்… நீ கூப்பிட்டு நான் வரலைனு சொல்லும் போது தெய்வக் குத்தம் பண்ணின மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது… தயவு செஞ்சு என்னை வான்னு கூப்பிடாமல் தனியா போயிட்டு வந்துறேன்” கடுப்பாக ஆரம்பித்து கெஞ்சலாக முடிக்க
ஆராதனாவும் அதன் பிறகு அவளை அழைத்ததில்லை… தானே சென்று கும்பிட்டு வருவாள்…
ஆக… கடவுளுக்கு ’ஹாய்’ ’பை’ என்றளவில் மட்டும் தான் நம் செல்விக்குப் பழக்கம்.. அதற்கே அவள் கேட்டதெல்லாம் கேட்டதெல்லாம் என்பதை விட கேட்காமலேயே அவளுக்கு எதிர்பார்த்ததெல்லாம் கிடைத்திருக்க… வெறென்ன வேண்டும் அவளுக்கு….
---
அடுத்து ஒரு மணி நேரத்தில்…
”அத்தை…. கால் பண்ணிட்டேன்… அவர் வந்துட்டு இருக்காரு… நீங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்திருங்க… மயக்கமா வருதா…” செல்வி ஒரு புறம் மேகலாவிடம் கேட்டுக் கொண்டிருக்க
“அம்மா…. இப்போ ஓகேவாம்மா…. ஏன்மா இப்படியெல்லாம் பண்றீங்க… இனிமே இப்படி எல்லாம் வேண்டாதீங்க… அப்படியே வேண்டினாலும் எனக்காக என் பொண்ணு பண்ணுவான்னு வேண்டிக்கங்க” விட்டால் ஆராதனா அழுதே விடுவாள் போல… தாயின் களைத்த முகத்தைக் காண முடியாதவளாக ஆராதனாவின் குரல் தழுதழுத்திருக்க… அதே நேரம் அவள் பார்வை தன் தாய்க்கு ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் பதட்டத்தில் ஆராய்ந்திருக்கவும் செய்ய…
ஆயாசமாக அங்கிருந்த தூணில் சாய்து அமர்ந்த மேகலா… தன் மகளைப் பார்த்தவர்…
“தனா… நேர்த்திக்கடனை இப்படிலாம் பேசக்கூடாது… இதை எல்லாம் விட இன்னும் பெரிய வேண்டுதல்லாம் இருக்கு… அதுவும் உனக்காகத்தான்… உனக்கு மட்டும் ஒரு நல்ல இடம் அமஞ்சு நீ நல்லா இருந்தா… அது போதும் தனா… வேறென்ன வேணும் எனக்கும் உங்கப்பாக்கும்… கண்டிப்பா நடத்தி வைப்பா இந்த தாயி… எனக்கு இப்போ உன் கவலைதான் தாயி… உன் சித்தப்பன் உன் வாழ்க்கைல இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லையே… ”
ஆராதனா இப்போது பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க…
“ஏய் தனா… வனிதாக்கா தண்ணீ பாட்டில் வாங்கப் போனாங்க… பாரு…. இன்னும் காணோம்… கூட்டிட்டு வா” ஆராதனாவை அங்கிருந்து கிளப்பியிருந்தாள் செல்வி… பின் மேகலாவிடம்
“அத்தை ஏன்த்தை…. ப்ளீஸ்த்தை… அவளே அதை நினைக்கறது இல்ல… ஆனால் நீங்கள்ளாம்தான் அப்போப்ப அதை ஞாபகப்படுத்துறீங்க… ஃப்ரெண்டா அவ என்கிட்ட அவ என்ன சொன்னான்னு தெரியுமா… அந்த மேரேஜ் நின்னதுல துளி கூட வருத்தம் இல்லயாம் அவளுக்கு… இன்னும் சொல்லனும்ணா… உங்க பையன் மறுபடியும் ஆளா மாறனும்னு அந்த ஏற்பாடுக்கே சம்மதம் சொன்னாளாம்… அவ என்ன நினைச்சாலோ அது நடந்துருச்சே… அதுனால அவளுக்கு சந்தோசம் மட்டுமே… ஏமாற்றமோ வருத்தமோ இல்லைனு சொன்னா… அவ நல்ல மனசுக்கு எது நல்லதோ அது மட்டும்தான் அவளுக்கு நடக்கும் அத்தை..”
செல்வி பேசிக் கொண்டிருக்கும் போதே… லதாவும் அங்கு வந்திருந்தார்….
“மேடம் நீங்க இன்னுமா இங்க இருக்கீங்க… “ செல்வி லதா அங்கு இன்னும் இருந்ததைப் பார்த்து கேட்க…
“இங்க ஒரு ஃப்ரெண்ட்… ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்தேன்மா… பேசிட்டு இருந்தோம்… நேரம் போனதே தெரியல… இதோ கிளம்பிட்டேன்மா “ என்றவர்
”வர்றேன்மா…” என்று மேகலாவிடமும் விடைபெற்று கிளம்பியவர்… என்ன நினைத்தாரோ… ஒரு நிமிடம் தயங்கி பின் மேகலாவிடம் மீண்டும் திரும்பினார்…
”எனக்குத் தெரியல… சொல்லலாமா வேண்டாமான்னு… ஆனால் சொல்லாமல் போகவும் முடியல” என்றவர்…
“உங்க பொண்ணு மேல எப்போதுமே கவனம் வச்சுக்கங்க… எனக்குத் தெரிஞ்சு உங்க பொண்ணை நீங்க சரியா கண்காணிக்கலையோன்னு தோணுது… ”
இப்போது மேகலாவின் முகம் மாறி இருக்க…
“இனிமேலாவது கொஞ்சம் கவனிங்க… முக்கியமா கண்டிச்சு வளருங்க “ என்று லதா முடிக்கவில்லை
“என்ன மேடம்… போனாப் போகுது… அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிற டீச்சர்னு அமைதியா போனா என் பொண்ணப் பற்றி என்னென்னமோ சொல்றீங்க… தனா சொன்னப்போ கூட நம்பல… இப்போ புரியுது… காலேஜ்ல அவளைக் குத்திக் காமிச்சுட்டே இருப்பீங்களாமே… இப்போ காலேஜை விட்டுப் போன பின்னால கூடவா…. நல்லா இருக்குங்க உங்க நியாயம்… சின்ன புள்ள அவ… கோயில்ல வச்சு என்ன வார்த்தை பேசுறீங்க…“ மேகலா படபடவென்று ஆரம்பித்திருக்க
“அத்தை” செல்வி வேகமாக தன் மாமியாரை பேசாமல் தடுக்க நினைக்க…
“அட இரு செல்வி… நாலெழுத்து படிச்சிருக்காங்கன்னு மரியாதை கொடுத்து பேசினா… என் பொண்ணு மேலயே தப்பு சொல்வாங்களா… என் பொண்ணை கண்டிச்சு வளருன்னு சொல்றாங்க… கண்காணிக்கலைனு சொல்றாங்க.. என் பொண்ணைப் பற்றி என்கிட்டயே தப்பு தப்பா சொல்வாங்க நான் பார்த்துட்டு இருக்கனுமா…” என்று செல்வியை தவிர்த்துவிட்டு… மீண்டும் லதாவிடம் வந்து நின்றார்
“இங்க பாரும்மா செல்விக்கு நீ நல்ல டீச்சர்தான் என் மருமகளையும் உனக்குப் பிடிக்கும் தான்… அதுனால என் பொண்ணைப் பற்றி பேசுனா நான் மௌனமா இருப்பேன்னு நினைக்காத… மரியாதையும் அவ்வளவுதான் உனக்கு”
மேகலாவின் இந்த அவதாரம் செல்வியும் பார்த்திருக்கின்றாள்… மேகலா நல்லவர்களுக்கு நல்லவள்… அடாவடிக்கு அடாவடி… அவளுக்கு ஒருவரைப் பிடித்து விட்டது என்றால் தூக்கிக் கொண்டாடுவார்… இல்லையென்றால் அவ்வளவுதான்… என்ன செய்வது என்று தெரியாமல் செல்வி விழித்துக் கொண்டிருக்க… அதை விட கணவன் வந்து விட்டால்…. இன்னும் நிலைமை மோசமாகி விடும்… மேகலாவுக்கு ஒன்று என்றால் கார்த்திக்கை கேட்க வேண்டுமா என்ன… அரக்கனாகி விடுவான்…செல்வியின் நிலை இப்படி இருக்க… லதாவும் விடவில்லை…
“அப்போ அம்மா பொண்ணு வேற வேற இல்லை… நான் கூட ஆராதனா தான் அப்படின்னு… இப்போதானே தெரியுது… விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணு முளைக்குமான்னு…” அந்த விரிவுரையாளர் நக்கலாகச் சொன்னவராக…
“உங்கப் பொண்ணை நான் தப்பான ஆங்கிள்ள சொல்லலம்மா… நீங்க வேற ஏதாவது தப்பான மீனிங்ல் எடுத்துக்கிட்டீங்கன்னா சாரி… நான் என்ன சொல்ல வந்தேன்னா… அவ என்ன நினைக்கிறாளோ அதை நடத்திக்க… எல்லாரையும் யூஸ் பண்ணிக்கிறான்னு சொல்ல வந்தேன்மா… அன்னைக்கு என் விசயத்துல கூட… நான் கூட அவளைத் திட்டிப் பேசின அன்னைக்கு அவ்ளோ ஃபீல் பண்ணினேன்…. ஆனால் அவ நல்லதுக்குத்தானே சொன்னோம்னு மனசைத் தேத்திகிட்டேன்…அவளும் பெருசா ரியாக்ட் பண்ணாத மாதிரி இருந்துச்சு… ஆனால் என் ஹஸ்பண்ட்க்கு ட்ரான்ஸ்ஃபெர் அதுவும்… மெமோ கொடுத்து அனுப்பினாங்க… அது என் ஹஸ்பெண்டோட கரியர்க்கு எவ்ளோ பெரிய ப்ளாக் மார்க் தெரியுமா… பேக்ரவுண்ட்ல உங்க பையன் வேல பார்த்திருக்கான்… ஆனா அவனை விட… உங்க பொண்ணு அதை செய்யத் தூண்டியிருக்கா…ஆனால் அது கூட உங்களுக்குத் தெரியல…”
மேகலா ஏதோ பேசப் போக.. லதா கைமறித்தவராக
“இல்ல என் பொண்ணு அப்படிலாம் இல்லனு சொல்லப் போறிங்களா… உங்க பொண்ணே… என்கிட்ட வந்து பேசுனா… சொன்னா… அதுவும் தெனாவெட்டா… நாங்கள்ளாம் அதிகாரம் பணபலம் இருக்கிறவங்க … எனக்கு… எனக்கு இல்ல என் குடும்பத்துக்கே… படிப்பு ஜஸ்ட் பத்திரிகைல பேருக்கு பின்னால் போட்றதுக்கு மட்டும் தான்… வேற எந்த டேஷ்ஷுக்கும் இது உதவாதுன்னு என்கிட்டயே சொன்னா…”
செல்வியும் மேகலாவும் அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க
“உங்க பொண்ணு படிப்பை எதுக்கு சமமா பேசினா தெரியுமா… அதுவும் அதைச் சொல்லிக் கொடுக்கிற வாத்தியார்கிட்டயே… அப்படிப்பட்ட இந்த குடும்பத்துல சரஸ்வதி கடாட்சமா இருக்கிற இந்தப் பொண்ணு…” செல்வியைக் காட்டியவர்…
“இலட்சுமி கடாட்சம் மட்டும் போதும்னு நினைக்கிற குடும்பத்துக்கு இப்படி ஒரு பொண்ணு… இந்தப் பொண்ணோட ஆசைல கனவுல மண்ணள்ளிப் போட்றாதீங்க…”
“எங்க செல்விக்கு அப்படி ஒரு நிலைமை… எப்போதும் வராது…. அப்படி நான் வரவும் விடமாட்டேன்…” ஆராதனா வந்திருக்க… அவளின் கோபம் அவளின் நெற்றி மையத்தில் வந்து நின்றிருக்க…
கார்த்திக்கும் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான்… அவனும் வந்து விட்டால் என்ன களேபரம் நடக்குமோ… செல்விக்கு பயப்பந்து சுழல ஆரம்பித்திருக்க…
“மேடம் நீங்க கிளம்புங்க…” செல்வி படபடத்த போதே
ஆராதனா இப்போது…
“இங்க பாருங்க… என் அண்ணா வந்துட்டு இருக்காங்க… அவர் கோபப்பட்டால் என்ன ஆகும்னு ஏற்கனவே தெரியும் உங்களுக்கு… முதல்ல கூட உங்கள ஒண்ணும் பண்ணாம உங்க ஹஸ்பண்டுக்குத்தான் பிராப்ளம் கிரியேட் பண்ணாரு… ஆனால் இப்போ அதுவும் எங்க அம்மாகிட்டயே இப்படி நடந்ததைப் பார்த்தா என் அண்ணா என்ன செய்வார்னு எனக்கே தெரியல……. முதல்ல இடத்தை காலி பண்ணுங்க… வந்துட்டாங்க… என்ன நீங்க என்ன வேணும்னாலும் பேசுவீங்க நான் வாய மூடி பார்த்துட்டு இருப்பேன்னு நினச்சீங்களா… எங்க வீட்டு ஆளுங்களுக்கு மட்டும் தான் இந்த தனா அவங்க சொன்னா கேட்டு அதுபடி நடப்பா… வெளில இருந்து யார் வந்தாலும் இந்த தனா வேற மாதிரி… பிரச்சனை வேணாம்னு நினச்சீங்கன்னா ஒழுங்கா வந்த இடம் தெரியாம போயிருங்க…” ஆராதனா தெனாவெட்டாக சொல்லி திமிராக லதாவைப் பார்க்க
“எப்படி பஜாரி மாதிரி பேசுறா பாருங்க உங்க பொண்ணு… ஹ்ம்ம்… உங்க கிட்ட போய்ச் சொல்றேன் பாருங்க,…” என்றவர் செல்வியிடம் திரும்பி
“இவங்கள பத்தி எனக்கென்ன கவலை… செல்வி… உன்னை நினச்சுதான் … என்னமோ தெரியல… என்னோட ஆழ்ந்த அனுதாபம்மாசிகரம் தொடுவேன்னு நெனச்சேன்… … இந்தக் குடும்பத்தில இருந்து அவ்ளோ தூரம் போக மாட்டியோன்னு தோணுது… ஹ்ம்ம்.. நீ ஒரு வட்டத்துக்குள்ள சிக்கிகிட்டியோன்னு தோணுதும்மா”
“ஏய்… என்ன பேசுற… கிளம்பு முதல்ல…” ஆராதனாவின் மரியாதை முகம் மாறி இருக்க… செல்வி இப்போது
“தனா… என்னது இது… அவங்க வயசுக்காகவது மரியாதை கொடு…”
“எனக்குத் தெரியும் யாருக்கு மரியாதை கொடுக்கனும்… கொடுக்கக் கூடாதுன்னு… நீ சும்மா இரு செல்வி… வந்துருச்சு அட்வைஸ் ஆணிய தூக்கிட்டு… “ என்ற போதே… லதா அதற்கு மேல் தான் அங்கு நின்றால் தனக்குத்தான் அவமானம் என அங்கிருந்து கிளம்பியிருக்க…
ஆராதனா இப்போது…
”செல்வி… நீ யார்னு இவங்களுக்கலாம் காமிக்கனும்… “ செல்வியிடம் சொல்ல… செல்வி ஆராதனாவிடம் முகம் கொடுத்து பேசாமல் முன்னே செல்ல…
“செல்வி… என் மேல என்ன வேணும்னாலும் கோபப்பட்டுக்க… அதுக்காக படிக்காம மட்டும் விட்றாத… இந்த லதா மாதிரி ஆளுங்க… இவங்க மட்டும் இல்ல இன்னும் ரொம்ப பேர் மூஞ்சி முகரையெல்லாம் அடிச்சு தொங்க விடனும்… அதுக்கு எங்க அண்ணா கூட சந்தோசமா இருக்கனும் அதே நேரம் நீ நெனச்சபடியும் முன்னேறனும்”
ஆராதனா செல்வியிடம் அறிவுரை சொல்ல… செல்வியோ இன்னுமே முறைக்க… அவர்களுக்குள் இப்படி போய்க் கொண்டிருக்கும் போதே கார்த்திக்கும் அங்கு வந்து சேர்ந்திருந்தான்…
“என்னம்மா ஒரு மாதிரி இருக்கீங்க…” தன் தாயின் முகத்தை பார்த்து சரியாகக் கணித்துக் கேட்க
பெண்கள் யாருமே அங்கு நடந்ததை எல்லாம் சொல்லவில்லை… செய்த நேர்த்திக் கடனைக் காரணம் காட்டியிருக்க…
“இதுக்குத்தான் இந்த வயசுல இதெல்லாம் தேவையான்னு நானும் அப்பாவும் தலைப்பாடா அடிச்சுக்கிட்டோம்” என கார்த்திக் தாயின் மேல் கொண்ட அக்கறையில் கோபமாகச் சொன்னவன்… அடுத்த நொடியே…
“அம்மா… நீங்க மிடில் சீட்ல நல்லா காலை நீட்டி வசதியா படுங்க… தனா… நீயும் வனிதாவும் பின்னால போய் உட்காருங்க…” என்றபடி தன் மனைவியுடன் முன்னால் சென்று அமர்ந்தான்…
“மாமா… சாங் போடனும்… ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ் மாமா” செல்வி யாரும் அறியாமல் கார்த்திக்கிடம் கொஞ்சலான குரலில் கெஞ்சிக் கொண்டிருக்க…
“போட்றேண்டி வாடி…” கடுப்பாகச் சொன்னவனின் குரலில் காதல் காதல் மட்டுமே
செல்வி அவன் போட வேண்டும் என்றெல்லாம் காத்திருக்கவில்லை… வேகமாக ம்யூசிக் சிஸ்டத்தை ஆன் செய்ய… அதில் ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த பாடலில் இருந்து பாட ஆரம்பித்திருக்க… அவள் கார்த்திக்கைப் பார்த்து வெட்கப் புன்னகை செய்ய… கார்த்திக் செல்வியை திரும்பிப் பார்க்க… அதில் பூரணத்துவம் மட்டுமே….
“கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய்…
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே…
அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை…
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே…”
பாடல் தொடர்ந்தது…
---
மகன் சொன்னது போலவே… மேகலாவும் நடு இருக்கையில் படுத்தபடி கண்களை மூடிய போதே.. லதா பேசிய பேச்சுக்கள்… கூடவே அன்று பார்த்த ஜோஷியர் ஞாபகமும் வந்திருக்க…
“உங்க பையன் வாழ்க்கைல இனி நல்ல காலம் தான்… அவன் வாழ்க்கைல தேவதை வரப்போறா”
“உங்க பொண்ணை உங்க கைக்குள்ளயே பத்திரமா வச்சுகங்க… அவ வாழ்க்கையையே வீணடிச்சுக்கப் போறா…”
தன் மகன் வாழ்வில் அவர் சொன்னதெல்லாம் நடக்கிறதென்றால்… தன் மகள் வாழ்க்கையிலும் அவர் சொன்னதெல்லாம் நடக்குமா… நடக்கப் போகிறதா… மகளை வேகமாகப் பார்க்க…
அவளோ வனிதாவிடம் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தாள்…. இங்கு மேகலாவுக்கோ மனமெங்கும் மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்த சஞ்சலம் மட்டுமே… அந்த விரிவுரையாளர் லதாவை திட்டி விட்டு வந்திருந்தாலும்… மகளின் மேல் ஒரு கண் வைக்க வேண்டும்… அதே போல மகளைத் தன்னோடே வைத்துக் கொள்ள வேண்டும்… அவள் இன்னொரு வீட்டுக்குச் செல்லும் வரை… அவளை தன்னை விட்டு எங்கேயும் அனுப்பி விடக்கூடாது…” முடிவெடுத்தவராக மீண்டும் கண்களை மூடிப் படுத்தும் விட்டார் மேகலா…
---
பின் இருக்கையில் அமர்ந்திருந்த வனிதா ஆராதனாவிடம்
“ஏய் தனாப் புள்ள…. நம்ம அண்ணன் போட்ற பாட்டெல்லாம் ஒரு திணுசா இருக்கே… முதல்லாம் கார்ல ஏறுனா… ஏதோ குத்துப்பாட்டு சாமிப்பாட்டுனு ஓடும்… இதெல்லாம் அண்ணே ப்ளே லிஸ்டா… இல்ல நம்மாளு செல்வி ப்ளே லிஸ்ட்டா…”
”என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
மங்கை பேரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…”
”நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட…
நங்கை ஊரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…”
”கார்த்தி அண்ணே…” வனிதா பின்னால் இருந்து சத்தமாக கார்த்தியை அழைக்க
“சொல்லும்மா..” கார்த்திக்கும் திரும்பாமலேயே வனிதாவுக்கு பதில் கொடுக்க…
“பேர் ‘தமிழ்செல்வி’னு தான் ஊர் உலகத்துக்கே தெரியுமே… பின்ன என்ன… மங்கை பேர் என்னடி… நங்கை ஊர் என்னன்னு… இன்னும் கேட்டுட்டு இருக்கீங்க என்ன…” வனிதா கார்த்திக்கை ஓட்டியபடியே
“ஏய் செல்வி… உன் பேரை எங்க அண்ணனுக்கு இன்னும் பதிய வைக்கலயா… ” நக்கலாகக் கேட்க… சட்டென்று கார்த்திக் செட்டை ஆஃப் செய்தபடி… மீண்டும் கியரைப் பிடித்த அவனின் இடது கையின் இறுக்கம் இன்னும் அதிகமாகி இருக்க…. மணிக்கட்டு வரை அவன் கையை மறைத்திருந்த சட்டையைத் தாண்டியும் அது செல்விக்குப் புரிந்தது… அவளையுமறியாமல் ஸ்டிடியரிங்க் வீலில் இருந்த அவனின் வலது கையில் அவளின் பார்வை பதிய… கார்த்திக்கும் முகம் முற்றிலும் மாறியிருந்தது இப்போது
---
அடுத்த சில நிமிடங்களில் ஆராதனாவும்… வனிதாவும் சாலையில் நின்றிருந்தனர் இப்போது…
“வனிதாக்கா இந்த ஏரியாலதான் அந்தக் கடை இருக்கு…. நாம போகலாம்… ” ஆராதனா வனிதாவிடம் சொல்லிக் கொண்டிருக்க
“ஏய் தனா உனக்கு அறிவே இல்லையா…. திடிர்னு காரை நிறுத்தச் சொல்லி… அம்மாவை வேற எழுப்பி… இறங்கிட்டு… கடை அது இதுன்னு சொல்லிட்டு இருக்க..” ஏற்கனவே ஒரு மாதிரியான மனநிலையில் வந்து கொண்டிருந்த கார்த்திக்… இப்போது ஆராதனாவின் தீடிர் நடவடிக்கையில் அவளைத் திட்டிக் கொண்டு இருக்க செல்விக்குமே ஒன்றும் புரியவில்லை
“என்னடி… ஏன் திடீர்னு இறங்குன… எந்த கடைக்குப் போறோம்…” செல்வி கேட்டபடியே இறங்க முயற்சிக்க…
“போறோம் இல்ல… போறீங்க… நாங்கதான் போறோம் நீ இல்ல…… நீ அண்ணா கூட வீட்டுக்குப் போ…” என்றவள்… நிறுத்தியிருந்த செட்டை ஆன் செய்தபடி…
”அன்பே ஓடி வா…
அன்பால் கூட வா…
ஓ பைங்கிளி நிதமும்…”
”இப்போ போலாம்… ரைட் கிளம்புங்க” என்றபடி…
“அக்கா… ரொம்ப பேசிட்டாங்கள்ள… அதான் அவங்களுக்கு பிடிச்ச கிஃப்ட் வாங்கிக் கொடுக்கப் போறேன்….. வாங்க வனிதாக்கா…. “ என்று வனிதாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்த கடையை நோக்கி ஆராதனாவைப் பார்த்த கார்த்திக்கும் செல்வியும் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க…. இப்போது ஆராதனா பின்னால் திரும்பி…
/*அடி ஆத்தாடி…
இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
அடி அம்மாடி…
ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா…*/
“செல்வி… கார் விண்டோவை க்ளோஸ் பண்ணு… பாட்டு வெளில கேட்குது ” என்றபடி… முன்னே செல்ல…
“கார்த்தி… வனிதாகிட்ட சொல்லி தனாவை பார்த்துக் கூட்டிட்டு போயிட்டு வரச் சொல்லு… ” மேகலா அந்த களைப்பிலும் மகனிடம் சொல்லி மகளின் பாதுகாப்பில் கவனம் வைக்க….
கார்த்திக் இப்போது வனிதாவை அழைத்தான்
“வனி… பார்த்து பத்திரமா தனாவை கூப்பிட்டு வந்துரு… நீ இருக்கேன்னு தான் விட்டுட்டு போறேன்…”
“சரிண்ணா… நான் பார்த்துக்கிறேன்.. பத்திரமா கூட்டிட்டு வந்துறேன்” வனிதாவும் தலை ஆட்ட…
செல்வி நக்கலாக கணவனைப் பார்க்க…
“உனக்கு எதுக்குடி இவ்ளோ நக்கல… உன் அளவுக்குலாம் என் தங்கச்சி விவரம் இல்லடி… சூதுவாது தெரியாத ஒரு அப்பிராணி….” என்றவனிடம் செல்வி ஏதும் சொல்லாமல் இருக்க… கார்த்திக்கும் காரை எடுத்திருந்தான்…
---
/*கட்டுத்தறி காளை நானே…
கன்னுக்குட்டி ஆனேனே…
தொட்டுத் தொட்டு தென்றல் பேச…
தூக்கம் கெட்டுப் போனேனே…
சொல் பொன்மானே… ஏஏஏ…*/
கார் அவர்களை விட்டு கடந்த பிறகும் ஆராதனா வனிதாவிடம் பாடியபடி வந்தவளாக…
“எங்க அண்ணா இப்படியும் பாட்டு பாடும்… அதெல்லாம் நீ கேட்டு கிண்டல் பண்ணுவியா என்ன... அதான் உன்னை கார்ல இருந்து இறக்கிட்டேன்… இனி எங்க அண்ணனும் செல்வியும் கார்ல இருக்கும் போது நீ அந்தக் கார்ல ஏறக் கூடாது… எங்க அண்ணனையே நீ கிண்டல் பண்ணுவியா என்ன” ஆராதனா வனிதாவிடம் எச்சரிக்கவெல்லாம் இல்லை… கிண்டலாகப் பேசுவது போலத்தான் பேசினாள்…
“அடிப்பாவி… சும்மா கார்த்திக் அண்ணனைக் கிண்டல் பண்ணதுக்கு நடு ரோட்ல இறக்கி விட்டுட்டியாடி… புது டிசைன்ல செட் வந்திருக்குனு சொன்னதை நம்பி இறங்கினேன் பாரு..” வனிதாவும் பெரிதாகக் கோபப்படாமல் ஆராதனாவிடம் பேச
”அதுக்கும் தான்…. வா… வாக்கா… வாக்கா ”
இப்போது வனிதா ஆராதனாவை உண்மையாகவே முறைக்க
“ஹெஹே… முறைக்காதீங்க வனிதாக்கா… காதல் புறாக்களுக்கு இடையில சிங்கிள் புறா நாம எதுக்கு…. அந்த காதல் புறாக்கள் பேசுற பாஷை வேற புரியாம சிங்கிள் புறா நீங்க வேற இடையில பேசி டிஸ்டர்ப் பண்ணிட்டீங்களா… லவ் பேர்ட்ஸ் சாபம் நமக்குத் தேவையா… சொல்லுங்க… கோவிச்சுக்காதீங்க… சீக்கிரம் சிங்கிள் டபுள்ஸ் ஆகப் போற நேரத்துல உங்களுக்கு இந்த சாபமெல்லாம் தேவையா…”
“நம்பு வனிதாக்கா… மிங்கிள்ஸ் சாபம்லாம் நம்மள மாதிரி சிங்கிள்ஸ்க்குத் தேவையா என்ன…” ஆராதனாவின் பாவத்தில் வனிதாவின் முகத்தில் இப்போது சிரிப்பு வந்திருக்க
ஆராதனாவும் கடைக்குள் நுழையப் போக… அப்போது அவளது அலைபேசி அடித்திருக்க… வேகமாக எடுக்க… அவளது தோழி காயத்ரி…
“வனிதாக்கா… என் ஃப்ரெண்ட் கால் பண்றா… நீங்க உள்ள போய் பார்த்துட்டு இருங்க…” என்றபடி வனிதாவை உள்ளே அனுப்பியவள்..
“காயு…ஏண்டி… என்னடி ஃபோனையே காணோம்… மேடம் அவ்ளோ பிஸி ஆகிட்டீங்களா என்ன” என்ற போதே காயத்ரியின் விசும்பல் கேட்க… பதறிப் போய் விட்டாள் ஆராதனா
“ஏய் காயத்ரி… என்னடாம்மா ஆச்சு… புள்ளத்தாச்சியா இருக்கும் போது இது என்ன அழுகை… முதல்ல அழுகைய நிறுத்து… என்ன விசயம் அதைச் சொல்லு… ராஜாண்ணா உன்னை நல்லாத்தானே பார்த்துகிறாங்க..” ஆராதனா அடுத்தடுத்து விசாரணைகளை அடுக்க…
“அதெல்லாம் நல்லாத்தான் பார்த்துக்கிறாங்க… ஏன் செல்வி போன் எடுக்க மாட்டேங்கிறா… அவளுக்குத்தான் முதல்ல அடிச்சேன்…”
இப்போது காயத்ரியின் குரல் சாதாரணமாகி இருந்தது
“ஓ… திருமதிங்களாம் தனி மீட்டிங்கா என்ன… இது எப்போதிருந்து…” ஆராதனா நக்கலாகக் கேட்க
“ஆமா உன்கிட்ட ஏதாவது சொன்னா.. நீ வேற மாதிரி பேசுவ… செல்வினா எனக்கு ஆறுதலா பேசுவா… நானும் புலம்பிட்டு வச்சிருவேன்”
“சரி சரி என்ன சொல்லு… ரொம்ப பிகு பண்ணாத….” ஆராதனா தோழமை கலந்த உரிமையுடன் அக்கறையுடன் காயத்ரியிடம் கேட்க
”அடுத்த மாசம் வளைகாப்பு…”
”ஏழாவது மாசம்னா வளைகாப்புதானே வைப்பாங்க… இதுல உனக்கென்ன வருத்தம்…” ஆராதனா கேட்க
காயத்ரி அமைதியாக இருக்க
”என்ன விசயம்னு சொல்லுடி மொட்டையா சொன்னா என்ன பண்றது… என்ன் ஆறுதல் சொல்றது” ஆராதனா மென்மையாகக் கேட்டாலும்… கொஞ்சம் கடுப்பும் கலந்திருக்க
“அம்மா அப்பா ஞாபகம் வந்திருச்சுடி… அவங்கள்ளாம் இல்லாம வளைகாப்புனு… மனசே சரி இல்லடி…”
“ஹ்ம்ம்… அப்போ லவ்வே பண்ணியிருக்கக் கூடாது… இதுவும் வேணும் அதுவும் வேணும்னா என்ன பண்றது… சரி அட்லீஸ்ட்… அம்மா அப்பா ஒத்துக்கிற வரையாவது ஒழுங்கா கட்டுப்பாடோட இருந்திருக்கனும்… அதுவும் இல்ல “
“இதுக்குத்தான் உன்கிட்ட பேசறதே இல்ல” காயத்ரி பட்டென்று சொல்ல
”ஏய் என்ன நான் தப்பா சொல்லிட்டேன்… இப்போ மேடத்துக்கு கோபம் வருது… கல்யாணம் பண்ணி வச்சா… உடனே எதை முடிச்சிரனுமோ அதை முடிச்சிறனும்… ஏன் அப்போ அப்பா அம்மா ஞாபகம் வரலையோ… இப்பொ வந்துருச்சு…”
“நான் வைக்கிறேன்…”
“சரி சரி… உண்மையைச் சொன்னால் கோபம் வந்துருமே… இப்போ என்ன உன் வளைகாப்பு முடிஞ்சு உங்க வீட்டுக்கு வரணுமா என்ன” ஆராதனா கேட்க
”அடப்போடி… அம்மா அப்பா கிட்டயே பேசி ஏழு மாசமாச்சு… இதுல வீட்டுக்கு வந்துட்டாலும்”
அதன் பின் ஆராதனா அவளிடம் ஆறுதலாகச் பேச ஆரம்பித்திருக்க… காயத்ரியும் அவளிடம் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாள்….
”செல்வியும் நானும் சீக்கிரமா சென்னைக்கு வந்துருவோம்… வீக் எண்ட்லாம் உங்க வீட்ல தான் நான் டேரா போடுவேன்… ஜூனியர் காயத்ரி இல்லை ஜூனியர் ராஜா தான் வீக் எண்ட் கம்பானியன்… “
காயத்ரி சிரித்தவளாக
“செல்வி அண்ணா வீட்டுக்கு நீ போக மாட்டியா… எங்க வீட்டுக்குத்தான் வருவீங்களா…”
”செல்வியே அவ அண்ணா வீட்டுக்கு போக மாட்டா நான் எங்க போக… செல்வி கார்த்திகேயனை நோக்கி வந்துற மாட்டா… அப்புறம் எனக்கெங்க போக இடம்… “ என்ற போதே செல்விக்கு அவள் அத்தை வீடு ஞாபகம் வந்திருக்க… சென்னை என்றால் திலகா அத்தை வீடுதான் இதுவரை அவள் ஞாபகங்களில் இருந்திருக்க… அவளையுமறியாமல் கண்ணைக் கரித்திருக்க…
“ஏய் தனா… என்னடி அமைதி ஆகிட்ட…”
“ப்ச்ச்… அத்தை ஞாபகம் வந்திருச்சுடி… முதல்லாம் சென்னைனா எங்க திலகா அத்தை வீடுதான்… இப்போ…” சொன்னவள் சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டு
“அத்தை வீடு… எப்போதும் என் அத்தை வீடு தானே… எனக்கில்லாத உரிமையா என்ன… நான் போனா விரட்டிருவாங்களா என்ன… அங்கயும் போவேன்… எங்க அத்தையைப் பார்க்க கூடாதுனு சொல்லிருவாங்களா என்ன… “
”நானும் செல்வியும் போனா… மாமா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க… ஆனா மாமா முதல்ல மாதிரி பேசுவாங்களான்னு தெரியல… அத்தை கண்டிப்பா சந்தோசப் படுவாங்க… ஒரே பிரச்சனை… அங்க இருக்கிற செழியன்னு ரெண்டு கால் பிராணிதான்… அதுதான் குரைக்கும்னு நினைக்கிறேன்… அது கூட பிரச்சனை இல்ல… அது அடிக்கடி வெளிநாடு போயிரும்… சோ அது வெளிநாடு பார்சல் ஆகும் போது… நாம எண்ட்ரி கொடுத்திருவோம்ல…”
ஆராதனா காயத்ரிக்கு சொல்வது போல தனக்கும் சொல்லிக் கொண்டாள்…
---
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருந்த ரெசார்ட்டில் தனது கம்பெனி உறுப்பினர்களுடன் தன் அலுவலகத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தான் செழியன்….
அங்கிருந்த அரங்கத்தில் நடுநாயகமாக நின்றிருந்தான் செழியன்…
மிகச் சொற்பமான நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது அவனது கம்பெனி அனைவரும் அறிந்தது… ஆனால் அதன் இன்றைய வளர்ச்சி… அவனுக்கே நம்பமுடியாத ஆச்சரியம்… அதன் பொருட்டே இந்த விழா…
“இது நாம நினைத்துப் பார்க்கவே முடியாத அச்சீவ்மெண்ட்… ஆனால் உங்க ஒவ்வொருவரோட உழைப்பும் இல்லாமல் கண்டிப்பா சாதிச்சிருக்க முடியாது… எஸ்… நமக்கு கீழ ரெண்டு கம்பெனி வரப் போகுது… நாட் அ டை அப்… நாம அதை விலைக்கு வாங்கிட்டோம்… நம்ப கம்பெனி இப்போ இருக்கிற மாதிரி 200 மடங்கு பெரியதாகப் போகிறது…” செழியனின் குரலில் அப்படி ஒரு உற்சாகம்… இது அவனே எதிர்பார்க்காத ஒன்று… அதே நேரம் அவனது உழைப்பும் திறமையும் முக்கிய பங்கு என்பதும் மறுக்கவே முடியாத ஒன்று… இந்த ஏழு மாதத்தில் அவனின் உழைப்புக்கு கிடைத்த நியாயமான அங்கீகாரம்…
கம்பெனி முதலாளியின் உற்சாகம் அலுவலக உறுப்பினர்களுக்கு தொற்றி இருக்க…
“நம்மளோட இந்த சக்ஸஸ் சீக்கிரமான உங்க ரிவைஸ்ட் சாலரில தெரியும்… இன்னும் உங்களோட சப்போர்ட் அவசியம் நம்ம கம்பெனிக்கு… தென் இந்த வெற்றியோட அடையாளமாத்தான்… இன்னைக்கு இந்த விழாவும்… பரிசும் ….” என்று பேசியவன்… முடிவில் அனைவருக்கும்… கேடயமும்… பரிசும் வழங்கியும் கவுரவித்திருந்தான் செழியன்…
அதன் பின் அனைவரும்… கேளிக்கை… விளையாட்டு என பிரிந்து சென்றிருக்க.. செழியன் மட்டும் தனியே நின்று கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்தான்… அவனது தனிமை எனும் போதே அவனின் நினைவுகளில் அவனது ஆராவும் கலந்திருப்பாளே…
அங்கு சில பெண்கள் கால்சட்டை… டீஷர்ட் அணிந்து கைப்பந்து விளையாடிக் கொண்டிருக்க… அவர்களின் உடையைப் பார்த்த செழியனுக்கு ஆராதனா சிறுமியாக இருந்த நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து முற்றிலும் அவள் நினைவுகள் அவனை ஆக்கிரமித்திருக்க
ஏழு மாதத்திற்க்கும் மேலாகிவிட்டது அவளை நேரில் பார்த்து… முன்பெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி எப்படியாவது அவளை ஊருக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து விடுவான்… இல்லை சென்னைக்கு தனது மாமா குடும்பத்தையே வர வைத்து விடுவான் செழியன்…
கமலியின் திருமணத்திற்கு பின்னர் அது முடியாமல் போயிருக்க… அவர்களின் ஊருக்கு கூட போக முடியாத சூழ்நிலை… முக்கியமாக அவனது தந்தை முத்துராம் மகனை அனுமதிக்கவில்லை
முதல் சில மாதங்கள் இவனின் விபத்து… அடுத்து தொடர்ந்த நாட்களில் அவனது தொழில் அவனை உள்ளிழுத்துக் கொள்ள… அதற்காக ஆராதனாவை நினைக்காமல் எல்லாம் அவன் இல்லை.. முகிலனிடம் இருந்து எல்லா விபரங்களும் அவனுக்கு போய்ச் சேர்ந்துவிடும்… இப்படித்தான் கடந்த மாதங்கள் கடந்திருக்க… ஆனால் இதற்கு மேல் அவனால் ஆராதனாவைப் பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலை… அதன் உச்சகட்டமாக அவளின் நினைவுகளில் கடந்த சில நாட்களாக அவனின் பல வேலைகளில் இப்போது சொதப்பிக் கொண்டிருக்க… எப்படியாவது அவளைப் பார்க்க வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்…
“டேய் செழியா… அவகிட்ட பேசக் கூட வேண்டாம்… ஜஸ்ட் அவளை நேர்ல … அவ முகத்தை மட்டும் பார்த்துட்டு வந்தா போதும்… அடுத்து ஒரு ஆறு மாசத்துக்கு தாங்குவ… இல்லைனா நீ செமையா சொதப்புவ… அதுவும் இப்போ உன் கம்பெனி இருக்கிற நிலைமைல உன்னோட முழு உழைப்பு தேவை… அப்போதான் கிடைத்த வெற்றிய தக்க வைக்க முடியும்…” அவனின் காதல் மனம் அவனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க
“வேற வழி இல்லை… ஏதாவது காரணம் சொல்லி ஊருக்கு போயிருவோமா… ஆனால் அவளைப் பார்க்க முடியுமா… ” மனம் காரணங்களை யோசிக்க ஆரம்பித்த போதே அவனுக்குள் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியிருக்க
‘’ஏன்… அவ காலேஜுக்கு போகக் கூடாது… AI டெக்னாலஜி பற்றி அவேர்னஸ் அண்ட் செமினார் கொடுக்கப் போகக் கூடாது மேடம் பையாலஜி க்ரூப் தான் இருந்தாலும் மொத்த காலேஜுக்கும் செமினார் கொடுப்போம்… நம்மாளையும் பார்ப்போம்…” என்றவன்… தனது அலைபேசியில் இருந்த தனது நண்பனை உடனடியாக அழைத்தான்… விசயத்தையும் சொல்ல..
“சூப்பர்… செழியா… கண்டிப்பா நான் காலேஜ்ல பிரின்ஸ்பால் கிட்ட பேசிட்டு டேட்ஸ் கேட்டு சொல்றேன்… உனக்கு எது ஒத்து வருதோ அப்போ வா… அந்த மேடம் கண்டிப்பா இதுக்கு ஓகே சொல்வாங்க எனக்குத் தெரியும்… ஆனால் ரொம்ப சந்தோசம்டா… நம்ம சைட்ல இருக்கிற ஸ்டூடன்ஸ்க்கு இந்த மாதிரி செமினார்லாம் கொடுத்து அவங்கள முன்னேத்தனும்னு நினைக்கிறது வேற லெவல்டா…”
செழியனும் சந்தோசமாகத் தலையாட்டியவன் அந்த நண்பனின் செண்டரில் தான் ஆராதனா படித்து வருகிறாள் என்று தெரிந்தும் அவளைப் பற்றி விசாரிக்கவெல்லாம் இல்லை செழியன்… தனக்கான தேவையை… பேசிவிட்டு வைத்தபோதே… அவனது தந்தையிடமிருந்து இரண்டு மூன்று அழைப்பு வந்திருக்க…
“என்னப்பா… நான் இன்னைக்கு ரெசார்ட்ல இருப்பேன்னு தெரியுமே… ஏதாவது அவசரமா…” செழியன் இயல்பாக கேட்டபோதே…
“உடனே வீட்டுக்கு வா…” முத்துராமின் குரலின் தொணியிலேயே… அதில் ஒலித்த கட்டளையிலேயே செழியனும்… அங்கிருந்து பாதியிலெயே கிளம்பியிருந்தான்…
---
அடுத்த சில மணி நேரத்தில் வீட்டில் நுழைந்த போதே முத்துராம் செழியனை வரவேற்றதே கோபமான பார்வையில் தான்…
“நமக்கு தேவையில்லாத விசயத்தில எல்லாம் நீ எதுக்குடா தலையிடற…” என்று மகனிடம் ஆரம்பித்தவரைப் பார்த்து செழியன் குழம்பிய பார்வை பார்க்க…
”நாமளும் ஒதுங்கிட்டோம்… அவங்களும் நம்மள ஒதுக்கிட்டாங்க… அப்படி இருக்கும் போது நீ ஏண்டா அவங்க விசயத்துல தலையிடற…” முத்துராம் விசயத்தை நேரடியாகச் சொல்லாமல் மகனைத் திட்ட ஆரம்பித்திருக்க…
“அப்பா.. என்ன விசயம்னு சொல்லாமல் இப்படி பேசினா எனக்கு என்ன தெரியும் இல்லை பதில் சொல்ல முடியும்… முதல்ல இவ்ளோ டென்ஷன் எதுக்கு…” தன் தந்தையை இயல்பாக்க நினைக்கும் போதே…
“ஒண்ணுமே உனக்குத் தெரியாதா…” திலகா ஆவேசமாக அவனைப் பார்த்து கேட்டார்… அதுவும் அப்போதுதான் அந்த வரவேற்பறைக்கே வந்திருந்தார்… வரும்போதே கோபம் மட்டுமே அவரிடம்…
தந்தையாவது கோபத்தில் இருந்தாலும் நிதானமாக இவனைப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்… தாயோ ஆவேசமாக இருக்க
“அம்மா அப்பா… அண்ணன்… இவங்கதான் என்னைத் தள்ளி வச்சுட்டாங்கன்னா… இன்னைக்கு என் தங்கச்சியும் தள்ளி வச்சுட்டா… “ திலகா தன்மேலேயே உருவான சுயப் பச்சாதபத்தில் அழ ஆரம்பித்திருக்க…
தாயிடம் வேகமாகச் சென்றவனை தள்ளி விட்ட திலகா…
“அப்படி என்னடா உனக்கு கோபம் என் அண்ணன் குடும்பத்து மேல அதுவும் என் அண்ணன் பசங்க மேல…” திலகா கோபத்தோடு அவனைப் பார்த்து கேட்டவள்…
“இதை நான் கேட்கல… உன் சித்தி கேட்கிறா… ”
“அம்மா… நான் தப்பா ஏதும் பண்ணலம்மா… சித்தியா தப்பா எடுத்துகிட்டாங்க” விசயம் அவனுக்கும் புரிந்து தாயிடம் பேச ஆரம்பித்தான்…
“சித்தி சொன்ன பையன் என் காலேஜ் மேட்டோட அண்ணன்மா… சித்தி எதார்த்தமா விசாரிக்கச் சொன்னாங்க… ஆராதனாக்குனு சொல்லலம்மா… ”
“நம்ம தனாக்குத்தான் விசாரிக்கிறாங்கனு தெரிஞ்சிருந்தா நான் அப்போவே “ என்ற போதே
“விசாரிச்சு சொல்லிட்டு ஒதுங்கியிருக்க வேண்டியதுதானே… வனிதாக்கு பேசி முடிச்சிருக்க… உன் சித்தி என்னை எவ்ளோ திட்றா தெரியுமா… நல்ல இடம்… நம்ம தனாக்கு பிரச்சனையே இல்லை… தனா இங்க வந்துருவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தா உன் பையன் அந்த வனிதாக்கு பொருத்தம் பார்த்து முடிச்சுட்டு வந்திருக்கான்…”
“ஐயோ அம்மா… சித்திகிட்ட நான் விளக்கம் கொடுத்துட்டேனே அம்மா… அவங்க புரிஞ்சுக்கலைனா நான் என்ன பண்ண… அந்த பையனுக்கு செவ்வாய் தோஷம்… நான் சித்திகிட்ட வந்து சொன்னப்ப ஆராதனாக்கு பார்த்தேன்னு சொன்னாங்க… அப்போதான் எனக்கு யோசனை தோணுச்சு… முகிலன் அக்கா வனிதாக்காக்கு சொன்னா என்ன தப்புனு தோணுச்சு இது தப்பா… முகிலன் கிட்ட சாதகம் வாங்கி அனுப்புனேன்… அவங்களுக்கு புடிச்சிருந்தது… நெக்ஸ்ட் வீக் இந்தியா வந்து வனிதாக்காவைப் பார்க்கலாம்னு சொன்னாங்க… இதான் நடந்தது… “ என்று விளக்கம் அளித்தவனிடம்
திலகா சமாதானம் அடையாமல்…
“என் தங்கச்சி நம்ப மாட்றா… வேணுக்கும்னே தனாக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கைய நீ கெடுத்துட்டேன்னு சொல்றாடா… அதை விட… கமலிதான் அப்படி பண்ணினா.. இப்போ செழியனும் இப்படி பண்றான் எங்க அண்ணா குடும்பத்தை அவங்களுக்கு பிடிக்கலைனா ஒதுங்கிக்க வேண்டியதுதானே… இவ்ளோ வன்மம் ஏன்னு கன்னா பின்னான்னு திட்டிட்டு… அண்ணா பேசாமல் இருக்கும் போது உன்கூட உன் பிள்ளைங்க கூடலாம் பேசினேன்ல அதுக்கு கிடைத்த தண்டனைனு… இனி என்கூட பேசாதேன்னு வச்சுட்டா…”
திலகா முடித்திருக்க
“பார்த்தியாடா… இந்த கெட்டப் பேர் உனக்குத் தேவையா… இவ குடும்பத்துக்கே இதான் புத்தி” முத்துராம் மகனின் மேல் இருந்த பாசத்தில்… திலகாவின் ஒட்டு மொத்த குடும்பத்தையே திட்ட
“அப்பா” என செழியன் இடையிட்ட போதே
”என்ன என் குடும்ப புத்தி… அப்படி என்ன கண்டீங்க எங்க குடும்பத்தோட புத்திய” திலகா ஆவேசமாக முத்துராமிடம் சண்டையிட ஆரம்பித்திருக்க
“ஐயோ அம்மா… அப்பா ஒரு ஃப்ளோல வாய் தவறிச் சொன்னதுக்கு…” செழியன் தாய் தந்தை இருவரின் இடையிலும் மாட்டியிருந்தான்
“என்னது வாய் தவறியா… இவர்லாம் கொஞ்சம் கடந்த காலத்தையும் யோசிக்கனும்… நாம யார் நாம எங்கிருந்தோம்னு… அம்மா அப்பா இறந்த பின்னால இவரைப் படிக்க வச்சு… என்னையும் கட்டிக் கொடுத்தாங்க பாருங்க அவங்க புத்திய பற்றி அப்போ தெரியலையா இவருக்கு…”
“ஏய்…” முத்துராமும் இப்போது கோபமாக மனைவியை முறைக்க
“என்ன என்ன முறைக்கிறீங்க… எங்க அண்ணி மட்டும்மில்லைனா… அவங்க உங்களப் பற்றி சொல்லைனா… உங்களுக்கு என்னை எங்க வீட்ல கொடுத்திருக்கவே மாட்டாங்க… அன்னைக்கு எங்க அண்ணி கடவுளா தெரிஞ்சாங்க… நீங்க சப்போர்ட் பண்ணலைனா திலகாவை எனக்கு கட்டிக் கொடுத்திருக்கவே மாட்டாங்க… மச்சான் கடவுள் மாதிரி… என்னைப் புரிஞ்சுகிட்டார்னு… எவ்ளோ பேசுனீங்க… கமலிய கார்த்திக்கு கேட்டப்ப… முதல்ல சம்மதம் சொன்னது யாரு….” திலகா சராமாரியாகக் கணவனிடம் கேள்வி கேட்க… முத்துராமும் பேசாமல் இல்லை
“நன்றிக்கடன் இருக்கு… யார் இல்லைனு சொன்னா… அதுக்காக உன் குடும்பத்துக்கு அடிமையா இருக்கனுமா…” முத்துராமின் தன்மானமும் சுட்டிருக்க… மனைவியிடம் அவரும் வார்த்தைகளை விட ஆரம்பித்திருந்தார்…
“சொல்லப் போனா உன் குடும்பத்துக்கு அடிமையாத்தான் இருந்தேன்… என்ன சொன்னாலும் தலை ஆட்டிட்டு… அந்த ஊர்ல இருந்த வரை நான் என்னைக்கு ஒரு முடிவெடுத்திருக்கேன்… “
செழியன் அமைதியாக நின்றிருந்தான் இப்போது…
“செழியனுக்குத் தெரியும்… அந்தக் குடும்பத்தையே கைக்குள் போட்டுக் கொண்டு தான் சொல்வது போல தலை ஆட்ட வைத்துக் கொண்டிருக்கும் மேகலாவின் திட்டம் தான் திலகா முத்துராமின் திருமணமும்… தன் சித்தப்பா சுதாகரை வீட்டை விட்டு அனுப்பியது மட்டுமல்ல… தன் சித்தி பூர்ணிமாவை நல்ல இடம் என்று வெளிநாட்டிற்கு அனுப்பியது… வசதி குறைந்த தன் தந்தை முத்துராமை தன் தாய்க்குத் திருமணம் செய்து வைத்து… அடிமை போல நடத்தியது என எல்லாமே மேகலாவின் சூழ்ச்சி என்பது… சொல்லப் போனால்… கமலியை தன் பாட்டியிடம் சொல்லி தன் மகனுக்கு கேட்க வைத்தது கூட மேகலாவாகத்தான் இருக்கும் என்பது செழியனின் அனுமானம்”
“ஓ அதுனாலதான் எங்க குடும்பத்தை இப்போ பழி வாங்கறீங்களா… அதுவும் புள்ளைங்களா வச்சு…” திலகா மூக்கை உறிஞ்சிக் கொண்டு அழ ஆரம்பித்திருக்க
“அம்மா… என்னம்மா இப்படிலாம் பேசுறீங்க… அப்பாவை பற்றி எல்லாம் தெரிஞ்சும்… இப்படிலாம் ஏன்மா பேசறீங்க..”
“அவ பைத்தியக்காரிடா… அதான்… இவளுக்காக இவ நல்லதுக்காக சொன்னா.. நம்மையே எதிரி மாதிரி பார்க்கிறா பாருடா… இதுநாள் வரை இவ என் பொண்டாட்டியா வாழல… அந்த ராஜசேகரோட தங்கச்சியாத்தான் இருந்திருக்கா… அதுவே இப்போதான் எனக்குத் தெரிஞ்சிருக்கு…” என்ற போதே அவரின் குரல் உடைந்திருக்க…
”ஓ இப்போ பைத்தியக்காரின்னு வேற தெரிஞ்சுருச்சா… அப்போ எதுக்கு என்னை இன்னும் இந்த வீட்டோட வச்சிருக்கீங்க… வெளிய அனுப்பிருங்க… உங்களுக்கு உங்க புள்ளைங்க மட்டும் போதும்னு நினைப்பு வந்திருச்சு… அதான் நான்லாம் பைத்தியக்காரியா தெரியுறேன்…”
செழியனுக்கு என்ன செய்வதென்றே தெரியாத சூழ்நிலை… இவனிடம் ஆரம்பித்து கணவன் மனைவி சண்டையாக முடிந்திருந்ததை கண்டு குழம்பியிருக்க
“அப்போ கெளம்பு… எங்கள விட உனக்கு உங்க அண்ணன் வீடுதானே முக்கியம்… அவர் பெத்த பொண்ணுக்காகத்தானே இவ்ளோ பேச்சு பேசற… என் புள்ளையக் கூட எடுத்தெறிஞ்சு பேசுற… அப்போ அங்கேயே போ… ஆனா அங்க உன்னைய மதிக்கக் கூட மாட்டாங்கடி … என் புள்ளை வாழ்வா சாவான்னு போராடிட்டு இருந்தப்போ கூட … வந்து பார்க்காத கல் நெஞ்சக்காரனுங்க… அவங்க உனக்கு முக்கியமா போயிட்டாங்கள்ள… நான் என் புள்ளைங்கள பார்த்துக்கிறேன்… நீ போ… நான்லாம் செத்தாலும் வந்து பார்க்காத..” என்றவர்….
அதற்கு மேல் நிற்காமல் விடுவிடென்று தன் அறையை நோக்கி சென்றவர்… தன் அறைக்கதவையும் பூட்டியிருக்க…
“அப்பா…”என்று அவர் பின்னே போனவன் பின் என்ன நினைத்தானோ… அவர் பின் செல்லாமல்… மீண்டும் தாயிடம் வந்திருக்க
“அம்மா பாவம்மா அப்பா… அவர் உங்களுக்காகத்தானே…” எனச் செழியன் ஆரம்பித்த போதே…
“நீ கூட எனக்காக இல்லை… உங்க அப்பாக்கு சப்போர்ட் பண்ண நீ இருக்க… கமலிக்கு அவ வீட்டுக்காரர் இருக்கார்… நான் மட்டும் அனாதையா இருக்கேன்… அம்மா அப்பா.. அண்ணன் அண்ணி தங்கச்சி… இப்போ புருசன் புள்ளைங்க…. யார் ஆதரவும் இல்லை… நல்லா இருங்க எல்லோரும்” கண்கலங்கியவரிடம்
“ஏன்மா இப்படிலாம் பேசறீங்க…” செழியனின் முகம் மாறியிருந்தது…
“நீ என்ன பண்ணல சொல்லு… ரத்னம் அண்ணன் பொண்ணு நர்மதாவுக்கு சம்மதம் சொன்னியா என்ன… அவர் எத்தன தடவை வந்து நம்ம வாசலுக்கு வந்து நின்னாரு… நம்ம ஊர்க்காரர் பொண்ணுனு நான் எவ்ளோ கெஞ்சி இருப்பேன் நான்… நீ சரின்னு சொன்னியா… பொண்ணுதான் அப்படி போயிட்டா… உன்னை வச்சாவது ஊர் பக்கம் ஓட்டிக்கலாம்னு பார்த்தேன்… அப்டியாவது எங்க வீட்டு ஆளுங்கள பார்த்துக்கலாம்னு நினச்சேன்… ” புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டவர்…
”பெருசா பேச வந்துட்டான்… அன்னைக்கு எப்படி பேசுன நீ… உன் மேரேஜ் உன் விருப்பம்னு… முகத்திலடிச்ச மாதிரி பேசுனேல நீ“
”அம்மா” என செழியன் அவர் அருகில் போன போதே
“பேருக்கு ஊர் முன்னால சொல்றதுக்கு ’அம்மா’ நான் அவ்ளோதான்… அன்னைக்கே எனக்கு தெரிஞ்சிருச்சு… இங்க என் வார்த்தைக்கெல்லாம் மதிப்புல்லைனு… இன்னைக்கு இதோ அவரும் என்னை பைத்தியம்னு சொல்லிட்டாரு…” அழுதபடியே திலகாவும் அங்கிருந்து சென்றிருக்க…
செழியன் தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்து விட்டான் யாருக்கு.. என்ன… சமாதானம் சொல்வது என்று தெரியாமல்…
நேரம் சென்றதே தவிர… அவனின் தாய் தந்தை இருவருமே வெளியே வரவே இல்லை… இருவருமே உடல்நலத்துக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள்… சாப்பிடாமல் இருந்தால் என்னாவது…. இவனுக்கு தலை வேறு வலிக்க ஆரம்பித்திருக்க… அதே நேரம் கமலியும் அவனுக்கு அழைத்திருக்க…நடந்ததெல்லாம் தன் சகோதரியிடம் சொல்லி முடித்திருக்க
“ப்ச்ச்… நீ கண்டுக்காத… அதெல்லாம் சரி ஆகிருவாங்க…” கமலி சாதாரணமாகச் சொல்ல…
இவன்தான் எகிறினான் தமக்கையிடம்…
“உனக்கென்னம்மா… நீ பாட்டுக்கு லவ் பண்ணப் பையன கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா சிங்கப்பூர்ல இருக்க… இங்க நாங்க பட்ற பாடு எங்களுக்குத்தான் தெரியும்… எல்லா பிரச்சனையும் யாரால உன்னாலதான்… ”
கமலி அமைதியாக இருக்க..
“ஏய் சரி சரி… நான் ஏதோ கோபத்தில பேசிட்டேன்…” செழியன் தன் தமக்கையின் மௌனத்தில் தானாகவே சமாதான வார்த்தைகளை விட
“எனக்குத் தெரியும் செழியன்… என்னோட கோழைத்தனத்தாலதான் இவ்ளோ பிரச்சனையும்… கார்த்திக் மாமா கிட்ட நான் என் மனசுல இருக்கிறதை சொல்லி இருந்தா… அவர்கிட்ட கூட வேண்டாம்… மேகலா அத்தைகிட்ட சொல்லியிருந்தால் இன்னைக்கு இவ்ளோ பிரச்சனையும் வந்திருக்காது…”
“சரி விடு… நடந்ததை ஏதும் இனி மாத்த முடியாது… நீ அம்மாகிட்ட பேசு… அவங்க தான் எனக்கு யாரும் இல்லை… அனாதை அது இதுன்னு பெரிய வார்த்தைலாம் பேசிட்டாங்க…” என்றவன்
“நீயே சொல்லு கமலி… வனிதா யாரு… உன்னை மாதிரிதான் அவங்களும் எனக்கு… தனாக்கு வந்த வரனை வனிதாக்கு மாத்தி விட்டுட்டேன்னு சித்தி கோபமாகிட்டாங்க… சித்திகிட்ட இருந்து இப்படி ஒரு பிஹேவியரை எதிர்பார்க்கலை…” செழியன் தன் சித்தியை நினைத்து வருத்தத்தோடு சொல்ல…
“செழியா… என்னையும் சித்தி திட்டிட்டாங்க… கார்த்திக் மாமா வாழ்க்கையை நான் கெடுத்துட்டேனாம்… தனா வாழ்க்கையை நீ கெடுத்திட்டியாம்… சித்தி தேள் கொட்ற மாதிரி பேசுறாங்கடா… உண்மையைச் சொல்லப் போனால் எல்லாரும் நல்லா இருக்காங்க… நான் தான்” என்று கமலி குரல் தடுமாற…
“என்னாச்சு…” செழியன் தமக்கையின் குரலில் சுதாரித்துக் கேட்க
“ஒண்ணுமில்ல செழியன்… “ கமலி சமாளித்த போதே…
“சொல்லு… உன் குரல் சரியில்லை… மிதுன் ஏதாவது திட்டினாரா… அவர் கூட சண்டையா…” செழியன் விசாரிக்க…
“அவர் என்னைக்குடா என்னை திட்டிருக்காரு… என்னைத் தாங்கு தாங்குனு தாங்குறாரு… ஒண்ணுமில்ல.. எனக்கு கில்டியா இருக்குது… அதைச் சொன்னேன்…”
“ஆமாம்… இப்போ ஃபீல் பண்ணி என்ன பண்றது… அதை விடு… அம்மா அப்பா சண்டையை தீர்த்து வைக்க வழி சொல்லு…” செழியன் மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்க…
“அதெல்லாம் நீ ஒண்ணும் தீர்த்து வைக்க வேண்டாம்… நீ நடுவுல போகாத… அவங்களே சரி ஆகிருவாங்க…” எனக் கமலி முடிக்க
“எப்படி கமலி… அவங்க சண்டை போட்றதைப் பார்த்துட்டு நான் பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்” செழியன் சொன்ன போதே
“புருசன் பொண்டாட்டி சண்டைல மூணாம் மனுசங்க போனாதான் பெருசாகும்… அதுனால நீ உன் வேலையை பாரு… நம்ம அப்பா அப்படிலாம் அம்மாவை விட்ற மாட்டார்… நாளைக்கு காலைல பாரு… திலகான்னு அம்மா பின்னாடி போய் நிப்பாரு…. அம்மா… என்னங்கன்னு பேசிட்டு இருப்பாங்க பாரு…” கமலி சொல்ல
“எப்படி கமலி… அடேங்கப்பா… ஹ்ம்ம்ம்… நீயும் பெரிய மனுசி ஆகிட்ட… எல்லாம் மிதுனோட ட்ரெயினிங் போல…” என்று அதிசயித்தவனிடம்
“சாரும் சீக்கிரமா இதைப் புரிஞ்சுக்குவீங்க… உங்களுக்குனு ஒரு பொண்டாட்டி வரும்போது… அவ சண்டை போடும் போது தெரியும்”
செழியனின் மனம் அடுத்த நொடி… ஆராதனாவை நினைக்க ஆரம்பித்திருக்க…
“என் ஆராலாம் கோபப்படவே மாட்டா… நான் ஏன் அவளைச் சமாதானப்படுத்தனும்… அதை விட என் ஆரா மேல எனக்கு எப்போதுமே கோபம் வராது… அப்புறம் எப்படி எங்களுக்குள்ள சண்டை வரும்…”
நினைத்த போதே அவனுக்கும் அவளுக்குமான வருங்கால நிழல் ஆட… அவன் மனம் வருங்காலத்திற்கு மாற்றாக சிந்தித்தது… அவன் கற்பனையாகக் கட்டிக் கொண்டிருந்த காதல் கோட்டை சிகரத்தை தொட ஆரம்பித்திருந்தது… அந்த சிகரத்தின் மேல் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தான் செழியன் தன்னவளோடு….
Hlo sis... Ud potu one month agudhu... Marandhutengala?