அத்தியாயம்-9
கோபித்துக்கொண்டு தன் அறைக்குள் போய் முடங்கியவள்தான், கருணா தவிர்த்து வீட்டில் உள்ள அனைவரும் மாற்றி மாற்றி ஒவ்வொருவராகப் போய் அழைத்துப் பார்த்தும் கூட சாப்பிட வரவில்லை ஹாசினி. குறைந்த பட்சம் அறையின் கதவைக் கூட திறக்கவில்லை அவள்.
அவர் இருந்த சூடான மனநிலைக்கு, "ஒரு வேளை சாப்பிடலன்னா ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டா, யாரும் அவ கிட்ட போய் கெஞ்சிட்டு இருக்காதீங்க" என கருணாகரன் போட்ட அதட்டலில் அனைவரும் அடங்கிப்போயினர்.
பெயருக்கு இரவு உணவை உண்டுவிட்டு எல்லோரும் அவரவர் அறைக்குள் போய் முடங்கிவிட, நடப்பது எதுவும் பிடிபடாமல் ஆயாசத்துடன் தோட்டத்து திண்ணையில் வந்து உட்கார்ந்தார் தாமரை.
அதற்காகவே காத்திருந்தாற்போன்று கருணாகரன், சத்யா இருவரும் அவரை நோக்கி வர, "என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு எதையும் என்கிட்டே சொல்லாம, அப்பாவும் பொண்ணும் இந்த ஆட்டம் ஆடறீங்க. அப்பறம் நான் ஒருத்தி எதுக்கு இந்த வீட்டுல" என வெடித்தவர், தன் முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர்.
"ப்ச், தாமரை, விவரம் புரியாம கோபப்படாத" என கருணாகரன் தகைவாகவே சொல்ல, "என்ன விவரம் புரியல எனக்கு? உங்களுக்குத்தான் புரியல. ஹாசினிக்கு வயசுதான் இருபத்தி ரெண்டு ஆகுது. ஆனா இன்னும் அவளுக்குக் கொஞ்சம் கூட மெச்சூரிட்டியும் வரல, பொறுப்பும் வரல. அவளைக் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டு, ஒவ்வொண்ணுத்துக்கும் நாம அவ பின்னாலயே போய் நின்னுட்டு இருக்க முடியுமா சொல்லுங்க? அவளுக்கு ஆபிஸ்ல ஏதாவது பொறுப்பு கொடுங்க. அதை விட்டுட்டு கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷம் போனாதான் என்ன?” எனப் பொரிந்து தள்ளினார் தாமரை.
"அக்கா, என்ன நடந்ததுன்னு தெரியாம இப்படி சாமி ஆடாத"
"என்னடா, என்ன? எனக்கு இப்ப என்ன தெரியணும்... ம், வந்துட்டான் அத்தானுக்கு பரிஞ்சுக்கிட்டு"
"போனவாரம், ஒரு சப்ளையர் கூட லஞ்சுக்கு போயிருந்தேன் இல்ல, அன்னைக்கு ஹாசினிய ஒரு பையன் கூட பார்த்தேன் தாமர"
அவருடைய கண்களைச் சந்திக்க இயலாமல் தலை குனித்தவண்ணம் கருணா சொல்லவும் அதிர்ந்தார் தாமரை.
"ச்ச...ச்ச... நம்ம குட்டிம்மாவா இருக்காது, நீங்க வேற யாரையாவது பார்த்திருப்பீங்க. அதான் யாரை பார்த்தாலும் நம்ம பொண்ணுமாதிரி தோணுமே உங்களுக்கு"
"ப்ச்... அக்கா, நம்ம ஹாசினிதான் அது. நானே அவ கிட்ட பேசிட்டேன்"
சத்யா அனைத்தையும் சொல்லி முடிக்க, சிறிதும் நம்ப இயலாமல் இறுகிப்போய் அசைவற்று உட்கார்ந்திருந்தார் தாமரை.
"தாமர, டென்ஷன் ஆகாத, நாம சீக்கிரமே நல்ல இடமா பார்த்து அவளுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிடலாம். என்னை மீறி எதுவும் நடக்காது"
"ப்ச்... என்ன இப்படி பேசறீங்க. அறக்க பறக்க எடுத்தோம் கவுத்தோம்னு இப்படி முடிவு பண்றது ரொம்ப தப்பு. ஒண்ணு அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வெச்சு வேற விஷயத்தில் அவளை டைவர்ட் பண்ணணும், இல்ல அவ விருப்பத்துக்கு போயிடனும். இல்லன்னா அது அவளோட பிடிவாதத்தைதான் அதிகமாக்கும்"
தாமரை அவருக்கு புரியவைக்க முயல,